News Ticker

Menu

Browsing "Older Posts"

Browsing Category "கொக்கூரான்"

மக்கள்பேரவை மாற்றம் தருமா?

Monday, January 25, 2016 / No Comments
விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் உரிமைக்கான போராட்டத்தை முன்னகர்த்த வேண்டிய கூட்டமைப்பானது தனது தேசியப்பணியை கைவிட்டு நீண்டதூரம் சென்றுவிட்டது.

தமிழ்மக்களின் ஆதரவுபெற்ற அமைப்பு என்ற பலத்தை பயன்படுத்தி தமிழ்மக்களின் உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைக்காமல் வெளிநாட்டு அரசுகள் என்ன சொல்லுகின்றதோ அதற்கு ஆமாம் போடும் சாமியாக வந்து அதிக நாட்கள் கடந்துவிட்டன.



இப்போது கூட்டமைப்பானது இன்னும் கீழிறங்கி தற்போதைய மைத்திரி அரசு என்ன சாக்குப்போக்குகளை சொல்லுகின்றதோ அதனையே தானும் ஒப்புவிக்க தயாராகிவிட்டது.

போர்க்குற்றங்கள் பற்றிய விடயத்திலும் சரி சர்வதேச விசாரணை என்ற விடயத்திலும் சரி காணாமல்போனோர் விடயத்திலும் சரி தற்போதைய அரசியல் கைதிகள் விடயத்திலும் சரி கூட்டமைப்புக்கு என ஒரு தனியான கருத்து இல்லை.

இதனாலேயே அண்மையில் யாழ் வந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க “நான் இதனை சொல்வதற்கு கவலைப்படுகின்றேன். ஆனால் காணாமல்போனவர்கள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை” என சொன்னபோது தமிழரசுகட்சி தலைவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.

இதனைப்போலவே “நவாலித் தேவாலயத்தில் குண்டுகள் போடப்பட்டபோது நான் படைத்தளபதிகளை பார்த்து கத்தினேன்.” என சந்திரிகா தனது பொறுப்புக்கூறல்தனத்தை படைத்தளபதிகளை பார்த்து கைகாட்டினார்.

உடனே சந்திரிகா அம்மையார் அதனை தவறு என்று சொல்லிவிட்டார் அவர் நல்ல பெண்மணி என எமது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே – அந்த படுகொலையை மறந்து அதற்கு பின்னாலிருந்த இனவழிப்பின் நோக்கத்தை மறந்து அதனை பூசிமெழுகும் சந்திரிகாவின் தந்திரத்தை மறந்து - பெருமிதமடைகின்றனர்.

இப்படி கையறுந்த நிலையில் எல்லாமே கைவிட்டுபோகின்ற நிலையில் எதிர்கட்சி தலைவர் என மகுடன் சூட்டிக்கொண்ட வாழ்நாள் சாதனை மனிதர் சம்பந்தராலும் ஒன்றும் சொல்லமுடியாத சாதனையை செய்யவேண்டியிருக்கிறது.

இவ்வாறு தடம்மாறிக்கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் செல்நெறியானது பலத்த கேள்விகளை பலத்த விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இதன் ஒரு வெளிப்பாடாகவே தமிழ்மக்கள் பேரவையின் உருவாக்கத்தை கண்டுகொள்ளவேண்டும்.

தமிழ்மக்கள் பேரவையானது ஒரு அரசியல் கட்சியாக அன்றி மக்கள் இயக்கமாக ஒரு செயற்பாட்டு இயக்கமாக பரிணமிக்கும் என்றே அறிவிக்கப்பட்டது.

இத்தகைய உருவாக்கம் நல்ல விடயம் தான். ஆனால் இதனை சரியான வகையில் உறுதியான முறையில் உருவாக்கவேண்டியது அவசியமானது.

தொடங்கப்படும்போது ஒரு சிறு குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் வளர்ச்சியானது பல்பரிணாமங்களாக முழுமையானதாக மாற்றுவதற்கான அடிப்படைகளை உள்வாங்கவேண்டும்.

அதற்கான களங்கள் திறக்கப்படவேண்டும். விவாதங்கள் விமர்சனங்கள் கேள்விகள் பகிரப்படவேண்டும். தனியே ஒரு குழுவால் முன்னெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட செயற்றிட்டங்கள் அன்றி ஒரு பலமான மக்கள் இயக்கம் ஒன்றினால் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டமாக பரிணமிக்கவேண்டும்.

எனவே தமிழ்மக்கள் பேரவை தொடர்பான சில கருத்துக்களை இப்பத்தி முன்வைக்கவிரும்புகின்றது.

தமிழ்மக்கள் பேரவையானது அதன் பெயருக்கு ஏற்றவாறு ஒத்த கருத்துடையோரை இணைக்கும் பேரவையாக உயரிய நோக்கத்தை வெளிப்படுத்தும் அமைப்பாக அமைத்துக் கொள்வதற்கு போதியளவில் அனைவரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளவில்லை.

தனியாக தமிழ்ச்சிவில் சமூகம் செய்த பணிகளையும் தனியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி செய்த பணிகளையும் ஒரே கூடைக்குள் கொண்டுவந்தமை போலான தோற்றப்பாட்டை உருவாக்கியமை தமிழ்மக்கள் பேரவையின் ஒரு பலவீனமான நிலையை வெளிக்காட்டுகின்றது.

தமிழ்மக்கள் பேரவையானது ஒரு அரசியல் கட்சியாக அன்றி அழுத்தக்குழுவாக மக்களின் கருத்துக்களை ஒன்றிணைத்து உயர்ந்த பட்ச அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான  சிந்தனைமாற்றத்திற்கான மையமாக தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணக்கருத்து உயர்ந்திருக்கிறது.

ஆனால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் ஈபிஆர்எல்எப் கட்சித்தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அதன் முகங்களாக தெரியப்படுத்தப்படுவது அல்லது காட்சிப்படுத்தப்படுவது பேரவையின் நோக்கங்களை பலப்படுத்தாது.

அத்தோடு தமிழரசுக்கட்சியின் செல்நெறியில் அல்லாமல் அதன் செயற்பாட்டில் அதிருப்தியடைந்த திரு. சிற்றம்பலம் அவர்களை அதன் பிரதிநிதியாக காட்டிக்கொண்டமை வலுப்படுத்தக்கூடிய செயற்பாடு அல்ல.

மாற்றாக பேரவையில் மேற்குறிப்பிட்டவர்கள்; இணைந்து நிற்பது அவர்களது நிலைப்பாடுகளை பலப்படுத்தும் என்ற யதார்த்தமே முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். கட்சி சார்பு ஊடகங்களும் மேற்குறித்தவர்களின் கருத்தை பேரவையின் கருத்தாக கொண்டுவருவது பேரவையை பலவீனப்படுத்தவே.

எனவே சீர்செய்யும் அல்லது மீளாய்வு செய்யும் பணியில் பேரவை கவனம் எடுக்கவேண்டும்.

மற்றும் தமிழ்மக்களின் அனைத்து சமூகமட்டங்களையும் பிரதிபலிக்கக்கூடியவாறு பேரவையானது கட்டமைப்பை கொண்டுள்ளதா என்ற வினாவுக்குள் வரவேண்டியிருக்கின்றது.

அரசியல் ரீதியான விடயங்களில் முன்னிலைப்படுத்தப்படவேண்டிய சட்டத்தரணிகளின் பங்கு எப்படியானது அல்லது அரசியல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் அனுபவம் உள்ளவர்களின் வகிபாகம் எங்கே? சாதாரண மட்டத்தில் கவனத்தினை கொண்டால் பெண்களின் வகிபாகம் என்ன? வடக்கு கிழக்கில் ஏறக்குறைய ஒரு இலட்சம் விதவைப்பெண்கள் இருக்கின்றார்கள். இவர்களையாவது பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய பெண்கள் பிரதிநிதிகள் இருக்கின்றார்களா?

எனவே சமூகமட்டத்தில் கருத்துருவாக்கத்தை விதைக்கக்கூடிய கல்விமான்கள் ஊடகவியலாளர்கள் சமூகபிரச்சனைகளை முன்னகர்த்தக்கூடிய பங்காளர்களின் பங்கு முன்னிலைப்படுத்தவேண்டும்.

அடுத்ததாக அரசியல்கட்சியாக அன்றி மக்கள் இயக்கமாக வளர்க்கப்படவேண்டிய பேரவையானது அதற்கான அடிமட்ட செயற்பாட்டாளர்களை கொண்டிருக்கின்றதா? அல்லது மீண்டும் மேசையில் இருந்து கதைக்கின்ற மேல்மட்ட அமைப்பாளர்களை மட்டும்கொண்டிருக்கின்றதா?

அதாவது கீழ்மட்டத்தில் இருந்து வளரவேண்டிய பேரவையானது இப்போது அரசியல் திட்டம் ஒன்றை வரைந்து அதனை கீழ்நோக்கி கொண்டுசெல்லப்போவதாக கூறுகின்றது.

கீழ்மட்டத்தில் செயற்பாட்டுநிலையிலுள்ளவர்களே ஒரு மக்கள் இயக்கத்தின் தாங்குசக்தி. அத்தகைய அடிமட்ட செயற்பாட்டாளர்கள் இன்றிய ஒருமக்கள் இயக்கம் சாத்தியம் தானா?

அப்படியானால் அது கூட்டமைப்பின் அதே தந்திரோபாளத்தையே கையில் எடுத்துக்கொண்டுள்ளது என்று சொல்லலாமா? இதனைத்தான் மோதகமும் கொழுக்கட்டையும் என கூட்டமைப்பையும் பேரவையையும் ஒப்பீடு செய்யப்படுகின்றதா?

கிராமிய மட்டத்தில் சிந்தனைவட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை மேல்நோக்கி செல்லும்போது செறிவானதாக கனதியானதாக உண்மையானதாக வெளிவருமல்லவா?

அடுத்ததாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் என்போர் ஈழத்தமிழர்களின் சனத்தொகையில் முக்கிய இடத்தை பெறுகின்றனர். அது தற்போது மூன்றிலொரு பங்கினர் என சொல்லப்படுகின்றது.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோர் தாயகமக்களுடன் இரண்டறக்கலந்தவர்களாக அவர்களின் வாழ்வியல் விடயங்களில் கரிசனை கொண்டவர்களாக அதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

ஒப்பீட்டளவில் கடும்போக்கானவர்கள் என சிங்கள அரசுகளாலும் தமிழ் மிதவாத தலைவர்களாலும் சொல்லப்படுகின்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் வகிபாகம் என்ன?

ஈழத்தமிழர் தாயகத்திலே தோற்றம் பெறுகின்ற ஒரு அமைப்பில் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படவேண்டும். அதற்கான வழிவகைகள் என்ன?

இப்படியாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை வழிப்படுத்தவேண்டிய தமிழ்மக்கள் பேரவையானது அதன் செயற்பாட்டு அளவில் போதிய மாற்றங்களை செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

அத்தகைய மாற்றங்களை செய்யாதபோது அவர்களால்; நிரப்பவேண்டிய அந்த இடைவெளி தொடர்ந்தும் இடைவெளியாக - இன்னொன்றிற்காக காத்திருக்கவேண்டி – வந்துவிடும்.

காத்திருக்கவேண்டுமா?

அரிச்சந்திரன்

போர்க்குற்ற விசாரணை - ஒருங்கிணையும் சிங்களம் பிளவுக்குள் தமிழினம் ?

Wednesday, August 17, 2011 / No Comments
தற்போது சிறிலங்கா அரசு மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கான அழுத்தங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில் சிங்கள தேசம் எவ்வாறு தனது வியுகங்களை வகுத்துவருகின்றது என்பதை புரிந்துகொள்வது தமிழர் தேசத்திற்கு முக்கியமானதாகிவிட்டது.
சனல் 4 தொலைக்காட்சியினால் காட்சிப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் கொலைக்களங்கள் பிரித்தானியாவில் ஆரம்பித்து - ஜெனிவாவில் முக்கிய இராசதந்திரிகளை கண்கலங்கவைத்து - அவுஸ்திரேலியாவில் பலரையும் அதிரவைத்து - சிங்கள தேசத்தினால் மறைக்கப்பட்ட உண்மைகளை உலகம் புரிந்துகொள்ளதொடங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன.



சிறிலங்காவின் நண்பராகவும் இக்கட்டான நேரத்தில் தோள் கொடுத்த தோழனாகவும் கருதப்பட்ட பிரித்தானிய பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸ், அண்மையில் கதிர்காமர் நினைவுப்பேருரையாற்ற கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு உரையாற்றிய பொக்ஸ், சர்வதேச மனித உரிமைமீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பான குற்றசாட்டுக்கள் நிச்சயமாக கவனத்திற்கொள்ளப்படவேண்டும் எனவும், உண்மையான சமாதானம் என்பது பயங்களிலிருந்து விடுதலையும் தமது எண்ணங்களை வெளியிடுவதற்கான ஒவ்வொருவரின் சுதந்திரமான தன்மையும் உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் கேட்டிருந்தார்.

உலகபோக்கில் ஏற்பட்டுவரும் மாற்றம் என்பது தனது உற்றநண்பனின் போக்கிலும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டிருக்கும் என்பதை எதிர்பார்த்திராத சிங்களதேசத்திற்கு, இது சங்கடமான நிலையை ஏற்படுத்திவிட்டதாக கொழும்பு ஊடகங்கள் கூறுகின்றன.

இதேவேளை சிங்களதேசத்தின் இன்னொரு உற்றநண்பனாக கருதப்பட்ட லிபிய தலைவர் கடாபிக்கு ஏற்பட்ட நிலையென்பது, மகிந்த இராசபக்சவுக்கு நிம்மதியான நித்திரையை கொடுக்கக்கூடிய விடயமல்ல என்பதும் அவர்களுக்கு இடையே காணப்பட்ட உறவுநிலையை அறிந்துகொண்டவர்களுக்கு தெளிவான விடயமாகும்.
ரசியாவுடனும் சீனாவுடனும் உறவுகளை வைத்துக்கொண்டாலே மேற்கைத்தைய அழுத்தங்களை சமாளித்துவிடலாம் என அறிவுரை கூறிய லிபிய தலைவருக்கு ஆதரவளிக்காமல், கடைசிநேரத்தில் ரசியாவும் சீனாவும் கைகழுவிவிட்ட நிலையை பார்க்கின்றோம்.

அதற்கு மேலதிகமாக லிபிய தலைவர் மீதும் அவரது பிள்ளைகள் மீதும் சர்வதேச நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையானது, மகிந்த இராசபக்சவுக்கு அதேமாதிரியான ஒரு நிலைக்கே இட்டுச்செல்லக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்பதை கோடிகாட்டி நிற்கின்றன.

எவ்வாறு சூடான் தலைவர் மீது போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றசாட்டுக்களை முன்வைத்து - நிலையான தீர்வுத்திட்டம் ஒன்றை நோக்கி சூடானை இழுத்துச்சென்று இன்று - தென் சூடான் என்ற சுதந்திர நாட்டை உலகத்தில் பிரசவிக்கமுடிந்ததோ அதற்கு இணையானதோர் மாற்றத்தை தென் ஆசியாவில் ஏற்படுத்துவது என்பது உலகஒழுங்கை பேணுவற்கு அவசியமானதாகிவிட்டது.

ஆசிய தேசங்களை கடந்து, ஆபிரிக்க தேசங்களை நோக்கி பரந்துவிரியும் சீனாவின் நீளும் கரங்களுக்குள் தமது நலன்கள் விழுங்கப்படுவதை மேற்கைத்தைய அரசுகள் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. இந்தியாவுக்கும் கூட சீனாவின் இந்த அகன்ற கரங்கள் அச்சுறுத்தலாகவே நோக்கப்படுகின்றது.

pic7

இந்தவேளையில் கட்சி வேறுபாடுகளை களைந்து சிறிலங்கா என்ற ”இறையாண்மைமிக்க நாட்டின்” மீதான எந்த வெளிநாட்டு அழுத்தமும் தமது சிங்கள மேலாதிக்கவாதத்தை உடைத்துவிடும் என்பதை, சரத் பொன்சேகா தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரை புரிந்துகொண்டு, அதற்கெதிராகவே இன்னமும் செயற்பட்டுவருகின்றார்கள் என்பதை புரிந்துகொள்வது அவசியமானது என கருதுகின்றோம்.

அண்மையில் அவசரசுற்றுப்பயணம் மேற்கொண்ட சிங்கள தேசத்தின் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐநா செயலாளர் பான் கீ முனை சந்தித்தார். அமெரிக்கா மற்றும் முக்கிய பல அரச தலைவர்களை சந்திப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டிருந்தபோதும், சிங்கள தேசத்தின் பிரதிநிதிகள் என்ன கதைப்பார்கள் என்பதை புரிந்துகொண்டதாலோ என்னவோ, அவ்வாறான சந்திப்பை அவர்கள் வேண்டும் என்றே தவிர்த்துக்கொண்டதாகவே தற்போது வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த இராசபக்சவின் வேண்டுகோளுக்கு அமைவாகவே ரணில் விக்கிரமசிங்க இப்பயணத்தை மேற்கொண்டதாகவும், சர்வதேச அழுத்தங்கள் ஊடாக சிங்கள மேலாதிக்கவாதத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் அதனை தாங்கள் அனைவரும் இணைந்து எதிர்கொள்ளவேண்டும் என்பதில் சிங்கள தேசத்தின் கட்சிகள் அனைத்தும் ஒன்றாகவே நிற்கின்றன.
போர்க்குற்றசாட்டுக்கள் தொடர்பில் அனைத்து சிங்கள தேசத்தின் கட்சிகளும் இணைந்தே நிற்கின்றன. ஆனால் தமிழர் தரப்பில் இன்னும் சில அடிவருடி கட்சிகள் சிங்கள தேசத்தின் அடிமைகளாகவே வாழவிரும்புகின்றார்கள் என்பது தமிழர் வரலாற்றின் கசப்பான பக்கங்களாகும்.

