News Ticker

Menu

Browsing "Older Posts"

Browsing Category "களங்கள்"

களங்கள் – 18. நாகர்கோவில் பதுங்கித் தாக்குதல் -2

Tuesday, September 7, 2010 / No Comments

 28.07.2001


அதிகாலையில் றெஜித்தன் அண்ணா எம்மிடம் வந்துசேர்ந்தார். முதல்நாள் நடந்தவற்றைக் கூறியதோடு இப்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்பதையும் கூறினார்.


முதல்நாள் இரவு திட்டமிட்டபடியே எமது அணி எதிரியின் பகுதிக்குள் ஊடுருவியிருந்தது. கடும்மழை பெய்தபோதும் குறிப்பிட்டநேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அவர்கள் அடைந்திருந்தார்கள். கண்ணிவெடியை நிலைப்படுத்தவேண்டிய இடத்தில் நிலைப்படுத்திவிட்டு வெடிக்கவைப்பதற்கான பொறியமைப்பைத் தயார்செய்யும்போது தான் அவர்கள் அந்த விபரீதநிலையை உணர்ந்தார்கள்.


வெடிப்பைத் தொடக்கிவைக்கும் கெற்புக்கான (Detonator) மின்னிணைப்பை இணைக்கப் போகும்போது எச்சரிக்கை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. மின்னியற் பொறிமுறையில் ஏதாவது தவறு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்தால் இந்த சிவப்பு மின்குமிழ் ஒளிரும். இம்மின்குமிழ் எரியும்போது கெற்புக்கான இணைப்பைக் கொடுத்தால் அக்கணமே அவ்வெடிப்பொருள் வெடிக்கும்.


அன்றிரவு முழுவதும் கடும்மழை பெய்தது மட்டுமன்றி, நீரேரிக்கூடாகவே இராகவன் கண்ணிவெடியோடு எமது அணி நகர்ந்திருந்ததாலும் மின்னியற் பொறிமுறையில் குறுக்கிணைப்பு ஏற்பட்டிருந்தது. நீர்க்காப்புக்காகப் போதிய கவனமெடுத்திருந்தாலும்கூட இது நடந்துவிட்டது. இந்நிலையில் நிச்சயமாக கண்ணிவெடியைப் பயன்படுத்த முடியாது. உள்ளிருந்தபடியே திட்டம் பிசகிவிட்டதையும் தாம் உடனேயே வெளியேறி தளம் மீள்வதையும் சங்கேத மொழியில் தெரிவித்துவிட்டு அணியினர் வெளியேறினர். விடிவதற்குள் அவர்கள் எதிரிநிலைகளைக் கடந்துவிட வேண்டும்.


இப்போது எம்முன்னுள்ள தெரிவு, இருக்கும் வெடிபொருளைத் திருத்திப் பயன்படுத்துவது அல்லது புதியதைப் பெற்றுப் பயன்படுத்துவது. எதுவென்றாலும் இன்றே செய்துவிடவேண்டுமென்பதும் றெஜித்தன் அண்ணாவின் திட்டமாக இருந்தது. இருப்பதைத் திருத்துவதென்றாலும்சரி, புதியதைப் பெறுவதென்றாலும் சரி நாம் சுதந்திரபுரம் சென்றாகவேண்டும். அங்குத்தான் மின்னியற்றுறையினரின் பட்டறை இருந்தது.  குறிப்பிட்ட இராகவன் கண்ணிவெடியும் அதற்குரிய தொலைக்கட்டுப்பாட்டு வெடிப்புக்கருவியும் அதிகளவில் புழக்கத்திலில்லாத, சிறப்பு வெடிபொருட்கள் என்பதால் எப்படியும் மின்னியற்றுறையினரின் பட்டறைக்குச் சென்றாக வேண்டிய தேவையிருந்தது. மின்னியற்றுறையினருக்கு நிகழ்ந்ததனைத்தும் சொல்லப்பட்டாயிற்று. நாம் இப்போது தொலைதூர வெடித்தல் தொகுதியைக் கொண்டு சுதந்திரபுரம் சென்றாக வேண்டும். கண்ணிவெடியைக் காவிச்செல்ல வேண்டிய தேவையிருக்கவில்லை. குறுக்குச் சுற்றோட்டம் நடந்திருந்தது தொலைதூர வெடிப்புக் கருவித் தொகுதிக்குள்தான்.


நாம் இப்போது நிற்பது செம்பியன்பற்றுப் பகுதியில். எம்மிடம் நிற்கும் win-100 பெற்றோல் இல்லாமல் நிற்கிறது. மின்னியற்றுறையிலிருந்து பயிற்சி தரவென வந்திருந்த போராளியும் நானும் சுதந்திரபுரம் செல்வதாக ஏற்பாடு. அங்கிங்கென்று கேட்டு இறுதியில் தாளையடியிலிருந்த கடற்புலிகள் தமது C-90 மோட்டார்சைக்கிளைத் தருவதெனக் கூறினர். அந்த C-90 இல் நாமிருவரும் சுதந்திரபுரம் புறப்பட்டோம்.


சுதந்திரபுரம் போய்ச்சேரவே மதியமாகிவிட்டது. ஏற்கனவே நிலைமை விளங்கப்படுத்தப்பட்டிருந்ததால் எமக்காக அவர்கள் காத்திருந்தார்கள். நாம் கொண்டுபோய்க் கொடுத்த தொகுதியைச் சரிப்படுத்தி, பரிசோதித்துத் தர மாலையாகிவிட்டது. இடையிலே செம்பியன்பற்றிலிருந்து நாலைந்துதரம் அழைத்துவிட்டார்கள். ‘எல்லாம் சரிவரும், இண்டைக்கிரவு வழமையைப் போலச் செய்யத் தயாரா இருங்கோ’ என்று சொல்லியிருந்தோம்.


சுதந்திரபுரத்திலிருந்து புறப்பட மாலை ஆறுமணி ஆகிவிட்டது. இடையில் மோட்டார்சைக்கிள் ஏதும் பிரச்சனை தரவில்லையென்றால் ஏழரைக்குள் அங்கு வந்துவிடுவோமென்று றெஜித்தன் அண்ணனிடம் சொல்லிவிட்டு இருவரும் புறப்பட்டோம். மறுநாள் காலை தாம் தகவலுக்காகக் காத்திருப்பதாகவும் மறக்காமல் உடனடியாகவே தம்மோடு கதைக்க வேண்டுமென்றும் மின்னியற்றுறைப் போராளிகள் எம்மைக் கேட்டுக் கொண்டனர். நாளை அதிகாலையில் தாக்குதல் நடக்குமென்பது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


பயப்பட்டமாதிரி மோட்டார்சைக்கிளுக்கு எதுவும் நடக்காமல் நாம் குறிப்பிட்ட நேரத்திற்குச் செம்பியன்பற்றுக்குப் போயிருந்தோம். ஏற்கனவே அணியினரும் றெஜித்தன் அண்ணையும் நாகர்கோவில் முன்னரங்குக்குச் சென்றிருந்தனர். எம்மை நேரே அங்கே வரும்படி சொல்லியிருந்தார்.


செம்பியன்பற்றிலிருந்து நாகர்கோவில் முன்னரங்குக்குச் சென்றோம். அங்கு வைத்து மீளவும் வெடிபொருட்களைப் பரிசோதித்து எல்லாம் பாதுகாப்பான நிலையிலுள்ளதை உறுதிப்படுத்தினோம். நீர்க்காப்பு வழிமுறைகளைச் சரிவரச் செய்து அணியினரிடம் கொடுத்தோம். இன்று காலநிலை தெளிவாக இருந்தது. நேற்றிரவு முழுவதும் மழைக்குள்ளால் உள்நகர்ந்து மீளவும் வெளிவந்திருந்த அணியினர் தமது களைப்பையும் பொருட்படுத்தாது இன்று மீளவும் தாக்குதல் நடவடிக்கைக்காக உள்நுழைகின்றனர்.


அனைவரும் உற்சாகமாகவே இருந்தனர். எப்படியும் இந்தத் தாக்குதலை வெற்றிகரமாகச் செய்துவிடுவதென்று அவர்கள் கங்கணம் கட்டியிருந்தனர். இராகவன் கண்ணிவெடியைக் கொண்டு நடத்தப்படும் முதலாவது ஊடுருவல் தாக்குதல் இதுவென்பதால் மின்னியற்றுறையினர் உட்பட எல்லோரும் அதிக எதிர்பார்ப்போடு இருந்தனர். மறுநாள் அதிகாலை தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இதற்கென ஒதுக்கப்பட்ட ஆட்லறி அணியினரும் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டனர்.


அணியினரை வாழ்த்தி அனுப்பியபின்னர் நாம் செம்பியன்பற்றுத் தளத்துக்குத் திரும்பினோம். றெஜித்தன் அண்ணா நாகர்கோவிலிலேயே தங்கினார். அன்றிரவு கண்ணிவெடியை நிலைப்படுத்திவிட்டு அணியின் ஒருபகுதி திரும்பிய செய்தி வந்து சேர்ந்தது.


29.07.2001 அதிகாலை


ஐந்து மணிக்கே எழுந்து தொலைத் தொடர்புக்கருவிக்கருவில் காத்திருந்தோம். வேவுத் தகவலின்படி ஆறு மணியளவில்தான் இராணுவத்தினர் தமது ரோந்தைத் தொடங்குவார்கள். நடக்கப் போகும் தாக்குதலில் எதிரிதரப்பில் அதிகளவு உயிரிழப்பை நாம் எதிர்பார்க்க முடியாது என்பது எமக்குத் தெரியும். காரணம் நன்றாக இடைவெளி விட்டு நகரும் இராணுவத்தினரில் மிகச்சிலர் மட்டுமே கண்ணிவெடியின் தாக்குதல் வீச்சுக்குள் அகப்படுவார்கள். ஆறு அல்லது ஏழு பேரளவில்தான் இந்த எல்லைக்குள் வருவார்கள். எனினும் நாகர்கோவில் இராணுவத்தினரின் பின்பக்கத்தில் நடக்கப் போகும் இத்தாக்குதல் முக்கியமானதாக இருந்தது. அதைவிட இராகவன் கண்ணிவெடியைக் கொண்டு தாக்குதல் நடத்துவதும் முக்கியமான ஒரு விடயமாக இருந்தது.


சரியாக ஆறு மணி ஐந்து நிமிடத்தில் ஒரு பேரோசை கேட்டது. ஆம்! அது இராகவன் கண்ணிவெடியின் ஒலியேதான். அவ்வொலி புதுக்குடியிருப்பு வரை கேட்டது. தாக்குதலை எதிர்பார்த்திருந்த மின்னியற்றுறைப் போராளிகள் உடனடியாகவே எமக்குத் தொடர்பெடுத்து சங்கதி கேட்டார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லிவிட்டு நாம் றெஜித்தன் அண்ணாவின் தொடர்புக்குக் காத்திருந்தோம்.


கண்ணிவெடித் தாக்குதலைத் தொடர்ந்து எமது ஆட்லறித் தாக்குதலும் நடத்தப்பட்டது. உள்ளிருந்து தகவல் சொல்லும் போராளிகளின் உதவியோடு சில எறிகணைகள் உடனடியாகவே அவ்விடத்துக்கு ஏவப்பட்ட பின்னர் தாக்குதல் நிறுத்தப்பட்டது. காயக்காரரை அப்புறப்படுத்தவும், அவ்விடத்தில் தேடுதல் நடத்தவுமென வரும் இராணுவத்தினரைக் குறிவைத்து மீளவும் தாக்குதல் நடத்துவதென்பது எமது ஏற்பாடு.


தாக்குதல் நடத்திய போராளிகள் இருவரினதும் தகவற்படி தாக்குதல் வீச்சுக்குள் இருந்த இராணுவத்தினர் அந்தந்த இடத்திலேயே விழுந்தவிழுந்தபடியே கிடக்கின்றனர். யாரும் எழுந்து ஓடவுமில்லை. யாரும் உதவிக்கு வரவுமில்லை. ரோந்து அணியில் பின்னால் வந்துகொண்டிருந்தவர்கள் மீளவும் காப்பரண்களுக்கே ஓடிவிட்டனர். அன்று மதியம் பதினொரு மணிவரையும் விழுந்துகிடந்தவர்களை அப்புறப்படுத்தவோ, அவ்விடத்தில் தேடுதல் மேற்கொள்ளவோ இராணுவத்தினர் வரவேயில்லை.


இந்நிலையில் குறிப்பிட்ட போராளிகள் இருவரையும் பாதுகாப்பாக கண்டல் பகுதிக்கு நகர்ந்து  உருமறைப்பாக இருக்கும்படி பணிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் கண்டல் காட்டுக்குள் நகர்ந்து மறைந்திருந்து அன்றிரவு நீரேரி கடந்து எம்மிடம் வந்து சேர்ந்தார்கள்.


எல்லோருக்கும் புதிராக இருந்தது. இராணுவத்தரப்பின் இழப்பு விபரங்கள் எதுவும் தெரியவில்லை. வழமை போல எதிரியின் தொலைத்தொடர்பாடல்களில் இந்த விபரங்களை அறிந்துகொள்ளும் வழிமுறையும் கைகூடவில்லை. காரணம், இது தொடர்பாக எந்தவொரு உரையாடலும் எதிரிகளுள் நடக்கவில்லை. அன்று மதியம் இரண்டு மணியளவில் நாகர்கோவில் பகுதியில் உலங்குவானூர்த்தியொன்று இறங்கி ஏறிச்சென்றதை மட்டும் உறுதிப்படுத்த முடிந்தது. காயக்காரரை அல்லது இறந்த இராணுவத்தினரின் உடல்களை ஏற்றிச்சென்றிக்கலாமென்று ஊகித்தோம். அன்றிரவு பலாலியிலிருந்து காயக்காரர் சிலரை விமானம் மூலம் தென்னிலங்கை ஏற்றிச் சென்றதை ஒட்டுக்கேட்கும் பிரிவு உறுதிப்படுத்தியது. ஆனால் அது குறிப்பிட்ட நாகர்கோவில் தாக்குதலோடு தொடர்புடையது என்ற குறிப்பு எதிரியால் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.


