தமிழர் தேசத்தை கட்டமைக்கும் பயணம்
தமிழ்ப் பொதுவேட்பாளர் - விடைகளைத் தேடி - 01
தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் சிறிலங்கா சனாதிபதிக்கான தேர்தலுக்கான களத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதில் தமிழ் மக்களிடத்தில் மூன்று விதமான அணுகுமுறைகள் இருந்து வந்திருக்கின்றன. மோசமான எதிரியை நரித்தனமான எதிரியை வைத்து தோற்கடித்தல் அல்லது மென்வலுவை பயன்படுத்தி கெட்டவரை நல்லதாக்க வாக்களித்தல் அல்லது முற்று முழுதாக புறக்கணித்தல் என்பவையே 2009 இற்குப் பின்னர் தமிழர்கள் தமிழ்த் தேசிய தளத்தில் எடுத்த முன்னெடுப்புகளாக இருந்தன.
சிங்களப் பெரும்பான்மை நாடாளுமன்றமே எப்போதும் அமையக்கூடிய களச்சூழலில், தமிழ் பேசும் மக்கள் தங்கள் வகிபாகத்தை செலுத்தக்கூடிய தளமாக சனாதிபதிக்கான தெரிவு அமையும் என்றும் அது அவர்களுக்கு ஓரளவுக்கு பாதுகாப்பைத் தரும் என்ற எண்ணம் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் தொடர்ச்சியாக ஆட்சிக் கட்டிலேறிய சனாதிபதிகள் சிங்கள பேரினவாதத்தின் அதிகார மையமாகவே செயற்பட்டு வந்திருக்கின்றார்கள். அதன் நீட்சியாக, 2019 இல் நடைபெற்ற தேர்தலில் முழுமையாக சிங்கள மக்களின் வாக்குகளால் அன்றைய சனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
ஆனால், அவர் தெரிவு செய்யப்பட்ட இரண்டு வருடங்களில் நிறைவேற்று அதிகாரம் உள்ள சனாதிபதி என கருதப்பட்ட அந்தப் பதவியில் அமர்ந்தவராக இருந்தபோதும், நாட்டைவிட்டு தப்பியோடும் நிலைக்குச் சென்றமை சிறிலங்காவின் அரச கட்டமைப்பில் பல மாற்றங்களுக்கான புறநிலையை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இனிவரும் சனாதிபதி தேர்தலில் வழமைக்கு மாறாக வாக்குகள் ஒருவரை நோக்கி திரளாமல் சிதறி, விருப்பு வாக்குகளில் தங்கியிருக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்படுகின்றது. தெரிவு செய்யப்படும் சனாதிபதி கூட நாடாளுமன்றத்தின் ஊடாகத்தான் ஆட்சியை தொடரமுடியும். முன்னரைப் போல, ஆட்சிக்கட்டமைப்புகளில் சனாதிபதியால் நேரடி தலையீடு செய்வது கடினம்.
இவ்வாறு சிங்கள அதிகார மையத்திற்கான கட்சிகள் சிதறியிருந்தாலும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான விடயத்தில் அவற்றின் போக்கில் மாற்றங்கள் ஏற்படவில்லை. வெறுமனே பொருளாதார பிரச்சனைகளை முதன்மைப்படுத்தி, சிங்கள பௌத்த பேரினவாத அரச இயந்திரத்தை கொண்டு நடத்துவதில் தான் அவர்கள் குறியாக இருக்கின்றனர். போர் முடிவடைந்து 15 ஆண்டுகளின் பின்னரும் கூட தமிழ் மக்களின் உரிமை சார் விடயங்களிலோ அல்லது நீதி சார் விடயங்களிலோ அல்லது நினைவேந்தல் சம்பந்தப்பட்ட விடயங்களில் கூட, தமிழர் தரப்புடன் சகோதர இனமாக இணைந்து நிற்கின்ற நிலை சாதாரண சிங்கள மக்களிடமோ சிங்கள செயற்பாட்டாளர்களிடமோ அல்லது சிங்கள அரசியல்வாதிகளிடமோ இன்னமும் ஏற்படவில்லை. மாறாக, சிங்கள பேரினவாத நகர்வுகள் ஊடாக இலங்கைத்தீவை சிங்கள தீவாக மாற்றிவிடவே முயன்று வருகின்றார்கள்.
