களங்கள் - 16. ஓயாத அலைகள் மூன்று
ஓயாத அலைகள் மூன்று யாழ் குடாநாட்டை நோக்கியத் திரும்பியபின்னர் சண்டைக்களங்கள் உக்கிரமடைந்தன. வன்னியில் நடைபெற்ற சண்டைகளில் சிலவிடங்களில் மட்டுமே எதிரி கடுமையான எதிர்ப்பைக் காட்டியிருந்தான். ஆனால் வடபகுதிச் சண்டைக்களத்தில் ஒவ்வோர் அங்குலத்தையும் கடும் சண்டையிட்டே கைப்பற்ற வேண்டியிருந்தது. எதிரி மிகச் செறிவாக இருந்தது மட்டுமன்றி, மிகப்பாதுகாப்பான முறையில் தளங்களைக் கட்டமைத்திருந்தான். வன்னியில் எதிரியின் காப்பரண் வரிசையை உடைத்துப் பலவழிகளில் ஊடுருவித்தாக்கியதால் தளங்களைக் கைவிட்டு ஓடுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ஆனால் வடபோர் முனையில் அவ்வாறு பலவழிகளால் ஊடுருவித் தாக்குதல் நடத்துமளவுக்கு நிலைமை இருக்கவில்லை.
இந்நிலையில் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு படைத்தளங்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலோடு வடபோர்முனைக் களம் திறக்கப்பட்டது. தொடர்ந்து பரந்தன் தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு அத்தளம் கைப்பற்றப்பட்டது. பரந்தன் தளம் மீதான தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. எதிரிக்கு முன்னரே அறிவித்தல் கொடுத்து, பட்டப்பகலில் வலிந்த தாக்குதலை நடத்தி அத்தளம் கைப்பற்றப்பட்டது. தளபதி தீபன் அவர்களின் நெறிப்படுத்தலில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. அந்நேரத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் கனரகப் போராயுதக் கையாள்கையில் திறம்படத் தன்னை வளர்த்திருந்தது. ஆட்லறிகளைக் கொண்டு நேரடிச்சூடுகளை வழங்குதல், பின்னுதைப்பற்ற எறிகணை செலுத்திகளைக் கையாளல், கவசப்படையணியைக் கொண்டு தாக்குதல் நடத்தல், விமானஎதிர்ப்புக்குரிய கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி நேரடிச் சூடுகளை வழங்குதல் என பலவழிகளிலும் நேரடிச்சூட்டுத் திறனை வளர்த்திருந்தது. அந்தத் திறனைப் பரந்தன் தளம் மீதான தாக்குதலுக்கு உச்ச அளவில் பயன்படுத்தி இயக்கம் வெற்றிகண்டது.
வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, பரந்தன் போன்ற முதன்மைத் தளங்களும் அவற்றைச் சூழவிருந்த சிறுதளங்கள் சிலவும் கைப்பற்றப்பட்ட நிலையில் சண்டைக்களம் சற்று மந்தமடைந்திருந்தது. ஆனையிறவைக் காப்பாற்ற என்னவிலையும் கொடுக்கும் நிலையில் அப்போது சிறிலங்கா படைத்தரப்பு இருந்தது. ஆனையிறவுக்குப் பின்புறமாக ஊடுருவி யாழ்ப்பாணத்துக்கும் ஆனையிறவுக்குமான வினியோகத் தொடர்பைத் துண்டிக்கும் நோக்குடன் நடத்தப்பட்ட இரு நடவடிக்கைகள் பல்வேறு காரணங்களால் வெற்றியளிக்கவில்லை. இயக்கச்சியை அண்டிய பகுதியில் இந்த ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் சிலகாலம் எந்தவித முன்னேற்ற முயற்சியுமின்றி சண்டைக்களம் மந்தமடைந்திருந்தது. இருதரப்பும் எறிகணைத் தாக்குதல்களிலும் பதுங்கிச் சுடும் தாக்குதல்களிலும் ஈடுபட்டிருந்தன.