விடுதலைப் புலிகளின் மரபுக்கிணங்க, எதிரியின் இழப்பை உறுதிப்படுத்த முடியாதபடியால் இத்தாக்குதல் தொடர்பான செய்தி வெளியிடப்படவில்லை. தாக்குதலோடு தொடர்புடையவர்களுடன் இது நின்றுபோனது. அதற்கு அடுத்துவந்த நாட்களில் அத்தாக்குதலின் இழப்பு விபரம் அறியும் முயற்சிகள் கைகூடவில்லை. உள்ளே நின்று தாக்குதலை நடத்திய போராளிகள் இருவரை மாறிமாறி விசாரித்து முடித்தார்கள். பெறுபேறு தெரியாத ஒரு தாக்குதலாக அது முடிந்து போனது.


=======================


இயக்கத்தின் கட்டமைப்புக்கள் பலவழிகளில் தமது முயற்சிகளை விடாப்பிடியாக மேற்கொள்ளும். அதன்படி மேற்குறிப்பிட்ட நாகர்கோவில் தாக்குதலின் இழப்பு விபரத்தை கிட்டத்தட்ட ஓராண்டின் பின்னர் இயக்கம் உறுதிப்படுத்தியது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் 2002 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இத்தாக்குதலை நெறிப்படுத்திய றெஜித்தன் அண்ணாவுக்கு தலைமைப்பீடத்தால் தகவல் வழங்கப்பட்டது. அதன்படி இராணுவத்தினர் ஐவர் கொல்லப்பட்டதோடு ஏழு பேர் காயமடைந்திருந்தனர். அவர்களில் ஒருவர் பின்னர் மருத்துவமனையில் இறந்தார்.


லெப்.கேணல் றெஜித்தன் அண்ணா 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார்.


நாகர் கோவிலுக்குள் ஊடுருவி கண்ணிவெடித் தாக்குதல் நடத்திய அணியில் இடம்பெற்றிருந்த மன்னார் வங்காலையைச் சொந்த இடமாகக் கொண்ட லெப்.கேணல் வசந்தன் வன்னிப்போரின் இறுதிக்காலப்பகுதியில் வீரச்சாவடைந்தார்.

களங்கள் – 17. நாகர்கோவில் பதுங்கித் தாக்குதல் -1

Tuesday, August 31, 2010 / No Comments

 27/07/2001.


எல்லோரும் பரபரப்பாக தொலைத்தொடர்புக் கருவிக்கு அருகில் காத்திருந்தோம். ‘எல்லாம்சரி, படுங்கோ’ என்றொரு செய்தி றெஜித்தன் அண்ணனிடம் இருந்து வரவேண்டும். நேரம் நள்ளிரவையும் தாண்டி நீண்டுகொண்டிருந்தது. எதிர்பார்த்த நேரத்துள் அந்தச் செய்தி வரவில்லையாதலால் ஏதாவது சிக்கலாகியிருக்க வேண்டுமென்று உள்மனம் சொல்லிக்கொண்டாலும், அப்படியேதும் இருக்கக்கூடாது என்று விரும்பினோம்.


சிலவேளை றெஜித்தன் அண்ணா எங்களை மறந்திருக்கலாமென்று ஒருவன் சொன்னான். ஆனால் அவர் அப்படிப்பட்டவரில்லை. செய்திக்காக நாம் காத்திருப்போமென்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஏற்கனவே இப்படியொரு செய்தியைச் சொல்வேன் எனச் சொல்லிவிட்டுத்தான் முன்னுக்குச் சென்றிருந்தார்.


அன்றிரவு முழுவதும் கடும்மழை பொழிந்துகொண்டிருந்தது. உள்ளேபோனவர்கள் படக்கூடியபாடுகளை நினைத்துக் கொண்டோம். மழைகாரணமாகவும் திட்டத்தில் ஏதும் பிசகு நடந்திருக்குமோ, எல்லாம் சரியாக நடந்தாலும் நாளைக் காலையில் நாம் எதிர்பார்த்தபடி எதிரி நடந்துகொள்வானோ, நாளைக் காலையும் மழைபெய்தால் என்ன நடக்கும்? என்று பலவாறு யோசித்துக்கொண்டிருந்தபோது றெஜித்தன் அண்ணாவிடமிருந்து தகவல் வந்தது. ‘படுங்கோ. விடிய வந்து கதைக்கிறன்’ என்பதாக அத்தகவல் இருந்தது. ஏதோ பிசகு நடந்துவிட்டதென்று விளங்கியது.


நாங்கள் இப்போது நிற்பது வடமராட்சியின் செம்பியன்பற்றுப் பகுதியில். எமது தளத்திலிருந்து ஒரு தாக்குதல் நடவடிக்கைக்காகச் சென்ற அணியினர் சரியாகப் போய்ச்சேர்ந்தனரா என்ற தகவலைத்தான் எதிர்பார்த்திருந்தோம். அதிகாலையில்தான் தெரிந்தது, போனவர்கள் அனைவரும் திரும்பவும் வந்துவிட்டார்களென்பது.


அதுவொரு பதுங்கித் தாக்குதல் திட்டம். நாகர்கோவில் முன்னணிக் காப்பரண் வரிசையிலிருக்கும் இராணுவத்தினர் காலைநேரத்தில் காப்பரண் வரிசைக்குப் பின்புறமாகவுள்ள பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது வழமை. காலை ஆறுமணிக்கு ரோந்து அணி காப்பரண் வரிசையிலிருந்து புறப்பட்டு நகரத் தொடங்கும். அந்த அணி மீது எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வைத்துத் தாக்குதல் நடத்துவதுதான் எமது திட்டம். தாக்குதல் திட்டம் மிகச்சிறியளவில்தான் தொடங்கப்பட்டது. பின்னர் பெரிதாகிப் பெரிதாகி இறுதியில் தலைவரே நேரடியாகக் கவனமெடுத்து நடத்தும் ஒரு தாக்குதலாக வந்துவிட்டது.


இந்த ரோந்து அணி மீதான தாக்குதல் தனியே கண்ணிவெடித் தாக்குதலாகவும், அதன்பின்னர் தேவைக்கேற்ப எறிகணைவீச்சுத் தாக்குதலாகவும் தீர்மானிக்கப்பட்டது. நேரடியான ஆயுதச்சண்டையில் எமது அணியினர் ஈடுபடுவதில்லை என்று திட்டமிடப்பட்டது. எதிரியின் பகுதிக்குள் ஊடுருவதும் வெளியேறுவதும் நீரேரி – கண்டல்காடு வழியாகவே.


உண்மையில் இந்த நீரேரி-கண்டல்காடு என்பது இரு தரப்புக்கும் பெரிய சாதக பாதகங்களைக் கொண்டிருந்தது. இருதரப்புமே மற்றப் பகுதிக்குள் இலகுவாக ஊடுருவ இந்தக் கண்டல்காடு உதவியாகவிருந்தது. இப்போது எமது அணியினரும் இக்கண்டல்காடு வழியாக ஊடுருவி கண்ணிவெடியை நிலைப்படுத்திவிட்டு உடனடியாகவே தளம் திரும்பிவிடுவர். இருவர் மட்டுமே அங்கே தங்கியிருந்து தாக்குதலைச் செய்யவேண்டும். எறிகணைகளுக்கான திருத்தங்களையும் களநிலைமையையும் அவர்களே கட்டளைப்பீடத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இருட்டியபின்னர் வெளியேறித் தளம் திரும்ப வேண்டும்.


இந்தப் பதுங்கித் தாக்குதலுக்குப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்ட கண்ணிவெடி ‘இராகவன் கண்ணிவெடி’. என் அறிவுக்கெட்டியவரையில் முதன்முதலில் பதுங்கித் தாக்குதலுக்கு இக்கண்ணிவெடியைப் பயன்படுத்தியது இத்தாக்குதலுக்கே ஆகும். ‘இராகவன்’ என்ற இக்கண்ணிவெடி இயக்கத் தயாரிப்பு. சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத்தளபதியாகவிருந்து ஓயாத அலைகள்-3 இல் வீரச்சாவடைந்த லெப்.கேணல் இராகவனின் நினைவாக இக்கண்ணிவெடிக்குப் பெயர் சூட்டப்பட்டது. உண்மையில் இது பதுங்கித்தாக்குதலுக்கான கண்ணிவெடியன்று. எதிரியின் பகுதிக்குள் ஊடுருவி இக்கண்ணிவெடியைக் கொண்டு தாக்குதல் நடத்துவதென்பது இலகுவான காரியமன்று. சுமார் 50 கிலோகிராம் நிறையுடைய இக்கண்ணிவெடி ஐம்பதாயிரம் சிதறுதுண்டுகளைக் கொண்டது. வழமையான கிளைமோர்கள் போலன்றி 360 பாகையுமே சிதறுதுண்டுகளைப் பாய்ச்சக்கூடியவாறு தயாரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஓர் உரல் போன்ற வடிவிலும் அளவிலும் இருக்கும் இதைக் காவிக்கொண்டு எதிரியின் பகுதிக்குள் ஊடுருவதும், நகர்வதும் இயலுமான காரியமன்று.


ஆனால் நாகர்கோவில் பதுங்கித் தாக்குதலுக்கு இராகவன் கண்ணிவெடியைப் பயன்படுத்துவதென்று தீர்மானிக்கப்பட்டபோது முதலில் ‘இதென்ன விசர்வேலை?’ என்றுதான் தோன்றியது. ஆனால் அகிலன் வெட்டையில் நடந்த இராகவன் பரிசோதனை வெடிப்புக்குப் போன எல்லோருக்குமே அக்கண்ணிவெடி மீது ஒரு விருப்பு இருந்தது. அது ஏற்படுத்தும் தாக்கம், சேதம், சத்தம் என்பவற்றை அறிந்தவர்கள், அதைக் கொண்டு எப்படியாவது எதிரிமீது ஒரு தாக்குதலைச் செய்ய வேண்டுமென்ற அவாவைக் கொண்டிருந்தார்கள். இங்கும் தாக்குதலைச் செய்யவென ஒழுங்கமைக்கப்பட்ட அணியினர் ஏற்கனவே இராகவன் கண்ணிவெடிப் பரிசோதனைக்கு வந்திருந்தவர்கள். இதுவொரு மிகக்கடினமான பணியென்பதைத் தெரிந்தும் அவர்கள் இராகவனைக் கொண்டு தாக்குதல் நடத்துவதென முடிவெடுத்தார்கள்.


இப்போது தாக்குதலை நடத்துவதற்கென ஒழுங்கமைப்பட்ட அணியானது கரும்புலிகளுக்கான வேவு அணியே. ஐவரைக் கொண்ட இவ்வணி இரவோடிரவாக நகர்ந்து கண்ணிவெடியை உரியவிடத்தில் நிலைப்படுத்திவிட்டு மூவர் உடனேயே திரும்பிவந்துவிட இருவர் மட்டும் தம்மை நிலைப்படுத்திக் கொண்டுவிட வேண்டும். திட்டத்திலே நேரம் மிகமிக முக்கியமானதாக இருந்தது. இருளத் தொடங்கியதும் எமது தளத்திலிருந்து புறப்பட்டால், அதிகாலை நான்குமணிக்கும் மீளவும் எமது தளத்துக்கு அந்த மூவரும் திரும்பிவிடவேண்டும். இடையிலே நீருக்குள்ளால், பற்றைகளுக்குள்ளால் நகர்வது, அதுவும் அந்த உருப்படியைக் கொண்டு நகர்வதென்பது இலகுவான செயலன்று. இவையெல்லாம் கவனத்திலெடுக்கப்பட்டு பயிற்சிகள் தொடங்கின.


அந்நேரத்தில் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்பு அணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த மேலாளர் றெஜித்தன் அண்ணாவின் மேற்பார்வையிலேயே இத்தாக்குதலும், அதற்கான பயிற்சிகள் உட்பட ஏனைய நிர்வாக வேலைகளும் விடப்பட்டிருந்தன. லெப்.கேணல் றெஜித்தன் அண்ணா பின்னர் 2008 ஜூன் மாதம் வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார்.


ஏற்கனவே வெடிபொருள், கண்ணிவெடிப் பயிற்சிகளைப் பெற்றிருந்தாலும் இது தாக்குதலணிக்குப் புதியது. மின்கம்பி வழியில்லாமல் தொலைக் கட்டுப்பாட்டு முறைமூலமாக தாக்குதலை நடத்தப்போவதால் அக்கருவிகள் தொடர்பிலும் மேலதிகப் பயிற்சிகள் பெறவேண்டியிருந்தது. இராகவன் கண்ணிவெடி, தொலைக்கட்டுப்பாட்டு வெடித்தற் பொறிமுறை என்பவற்றைக் கற்பிக்கவும் பயிற்றுவிக்கவும் கேணல் ராயு அண்ணையிடமிருந்து ஒருவர் வந்திருந்தார். தாக்குதலுக்கான நாள் குறிக்கப்படவில்லை; ஆனால் பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.


அப்போதைய யுத்தச் சூழ்நிலையைப் பற்றி அறிந்துகொள்வதும் முக்கியம். எல்லாவிடத்திலும் போர் மந்தமடைந்திருந்தது. அவ்வாண்டின் ஏப்ரலில் நடைபெற்ற தீச்சுவாலை இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் எந்தப் பெரிய சண்டையும் நடைபெறவில்லை. ஆங்காங்கே பதுங்கித் தாக்குதல்கள் மட்டும் எப்போதாவது நடந்துகொண்டிருக்கும். முன்னணிக் காப்பரணில் பதுங்கிச் சுடுவதும், இடையிடையே எறிகணை வீசிக்கொள்வதுமென்றுதான் களமுனை மந்தமாக நகர்ந்து கொண்டிருந்தது. வன்னியின் மறுமுனையில் மணலாறு, வவுனியா, மன்னார் முனைகளிலும் எல்லாமே அமைதியாக இருந்தது. ஆனால் ஆள ஊடுருவும் அணிகள் இருதரப்பிலும் மாறிமாறி ஊடுருவித் தாக்குதல்களை அவ்வப்போது நிகழ்த்திக் கொண்டிருந்தன. இந்நிலையில்தான் நாகர்கோவில் பகுதியில் இப்படியொரு பதுங்கித் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது.