இந்த நிலையில், தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தி, தமிழ் மக்களை இணைக்கவும் தமிழ் மக்களின் அரசியல் தேடலுக்கான வெளியை விசாலப்படுத்தவும் என ஒரு முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. அத்தகைய முன்னெடுப்பிற்கு பல்வேறு தரப்பட்டவர்களின் ஆதரவான குரல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் புறக்கணிப்பும் தமிழ்ப் பொதுவேட்பாளர் வாக்குப்பலம் என்பதுவும் ஒரே அடிப்படையான நோக்கங்களையே கொண்டிருந்தபோதும் மக்களை ஆர்வத்துடன் இணங்கச்செய்கின்ற பொறிமுறையாக தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற விடயம் முன்வைக்கப்படுகின்றது.
ஆனால், இதன் ஆரம்ப நிலையில் செயற்பட்ட சில கட்சிகள் மற்றும் அதன் தனிநபர்கள் மீதான நம்பகத்தன்மையை முன்வைத்து, இத்தகைய முயற்சி தவறானது எனவும், குறிப்பிடத்தக்களவான வாக்குகளை பெறமுடியாது போனால் அது தமிழ்த் தேசியத்திற்கான தோல்வி எனவும் விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.
இங்கு தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற தெரிவை தமிழ்த் தேசியத்திற்கான தெரிவாக முன்வைத்து பலமாக நகரும்போது, தளம்பலாக இருக்கும் அரசியல்வாதிகளை உறுதியான நிலைப்பாடுகளை எடுக்க நிர்ப்பந்திக்க முடியும். குறைகுடங்களை நிறைகுடங்களாக மாற்றுவது என்பது தொடர் போராட்டம். நிறைகுடங்களை நிறைகுடங்களாக பேணுவது என்பதும் இன்னொரு சவாலான போராட்டம். எனவே, தமிழ் மக்களாக திரண்ட சிந்தனை எழுச்சி மூலமே அதனை அடையமுடியும்.
அத்தோடு, தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான வாக்குப்பலம் என்பது எண்ணிக்கையை வைத்து தீர்மானிக்கவேண்டிய அவசியம் இல்லை. அதன் கனதியை வைத்தே தீர்மானிக்கவேண்டும். பொங்குதமிழ் மக்கள் திரட்சி என்பதும், எழுக தமிழ் மக்களின் திரட்சி என்பதும் எண்ணிக்கை அல்ல கனதியையே மையப்படுத்தியது. நாடாளுமன்ற ஆசனங்களை வைத்து தமிழ்த்தேசிய அரசியலை மதிப்பிட்டாலும் அதன் எண்ணிக்கைகளை வைத்து நாம் மதிப்பிடுவதில்லை அதன் கனதியை வைத்தே மதிப்பிடுகின்றோம். அந்தக் கனதியை உருவாக்க எத்தனை இலட்ச வாக்குகள் வேண்டும்?
மேலும் தமிழ்ப்பொது வேட்பாளர் தெரிவு என்பது, இந்த சனாதிபதி தேர்தலில் மட்டுமல்ல அடுத்த சனாதிபதி தேர்தலிலும் இத்தகைய அணுகுமுறை பின்பற்றப்படவேண்டும். அத்தகைய போக்கே சிங்கள பேரினவாதிகளை பண்புருமாற்றத்தை நோக்கி நகர்த்தும். அதுவே, தமிழ்த் தேசியத்திற்கான இருப்பை பலப்படுத்தி வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் செல்லும்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் - விடைகளைத் தேடி - 02
தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற விடயம் கட்சிகள் கடந்து அனைத்து மட்டத்திலும் ஓரளவுக்கு கவனத்தை பெற்றிருக்கின்றது. குறுகிய காலத்தில் முன்னெடுக்கப்பட்ட முயற்சியில், ஆரம்பித்து வைத்தவர்களை விட இடையில் வந்தவர்களே அதனை உத்வேகமாக கொண்டுசெல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த வேளையில் தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பில் எழும் சில கேள்விகளுக்கு இப்பத்தி ஊடாக விளக்கங்களை தர விரும்புகின்றோம்.
தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான தெரிவு என்பது இனங்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தும் என்றும், சனாதிபதித் தேர்தலில் தான் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என தமிழ் பேசும் மக்கள் ஒருமித்த முடிவை எடுப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது. எனவே அந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற தேர்தலிலோ அல்லது மாகாணசபை மற்றும் உள்ளாட்சி தேர்தலிலோ கட்சிகள் ரீதியாக இனங்கள் ரீதியாக பிரிவுகள் இருக்கும் என்றும் ஒருமித்து நிற்பதற்கான களம் இல்லை என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால், இலங்கைத்தீவு சுதந்திரமடைந்ததாக சொல்லப்படுகின்ற 1948 ஆம் ஆண்டிலிருந்து ஆட்சிக்கு வந்த பேரினவாத தலைமைகள் தொடர்ந்தும் தமிழர்களை அடக்கியதன் காரணமாகவே, சுமார் 76 ஆண்டுகளின் பின்னர் - பல்வேறு பட்ட அனுபவங்களின் பின்னர் - தமிழ்ப் பொதுவேட்பாளர் தெரிவு முன்வைக்கப்படுகின்றது என்பதை நாம் நோக்க வேண்டும்.
பன்மைத்துவத்தை புரிந்துகொள்ளாத சனாதிபதி வேட்பாளர்களும், அதனைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படப்போகும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தையே முன்னிறுத்தும் வரை அவர்களை மாற்றத்தை நோக்கி நகரக்கூடிய அழுத்தத்தையே நாம் வழங்கவேண்டும். அந்த வகையில், தமிழர்களுக்குள்ளே கட்சிகள் என பிரிந்து நிற்கும் தலைமைகளும், தேசிய சிந்தனையை விட்டு விலகி நிற்கும் மக்களையும், ஒன்று திரட்டுதற்கு சனாதிபதி தேர்தலையும் ஒரு கருவியாக தமிழர் தரப்பு பயன்படுத்த விளைகின்றது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
இரண்டாவதாக, தேர்தல் புறக்கணிப்பு மூலம் சிங்கள பேரினவாத வேட்பாளர்களை நிராகரிப்பதான கருத்து முன்வைக்கப்படுகின்றது. இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் 2005 இல் புறக்கணிப்பை செய்ததனை மேற்கோள் காட்டப்படுகின்றது. தேர்தல் புறக்கணிப்பு என்பது அதன் பிரயோகத்தில் இன்னொரு வேட்பாளருக்கு சாதகமான சூழலேயே ஏற்படுத்தும். அதாவது, தமிழர்களின் விடயத்தில் அதிகம் விலகிநிற்கும் வேட்பாளருக்கு அது சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்பது யதார்த்தம் ஆகும். ஏனென்றால் கிடைக்கின்ற வாக்குகளில் தான் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுகின்றார். எனவே, சிங்கள கடும்போக்காளர்களை நோக்கி நெருங்கி நிற்கின்ற வேட்பாளருக்கே சாதகமான நிலையை தமிழர்களின் தேர்தல் புறக்கணிப்பு உருவாக்குகின்றது.
அப்படியானால், 2005 இல் எடுக்கப்பட்ட தேர்தல் புறக்கணிப்பு என்பது பொருத்தமற்ற முன்னெடுப்பா? அன்றைய தமிழர் தரப்பின் வலுநிலையை பொறுத்தவரை தேர்தல் புறக்கணிப்பு என்பது பல கோணங்களில் சரியான செயற்பாடாகவே இருந்தது. அன்றைய நிலையில் தமிழர் தரப்பை நெருங்கி நின்ற வேட்பாளராக கருதப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, தமிழர்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்தார். எனவே அவருக்கு அந்த எதிர்ப்பு நிலையை தெரியப்படுத்தவேண்டியிருந்தது. மேலும், தமிழர் தரப்பு ரணிலுக்கு ஆதரவளிப்பார்கள் என கருதப்படுமாக இருந்தால் அதனால் சிங்கள தரப்பின் வாக்கை ரணில் இழக்க கூடிய சூழலும் இருந்தது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தக் கூடிய அணுகுமுறையாகவே தேர்தல் புறக்கணிப்பு அன்றைய சூழலில் அமைந்திருந்தது.
எனவே, இன்றைய களநிலைமையில் தமிழர்களுடைய அரசியல் உரிமைக்கான விடயத்தில் தமிழர்களிடத்திலும் ஏனைய சமூகங்கள் மத்தியிலும் பதிப்பதற்கான உத்தியாக தமிழ்ப் பொதுவேட்பாளர் அமைந்துள்ளதை காணலாம்.