ஆனாலும் பேச்சுவார்த்தை மேசையில் காண்டீபத்தை இழந்துநிற்கும் தமிழர் தரப்பிற்கு சர்வதேச ரீதியாக சிறிலங்கா மீது மேலெழுந்துவரும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கான கோரிக்கை முக்கியமானதாகும்.

இதனை சிங்கள தேசமும் தமிழர் தேசமும் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றன என்பதில்தான் தமிழர்களுக்கான எதிர்காலம் தங்கியுள்ளது என்றால் மிகையாகாது.

- கொக்கூரான் -

தென்சூடானின் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு! வழிகாட்டும் ஒளிவிளக்கு!!

Monday, August 15, 2011 / No Comments
சனவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவந்த வாக்கெடுப்பு சனவரி 15 ஆம் திகதி நிறைவுபெறுகின்றது. இவ்வாக்கெடுப்பில் தமக்கு தனியான நாடு வேண்டுமா அல்லது வடசூடானுடன் இணைந்திருக்கவேண்டுமா என்ற விருப்பை தெரியப்படுத்தும் வாக்கெடுப்பில் பெருவிருப்புடன் பங்குகொள்கின்றார்கள்.



வடசூடான் தென் சூடான் என இரண்டு தேசங்களாக பிரிந்துள்ள அந்நாட்டில், 1950 களில் ஆரம்பித்த விடுதலைக்கான போராட்டம் பல்வேறு கட்டங்களாக பயணித்து, பல்வேறு ராசதந்திர நகர்வுகள் ஊடாக நகர்ந்து, பல்வேறு சதிவலைகளில் சிக்கியபோதும் எழுந்துநிமிர்ந்துநின்ற தென் சூடானிய தேசத்துமக்களின் விடுதலைக்கான போர், தற்போது அதன் உச்சத்தை தொட்டுள்ளது.

17 வருடங்கள் தொடர்ந்த முதலாம் கட்டபோரும், அதனை தொடர்ந்த சமாதான உடன்படிக்கையையும், அதன்பின்னர் 1983 இல் ஆரம்பித்த இறுதிப்போரும், அதன் தொடர்ச்சியாக வந்த ஒப்பந்தத்தின் பலனாக தற்போது சர்வசன வாக்கெடுப்பு ஒன்று நடத்துகின்ற நிலைக்கு இரண்டு தேசங்களும் இணங்கியுள்ளன.

இருபத்தியிரண்டு வருடங்களாக தொடர்ந்த போரில் குறைந்தது இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டும் பல மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர். பல ஆண்டுகால பகைமைக்கு பின்னர் வட சூடானை மையமாக கொண்ட மேலாதிக்கவாத அரசு தென் சூடானிய மக்களின் பிரிந்துசெல்வதற்கான உரிமையை ஏற்றுக்கொண்டமை ஆறுதலான விடயமே.

ஆனால் மேற்குலக அரசுகளின் முயற்சியால் தற்போதைய சூடானிய அரச அதிபர் ஓமர் அல்பாசீர் போர்க்குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் பிடியாணை வழங்கப்பட்டுள்ள நிலைமையானது முக்கியமானது.

south-sudan-popular-photoபிரித்தானியர்களினதும் எகிப்தியர்களினதும் காலனியாதிக்க நாடாகவிருந்த சூடானின், தென் பகுதியில் கிறிஸ்தவர்களும் வட பகுதியில் முஸ்லிம்களும் வாழ்ந்துவருகின்றார்கள். இந்த இரண்டு தேசங்களும் இனரீதியாகவும் சமயரீதியாகவும் தனித்துவமானவை.

காலனியாதிக்க நாடுகளின் வெளியேற்றலை தொடர்ந்து அதிகாரத்தை பெற்றுக்கொண்ட வட சூடான், தென் சூடானிய மக்களின் உரிமைகளை பறித்தது. அதற்கெதிராக கிளர்ந்த விடுதலைப்போராட்டத்தின் தொடர்ச்சியாக, தென் சூடான் மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொள்வதாக 1989 ஆம் ஆண்டு அப்போதைய சூடான் அரச அதிபர் அறிவித்திருந்தார்.

ஆனால் அதேகாலத்தில் ஏற்பட்ட இராணுவ சதிப்புரட்சியில் ஆட்சி பீடமேறிய இப்போதைய அரசு அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது எனக்கூறி தொடர்ந்தும் போரில் ஈடுபட்டது. தொடர்ந்த போரும் அழிவுகளும் 2005 ஆம் ஆண்டு அமுலுக்கு கொண்டுவரப்பட்ட சமாதான உடன்படிக்கை மூலம் ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.

தற்போது நடைபெறுகின்ற தேர்தலானது எழு நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும். புலம்பெயர்ந்து வாழும் தென் சூடான் மக்களும் இவ்வாக்களிப்பில் பங்குகொள்ளமுடியும். அவுஸ்திரேலியா கனடா எகிப்து எதியோப்பியா கென்யா உகண்டா பிரித்தானியா அமெரிக்கா போன்ற எட்டுநாடுகளிலிருந்து இத்தேர்தலில் அம்மக்கள் பங்குகொள்கின்றார்கள்.

ஏறத்தாழ எட்டுமில்லியன் மக்கள் தொகை கொண்ட தென் சூடான் தேசத்தில், நான்கு மில்லியன் மக்கள் வாக்களிப்பு தகைமையை கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் இரண்டு மில்லியன் வரையானோர் ஏற்கனவே வாக்களிப்பு பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

தென்சூடான் பிரிந்துவிடும் என நிச்சயமாக எதிர்பார்க்கப்படுவதால், பிரிவினைக்கு பின்னரான இரண்டு தேசத்தின் உறவுகள் தொடர்பில் வடசூடான் கரிசனை செலுத்துவதாகவும் கூறப்படுகின்றது.

சூடான் நாட்டின் ஐந்தில் நான்கு பகுதி எண்ணெய் வளம் தென்சூடானிலேயே இருப்பதாகவும் ஆனால் அந்த எண்ணெய் வளத்தை ஏற்றுமதிசெய்வதற்கு வடசூடான் துறைமுகத்தின் ஊடாகவே கொண்டுசெல்லவேண்டிய நிலையே தற்போது உள்ளதாகவும், அதனை எவ்வாறு இருதரப்பினரும் கையாள்வது என்பது தொடர்பில் இணக்கம் காணும் முயற்சிகள் இப்போதே தொடங்கிவிட்டன.

இரண்டு தேசங்களுக்கு இடையிலுள்ள அபேய் பிராந்தியம் வடக்குடன் இணைவதா தெற்குடன் இணைவதாக என்பதற்கும் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கதாகும். தென் சூடான் தனியாக பிரிந்துசெல்லும்பட்சத்தில் அபேய் பிராந்தியம் தனது தலைவிதியை தீர்மானிப்பதற்கு தனியான ஓர் தேர்தல் அப்பிராந்தியத்தில் நடாத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தென் சூடானின் பிரிந்துசெல்வதற்கான தேர்தலின் வலுவுடமையானது அத்தேர்தலுக்கு பதிவுசெய்துள்ள வாக்காளர்களில் 60 விழுக்காட்டினர் தமது வாக்குகளை செலுத்தியிருக்கவேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறான வாக்களிப்பு நடைபெறும் பட்சத்தில் சாதாரண பெரும்பான்மை மூலமே தென் சூடான் தேசம் தனியாக பிரிந்துசெல்வதற்கான தகுதியை பெற்றுவிடும்.

ஆனால் வடசூடானில் வாழும் தென் சூடான் மக்களை மிரட்டி 60 விழுக்காடு வாக்களிப்பை தடுத்துவிடலாம் என சூடானின் தற்போதைய அரசு கருதி செயற்படுவதாகவும் குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. தென் சூடான் பிரிந்துசென்றால் வட சூடானில் வாழும் உங்களுக்கான குடியுரிமையை பறித்துவிடுவோம் அதிகார வர்ககம் மிரட்டுவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன.

விடுதலைக்காக போராடிய ஒரு இனத்தின் வேட்கையை அவ்வளவு சாதாரணமாக அணைத்துவிடமுடியாது என்பதை நிதர்சனத்தில் கண்டவர்கள் நாங்கள். எத்தனையோ அழிவுகளையும் சதிகளையும் சந்தித்து, விடுதலைவேண்டிப்போராடிய ஒரு தேசம் தனக்கான விடுதலையை புதிய ஆண்டில் உறுதிப்படுத்தவுள்ளமை, அதற்கு மேலான தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் மேற்கொண்ட ஒரு தேசிய இனம் என்ற ரீதியில் தமிழீழ மக்களும் தமக்கான விடுதலையை பெற்றுக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையை நிச்சயம் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?

Wednesday, February 2, 2011 / No Comments
தாயகத்தில் நிகழ்ந்த பேரழிவு தமிழர் தரப்பின் அரசியல் பலத்தை சிதைத்தது மட்டும் அல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் இலட்சியங்களுக்கும் சவாலாக இருந்தது உண்மைதான்.

தாயகத்தில் நிகழ்ந்த எதிர்பாராத பேரழிவுகள் பெரும்பாலான தமிழர்கள் மத்தியில் ஏமாற்றமடைந்த நிலையை ஏற்படுத்தி அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்ற தடுமாற்ற நிலையில் இருந்தார்கள்.

ஆனால் இலங்கைத்தீவில் நிகழ்ந்த அதிரடியான அரசியல் நகர்வுகளும் அதிரடி மாற்றங்களும் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசமும் சேர்ந்துகொள்ள தமிழர் தரப்புக்கு சாதகமான மாற்றங்கள் மீளவும் மேலெழுந்தன.



தமிழர் தேசத்தின் அரசியல் விருப்புக்களும் சிங்கள தேசத்தின் அரசியல் விருப்புகளும் வெவ்வேறானவை என்பதை நடந்துமுடிந்த அரச தலைவர் தேர்தலில் நிலைநிறுத்தப்பட்டமையும் தமிழர் தரப்பின் அரசியல் எழுச்சியை மீளவும் உந்தித்தள்ளியுள்ளன. தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பால் தாயகத்தில் பலமான சக்தியாக எழமுடியும் என்பதை நடந்துமுடிந்த அரச தலைவர் முடிவுகள் காட்டியுள்ளன.

தற்போதைய தேர்தலை அரசியல் சாணக்கியத்துடன் எதிர்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. சில பழைய முகங்களின் வெளியேற்றங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்ற ஆதங்கம் இருந்தாலும் தமிழ் தேசியம் என்ற ஒட்டுமொத்த வழிப்பயணத்திற்கு சிலர் தியாகங்களை செய்துகொள்வதும் தவிர்க்கமுடியாதது என்பதும் புரிந்துகொள்ளப்படவேண்டும்.

ஆனாலும் யாழ்ப்பாணத்திலும் திருமலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய மற்றும் வெளியேற்றப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் தமிழ் தேசிய விடுதலை முன்னனியாக களம் இறங்கியுள்ளமை கவலையளிக்கின்ற விடயமாகும்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழ் தேசிய ஒற்றுமைக்காகவும் தமிழ் தேசியத்தை பாதுகாக்கவும் தமது வேட்பாளர்கள் நிலையை பரிசீலனை செய்துகொள்ளவேண்டும்.

ஒரு சில பத்து வாக்குகளோ அல்லது நூறு வாக்குகளோ கூட ஒரு சில தமிழ் பிரதிநிதித்துவத்தை நிர்ணயிக்ககூடிய நிலைமை காணப்படுவதால் தமிழ் தேசியத்தை பிரதிபலிக்கும் இரண்டு சக்திகளின் பிரவேசம் தமிழர் வாக்குகளின் கணிசமானதை பிரித்து எதிரிகளுக்கு சாதகமாக்கி தமிழர் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையை குறைத்துவிடும்.

2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிற்கு முன்னர் தமிழர்களது பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்துவதற்காக அப்போது வன்னியில் அடைக்கலம் தேடியிருந்த மக்கள் விடுதலைப் புலிகளின் ஆலோசனையின் பேரில் மீளவும் திருமலை குடியேற்றப்பட்டார்கள். அப்போது கூட சில பத்து எண்ணிக்கைகளின் எண்ணிக்கை, திருமலையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் உணரப்பட்டிருந்தது.

தமிழர் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையை குறைத்துவிடுவது என்பது தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கான அடித்தளத்தை ஆட்டம் காணச்செய்துவிடும். தமிழர் தாயகத்தில் பெருமளவில் தமிழ் தேசிய சக்திகள் வென்றாலே தமிழர்களது அரசியல் உரிமைகள் பற்றி உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ முன்னெடுப்பதற்கு பக்கபலமாகும்.

அதேவேளை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினானது தமிழர்களது உச்சகட்ட அரசியல் உரிமை பற்றி உறுதியாக கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான எந்தவிதமான வெளிப்பாடுகளும் இல்லாமல் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினருக்கான வேட்பாளர்களாகவே அவர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்கள் இதைத்தான் சொன்னார்கள் என்று சுரேஸ் பிரேமசந்திரன் இரண்டு தடவைகள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு அறிவித்த பின்னரும் தான் எதைக்கேட்டேன் என்பதை வெளிப்படையாக சொல்லாத நிலையே கஜேந்திரகுமார் விடயத்தில் காணப்படுகிறது.

தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை போன்ற அடிப்படை விடயங்களை அடித்தளமாக கொண்டே தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுகின்ற நிலையில் அதற்கு மேலாக தமிழீழமே தீர்வு என்று கூறிக்கொண்டு தேர்தலில் போட்டியிடக்கூடிய அரசியல் உரிமை சிறிலங்கா தேசத்தில் எவருக்கும் இல்லை. எனவே புதிதாக எதனையும் இவர்களால் சொல்லவும் முடியாது. தமிழீழமே தீர்வு என்று சொல்வதற்கான உரிமையே இல்லாதபோது அதற்கான சூழலை ஏற்படுத்தலே சாதுரியமான நகர்வாக இருக்கமுடியும்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றான இவ்வேட்பாளர்கள் தோல்வியடையும் நிலையில் தமிழ் தேசியத்தின் உச்சகட்ட அரசியல் உரிமைக்கான தேவை இல்லாமற் போய்விட்டதாகவே சிங்கள தேசத்தாலும் அடிவருடிகளாலும் பரப்புரைக்குட்படுத்தப்படும்.

அத்தோடு அகில இலங்கை தமிழ் காங்கிரசின் அடிமட்ட பலத்தை அவர்களால், தனியே யாழ்ப்பாணத்திலும் திருமலையிலும் மட்டுமே களம் இறங்கியுள்ளதன் மூலம் அறிந்துகொள்ளலாம். திருமலையில் சம்பந்தன் அவர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் நோக்கத்துடன்தான் திருமலையில் இவ்வாறான முன்னெடுப்பா என்கின்ற நியாயமான சந்தேகம் எழாமல் இருக்கமுடியாது.

சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் அமைப்பின் சூட்சுமங்களையும் அதனை எவ்வாறு எதிர்கொண்டால் தமிழர் தரப்பின் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்கலாம் என தெளிவாக புரிந்துகொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எப்படி தேர்தலை எதிர்கொண்டால் தமிழ் தேசியத்தை நிலைநிறுத்தலாம் என்று சிந்திப்பதற்கு இன்னும் காலஅவகாசம் இருக்கிறது.


ஏப்ரல் எட்டாம் திகதி நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் போதியளவான நாட்கள் இருப்பதால் அதற்கு முன்னர் தமிழ் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்தி அதற்கான முடிவுகளை தமிழ் காங்கிரஸ் எடுக்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ்மக்களின் நம்பிக்கையாகும்.




- கொக்கூரான்

தென்சூடானிய தேசம் தனிநாடு! சனவரி 9 வாக்கெடுப்பு

Wednesday, January 5, 2011 / 1 Comment
வடசூடான் தென் சூடான் என இரண்டு தேசங்களாக பிரிந்துள்ள அந்நாட்டில், 22 வருடங்களாக பெரும்போர் நடைபெற்றுவந்தது. 2005 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த ஒப்பந்தத்தின் பலனாக தற்போது சர்வசன வாக்கெடுப்பு ஒன்று நடத்துகின்ற நிலைக்கு இரண்டு தேசங்களும் இணங்கியுள்ளன.



இருபத்தியிரண்டு வருடங்களாக தொடர்ந்த போரில் குறைந்தது இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டும் பல மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.

பல ஆண்டுகால பகைமைக்கு பின்னர் வட சூடானை மையமாக கொண்ட மேலாதிக்கவாத அரசு தென் சூடானிய மக்களின் பிரிந்துசெல்வதற்கான உரிமையை ஏற்றுக்கொண்டமை ஆறுதலான விடயமே.

தென்சூடானிய மக்கள் மத்தியில் உரையாற்றிய சூடானிய அரச அதிபர் பசீர், “தென் சூடான் மக்கள் பிரிந்துசெல்வது கவலையானது. ஆனால் அதற்கான முடிவை அவர்கள் தெரிவுசெய்வார்கள் எனில் அதனை நீண்டுநிலைக்கும் சமாதானத்தின் பெயரால் ஏற்றுக்கொள்கின்றேன்” என குறிப்பிடுகின்றார்.