ஜூலை மாசத்தின் நடுப்பகுதியிலிருந்து எமது பயிற்சிகள் தொடங்கியிருந்தன. தாக்குதல் நடத்துவதற்கான நாள் குறிக்கப்படாமல் பயிற்சி மட்டும் நகர்ந்துகொண்டிருந்தது. ‘எப்ப அடிக்கப் போறியள்? ஏதாவது பிரச்சினையெண்டா சொல்லுங்கோ’ என்று தலைவரும் இரண்டு மூன்றுதரம் கேட்டாலும் தாக்குதல் நடக்கவில்லை. ஏன் இழுபட்டுக்கொண்டிருந்தது என்று சரியாக நினைவில்லை. நாளை மறுநாள் தாக்குதல் நடத்துவது என்று நாம் தீர்மானித்து, நாளைக்கு இரவு அணி நகர்வதற்குரிய இறுதித் தயார்ப்படுத்தல்களை முடித்து நித்திரைகொண்டு எழும்பினால் யாரோ வேறொரு முனையில் தாக்குதலைத் தொடங்கியிருந்தார்கள்.


ஆம்! அது 24/07/2001 அதிகாலை. சிறிலங்காவின் தலைநகரில் தாக்குதல் தொடங்கிவிட்டிருந்தது. கட்டுநாயக்கா விமானத்தளம் எரிந்துகொண்டிருந்தது.


உண்மையில் அதேநாளில் எமது தாக்குதலும் நடந்திருக்க வேண்டுமென்பது தலைவரின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கலாம். ஆனால் சரியான ஆயத்தமற்ற நிலையில் எம்மை அவசரப்படுத்தக்கூடாதென்பதற்காக விட்டிருக்கலாம். இப்போது எமது நிலை சற்றுச் சங்கடமாகப் போய்விட்டது. இன்றிரவு நகர்வதா இல்லையா என்பது முடிவில்லை. சிறப்புத் தளபதியிடமிருந்து மதியமளவில் செய்தி வந்தது இன்றிரவு நகரவேண்டாமென்று.


அன்று முழுவதும் கட்டுநாயாக்காத் தாக்குதல் செய்திகளோடு எமது பொழுது போனது. எமது தரைக்கரும்புலிகள் அணியிலிருந்தும் கரும்புலிகள் சிலர் கட்டுநாயக்காத் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


27 ஆம் திகதி இரவு நகர்வதென்றும் 28 ஆம் திகதி காலை தாக்குதல் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க எமது அணி அன்றிரவு ஊடுருவியது. தாக்குதலணியை வழிநடத்தவும், மறுநாள் கண்ணிவெடித்தாக்குதல், எறிகணைத் தாக்குதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கவுமென றெஜித்தன் அண்ணா நாகர்கோவில் பகுதிக்கு நகர்ந்திருந்தார். உள்நுழைந்த அணி கண்ணிவெடியை நிலைப்படுத்திவிட்டு இருவரை விட்டுவிட்டு மிகுதி மூவரும் திரும்பிவந்துவிட்டால் எமக்குத் தகவல் தருவதாகச் சொல்லிவிட்டுத்தான் றெஜித்தன் அண்ணா போயிருந்தார்.


அவரிடமிருந்து வந்த தகவல், எமது திட்டம் சரிவரவில்லை என்பதை உணர்த்தியது. காலை ஆறுமணிக்கெல்லாம் றெஜித்தன் அண்ணா எமது இடத்துக்கு வந்துவிட்டார். என்ன சிக்கல் நடந்ததென்று கேட்டறிந்து கொண்டோம். சிக்கலை இன்றே நிவர்த்திசெய்து இன்றிரவே மீள ஊடுருவ வேண்டுமென்பது அவரின் திட்டமாக இருந்தது. அன்றையநாள் எனக்கு அலைச்சலாக அமைந்தது.


தொடரும்…

 - இளந்தீரன் -

களங்கள் - 16. ஓயாத அலைகள் மூன்று

Tuesday, June 29, 2010 / No Comments

 ஓயாத அலைகள் மூன்று யாழ் குடாநாட்டை நோக்கியத் திரும்பியபின்னர் சண்டைக்களங்கள் உக்கிரமடைந்தன. வன்னியில் நடைபெற்ற சண்டைகளில் சிலவிடங்களில் மட்டுமே எதிரி கடுமையான எதிர்ப்பைக் காட்டியிருந்தான். ஆனால் வடபகுதிச் சண்டைக்களத்தில் ஒவ்வோர் அங்குலத்தையும் கடும் சண்டையிட்டே கைப்பற்ற வேண்டியிருந்தது. எதிரி மிகச் செறிவாக இருந்தது மட்டுமன்றி, மிகப்பாதுகாப்பான முறையில் தளங்களைக் கட்டமைத்திருந்தான். வன்னியில் எதிரியின் காப்பரண் வரிசையை உடைத்துப் பலவழிகளில் ஊடுருவித்தாக்கியதால் தளங்களைக் கைவிட்டு ஓடுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ஆனால் வடபோர் முனையில் அவ்வாறு பலவழிகளால் ஊடுருவித் தாக்குதல் நடத்துமளவுக்கு நிலைமை இருக்கவில்லை.


இந்நிலையில் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு படைத்தளங்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலோடு வடபோர்முனைக் களம் திறக்கப்பட்டது. தொடர்ந்து பரந்தன் தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு அத்தளம் கைப்பற்றப்பட்டது. பரந்தன் தளம் மீதான தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. எதிரிக்கு முன்னரே அறிவித்தல் கொடுத்து, பட்டப்பகலில் வலிந்த தாக்குதலை நடத்தி அத்தளம் கைப்பற்றப்பட்டது. தளபதி தீபன் அவர்களின் நெறிப்படுத்தலில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. அந்நேரத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் கனரகப் போராயுதக் கையாள்கையில் திறம்படத் தன்னை வளர்த்திருந்தது. ஆட்லறிகளைக் கொண்டு நேரடிச்சூடுகளை வழங்குதல், பின்னுதைப்பற்ற எறிகணை செலுத்திகளைக் கையாளல், கவசப்படையணியைக் கொண்டு தாக்குதல் நடத்தல், விமானஎதிர்ப்புக்குரிய கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி நேரடிச் சூடுகளை வழங்குதல் என பலவழிகளிலும் நேரடிச்சூட்டுத் திறனை வளர்த்திருந்தது. அந்தத் திறனைப் பரந்தன் தளம் மீதான தாக்குதலுக்கு உச்ச அளவில் பயன்படுத்தி இயக்கம் வெற்றிகண்டது.


வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, பரந்தன் போன்ற முதன்மைத் தளங்களும் அவற்றைச் சூழவிருந்த சிறுதளங்கள் சிலவும் கைப்பற்றப்பட்ட நிலையில் சண்டைக்களம் சற்று மந்தமடைந்திருந்தது. ஆனையிறவைக் காப்பாற்ற என்னவிலையும் கொடுக்கும் நிலையில் அப்போது சிறிலங்கா படைத்தரப்பு இருந்தது. ஆனையிறவுக்குப் பின்புறமாக ஊடுருவி யாழ்ப்பாணத்துக்கும் ஆனையிறவுக்குமான வினியோகத் தொடர்பைத் துண்டிக்கும் நோக்குடன் நடத்தப்பட்ட இரு நடவடிக்கைகள் பல்வேறு காரணங்களால் வெற்றியளிக்கவில்லை. இயக்கச்சியை அண்டிய பகுதியில் இந்த ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் சிலகாலம் எந்தவித முன்னேற்ற முயற்சியுமின்றி சண்டைக்களம் மந்தமடைந்திருந்தது. இருதரப்பும் எறிகணைத் தாக்குதல்களிலும் பதுங்கிச் சுடும் தாக்குதல்களிலும் ஈடுபட்டிருந்தன.


இந்நிலையில் தலைமையின் எண்ணத்துக்கிணங்க வேறு முனைகளில் வேவுப்பணிகள் தொடங்கப்பட்டிருந்தன. கடற்புலிகளின் பக்கத்தாலும் கரும்புலிகளின் பக்கத்தாலும் வெவ்வேறு வேவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கரும்புலிகளுக்குரிய வேவுஅணி பளை ஆட்லறித்தளத்தை வேவுபார்த்துக்கொண்டிருந்தது. அவ்வணியில் கரும்புலி வீரர்கள் சிலரும் சென்று வந்தனர். பளை என்ற பட்டினம் ஆனையிறவுக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையில் இருக்கும் ஓரிடம். இதிலே கண்டி வீதிக்கு அண்மையில் சிறிலங்கா இராணுவத்தினரின் பாரிய ஆட்லறித்தளமொன்று அமைந்திருந்தது. ஆனையிறவுக்குப் பின்புறமாகப் பார்த்தால் அதிகளவில் ஆட்லறிகளைக் கொண்ட தளம் இதுவேதான். இத்தளத்தை ஊடுருவித் தாக்கியழிக்கும் நோக்கத்தோடே வேவு பார்க்கப்பட்டது. ஓயாத அலைகள் மூன்றின் முதற்கட்டத்தில் நடந்தது போன்று எமது ஆட்லறி எறிகணைகளைக் கொண்டு எதிரியின் ஆட்லறிகளைத் தாக்குவதும் அதற்கு கரும்புலிகள் எறிகணைத் திருத்தங்களைச் சொல்வதும் என்பதன்றி, கரும்புலிகள் நேரடியாகச் சண்டைபிடித்துத் தளத்தைக் கைப்பற்றி அங்கிருக்கும் ஆட்லறிகளை குண்டு வைத்துத் தகர்க்க வேண்டும்.


மறுபுறத்திலே பாரிய தரையிறக்கத்துக்கான வேவுகளும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. சண்டையணிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் தரையிறக்கம் பற்றிய விடயங்கள் எவையும் கரும்புலியணிக்குத் தெரிந்திருக்கவில்லை; அதுபோல் தரையிறக்கத்தோடு தொடர்புடையவர்களுக்கு பளை ஆட்லறித் தகர்ப்புப் பற்றித் தெரிந்திருக்கவில்லை.


வேவுத் தரவுகளின்படி மாதிரி முகாம்கள் அமைத்துப் பயிற்சிகள் தொடங்கப்பட்டன. வேவுக்குச் சென்று வந்தவர்களின் தகவல்களின்படி ஆட்லறி முகாமை நெருங்குவது கடினமாக இருக்கப்போவதில்லை என்பது தெளிவாகியது. முகாமினுள் நுழைந்து ஆட்லறிகளின் எண்ணிக்கை தொடர்பாக துல்லியமான வேவுகள் பார்க்கப்படவில்லை என்றபோதும் அத்தளத்தின் மீதான தாக்குதலைத் தொடங்குவது வரை எதிரியின் கண்ணிற்படாமல் நகர்ந்துவிட முடியுமென்று புலப்பட்டது. ஆட்லறிகளைத் தகர்ப்பதற்கான வெடிபொருட்கள் சரிபார்க்கப்பட்டு அவற்றைக் கொண்டு பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பதினொரு பேர்கொண்ட கரும்புலியணியும் மேலதிகமாக வேவுப்புலிகள் இருவரும் கொண்ட அணியே இத்தாக்குதலுக்கென தயார்ப்படுத்தப்பட்டது. பின்னாளில் வேறொரு சண்டையில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மன் தான் அத்தாக்குதலுக்கான அணிக்குத் தலைமை தாங்கினார்.


இந்தத் திட்டத்தில் எதிரியின் ஆட்லறிகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவதும் பரிசீலிக்கப்பட்டது. முதலில் தளத்தைத் தாக்கிக் கைப்பற்றுவது, பின்னர் நிலைமையைப் பொறுத்து ஆட்லறிகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவதாக அவற்றைத் தகர்த்துவிட்டு வெளியேறுவதா என்பதை முடிவெடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. ஏற்கனவே கரும்புலிகள் அனைவரும் ஆட்லறிப் பயிற்சியைப் பெற்றிருந்ததோடு சண்டைக்களத்தில் ஆட்லறியைப் பயன்படுத்தியிமிருந்தார்கள்.


கரும்புலிகளின் பயிற்சிகள் முடிக்கப்பட்டு நடவடிக்கைக்காக அவர்கள் முல்லைத்தீவிலிருந்து வெற்றிலைக்கேணிக்குப் புறப்பட்டார்கள். வெற்றிலைக்கேணியை அடையும்வரை யாருக்குமே தரையிறக்கம் பற்றிய விபரம் தெரிந்திருக்கவில்லை. தரையிறக்கம் நடப்பதற்கு இருநாட்களின் முன்பேயே கரும்புலியணி நகரத் தொடங்கிவிட்டது. அதுவொரு இரகசிய நகர்வு. கடற்புலிகளின் உதவியோடு மாமுனைக் கடற்பரப்பில் 25/03/2000 அன்று கரும்புலியணி இறக்கிவிடப்படுகிறது. நீந்திக் கரைசேர்ந்தவர்கள் பளை ஆட்லறித் தளத்தை நோக்கி நகர்கிறார்கள். ஏற்கனவே திட்டமிட்டபடி குறிப்பிட்ட இடத்தையடைந்து பற்றைக்குள் மறுநாட் பகலைக் கழிக்கிறார்கள். மீண்டும் அன்றிரவு நகர்வைத் தொடங்குகிறார்கள். அன்றிரவே கடல்வழியாக எமது படையணிகள் தரையிறக்கத்தை மேற்கொள்கின்றன.


