News Ticker

Menu
Previous
Next

Latest Post

அன்பரசன்

மறவன்

சங்கிலியன்

சுவடுகள்

வெள்ளிவலம்

Recent Posts

May 18: பத்து ஆண்டுகளை கடந்து ……

Saturday, May 25, 2019 / No Comments
தமிழ் மக்கள் தமது தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற அடிப்படை கோட்பாடுகளை முன்வைத்து நகர்ந்த, ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டத்தின் முடிவில், பலத்த அழிவையும் இழப்பையும் சந்தித்தபோதும், அந்த போராட்டத்தின் நியாயப்பாடுகளையும் அதன் நோக்கத்தையும் தேவையையும் வலியுறுத்தியதாக அதன் பின்னான பத்து ஆண்டுகளின் முடிவில் தமிழர் தேசம் நிற்கின்றது.

எதிரியை விட பல மடங்கு குறைவான சனத்தொகை, அதிலிருந்து உருவான படைப்பலம், சர்வதேச நாடுகளின் ஆதரவற்ற நிலை என்ற பின்னனியில் - உலகத்தின் உச்சமான தியாகங்களின் அடித்தளத்தில் கட்டப்பட்டதாக, பலமான போராட்டமாக கட்டி வளர்த்த போராட்டத்தின் முடிவென்பது, விமர்சனங்களுக்குஅப்பால் தமிழர் தரப்பில் அனைவரையும் கவலைகொள்ளச் செய்தது.ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களின் தியாகங்களையும் இரண்டு இலட்சம் வரையான பொதுமக்களின் இழப்புகளையும் சந்தித்த பின்னரும், இன்னமும் எஞ்சியவர்களின் அடிப்படையான வாழ்வாதாரங்களை கூட, செப்பனிடாத நிலையில், பெரும்பாலான மக்களின் வாழ்நிலை உள்ளபோதும் உரிமைக்கான போராட்டத்தின் அசைவு நின்று விடவில்லை.

அந்த வகையில்தான் 2009 இல் நிகழ்ந்த பேரழிவின் பின்னரும் தமிழ்மக்களின் உரிமைக் கோரிக்கையை வலியுறுத்தி, சலுகை அரசியலுக்கு விலைபோகாமல் உரிமை அரசியலுக்காக, தமது வாக்குகளை வழங்கி தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தமது தேசிய சக்தியாக இனங்காட்டினர்.

பேரழிவின் பின்னர் மகிந்தவின் வெற்றிவாத அரசாட்சியின் நெருக்குதலின் மத்தியிலும், உரிமைக்காக குரல் எழுப்பிய தமிழ் மக்களின் தலைமை பொறுப்பை ஏற்ற தமிழர் தலைமை தனது கடப்பாடுகளை சரி செய்ததா?

தேசம் தேசியம் என்ற எண்ணக்கரு

தமிழ் மக்கள் தம்மை ஒரு தேசமாக சிந்திக்கின்ற கூட்டு உணர்வு என்பது இலங்கைத் தீவிலே இரண்டு இனங்கள் சந்தோசமாக நீடித்த அமைதியுடன் வாழ்வதற்கான அடிப்படையை கொண்டது. அதுவே அதற்கான அடித்தளத்தை உருவாக்கும். எனவே அந்த நிலையை ஏற்படுத்துவதற்காக தமிழர் தலைமை அகத்திலும் புறத்திலும் அதற்கான சிந்தனை தளத்தில் வேலை செய்யவேண்டும். அதற்கான அர்ப்பணிப்பை வெளிக்காட்டியிருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு மாறாக "நாங்கள் ஒன்று"“எமக்கான அடையாளம் ஒன்று” எமக்கான கொடி ஒன்று" என்ற அடிப்படையில் "சிறிலங்கர்களாக" வாழத்தான் தமிழர் தலைமையான தமிழ்த்தேசியகூட்டமைப்பு செயற்பட்டுவருகின்றது.

தேசம் என்பதோ தேசியம் என்ற எண்ணக்கருவோ பிரிவினைகளை (divisions) வலியுறுத்தவில்லை. மாறாக மற்றவரை சமமாக மதிக்கின்ற நினைக்கின்ற பண்பையே அது பிரதிபலிக்கின்றது. சிங்கள தேசம் என்ற அடிப்படையான சித்தாந்தம் இருக்கின்றபடியால், தமிழர் தேசம் என்ற சித்தாந்தமே தமிழர்களை இலங்கைதீவில் சுதந்திரமாக கௌரவமாக வாழவைக்கும்.

அதற்கு சமனான தீர்வை பெற்றுக் கொள்ளாத வரைக்கும், அவ்வப்போது வெடிக்கும் இனவாத வன்முறைகளுக்குள் சிறுபான்மையின சமூகங்கள் பலியாகவேண்டிய நிலையே ஏற்படும்.