தென் சூடான் தேசத்தில் கிறிஸ்தவர்களும் வடசூடானிய தேசத்தில் முஸ்லிம்களும் வாழ்ந்துவருகின்றார்கள். ஏறத்தாழ எட்டுமில்லியன் மக்கள் தொகை கொண்ட தென் சூடான் தேசத்தில், நான்கு மில்லியன் மக்கள் வாக்களிப்பு தகைமையை கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களில் இரண்டு மில்லியன் வரையானோர் ஏற்கனவே வாக்களிப்பு பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். ஆபிரிக்கதேசத்தில் மிகப்பெரிய நாடான சூடான் நாட்டின் தலைவிதி எதிர்வரும் 9 ஆம்திகதி குறிக்கப்பட்டுவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

தென்சூடான் பிரிந்துவிடும் என நிச்சயமாக எதிர்பார்க்கப்படுவதால், பிரிவினைக்கு பின்னரான இரண்டு தேசத்தின் உறவுகள் தொடர்பில் வடசூடான் கரிசனை செலுத்துவதாகவும் கூறப்படுகின்றது.

சூடான் நாட்டின் ஐந்தில் நான்கு பகுதி எண்ணெய் வளம் தென்சூடானிலேயே இருப்பதாகவும் ஆனால் அந்த எண்ணெய் வளத்தை ஏற்றுமதிசெய்வதற்கு வடசூடான் துறைமுகத்தின் ஊடாகவே கொண்டுசெல்லவேண்டிய நிலையே தற்போது உள்ளதாகவும், அதனை எவ்வாறு இருதரப்பினரும் கையாள்வது என்பது தொடர்பில் இணக்கம் காணும் முயற்சிகள் இப்போதே தொடங்கிவிட்டன.

இதேவேளை முக்கியமான சிலபிரச்சனைகளுக்கு இன்னமும் தீர்வுகாணப்படவில்லை. அதாவது, சர்வசன வாக்கெடுப்பின் பின்னர் எல்லைகளை பிரிப்பது, எவ்வாறு எண்ணெய் வளத்தை பங்குபோட்டுக்கொள்வது, 38 பில்லியன் டொலர் வெளிநாட்டுக்கடனுதவியை எவ்வாறு மீளச்செலுத்துவது, இரண்டு தேசங்களுக்கும் இடையிலுள்ள அபேய் என்ற பிரதேசத்தின் ஆட்சியுரிமை யாருக்கு சொந்தமானது போன்றவற்றில் இன்னும் இழுபறி நிலையே காணப்படுகின்றது.

அபேய் எனப்படும் பிரதேசம் எந்தத்தேசத்துடன் இணையவேண்டும் என்பதை, அங்கு வாழ்பவர்களே முடிவுசெய்யவேண்டும் எனவும், அதற்கான இன்னொரு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதென அறிவிக்கப்பட்டாலும் அதுபற்றிய உறுதியான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றே தெரிகின்றது.

இரண்டு வெவ்வேறு காலாச்சாரங்களை கொண்ட இனங்கள் இணைந்துவாழா முடியாது என்பதை இருபத்தியிரண்டு வருட போரின் முடிவில் சூடானிய மேலாதிக்க அரசு கண்டுகொண்டது.

அதற்காக அந்த மக்கள் சிந்திய தியாகமும் விடாமுயற்சியுடன் தொடர்ந்த அந்த மக்களின் பல்வேறு வடிவங்களினான விடுதலைப்போராட்டமுமே என்றால் மிகையல்ல.

தென்சூடானிய தேசம் தமிழீழ மக்களுக்கு ஒரு பாடம்.




- கொக்கூரான்

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏன் அவசியம்: 10 காரணங்கள்

Tuesday, December 28, 2010 / No Comments
ஆட்சி மாற்றத்தின் மூலமே டக்ளஸ் தேவானந்தா, கருணா மற்றும் பிள்ளையான் போன்றோரிடமிருந்து தமிழ் மக்களை விடுவிக்க சாத்தியம் உள்ளது. தமிழ்த் தேசியத்திற்கு எதிரான சக்திகளை தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் விடுவதன் மூலம் தமிழர்களது இருப்பையே இலங்கைத்தீவில் இல்லாமல் செய்துவிடுவதே மகிந்த சிந்தனையின் திட்டமாகும். மகிந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரை இவர்களும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான வேலைகளுக்கே துணை போய்க்கொண்டிருப்பார்கள்.


சிங்கள தேசத்தின் அரசனாக வலம் வரும் மகிந்த ராஜபக்ச, தான் சிங்கள தேசத்தின் மன்னன் என்பதை நிலைநிறுத்தவே முயற்சி செய்கிறார். சிறிலங்காவில் சிறுபான்மையினங்கள் என்ற ஒன்று இல்லையெனக் கூறும் அவர் தேசப்பற்றாளர்கள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் இரண்டு இனங்களே இருப்பதாகக் கூறுகிறார். இப்படியான மகிந்தவை ஆட்சியில் தொடரவிட்டால் தமிழர்களுக்கு நிச்சயமான அழிவென்பதே உறுதியாகிவிடும்.


மகிந்தவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ச – போர் முடிவடைந்துவிட்டதாகச் சொல்லும் இன்றைய நிலையிலும் – தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகளுக்கும் முழுக்காரணமாக இருந்து வருகின்றார். தற்போது தேர்தல் காரணத்திற்காக தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் குறைந்தாலும் மீண்டும் ஆட்சி அதிகாரம் உறுதியானவுடன் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடுவார் என்பதில் சந்தேகமில்லை. தேர்தல் சமயத்திற்கூட தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பிரான துரைரட்ணசிங்கத்தை விடுவிக்கும் எண்ணமோ அல்லது திஸ்ஸ நாயகத்தை விடுவிக்கும் எண்ணமோ இவர்களுக்கு இல்லை.


தற்போதைய சிறிலங்கா அரசானது மேற்குலகின் எந்தக் கருத்துக்களையும் செவிமடுக்ககூடிய நிலையில் இல்லை. அண்மையில் ஜிஎஸ்பி வரிச்சலுகை விடயத்திலோ அல்லது போர்க்குற்றங்களுக்கான விசாரணை தொடர்பிலோ மேற்குலகின் கரிசனைகளைக் கேட்கின்ற நிலையில் இல்லையென்பதைக் கண்டுகொள்ளலாம். மேற்குலக அரசியலானது தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும் தமிழர்களது அடிப்படை அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் தற்போதும் அது அக்கறையுடனே செயற்பட்டு வருகின்றது. எனவே மேற்குலகின் கரிசனைகளைச் செவிமடுக்கக்கூடிய ஓர் அரசை மாற்றீடு செய்வதே தமிழர்களுக்குப் பலமாகவிருக்கும்.


தமிழ்மக்கள் தமது முக்கிய அரசியல் உரிமைகளைப் பற்றி விவாதிப்பதற்கான களநிலைமையோ அல்லது அவர்களது கருத்தைத் தெரிவிப்பதற்கான சூழ்நிலையோ இல்லாமல் இருக்கின்றது. தமிழர்கள் தமது கருத்தை தமது தாயகத்திலிருந்து பயமின்றித் தெரிவிக்க முடியாதவிடத்து எவ்வாறு எமது பிரச்சனைகளை வெளிக்கொண்டுவர முடியும்? ஆட்சி மாற்றத்தின் மூலம் ஒரளவுக்காவது அதற்கான சூழ்நிலை ஏற்படுமென எதிர்பார்க்ககூடிய நிலைமையுள்ளது. அவ்வாறான இடைவெளியே தாயகத்திலுள்ளவர்களுக்கு ஓரளவு நிம்மதியைக் கொடுக்கும்.


தமிழ்வேட்பாளராக நிற்கும் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரித்து மகிந்தவின் வெற்றியை உறுதிப்படுத்த இந்தியா விரும்புகிறது. தமிழர்களது போராட்டத்தைச் சிதைப்பதில் இறுதிவரை உறுதியுடன் செயற்பட்ட இந்தியா தமிழர்களது தேசிய ஆன்மாவைச் சிதைத்து சிறிலங்காவின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்களது தேசிய அரசியலைக் கரைத்துவிட முனைகிறது. தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்தி தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய நிலைமை தாயகத்தில் இல்லை. அதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தாதவரை அவ்வாறான முடிவுகளை எடுப்பது சரியாக இருக்காது. சிவாஜிலிங்கத்தின் தேசிய அரசியலை இந்தியா ஏற்றுக்கொள்ளாத அதேவேளை மகிந்தவை வெற்றிபெறவைப்பதற்கு சிவாஜிலிங்கத்தைப் பயன்படுத்த விரும்புகிறது.


தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலின்போது சிவாஜிலிங்கத்தைக் கண்டு மகிந்த ராஜபக்ச கண்சிமிட்டியதாக தினக்குரலின் கட்டுரையாளர் கும்பகர்ணன் தெரிவித்துள்ளார். அந்தக் கண்சிமிட்டலின் பின்னுள்ள விடயங்களை எச்சரிக்கையுடனே நோக்கவேண்டும். மகிந்தவுடன் இணக்க அரசியல் நடத்தவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்திவரும் சிறிகாந்தாவும் சிவநாதன் கிசோரும் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பது ஏன் என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். சிவநாதன் கிசோர் ஒருபடி மேலேபோய் மகிந்த ராஜபக்சவுக்கு நேரடியாக ஆதரவளிக்கப் போவதாகவும் தகவல்கள் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளையே பயன்படுத்தி தமிழ்மக்களின் வாக்குகளைப் பிரிக்க மகிந்த அரசு பயன்படுத்தும் உத்திகள்தாம் இவை.




தமிழர்களுக்குப் போரின் அவலத்தைப் பரிசளித்த படைத்தலைவர் என்ற வகையில் சரத் பொன்சேகா இருந்தாலும் அவர் ஆட்சி பீடம் ஏறினாலும் அவரால் முன்னைய அரச தலைவர்கள் போல செயற்படமுடியாது. பற்கள் புடுங்கப்பட்ட நாகபாம்பைப் போன்ற நிலையில்தான் சரத் பொன்சேகாவின் பதவி நிலை இருக்கும். பாராளுமன்றத்திற்கே அதிக அதிகாரங்கள் இருக்கும். அதன் மூலம் அதிகாரமற்ற அரச தலைவராகவே சரத் பொன்சேகா இருப்பார். எதிரிகள் பலவீனமாக இருக்கும்போதே தமிழர்களது அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும்.


சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் கட்சிகளில் ஜேவிபி தவிர்ந்த மற்றைய கட்சிகள் இனவாதத்தை முன்னிறுத்தும் கட்சிகள் அல்ல. ஜேவிபியில் கூட கடும் இனவாதத்தை முன்னிறுத்திய விமல் வீரவன்ச போன்றோர் மகிந்த அரசுடன் சென்றுவிட்டார்கள்.


மகிந்த அரசானது மலையகத் தமிழ் கட்சிகளைக் கையாளும் விதத்தைப் பார்க்கவேண்டும். அமைச்சுப்பதவிகளைக் காட்டி அவர்களது அரசியல் விலை பேசப்படுகின்றது. தற்போதைய நிலையில் மலையக அரசியல் தலைமைகள் சுயமாக தமது கட்சி தீர்மானங்களை எடுக்கமுடியாமல் இருக்கின்றனர். இதேபோல அண்மையில் நடைபெற்ற யாழ் மாநகரசபைத் தேர்தலிலும் தனது கட்சியின் சின்னத்திலேதான் போட்டியிடுமாறு டக்ளஸ் கூட

'அன்போடு' அறிவுறுத்தப்பட்டிருந்தார். தமிழர்களது அரசியலை முன்னெடுக்கும் எவரும் தமது கட்சியுடன் இணைந்துதான் செயற்படவேண்டும் என்பதில் மகிந்த அரசு கவனமாகவே இருக்கின்றது.


மேற்குறிப்பிட்ட காரணங்களிலிருந்து சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஒன்றே தமிழர்களுக்கான தற்காலிகத் தளர்வொன்றை உடனடியாக வழங்கக்கூடியதாக இருப்பதுடன் அதுவே தமிழர்களின் அடுத்தகட்ட அரசியல் வேலைத்திட்டங்களுக்கும் பொருத்தமாகக் காணப்படுவதைக் கண்டுகொள்ளலாம்.

- கொக்கூரான்

கல்லோயா படுகொலை கற்பிக்கும் பாடம்

Sunday, October 10, 2010 / No Comments
இலங்கைத்தீவானது பிரித்தானியா காலனியாதிக்கத்தின் பின்னர் பல இனப்படுகொலைகளை கண்டிருக்கிறது. 1983 இல் நடந்த இனப்படுகொலையானது உலக மனசாட்சியை உலுப்பிய ஒரு நிகழ்வாக இருந்தபோதும் முதலாவது இனப்படுகொலையாக கருதப்படும் 1956 இல் நடத்தப்பட்ட கல்லோயா படுகொலையை பற்றிய பார்வையை பதித்தல் முக்கியமானது என கருதுகிறோம்.

விடுதலைப்புலிகளால் யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலியில் நடத்தப்பட்ட பதுங்கிதாக்குதலின் எதிரொலியாகவே ஜூலை இனப்படுகொலை ஆரம்பமானது என இப்போதும் எம்மவரில் சிலர் கூறுவர். விடுதலைப்புலிகளால் சிங்கள படையினர் கொல்லப்பட்டதால் தான் பெரும்பான்மை இனத்தின் எதிர்வினை ஒரு இனப்படுகொலைக்கு வித்திட்டதாக கூச்சப்படாமல் நியாயப்படுத்தும் ”விற்பன்னர்கள்” இப்போதும் எம்மத்தியில் உண்டு. கடந்த கால வரலாறுகளை சரியாக அறிந்துகொள்ளாமல் விட்டாலும் அல்லது வரலாற்றை கெட்டித்தனமாக மறைக்க முற்பட்டாலும் நிகழ்காலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் கேள்விக்குரியதாக்கிமாற்றிவிடுவோம்.

வரலாற்றை மீளநினைவுபடுத்தும் ஒரு பகுதியாகவும் எதிர்காலத்தை நோக்கி சரியான திசையில் பயணிப்பதற்கான வழிகாட்டியாகவும் கடந்தகால வரலாறுகளேயிருப்பதால் கல்லோயா படுகொலை தொடர்பான பார்வையை இங்கு தருகின்றோம்.

1956 இல் ஆட்சிக்கு வந்த சொலமன் பண்டாரநாயக்கா தனிச்சிங்கள சட்டத்தை அமுல்படுத்தினார். அதன்மூலம் தமிழ் மக்களும் சிங்கள மொழியினூடாகவே அனைத்து வேலைகளை செய்யவேண்டியிருந்தது. அப்போது சேவையிலிருந்த அனைத்து தமிழ் உத்தியோகத்தர்களும் சிங்கள மொழியில் சேவையாற்ற தெரியாதவிடத்து கட்டாயமாக வேலையிருந்து விலக்கப்பட்டார்கள்.

அப்போது நாடாளுமன்றத்தில் இதனை எதிர்த்துநின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து நின்று உரையாற்றிய கொல்வின் ஆர் டி சில்வா நீங்கள் ஒரு மொழி என்று சொன்னால் இரண்டு நாடுகள்தான் உருவாகவேண்டிவரும் என எச்சரித்தார். ஆனால் பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகளோ அதனை செவிமடுக்ககூடிய நிலையில் இருக்கவில்லை.

தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்து காலி முகத்திடலில் அமைதியான கவனயீர்ப்பு நிகழ்வை அப்போதைய தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களும் நடத்தினார்கள். அப்போதைய அரச அமைச்சரின் வழிகாட்டலில் ஆயுத குண்டர்களை அனுப்பி அவர்கள் மீது தாக்குதல் நடத்தி குறிப்பிட்ட கவனயீர்ப்பு நிகழ்வை அடக்கினார்கள். தமிழ் மக்களின் வணிக நிறுவனங்களை புறக்கணிக்குமாறு சிங்கள அரசியல்வாதிகளால் சொல்லப்பட்டபோது 150 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களை எரித்தும் கொள்ளையடித்தும் சென்றது இன்னொரு கூட்டம்.

இதன் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்திலுள்ள கல்லோயா என்ற இடத்தில் 300 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள காடையர்களால் கொலை செய்யப்பட்டனர். பெருமளவு சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இலங்கை தீவு சுதந்திரமடைந்ததாக சொல்லப்பட்ட காலத்திற்கு பின்னரும் அதற்கு முற்பட்ட காலத்திலும் ஒரே தடவையில் பெருந்தொகையாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட முதலாவது சம்பவம் இதுவாகும்.

இலங்கைத்தீவு சுதந்திரமடைவதற்கு சில ஆண்டுகள் முன்புவரை தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கு ஆட்சியுரிமையில் சம உரிமை அவசியமானதென தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இது பின்னர் 50 இற்கு 50 எனவும் விளிக்கப்பட்டது. தனித்தனியான தேசங்களே வெளிநாட்டு அரசுகளால் ஒன்றாக்கப்பட்டன என்ற யதார்த்தத்தின் அடிப்படையில்தான் அக்கோரிக்கையை ஜி. பொன்னம்பலமும் முன்வைத்தார்.

தற்போதும் எம்மவர்களில் சிலர் சொல்வதுபோல அன்றும் ”பிடிவாதமாக இருக்காமல் இறங்கிப்போய் இணைந்துவாழ்வோம்” என்று உபதேசித்தார்கள். இதனால்தான் என்னவோ ”நாங்கள் இனிமேல் இளகுநிலை ஒத்துழைப்பு (Responsive cooperation) என்ற அடிப்படையில் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வோம்” என ஜி. பொன்னம்பலத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு தமிழர்கள் இறங்கிப்போய் இருபது ஆண்டுகளுக்கு பின்னர்தான் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உண்மையான கொடிய முகத்தை அப்போதும் எம்மவர்கள் கண்டிருந்தார்கள். அதற்கு முதலாவது விலையாக 300 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ்மக்கள் சிறிலங்கா அரச காவல்துறையின் கண்காணிப்பில் கொல்லப்பட்டிருந்தார்கள்.