26/03/2000


எதிர்பார்த்தபடியே எந்தவிதச் சிக்கலுமின்றி கரும்புலிகள் ஆட்லறித் தளத்தை அண்மித்து நிலையெடுக்கின்றன. எதிரியின் முன்னணிக் காப்பரணிலிருந்து 50 மீற்றர் வரை மிகக்கிட்டவாக நகர்ந்து நிலையெடுத்த நிலையில் சண்டையைத் தொடங்க ஆயத்தமாகியபோத காவலரணிலிருந்த இராணுவத்தினன் அசைவைக் கண்டுவிட்டான். எதிரியின் துப்பாக்கியே முதலில் சண்டையைத் தொடக்கியது. ஆனாலும் கரும்புலியணி சுதாரித்துக் கொண்டு ஆவேசமாகத் தாக்குதலை நடத்தி அக்காப்பரண் வரிசையைக் கைப்பற்றியது. எதிரியின் தாக்குதல் தொடங்கியவுடன் கரும்புலி மேஜர் சுதாஜினியின் ஒரு ‘LAW’ ஆயுதம் காப்பரணைத் தாக்கியது. ஆனால் எதிரியின் தாக்குதலில் அவள் அந்த இடத்திலேயே வீரச்சாவடைந்தாள்.


ஏனையவர்களின் தாக்குதலில் எதிரி சிதறியோடினான். அச்சண்டைக்கு கரும்புலி மேஜர் நித்தி ஒரு PK ஆயுதத்துடன் சென்றிருந்தான். நித்தியின் PK அச்சண்டையில் கதறியது. எதிரி தாக்குதல் நடத்தி சில கணங்களுக்குள் கரும்புலிகள் முகாமுக்குள் பாய்ந்திருந்தனர். என்ன நடக்கிறதென்று எதிரி சுதாரிப்பதற்குள்ளேயே சில காப்பரண்கள் கரும்புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. ஏனைய இராணுவத்தினர் சண்டையை எதிர்கொள்ளாமலேயே ஓடிவிட்டார்கள். கரும்புலிகளுக்கான எதிர்ப்புக்கள் பலமாக இருக்கவில்லை. உடனடியாகவே பாதுகாப்புக்குச் சிலரை விட்டுவிட்டு, ஏனையோர் சில ஆட்லறிகளைக்கொண்டு சில எறிகணைகளை ஆனையிறவு, இயக்கச்சிப் பகுதிநோக்கி ஏவினர்.


பதினொரு பேர்கொண்ட அணியில் சுதாஜினி ஏற்கனவே வீரச்சாவு என்றநிலையில் அணியை வழிநடத்திக்கொண்டிருந்த வர்மன் கையில் காயமடைந்தார். எனவே அதிகளவில் ஆட்லறிகளைப் பயன்படுத்தவோ அதிகளவில் எறிகணைகளைக் கொண்ட தாக்குதல் நடத்த்வோ முடியவில்லை. அத்தளத்திலிருந்த பதினொரு ஆட்லறிகள் முழுமையாகவே கரும்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தன. இரண்டு ஆட்லறிகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்திக்கொண்டு மிகுதியை ஒவ்வொன்றாகத் தகர்க்கும் முடிவை எடுக்கிறார்கள். அப்போது கட்டளைப்பீடத்தோடு முழுமையான தொடர்பிலேயே இருந்ததால் எல்லாமே நிதானமாக கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டன. கொண்டுபோன வெடிபொருட்களைப் பொருத்தி ஆட்லறிகளை ஒவ்வொன்றாகத் தகர்க்கத் தொடங்கினார்கள் கரும்புலிகள். அதேவேளை ஆட்லறி எறிகணைச் சேமித்து வைத்திருந்த சிறு களஞ்சியங்களையும் வெடிக்கவைத்தார்கள். அவ்வாறு ஓர் களஞ்சியத்தை வெடிக்கவைத்து அழிக்கும்போது கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான்.


கரும்புலிகள் ஆட்லறிகளைத் தகர்த்துக் கொண்டிருந்த வேளையில் மறுபுறத்தில் எமது படையணிகள் குடாரப்பில் தரையிறங்கி இத்தாவில் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன. ஒருகட்டத்தில் அனைத்து ஆட்லறிகளையும் தகர்த்துவிட்டு அணியைப் பாதுகாப்பாக வெளியேறிவரும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதன்படியே காயப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு கரும்புலிகள் அணி வெற்றிகரமாக வெளியேறியது. வெளியேறி வரும்வழியில் அதிகாலையில் இடையிலே இராணுவத்தினரோடு எதிர்பாராத சண்டையும் நடந்தது. அதையும் முறியடித்து கரும்புலியணியைச் சேர்ந்த எஞ்சியவர்கள் வெற்றிகரமாக வெளியேறி வெற்றிலைக்கேணியில் எமது கட்டளைப்பணியகம் வந்து சேர்ந்தார்கள். வெற்றிகரமாக நடத்தப்பட்ட அந்த ஆட்லறித்தளத் தகர்ப்பில் கரும்புலிகள் இருவர் வீரச்சாவடைந்திருந்தனர். மிகக் குறைந்த இழப்போடு வெற்றிகரமான ஒரு தாக்குதலை நடத்தி பதினொரு ஆட்லறிகளைத் தகர்த்து முடித்துத் திரும்பியிருந்தனர் கரும்புலிகள்.


**************************************************************


ஓயாத அலைகள் மூன்றில் வடமுனையில் நடைபெற்ற சமர்களில் கரும்புலிகள் பலர் வீரச்சாவடைந்தனர். ஆனையிறவிற்குள்ளும், இயக்கச்சியை பகுதிகளுக்குள்ளும், பலாலி, சாவகச்சேரி, வரணி போன்ற பகுதிகளுள்ளும் ஊடுருவி எமது ஆட்லறிகளுக்கான அவதானிப்பாளராகச் செயற்பட்டு கரும்புலிகள் பலர் வீரச்சாவடைந்தனர். அவர்கள் ஊடுருவுவதற்கான வழிகள் இலகுவாக இருக்கவில்லை. ஊடுருவும் வழிகளிலேயே சிலர் வீரச்சாவடைந்தனர். கடல்வழி ஊடுருவல்களும் வெளியேறல்களும் எப்போதுமே கடினமானவையாகவே இருந்தன. இருந்தாலும் தொடர்ந்தும் அவர்கள் முயற்சித்தார்கள். தொடர்ந்தும் ஊடுருவித் தாக்குதல் நடத்தினார்கள். எதிரியின் பின்னணித் தளங்களை முடக்கியதில் கரும்புலிகளின் பங்கு மிக முக்கியமானது.


ஓயாத அலைகள் நான்கின்போது கரும்புலி லெப்.கேணல் பூட்டோ தனியொருவனாக செய்த சாதனைகள் கற்பனைக்கும் எட்டாதவை. தனியொரு மனிதாக எதிரியின் நெஞ்சுக்கூட்டுக்குள் கலக்கிக்கொண்டிருந்தவன். உள்நுழைந்த பூட்டோவைக் கொல்வதற்கென்றே தனியொரு அணி களமிறக்கிவிடப்பட்டது என்பதே அவனின் செயற்றினைச் சொல்லப் போதுமானது. எதிரி பல்குழற்பீரங்கிகளைக் கொண்டு நெருப்புமழை பொழிந்துகொண்டிருந்த நேரத்தில் அப்பீரங்கி வண்டியொன்றை தனது துல்லியமான திருத்தங்கள்மூலம் தாக்கியழித்து எதிரிக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்திருந்தான்.


இவ்வாறாக ஓயாத அலைகள் மூன்று படைநடவடிக்கையில் கரும்புலிகளின் பங்கு மிகப்பெருமளவுக்கு வியாபித்திருக்கிறது. அது தொடர்பான அனுபவப் பகிர்வை வழங்கிக் கொண்டிருந்த இத்தொடர் இத்தோடு நிறைவுபெறுகிறது. இதிலே நிறைய விடயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. அவற்றோடு தொடர்புடையவர்களின் இன்றையநிலையைக் கருத்திற்கொண்டே அவை தவிர்க்கப்பட்டுள்ளன.


இத்தொடரோடு தொடர்ந்துவந்த அனைவருக்கு நன்றி.

 

-முற்றும்.


இளந்தீரன் -

களங்கள் - 15. ஓயாத அலைகள் மூன்று

Tuesday, June 22, 2010 / No Comments

 கரும்புலிகள் அணியைச் சேர்ந்த ஆண் போராளிகள் அனைவரையும் புறப்படும்படி அறிவுறுத்தல் வந்திருந்தது. இரவோடு இரவாக அணிகள் ஒழுங்கமைக்கப்பட்டன. ஊடுருவல் நடவடிக்கையிருந்து திரும்பி சரியான முறையில் ஓய்வில்லாமலேயே அவர்கள் மீண்டும் புறப்பட்டார்கள். புலியணிகள் ஓமந்தைவரை முன்னேறியிருந்த நிலையில் சண்டை தற்காலிகமாக ஓய்ந்திருந்தது. அடுத்தகட்டம் உடனடியாகவே தொடங்கும்போல இருந்தது. ஏற்கனவே மணலாற்றின் மிகுதிப் பகுதிகளைக் கைப்பற்றும் திட்டம் பற்றி சொர்ணம் அண்ணன் விளங்கப்படுத்திய திட்டம் மனத்தில் நின்றது. தற்போது வவுனியா நகர்ப்பகுதியில் வாழும் மக்களைப் பாதுகாப்பாக இடங்களுக்கு நகரச் சொல்லி இயக்கம் அறிவித்துக் கொண்டிருப்பதால் அடுத்தகட்ட நடவடிக்கை வவுனியாப் பகுதியை மீட்பதாக அமையுமெனவும் ஊகமிருந்தது. எதுவென்றாலும் எதிரிக்கு நேர அவகாசம் கொடுக்காமல் தாக்கி முன்னேற வேண்டுமென்பது முக்கியமாக அனைவராலும் உணரப்பட்டது.


உள்நடவடிக்கையிலிருந்து வெளியேறிய அணியில் மயூரனின் நிலை சற்றுச் சிக்கலாக இருந்தது. முகமெல்லாம் அதைத்து, கை கால்கள் வீங்கியிருந்தன. முழு உடற்பலத்துடன் மயூரன் இருக்கவில்லை. நகர்வின்போது முட்கள் கீறி பாதங்கள் கிழிந்திருந்தன. ஆனாலும் முகம் அதைத்துள்ளதற்கான சரியான காரணம் தெரியவில்லை. முகாமில் நின்ற மருத்துவப் போராளியிடம் வலிநிவாரண மாத்திரைகளை வாங்கி உட்கொண்டு சமாளித்தான் மயூரன். அது சாதாரண பிரச்சனைதான் என்பதைப் போல் நடந்துகொண்டான். முள்ளியவளை மருத்துவமனைக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டபோதும், தான்  அணியோடு சேர்ந்து போகிறேன், நிலைமை மோசமானால் மருத்துவமனை செல்கிறேன் என்று அடம்பிடித்து அணியினரோடு புறப்பட்டான். இப்போது கரும்புலிகள் போவது நேரடியான சண்டைக்களத்திற்கு அல்ல என்பதாலும், முகம் அதைத்திருந்ததைத் தவிர வேறு அறிகுறிகள் இல்லாத காரணத்தால் சிறிய பிரச்சனையாகத் தோன்றியதாலும் மயூரன் அணியினரோடு போக அனுமதிக்கப்பட்டான்.


உண்மையில் மயூரனின் உடல் கடுமையான சோதனையை ஏற்கனவே எதிர்கொள்ளத் தொடங்கியிருந்தது. அவனது சிறுநீரகங்கள் சரியாக இயங்காமல் பழுதடையத் தொடங்கியதற்கான அறிகுறியே அன்று தொடங்கியிருந்து. இரண்டு கிழமைகளின் பின்னர்தான் முழுமையான மருத்துவச் சோதனைக்கு மயூரன் உட்படுத்தப்பட்டபோது இது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவனோ அந்த நாட்களில் தனது உபாதைகளை மற்றவர்களுக்கு வெளிக்காட்டாமல் ஓர்மத்தோடு உழைத்தான். சிறுநீரகப் பழுது கண்டுபிடிக்கப்பட்டநிலையில் கடற்கரும்புலிகள் அணிக்கு மாற்றலாகி திருகோணமலையில் கடற்படைக்கலம் மீது தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் மயூரனாக வீரச்சாவடைந்தான்.


இப்போது கரும்புலிகள் அணியின் ஆண் போராளிகள் சென்றது விடுதலைப் புலிகளின் ஆட்லறிப் படையணிக்கு. ஓயாத அலைகள் மூன்றின் அடுத்த கட்டம் நாம் எதிர்பார்த்ததைப் போல் மணலாற்றுப் பகுதியைக் கைப்பற்றவோ வவுனியாப் பகுதியைக் கைப்பற்றவோ நடக்கவில்லை. மாறாக ரணகோச மூலம் படையினர் கைப்பற்றியிருந்த பகுதிகளைக் கைப்பற்றும் நடவடிக்கையாக அமைந்திருந்தது. பள்ளமடு, பெரியமடு, தட்சனாமருதமடு, மடு, பண்டிவிரிச்சான் உட்பட பெருமளவு மன்னார் மாவட்ட நிலப்பகுதி மீட்கப்பட்டது. இந்தச் சண்டையின்போது கரும்புலிகள் எமது ஆட்லறிப் படையணியினரோடு இணைந்து பணியாற்றினார்கள்.


ஓயாத அலைகள் மூன்று தொடங்கியபோதே இயக்கத்தின் ஆட்லறிப் படையணியின் விரிவாக்கம் போராளிகளால் உணரப்பட்டது. அதுவரை இயக்கம் எதிரியிரிடமிருந்து கைப்பற்றிய ஆட்லறிகள் மூன்று மட்டுமே. அவற்றின் தூரவீச்சு ஏறக்குறைய 17 கிலோ மீற்றர்களுக்கே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஓயாத அலைகள் மூன்றின்போது கரும்புலிகள் திருத்தம் சொல்லிக் கொடுக்க நடத்தப்பட்ட தாக்குதலின்போதே இயக்கம் ஆட்லறிகளின் எண்ணிக்கையை அதிகரித்திருந்தது உணரப்பட்டது. அத்தோடு தூரவீச்சுக் கூடிய ஆட்லறிகளும் பயன்பாட்டிலுள்ள என்பதையும் உணர முடிந்தது. இப்போது மன்னார்ப்பகுதிச் சண்டையின்போது கரும்புலியணிகளும் சில ஆட்லறிகளைப் பொறுப்பெடுத்துத் தாக்குதல் நடத்தியமை, இயக்கத்தின் ஆட்லறிப்பெருக்கத்தை எமக்குக் கோடிட்டுக் காட்டியது. வன்னியின் தென்பகுதிச் சண்டைகள் முடிந்து வடபகுதிநோக்கி ஓயாத அலைகள் வீசத் தொடங்கியபோது ஆட்லறிப்படையணி பெருமளவு போராளிகளைக் கொண்டு பாரிய கட்டமைப்பாக வளர்ந்திருந்தது.