தமிழர் தரப்பின் தோல்வி

மூன்று சகாப்தங்களாக நடந்தஆயுத விடுதலைப் போராட்டம், தமிழர்களை ஒரு தேசமாக, தேசியமாக வளர்ச்சியடையச் செய்திருந்தது. ஆனால் அந்த போராட்டத்தில் ஏற்பட்ட அழிவு என்பது தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் தளர்வை கொடுக்கவில்லை. அந்த போராட்டத்தின் நியாய தன்மையும், இனவழிப்புக்கான நீதியும், எமது மக்களின் போராளிகளின் உன்னதமான தியாகங்களும் தமிழர் தரப்பின் தீர்வுக்கான வாய்ப்புகளை சாதகமாகவே திறந்து விட்டிருந்தது.

ஆனால் தமிழர் தரப்பின் நியாயங்களை, மலினப்படுத்தும் நீர்த்துப்போகச் செய்யும் செயற்பாடுகளையே தமிழர் தரப்பு கையாண்டது. வாழ்வாதார திட்டங்களில் முன்னேற்றகளையோ, தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதிலோ கூட அக்கறை செலுத்தாமல், சிங்கள தேசத்தின் ஒருதரப்புக்கு சேவகம் செய்வதற்காக, மற்றைய தரப்புடன் முரண்பாட்டை கூர்மைப்படுத்தியது.

அத்தோடு தமிழர் தேசத்தின் நீதிக்காக பேரம் பேசப்படாமல், தனிப்பட்ட வாக்கு வங்கிகளை தக்கவைப்பதற்காக, சிறிலங்கா அரசின் அடிப்படையான வேலைத்திட்டங்களை கூட, தமது வேலைத்திட்டங்களாக பிரபலப்படுத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியலானது மிகவும் கேவலமானது.

நிழல் நிர்வாக கட்டமைப்பு

வடக்கு கிழக்கு தழுவிய தீர்வுக்காக போராடும் அதேவேளை, வடக்கு கிழக்கு தழுவிய நிழல் நிர்வாக கட்டமைப்பு ஒன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் செய்திருக்க முடியும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய தமிழர் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து, ஒருமாதிரி கட்டமைப்பை ஏற்படுத்தி, அடிப்படையான கலந்துரையாடலையாவது செய்திருக்கமுடியும்.

கூட்டமைப்பின் 14 எம்பிக்களை மட்டும்கொண்டிருந்தாலே அவர்களுக்கான ஐந்து உதவியாளர்களையும் சேர்த்தால் 75 பேர் கொண்ட செயலணியாக செயற்பட்டிருக்கமுடியும்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் போன்ற மாதிரி கட்டமைப்பு ஒன்றை புலமைசார் நெறியாளர் சார் துறை வல்லுநர்களை உள்வாங்கி, தமது ஆதரவுடன் செயற்படக்கூடிய சூழலை ஏற்படுத்தியிருக்க முடியும்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு மாதிரி முயற்சியாவது செய்திருக்கலாம்.

வடக்கு கிழக்கு தழுவிய கலைகலாச்சார போட்டிகள், விவசாய மீன்பிடிதொழில்சார் போட்டிகள், விளையாட்டுபோட்டிகள், கல்விசார் தொழில்சார்கண்காட்சிகள் என்பவற்றையேனும் செய்திருக்கமுடியும்.

இவற்றில் எதுவுமே செய்யவில்லை என்பது மட்டுமில்லை. இவற்றை செய்யவேண்டும் என்று சிந்திக்கின்ற தேசியம் சார் சிந்தனை கொண்ட அமைப்பாக தமிழ்த் தேசியகூட்டமைப்பு இல்லை என்பதே கவலையான விடயமாகும்.

தொடரும் உரிமை பறிப்பு

வனவள திணைக்களம் என்றும், தொன்மை பாதுகாப்பு திணைக்களம் என்றும் கறையான்களை போல இருக்கும் சிங்களத்தின் சிறு திணைக்களங்கள் மூலம், தமிழர் தேசத்தின் கட்டமைப்பே சிதைக்கப்படுகின்றது.

அதேவேளை தமிழர்கள் தமது அடையாளம் வரலாறுகளை பேணமுடியாதவாறு மறைமுகமாகவும் நேரடியாகவும் அழுத்தங்களும் கைதுகளும் நடைபெறுகின்றன.

தமிழர்களுக்கான அரசியல் உரிமையை மறுக்கும் அதேநேரம் தமிழர்களின் தேசத்தில் உள்ள உள்ளாட்சி மாகாண கட்டமைப்புகளையும் சரியாக செயற்படவிடாமல் தடை ஏற்படுத்தப்படுகின்றது. சரியானவர்கள் வருவதை சிங்களத்துடன் இணைந்து தடுப்பதில் தமிழர் தரப்பின் பங்கும் இருக்கின்றது.