இந்நிலையில் தலைமையின் எண்ணத்துக்கிணங்க வேறு முனைகளில் வேவுப்பணிகள் தொடங்கப்பட்டிருந்தன. கடற்புலிகளின் பக்கத்தாலும் கரும்புலிகளின் பக்கத்தாலும் வெவ்வேறு வேவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கரும்புலிகளுக்குரிய வேவுஅணி பளை ஆட்லறித்தளத்தை வேவுபார்த்துக்கொண்டிருந்தது. அவ்வணியில் கரும்புலி வீரர்கள் சிலரும் சென்று வந்தனர். பளை என்ற பட்டினம் ஆனையிறவுக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையில் இருக்கும் ஓரிடம். இதிலே கண்டி வீதிக்கு அண்மையில் சிறிலங்கா இராணுவத்தினரின் பாரிய ஆட்லறித்தளமொன்று அமைந்திருந்தது. ஆனையிறவுக்குப் பின்புறமாகப் பார்த்தால் அதிகளவில் ஆட்லறிகளைக் கொண்ட தளம் இதுவேதான். இத்தளத்தை ஊடுருவித் தாக்கியழிக்கும் நோக்கத்தோடே வேவு பார்க்கப்பட்டது. ஓயாத அலைகள் மூன்றின் முதற்கட்டத்தில் நடந்தது போன்று எமது ஆட்லறி எறிகணைகளைக் கொண்டு எதிரியின் ஆட்லறிகளைத் தாக்குவதும் அதற்கு கரும்புலிகள் எறிகணைத் திருத்தங்களைச் சொல்வதும் என்பதன்றி, கரும்புலிகள் நேரடியாகச் சண்டைபிடித்துத் தளத்தைக் கைப்பற்றி அங்கிருக்கும் ஆட்லறிகளை குண்டு வைத்துத் தகர்க்க வேண்டும்.
மறுபுறத்திலே பாரிய தரையிறக்கத்துக்கான வேவுகளும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. சண்டையணிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் தரையிறக்கம் பற்றிய விடயங்கள் எவையும் கரும்புலியணிக்குத் தெரிந்திருக்கவில்லை; அதுபோல் தரையிறக்கத்தோடு தொடர்புடையவர்களுக்கு பளை ஆட்லறித் தகர்ப்புப் பற்றித் தெரிந்திருக்கவில்லை.
வேவுத் தரவுகளின்படி மாதிரி முகாம்கள் அமைத்துப் பயிற்சிகள் தொடங்கப்பட்டன. வேவுக்குச் சென்று வந்தவர்களின் தகவல்களின்படி ஆட்லறி முகாமை நெருங்குவது கடினமாக இருக்கப்போவதில்லை என்பது தெளிவாகியது. முகாமினுள் நுழைந்து ஆட்லறிகளின் எண்ணிக்கை தொடர்பாக துல்லியமான வேவுகள் பார்க்கப்படவில்லை என்றபோதும் அத்தளத்தின் மீதான தாக்குதலைத் தொடங்குவது வரை எதிரியின் கண்ணிற்படாமல் நகர்ந்துவிட முடியுமென்று புலப்பட்டது. ஆட்லறிகளைத் தகர்ப்பதற்கான வெடிபொருட்கள் சரிபார்க்கப்பட்டு அவற்றைக் கொண்டு பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பதினொரு பேர்கொண்ட கரும்புலியணியும் மேலதிகமாக வேவுப்புலிகள் இருவரும் கொண்ட அணியே இத்தாக்குதலுக்கென தயார்ப்படுத்தப்பட்டது. பின்னாளில் வேறொரு சண்டையில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மன் தான் அத்தாக்குதலுக்கான அணிக்குத் தலைமை தாங்கினார்.
இந்தத் திட்டத்தில் எதிரியின் ஆட்லறிகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவதும் பரிசீலிக்கப்பட்டது. முதலில் தளத்தைத் தாக்கிக் கைப்பற்றுவது, பின்னர் நிலைமையைப் பொறுத்து ஆட்லறிகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவதாக அவற்றைத் தகர்த்துவிட்டு வெளியேறுவதா என்பதை முடிவெடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. ஏற்கனவே கரும்புலிகள் அனைவரும் ஆட்லறிப் பயிற்சியைப் பெற்றிருந்ததோடு சண்டைக்களத்தில் ஆட்லறியைப் பயன்படுத்தியிமிருந்தார்கள்.
கரும்புலிகளின் பயிற்சிகள் முடிக்கப்பட்டு நடவடிக்கைக்காக அவர்கள் முல்லைத்தீவிலிருந்து வெற்றிலைக்கேணிக்குப் புறப்பட்டார்கள். வெற்றிலைக்கேணியை அடையும்வரை யாருக்குமே தரையிறக்கம் பற்றிய விபரம் தெரிந்திருக்கவில்லை. தரையிறக்கம் நடப்பதற்கு இருநாட்களின் முன்பேயே கரும்புலியணி நகரத் தொடங்கிவிட்டது. அதுவொரு இரகசிய நகர்வு. கடற்புலிகளின் உதவியோடு மாமுனைக் கடற்பரப்பில் 25/03/2000 அன்று கரும்புலியணி இறக்கிவிடப்படுகிறது. நீந்திக் கரைசேர்ந்தவர்கள் பளை ஆட்லறித் தளத்தை நோக்கி நகர்கிறார்கள். ஏற்கனவே திட்டமிட்டபடி குறிப்பிட்ட இடத்தையடைந்து பற்றைக்குள் மறுநாட் பகலைக் கழிக்கிறார்கள். மீண்டும் அன்றிரவு நகர்வைத் தொடங்குகிறார்கள். அன்றிரவே கடல்வழியாக எமது படையணிகள் தரையிறக்கத்தை மேற்கொள்கின்றன.