மன்னார்ப்பகுதிச் சண்டைகள் ஓய்வுக்கு வந்து கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகள் பலப்படுத்தப்பட்டன. அணிகள் பழையபடி தளத்துக்குத் திரும்பியிருந்தன. வன்னியெங்கும் வெற்றி விழாக்கோலமாகவே இருந்தது. மன்னார்ப்பகுதி மீட்பின்போது மடுத்தேவாலயக் குண்டுவீச்சில் நாற்பத்திரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்ட சோகம் நடந்தேறியது. இந்தப் பகுதிகளில் நடந்த சண்டைகளிலும் எதிரி விரைவாகவே ஓட்டமெடுக்கத் தொடங்கியதால் மிகவிரைவாகவும் இலகுவாகவும் வெற்றிகள் கிடைத்தன. நவம்பர் மாதம் இறுதிப்பகுதியில் தள்ளாடி இராணுவ முகாமைச் சூழவுள்ள பகுதிகளில் நடந்த மோதல்களோடு சண்டை ஓய்வுக்கு வந்திருந்தது.


அடுத்தகட்டம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. எமது எதிர்பார்ப்பு மணலாற்றுப்பகுதியை மீட்பதாகவே அமையுமென்று இருந்தது. அதற்கேற்றாற்போல் மணலாற்றுப்பகுதியில் வேவுப்பணிகளும் நடந்துகொண்டிருந்தன. கரும்புலிகள் தொடர்ந்தும் பயிற்சியிலீடுபட்டார்கள். கடற்பயிற்சியை முடிக்காதவர்கள் மீளவும் கள்ளப்பாட்டில் கடற்பயிற்சியை முடித்தார்கள். வெளியே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியாமல் கடுமையான பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். மணலாற்றிலே தொடர்ந்தும் வேவு நடந்துகொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தோம். மணலாற்றை மீட்பது பற்றியே எமது பேச்சும் சிந்தனையுமிருந்தது.


அவ்வாண்டுக்கான மாவீரர் நாளுக்கு முள்ளியவளை துயிலுமில்லம் சென்றோம். அம்மாவீரர்தினம் வழமையைவிட சிறப்பாக இருந்தது. ஏனென்றால் வன்னிப்பகுதியின் முழு மாவீரர் துயிலுமில்லங்களும் எம்மால் விடுவிக்கப்பட்டிருந்தன. மிகப்பெரும் வெற்றியின் மேல்நின்று அந்த மாவீரர்நாள் நினைவுகூரப்பட்டது.  துயிலுமில்லம் வந்த ஏனைய படையணிப் போராளிகளோடு கலந்துரையாடி விடைபெற்றோம். எங்குமே பயிற்சிகள்தாம் நடந்துகொண்டிருந்தன. லெப்.மயூரன் பதுங்கிச் சுடும் அணியின் இரண்டாவது தொகுதிக்கான பயிற்சிகள் தொடங்கியிருந்தன. கவசப் படையணி, சிறப்பு ஆயுதப் படையணிகள் புத்துருவாக்கம் பெற்று மிளமைக்கப்பட்டன.


இயக்கத்தின் அடுத்தகட்டம் யாழ்ப்பாணமாகவே இருந்தது. சுண்டுக்குளம் கடற்கரை வழியாக வெற்றிலைக் கேணி, கட்டைக்காடு போன்ற தளங்கள் மீது தாக்குதலை நடத்தி வடபகுதி மீதான ஓயாத அலைகள் அடிக்கத் தொடங்கியது. சண்டை தொடங்கிய நாளிலிருந்தே கரும்புலிகளின் அணிகள் தொடர்ச்சியாக சண்டையில் பங்குபற்றியிருந்தன. மூன்று, நான்கு பேர் கொண்ட அணிகளாக ஊடுருவி எதிரியின் பின்தளங்களுக்கான ஆள்கூறுகளையும் ஆட்லறி எறிகணைகளுக்கான திருத்தங்களையும் சொல்லி அவற்றை நிர்மூலமாக்குவதே கரும்புலிகளின் பணியாகவிருந்தது. வன்னிப் பகுதியில் நடந்த சண்டைகள் போலன்றி இந்த நடவடிக்கையில் கரும்புலிகள் பலர் வீரச்சாவடைந்தனர்.


கட்டைக்காடு, வெற்றிக்லைக்கேணி, பரந்தன் போன்ற தளங்கள் வீழ்ச்சியடைந்தபின்னர் சண்டை சற்றுத் தேங்கியிருந்தது. ஆனையிறவின் பின்பக்கமாக ஊடுருவி ஆனையிறவுத் தளத்தைத் தனிமையாக்கும் இரு முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் சிலகாலம் சண்டைக்களம் இருதரப்பினதும் தற்பாதுகாப்பான சமர்க்களமாக மாறியிருந்தது.


இந்நிலையில்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கம் திட்டமிடப்பட்டது. அதேவேளையில் பளையிலிருந்த எதிரியின் ஆட்லறித்தளத்தைத் தாக்கியழிக்கவும் திட்டமிடப்பட்டது. ஆட்லறித் தளத்தைத் தாக்கியழிக்கும் பணி கரும்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


-தொடரும்


- இளந்தீரன் -

களங்கள் - 14. ஓயாத அலைகள் மூன்று

Tuesday, June 15, 2010 / No Comments

 07/11/1999

அதிகாலை வேளையில் மல்லாவிக்கு நாம் விரைந்தோம். அங்குத்தான் கரும்புலி மேஜர் அருளனின் குடும்பத்தினர் இருந்தனர். ஓர் ஓலைக்குடிசையில் தங்கியிருந்த அக்குடும்பத்தில் அருளனின் தாயும் தங்கையும் மட்டுமே இருந்தனர். வழமைபோலன்றி இம்முறை கரும்புலிகளின் வித்துடல்களைக் கொண்டுவந்து வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மழைக்காலமாகையால் அந்த வளவு சேறாகியிருந்தது. முற்றத்தில் பந்தல்போட்டு அருளனின் வித்துடல் வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான போராளிகளும் பொதுமக்களும் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர்.


அருளன் பற்றி ஏற்கனவே இத்தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்டளவில் எனக்கு மிகமிக நெருங்கிய ஒருவராயிருந்தார். சிலமாதங்களே பழகியிருந்தாலும் நாம் மிகநெருக்கமாக ஒன்றித்திருந்தோம். கலை, இலக்கியம் தொடர்பாகவும் போராட்டத்துக்கு வெளியேயான பொதுவிடயங்கள் குறித்தும் கதைக்க என்னிடமும் அவரிடமும் பொதுவான விடயங்கள் பலவிருந்தன. நிறைய வாசிப்பும், எதையும் ஆவலோடு அறிந்துகொள்ளும் துடிப்பும் அவரிடமிருந்தன.  இவரது மிகைதிறன் காரணமாக இம்ரான்-பாண்டியன் படையணியில் மாதந்தோறும் நடத்தப்படும் பொது அறிவுப் போட்டியில் பங்குபற்றாமலிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டார் என்பது இவரது பரந்த அறிவுக்கு ஓர் எடுத்துக்காட்டு. (தொடர்ச்சியாகப் பரிசு வென்ற காரணத்தால் வேறும் சிலர் இவ்வாறு போட்டியில் பங்குபற்றாமலிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்).


கரும்புலி மேஜர் சசி, மாலதி படையணியிலிருந்து கரும்புலியணிக்கு வந்து சேர்திருந்தா. சிறிய உருவம், ஆனால் மிகுந்த செயல்திறன் அவவிடமிருந்தது. ஏற்கனவே மாலதிபடையணியின் சிறப்பு அதிரடிப்படைப் பயிற்சியைப் பெற்றிருந்த காரணத்தால் நீச்சல் பயிற்சியுட்பட அனேகமாக சிறப்புப் பயிற்சிகளை மிக இலகுவாகவே செய்து முடித்தா. அதிலும் நீச்சலில் மிகத்திறமையாகச் செயற்பட்டா. யுத்தநிறுத்த காலத்தில் வெளிநாட்டு ஊடகவியலாளர் தயாரித்த ஓர் ஆவணப்படத்தில் கரும்புலி மேஜர் சசியின் தாயார் செவ்வி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அருளனும் சசியும் கரும்புலியாகப் போய் நடத்தவிருந்த முதல் தாக்குதல் நடக்கவேயில்லை. இடையிலேயே எதிரியின் தாக்குதலில் அவர்கள் வீரச்சாவடைந்துவிட்டனர். ஆனாலும் அவர்கள் தாக்குதல் நடத்தவென இருந்த இலக்கு பின்னர் வேறொரு நாளில் கரும்புலிகள் அணியின் துணையோடு தாக்கி நிர்மூலமாக்கப்பட்டது.


கரும்புலி மேஜர் அருளின் குடும்பத்தினர் இருந்த இடத்திற்கு அருகில்தான் கிளி ஃபாதர் என அழைக்கப்படும் அருட்தந்தை கருணாரத்தினம் அடிகளார் இருந்தார். (பின்னர் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.) ஏற்கனவே அவரோடு எமக்குப் பரிச்சயமிருந்தது. குறிப்பாக அவரை எனக்கு யாழ்ப்பாணத்திலேயே பழக்கமிருந்தது. நானும் செல்வனும் கிளி ஃபாதரைப் போய்ப் பார்த்தோம். மிகுந்த உற்சாகத்தோடு ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தார்.  களத்திலே எமது வெற்றிகள் அவருக்கு அளவிலா மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்திருந்தது.


போராளிகளின் நலன் பற்றி அக்கறையோடு விசாரித்தார். களமுனைப் போராளிகளுக்கான உலருணவுச் சேகரிப்பில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். காயக்காரரைப் பராமரிக்கும் ஒழுங்கு, இரத்ததானம் வழங்க ஆட்களை ஏற்பாடு செய்தல் என்று எல்லாவற்றிலும் அவரின் ஈடுபாடும் உழைப்புமிருந்தது. நாங்கள் ஏதோ களமுனையிலிருந்து வந்ததுபோல் நினைத்துக்கொண்டு எம்மிடம் பலவிடயங்கள் விசாரித்தார். ஆனால் உண்மையில் கிளி ஃபாதர் போய்ப்பார்த்த களமுனைகளைக்கூட நாம் எட்டியும் பார்க்கவில்லை. ஒட்டுசுட்டான் வீழ்ந் மறுநாட்காலையே சிவிலுடையில் சென்று ஒட்டுசுட்டான் முகாமைப் பார்வையிட்டு வந்தவர், பின்னரும் கரிபட்டமுறிப்பு, மணவாளன்பட்டமுறிப்பு, ஒலமடு, மாங்குளம், கனகராயன்குளம் என அனைத்து முகாம்களையும் போய்ப்பார்வையிட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறார். அதுவும் கனகராயன்குள வெடிபொருட்களஞ்சியம் எரிந்துமுடியுமுன்பேயே போர்ப்பார்த்தவர்களுள் இவரும் ஒருவர். நாங்கள் இன்னும் அந்தப்பக்கம் கூட எட்டிப்பார்க்கவில்லை. இருந்தாலும் சில கதைகளைச் சொல்லிச் சமாளித்தோம்.


அன்று காலையிலிருந்துதான் புலிகளின் குரலில் வவுனியாப் பகுதி மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு நகரும்படி அறிவுறுத்தல் விடுக்கப்படத் தொடங்கியது. நாங்கள் கிளி ஃபாதரோடு கதைத்துக் கொண்டிருந்தபோதும் அந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மக்களனைவரும் இயக்கம் வவுனியாவை அடித்துப் பிடிக்கப் போவதாகவே கதைத்துக் கொண்டிருந்தார்கள். எங்களோடு சொர்ணம் அண்ணன் கதைத்ததன்படி மணலாற்றுப்பகுதியைத்தான் நாம் அடுத்ததாக மீட்கப்போகிறோமென நினைத்திருந்தோம். அன்றைய நாளில் எதுவுமே சாத்தியமானது என்றே எல்லோரும் நம்பினர். ஏனென்றால் மிகமிகப் பலமான தளங்களெல்லாம் மிகச்சில நாட்களுள் வீழ்ந்ததுடன், மிகப்பெரும் நிலப்பரப்பும் எம்மால் மீட்கப்பட்டிருந்தது.


அறிவித்தலைக் கேட்டுக் கொண்டிருந்த ஃபாதர் சொன்னார், “உது ஆமியைக் குழப்பிறதுக்காகத்தான் இருக்கும். நாங்கள் பிடிக்க வேண்டிய இடங்கள் வேற”.


“ஓம் ஃபாதர். ஆனா இண்டையில் நிலையில எதையும் சொல்ல ஏலாது.”


“இல்லைத்தம்பி, அவன் வவுனிக்குள எதிர்க்கரை வரைக்கும் வந்து நிக்கிறான். இப்படியே விட்டிட்டு கண்டிறோட்டாலை நாங்கள்  ஆழமாகப் போனால் எங்களுக்குத்தான் ஆபத்து. முதலில மேற்கு வன்னியையும் மீட்டு பக்கவாட்டு ஆபத்துக்களைக் களைஞ்சு கொண்டுதான் நாங்கள் மேற்கொண்டு போகவேணும்.”