அப்போது தமிழர்களிடம் ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்புக்களோ அல்லது அவ்வாறான எண்ணத்தை கொண்ட அமைப்புக்களோ இருக்கவில்லை. அமைதியான முறையில் தமது உரிமைகளை கேட்ட தமிழ் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளுமே செயற்பட்டன. ஆனாலும் அன்றும் சிங்கள தேசம் சிறுபான்மை இனத்தின் உரிமைகளை மதிக்காதது மட்டுமன்றி பெரும்பான்மை இனத்தின் மொழியையும் அதிகாரத்தையும் திணித்து தமிழரின் அடையாளத்தை அழிக்கவே முற்பட்டது. எனவே போரிலே தோற்றுவிட்டோம் என்பதற்காக எமது உரிமைகளை கைவிட்டு சரணாகதி அடைய வேண்டிய அவசியமில்லை. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற அரசியற் கட்டமைப்புக்களை ஏற்படுத்தி தமிழ் மக்களிற்கான உரிமைகள் வென்றெடுக்கப்படவேண்டும். இல்லாதுவிட்டால் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்துவிடுவோம்.

- கொக்கூரான்-

மாறிவரும் சர்வதேச சூழ்நிலையும் மாறாத தமிழ்த்துவமும்

Saturday, July 3, 2010 / No Comments
உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டுக்காக பிரித்தானிய முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டமையும் அதன் பிரதிநிதிகளை அந்நாட்டு பிரதமர் சந்தித்தமையும் சாதாரண விடயங்களல்ல. அனைத்து எதிர்பார்ப்புக்களையும் தொலைத்த ஒரு இனத்திற்கு இவ்வாறான வெளிச்சங்கள் மீண்டும் தம்மால் எழுந்துநிற்கமுடியும் என்ற ஊக்கத்தை கொடுக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.



இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் பிரித்தானிய அமைச்சர் மிலிபாண்ட் தீடிரென முடிவெடுத்து இம்மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்பதையும் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னரே இதற்கான தனது விருப்பை வெளிப்படுத்தியிருந்தார் என்பதையும் மாநாட்டுத்தகவல்கள் தெரிவிக்கின்றது.

மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அதனை தெரியப்படுத்திய அவருக்கு சிறிலங்கா அரசு தரப்பு உடனடியாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தி தனது சிங்கள மேலாண்மை இன்னும் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது.

இவ்வாறு வெளிப்படையாக தமது நாட்டு அரச அமைச்சரை கண்டித்தற்கு பழிவாங்க பிரித்தானிய பிரதமர் முடிவெடுத்தார். அதனால்தான் உடனடியாகவே உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு முடிவெடுத்தார்.

மாநாட்டு நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடக்கப்படாத இச்சந்திப்பை சாத்தியமாக்கியவர்கள் வேறுயாருமல்ல. சிங்கள மேலாண்மையை நிலைநிறுத்தும்  சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சவும் அதன் வெளிநாட்டு அலுவல்களுக்கான அமைச்சர் ரோகித போகல்லாவே என்பதை தமிழ் மக்கள் அறிந்துகொள்ளவேண்டும். அவ்வாறான புரிதலே எதிர்காலத்தில் தமிழர் தரப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை திட்டமிட உதவும்.

இதேவேளை தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் இலங்கைத்தீவில் தொடரும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு ஒரு குழுவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளார். இவ்வாறான குழுவை நியமித்து தமது அரசுக்கு ஆலோசனை வழங்குவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் இது தமது இறையாண்மையை மீறிய செயலாகும் என உடனடியாக தனது அதிருப்தியை வெளியிட்டது.

இதன் தொடர்ச்சியாக பான் கீ முன்னை நேரடியாகவே தொடர்புகொண்ட மகிந்த ராஜபக்ச தனது கவலைகளை வெளியிட்டிருக்கிறார். அப்போது சமாளிப்பதிலேயே கெட்டிக்காரரான பான் கீ மூன் குறித்த குழுவானது உங்களுக்கு ஆலோசனை வழங்காது எனவும் தனக்குத்தான் ஆலோசனை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ இனிமேல் சிறிலங்காவில் நடைபெற்றுவரும் அரசின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான குழுவொன்று ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டுள்ளது என்பதும் அது ஏதோ ஒன்றை செய்துகொண்டிருக்கத்தான் வேண்டும் என்பதும் அது சிறிலங்கா அரசுக்கு நல்ல செய்தியாக இல்லையென்பதும் வெளிப்படையான விடயமாகும்.

அமைக்கப்பட்ட குழுவானது நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதையும் முக்கியமாக கண்காணிக்கவுள்ளது.

அரசியல் ரீதியாக தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தை கூர்மைப்படுத்தவேண்டிய இக்கட்டத்தில் இவ்வாறான சர்வதேச மாற்றங்கள் தமிழர் தரப்புக்கு சில ஆறுதலான வார்த்தைகளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவற்றை தாண்டி பயணிக்கவேண்டிய தூரமும் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

இவ்வாறு சர்வதேச மாற்றங்கள் ஒருமுகப்பட்டு சிறிலங்கா அரசுக்கு எதிராக திரும்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தாயகத்தில் நடைபெற்றுவரும் தமிழர் தரப்பின் பிளவுகள் வெந்த புண்ணில் வேல் பாய்வது போல தமிழ் மக்களின் மனதை வாட்டுகின்றது.

1980களில் ஒரே நோக்கத்திற்காக புறப்பட்ட போராளிகள் வெவ்வேறு விடுதலை இயக்கங்களை ஆரம்பித்ததும் அதனால் பிரிந்து நின்ற இவ்வியக்கங்களை சிறிலங்கா அரசும் இந்திய புலனாய்வுத்துறையும் தமது தேவைக்கேற்ப பயன்படுத்தமுற்பட்டமையும் வரலாறு.

அவ்வாறான நிலையை நோக்கி மீண்டும் தமிழர் தரப்புகள் செல்கின்றனவா என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கும் சம்பவங்களே அண்மைக்காலத்தில் நடந்துவருவதை காணக்கூடியதாகவுள்ளது.

ஒரே திசையில் பயணித்து தமிழர்களின் விடுதலைக்காக போராடவேண்டிய தமிழர் தரப்புகள் தமது உண்மையான எதிரிகள் யார் என்பதை இனங்கண்டு கொள்வதில் தற்போது தடுமாறுவதுதான் விந்தையாக இருக்கிறது. நடப்பதோ சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கான தேர்தல். அதன் நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகளாக இருந்து எதையும் சாதிக்கபோவதில்லை என்பதும் இத்தமிழர் அமைப்புக்களுக்கு தெரிந்தும் இந்த தேர்தல் மூலம் இவர்கள் பிளவுபட்டு நிற்பதுதான் இன்னும் வேடிக்கை.

இத்தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் தலைவர்களே தமிழர்களின் அடுத்தகட்ட அரசியலில் தலைமை தாங்கி செல்லவேண்டும் என்பது வெளிப்படை எனினும் இரண்டு பிரிவாக பிளவுபட்டு நிற்பதன் மூலம் தமிழர் தரப்பின் ஒட்டுமொத்த பலத்தை சிதறடித்துவிட்டமை வரலாற்றின் ஒரு கறையாகவே இருக்கும்.

மாறுகின்ற சர்வதேச நிலைப்பாடுகள் தமிழர் தரப்புக்கு ஒளிக்கீற்றுக்களாக ஆறுதல் அளிப்பது போல புலத்துதேசத்தில் காணப்பட்ட முரண்பாடுகளை வெற்றிகொண்டு படிப்படியாக ஒரு நேர்கோட்டுக்கு வந்துகொண்டிருப்பது போல தாயகத்திலும் தமிழர் தரப்புகள் ஒருமுகப்படுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்பபோம்.




- கொக்கூரான்




தமிழர்களின் இருப்பை பாதுகாத்தல்

Monday, June 21, 2010 / No Comments
இன்றைய நிலையில் தாயக மக்களின் வாழ்வை பாதுகாத்து, அவர்களது வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கான வழிவகைகள் என்ன என்பது பற்றி அலசி ஆராய்வது அவசியமானது என கருதி அது தொடர்பான பார்வையாக விரிகின்றது இப்பத்தி.



அண்மைக்காலங்களில் நடந்துமுடிந்த இலங்கைத் தேர்தல்களில் தமிழர்களின் தெரிவு என்பது சிங்கள தேசத்திலிருந்து வேறுபட்டதாக இருப்பதை சிங்கள தேசமும் சர்வதேச உலகமும் கண்டுள்ளது. ஆனால் அவ்வாறான இனப்பிளவை புரிந்துகொண்டு பொருத்தமான தீர்வை முன்வைக்காமல் இழுத்துச்செல்லும் சிங்கள தேசத்துடன் சர்வதேசங்களும் இழுபட்டுச் செல்வதுதான் தமிழர்களை பொறுத்தவரை ஏமாற்றமான விடயமாகவிருக்கின்றது.

சிறிலங்கா அரச தலைவருக்கான தேர்தல் முடிவடைந்து பல மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் சிறிலங்கா அரச தலைவர் தனது பதவியை புதுப்பித்துக் கொள்ளவில்லை. சிறிலங்காவில் இருப்பதாக சொல்லப்படும் சட்டங்களிலுள்ள ஓட்டைகளை அதன் ஆட்சியிலுள்ள அரச தலைவர் எவ்வாறு உதாசீனம் செய்கிறார் என்பதற்கு அவரது பதவி ஏற்பு நிகழ்வு தள்ளிப் போடப்பட்டு வருவது நல்ல உதாரணம்.

எதிர்வரும் நவம்பர் மாதமே பதவியை புதுப்பித்துக்கொள்ளவுள்ளதாக சொல்லும் சிங்கள தேசத்தின் தலைவர், மூன்றாவது முறையாகவும் தான் ஆட்சி ஏறக்கூடிய நம்பிக்கை தனக்கு இருப்பதாக இப்போது தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் நாடாளுமன்றத்திற்கான தேர்தலும் நடைபெற்று, இன்னும் சில மாதங்கள் கடந்த நிலையில் இப்போதுதான் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளுடன் ஒரு சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த பிரதிநிதிகளில் ஒருவரான பத்மநாதன் அவர்கள், சிறிலங்காவின் சதிவலைக்குள் சிக்குப்பட்டு இப்போது கோத்தபாய ராஜபக்ச கீறிய கோட்டுக்குள் சில தந்திர நகர்வுகளை மேற்கொண்டுவருகின்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் ஆகக்குறைந்த பட்ச கோரிக்கைகளையே பரிசீலிக்கமுடியாத சிங்கள அரசு, தமிழீழமே தனது இலட்சியம் என வரித்துக்கொண்ட ஒருவர் ஊடாக வெளிநாடுகளிலுள்ள சிலருடன் தொடர்புகொண்டு சில சந்திப்புக்களை ஏற்படுத்திவருவதும் அதன் ஊடாக சிங்கள தேசம் எதனைச் சாதிக்கமுற்படுகின்றது என்பதை சாதாரண தமிழ் மகனும் புரிந்துகொள்ளமுடியும்.

இவ்வாறான களநிலைமையில் தமிழர் தரப்பு செய்யக்கூடியது என்ன என்பது பற்றி பொருத்தமான முடிவுகளை எடுக்கவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

தற்போது தமிழர் தரப்பு எதிர்பார்க்கும் வடக்கு கிழக்கு இணைந்ததான தமிழர் தேசம் என்ற அலகையோ அல்லது தமிழ் தேசத்திற்கான நேரடி வெளிநாட்டு உதவிக்கான ஏற்பாடுகளையோ சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

அதேவேளை அவ்வாறானதோர் அதிகார பகிர்வுக்கு சர்வதேச அரசுகளோ அல்லது அமைப்புக்களோ சிறிலங்கா அரசின் மீது அழுத்தத்தை பிரயோகித்து தமிழர் தரப்பின் வேண்டுதல்களுக்கான ஆதரவை தமிழர் தரப்புக்கு வெளிப்படையாக இப்போது தரப்போவதில்லை.

இந்நிலையில் பிரிக்கப்பட்ட தமிழர் தேசத்தில், வடக்கு மாகாணத்திற்கான தேர்தலை நடத்துவதில் முன்னர் ஆர்வம் காட்டிய சிங்கள தேசம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை வைத்து அதற்கான தேர்தலை தற்போது நடத்துவதில் பின்னடிக்கின்றது.

இவ்வேளையில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலையோ அல்லது அவ்வாறானதோர் அரசியல் உரிமை வரும்வரை காத்திராமல் தனித்தனி மாகாணங்களாக இருந்தாலும் அதற்கான தேர்தலில் போட்டியிட்டு தமிழர்களின் ஒரே பிரதிநிதிகளாக தமிழ் தேசியத்தின் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான பணியில் தமிழர் தரப்புக்கள் அக்கறை காட்டவேண்டும்.

அவ்வாறான தனித்தனி உள்ளாட்சி அமைப்புக்களுக்கு தமிழ் தேசியத்தின் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டால் அதிகார வர்க்கத்தால் பிரிக்கப்பட்ட தேசத்தை மக்கள் பலத்தால் இணைத்துக்காட்டிய சாதனையை தமிழர்கள் ஏற்படுத்தமுடியும்.

அவ்வாறு இரு அலகுகளாக இருந்தாலும் தமிழர்களின் அழிந்துபோன பொருளாதார வல்லமையை நிலைநிறுத்துவதில் புலத்து தமிழ் சமூகத்துடன் இணைந்து பயணித்தால் பொருண்மிய வல்லமையை வளர்த்துக்கொள்வதுடன் தமிழர்களின் இருப்பையும் தக்கவைக்கமுடியும்.

எப்படியேனும் தமிழர்களை வெளியேற்றி அல்லது சிங்கள குடியேற்றங்களை செய்து தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து தமிழர்களின் அடையாளத்தை சிதைப்பதற்கே சிங்கள தேசம் முன்னிற்கின்றது.

இதன் ஒருபடியாக தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தை பதிவு செய்வதாக இருந்தாலும்கூட கோத்தபாயவின் கையெழுத்து பெறப்படவேண்டும் என எழுதப்படாத சட்டத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் பின்பற்றுகின்றார்கள்.

எனவே இவற்றை கவனத்திற்கொண்டு நீண்ட கால அரசியற் தீர்வுக்கான வேலைத்திட்டங்களை ஒரு முனையில் நகர்த்தும் அதேவேளை அதற்கு சமாந்தரமாக குறுகிய கால அரசியற் திட்டங்களுக்கான வேலைத்திட்டங்களை அனைவரும் முன்னெடுக்கவேண்டும்.

இரண்டு முனையில் தமிழர்களின் வாழ்வதற்கான போராட்டமும் வாழ்வுரிமைக்கான போராட்டமும் நகர்த்தப்படாவிட்டால் இன்னும் பத்தாண்டுகளில் தமிழர் தேசத்தின் பலம் சிதைக்கப்பட்டுவிடும்.

இதனை தெளிவாக உணர்ந்து தாயகத்தில் தமிழர் பிரதிநிதிகளாக வலம்வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியல் ரீதியாக சரியான முடிவுகளை எடுக்கும் அதேவேளை தமிழர்களின் பொருளாதார வல்லமையை வளர்ப்பதற்கான கட்டுமானங்களை உருவாக்குவதற்கான தளத்தை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்தவேண்டும். அத்தளத்தை புலம்பெயர்ந்துவாழும் மக்களின் ஆதரவுடன் செயற்படுத்தி தமிழர்களின் வாழ்வுக்கான ஆதாரங்களை உறுதிப்படுத்தவேண்டும்.

- கொக்கூரான் -

நாடு கடந்த தமிழீழ அரசு - தமிழர்களின் அடுத்த இலக்கு

Monday, April 19, 2010 / No Comments
அதேவகையான மாறுதலை புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளிலும் முன்னெடுக்கப்படவேண்டிய தேவை உள்ளது. அவ்வாறான முன்னெடுப்புகளின் தற்போதைய நிலை என்ன? தமிழர்களின் இவ்வாறான பல்வேறு அரசியல் நகர்வுகள் சந்திக்கும் புள்ளி எது? அது எப்போது நடைபெறும்? என்ற கேள்விகள் தவிர்க்கமுடியாதவை.  அக்கேள்விகளுக்கான தேடல்களாக விரிகின்றது இப்பத்தி.



தமிழர்களின் தனியரசுக்கான கட்டமைப்புக்கள் அழிந்துபோன இன்றைய நிலையில், தமிழர்களுடைய அரசியல் உரிமைகள் பற்றிய அணுகுமுறையில் பல்வேறு கருத்துக்கள் தமிழ் மக்களிடமிருந்து முன்வைக்கப்பட்டன.

இனிமேல் மகிந்த அரசு தருவதை பெற்றுக்கொள்வோம் என ஒரு தரப்பும், நடந்துகொண்டிருந்த விடுதலைப் போரை மறந்து இனிமேல் அதற்கான அடிப்படைகளை மறைத்து இணைந்து வாழ்வோம் என்று இன்னொரு தரப்பும், பொருத்தமான தீர்வு வரும்வரை எமது கொள்கைகளை சமரசம் செய்யதேவையில்லை என இன்னொரு தரப்புமாக பலமுனைகளில் இதுநாள்வரை ஒன்றாக இருந்த தமிழர்கள் குழம்ப தலைப்பட்டனர்.

eelam-tamilsஇதனால் தமிழ்மக்களின் தற்போதைய தெரிவு என்னவென்பது பற்றிய ஆணையை மக்களிமிருந்தே பெற்றுக்கொள்வதும் சர்வதேசங்களுக்கும் தமிழர்களின் அபிலாசைகளை வெளிப்படுத்துவதும் அவசியமாகவிருந்தது.