26/03/2000
எதிர்பார்த்தபடியே எந்தவிதச் சிக்கலுமின்றி கரும்புலிகள் ஆட்லறித் தளத்தை அண்மித்து நிலையெடுக்கின்றன. எதிரியின் முன்னணிக் காப்பரணிலிருந்து 50 மீற்றர் வரை மிகக்கிட்டவாக நகர்ந்து நிலையெடுத்த நிலையில் சண்டையைத் தொடங்க ஆயத்தமாகியபோத காவலரணிலிருந்த இராணுவத்தினன் அசைவைக் கண்டுவிட்டான். எதிரியின் துப்பாக்கியே முதலில் சண்டையைத் தொடக்கியது. ஆனாலும் கரும்புலியணி சுதாரித்துக் கொண்டு ஆவேசமாகத் தாக்குதலை நடத்தி அக்காப்பரண் வரிசையைக் கைப்பற்றியது. எதிரியின் தாக்குதல் தொடங்கியவுடன் கரும்புலி மேஜர் சுதாஜினியின் ஒரு ‘LAW’ ஆயுதம் காப்பரணைத் தாக்கியது. ஆனால் எதிரியின் தாக்குதலில் அவள் அந்த இடத்திலேயே வீரச்சாவடைந்தாள்.
ஏனையவர்களின் தாக்குதலில் எதிரி சிதறியோடினான். அச்சண்டைக்கு கரும்புலி மேஜர் நித்தி ஒரு PK ஆயுதத்துடன் சென்றிருந்தான். நித்தியின் PK அச்சண்டையில் கதறியது. எதிரி தாக்குதல் நடத்தி சில கணங்களுக்குள் கரும்புலிகள் முகாமுக்குள் பாய்ந்திருந்தனர். என்ன நடக்கிறதென்று எதிரி சுதாரிப்பதற்குள்ளேயே சில காப்பரண்கள் கரும்புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. ஏனைய இராணுவத்தினர் சண்டையை எதிர்கொள்ளாமலேயே ஓடிவிட்டார்கள். கரும்புலிகளுக்கான எதிர்ப்புக்கள் பலமாக இருக்கவில்லை. உடனடியாகவே பாதுகாப்புக்குச் சிலரை விட்டுவிட்டு, ஏனையோர் சில ஆட்லறிகளைக்கொண்டு சில எறிகணைகளை ஆனையிறவு, இயக்கச்சிப் பகுதிநோக்கி ஏவினர்.
பதினொரு பேர்கொண்ட அணியில் சுதாஜினி ஏற்கனவே வீரச்சாவு என்றநிலையில் அணியை வழிநடத்திக்கொண்டிருந்த வர்மன் கையில் காயமடைந்தார். எனவே அதிகளவில் ஆட்லறிகளைப் பயன்படுத்தவோ அதிகளவில் எறிகணைகளைக் கொண்ட தாக்குதல் நடத்த்வோ முடியவில்லை. அத்தளத்திலிருந்த பதினொரு ஆட்லறிகள் முழுமையாகவே கரும்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தன. இரண்டு ஆட்லறிகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்திக்கொண்டு மிகுதியை ஒவ்வொன்றாகத் தகர்க்கும் முடிவை எடுக்கிறார்கள். அப்போது கட்டளைப்பீடத்தோடு முழுமையான தொடர்பிலேயே இருந்ததால் எல்லாமே நிதானமாக கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டன. கொண்டுபோன வெடிபொருட்களைப் பொருத்தி ஆட்லறிகளை ஒவ்வொன்றாகத் தகர்க்கத் தொடங்கினார்கள் கரும்புலிகள். அதேவேளை ஆட்லறி எறிகணைச் சேமித்து வைத்திருந்த சிறு களஞ்சியங்களையும் வெடிக்கவைத்தார்கள். அவ்வாறு ஓர் களஞ்சியத்தை வெடிக்கவைத்து அழிக்கும்போது கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான்.