என்ன செய்யப்போகின்றோம்?

ஆயுதங்களை கீழே வையுங்கள், சமஷ்டி பற்றி பரிசிலீப்போம் என ஒஸ்லோவில் வாக்குறுதி வழங்கப்பட்டபோது சிங்கள தேசத்தின் வாக்குறுதிகளில் நம்பிக்கையில்லை, செயற்பாடுகள் அடிப்படையில் எதிர்காலத்தில் முடிவுகளை எடுப்போம் என விடுதலைப் புலிகள் அமைப்பு முடிவெடுத்தமை பற்றி பலரும் விமர்சித்திருந்தனர்.

ஆனால் பத்துஆண்டுகளின் முடிவில் அதுவே நிதர்சனமாகியிருப்பதை கண்கூடாககாண்கின்றோம். இப்படி பத்து ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் என்ற பகிரங்க பிரகடனத்தையாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் செய்யமுடியவில்லை.

எனவே தமிழர் தரப்பாக ஏமாற்றுஅரசியலை முன்னெடுக்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது இணக்க அரசியல் என்ற பெயரில் சிங்கள தேசத்தின் அரசியலை தமிழர்களுக்கு கொண்டுவரும் முகவராக செயற்படுகின்றது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

அதேவேளை, தமிழர்கள் தனியான தேசிய அடையாளத்தையும், தேசத்தையும் கொண்டவர்கள் என்பதை புரிந்துகொண்டு அதற்கான செயற்பாடுகளை - அரசியல் ரீதியாக மக்கள் ரீதியான நிறுவன ரீதியாக - சிறு அளவேனும் முன்னெடுப்பவர்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவு கொடுக்கவேண்டும்.

அத்தகைய செயற்பாடுகளுக்கான ஆதரவுபோக்கே தமிழர்களை தன்னிறைவு கொண்டவர்களாக தனித்துவமான கட்டமைப்பு கொண்டவர்களாக தனித்தேசமாக சிந்திக்க செயற்படவைக்கும்.

இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டபொதுமக்களையும், ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்டமாவீரர்களையும் இழந்து நிற்கின்ற நாம் முள்ளிவாய்க்காலில் எழுப்பியது அவலக்குரல் மட்டுமல்ல, எமக்கு நீதிவேண்டும் என கடைசி நிமிடம் வரை போராடி மடிந்த மாவீரர்களின்உறுதிக்குரலும் தான்.

- அரிச்சந்திரன் -

முதல்வர் விக்கியின் பலமும் பலவீனமும்

Monday, August 20, 2018 / No Comments
முள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போரிற்கு பின்னரான ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான பயணமானது,  உறுதியான அடித்தளம் இன்றியே நகர்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்துவதன் மூலம், தமிழர்களின் அரசியல் உரிமையை பெற்றுவிடலாம் என நம்பி வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.

ஏமாற்றங்களின் விளைவாக உருவான திருப்புமுனை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான மாற்றுத்தலைமையாக முதல்வர் விக்கினேஸ்வரன் தலைமையிலான அணிக்கு மக்களின் ஆதரவாக பெருகியது.தமிழ் மக்கள் பேரவை என்றும் அதன் தொடர்ச்சியாக எழுகதமிழ் என்றும், முதல்வருக்கு எதிராக அவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த தமிழரசுக் கட்சியும் ஈபிடிபியும் மேற்கொண்ட முயற்சிக்கு எதிராகவும், மக்கள் தமது ஒட்டுமொத்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, தமிழ்த் தேசியத்திற்கான அடிப்படைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவுகளை சம்பந்தரும் சுமந்திரனும் தீர்மானித்தாலும், அதற்கான மக்கள் ஆதரவு என்பது அவர்களை சுற்றி அல்லாமல் கட்சிக்கான ஆதரவு என்ற தளத்திலேயே நிலைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் மாற்றுத்தலைமைக்கான முதல்வர் அணியின் ஆதரவு என்பது முதல்வரை சுற்றியதாக அல்லது ஒரு கொள்கையை மையப்படுத்தியதாக இருந்தது.

மக்களின் அபரமிதமான ஆதரவை புரிந்து, தன்மீதான மக்களுக்கான எதிர்பார்ப்பை முதல்வர் விக்கி பூர்த்தி செய்தாரா?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது அதன் அடிப்படை கொள்கையை கைவிட்டு ஏமாற்று அரசியல் செய்கிறது என்பதை வெளிப்படுத்தி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியவாதிகள் கூட்டமைப்பை விட்டு வெளியேறி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கியபோது, அது தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து வெளியேறுவதாகவே, ஒற்றுமையை குலைத்த  செயலாகவே அன்றைய நிலையில் பரவலாக பார்க்கப்பட்டது.