எமக்கு மேற்குவன்னி பற்றி தோன்றவேயில்லை. எங்கள் எண்ணமெல்லாம் மணலாறு மீதுதான் இருந்தது. ஆனால் ஃபாதர் சொல்வதும் சரியாகத்தான் இருந்தது. இப்போது கண்டிவீதிக்கு ஒருபக்கமாக எதிரி எமக்குப் பக்கவாட்டாகத்தான் நிற்கிறான். அதுவும் முழுமையான படைப்பலத்தோடுதான் நிற்கிறான். இருந்தும் நாங்கள் மேற்கொண்டு இதுதொடர்பாக எதுவுமே கதைக்கவில்லை. எமக்கும் நேரமாகிவிட்டமையால் ஃபாதரிடம் விடைபெற்றுக்கொண்டுக் கிளம்பினோம். அருளனின் வீட்டுக்கு வந்து எல்லோருடனும் சேர்ந்து புறப்பட்டோம்.


மாலையில் புறப்பட்ட நாம் புதுக்குடியிருப்புக்கு வந்துசேர இருட்டிவிட்டது. கரும்புலி மேஜர் சசியின் குடும்பத்தினர் புதுக்குடியிருப்பில்தான் இருந்தனர். இதுவும் ஓர் ஓலைக்குடிசைதான். சசிக்கு தங்கைகள் மூவரும் தம்பி ஒருவனும் இருந்தனர். எல்லோரும் அன்போடு எம்மை வரவேற்றனர். நீண்டநேரம் அவர்களோடு இருந்து கதைத்துவிட்டு இரவு கரைச்சிக் குடியிருப்புத் தளத்துக்குத் திரும்பினோம்.


அன்றிரவே, கரும்புலி அணியைச் சேர்ந்த ஆண் போராளிகள் அனைவரையும் புறப்படும்படி அறிவுறுத்தல் வந்தது. இரவிரவாகவே அனைவரும் புறப்பட்டனர். ஆனால் இம்முறை ஊடுருவல் நடவடிக்கையில்லை. வேறொரு பணி காத்திருந்தது அவர்களுக்கு.

 

தொடரும்...

களங்கள் - 13. ஓயாத அலைகள் மூன்று

Tuesday, June 8, 2010 / No Comments

 06/11/1999


விடிந்துவிட்டது. எட்டுமணிக்குள் எல்லோரையும் புறப்படத் தயாராகும்படி அறிவித்தல் வந்தது. பக்கத்திலிருந்த இரண்டு வீடுகளைப் பயன்படுத்திக் கொண்டோம். ஏழுமணிக்கே காலையுணவுக்குரிய பொதிகள் வந்துவிட்டன. எல்லாம் முடித்துவிட்டு எட்டுமணிக்குள் எல்லோரும் தயாராகியிருந்தோம். நாமிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஒரு வீட்டுக்கு எல்லோரையும் வரும்படி அழைப்பு வந்தது. எல்லோரும் அங்குச் சென்றபோது தளபதிகள், கடாபி அண்ணையும் சொர்ணம் அண்ணையும் எமக்காகக் காத்திருந்தனர்.


கரும்புலி அணியினர் அமர்ந்திருக்க நாமெல்லாம் சுற்றி நின்றுகொண்டோம். சொர்ணம் அண்ணன்தான் முதலில் கதைத்தார். ஓயாத அலைகள் மூன்று வெற்றிகரமாக நடந்துகொண்டிருப்பதையும், இது தொடர்ந்தும் நடைபெறப்போகும் ஓர் இராணுவ நடவடிக்கையென்பதையும் தெளிவுபடுத்தினார். இதுவரை கிடைத்த வெற்றிக்கு ஏற்கனவே ஊடுருவியிருந்த கரும்புலியணிகள் எவ்வளவு முக்கிய பங்காற்றினர் என்பதையும் மேலோட்டமாகத் தெரிவித்தார். உண்மையில் இவ்வளவு வேகமாக நிலங்கள் மீட்கப்படுமென்ற எதிர்வுகூறல் இயக்கத்திடம் இருக்கவில்லை என்பதை சொர்ணம் அண்ணையின் பேச்சில் அறிய முடிந்தது. எதிரிக்குத் திகைப்பாகவும் எமக்கு வியப்பாகவும் அமைந்திருந்தது அந்த வெற்றி.


தொடர்ந்து நடக்கப்போகும் சமர்பற்றியும் கரும்புலியணிகளின் பங்கு என்னவென்றும் மேலோட்டமாக ஒரு திட்டத்தை விளங்கப்படுத்தினார் சொர்ணம் அண்ணன். கண்டிவீதியிலே ஓமந்தை வரை கைப்பற்றப்பட்ட பின்பு எமது முன்னணிக் காப்பரண் வரிசை நேர்கோடாக இருக்கப்போவதில்லை. மன்னார்க்கரைப் பக்கமாகவும் மணலாற்றுக் கரைப்பக்கமாகவும் இராணுவத்தினர் மேவி நிற்க, நாம் இடையிலே ஊடுருவி நிற்பதுபோன்றே களநிலைவரம் அமையப் போகிறது. எனவே மணலாற்றுப்பக்கத்தில் இராணுவத்தினரை ஒதுக்கிப் பின்தள்ளி ஒரு நேர்கோடாக எமது காப்பரண் வரிசையை அமைத்துக் கொள்வது முதற்கட்டம். அதன் தொடர்ச்சியாக, எதிரியை இன்னும் பின்னுக்குத் தள்ளி கொக்குத்தொடுவாய் நீரேரியின் மறுபக்கத்துக்குத் துரத்திவிடுவது அடுத்த கட்டம். அப்படி நடக்கும் பட்சத்தில் நீரேரியைக் கடந்து எதிரி முன்னேற்ற முயற்சி செய்யும் சாத்தியக்கூறுகள் குறைவு என்பதோடு, எமது பகுதிகளைக் காப்பதும் இலகுவாக அமையும்.


இந்த மணலாற்று மண்ணை மீட்கும் அடுத்தகட்ட நகர்வுக்கு எஞ்சியிருக்கும் கரும்புலியணிகள் முழுமையாக இறக்கப்படப் போகின்றன, அதேநேரம் ஏற்கனவே ஊடுருவியிருக்கும் அணிகளும் வெளியேற்றப்பட்டு தேவைக்கேற்ப புதிய களமுனைக்கு அனுப்பப்படும் எனவும் சொர்ணம் அண்ணன் திட்டத்தை விளக்கினார். இத்திட்டத்தின்படி மணலாற்றுக் காட்டில் இருக்கும் எதிரியின் முக்கிய தளங்களான கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை, பராக்கிரமபுர போன்ற தளங்களுள் கரும்புலிகள் ஊடுருவி எமது ஆட்லறிகளின் உதவியோடு அத்தளங்களைத் தாக்கியழிக்க வேண்டுமென்பது அடிப்படைத் திட்டமாக அமைந்திருந்தது.


ஊடுருவலும் நகர்வுகளும் முன்பைப் போல் இலகுவாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால் ஏற்கனவே சண்டை தொடங்கிவிட்டபடியாலும் இராணுவத்தினர் காடுகள் வழியே சிதறுண்டு அலைவதாலும் எமது அணிகள் எதிரியிடம் முட்டுப்படாமல் நகர்வதென்பது சிரமமானதே. அத்தோடு, சிலோன் தியேட்டர், கென்ற்பாம், டொலர்பாம் என்பன கைப்பற்றப்பட்டதால் மணலாற்றுப்பகுதி முன்னணிக் காப்பரண்களும் முதன்மைத் தளங்களும் முழுமையான எச்சரிக்கையோடு இருந்தன. எனவே நகர்வுகள் அவதானமாக அமையவேண்டுமென சொர்ணம் அண்ணன் குறிப்பிட்டார். விளக்கமான திட்டமும் அறிவுறுத்தல்களும் கடாபி அண்ணை தருவார் என்றுகூறி அவர் தனது விளக்கத்தை முடித்துக் கொண்டார்.


கடாபி அண்ணன் கதைத்தபோது விளக்கமாக எதையும் குறிப்பிடவில்லை. தொடர்ந்து நடக்கப்போகும் எமது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக, எதிரியின் ஆட்லறித் தளங்களைச் செயலிழக்கச் செய்யும் பணியை கரும்புலிகள் செய்ய வேண்டுமெனக் குறிப்பிட்டு மிகுதி விளங்கங்கள் பிறகு அளிக்கப்படுமெனச் சொல்லி முடித்துக் கொண்டார்.


இதற்கிடையில், கரும்புலியணியில் இருந்த பெண்போராளியான மாதவி அக்காவின் அண்ணன், முதல்நாள் நடந்த மோதலில் வீரச்சாவடைந்திருந்தார். இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றி அவர் வீரச்சாவடைந்திருந்தார். எனவே மாதவி அக்காவை அந்த நடவடிக்கையிலிருந்து நிறுத்தி வைக்கும்படி அறிவித்தல் வந்திருந்தது. ஆனாலும் தான் நிற்கப்போவதில்லை, இந்தச் சமர் முடியும்வரை நான் வீட்டுக்குப் போகப்போவதில்லை என்று மாதவி அக்கா பிடிவாதமாக நின்றிருந்தா. அன்று கடாபி அண்ணன் மாதவி அக்காவோடு நீண்டநேரம் கதைத்து அவவை அந்நடவடிக்கையிலிருந்து நிறுத்திவைத்தார்.


அன்று மதியமே நாங்கள் வேறிடம் சென்றோம். அது எவ்விடம் எனச் சரியாகத் தெரியாவிட்டாலும் ஓயாத அலைகள் மூன்றில் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதியே அது. கடாபி அண்ணனின் கட்டளைப் பணியகமும் எமது ஆட்லறி நிலைகளும் அவ்விடத்திலேயே இருந்தன. அன்று பிற்பகல் நடவடிக்கையில் ஈடுபட்ட கரும்புலியணிகள் அங்கே வந்து சேர்ந்தனர். எல்லோரையும் மகிழ்ச்சியோடு கட்டித் தழுவிக் கொண்டோம். எவருமே எதிர்பாராத பெரியதொரு திகைப்பை எதிரிக்குக் கொடுத்து பெருவெற்றிபெற உறுதுணையாய்ச் செயற்பட்ட அந்த வெற்றிவீரர்கள் மிகவும் களைத்திருந்தார்கள். கடந்த ஒரு கிழமையாக சரியான தூக்கமின்றி ஓட்டமும் நடையுமாகவே அவர்கள் காலம் கழிந்திருந்தது. சோபிதனுடைய முழங்கையில் (பின்னர் கரும்புலி மேஜர் சோபிதனாக யாழ்ப்பாணத்தில் வீரச்சாவு) எறிகணைச் சிதறுதுண்டொன்று கீறிச் சென்றதைத் தவிர வேறு எந்தச் சேதமுமில்லை. மயூரன் (கடற்கரும்புலி மேஜர் மயூரனாக வீரச்சாவு) மிகவும் சோர்ந்து போயிருந்தான். கால்கள் இரண்டும் பெரிதாக வீங்கியிருந்தன. முகம் அதைத்திருந்தது. அவனால் ஒழுங்காக நடக்கமுடியவில்லை.


எல்லோரோடும் கடாபி அண்ணை கதைத்துவிட்டு அன்றிரவே முல்லைத்தீவுக்குப் புறப்படும்படி சொன்னார். எல்லோரையும் அருளன், சசி ஆகியோரின் வீடுகளில் நடக்கும் வீரச்சாவு நிகழ்வுகளுக்குச் செல்லும்படியும் அறிவுறுத்தினார். எமக்குத் திகைப்பாக இருந்தது. ஏனென்றால், அன்றுகாலையில்தான் மணலாற்றுப்பகுதி முழுவதையும் மீட்கப்போவதாகவும், ஒருநிமிடமும் ஓய்வின்றி எல்லோரும் உழைக்க வேண்டுமென்றும்  சொர்ணம் அண்ணன் கதைத்திருந்தார். ஆனால் இப்போது கரும்புலி அணி முழுவதையுமே வீரச்சாவு நிகழ்வுகளுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.


எதையும் கேட்காமல் ஏறிக்கிளம்பினோம். இரவு கரைச்சிக் குடியிருப்பு வந்துசேர்ந்து மறுநாள் அதிகாலையே ஒரு கன்ரர் வாகனத்திலும் ஒரு றோசா பஸ்ஸிலும் எல்லோரும் புறப்பட்டோம்.

 

- தொடரும் 


- இளந்தீரன் -

களங்கள் - 12. ஓயாத அலைகள் மூன்று

Tuesday, June 1, 2010 / No Comments

வோக்கியை ஓடவிட்டு ஒட்டுக் கேட்டதில் வன்னியில் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பலவிடங்கள் மீட்கப்பட்டதாக அறிந்தோம். ஆனால் அதை உண்மையென்று நம்புமளவுக்கு நாம் இருக்கவில்லை. இவ்வளவு விரைவாக இந்த இடங்கள் அடுக்கடுக்காக வீழ்ந்ததை யாராலும் நம்ப முடியவில்லை. ஆனாலும் நாம் கேட்டுக் கொண்டிருந்த குரலுக்குரியவர்கள் களமுனையில் நிற்கும் தளபதிகள் என்பதையும் மறுக்க முடியவில்லை.


அப்போது நாம் இருந்தது கற்சிலைமடு – ஒட்டுசுட்டான் வீதியிலிருந்து சற்று உள்ளே ஒரு மாந்தோப்பில். ஏறக்குறை 25 பேர் வரையில் இருந்தோம். அன்று பகல் அருளனையும் சசியையும் இழந்த தாக்கத்திலிருந்து நாங்கள் முற்றாக மீண்டிருக்கவில்லை. இருந்தபோதும் இந்தக் களமுனைத் தகவல்கள் ஒருவித பரபரப்பை எம்மிடையே விதைத்திருந்தது. என்ன நடக்கிறதென்று அறியும் ஆவலை அடக்க முடியவில்லை.