மூன்றாவதாக, தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் முன்னெடுத்தவர்கள் தொடர்பில் உள்ள விமர்சனங்களை முன்வைத்து, அத்தரப்பிற்கான அங்கீகாரமாக இந்த தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம் முன்னகர்த்தப்படுமோ என்ற சந்தேக நிலை சில மட்டங்களில் முன்வைக்கப்படுகின்றது. இங்கு தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பிலான விடயங்கள் அனைத்தும் எந்தவொரு கட்சி சார்ந்தும் முன்னெடுக்கப்படவில்லை. பொது வேட்பாளராக நிற்கும் அரியநேத்திரனை மையப்படுத்தியும் தேர்தல் பரப்புரைகள் செய்யப்படவில்லை. தமிழ்த்தேசிய மக்களை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டமாகவே இதனை பார்க்கவேண்டும். அதன் ஊடாக, காலம்காலமாக சிங்கள தலைவர்களால் ஏமாற்றப்பட்ட வரலாற்றினை அழுத்தமாக பதிவு செய்யலாம்.
கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் மக்களை இணைக்கக்கூடிய தூரநோக்குடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய அரசியல் கட்சியோ, அரசியல் இயக்கமோ தோற்றம் பெறாதது போரில் பெரும் தியாகங்களை புரிந்த தமிழினத்தின் துயரநிலையாகும். இவற்றை தாண்டி பொதுத்தளத்தில் அனைவரையும் செயற்பாட்டு தளத்தில் இணைப்பதன் மூலமே பொருத்தமான தலைமைத்துவம் தோற்றம் பெறும். அதற்கான வெளிகளை உருவாக்குவோம். வழிகள் தானாக உருவாகும்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் - விடைகளைத் தேடி - 03
தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற விடயம் முன்வைக்கப்பட்ட பின்னர், எதிர்பாராத மக்கள் ஆதரவு பரவி வரும் அதே நேரத்தில், அதனை எதிர்ப்பதற்காக எதிரும் புதிருமான அரசியல் கட்சிகள் அதன் ஆதரவாளர்கள் வட்டம் என்பன இணைந்திருப்பது தமிழர் எதிர்காலம் எத்தகைய சிக்கலான பாதையில் நகர்கின்றது என சிந்திக்கவைக்கின்றது.
சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கின்ற சுமந்திரன் சார்பு அணியும் அதன் ஆதரவாளர்களும் மிகவும் வேகமான அவர்களது தமிழ்ப் பொதுவேட்பாளர் எதிர் பரப்புரைகளை முன்னெடுக்கின்றபோது, தேர்தல் புறக்கணிப்பு அணியாக செயற்படுகின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியும் அதன் ஆதரவாளர்களும் இன்னொரு விதமாக எதிர் பரப்புரைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.
இங்கு இந்த இரு தரப்பினரின் நோக்கமும், பொது வேட்பாளர் தெரிவு பொது மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது என்பது. அதற்கு காரணம் அப்பொதுவேட்பாளர் ஆதரவு அணியில் இருப்பவர்களிற்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என்றும், தாங்கள் முன்வைக்கும் அரசியல் தெரிவு மீது கேள்வி எழக்கூடாது என்ற நிலையுமாகும்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பொறுத்தவரை சஜித்தை ஆதரித்தால் இந்தியாவின் அடிமை என்பார்கள். ரணிலை ஆதரித்தால் இந்தியப் புலனாய்வின் முகவர் என்பார்கள். பொதுவேட்பாளரை ஆதரித்தாலும் இதில் இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அல்லது புலனாய்வு நிறுவனம் ஒன்றோ சம்பந்தப்பட்டவர்கள் என்பார்கள். இவர்களுக்கும் பொதுவேட்பாளர் விடயம் என்பது கோட்பாட்டு ரீதியில் சரி என்றாலும் அதனை முன்னெடுப்பவர்கள் அனைவரும் இந்தியாவின் அடிமைகள் தான். அவர்களது முடிவிற்கு மாறுபட்ட கருத்தை முன்வைத்தால் தமிழ்ச் சிவில் சமூக மையமும் இந்தியாவின் அடிமைதான். மூத்த போராளி காக்கா அண்ணையும் இந்தியாவின் அடிமைதான்.
பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என ஒரு பழமொழி உண்டு. புதுமொழியாக, பானைக்குள் இருப்பது தானே அகப்பையில் வரும் என்ற யதார்த்த நிலையை புரிந்துகொள்ளாமல் கனவுலகில் சஞ்சரிக்க முடியாது. தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய களநிலை இல்லை. பத்து வீத வாக்குகளோடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட காலமும் இருந்தது. ஆட்சியில் உள்ளவர்களுக்கு தமிழர்களின் விடயத்தில் சிக்கலான நிலை என்றால் எதிர்க் கட்சியில் உள்ளவர்களே கட்சி மாறி ஆதரவு கொடுத்த நிலையும் உண்டு. இதனை விட தமிழர் தாயகத்தில் தமிழர்கள் பல பிரிவுகளாக பிளவுண்டு நிற்கின்ற நிலையும் அதன் பலவீனமான அரசியல் தலைமைத்துவங்களும் உண்டு. இப்படியான நிலையில் இருக்கின்ற பானைக்குள் இருந்து எடுக்க கூடியது என்ன?
மேலும், தேர்தல் புறக்கணிப்பு என்பது இராசதந்திர ரீதியிலான தற்காப்பு முறை என்பது வாதமாக முன்வைக்கப்படுகின்றது. அதாவது, சிங்கள வேட்பாளர்களே வெல்லுகின்ற தேர்தலில் யார் வெல்லுவார்கள் என்றே எதிர்வு கூறமுடியாதபோது, ஒருவருக்கான ஆதரவை வழங்காமல் இருப்பது தமிழர்கள் எதிர்ப்பை பதிவு செய்ய முடிவதோடு, ஆட்சியில் வரக்கூடிய இரண்டு தரப்புகளோடும் சம இடைவெளியை பேணலாம் என்பதாகும்.
ஆனால், தேர்தல் புறக்கணிப்பை விட மக்களிடம் செல்லக்கூடிய சிறப்பான அணுகுமுறையே தமிழர் சார்பு பொதுவேட்பாளர் என்பதாக இருக்கின்றது. ஏனென்றால் தேர்தல் புறக்கணிப்பு என்பதை வீச்சாக மக்களிடம் கொண்டுசெல்ல முடியாத தமிழர் வலுநிலைமை என்பது ஒரு புறம். அவ்வாறு முழுமையான தேர்தல் புறக்கணிப்பு நடந்தால் அது தமிழரில் இருந்து விலகிநிற்கும் சிங்கள வேட்பாளருக்கே நன்மைகளை கொடுக்கும் என்ற யதார்த்த நிலைமை இன்னொரு புறம் என்ற நிலையே உண்டு.
அதேவேளை, இத்தேர்தலின்போது மூன்று சிங்கள வேட்பாளர்கள் சனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான சமவாய்ப்புகள் உள்ளபோது, அவர்களிடமிருந்து சமதூரத்தில் விலகி நிற்பதற்கான தந்திரோபாய நகர்வாகவும் தமிழ்ப் பொதுவேட்பாளர் தெரிவு பொருத்தமாக இருக்கின்றது.
இந்த வேளையில், சுமந்திரன் சொல்கின்ற விடயம் முக்கியமானது. பொது வேட்பாளர் விடயம் என்பது பெரியளவில் வாக்குகளை பெறாது என்றும் அப்படி கணிசமான வாக்குகளை பெறாது போனால் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து நின்று பெற்ற தேர்தலில் கிடைத்த ஆணை இல்லாமல் போய்விடும் என்று சொல்கின்றார். அண்ணளவாக 50 வீதத்திற்கு மேலாக பெற்ற வாக்குகளின் ஆணை அது.
ஆனால் அந்த தீர்மானத்திற்கு பின்னர், 1982 இல் சனாதிபதி தேர்தலில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டிருந்தார். அதற்கு பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக இனவழிப்பு செய்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சனாதிபதியாக தமிழர் தரப்பு ஆதரித்தது. அதன் பின்னர் மைத்திரியை தமிழர் தரப்பு ஆதரித்தது. அதற்குப் பின்னர் சஜித்தை தமிழர் தரப்பு ஆதரித்தது. சிங்கள சனாதிபதிக்கு தமிழர் தரப்பால் அளிக்கப்பட்ட வாக்குகளில் 80 விழுக்காடுகள் அவர்களுக்கு சென்றன. அதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மான வெற்றி மலினப்படுத்தப்பட்டதா? சுமந்திரன் தனது வாதத்திறமையை எப்போதும் தமிழர்களை அடகு வைப்பதற்கே பயன்படுத்தி வருகின்றார். அதன் தொடர்ச்சியே அவரது வலிதற்ற வாதமே இது.