இதன்விளைவாக தமிழர்களின் அதியுச்ச அரசியல் உரிமைக்கான இன்றைய வலுவுடமையை பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்தியதன் மூலம் நிலைநிறுத்திய பின்னர், அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கான வேலைத்திட்டங்கள் அனைத்து தமிழ் மக்கள் முன்னேயும் விரிந்துகிடக்கின்றன.

தமிழர்களின் அதியுச்ச அரசியல் உரிமைக்கான குரலை வெளிப்படையாக, பயமின்றி, சர்வதேச சட்டவரையறைகளுக்கு அமைவாக வெளிப்படுத்தியதோடு நின்றுவிடாமல் அதனை தொடர்ந்து செயற்படுத்த வேண்டிய கட்டுமானத்திற்கான தேவை இப்போது எழுந்துள்ளது.

அதேவேளை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் இரத்தத்தாலும் முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் போராளிகளாலும் வளர்த்துவிட்ட இலட்சியத்தீயை, விடுதலைக்கான வேட்கையை, தமிழ் தேசியத்திற்காக சிந்தனையை விடுத்து விலகி தமிழ் தேசியத்தை நீர்த்துப்போகவிடமுடியாது என்ற சிந்தனையும் பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது.

எனவே மண்ணுக்காக வாழ்ந்து, வீழ்ந்துபோன தமிழ் மறவர்கள் விட்டுச்சென்ற பணியை சனநாயக வழிமுறைகளில் முன்னெடுக்கவேண்டிய பணி, புலம்பெயர்ந்த தமிழர்களிடம் வந்துசேர்ந்துள்ளது.

அதனை நாடு தழுவிய மக்கள் அவைகளாக அல்லது தேசிய அவைகளாக அந்நாட்டில் வாழும் அனைத்து தமிழ் மக்களாலும் நேரடியாக தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு உருவாக்குவதற்கான பணிகள் பலநாடுகளில் நடந்து நிறைவுபெற்றுள்ளன. இன்னும் சில நாடுகளில் அவை நடைபெறுவதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

அவ்வகையில் எதிர்வரும் ஜுன் மாதம் 20 ஆம் திகதி, கனடா தமிழர் தேசிய அவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழர்களின் அதியுச்ச அரசியல் உரிமைகளையும், தமிழ் தேசிய அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு அதற்காக உழைப்போம் என உறுதியெடுத்தே வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.

ஆனால் அவர்களுக்கு முன்னால் உள்ள பணிகள் என்பவை சமூக நல திட்டங்கள் என்பவற்றிலிருந்து தொடங்கி ஒரு இனத்திற்கான விடுதலைக்கான பணி என நீண்டுசெல்கின்றது.

முன்னர் தாயகத்தில் இருந்து நெறிப்படுத்தப்பட்ட இவ்வாறான தமிழர் கட்டமைப்புக்கள் தற்போதைய சூழலில் சுயாதீனமான அமைப்புக்களாக செயற்படவேண்டிய நிலையில் உள்ளனர். அவ்வாறு சுயாதீனமாக செயற்படும்போது அதன் கொள்கைகளை உறுதியாக வரித்துக்கொள்கின்ற பொருத்தமான பிரதிநிதிகளிடம் அதனை கையளிக்கவேண்டும். அதன்மூலம் சரியான தலைமைகளிடம் அடுத்த கட்ட விடுதலைப்பணி கொடுக்கப்படவேண்டும்.

இந்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் இன்னொரு கட்டமைப்புக்கான அவசியம் என்ன என்பது தொடர்பில் சில கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

நாடுகடந்த தமிழீழ அரசு என்பது தமிழ் மக்களின் அரசியல் நகர்வில் மிகவும் முக்கியமான செயற்றிட்டமாகும். அதன் மூலம் இழந்துபோன இறைமையை நாடு கடந்த நிலையில் தமிழ் தேசிய ஆன்மாவின் குறியீட்டு வடிவமாக நிலைநிறுத்தியிருக்கின்றோம்.

ஆனால் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாக கட்டமைத்து செயற்படுவதில் சில நடைமுறை பிரச்சனைகள் உள்ளன. அது “அரசாங்கம்” என்ற வகையில் அது ஒவ்வொரு நாடுகளிலும் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகவோ அல்லது நிறுவனமாகவோ இருக்கமுடியாது என்பதையும் அவ்வாறு பதிவுசெய்வதாக இருந்தால் அதனை ஒரு ”அரசு” என்ற கட்டமைப்பில் அனைத்து நாடுகளிலும் பதிவுசெய்துகொள்ளமுடியாது என்பதையும் இங்கு நாம் கவனத்திற்கொள்ளவேண்டும்.

ஆனால் சர்வதேச நாடுகளின் ஆதரவை படிப்படியாக பெற்றுக்கொள்ளும்போது, உண்மையான நாடு கடந்த தமிழீழ அரசாக, அது மாற்றமடையும். அவ்வாறான நிலை உருவாகும்வரை, ஒவ்வொரு நாடுகளிலும் வாழும் தமிழர்கள், தமது அரசியல் அடையாளங்களையும் அரசியல் உரிமைக்கான குரலையும் அந்நாட்டு சட்டங்களுக்கு அமைவாக முன்கொண்டுசெல்லவேண்டும்.

அந்தவகையில் நாடு தழுவிய மக்கள் கட்டமைப்புகள், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பலமான அடித்தளத்தை உருவாக்கும் என்பதோடு நாடு கடந்த தமிழீழ அரசுக்கான செயற்படு இயங்குதளத்தை இம்மக்கள் கட்டமைப்புக்களே வழங்கமுடியும்.

அவ்வாறு செயற்பட்டு, நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும்போது, மக்கள் அவையும் நாடு கடந்த தமிழீழ அரசும் ஒரு புள்ளியில் சந்திக்கமுடியும். அவ்வாறான நிலையில் இரண்டும் இணைந்து – வெளிப்பார்வைக்கு - வெவ்வேறாக செயற்பட்ட நிலை மாறி, இரண்டும் ஒன்றாகி செயற்படும் நிலையுருவாகும். அப்போதுதான் தாயகத்தில் வாழும் தமிழருக்கான கௌரவமான தீர்வு கிடைப்பதற்கான வழி பிறக்கும்.

ஆனால் அதுவரை இதற்கான தேசியபணியை செய்யப்போவது யார்? எமது விடுதலைக்கான தேவையை வெளிப்படையாக துணிந்து சொல்லப்போகின்றவர்கள் யார்? தமிழீழ தேசிய கொடியின் கீழ் அணிவகுத்து, தமிழர்களின் அதியுச்ச அரசியல் உரிமைக்கான போரை, பலமான நிலையான அமைப்பாக இருந்து விடுதலைக்கான போரென எடுத்துச்சொல்லப்போகின்றவர்கள் யார்?

அவ்வாறு சொல்லப்போகின்றவர்கள் சார்ந்த அமைப்பு,  அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு அமைவாக பதிவு செய்துள்ளார்களா? அவ்வாறு பதிவுசெய்யப்பட்ட அமைப்பானது எமது தேசிய அடையாளங்களை முன்னெடுத்து செல்வார்களா? அவ்வாறு முன்னெடுத்து செல்பவர்கள் அந்நாடுகளில் வாழும் அனைத்து தமிழர்களின் பிரதிநிதிகளாக கருதப்படக்கூடியவர்களா?

நாடுகடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளுக்கான அடித்தள ஆதரவை வழங்கப்போவது யார்? நாடு கடந்த தமிழீழ அரசுக்கான வேலைத்திட்டங்களை உரிய காலம்வரும் வரை நிறைவேற்றக்கூடிய மக்கள் பலத்தை கொடுக்கப்போவது யார்?

இவ்வாறான கேள்விகளுக்கு விடைகளை தேடும்போது, நாடு கடந்த தமிழீழ அரசும் நாடு தழுவிய மக்கள் அவைகளும் எவ்வாறு ஒன்றுபட்டு தமிழ் மக்களின் அமைப்பாக உருவாகப்போகின்றன என்பதை விளக்கும். சில கேள்விகளுக்கு சிலவேளைகளில் சில கேள்விகளே பொருத்தமான பதில்களாக மாறுவதுண்டு.




- கொக்கூரான்

சிறிலங்காவின் பொதுத்தேர்தலும் தமிழ் மக்கள் மனநிலையும்

Friday, April 16, 2010 / No Comments
தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தலும் அதனை தமிழர் தரப்பு எதிர்கொண்டவிதமும் அதற்கு மக்கள் வழங்கிய தீர்ப்பு தொடர்பான விடயங்களை ஆராய்கிறது இப்பத்தி.



இதனை பின்வரும் உப தலைப்புகளில் ஆராய்வது பொருத்தமாகவிருக்கும் என கருதுகின்றோம். 1. தேர்தல் அறிவிக்கப்பட்ட காலப்பகுதி 2. தமிழர் தரப்பின் கொள்கையடிப்படையிலான வேறுபாடுகள் 3. மகிந்தவின் மறைமுக அரசியல் திட்டங்கள் 4. தமிழர்களின் தீர்மானம்

தேர்தல் அறிவிக்கப்பட்ட காலப்பகுதி

தாயகத்தில் நடைபெற்ற பேரழிவின் கோரங்கள் ஆறமுன்னரே நடந்துமுடிந்த அரச தலைவர் தேர்தலும் அதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தலும் தமிழர்கள் மேல் அவசரமாக திணிக்கப்பட்ட தேர்தலாகவே மக்களால் எதிர்கொள்ளப்பட்டமை ஆச்சரியமானதல்ல.

அழிவின் ரணங்கள் ஆறமுன்னர், ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பமுடியாத நிலையிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இரகசிய தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலும் இன்னும் நூற்றுக்கணக்கானோர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாத நிலையிலுமே இந்த இரு தேர்தல்களும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டன.

இவ்வாறான சூழ்நிலையில் தமது அரசியல் உரிமையை பற்றி சிந்திப்பதிலோ அல்லது அதற்கான தேடலிலோ ஈடுபடுவதற்கான மனநிலை இருக்காது. மாறாக இருப்பதை பாதுகாத்து கொள்வோம் என்ற இயலாமையே நிரம்பிநிற்கும்.

தமிழர் தரப்பின் கொள்கை அடிப்படையிலான வேறுபாடுகள்

தமிழ் தேசிய அரசியலின் இறுதி நம்பிக்கை மூலமாகவிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து சிவநாதன் கிசோர், கனகரத்தினம் மற்றும் தங்கேஸ்வரி ஆகியோர் மகிந்த அரசுடன் இணைந்துகொண்டதும் சிவாஜிலிங்கம் மற்றும் சிறிகாந்தா ஆகியோர் குழப்பியடித்து வெளியேறியமையும் கஜேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் வெளியேற்றப்பட்டமையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொள்கை வேறுபட்டு நின்றமையும் இன்னும் சிலர் ஒதுங்கி கொண்டமையும் தமிழ் தேசிய உணர்வுள்ள மக்கள் மத்தியில் குழப்பநிலையை நிச்சயம் உருவாக்கியே இருக்கும்.

இவ்வாறான பிரிவுகளும் பிளவுகளும் தமிழ் தேசிய உணர்வுள்ள மக்களின் மனதை புண்படுத்தி, தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கு இட்டுச்சென்று, தமிழ் மக்களின் ஒரு பகுதி வாக்குகளை மௌனிக்கவைத்துவிட்டதாகவே கருதவேண்டியுள்ளது.

மகிந்தவின் மறைமுக அரசியல் திட்டங்கள்

மகிந்தவின் மறைமுக நிகழ்ச்சி நிரலானது தமிழ் மக்களால் முழுமையாக விளங்கிக்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயமாகும். முன்னாள் சிறிலங்கா அரச தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன, குள்ளநரி என கருதப்பட்டவர். ஆனால் இப்போது ஆட்சியிலிருக்கின்ற மகிந்த ராஜபக்சவும் அதன் சகோதர பரிவாரங்களும் அதனிலும் மோசமான குள்ளநரிகள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக தமிழர்கள் முழுமையாக அதன் உள்ளார்த்தங்களை புரந்துகொள்ளவேண்டும்.

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற வரவு செலவுதிட்ட விவாதத்தின்போது நாடாளுமன்ற பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதில் மகிந்த அரசாங்கம் தரப்பில் சிக்கல் நிலை உணரப்பட்டது. அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் சிறிலங்கா அரசாங்கமே கவிழும் நிலை.

எனவே எதிர்கட்சிகளில் உள்ளோரை பணம்கொடுத்து விலைக்கு வாங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் மேலதிக சிக்கல் வரலாம் என கருதப்பட்டது. அன்றைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரையும் விலைக்கு வாங்கமுடியாது என்பது மகிந்தவுக்கு நன்றாகத் தெரிந்திருந்துது.

அதனால் இன்னொரு நகர்வை செய்தார்கள். அதாவது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை கடத்தி வைத்திருந்து, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் சென்று வரவு செலவுத்திட்டத்தில் வாக்களிக்ககூடாது என கூறப்பட்டது. அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள்.

இவ்வாறு நவீன சண்டியர்களாக வலம்வந்த ராஜபக்ச அரச நிர்வாகம், இம்முறை தேர்தலில் நுட்பமான காய்களை நகர்த்தியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் தனியே போட்டியிடுவதாக கூறிய மகிந்த பின்னர் டக்ளசுடன் சமரசம் செய்வது போல காட்டி தங்களது வேட்பாளர்கள் நால்வரையும் டக்ளசின் வேட்பாளர்கள் எண்மரையும் நிறுத்தியது. இங்கு மறைமுகமாக மகிந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஆதரவை வழங்கி டக்ளசை கைகழுவிடவும் மகிந்த அரசு தயாராக இருந்தது. அதாவது டக்ளசை எதிர்ப்பவர்களை கவர ஒரு அணியும் தன்னை எதிர்ப்பவர்களை கவர இன்னொரு அணியும் என நிறுத்தப்பட்டது.

அதனைவிட விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களாக கருதப்பட்ட வைத்தியர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை தனது கட்சியின் கீழ் அல்லது தனது கட்சி சார்பான கட்சியில் போட்டியிடவிட்டு தமிழ் தேசிய கட்சிகளுக்கான சில பத்து வாக்குகளை பிரித்துவிடுவதற்கான நகர்வை கச்சிதமாக செய்துள்ளார். இதனால் வாக்குகளை பிரித்தாரோ இல்லையோ மக்களை குழப்பி வாக்களிக்காமல் தடுத்துள்ளார்.

எனினும் தமிழ் தேசியத்தோடு பயணித்த சிலர், விலை போயிருப்பார்கள் என்பதை நிராகரிக்கமுடியாவிட்டாலும் அவ்வாறு மகிந்தவின் கட்சிக்காக வேலை செய்யும் பலர், முறைமுக அழுத்தங்களின் கீழ் செயற்படவைக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான செய்திகளும் தமிழர்களின் ஆன்மாவை உலுப்பிவிடும் உண்மைகளாக இருக்கின்றன. அவற்றின் முழுவிபரங்களும் வெளிவரும்போது அது தமிழர்களின் ஆன்மைாவையே உறையவைக்கும் பயங்கரங்களாகவே இருக்கும் என்பதே இப்போது வெளியில் சொல்லக்கூடிய செய்தியாகும்.

சிறிலங்கா இராணுவத்தின் சிறைகளில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ராம், எவ்வாறு சிறிலங்கா புலனாய்வுத்துறையால் செயற்படவைக்கப்பட்டார் என்பதை இங்கு இணைத்துபார்ப்பது மேலதிக புரிதல்களை தரக்கூடும்.

அத்தோடு மகிந்தவின் அதிகாரவர்க்கத்தை பொறுத்தவரை தமக்கு வாக்குகளை போடவேண்டும். அவ்வாறு அந்த வாக்குகள் தமக்கு கிடைக்காவிட்டால் அதனை மற்றவர்களுக்கும் கிடைக்காமல் செய்யவேண்டும். இதுவே மகிந்தவின் யுக்தி. இந்த வகையில் அரச படைகளால் அவதானிப்பிற்கு உட்பட்டுள்ள தமிழ் குடும்பங்கள், வாக்களிக்க செல்வது அத்தமிழ் குடும்பங்களுக்கு ஆபத்தானதாகவே முடியும். எனவே மகிந்தவின் மறைமுக கரங்களுக்கு அஞ்சி, பல தமிழ் மக்கள் வாக்களிப்பதை தவிர்த்துவிட்டார்கள்.

தமிழர்களின் தீர்மானம்

பெரும்பான்மையான தமிழர்கள் வாக்களிக்காமல் தவிர்த்துக்கொண்டமை தமிழ் தேசிய சக்திகளுக்கு அதிர்ச்சியான செய்திதான். ஆனால் தற்போதைய சிறிலங்கா அரசமைப்பிலோ அதன் ஊடாக கிடைக்கப்பெறும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திலோ அவர்கள் நம்பிக்கை வைக்கமுடியாது என்பதை குறிப்பிட்டளவான தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர் என்பதையும் மறுக்கமுடியாதுதான்.

எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது உயிர்வாழ்வுக்கான போராட்டமாக தமிழ் மக்களின் ஒரு பகுதியினரின் வாழ்க்கை இருக்கும்போது, பேரழிவின் ரணங்கள் ஆறமுன்னரே திணிக்கப்பட்ட தேர்தலாக இருக்கும்போது, தமிழர்களை வழிப்படுத்த வேண்டியவர்களே தமக்குள் பிளவுகளை சந்தித்தபோது, மகிந்தவின் மறைமுக அழுத்தங்களே தமிழர்களை சூழ்ந்திருக்கும்போது தமிழர்கள் இத்தேர்தலில் என்னத்தை செய்யமுடியும்?

-          கொக்கூரான்

அழிக்கப்படுபவை புலிகளின் சின்னங்களல்ல! தமிழர்களின் சின்னங்கள்!!

Friday, March 26, 2010 / No Comments
ஈழத்தமிழர்களின் ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டமானது, சமகால அரசியல் இராணுவ புறநிலைகளை கருத்திற்கொண்டு, மீண்டும் அரசியல் வழியிலான விடுதலைப் போராட்டமாக வீரியமடைகின்ற காலகட்டத்தில் இருக்கின்றது. அரசியல் ரீதியான விடுதலை போராட்டமாக முன்னெடுத்து செல்லவேண்டிய பொறுப்பு தற்போதைய தலைமைகளிடம் உண்டு.

இந்தவேளையில் தமிழர் தலைமைகளின் செயற்பாடுகள் தொடர்பில் சில விடயங்களை ஆராய்வது பொருத்தமானது என கருதி நிகழ்கால அரசியல் திட்டங்களில் தமிழர் தலைமைகளின் செயற்பாடுகளை ஆராய்கிறது இப்பத்தி.

அண்மைக்காலமாக தமிழீழ தாயக பிரதேசம் எங்கும் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் அகழப்பட்டு அவ்வாறான துயிலுமில்லங்கள் அங்கு இருந்தன என்ற அடையாளத்தையே இல்லாமல் செய்வதற்கான கைங்கரியத்தில் சிறிலங்கா அரச இராணுவ இயந்திரங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லங்களைச் சிதைக்கும் போக்கை சிறிலங்கா அரசும் அரசபடைகளும் நீண்டகாலமாகவே செய்து வருகின்றன. நடுகற்களையும் கல்லறைகளையும் இடித்தழிப்பதோடு நின்ற இச்செயற்பாடுகள் இப்போது இன்னும் உக்கிரம்பெற்று துயிலுமில்லங்களின் தடயங்களையே இல்லாதளவுக்கு அழிக்கும் நிலைக்கு முற்றியுள்ளது.

வன்னியில் மீளக் குடியமரச் சென்ற மக்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கப்பட்டு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு வருகிறது. வன்னிவிளாங்குள – வவுனிக்குளப் பாதை சீரமைக்கப்பட்டு வரும் இவ்வேளையில் அப்பாதைக்கான கிரவல் மண் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்ல வளவிலிருந்தே அகழ்ந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இராணுவத்தினரின் மேற்பார்வையோடு சிங்களத் தொழிலாளர்களைக் கொண்டு நடத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தில் வன்னிவிளாங்குள துயிலுமில்லப்பகுதி கனரகப் பொறிகளைக் கொண்டு ஆழத் தோண்டப்படுகிறது. அப்பகுதிக்கு நேரடியாகச் சென்ற தமிழ்மகன் ஒருவர் கதறியழுதபடி தனது உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டார்.

உக்கிப் போகாமல் இருக்கும் வரிப்புலிச் சீருடைகளும் மாவீரர்களின் எலும்புக்கூடுகளும் கூட தோண்டியெடுக்கப்பட்டு ஒருபுறத்தில் போடப்படுகின்றன. மணலோடு மணலாகவும் அவை அள்ளிச்சென்று வீதியில் கொட்டப்படுகின்றன. அங்கே பொறுக்கப்படும் சீருடை எச்சங்களும் எலும்புகளும் பொறுக்கப்பட்டு காட்டுக்குள்ளோ வீதிக் கரைகளிலோ வீசப்படுகின்றன. பொதுமக்கள் நன்றாகப் பார்க்கவேண்டுமென்ற நோக்கத்திலும் துயிலுமில்லத்திலிருந்து வீதிக்கரைக்குக் கொண்டுவரப்பட்டு இவை ஒன்றாகப் போடப்படும் நிகழ்வும் தற்போது இடம்பெறுகிறது. தமிழ்மக்களின் ஆன்மாவைச் சீண்டிப்பார்த்துப் பரவசப்படும் ஒரு நிலையே தற்போது நடந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்ட அத்தமிழ்மகன் கண்ணீரோடு தெரிவித்தார்.

இதேபோன்று வன்னிமண்ணின் மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னம் சிறீலங்காப் படையினரால் சிதைக்கப்பட்டதான செய்தி ஒரு ஊடகவியலாளரால் வெளிக்கொண்டுவரப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கற்சிலைமடுக் கிராமத்தில் 1803-08-31 ஆம் ஆண்டு மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்குடன் ஏற்பட்ட மோதலில் தோல்வி அடைந்தாதாக குறிப்பிட்டு குறித்த நினைவுக்கல் அதே காலப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.

இவற்றின் தொடர்ச்சியாக சிலநாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்திருந்த தியாகி திலீபன் நினைவுத் தூபி அடித்து உடைத்து நொருக்கப்பட்டுள்ளது. அகிம்சை வழியில் நீதி கேட்டு பன்னிரு நாட்கள் நீர்கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகியின் நினைவுத் தூபியை உடைப்பதென்பது தமிழர்களின் சுயகௌரவத்தை சீண்டிப்பார்க்கும் நிகழ்வாகவே பார்க்கவேண்டும்.

இவ்வாறு தமிழர்களின் அடையாளங்களையும் சின்னங்களையும் அழிக்கின்ற நடவடிக்கைகள் தன்னெழுச்சியாக நடத்தப்படுவவை அல்ல. அண்மையில் சிறிலங்கா அரச அமைச்சர் ஒருவர் புலிகளின் (தமிழர்களின்) அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ அழித்தொழிக்கவே முடிவுசெய்துள்ளதாக அறிவித்திருந்தமையை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே இவ்வாறான அழித்தொழிப்புக்கள் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் அரசால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இவ்வாறு தமிழர் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முனைப்பு பெறும் அதேவேளை சிங்கள தேசத்தின் அடையாளங்களை தமிழர் பிரதேசங்களில் திணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றது.

போர்க்காலத்தில் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் இடம்பெற்றபோதும் அதனை அரசியல் ரீதியாக வெளியுலகிற்கு கொண்டுவந்து நீதி கேட்ககூடிய சூழல் இருக்கவில்லை. அவ்வாறு நீதி கேட்போரின் உயிருக்கு உத்தரவாதமான சூழல் இருந்திருக்கவில்லை. இப்போதும் அச்சுறுத்தல்கள் இருக்கின்றபோதும் தமிழ் தலைவர்கள் என்று சொல்லப்படுவோர் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் அவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அதனை சர்வதேச சமூகத்திற்கும் கொண்டுசெல்லக்கூடிய சர்வதேச புறநிலைகள் உருவாகியுள்ளமை முக்கியமானது.

இப்போது இலங்கைத்தீவில் நடைபெறுகின்ற நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல்கள் சூடுபிடித்துள்ள நிலையில் ஈழத்தமிழர்களின் விடுதலை போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக கூறிக்கொள்ளும் தலைமைகள் சில விடயங்களில் தமது உறுதியான செயற்பாட்டை காட்டிக்கொள்வதன் மூலமே இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடுகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டுவருவதுடன் இவற்றை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.

மூன்று சகாப்தங்களாக தொடர்ந்த ஆயுதபோராட்டம் தற்போது அரசியல் போராட்டமாக மாறியுள்ளநிலையில் ஆயுதபோராட்ட காலத்தில் வித்தாகிப்போன விடுதலை வீரர்களின் அடையாளங்களும் சின்னங்களும் தமிழர்களின் அடையாளங்களே என்பதையும் தமிழர் தலைமைகள் சிந்திக்கவேண்டும்.

தியாகதீபம் திலீபனின் நினைவுச் சுவடுகளை அழிப்பதன் மூலம் தமிழ் மக்களது உயிரோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்துள்ள உரிமை வேட்கையைச் சிதைத்துவிட முடியுமென சிங்கள பௌத்த பேரினவாத அரசு பகல் கனவு காண்கின்றது. சிங்கள அரசு கற்பனை செய்வது போன்று தமிழ் மக்களது உரிமை வேட்கை ஒரு போதும் தணியப்போவதில்லை என்பதனை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றோம் என தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஆனந்தசங்கரி அவர்கள் மீது பல்வேறுவிதமான விமர்சனங்கள் இருக்கின்றபோதும் இவ்விடயத்தில் முதலாவதாக கண்டித்து அவர் அறிக்கை வெளியிட்டதை கவனிக்கவேண்டும்.

இங்கு அறிக்கைகள் மட்டும் வெளியிட்டுக்கொண்டிருப்பதால் மட்டும் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை. ஆனால் செயலில் காட்டிக்கொண்டிருப்பதற்கு இது இராணுவ ரீதியான விடுதலைப் போராட்டத்திற்கான காலமல்ல. இது அரசியல் ரீதியான போருக்கான காலம். இங்கு அரசியல்வாதிகள் தமது கருத்துக்களை வெளியிடாமல் தவிர்த்துக்கொண்டு சப்பைக்கட்டு கட்டமுடியாது.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தலைமையாக செயற்படும் இரா. சம்பந்தன் அவர்கள் தமது செயற்பாடுகள் பற்றிய சுயவிமர்சனங்களை செய்யவேண்டும். தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரின் சாவு நிகழ்வின்போதும் தமிழர்களை எதிர்காலத்தில் வழிநடத்தப்போகும் தலைவராக இரா. சம்பந்தன் அவர்கள் நடந்துகொள்ளவில்லை என்பதுவும் மிகவும் நெருடலான விடயமாகவே இப்போதும் இருக்கின்றது.

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலும் ஆரம்பத்தில் பல்வேறுபட்ட ஆயுதமேந்திய இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுதிலும் கூட 1987இலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தனிநாட்டுக்காகப் போராடும் ஒரேயொரு ஆயுதமேந்திய இயக்கமாக பரிணமித்தது என்று கூறியதோடு தன்னை மட்டுப்படுத்திக்கொண்டதையும் மீட்டிப்பார்க்கவேண்டும்.

அதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களது போராட்டம் பற்றியும் அதன் தொடர்ச்சி எவ்வாறு முன்கொண்டு செல்லப்படவேண்டும் என்பதிலான ஒரு முதிர்ச்சி நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தமிழீழத்திற்கான விடுதலை போராட்டமானது தனியே தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்படவில்லை. ஏறக்குறைய இருபத்தைந்துக்கு மேற்பட்ட அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலை போராட்டமாகும். 1977 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் தமிழீழ தாயக மக்களால் தமிழீழத்திற்கான மக்களாணை வழங்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே இவ்விடுதலை போராட்டம் வீரியம் பெற்றிருந்தது.

எனவே அழிக்கப்படுபவை தனியே விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலுமில்லங்களோ அல்லது தனியே விடுதலைப்புலிகளின் அடையாளங்களோ இல்லை. அவை அனைத்தும் தமிழர்களின் பொது அடையாளங்கள் ஆகும். அவை தேசிய அடையாளங்களாக பாதுகாக்கப்படவேண்டும்.

இப்போது அரசியல் ரீதியில் தமிழர்களது விடுதலையை வென்றெடுக்கப்போகும் தலைமைகளும் விடுதலைக்கான போரை அடக்கி வாசித்தும் அது ஏதோ மறைத்து கதைக்கப்படவேண்டிய விடயமாகவும் மாற்றிவிடுவதும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

அதனைவிடுத்து தமிழர்களது இன்றைய அரசியல் ரீதியான போராட்டத்தை தலைமைதாங்கி செல்லவேண்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைமைகளும் சில உறுதியான முடிவுகளை எடுக்கவேண்டும். அப்போதுதான் செயலில் வீரர்களான ஒரு தலைமையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகும்.

- கொக்கூரான் -

தாயகத்தேர்தல் களத்தின் தடுமாறிய போக்குகள்

Friday, March 19, 2010 / No Comments
இவ்வாறான சூழலில் இரண்டு துருவங்களாக தேர்தலை எதிர்கொள்ளும் தமிழர் தரப்பின் பிரதான தரப்புகளால் எதிர்கால அரசியலில் தமிழர்களின் பங்கு பணி தொடர்பில் எவ்வாறான இணைவு எதிர்காலத்தில் இருக்கப்போகின்றது? உண்மையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு எதிரானது என சொல்லப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையான உறவுநிலை என்ன? தமிழர் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதில் உள்ள தடங்கல்கள் எவை? இவை பற்றிய விடயங்களை ஆராய்கிறது இப்பத்தி.



தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக எனவும் அதன் தலைமைகளாக சொல்லப்படுகின்ற இரா. சம்பந்தன் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமசந்திரனுக்கு எதிரான பரப்புரைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என கொள்கையளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியால் சொல்லப்பட்டாலும் அவ்வாறான ஒரு கட்டுக்கோப்பை இருதரப்புகளாலும் பேணமுடியாது என்பதே அங்கிருந்து வருகின்ற தகவல்கள் சொல்லும் செய்தியாக இருக்கின்றன.

தற்போதைய தேர்தலை முறையை பொறுத்தவரை தேர்தல் மாவட்டங்களுக்கு என நடத்தப்படும் தேர்தலில் மக்கள் முதலில் எந்த கட்சிக்கு தாம் வாக்களிக்கபோகிறோம் என்பதை கட்டாயம் தெரிவுசெய்தே ஆகவேண்டும். அதன்பின்னரே தாம் வாக்களித்த கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் மூவருக்கு தமது விருப்பு வாக்குகளை அளிக்கலாம்.

எனவே சம்பந்தன் அவர்களை தோற்கடிக்கவேண்டும் என்றால் அவரது கட்சியில் உள்ள ஏனையோருக்கு விருப்புவாக்குகளை அளித்து சம்பந்தன் மீதான அதிருப்தியை காட்டக்கூடிய சூழல் இருக்கிறது.

ஆனால் அவ்வாறான வாக்களிப்பு முறை பின்பற்றப்பட்டாலும் விருப்புவாக்குகளை பெறும் ஒருவர் தான் நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. கட்சியால் பிரேரிக்கப்படும் வேட்பாளர்களே நியமனம் பெறமுடியும். எனவே சம்பந்தன் அவர்கள் முன்வாசலால் செல்வது தடுக்கப்பட்டாலும் பின்வாசலால் நாடாளுமன்றத்திற்கு சென்றுவிடுவார் என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வாதம்.

அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை தோற்கடிக்கவேண்டும் என்றால் அவர்கள் போட்டியிடும் மாவட்டங்களில் கூட்டமைப்பு தோற்கடிக்கப்படவேண்டும். அதற்கு பதிலாக தமிழ் தேசிய மக்கள் முன்னனி வெற்றி பெறவேண்டும் இதுவே அவர்களது வாதம்.

இவ்வாறான நிலமையானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு எதிரானது என சொல்லப்பட்டாலும் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் 12 வேட்பாளர்களுக்கு எதிராகவும் திருமலையில் போட்டியிடும் 07 வேட்பாளர்களுக்கு எதிராகவும் என்ற நிலையை உருவாக்குகிறது.

இதேவேளை குறித்த மூன்று தலைவர்களும் வன்னி மாவட்ட தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடும்போதோ அல்லது மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடும்போதோ ஏற்படுகின்ற அரசியல் சூழ்நிலையை சிந்தித்துபார்க்கவேண்டும்.

அதனைவிட ஏனைய மாவட்டங்களில் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்கள் கூட்டமைப்பின் தலைமையை ஏற்றே போட்டியிடுகின்றார்கள். குறித்த பிளவுபற்றி கருத்துக்களை அவர்களிடம் கேட்டால் அது நிச்சயமாக தமிழ் தேசிய மக்கள் முன்னனி்க்கு சாதகமாக இருக்கபோவதில்லை.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய சக்திகளுக்கு இடையான பிளவானது தனியே தனிப்பட்ட மூவருக்கு எதிராக என்று இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கும் எதிரானதாகவே மாறிவிடுகின்றது.

இவ்வாறு தமிழர்களுக்கு ஆறுதலாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் சரிவு அல்லது பிளவு உண்மையிலேயே இரண்டு அணிகளுக்கு இடையிலான மோதலாகவே உருவெடுத்திருக்கிறது.

ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு பின்னர், விடுதலைப்புலிகளின் உயரிய பலம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரான அரசியலில் மீண்டும் தமிழர் தரப்புகளே தமக்குள் முட்டிமோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளமை தமிழர்களின் எதிர்கால அரசியலில் எவ்வாறான விளைவை ஏற்படுத்தும் என்பதை இன்னும் சற்றுக்காலம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அதேவேளை திருமலையில் கடந்த முறை தேர்தலை போன்று இரண்டு தமிழர் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கான சூழ்நிலைகள் தற்போது இல்லை. தற்போது ஏற்பட்டிருக்கின்ற பிளவு ஏற்பட்டிருக்காவிட்டாலும் இரண்டு தமிழர் பிரதிநிதித்துவங்கள் இம்முறை தேர்தலில் கிடைக்கமாட்டாது.

தற்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து போட்டியிடுவதால் அந்தக் கூட்டணிக்கே அவ்விரு ஆசனங்கள் செல்லலாம் அல்லது சுதந்திர கட்சி அதில் ஒன்றை பங்குபோட்டுக்கொள்ளலாம். இதனை இனவாரியான சனத்தொகை மாற்றங்களையும் கட்சி ரீதியான வாக்குகளை  திருமலையில் அவதானிக்கும் ஒருவர் இலகுவாகவே கூறிவிடமுடியும்.