இனியும் பொறுத்திருக்க முடியாதென்று நானும் செல்வனும் வீதிக்கரைக்குச் சென்றோம். அவ்வழியால் செல்லும் தெரிந்தவர்களோடு கதைத்தால் ஓரளவு விடயங்கள் தெரியவருமென்பது எம் எண்ணம். அவ்வப்போது இயக்க வாகனங்கள் போய்வந்தனவேயன்றி யாரும் நின்று கதைப்பதாகத் தெரியவில்லை. அப்போது தோழில் வானொலிப்பெட்டியைக் கொழுவியபடி ஒருவர் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். வானொலியில் புலிகளின்குரல் ஒலிபரப்பு போய்க்கொண்டிருந்தது. வன்னியில் வானொலிப்பெட்டியைத் தோளில் கொழுவியபடி சைக்கிளால் செல்லும் அனேகமானவர்களைக் காணலாம். அதை றேடியோ என்றுகூடச் சொல்வதில்லை, பாட்டுப்பெட்டி என்றுதான் சொல்வதுண்டு.


பாட்டுப் பெட்டியுடன் போய்க்கொண்டிருந்த ஐயாவை மறித்தோம். ஐயாவுக்கு எம்மைவிட ஓரளவு விடயங்கள் அதிகமாகத் தெரிந்திருந்தது. அம்பகாமம், கரிப்பட்டமுறிப்பு, மணவாளன்பட்ட முறிப்பு ஆகியவிடங்களில் நடந்த சண்டைகளில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்களை மேளிவனத்தில் (ஒட்டுசுட்டான் – மாங்குள வீதியிலிருக்கும் ஒரு கிராமம்) கொண்டு வந்து சேர்ப்பதாக ஐயா சொன்னார். அதைவிட கரிப்பட்ட முறிப்பு முகாம் கைப்பற்றப்பட்டுவிட்டதெனவும் ஐயா சொன்னார்.


கரிப்பட்ட முறிப்பு விழுந்தது எப்பிடி உங்களுக்குத் தெரியும்?


‘புலிகளின் குரலில சொன்னது தம்பி. அதுமட்டுமில்லை கென்ற்பாம், டொலர்பாம், சிலோன்தியேட்டருகளும் விழுந்திட்டுதாம்.’


சிலோன்தியேட்டர் எங்க கிடக்கு, கரிப்பட்ட முறிப்பு எங்க கிடக்கு? நீங்கள் ஏதோ மாறிச் சொல்லிறியள் போல கிடக்கு…’


‘தம்பி எனக்குத் தெரியும் உந்த இடம் வலமெல்லாம். ஒதியமலைதான் என்ர சொந்த இடம். அங்காலப்பக்கமும் சண்டை நடக்குது, இஞ்சாலப் பக்கமும் சண்டை நடக்குது. அனேகமா நாளைக்கு விடியவே கனகராயன்குளமெல்லாம் விழுந்திடும்.


நாங்கள் வோக்கியில் கேட்டதைப்போல்தான் ஐயாவின் கதையிருந்தது. கென்ற்பாம், டொலர்பாம், சிலோன் தியேட்டர் பகுதிகள் விழுந்ததாக ஐயா சொல்வது எமக்கு இன்னும் ஐயத்தை ஏற்படுத்தியது. அப்பகுதிகள் கிட்டத்தட்ட சிங்களமக்களின் நிலப்பகுதி என்று எமது மனதில் பதியும்வண்ணம் நீண்டகாலத்தின் முன்பே பறிக்கப்பட்டுவிட்ட பகுதிகள். முன்னேறி நின்ற இராணுவத்தினரைத் தாக்குவதாக நாம் கருதிக்கொண்டிருந்த வேளையில், மிக நீண்டகாலத்தின்முன்பே, எமது இயக்கம் ஒரு கரந்தடிக் குழுவாக இருந்த காலத்திலேயே பறிக்கப்பட்ட நிலப்பகுதிகள் சில எம்மால் மீட்கப்பட்டதாக ஐயா சொல்வதை உடனடியாக நம்ப முடியவில்லை.


ஐயாவை சைக்கிளை விட்டு கீழே இறக்கினோம். நான் வானொலியை வாங்கிக் கொண்டேன். புலிகளின் குரலின் சிறப்பு ஒலிபரப்பு போய்க்கொண்டிருந்தது. எப்படியும் அடிக்கடி சிறப்புச் செய்திகள் சொல்லிக் கொண்டிருப்பார்கள். செய்தியைக் கேட்டுவிட்டு ஐயாவை அனுப்புவோம் என்று முடிவெடுத்தோம். ஐயாவும் சம்மதித்தார். தான் சொன்ன செய்தியை நாங்கள் நம்பவில்லை என்பதை ஐயா அறிந்திருந்தார்.


பத்து நிமிடத்திலேயே புலிகளின் குரலின் சிறப்புச் செய்தி வந்தது. ஆம்! நாம் கேள்விப்பட்டதெல்லாம் செய்தியாகச் சொல்லப்பட்டது. சுருக்கமாக இரண்டு நிமிடங்கள் மட்டுமே போகும் அந்தச் செய்தியில் இதுவரை கைப்பற்றப்பட்ட இடங்கள் சொல்லப்பட்டன. தொடர்ந்தும் சண்டை நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. இறுதியில் இதுவரை இச்சமரில் நூறு வரையான மாவீரர்கள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று சொல்லி அச்செய்தி முடிவடைந்தது.


‘தம்பி, உவ்வளவு இடங்களும் பிடிபட்டதை நம்பிறம். ஆனால் வீரச்சாவு எண்ணிக்கைதான் நம்பேலாமல் கிடக்கு. உதுகளை ஏன்தம்பி மறைக்க வேணும். இயக்கம் ஒருக்காலும் இப்பிடிச் செய்யிறேல.’


சொல்லிவிட்டு ஐயா புறப்பட்டார். நாம் மீண்டும் ஆவலாக மாந்தோப்புக்கு ஓடிவந்தோம் செய்தியை மற்றவர்களிடம் சொல்ல. புலிகளின் குரலில் இவ்வளவு இடங்களும் சொன்னார்கள் என்று நாம் சொன்னபோதுதான் மற்றவர்களும் முழுமையாக நம்பினார்கள்.


ஐயா குறைபட்டதுபோல் வீரச்சாவு எண்ணிக்கையென்பது நம்ப முடியாததாகவே இருந்தது. இராணுவம் ஆயிரத்தையும் தாண்டிய எண்ணிக்கையில் மாண்டிருக்க, பல்லாயிரம் படையினரைக் கொண்டு பாதுகாக்கப்பட்ட பெரும் படைத்தளங்கள் கைப்பற்றப்பட்டிருக்க, எமது தரப்பில் நூறுபேர் தான் வீரச்சாவென்று அறிவிப்பது நம்பமுடியாமலேயே இருக்கும். ஆனால் உண்மை அதுதான். நம்பவே முடியாத அளவில் எமது தரப்பில் இழப்புக்கள் மிகமிக அரிதாகவே நிகழ்ந்தன. அதற்குப் பல காரணங்கள் உண்டு.


என்றுமில்லாத வகையில் இயக்கம் கனரக ஆயுதங்களையும் எறிகணைகளையும் பயன்படுத்தியது. சண்டையணிகள் சிறுரக ஆயுதங்களால் நேரடியாகச் சண்டைசெய்த சந்தர்ப்பங்களும் நேரங்களும் குறைவாகவே இருந்தன. எதிர்ப்பு கடுமையாக வருகிறதென்றால் உடனேயே அணிகளைப் பாதுகாப்பாக நிலையெடுக்கவிட்டுவிட்டு எதிரிமீது சரமாரியான எறிகணைத் தாக்குதலைச் செய்வது, விழும் எறிகணைகளுக்கான திருத்தங்களை களமுனையிலிருக்கும் அணித்தலைவர்களைக் கொண்டு பெற்றுக் கொண்டு துல்லியமான தாக்குதலைச் செய்வது. பின்னர் அணிகள் முன்னேறித் தாக்கி இடங்களைக் கைப்பற்றும். அந்தச் சமரில் சண்டையணிகள் முன்னணி அவதானிப்பாளரின் பணிகளையே அதிகம் செய்தன என்றால் மிகையில்லை. அதேநேரம் மிகக்கடுமையான சமர்கள் ஒட்டுசுட்டான், கரிப்பட்டமுறிப்புத் தளங்களைக் கைப்பற்ற நடந்தன என்பதும் உண்மை.


ஓயாத அலைகள் மூன்று சமரில் இயக்கம் புதியதொரு தந்திரத்தையும் கையாண்டது. சிறப்புப் பயிற்சி பெற்ற பதுங்கிச் சுடும் அணிகளை முன்னணிச் சண்டையணிகளோடு களமிறக்கியது. லெப்.மயூரன் பதுங்கிச் சுடும் அணி என்று ஒரு சிறப்பு அணி உருவாக்கப்பட்டிருந்தது. இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமான இந்த அணியின் முதலாவது தொகுதி தமக்கான சிறப்புப் பயிற்சியை நிறைவு செய்த சிலநாட்களுள் ஓயாத அலைகள் மூன்று சமர் தொடங்கிவிட்டது. அவ்வணி அப்படியே இரு தொகுதிகளாக களத்தில் இறக்கப்பட்டது. ஓயாத அலைகள் மூன்று சமரென்பது பரவலாக இறங்கித் தாக்குதல் நடத்தாமல் ஓரிடத்தில் எதிரியின் காப்பரண் வரிசையை உடைத்து, பின்னர் ஒவ்வொரு காப்பரணாகக் கைப்பற்றியபடி செல்வதாகவே இருந்தது. அவ்வாறு ஒவ்வொரு காப்பரணாகக் கைப்பற்றிச் செல்லும் நகர்வில் பதுங்கிச் சுடும் அணியின் பங்கு அளப்பரியதாக இருந்தது என்பதோடு சண்டையை இழப்புக்களின்றி நடத்தவும் உதவியது.


இவற்றைவிட, பின்தளங்களில், குறிப்பாக வினியோகத் தளங்களிலும் ஆட்லறித் தளங்களிலும் கரும்புலிகள் ஊடுருவி எமது ஆட்லறிப்படையணியின் துணையோடு நடத்திய தாக்குதல்கள் பெருவெற்றியை ஈட்டித்தந்தன. கிட்டத்தட்ட எதிரியின் முக்கிய ஆட்லறி நிலைகள் அனைத்துமே செயற்படமுடியாத நிலைக்குள் கரும்புலிகளாலும் எமது ஆட்லறிப்படையணியாலும் முடக்கப்பட்டிருந்தன. எமது தரப்பு இழப்புக்கள் குறைவாக இருந்தமைக்கு இதுவும் ஒரு காரணம்.


05/11/1999


இருட்டிவிட்டது. இதுவரை எமது அடுத்தகட்டம் என்ன என்பது சொல்லப்படவில்லை. இரவு சாப்பாடு வந்ததும் பகிர்ந்து உண்டுவிட்டு காவற்கடமைக்கு ஆட்களை ஒழுங்கமைத்துவிட்டு எல்லோரையும் படுத்து ஓய்வெடுக்கச் சொன்னோம். பைரவன் ஒருபக்கத்தில் இன்னமும் வோக்கியை ஓடவிட்டுக் கேட்டுக் கொண்டேயிருந்தார். எம்மால் ஒட்டுக்கேட்க முடியாத தூரத்துக்குக் களமுனை நகர்ந்துவிட்டதை ஊகிக்க முடிந்தது. பின்தள, வினியோகக் கட்டளைபீடங்களின் உரையாடல்களே எமக்குக் கேட்டன.


06/11/1999


விடிந்துவிட்டது. எட்டுமணிக்குள் எல்லோரையும் புறப்படத் தயாராகும்படி அறிவித்தல் வந்தது. பக்கத்திலிருந்த இரண்டு வீடுகளைப் பயன்படுத்திக் கொண்டோம். ஏழுமணிக்கே காலையுணவுக்குரிய பொதிகள் வந்துவிட்டன. எல்லாம் முடித்துவிட்டு எட்டுமணிக்குள் எல்லோரும் தயாராகியிருந்தோம். நாமிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஒரு வீட்டுக்கு எல்லோரையும் வரும்படி அழைப்பு வந்தது. எல்லோரும் அங்குச் சென்றபோது தளபதிகள், கடாபி அண்ணையும் சொர்ணம் அண்ணையும் எமக்காகக் காத்திருந்தனர்.


-தொடரும்


- இளந்தீரன் -

களங்கள் - 11. ஓயாத அலைகள் மூன்று

Tuesday, May 25, 2010 / No Comments

 03/11/1999


இப்போது நாம் கரைச்சிக் குடியிருப்பில்தான் இருந்தோம். அன்று பகல் முல்லைத்தீவு நகர்ப்பகுதிக்குச் சென்று வந்திருந்தேன். மக்களெல்லோரும் உற்சாகமாக இருந்தார்கள். களமுனைப் போராளிகளுக்கு உணவுப்பொதிகள் திரட்டுவது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, எல்லைப்படையினராக, உதவியாளராக மக்கள் களமுனைப்பணிகளுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். எல்லாமே ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில் நிகழ்ந்துகொண்டிருந்தன. அப்போது புலிகளின் குரல் வானொலி தனது ஒலிபரப்பு நேரத்தை அதிகரித்திருந்தது. களமுனைத் தகவல்களை இயன்றளவுக்கு உடனுக்குடன் தெரிவித்துக் கொண்டிருந்தது. இனிமேல் என்ன செய்வது, எல்லாமே முடிந்துவிடும் போலுள்ளதே என்று இரு நாட்களுக்கு முன்புவரை அங்கலாய்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு இது எதிர்பாராத பெருமகிழ்ச்சி.


நாமும் களமுனையில் என்ன நடக்கிறதென்று அறிய பலவழிகளின் முயன்றோம். ஆனால் சரியான தொடர்புகள் தெரிந்த பொறுப்பாளர்கள், தளபதிகளைத் தொடர்பெடுத்தாலும் எவரும் எமது தொடர்புக்கு வரவில்லை. ஒட்டுசுட்டான் களமுனையிலிருந்த இம்ரான்-பாண்டியன் படையணியினரையும் சமரில் ஈடுபடுத்தியதால் அவர்களின் தொடர்புமில்லை. வோக்கியில் ஓடவிட்டு ஒட்டுக் கேட்கும் தூரவீச்சையும் தாண்டி களமுனை நகர்ந்துவிட்டதால் அதுவும் சாத்தியப்படவில்லை. நாமும் மக்களைப் போலவே புலிகளின்குரல் வழியாக மட்டுமே களநிலைமைகளை அறியக்கூடியதாகவிருந்தது.