பொது வேட்பாளர் முன்னெடுப்பு என்பதும் அதன் வெற்றி தோல்வி என்பது தனிநபர்களினதோ கட்சிகளினதோ இல்லை. பொங்குதமிழ் எழுகதமிழ் போன்று இதுவும் ஒரு தமிழர் எழுச்சிகரமான போராட்ட வடிவம். இதன் முழுமையான பங்கும் அடித்தட்டு மக்களிடமே சென்று சேரும். தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னெடுப்பு ஒரு புதிய அணுகுமுறை. பலர் ஏற்றுக்கொண்டு முன்வந்த அணுகுமுறை. சிங்கள அரசியல் தலைவர்களின் வீடுகள் தேடி சென்று அரசியல் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் அமிர்தலிங்கம். அதனைத் தொடர்ந்து சுமந்திரன் அதனை செய்கின்றார். அந்தளவு நெருக்கத்தை அவர் பேணுகின்றார். ஆனால் சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் அரசியல் தலைவர்களின் வீடுகள் தேடி வந்தமை தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முன்னெடுப்பின் பின்னணியில் தான் நடைபெறுகின்றது. எனவே, தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது அதன் நோக்கத்தில் ஏற்கனவே வெற்றியடைந்துவிட்டது.
இந்த நிலையில், அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் தங்கள் அரசியல் நலன்களை புறந்தள்ளி தமிழர் தேசமாக இணைந்துசெல்வோம் இணைந்து வெல்வோம்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் - விடைகளைத் தேடி - 04
இவ்வேளையில் தமிழ்க் கட்சிகளின் செல்நெறி பற்றி மீள்பார்வை செய்வது அவசியமானது என கருதுகின்றோம்.
இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான உரிமைகளை முன்னெடுப்பதற்கு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 1944 இல் தோற்றம் பெறுகின்றது.
சிறிலங்கா அரசுடன் சேர்ந்து ஆட்சியில் பங்குகொண்டதால், ஒற்றையாட்சி கட்டமைப்பை ஏற்றுக்கொண்டதால், அதிலிருந்து ஒரு குழு வெளியேறி, இலங்கைத் தமிழரசுக் கட்சியை 1949 இல் உருவாக்கினார்கள்.
பின்னர், தமிழரசுகட்சி ஆனது சிறிலங்கா அரசுடன் இணைந்து 1967 இல் ஆட்சியில் பங்குகொண்டதால், அதிலிருந்து வெளியேறியோர் தமிழ் சுயாட்சி கழகத்தை ஆரம்பித்தனர்.
தமிழர் மீதான ஒடுக்குமுறைகள் அதிகமாக, 1972 இல் தமிழர் கூட்டணியாக காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்தனர். 1976 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி தோற்றம் பெற்றது.
வட்டுக்கோட்டை தீர்மானமாக: இலங்கையில் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற, சோசலிசத் தமிழீழ நாட்டை மீள்விக்க வேண்டுமெனப் பிரகடனம் செய்து 1977 பொதுத்தேர்தலில் ஆணை கேட்டது. அதில் தமிழர் பகுதிகளில் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்று வெற்றியீட்டியது.
அதனைத் தொடர்ந்து தமிழ் அரசியல்வாதிகள், தாம் பெற்ற தமிழர் ஆணையை முன்கொண்டு செல்லவில்லை.
இதனால், ஆயுத விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்றது. அது தனிநாட்டை நிறுவும் முயற்சியில் நகர்ந்தபோது சர்வதேச அரசுகளின் உதவியுடன் 2009 இல் மௌனிக்கப்பட்டது.
அவ்வாறு ஆயுத விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டபோது, தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்த கூடியதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக 22 நாடாளுமன்ற ஆசனங்களுடன் இருந்தது.
ஆனால் நடந்தது என்ன?
2010 இல் ஒற்றையாட்சிக்குள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணங்கியது என கஜேந்திரகுமார் தலைமையிலான அணி (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உட்பட) வெளியேறியது.
2020 இல் கூட்டமைப்பில் இருந்த ஏனைய கட்சிகளும் வெளியேற தமிழரசுக்கட்சி தனித்த கட்சியானது. ஒற்றையாட்சிக்குள் உட்பட்ட 13வது திருத்தத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அதனை தமிழரசுக் கட்சி ஏற்காது எனவும் தமிழரசுக் கட்சி (சுமந்திரன்) தெரிவித்து இந்தியாவுக்கு அனுப்பிய கடிதத்தில் விலகியிருந்தது.