அப்படி இறுக்கமான நிலையில் வெளியேறிய அந்தக் கட்சி கூட, முதல்வர் தலைமையிலான அணியாக இணைந்து செயற்பட தயாராக இருந்தது இருக்கிறது.

முதல்வர் விக்கினேஸ்வரனின் ஆதரவுக்கான அலையை உருவாக்குவதில் அல்லது தக்கவைப்பதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் செயற்பாடு கவனிக்கத்தக்கது. எழுகதமிழ் நிகழ்வுக்கான செயற்பாடுகளிலிலும் முதல்வர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்தும் மக்கள் மயப்பட்ட போராட்டத்தை ஒழுங்குபடுத்தியதிலும் அதற்கு காத்திரமான பங்கிருந்தது.

பாரிய சவால்களுக்கு மத்தியில் சிறிது சிறிதாக வளர்ச்சியடைய தொடங்கிய முன்னேறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னனிக்கான வளர்ச்சியானது, திடிரென மேலெழுந்த முதல்வரின் மாற்றத்துக்கான அரசியலால் அவரது அணிக்கான ஆதரவாக திரும்பியது.

கடந்த உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, மாற்றத்துக்கான தலைமையை ஏற்குமாறு ஆரம்பம் முதலே தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியும் அதன் பின்னர் ஈபிஆர்எல்எப் உம் கேட்டுக்கொண்டன.

அனைவரது எதிர்பார்ப்பிற்கு மாறாக முதல்வர் விக்கினேஸ்வரன் அமைதியானார்.

மாற்றத்துக்கான அணியை பலப்படுத்தாமல் அந்த அணி இரண்டு பிரிவுகளாக உடைந்துபோக, மக்கள் சலிப்படைந்தனர்.

அந்த தடுமாற்றம், சிங்கள பெருந்தேசிய கட்சிகளுக்கான ஆதரவை, ஈபிடிபி போன்ற "இணக்க அரசியல்" அரசியல் செய்கின்ற கட்சிகளுக்கான ஆதரவை அதிகரித்துவிட்டது.

அந்த நேரத்தில் சரியான முடிவை முதல்வர் எடுத்திருந்தால், இன்று பலமான நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான மாற்று அணி அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பையே மாற்றும் அணி உருவாகியிருக்க முடியும்.

இப்போதும் பலமான மாற்று அணி உருவாகுவதை முதல்வர் விக்கினேஸ்வரன் விரும்பவில்லை என்றும் ஒருவித அழுத்த குழுவாகவே இருப்பது போதும் என்ற அடிப்படையிலேயே முதல்வரின் நடவடிக்கைகள் அமைகின்றன என்ற அபிப்பிராயம் பரவலாக எழுகிறது.

ஆனால், சமாந்தரமாக முதல்வர் விக்கினேஷ்வரன் தனியாக ஒரு அணியை தான் உருவாக்கப்போவதாக பூடகமாக செய்திகளை பரவவிட்டு, மக்களின் எண்ணங்களை அளவுகோலில் போடுகிறார்.

விக்கினேஸ்வரனின் அறிவும் அவர் வகித்த பதவி நிலைகள் ஊடாக கிடைக்கப்பெற்ற ஆதரவும், தமிழ்த்தேசிய அரசியலை நிலை நிறுத்தவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்க, அவரோ ஏமாற்றமான முடிவுகளையே எடுத்திருக்கிறார்.


1. அமைச்சர்கள் மீதான ஊழல் விசாரணை தொடர்பான விடயத்தை சரிவர கையாள தவறியமை அவரது தலைமைத்துவத்தின் மீதான விசனத்தை ஏற்படுத்தியது.

2. கடந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் செயற்பாடுகளில், மாணவர்களை எடுத்தெறிந்து, அவர்கள் வெளிநாட்டு பின்னனியில் இயங்குகிறார்கள் என அறிக்கை விட்டமை அவரது முதிர்ச்சியற்ற அணுகுமுறையை வெளிப்படுத்தியது.

3. கடந்த உள்ளாட்சி தேர்தல் வரை புதிய மாற்று அணி என போக்குகாட்டி இறுதி நேரத்தில் மறுத்தமை ஊடாக பெருந் தேசிய சிங்களக் கட்சிகளையும் அவை சார்பு கட்சிகளையும் வளர இடமளித்தமை.

4. தற்போது இளைஞரணி மாநாடு என தமிழ் மக்கள் பேரவை மூலம் அறிவித்துவிட்டு, அதற்கு அண்மையில் அந்த அணியில் சேர்ந்த ஐங்கரநேசன், அருந்தவபாலன், அனந்தி ஆகியோரை செயற்குழுவில் நிலைப்படுத்தியும், ஆரம்பம் முதலே செயற்பட்ட கட்சிகளை செயற்பாட்டாளர்களை தனது சுயநல அரசியலுக்காக வெளியில் விட்டமை அல்லது செயற்திட்டங்களில் உள்வாங்காமை.