அன்றிரவு எமக்கு அறிவித்தல் வந்து சேர்ந்தது. ஏற்கனவே பராக்கிரமபுர இராணுவத் தளத்திலிருந்த ஆட்லறிகளைத் தகர்க்கவென தயாராகியிருந்த கரும்புலிகள் அணியைக் கொண்டு அதே தளத்தின்மீது தாக்குதல் நடத்துவதாக அத்திட்டம் இருந்தது. அருளன் தலைமையிலான அந்த அணி அடுத்தநாள் புறப்படுவதாகத் திட்டம். மீளவும் திட்டம் நினைவுபடுத்தப்பட்டு அன்றிரவு சிறிய பயிற்சியொன்றும் நடைபெற்றது. இப்போது அந்த அணியில் மேலதிகமாகவும் ஆட்கள் இணைக்கப்பட்டனர். மூன்றாம் தொகுதியைச் சேர்ந்த பெண் கரும்புலிகள் சிலர் இந்த அணியோடு இணைக்கப்பட்டு தாக்குதலணி சற்றுப் பெருப்பிக்கப்பட்டது. ஏற்கனவே சண்டை தொடங்கிவிட்டதால், கைவிடப்பட்ட இடங்களிலிருந்து ஓடிய இராணுவத்தினர் பராக்கிரமபுர இராணுவத்தளத்தை அடைந்திருப்பர். ஆகவே அதிக ஆட்பலத்தோடு அம்முகாம் இருக்கும். அதைவிட ஓயாத அலைகள் மூன்று தொடர்வதால் எதிரி எச்சரிக்கையாகவே இருப்பான். அதைவிட நகர்வுப்பாதையிலேயே எதிரியோடு மோதவேண்டிய சூழலும் தற்போது உருவாகியுள்ளது. எனவேதான் அதிகபலத்தோடு அணியை அனுப்ப வேண்டிய தேவையிருந்தது.


04/11/1999


அன்று பகல் முழுவதும் அணிகள் நகர்வதற்கான ஆயத்தப்பணிகள் நடந்தன. புதிதாக இணைக்கப்பட்டவர்களுக்கான திட்ட விளக்கம் கொடுக்கப்பட்டு அவர்கள் தயார்ப்படுத்தப்பட்டார்கள். கரும்புலிகளின் மூன்றாம் தொகுதியைச் சேர்ந்த சசி GPS கருவியோடு வழிகாட்டியாக இணைக்கப்பட்டார். ஏற்கனவே வேவு பார்க்கப்பட்ட வழியாக இம்முறை நகர்வு இருக்கப்போவதில்லை. களநிலைமைகளும், களமுனைகளும் மாறிவிட்டன. இம்முறை நைனாமடுவழியாக நகர்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது கைப்பற்றப்பட்ட நெடுங்கேணி வரை வாகனத்திலேயே சென்று அதன்பின்னர் காட்டுக்குள்ளால் நகர்வதாகத் திட்டம் சொல்லப்பட்டது.


தாக்குதலுக்கான கரும்புலி அணியைத் தவிர மற்றவர்களும் சேர்ந்து புறப்படுவதாகத் திட்டம். கரும்புலி அணிகள் எல்லாமே களத்தில் இறங்குவதால் நிர்வாகத் தளத்தை முன்னகர்த்த வேண்டிய தேவையிருந்தது. எனவே நெடுங்கேணிப்பகுதியில் நிர்வாகத் தளத்தை தற்காலிகமாக நிறுவுவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தளத்திலிருந்த அனைவருமே தேவையான பொருட்களுடன் நகர்வதுதான் திட்டம்.


அன்று மாலையே எல்லோரும் தயாராகிவிட்டனர். ஆனாலும் இருட்டும்வரை இருந்துவிட்டு பின்னர் புறப்பட்டோம். ஓர் உழவு இயந்திரத்திலும் ஒரு பிக்கப் வாகனத்திலும் எமது பயணம் தொடங்கியது. முள்ளியவளை வந்து பின்னர் ஒட்டுசுட்டான் வழியாக நெடுங்கேணி போவதே திட்டம். முள்ளியவளை – நெடுங்கேணி பாதையைப் பயன்படுத்தலாமென திட்டம் முன்வைக்கப்பட்டாலும். அது பாதுகாப்பில்லையென்ற காரணத்தால் கைவிடப்பட்டது. முள்ளியவளை – ஒட்டுசுட்டான் பாதையில் குறிப்பிட்ட தூரத்துக்கப்பால் எல்லாமே வெறிச்சோடியிருந்தது. இருட்டிலே எமது உழவியந்திரமும் பிக்கப் வாகனமும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தன. இரண்டு மூன்றிடத்தில் நின்று நின்றே பயணித்தோம். நாம் சென்ற பாதையில் இராணுவக் காப்பரண் இருந்த இடத்தையடைந்தபோது விடியத் தொடங்கியிருந்தது. எதிரியின் வாகனக் கண்ணிவெடியில் சிக்கிய பாரவூர்தியொன்று பாதைக்கரையில் சிதைந்திருந்ததைத் தூரத்திலேயே பார்த்தோம். முதல்நாள் மதியம் அவ்வழியால் வினியோகத்தில் ஈடுபட்டிருந்த பாரவூர்தியே அது.


05/11/1999


நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதாக எமக்குச் சொல்லப்பட்டிருந்தது. எனினும் எச்சரிக்கையாக அனைவரும் இறங்கி நடந்தே அவ்விடத்தைக் கடந்தோம். ஓட்டுநர்கள் மட்டுமே வாகனத்தைச் செலுத்தி அவ்விடத்தைக் கடந்தார்கள். பிறகு மீளவும் ஏறி நெடுங்கேணி நோக்கி எமது பயணம் தொடர்ந்தது.


இடையில் ஒட்டுசுட்டான் சிவன் கோவிலடியில் நின்றோம். அவ்விடத்திலே பொதுமக்கள் சிலர் போய்வரும் போராளிகளுக்கு தேனீர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த அதிகாலைக் குளிரில் சுடச்சுட அவர்கள் தந்த தேனீர் அருமையாக இருந்தது. மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்கள். களநிலைவரம் பற்றி எங்களிடம் விடுத்து விடுத்துக் கேட்டார்கள். ‘எங்களுக்கென்ன தெரியும்? நாங்களும் உங்களைப் போலத்தான். புலிகளின் குரலைக் கேட்டு அறியிறம்’ என்று சொன்னால் அவர்கள் நம்பத் தயாரில்லை. எமது வீரர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் – குறிப்பாக LAW (கவச எதிர்ப்பு ஆயுதம்) போன்றவை, நாம் சிறப்பு அணியென்பதை அவர்களுக்கு உணர்த்தியது.


பதினொரு மாதங்களின்பின்னர் ஒட்டுசுட்டான் எங்கள்வசம் வந்திருந்தது. புதிதாகக் கைப்பற்றப்பட்ட அந்த மண் பெரியளவில் மாறியிருக்கவில்லை. ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியில் விடுப்புப் பார்க்கப் புறப்பட்டவர்களை கலைத்துக் கலைத்து வாகனத்தடிக்கு இழுத்து வந்தார் சசிக்குமார் மாஸ்டர். சண்டை நடந்த இடங்களைப் பார்ப்பதும், நாம் வெற்றிவாகை சூடிய சமர்க்களத்தில் உலாவுவதும் எல்லோருக்கும் விருப்பமானதுதான். ஆனால் நாம் புறப்பட வேண்டியிருந்தது.


மக்களிடமிருந்து விடைபெற்று நெடுங்கேணி நோக்கி எமது பயணம் தொடர்ந்தது. ஒட்டுசுட்டான் – நெடுங்கேணிப் பாதையில் இடையிடையே அமைக்கப்பட்டிருந்த மினிமுகாம்களைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. இப்போது அவற்றிலிருந்து பொருட்களும் ஆயுதங்களும் அள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. இறந்த இராணுவ வீரர்களின் உடல்களைப் பொறுக்கி வாகனத்தில் ஏற்றிச் செல்லும் பணியிலும், ஆயுத தளபாடங்களை ஏற்றிச் செல்லும் பணியிலும் போராளிகளுக்கு பொதுமக்கள் உதவிக் கொண்டிருந்தனர். ஒட்டுசுட்டானைத் தாண்டியபின் வந்த மினிமுகாம்களில் பெரிய சண்டைகள் நடந்த அடையாளங்கள் காணப்படவில்லை.


நெடுங்கேணியை அடைந்துவிட்டோம். அங்கே ஏற்கனவே பெரிய கட்டளைமையமொன்று செயற்பட்டுக் கொண்டிருந்தது. தளபதி சொர்ணம், தளபதி ஜெயம் உட்பட வேறு தளபதிகளும் பொறுப்பாளர்களும் அங்கே இருந்தனர். அவர்களுக்குச் சற்று எட்டவாக நாம் நின்றோம். அங்கிருந்து கரும்புலி அணிகள் தமது நகர்வைத் தொடங்க வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டபடி பராக்கிரமபுர இராணுவத்தளத்தின் மீது இவ்வணி தாக்குதலை நடத்தவேண்டும். சிலவேளை எமது ஆட்லறிகளால் அத்தளம் தாக்கப்படுவதும் அதற்குரிய முன்னணி அவதானிப்பாளர்களாக கரும்புலி அணியினர் இலக்கின் அருகிலிருந்து செயற்பட வேண்டி வரலமென்பதும் ஓர் உபதிட்டமாக இருந்தது. பராக்கிரபுர இராணுவத்தளத்தை எமது ஆட்லறி எறிகணைகள் எட்டும் தூரத்துள் எமது ஆட்லறிகள் நகர்த்தப்பட்டு நிலைப்படுத்தப்பட்டால் இரண்டாவது திட்டமே நடைமுறைப்படுத்தப்படும். எதைச் செய்யவேண்டுமென்று அணிகளுக்கு இறுதிநேரத்தில் சொல்லப்படும். ஆனால் ஏற்கனவே திட்டமிட்டதுபோல் ஒரு முழு அளவிலான அதிரடித் தாக்குலுக்கு ஏற்றாற்போலவே அணிகள் நகரத் தொடங்கின.

அன்று மதியம்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. எமது இரு கரும்புலிவீரர்களை நாம் இழந்ததோடு அந்தத் தாக்குதல் திட்டமும் முற்றாகக் கைவிடப்பட்டது. எதிரியின் தாக்குதலில் கரும்புலி மேஜர் அருளனும் கரும்புலி மேஜர் சசியும் வீரச்சாவடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அணிகள் பின்னோக்கி நகர்த்தப்பட்டன. நெடுங்கேணியிலிருந்தும் பின்வாங்கி கற்சிலைமடுவிலே தற்காலிகமாக அன்று முழுவதும் தங்கினோம். அருளனதும் சிசியினதும் இழப்பு எல்லோரையும் பாதித்திருந்தது. இருவருமே மிகமுக்கியமான ஆளுமைகள். அதைவிட குறிப்பிட்ட தாக்குதல் திட்டமும் கைவிடப்பட்டது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அந்தத் தாக்குதல் திட்டம் முழுவதும் அருளனது தலைமையிலேயே நடப்பதாக இருந்தது.

கற்சிலைமடுவில்  அன்று மாலையும் இரவும் கழிந்தது. அப்போது மீண்டும் வோக்கியை ஓடவிட்டு ஒட்டுக் கேட்கத் தொடங்கினோம். அதுவரை களநிலைவரம் பற்றி எமக்குப் பெரிதாக எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஒட்டுசுட்டானும் நெடுங்கேணியும் கைப்பற்றப்பட்டதோடு நிற்பதாகவே கருதியிருந்தோம். ஆனால் வோக்கியை ஓடவிட்டுக் கேட்டதில் நிலைமை தலைகீழாக இருந்தது. கடும் சண்டை நடப்பதற்கான சத்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன. இடங்களும் இராணுவத் தளங்களும் எங்கள் வசம் வீழ்ந்துகொண்டிருப்பதாகவும் எதிரி ஓடிக்கொண்டிருப்பதாகவும் விளங்கிக் கொள்ள முடிந்தது. அதைவிட இடங்களின் பெயர்களை வெளிப்படையாகச் சொல்லியே கதைக்கப்பட்டது. அம்பகாமம் விழுந்தது, மணவாளன்பட்டமுறிப்ப, கரிப்பட்டமுறிப்பு, ஒலுமடு விழுந்தது. இன்னும் பல இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவைகள் விழுந்துவிட்டதாக வோக்கியில் கதைக்கப்பட்டது. எங்களில் யாருமே நம்பவில்லை. அன்று பொழுதுபட மாங்குளம் சந்தியும் விழுந்ததாகக் கதைத்தார்கள். அப்போது நாங்கள் பகிடி விடத் தொடங்கினோம்.

‘டேய் பைரவன், உது உங்க முத்தையன்கட்டு பாவலன் வெட்டைக்க ரீம் ட்ரெய்னிங் எடுக்குது. நீ அதைப்போய் சண்டைக்காரரின்ர ஸ்டேசன் எண்டு வேலை மினக்கெட்டு கேட்டுக் கொண்டிருக்கிறாய்’  - இது நரேஸ் அண்ணா. பயிற்சிகளின்போது இவ்வாறு இடங்களின் பெயர்களை வைத்துப் பயிற்சி செய்வதுண்டு. உண்மையில் அவ்வாறு நினைக்கும்படியாகத்தான் நிலைமைகள் இருந்தன. இவ்வளவு இடங்களும் ஏதோ பேருந்து நடத்துனர் கூவி ஆட்களைக் கூப்பிடுவதைப் போல வீழ்ச்சியடைந்தது என்பது எவராலும் நம்ப முடியவில்லை. ஆனால் கேட்ட சில குரல்கள் ஏற்கனவே அறிமுகமான தளபதிகள் சிலரின் குரல்கள் என்பதிலும் ஐயமில்லை. உண்மையில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கம் புதிராகவே இருந்தது.


- இளந்தீரன் -