இப்போது 2024 இல் தமிழரசுக்கட்சிக்குள் மூன்று அணிகள் உருவானது: சுமந்திரன் அணி, மாவை அணி, சிறிதரன் அணி. இதில் சுமந்திரன் அணி வெளியிட்ட சனாதிபதி ஆதரவு துண்டு பிரசுர அறிக்கையில் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப்படும் என சஜித் வாக்குறுதி தந்ததாக சொல்லி அவரை ஆதரிக்குமாறு சொல்கிறது.
தற்போதைய கணிப்பின்படி, 2025 இல் மாகாணசபை தேர்தல் நடைபெறும். அதில் மேற்படி அனைத்து கட்சிகளும் போட்டியிடும்.
ஒற்றையாட்சிக்குள் அமைந்த மாகாணசபை முழுமையான தீர்வு அல்ல. சமஸ்டி அடிப்படையிலான தீர்வு தான் வேண்டும் என தெரிவித்து இந்த கட்சிகள் அனைத்தும் அந்த தேர்தலில் போட்டியிடும்.
13 ஆவது திருத்தத்தை நிராகரிக்கின்றோம் என ஊடகங்களுக்கு அறிவித்தவாறு, மாகாணசபை தேர்தலில் அனைவரும் போட்டியிடுவார்கள்.
அதில் தெரிவுசெய்யப்படுபவர்கள் அனைவரும் அமைகின்ற மாகாணசபையில் பல விடயங்களை விவாதிப்பார்கள். ஆனால் 13 ஆவது திருத்தத்தை நிராகரிக்கின்றோம் என்று சொல்லி சொல்லி விவாதிப்பார்கள்.
இது தான் இன்றைய அரசியல் நிலைமை. இந்த கட்சிகள் அனைத்திடமும் ஒரே பானை தான். அதற்குள் இருப்பதை தான் எடுப்பார்கள். ஆனால் ஒவ்வொரு கதை சொல்வார்கள்.
இந்த நிலையில் தமிழர்கள் என்ன செய்யவேண்டும்?
இவர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக நிற்பதற்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.
இணைந்து நின்று வேறுபாடுகளை விமர்சியுங்கள். விவாதியுங்கள். முடிவுகளை காணுங்கள். முன்னோக்கி நகருங்கள் என்பதே தமிழ் மக்களின் அறிவுறுத்தலாக இருக்கவேண்டும். அல்லாவிடின், கடந்த மாகாணசபைகளில் / உள்ளாட்சி சபைகளி் குழம்பியது / குழப்பியது போல குழம்புவார்கள் / குழப்புவார்கள்.
பொது வேட்பாளர் வரவு இணைவிற்கான வழியை உருவாக்கப்பட்டும்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் - விடைகளைத் தேடி - 05
சிங்கள தேசத்தில் கோத்தபாய அரசாங்கத்தை விரட்டியடித்ததன் மூலம் புதிய மாற்றத்திற்கான விதையை இளைஞர்கள் விதைத்திருந்தார்கள். பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும் பேரினவாத அரசுகள் தமது சுயலாபத்திற்காக எவ்வாறு இனவாதத்தை பரப்பிவந்தார்கள் என்பதையும் அந்த ஊழியில் தாமும் உள்வாங்கப்பட்டதை புரிந்தவர்களாக புதிய சமூகம் உருவாகி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக அனுர தலைமையிலான அணி பெருமளவான மக்களின் கவனத்தை பெற்று வருகின்றது. சிங்கள தேசியக்கொடியை தவிர்த்து முன்னெடுக்கும் அவர்களது பரப்புரைப் பயணம் பலமடையுமா அல்லது பலியாகுமா என்பதை எதிர்வரும் காலங்களே பதில் சொல்லும்.