கரும்புலிகள் ஆட்லறிகளைத் தகர்த்துக் கொண்டிருந்த வேளையில் மறுபுறத்தில் எமது படையணிகள் குடாரப்பில் தரையிறங்கி இத்தாவில் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன. ஒருகட்டத்தில் அனைத்து ஆட்லறிகளையும் தகர்த்துவிட்டு அணியைப் பாதுகாப்பாக வெளியேறிவரும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதன்படியே காயப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு கரும்புலிகள் அணி வெற்றிகரமாக வெளியேறியது. வெளியேறி வரும்வழியில் அதிகாலையில் இடையிலே இராணுவத்தினரோடு எதிர்பாராத சண்டையும் நடந்தது. அதையும் முறியடித்து கரும்புலியணியைச் சேர்ந்த எஞ்சியவர்கள் வெற்றிகரமாக வெளியேறி வெற்றிலைக்கேணியில் எமது கட்டளைப்பணியகம் வந்து சேர்ந்தார்கள். வெற்றிகரமாக நடத்தப்பட்ட அந்த ஆட்லறித்தளத் தகர்ப்பில் கரும்புலிகள் இருவர் வீரச்சாவடைந்திருந்தனர். மிகக் குறைந்த இழப்போடு வெற்றிகரமான ஒரு தாக்குதலை நடத்தி பதினொரு ஆட்லறிகளைத் தகர்த்து முடித்துத் திரும்பியிருந்தனர் கரும்புலிகள்.
**************************************************************
ஓயாத அலைகள் மூன்றில் வடமுனையில் நடைபெற்ற சமர்களில் கரும்புலிகள் பலர் வீரச்சாவடைந்தனர். ஆனையிறவிற்குள்ளும், இயக்கச்சியை பகுதிகளுக்குள்ளும், பலாலி, சாவகச்சேரி, வரணி போன்ற பகுதிகளுள்ளும் ஊடுருவி எமது ஆட்லறிகளுக்கான அவதானிப்பாளராகச் செயற்பட்டு கரும்புலிகள் பலர் வீரச்சாவடைந்தனர். அவர்கள் ஊடுருவுவதற்கான வழிகள் இலகுவாக இருக்கவில்லை. ஊடுருவும் வழிகளிலேயே சிலர் வீரச்சாவடைந்தனர். கடல்வழி ஊடுருவல்களும் வெளியேறல்களும் எப்போதுமே கடினமானவையாகவே இருந்தன. இருந்தாலும் தொடர்ந்தும் அவர்கள் முயற்சித்தார்கள். தொடர்ந்தும் ஊடுருவித் தாக்குதல் நடத்தினார்கள். எதிரியின் பின்னணித் தளங்களை முடக்கியதில் கரும்புலிகளின் பங்கு மிக முக்கியமானது.
ஓயாத அலைகள் நான்கின்போது கரும்புலி லெப்.கேணல் பூட்டோ தனியொருவனாக செய்த சாதனைகள் கற்பனைக்கும் எட்டாதவை. தனியொரு மனிதாக எதிரியின் நெஞ்சுக்கூட்டுக்குள் கலக்கிக்கொண்டிருந்தவன். உள்நுழைந்த பூட்டோவைக் கொல்வதற்கென்றே தனியொரு அணி களமிறக்கிவிடப்பட்டது என்பதே அவனின் செயற்றினைச் சொல்லப் போதுமானது. எதிரி பல்குழற்பீரங்கிகளைக் கொண்டு நெருப்புமழை பொழிந்துகொண்டிருந்த நேரத்தில் அப்பீரங்கி வண்டியொன்றை தனது துல்லியமான திருத்தங்கள்மூலம் தாக்கியழித்து எதிரிக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்திருந்தான்.
இவ்வாறாக ஓயாத அலைகள் மூன்று படைநடவடிக்கையில் கரும்புலிகளின் பங்கு மிகப்பெருமளவுக்கு வியாபித்திருக்கிறது. அது தொடர்பான அனுபவப் பகிர்வை வழங்கிக் கொண்டிருந்த இத்தொடர் இத்தோடு நிறைவுபெறுகிறது. இதிலே நிறைய விடயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. அவற்றோடு தொடர்புடையவர்களின் இன்றையநிலையைக் கருத்திற்கொண்டே அவை தவிர்க்கப்பட்டுள்ளன.
இத்தொடரோடு தொடர்ந்துவந்த அனைவருக்கு நன்றி.
-முற்றும்.
- இளந்தீரன் -
No Comment to " களங்கள் - 16. ஓயாத அலைகள் மூன்று "