ஆனால் கிடைக்கக்கூடிய அந்த ஒரேயொரு தமிழர் பிரதிநிதித்துவத்தை தமிழர் தரப்பால் தக்கவைக்கமுடியுமா என்பது மிகமுக்கியமான கேள்வியாகும். 2000 ஆம் ஆண்டு தேர்தலின்போது நடந்ததை போல தமிழர் தரப்புக்கு எந்த ஆசனமும் கிடைக்கமுடியாமல் போகும் சூழ்நிலை ஏற்படலாம். இவ்வாறான நிலை தமிழர் வாக்குகள் திருமலையில் பிரிவதால் ஏற்படலாம்.

தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படவேண்டும் தான் அதற்காக குரங்கின் கையில் பூமாலையை கொடுக்கக்கூடாது என அண்மையில் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயனானந்த மூர்த்தி கூறியிருந்தார். வரக்கூடிய ஒரு தமிழர் பிரதிநிதித்துவம் வராவிட்டாலும் பரவாயில்லை சம்பந்தருக்கு அது கிடைக்ககூடாது என்பது யதார்த்தத்தை புரிந்துகொண்ட ஜெயானந்தமூர்த்தியின் கருத்தா என்பதை அவரே தெளிவுபடுத்தவேண்டும்.

நடைபெறவுள்ள தேர்தலில் சிதறிப்போன பல கட்சிகளின் கலப்பான ஒரு தமிழர் பலத்தைதான் வடக்கு கிழக்கு தாயக பிரதேசத்திலிருந்து சிறிலங்கா அரசு எதிர்பார்க்கிறது. இந்தியா எதிர்பார்க்கிறது. ஏன் சர்வதேச சமுதாயமும் அதையே விரும்பும். பலமான தமிழர் தரப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வந்துவிட்டால் அவ்வாறான சக்தியை தமது தேவைகளுக்கு பயன்படுத்தமுடியாது என்பதை அவர்கள் அறிவார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் கருதப்பட்டாலும் உண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை ஒருவரிடம் இல்லை. தமிழீழ தேசிய தலைவரை தவிர இன்னொருவரை ஒட்டுமொத்த தலைமையாக ஏற்றுக்கொள்ள தமிழீழ மக்கள் தயாராக இல்லை. அதனால்தான் கூட்டுப்பொறுப்பு என்ற அடிப்படையில் ஐந்து தலைவர்களை கொண்டதாக கூட்டமைப்பு இருந்தது. இப்போது அவ்வாறான கூட்டுத்தலைமையையே அகற்றவேண்டும் என்பது எவ்வளவு தூரம் சரியானது என்பதும் நியாயமான கேள்வியே.

இப்போது சிறிலங்காவினதும் இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் மறைமுக நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவகையில் தமிழர் தரப்புகள் பிரிந்துவிட்டன. இத்தோடு இவை முடிந்துவிடப்போவதில்லை. தேர்தலுக்கு பின்னரும் இவற்றின் பிரதிபலிப்புக்கள் இருக்கவே செய்யும். அவை தமிழர் தரப்புக்கு ஆறுதல் தரக்கூடியதாக இருக்கப்போவதில்லை என்பதே கசப்பான செய்தியாக இருக்கப்போகின்றது.




- கொக்கூரான்

தமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா?

Saturday, February 27, 2010 / No Comments
இன்று நாடாளுமன்ற வேட்புமனுதாக்கலுக்கான இறுதிநாளாக இருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு அணியை களமிறக்குவதற்கான ஏற்பாடுகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அதற்கான வேலைகள் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.



இவ்வேளையில் தமிழ் தேசியத்தை நிலைநிறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு அணி களம் இறங்கவேண்டுமா என்பதும் அதனால் ஏற்படக்கூடிய சாதக பாதங்கள் எவை என்றும் ஆராய்கிறது இப்பத்தி.

இன்று இலங்கைத்தீவின் வரலாற்றில் தமிழர் தரப்புக்கள் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் தமது அடுத்த கட்டநகர்வுக்கான காய்நகர்த்தல்களை புத்திசாலித்தனமாக மேற்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் தமிழ் தேசியத்தை பலப்படுத்துவதற்காக சில தியாகங்களை மேற்கொள்வதற்கு தமிழ்ப்பற்றாளர்கள் முன்வரவேண்டும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையோ கஜேந்திரனையோ அல்லது பத்மினி சிதம்பரநாதனையோ வெளியில் விட்டு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான வேட்பாளர்களை நியமித்தமை தொடர்பில் சில கேள்விகள் எழுவது நியாயமானதே. ஆனாலும் தமிழ் தேசியம் என்ற இலட்சியத்திற்காக, நடைமுறை சாத்தியமான முறைகளில் செயற்பட்டு அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னால் அணிதிரளுவதற்கு அனைத்து தமிழ் பற்றாளர்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பால் முன்நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களும் தமிழ் தேசியத்திற்காக உழைத்த சமூக பற்றாளர்கள். தமிழர்களின் அரசியல் வாழ்வையே கேள்விக்குள்ளாக்கிய துணை ஆயுதப்படைகளை சேர்ந்தவர்கள் படையெடுத்து நிற்க, அவர்களுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு நிமிர்ந்து நடைபோடவேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறார்கள்.

எனவே அதற்கேற்ற வியூகங்களை வகுப்பதும் அதற்கு பொருத்தமான வேட்பாளர்களை நிறுத்துவதும் காலத்தின் தேவையாகும். தற்போது தமிழர் தரப்பை வழிநடத்த முனையும் சம்பந்தரும் மாவை சேனாதிராஜாவும் செல்வம் அடைக்கலநாதனும் சுரேஸ் பிரேமசந்திரனும் தமிழர்களின் விடுதலைக்காக உழைத்தவர்கள். எனவே அவர்களின் தலைமையில் தற்போதைய தேர்தலை நடத்தவிடுவதே தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமாகவிருக்கும்.

இன்னொரு அணியை தமிழர் தரப்பில் நிறுத்துவது என்பது சனநாயக பண்புகளுக்கு உயிர்ப்பூட்டும் நடவடிக்கையாக இருப்பினும் தமிழர்களின் தேசியத்திற்கான வாக்குகளை பிரித்து சிங்கள பேரினவாதிகளின் தயவில் உள்ள அரசியற்கட்சிகளுக்கு அவை சாதகமாக அமைந்துவிடும்.

முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களை இழந்து ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயிர் இழப்புகளின் பின்னரும் எமது அரசியல் அபிலாசைகளை சமரசம் செய்துகொள்ளவேண்டுமா என்ற உணர்வுரீதியான கேள்விக்கு எம்மிடம் பதில் இல்லைத்தான். ஆனாலும் எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில் எழுந்த எமது விடுதலைப்பயிரை ஒரு சிலரால் கூடி அழித்துவிடுவார்கள் என எண்ணுவதும் பொருத்தமானதாகவிருக்காது.

இன்று தாயகத்திலுள்ள நிலையை அனைவரும் கருத்திற்கொள்ளவேண்டும். வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த எதிரிகளின் கையோங்கிய நிலையில் சாதுரியமாக சில விடயங்களை நகர்த்தவேண்டும் என்ற யதார்த்தத்தையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அதேவேளை எமது தமிழ் தலைவர்கள் சரியான முறையில் செயற்படுகின்றார்களா என்பதையும் அவை எமது தேசிய அடையாளங்களை சிதைக்காமல் பார்த்துக்கொள்வதும் ஒவ்வொரு தமிழ் தேசிய பற்றாளரின் கடமையுமாகும்.

எனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாக நிறுத்துவதே பொருத்தமாகவிருக்கும். அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களிலும் அதன் கொள்கைகளிலும் அதிருப்தி இருப்பின் அதனை உரிய காலத்தில் நிரப்பீடு செய்வதே பொருத்தமானது.

உரிய காலம் வரும்வரை, காத்திருந்து சரி பிழைகளை ஆராய்ந்து முடிவுகள் எடுக்க கால அவகாசம் தேவை. அதேவேளை முழுமையான அரசியற்கட்டமைப்பை உருவாக்க அதற்கான அடித்தளம் தேவை. அதனை கட்டியமைப்பதற்கான புறச்சூழல்கள் அமையும்போது அக்கட்டமைப்பும் தானாகவே உருவாகும். அதுவே உலக வரலாறு.

எனவே தற்போதைய தேர்தலில் இன்னொரு மாற்று அணியை நிறுத்துவதை விட்டு தற்காலிகமாக ஒதுங்குவதன் மூலம் தமிழ் மக்களுக்கு, தமது தமிழ் தேசியத்தின் மீதான பற்றை வெளிக்காட்டுவதுடன் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கும் தெளிவான செய்தியை சொல்லமுடியும். அதனை விடுத்து மாறிமாறி எம்மவர்களை வசைபாடி எமது எதிரிகளுக்கே வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது.

அதேவேளையில், தற்போது தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவுசெய்வதற்கான கட்டமைப்புகளுக்கான அவசியம் எழுந்திருக்கிறது. தடுப்பு முகாம்களில் வாடும் எமது மக்களுக்கும் தாயகம் எங்கும் அடிப்படை வசதிகளின்றி வாடும் எம்மக்களுக்கும் உதவகூடிய சமூக கட்டமைப்புக்களை உருவாக்கவேண்டும்.

அதற்கான வளத்தை ஒழுங்குசெய்து தரக்கூடிய நிலையில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவ்வாறான அவர்களது உதவிகளை நெறிப்படுத்தி வழங்கக்கூடிய கட்டுமானங்களை நிறுவி அதற்கான ஒழுங்குகளை செய்வதற்கு தாயகத்திலுள்ள தமிழர்கள் முன்வரவேண்டும்.

இப்போதைய நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணி தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபடலாம். அவ்வாறான பொறிமுறை மூலம் தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன் தமிழ் தேசியத்தின் பால் நிற்ககூடிய மக்களாக அனைவரையும் உருவாக்கமுடியும்.

உரிய காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியாகத்தான் செயற்படுகிறது எனக்கண்டுணர்ந்தால் அதனுடன் இணைந்தோ அல்லது அவர்கள் பிழையான திசையில் சென்றால் அதற்கான மாற்றான அணியை நிலைநிறுத்தி தமிழர்களின் அரசியற் போராட்டத்தை முன்னெடுக்கமுடியும்.

அதுவரை தமிழ் தேசியத்திற்கான ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்காக ஒரு அணியில் பயணிப்போம் அல்லது உரிய காலம் வரும்வரை பொறுத்திருப்போம். அதுவே இப்போதுள்ள எமக்கான தெரிவு.

- கொக்கூரான் -

இலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட்சிகளின் தனிவழிப்பயணங்கள்

Sunday, February 14, 2010 / No Comments
கடந்த அரச தலைவர் தேர்தலில், கணிசமான மக்கள் தேர்தலில் பங்குபற்றாத நிலை காணப்பட்டாலும், பங்குபற்றிய தமிழ் பேசும் மக்கள், மகிந்தவுக்கு எதிராக வாக்களித்துள்ளமை, சிறிலங்கா அரசியலில் தமிழ் பேசும் கட்சிகளின் நிலைப்பாடுகளை அசைக்கதொடங்கிவிட்டன.

தமிழ் பேசும் தரப்பின் பிரதான அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பானது தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் வழமைபோலவே தனித்து போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு தனித்து போட்டியிடுவதென்பது சிங்கள கட்சிகளிலிருந்து விலகி தனித்து போட்டியிடும் என்பதே பொருந்தும். ஏனைய தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து போட்டியிட ஆர்வம் காட்டின், தமிழர்களது அரசியல் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளின், அவற்றோடு இணைந்து தேர்தலை எதிர்கொள்வது என்பது சாத்தியமானதாகவே இருக்கும்.

தமிழ் பேசும் மக்கள் தமது பாரம்பரிய தாயகமாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்துவருகின்றார்கள் என்பதையும் தமிழ்பேசும் மக்கள் சிறுபான்மை இனமாக இல்லாமல் ஒரு தேசிய இனமாகவே அடையாளம் காணப்படவேண்டும் என்பதையும் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அடிப்படை கொள்கைகளாக வரித்துக்கொள்கின்ற எந்த கட்சியுடனும் இணைந்து போவதில் தமிழர் தரப்பை பொறுத்தவரை சாத்தியப்படான ஒருங்கிணைவாகவே இருக்கும்.

தமிழ்தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களின் முக்கிய தலைவர்களை புதிதாக களத்தில் இறக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி. விக்கினேஸ்வரன், முன்னாள் பேராசிரியர் சி.கே.சிற்றம்பலம், முன்னாள் யாழ் மாநகர ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் உள்ளடங்குவர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த யார் யார் எல்லாம் உள்ளடக்கப்படபோகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்கக வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அப்பால், ஆளும் சிங்கள கட்சிகளுடனேயே கூடியிருந்து தமிழர்களது அரசியல் பேரம் பேசும் தன்மையை வலுவிழக்க செய்த ஈழமக்கள் சனநாயக கட்சி எனப்படும் ஈபிடிபியும் தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொண்டோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தமது சரணாகதி அரசியலை பற்றி மீள்பார்வை செய்ய முற்பட்டுள்ளமை தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதவேண்டும்.

கடந்த தேர்தலில் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி தவிர, ஏனைய அனைத்து வடபகுதி தேர்தல் தொகுதிகளிலும், தமது அரசியல் முடிவை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளமையும், அதனால் சிங்கள தலைவர்கள் மட்டத்தில் கூட ஈபிடிபியை பற்றிய ஏளனப்பார்வை உருவாக தொடங்கியுள்ளமையும், ஈபிடிபிக்கும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் காலம் கடந்தாவது ஞானத்தை கொடுக்ககூடும்.


தமிழர்களது போராட்டத்தை ஒடுக்குவதற்காக சிங்கள தேசத்தால் தூக்கி வளர்க்கப்பட்ட செல்லப்பிள்ளைகளான டக்ளஸ் தேவானந்தாவும் கருணாவும் பிள்ளையானும் இனிமேலும் சிங்கள தேசத்தால் அவ்வாறு பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை இருப்பதாக தெரியவில்லை. இவர்களால் தான், தாங்கள் கெட்டோம் என ஒருவர் மாறி மற்றவர்மேல் விமர்சனங்களை வைக்கின்ற சூழல்தான் தற்போது எழுந்துள்ளதே தவிர தமிழ் மக்களின் உண்மையான உணர்வுகளை இந்த இரண்டு தரப்புக்களுமே புரிந்துகொள்ளவில்லை என்பது இன்னொரு முக்கியமான விடயம்.

இவ்வாறு வடபகுதியில் ஈபிடிபி தனியாக தனித்து களம் இறங்க முடிவு செய்துள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திர கட்சியும் தனித்து தமது வேட்பாளர்களை நிறுத்த முடிவுசெய்துள்ளது. இது ஈபிடிபியை பொறுத்தவைரை இந்த தேர்தலோடு முடிந்துபோய்விடக்கூடிய விடயமாக நிச்சயம் இருக்கபோவதில்லை. அதிலும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபலமான முக்கிய சமூக ஆர்வலர்களையும் கல்விமான்களையும் உள்ளேயெடுத்து அவர்களை தேர்தலில் நிறுத்தவும் மகிந்த அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கேற்றவாறு முக்கிய பிரபலங்களை முக்கிய ஒன்றுகூடலென குறிப்பிட்டு கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை அவர்களும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளார்.

இங்கு ஈபிடிபிக்கு போட்டியாக சுதந்திர கட்சி களத்தில் இறங்குவது இரண்டு தரப்புகளுக்குமே சவாலாகவே இருக்கும். இரண்டு தரப்புகளுமே எவ்வாறு முரண்பாடுகள் இல்லாமல் தமது தேர்தலுக்கான வேலைத்திட்டங்களில் இறங்கமுடியும் என்பது முக்கியமான கேள்வியாகும். இது தேர்தலோடு மட்டும் நிற்கப்போகும் முரண்பாடுகளாக அல்லாமல் அதனை தொடர்ந்தும் நீண்டு செல்லுமா என்பதை இப்போது எதிர்வுகூறுவது கடினமானது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அடுத்ததாக செல்வாக்கு செலுத்தகூடிய பிள்ளையானின் அணியும் கருணாவின் அணியும் இரண்டு பிரிவுகளாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அங்கும் சுதந்திர கட்சி தனியாக போட்டியிடுவதற்கான சூழ்நிலையே உருவாகிவருகின்றது. தாங்கள் தனித்து போட்டியிட்டால் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் ஆகக்குறைந்தது ஒவ்வொரு ஆசனங்களையாவது பெற்றுக்கொள்வோம் என பிள்ளையான் அணியின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

மலையகத்தை பொறுத்தவரை அங்கு அரசியலில் தமிழர் தரப்பில் ஆதிக்கம் செலுத்திய முதலாவது மற்றும் இரண்டாவது அரசியல் தலைமைகளின் கருத்தை நிராகரித்து மூன்றாவது தலைமையின் கருத்தை உள்வாங்கி மகிந்தவுக்கு எதிராக கடந்த தேர்தலில் வாக்களித்திருப்பதும் அங்குள்ள தமிழர் கட்சிகளை சிந்திக்கவே செய்யும்.