அதேவேளை தமிழர் தேசமும் தங்களை மீள்பார்வை செய்வதும் தொடர்ந்து முன்செல்வதும் அவசியமாகின்றது. தமிழர்களது அரசியல் போராட்டத்தில் அதன் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு செதுக்கி கொள்வது அவசியம். தமிழ்த்தேசத்தின் அனைத்து கட்டமைப்புகளிலும் முரண்பாடுகள் நிறைந்துள்ளது. உள்ளாட்சிசபை தொடக்கம் மாகாணசபை வரை அதன் வரையறை கடந்த முரண்பாடுகளால் சரிவர செயற்படமுடியவில்லை. மறுபக்கத்தில், சாதாரண குடும்பங்கள் தொடக்கம் கிராமிய அமைப்புகள் வரை முரண்பாடுகளை கொண்டதாக முறிவுகள் நிறைந்ததாக சமூகம் சீரழிந்து வருகின்றது. இதற்கு அப்பால் பாடசாலை வைத்தியசாலை உதவி அமைப்புகள் என அனைத்து மட்டத்திலும் முரண்பாடுகள் போட்டி நிலைகள் நிறைந்துள்ளன. இவற்றிற்கு அடிப்படையான காரணம் என்ன? இதனை சரிசெய்ய என்ன செய்யப்போகின்றோம்?
இவற்றைச் சரிசெய்ய வேண்டும் என்றால் சரியான தலைமைத்துவங்கள் உருவாக்கப்படவேண்டும்? சரியான தலைமைத்துவங்கள் உருவாக வேண்டும் என்றால் சரியான சமூகம் அமையவேண்டும். சரியான சமூகம் அமையவேண்டும் என்றால் சரியான பார்வை சமூக மட்டத்தில் வளர்த்தெடுக்கப்படவேண்டும்.
விடுதலை போராட்டம் மௌனிக்கப்பட்டபோது, தமிழர் தரப்பில் அரசியலை அடுத்த கட்டடத்திற்கு நகர்த்திச் செல்லக்கூடிய 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்கவேண்டும். ஆனால், நெருக்கடி நிலை ஒரு புறம், தலைமைத்துவமற்ற செயற்பாடுகள் மறு புறம், கொள்கை ரீதியான முரண்பாடுகள் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சிதறிவிட்டது. இது தான் கடந்த 15 வருடங்களின் விளைவுகள்.
தமிழர் தரப்பை ஒரு அணியாக வைத்திருக்க முடியாதவாறு பல முரண்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. இந்திய அரசின் முகவர்கள், சிறிலங்கா அரசின் முகவர்கள், சிறிலங்கா புலனாய்வின் முகவர்கள் என பல பிரிவுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அந்த சதித்திட்டத்தில் தெரிந்தோ தெரியாமலோ பலர் மூழ்கிப் போகின்றார்கள்.
மாற்று கருத்துக்களை அதிகாரத் தொனியோடு ஏற்றுக்கொள்ளாத போக்கும், சகட்டு மேனிக்கு அவதூறான விமர்சனங்களை முன்வைப்பதும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்காது.
சரியான வழிநடாத்தலும் இன்றி, செல்வதற்கான சரியான வழித்தடமும் இன்றி தொடர்ந்து பயணிக்க முடியாது.
இதன் மூலம் பிழையான தரப்புகளை வெள்ளையடிப்பதோ அல்லது முரண்பாடாக கொள்கைகளை சரியென சொல்வதோ நோக்கமன்று. விழிப்புடன் இருக்கும் அதே நேரம் முரண்பாடுகளை பிரிவுகளாக்காமல், கொள்கைகளை முன்வைத்து அரவணைக்கின்ற அழைத்துச் செல்கின்ற போக்கு வளரவேண்டும். இதற்கான வழிமுறை என்ன? இதற்கான பொறிமுறை என்ன? என்பதை அனைவரும் கலந்துரையாடி புதிய வழிமுறைகளை இனங்காணவேண்டும்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற விடயம் எவ்வாறு ஒரு இலக்கை நோக்கி அனைவரையும் வழிப்படுத்தி வருகின்ற அதே போன்ற ஒரு பொறிமுறையோடு, தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு நகரவேண்டும்.
தமிழ்ப்பொது வேட்பாளர் தெரிவு என்பது, இந்த சனாதிபதி தேர்தலில் மட்டுமல்ல அடுத்த சனாதிபதி தேர்தலிலும் இத்தகைய அணுகுமுறை பின்பற்றப்படவேண்டும். அத்தகைய போக்கே சிங்கள பேரினவாதிகளை பண்புருமாற்றத்தை நோக்கி நகர்த்தும். அதுவே, தமிழ்த் தேசியத்திற்கான இருப்பை பலப்படுத்தி வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் செல்லும்.
- அரிச்சந்திரன் -
Share This:
-
PrevoiusYou are viewing Most Recent Post
-
Next
No Comment to " தமிழர் தேசத்தை கட்டமைக்கும் பயணம் "