மேற்குறித்த நான்கு விடயங்கள் மட்டும் ஊடாகவே, முதல்வர் விக்கி எத்தகைய தலைமைத்துவ பண்பை வெளிக்காட்டியிருக்கின்றார் என்பதை கண்டுகொள்ளலாம்.

அப்படியானால், மாற்று எதுவென்பதையும் சொல்லவேண்டியுள்ளது.

முதல்வர் விக்கியை பொறுத்தவரை அவரது பலவீனங்களை கடந்து, அல்லது அந்த பலவீனங்களை நிவர்த்தி செய்யக்கூடிய பலமாக நல்லதொரு அணி அவரைச் சுற்றி இருக்குமெனில், அவரிடம் உள்ள நேர்மை, கொள்கை ரீதியான அவரது தெளிவும் தமிழர்களின் விடுதலைப் பயணத்துக்கு வலுச்சேர்க்கும் என நம்பிக்கை தற்போதும் தொடர்கிறது.

ஆதலால், கொள்கையில் உறுதியும் அரசியல் நேர்மையும் கொண்ட கூட்டடிணைவுக்கு முதல்வர் முக்கியம் கொடுக்க வேண்டும். அது முதல்வருக்கு வரலாற்றில் நல்லதொரு பெயரை கொடுப்பதோடு தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு பலம் அளிக்கும்.

அந்த வகையில் வரலாற்றில் அவரால் செய்யக்கூடிய பல விடயங்கள் இன்னமும் இருப்பதாகவே நம்புகிறோம்.

உண்மையான தலைமைகள் முன்செல்லும்போது, தங்கள் உழைப்பையும் வியர்வையும் சிந்தி அவர்கள் பின்னால் பயணிக்க இப்போதும் மக்கள் தயாராகவே இருக்கின்றார்கள்.

- அரிச்சந்திரன் -

உதயசூரியன் சின்னம்: வைக்கப்பட்ட பொறி!

Sunday, December 10, 2017 / No Comments
வெளிச்சவீடு என்றும் உதயசூரியன் என்றும் வீடு என்றும் தமிழர்களின் அர்ப்பணிப்பான விடுதலை இயக்கத்தால் உயிர்பிக்கப்பட்ட விடுதலை வேட்கையானது ஆசன பங்கீடுகளுக்காக கட்சிதாவலில் இறங்குகின்ற நிலைமையானது தமிழர்கள் தமது அரசியல் எதிர்காலம் பற்றி விழித்துக்கொள்ளவேண்டிய நிலைக்கு கொண்டுவந்துள்ளது.
தமிழ்மக்களின் அடிப்படையான அரசியல் அதிகாரம் என்பது, தமிழர் தாயகம் - தமிழர் தேசியம் - தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்ற அடித்தளத்தில் உருவாக்கப்படவேண்டும் என்றும், அதனை அடைவதற்கான இசைவுகள் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களினதும் போராளிகளினதும் தியாகம், இனப்படுகொலைக்கான நீதி, சர்வதேச நீதிவிசாரணை என்ற அடிப்படைகளை ஆயுதமாககொண்டு முன்னகர்த்தப்படவேண்டும் என்பதும் தமிழர் தரப்பின் நிலைப்பாடாக இருந்தது.ஆனால் அத்தகைய பொறிமுறையை முன்னகர்த்துவதாக குறிப்பிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது, அந்த அடிப்படைகளை ஒவ்வொன்றாக நீர்த்துப்போகச் செய்து, சர்வதேசங்கள் தமிழர் நலனில் காட்டிவந்த அக்கறையையும் குறைப்பதற்கான, மறைமுக நிகழ்ச்சிநிரலில் செயற்படுவதான தோற்றப்பாடு உருவானது.இத்தகைய பின்னனியில்தான், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான பலமான மாற்றுஅணியை பலப்படுத்தவேண்டிய தேவை பலராலும் முன்வைக்கப்பட்டது.தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியானது, அதன் தொடக்ககாலம் தொட்டே தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது தமிழரது போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் படிமுறையான பொறிமுறையொன்றை கையாள்வதாக குற்றஞ்சாட்டிவருகின்றது. அது ஏற்கனவே 2009 இல் இந்தியாவால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், 13வது திருத்தத்தை திருத்தியதான ஒரு தீர்வுத்திட்டத்திற்கு தமிழர் தரப்பு இணங்கவேண்டும் என்ற கருத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் தொடர்ச்சியாகவே கூறிவந்தது.எனினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீதான ஓரளவு நம்பிக்கையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் மாற்றுத்தலைமைக்கான பலவீனமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றான தெளிவான சக்தியை வளர்ப்பதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனாலும் தமிழ்த்தேசியத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை கொண்ட தரப்புகளின் தெளிவான ஆதரவைப் பெற்ற தரப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியால் ஓரளவு நிலைபெறமுடிந்தது.இதன் பின்னனியில் உருவான தமிழ்மக்கள் பேரவையும், அதற்கு இணைத்தலைமை கொடுக்க முன்வந்த வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரனின் வருகையும் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.ஆனாலும் அரசியல் சக்தியாக தமிழ் மக்கள் பேரவையை உருவாக்குவதில் தயக்கம் காட்டிய விக்கினேஸ்வரன் கொள்கை ரீதியாக மாற்றுசக்தி உருவாவதை வரவேற்றார்.

அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், புதிய சின்னத்தில் புதிய கூட்டணியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியும் ஈபிஆர்எல்எப் உம் இணைந்து, பொதுத் தேசிய செயற்பாட்டாளர்களையும் இணைத்து எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ள முடிவானது. அத்தகைய கூட்டானது தேர்தல் கூட்டாக அன்றி, நீண்டகால அரசியல் செயற்றிட்டத்தை மையமாக கொண்டதாக இருக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.ஆனாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றான சக்தியாக தமிழ்த்தேசியத்தை வலுவாக முன்னகர்த்தும் சக்திகள் பலம் பெறுவதை விரும்பாத உள்ளக வெளியக சக்திகள், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியை உள்ளே கொண்டுவந்து குழப்பின.தமிழர் விடுதலைக் கூட்டணி என்பதும் தமிழரசுக்கட்சி என்பதும் அதன் நிலையில் வேறுவேறானவை அல்ல. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அடிப்படை உறுப்பினர்களில் 80 விழுக்காட்டினர் தமிழரசுக்கட்சியின் “பாரம்பரிய அரசியல் வியாதிகளை” கொண்ட ஒரே மையத்தை சுற்றிய இரண்டு வட்டங்கள் என்பது பழைய அரசியல்வாதிகளுக்கே வெளிச்சமான விடயம்.புதிய பலமான அணி உருவானால், அதற்கு தனது உதயசூரியன் சின்னத்தை விட்டுக்கொடுப்பதாக சொல்லும் ஆனந்தசங்கரிக்கு போட்டியாக, அடுத்த பொதுக்கூட்டத்தையே கூட்டி அதே சின்னத்தை முடக்கக்கூடிய “அரசியல் பாரம்பரியம்” அதன் உறுப்பினர்களுக்கு அதிகப்படியாகவே இருக்கின்றது என்ற வாதம் சின்னத்தனமானதல்ல.அதேவேளையில், தமிழ்மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட இறுதியுத்த காலத்தில் அரசுடன் இணைந்துநின்று இனவழிப்புக்கு துணைநின்றவர்களை, எந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளமுடியும் என்ற வாதமும், தனது சொந்தங்களை பறிகொடுத்த ஒவ்வொருவனின் குமுறல் மட்டுமல்ல, சாதாரண மக்களிடத்திலும் எழும் கேள்விகள்தான்.ஆனந்தசங்கரியோ அதன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வளர்ச்சி என்பதோ தமிழரசுக்கட்சியிலும் விட தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்பதும் அதன் தொடர்ச்சிதான்.அதுவும் தமிழ்மக்கள் தங்கள் பேரம் பேசும்பேசும் வலுவை உச்சநிலையில் வைத்திருந்தவேளையில், விடுதலைப்புலிகளுக்கே சவால்விட்டு உதயசூரியன் சின்னம் பயன்படுத்தமுடியாதவாறு முடக்கிய ஆனந்தசங்கரியை முதன்மையாக கொண்ட ஒரு கட்சியுடன் இணைந்துகொள்வது, அடிப்படை முரண் இல்லையா என்ற கேள்வியும் அதன் நீட்சிதான்.அத்தோடு தமிழரசுக்கட்சிக்கு மாற்றான அணிகள் என்பவை, கொள்கை சார்ந்து இணையவேண்டும் என்பதும் அது தலைமைத்துவம் மீதான காழ்ப்புணர்வாலோ அல்லது தனிப்பட்டட ஆசன பங்கீடுகளுக்காகவோ அமையக் கூடாது என்பதும் விதண்டாவாதமாக எடுத்துக்கொள்ளமுடியாது.அந்தவகையில்தான் புதிய சின்னம் என்றும் புதிய கூட்டணி என்றும் ஓடிஓடி பதிவுவேலைகளை செய்த சுரேஸ் பிரேமசந்திரன், ஒண்டியாக சென்று உதயசூரியன் என்ற சின்னத்திற்காக ஆனந்தசங்கரியுடன் இணைந்துகொண்டது ஏமாற்றத்தை விதைக்கிறது.தமிழ்த் தேசியத்திற்கான மாற்று அணி என்ற அணியில் உள்நுழைந்த விக்கினேஸ்வரனும் சுரேஸ் பிரேமசந்திரனும் காணாமல்போக, தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை முன்னிறுத்தி செயற்படக்கூடிய அணிகளை ஓரணியில் இணைக்கவேண்டிய நிலை கஜேந்திரகுமாருக்கு ஏற்பட்டது.அதன் அடிப்படையில்தான், தமிழ்த் தேசிய பேரவை என்ற புதிய அரசியல் கூட்டணியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியத்திற்கான கிராமிய மட்ட செயற்பாட்டாளர்களை உள்ளடக்கியதான அந்த அணி எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்கின்றது.வெற்றிகள் தோல்விகள் என்பவற்றுக்கு அப்பால் தமிழர்களின் எதிர்கால அரசியல்போக்கு எப்படியானதாக இருக்கப்போகின்றது என்பதையும், தமிழர் அரசியலில் பன்முகப்பட்ட கட்சிகளின் ஆளுமைகள் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றன என்பதையும், வெளிக்காட்டுவதுடன் அனைவருக்கும் சவாலானதாகவும் இத்தேர்தல் அமையப் போகின்றது.இத்தேர்தல் மயக்கத்தில் தமிழர்களின் மீது திணிக்கப்படப்போகும் ஒற்றையாட்சி அரசியற்கட்டமைப்புக்கான தீர்வும் மறுதலிக்கப்படப்போகும் நீதியும் வெளித்தெரியப்போவதில்லை.– அரிச்சந்திரன்