எனவே தற்போதுள்ள மாற்றமடைந்த சூழல் தமிழ் மக்களின் உணர்வுகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளிக்காட்டியுள்ளதோடு தமிழர் தேசமும் சிங்கள தேசமும் ஆழமான பிளவை கண்டுள்ளது என்பதையும் வெளிப்படையாக்கியுள்ளது. தற்போது ஆளும் கட்சியுடன் சரணாகதி அரசியல் நடத்தும் தமிழர் கட்சிகளுக்கும் அவர்கள் விரும்பியோ விரும்பாவிட்டாலோ தமிழர்களின் தனித்துவமான அரசியலுக்குள் இழுத்துவரப்படுகின்ற நிலையையே இப்போது காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறான படிப்படியான மாற்றங்களே, தமிழர்களின் அரசியலை தாமே நிர்ணயிக்க கூடிய உரிமையே தமக்கான தெரிவென்பதை அனைத்து தமிழர் தரப்புகளுக்கும் வெளிக்காட்டும்.

- கொக்கூரான்

காய்நகர்த்தும் இந்தியாவை (இனங்)கண்டுகொள்ளுமா தமிழர் தரப்பு?

Friday, January 15, 2010 / No Comments
இன்றைய உலகில், ஒரு நாட்டில் இடம்பெறும் அரசியல் மாற்றங்கள், மற்றைய நாடுகளை ஏதோவிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்தாக்கங்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு நாடுகளின் எதிர்பார்ப்பும். அந்தவகையில் சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறவேண்டுமா? அல்லது சரத் பொன்சேகா வெற்றி பெறவேண்டுமா? என்பதில் ஒவ்வொரு நாடுகளுக்குமே விருப்புவெறுப்புக்கள் இருக்கின்றது.



இந்தியாவை பொறுத்தவரை சரத் பொன்சேகாவின் தெரிவு என்பது தலையிடியானதாகவே இருக்கும் என மகிந்தவின் ஆலோசகரும் முன்னாள் இராசதந்திரியுமான றசீக் சறூக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் றெடிவ் இணைய சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். ஒரு முன்னாள் இராணுவ அதிகாரியானவர் ஒரு நாட்டின் அரச தலைவராக தெரிவு செய்யப்படுதல் இராணுவ ஆட்சிமுறையொன்றை கொண்டுவரவே வழிவகுக்கும் என கூறுகிறார். அதற்கு அவர் பங்களாதேசம், பாகிஸ்தான், பர்மா போன்ற நாடுகளை உதாரணமாக காட்டுகிறார்.

அவரது அனுகூலங்கள் சரியானவையாக கூட இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை, சிங்கள ஆட்சியாளர்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்குமிடையில் எந்தவித வேறுபாடுகளையும் கண்டதில்லை. சிறிலங்காவின் அதிகார வர்க்கங்கள் எப்போதுமே தமிழினத்தின் அழிப்பில் அல்லது அதன் உயிர்ப்பை சிதைப்பதில்தான் கவனம் எடுத்துக்கொண்டன. எனவே தமிழர்களை பொறுத்தவரை 1983 ஆம் தொடக்கம் சிறிலங்காவில் இராணுவ ஆட்சிதான் நடந்துவருகின்றது.

இந்தியாவுக்கு இன்னுமொரு அச்சமும் உண்டென குறித்த இராசதந்திரி சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவின் வடக்கே பாகிஸ்தானும் கிழக்கே சீனாவும் இந்தியாவுக்கு எப்போதுமே அச்சுறுத்தலாக இருக்கிறதாம். அதனால் தெற்குப்பகுதியை தமக்கு சாதகமாக வைத்திருக்கவேண்டியது முக்கியமானதாம். சரத் பொன்சேகா வந்தால் அவர் தெற்குப்பகுதியை முன்னையவர்களுக்கு திறந்துவிடுவாராம். அதனால் தமது தெற்குகோடிக்கு பாதிப்பு வந்துவிடுமாம்.

இதேகதையை சொல்லிதானே ஏராளமான ஆயுதங்களை, இந்தியா சிறிலங்கா இராணுவத்திற்கு ஆயுதங்களை அள்ளிக்கொடுத்தது. நாங்கள் கொடுக்காவிட்டால், மகிந்த சீனாவிடம் போய்விடுவார் என்றுதானே அத்தனை தமிழர்கள் கொல்லப்படும்போதும் பார்த்துக்கொண்டிருந்தது இந்தியா. இப்போதுமட்டும் எப்படி மகிந்த ராஜபக்ச நல்லவர் ஆனார்?

இதேவேளையில் இன்னொரு இராசதந்திரியான லலித் வீரதுங்கவின் கருத்துக்களை பார்க்கலாம். அவரும் மகிந்தவுக்கு ஆலோசகராக இருக்கிறார். அவரின் கருத்துப்படி, இந்தியாவில் அண்மையில் தேர்தல் நடைபெற்றபோது, இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில், காங்கிரசை வெற்றி பெறச்செய்ததே மகிந்த ராஜபக்சதான் என கூறியுள்ளார்.

தமிழர்கள் அழிந்து கொண்டிருக்கும்போது அந்த உணர்வலைகள் காங்கிரசுக்கு எதிராக திரும்பகூடிய சூழல் இருந்ததாகவும், அதனால் மகிந்தவும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் இணைந்து ஆலோசித்து போட்ட திட்டமே கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற அறிவிப்பாகும். வெறும் பேச்சளவில் விடப்பட்ட அறிவிப்பை இந்திய அரசு தனக்கேற்றவகையில் பயன்படுத்தியிருந்தது. அதனால் தப்பி பிழைத்துக்கொண்டது.

இப்போது தமிழர்கள் விழிப்பாக இருக்கவேண்டிய வேளையிது. மகிந்த ராஜபக்சதான் ஆட்சிக்கு வரவேண்டுமென்பதில் இந்தியா பல்வேறு காய்களை நகர்த்துகின்றது. அதற்கான காரணங்கள் அனைத்தும் இந்திய நலன்கள் சார்ந்த சிந்தனையே அன்றி தமிழர்களின் நலன்கள் சார்ந்த சிந்தனை அல்ல.

சிறிலங்கா மீது போர்க்குற்றசாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கான கோரிக்கை வந்தபோதும் அதன்பின்னர் பொருளாதார அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டபோதும் சிறிலங்காவுக்கு சார்பாக செயற்பட்டு சிறிலங்காவை காப்பாற்றிவிட்டது இந்தியாவே. இந்தியாவின் அவ்வாறான ஒவ்வொரு முயற்சிகளுக்கு பின்னாலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் இரத்தமும் சதையும் கரைந்துபோனதே வரலாறு.

மேற்குலகை பொறுத்தவரை மகிந்தவுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவே கருதப்படுகிறது. போர்க்காலத்தில் மேற்குலகின் கருத்துக்களை அசட்டை செய்து சீனா ரசியா ஈரான் லிபியா பாகிஸ்தான் பர்மா போன்ற நாடுகளின் உதவியுடன் மட்டுமே தன்னால் தாக்குபிடிக்கமுடியும் மகிந்த செயற்பட்டார். அவ்வாறே மேற்குலகால் கொண்டுவரப்பட்ட அனைத்து அழுத்தங்களையும் முறியடித்தார்.

இப்போது மேற்குலகை பொறுத்தவரை தனது பலத்தை நிலைநிறுத்துவதற்கான சந்தர்ப்பம் வந்திருக்கிறது. சரத் பொன்சேகா அண்மையில் அமெரிக்கா சென்றபோது, அவரிடம் கோத்தபாய ராஜபக்ச தொடர்பாக விசாரித்ததும், அதன்பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகையை வழங்கமுடியாது என தேர்தல் சமயத்தில் கைவிரித்து நிற்பதும் அதன் குறியீடுகளாகவே பார்க்கப்படவேண்டும்.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒரு அணியில் நின்று ஆட்சிமாற்றத்தை எதிர்பார்த்திருக்க இந்தியா மட்டும் ஏன் மகிந்த பக்கம் சாயவேண்டும்? அவ்வாறான நிலைப்பாட்டுக்கு – முன்னர் குறிப்பிட்டது போல - இந்தியாவின் ஆட்புல வல்லாண்மை ரீதியான காரணங்கள் இருந்தாலும் அதற்காக மட்டும்தானா இந்தியா மகிந்தவுக்கு ஆதரவாக செயற்படுகின்றது?

போர்க்குற்றங்களுக்காக மகிந்த விசாரிக்கப்பட்டால் மன்மோகன் சிங்கும் விசாரிக்கப்படவேண்டிவரும் என்பதாலா? போரை நடத்தியவன் போர்க்குற்றம் செய்தது நிறுவப்பட்டால் எரியும் வீட்டுக்கு நெருப்பு எடுத்து கொடுத்தவன் என்ற அடிப்படையில் இந்தியாவின் காந்திய முகமூடி கிழிக்கப்பட்டுவிடும் என்பதாலா?

கூட்டமைப்பை குலைத்து – மகிந்தவுக்கு ஆதரவாக - சிவாஜிலிங்கத்தை நிறுத்திய இந்தியா, தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பையும் இந்தியாவுக்கு அவசரமாக அழைத்துள்ளது. இந்தியாவின் நலன்கள் என்பவை தமிழர்களின் உடலங்களுக்கு மேல்தான் எழுதப்படவேண்டுமென, இந்தியா இன்னமும் நினைக்குமாகவிருந்தால் வரலாற்றுப் பழியிலிருந்து இந்தியா எப்போதும் மீளப்போவதில்லை.


- கொக்கூரான் -

“எதிரியின் எதிரி நண்பன்”: இப்போது அதுவே ஆயுதம்

Friday, January 8, 2010 / No Comments
நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டது. இத்தேர்தல் மூலம் தமிழர் தரப்புக்கள் சாதிக்கபோவது என்ன? சரத் பொன்சேகாவிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பால் என்ன உத்தரவாதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன? அவை தொடர்பான உறுதிப்பாடுகள் எவை என்பது பற்றி இப்பத்தி ஆராய்கிறது.



தற்போது தமிழ் மக்களுடைய உடனடி பிரச்சனைகளை முன்வைத்து இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மகிந்தவுடன் எக்காலத்திலும் உடன்படக்கூடிய சாத்தியங்கள் இல்லையென்பதை தெரிந்துகொண்ட நிலையிலும் ஆளும்கட்சியினுடைய எதிர்கால திட்டங்கள் என்பது பற்றி அவர்களுடனும் ஆராய்ந்து இறுதியாகவே சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கமுடியுமென தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.

இவ்வாறான நிலைப்பாடு தொடர்பாக எம்மவர் சிலரிடம் மாற்றுக்கருத்துக்கள் உண்டு. சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதியை ஆதரிப்பதில் சில கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. இந்திய இராணுவத்தினர் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது இந்திய இராணுவத்தினரை அகற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை எடுத்த முடிவை இங்கு ஞாபகப்படுத்தி கொள்வது நல்லது. அப்போதைய சிறிலங்கா ஆட்சி பீடத்தோடு இணைந்து முதல் எதிரியாகவிருந்த இந்திய படைகளை அகற்றுவதில் புலிகள் தமது இராசதந்திரத்தை சரியாக பயன்படுத்தியிருந்தனர்.

முன்னர் நாம் குறிப்பிட்டது போல ஒரு நாகபாம்பை அகற்றி இன்னொரு பற்கள் புடுங்கப்பட்ட நாகபாம்பை ஆட்சியில் இருத்தபோகின்றோம். ஏனென்றால் சரத் பொன்சேகாவுக்கு அவருக்கென்று ஒரு கட்சி இல்லை. பலவீனமான ஒரு ஆட்சிபீடத்தையே அவரால் அமைக்கமுடியும். சிறிலங்காவின் ஆட்சிபீடம் பலவீனமாக இருக்கும்போதே தமிழர் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இப்போது தமிழர் தரப்பின் ஆதரவை தேடி ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் படையெடுப்பதும் இதன் ஒரு ஆரம்பமே.

இப்போது சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் உடனடி பிரச்சனைகளுக்கு என்ன உத்தரவாதங்கள் பெறப்பட்டுள்ளன? எதிர்வரவுள்ள தேர்தல் தமிழர் தரப்பால் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா? என்ற வினாக்கள் எழுவது வழமையானதே.

சரத் பொன்சேகாவுடனும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு காணப்பட்ட முக்கிய விடயங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கல், உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல் மற்றும் அவசரகால சட்டத்தை நீக்குதல் என்பன முக்கியமானதாகும்.

தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதை தமிழர் தரப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது. தற்போதைய மகிந்த அரசாங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினரை கூட இன்னமும் விடுவிக்காமல் இருப்பதை பார்க்கிறோம். இவ்வாறான அரசை ஆட்சியில் தொடர்ந்து அமரவிட்டு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையோ அல்லது அதன் ஆதரவாளர்களையோ சிறையிலிருந்து வெளியில் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லை. அத்தோடு அவர்களின் உயிருக்கு கூட உத்தரவாதத்தை கூட பெற்றுக்கொள்ளமுடியாத நிலையே இருந்துவருகின்றது.

அத்தோடு தடுத்துவைக்கப்பட்டுள்ள முழுமையான விடுதலைப்புலிகளின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. யார் யார் சிறையில் இருக்கின்றார்கள் என்பது அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக சொல்லப்படவில்லை. இதனால் அவர்களின் உயிருக்கு எந்தவேளையிலும் ஆபத்து இருப்பதை புரிந்துகொள்ளமுடியும். அரசாங்கத்திற்கு சார்பாக கருத்து சொல்லுவார்கள் என அரசாங்கம் நம்பிக்கை கொள்ளும் முன்னாள் போராளிகளை மட்டுமே அரசு வெளியில் விட விரும்புகிறது. அப்படியானால் மற்றையவர்களின் நிலை என்ன?

எனவே தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகளின் விடயத்தில் முன்னேற்றகரமாக தமிழர் தரப்பால் செய்யமுடியுமாகவிருந்தால் அதனை நிச்சயம் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்துமட்டங்களிலும் இருந்து வந்தது. அதனை சரியாக தமிழர் தரப்பின் பிரதிநிதிகள் பயன்படுத்தியிருப்பது ஆறுதலான விடயமே.

அடுத்ததாக உயர் பாதுகாப்பு வலயங்கள் பற்றிய விடயங்கள் மிகவும் முக்கியமானதாகும். சிறிலங்கா அரசாங்கத்தால் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயங்கள் பேணப்படுவதற்கான திட்டங்களே தற்போதைய அரசிடம் உண்டு. யாழ்ப்பாணத்தில் மூன்றில் ஒரு பகுதி பிரதேசங்கள் உயர் பாதுகாப்புவலயங்களாகவே இருந்துவருகின்றன. இங்கு 30, 338 குடும்பங்கள் இருபது வருடங்களாக தமது வாழ்விடங்களுக்கு திரும்பமுடியாமல் இருந்துவருகின்றார்கள்.

அதேபோல் திருகோணமலையிலும் சம்பூரை உயர் பாதுகாப்புவலயமாக்கி 4249 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இங்கிருக்கின்ற 19 பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடப்பட்டேயிருக்கிறது. இதுதவிர மணலாறு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் கொக்கிளாய் போன்ற பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் இருபத்தைந்து வருடங்களாக தமது சொந்த இடங்களுக்கு திரும்பமுடியாமல் இருக்கிறார்கள்.

எனவேதான் உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான உறுதியான பதிலை தமிழர் தரப்பு எதிர் பார்த்திருக்கவேண்டும். சாதகமான பதிலளித்த சரத் பொன்சேகா உயர் பாதுகாப்பு வலயங்களை விரைவினிலே நீ்க்குவதற்கான ஒழுங்குகளை செய்வதாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

அடுத்ததாக தற்போது இலங்கைத்தீவை ஆட்டிப்படைத்துவரும் அவசரகாலசட்டம் பற்றிய விடயமாகும். தற்போது கைது செய்யப்படும் தமிழர்களை நீண்ட காலமாகவே தடுத்துவைப்பதற்கு அரசுக்கு வசதிசெய்யும் சட்டமூலமே இதுவாகும். தற்போதைய நிலையில் இதனை நீக்குவதற்கு வழிசெய்வதன் மூலமே தமிழர்களது குரலை வெளியுலகிற்கு கொண்டுவரமுடியும். அவசரகால சட்டம் நீக்கப்படுவதை உறுதிப்படுத்தி அதற்கான எழுத்து மூல ஆவணங்களும் சரத் பொன்சேகாவிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பால் பெறப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் தமிழர்களது அன்றாட அவசர தேவைகளை ஒட்டியதே தவிர தமிழர்களது அடிப்படை அரசியல் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான எந்தவித முன்னேற்றங்களும் இப்பேச்சுவார்த்தைகளின்போது ஏற்படவில்லை என்பதையும் அனைவரும் கவனித்துக்கொள்ளவேண்டும்.

ஒரு சாதாரண பொதுமகனுக்கு இருக்கவேண்டிய அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளே நடைபெற்றன என்பதையும் தமிழர்களது தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருக்கும் என்பதையும் எவரும் மறந்துவிடக்கூடாது.

தமிழர்கள் தமது உரிமைகளை பற்றி விவாதிப்பதற்கான களநிலைமையை ஏற்படுத்துவதே இன்றைய தேவையாகும். அதனை ஏற்படுத்தி தாயகத்திலுள்ள மக்களே தமது உரிமைகள் என்னவென்பதையும் அதற்கான களத்தையும் திறக்கவேண்டும். அவர்களுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் தன்னாலான பங்களிப்பை வழங்கமுடியும்.

எனவே தாயகத்தில் எமது மக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை சொல்லக்கூடிய சூழ்நிலையை முதலில் ஏற்படுத்துவோம். அவ்வாறான சுதந்திரமான சூழல் வரும்வரை அதற்கான வழிகளை திறப்பதே எம்முன்னுள்ள ஒரேதெரிவாகும்.

- கொக்கூரான் -