எழுகதமிழும் எதிர்பார்ப்பும் - அரிச்சந்திரன்

Saturday, February 4, 2017 / No Comments
 போர் நிறைவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. போரை கடந்தபின்னரும் தமிழர்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை மறுத்தும் அதற்கான கோரிக்கைகளுக்கான அடிப்படைகளை அழிப்பதிலும் கவமாகவிருந்தது மகிந்த அரசு.

கொடுமையான அரசாட்சியை ஒழித்து பயமின்றி வாழ புதுஅரசை கொண்டு வருவோமென சொல்லப்பட்டு – சர்வதேச நாடுகளின் முழுமையான ஒத்துழைப்போடு தமிழர்களின் வாக்குகளையும் பெற்று – “நல்லாட்சி” நிறுவப்பட்டும் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.ஆனாலும் தமிழர்களது அடிப்படை அரசியல் உரிமைகள் பற்றிய புரிந்துணர்வு இன்னமும் சிங்கள தேசத்தில் உருவாகவில்லை. மாறாக தொடர்ந்தும் பேரினாவாத அரச இயந்திரத்தின் கபடத்தனமாக தமிழர்களது உரிமைகளை பறிக்கும் செயற்பாடுகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அடிப்படையான அரசியல் அதிகாரங்களை வழங்குவது என்றால் அதுவொரு காலம் நீடித்த பணியென்றும் படிப்படியாகவே அதனை அடையலாம் என சாட்டுகள் சொல்லப்படுகின்றபோதும் அப்படியான அரசியல் அதிகார பரவலாக்கத்திற்கான எந்தவித அடிப்படை முயற்சிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது புதிய அரசியல் அமைப்பு ஒன்றின் மூலம் அத்தகைய மாற்றத்தை கொண்டுவரலாம் என சொல்லப்படுகின்ற போதும் தமிழர்களின் சமத்துவமான உரிமைகளுக்கான கோரிக்கைக்கு பதிலீடான தீர்வாக அது ஒருபோதும் இருக்கப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது.

இருக்கின்ற 13வது திருத்த சட்டத்தில் உள்ள அதிகாரங்களுக்கான இன்னொரு திருத்த சட்டமாகவோ அல்லது இணைப்பு சட்டமாகவோ தான் புதிய அரசியலமைப்பு இருக்கப்போகின்றது.

வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் தனித்துவமான தாயகம் என்ற அடிப்படையை ஏற்றுக்கொண்ட அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கப்போவதில்லை. தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் தமிழர்களால் ஆளப்படுகின்ற அரசியல் இறைமை வழங்கப்ப்போவதில்லை.எப்போதுமே மத்திய அரசுகளின் தலையீடுகளும் மத்திய அரசின் ஒப்புதலோடு தான் எதுவுமே செய்யப்போகின்ற ஒற்றைமய ஆட்சிதான் தமிழர்களுக்கு தீர்வாக இருக்கப்போகின்றது.
இவை ஒருபக்கம் இருக்க தமிழர்களின் அவசரப ;பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு வருகின்றது. வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்பட்டும் இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றது.

படையினரால் கையகப்படுத்தப்படும் காணிகள் ஒரு பக்கம் காணாமல்போனோர் பற்றிய தகவல்கள் இதுவரை வழங்கப்படாமல் இன்னொரு பக்கம் அரசியல் கைதிகளின் விடுதலை மறுபக்கம் விடுதலை செய்யப்படுகின்றவர்கள் மீளவும் கைதுசெய்யப்டுவதும் கண்காணிப்படுவதுமான பிரச்சனைகள் இன்னொரு பக்கம் பரவிவரும் சிங்களமயமாக்ககல் என்ற இறுகிய நிலை இன்னொரு பக்கம் என தமிழர்களது வாழ்வு பெரும் நெருக்கடியில் மூழ்கி கிடக்கின்றது.

இந்தவேளையில் இருக்கின்ற சூழ்நிலையில் சிங்களவர்கள் மத்தியில் சந்தேகங்களை உருவாக்கவேண்டாம் என்றும் மீளவும் மகிந்த வருவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்தவேண்டாம் எனவும் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையானது தொடர்ந்தும் மௌனம் காத்துவருகின்றது.

மீண்டும் சிங்கள பேரினவாதத்தின் இறுக்கமான பிடிக்குள்தான் தமிழர்களின் வாழ்வு இருக்கப்போகின்றது. இப்படியே இழுத்து இழுத்து சமஸ்டி என்றும் கூட்டாட்சி என்றும் தமிழர்களுக்கு உண்மையை மறைத்துக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என மீளவும் சொல்லப்போகின்றார்கள்.

அப்படியானால் தங்களுக்கு முன்னே இருக்கின்ற ஆபத்துக்களை உணர்ந்தும் இன்னமும் மௌனமாக இருக்கும் தமிழர் தரைமையின் காரணம் என்ன? மொனமாக அழுதுகொண்டிருப்பதுதான் தமிழர்களின் தலைமை காட்டும் வழியா?

இதனால்தான் தமிழர்கள் தரப்பு அதிருப்தி தொடர்ந்தும் வெளிப்படுகின்றது. கடந்த ஆண்டு காணாமல் போனோர் தொடர்பாக அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பாக என பல்வேறு போராட்டங்கள் பாதிக்கப்பட்ட மக்களால் நடத்தப்பட்டிருந்தன. அதன் ஒட்டுமொத்த குவிமையமாக எழுகதமிழ் என்ற போராட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இப்போது தொடர்ச்சியாக தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் முளைகொள்கின்றன. தங்கள் வாக்குகளால் அனுப்பப்பட்ட தமிழர்களின் பிரதிநிதித்துவமானது வாழ்நாள் சாதனை வீரர் என்றும் இறைபணிச் செம்மல் என்றும் கற்பனை உலகில் மிதந்துகொண்டிருக்கும்போது இத்தகைய தன்னெழுச்சியான போராட்டங்களே தமிழர்களது அடிப்படையான பிரச்சனைகளை மேலெழுப்பிவருகின்றது.

அதன் தொடர்ச்சியாக பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியும் எழுகதமிழ் போராட்டம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. எழுகதமிழ் போராட்ட நடவடிக்கையானது குறித்த ஒரு நாளில் கூடி தங்கள் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தும் தனியான நிகழ்வு அல்ல.

தமிழ் மக்கள் தங்கள் உரிமைகள் எவை என்பதை தெரிந்துகொள்வதும் எப்படி தாங்கள் அடக்கப்பட்டுவருகின்றோம் என்பதை புரிந்துகொள்வதும் அப்படியான இறுக்கமான நிலையை உடைப்பதற்கு தங்களால் என்ன செய்யமுடியும் என்பதை திட்டமிடுவதற்கும் அது பற்றிய தங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்வதற்குமான களமாக அது விரியவேண்டும்.

அந்த வகையில் முதலாவது எழுகதமிழை விட கிராமங்கிராமாக சென்று விழிப்புணர்வை உருவாக்குவதில் எழுகதமிழ் செயற்பாட்டாளர்கள் கவனம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்களை நோக்கி பரவலான அணுகுமுறையை குறுகிய வளங்களோடு ஏற்படுத்துவதில் எழுகதமிழ் செயற்பாட்டாளர்கள் வெற்றியடைந்துள்ளார்கள் என்றே சொல்லவேண்டும். அதுவே எழுகதமிழின் முக்கியமான நோக்கமாகும்.

புதிய ஆட்சி மூலம் உருவாக்கப்பட்ட சிறு இடைவெளியில் தமிழர் தரப்பு சாதித்திருக்கவேண்டிய பல விடயங்கள் இருந்தன. ஆனால் அதன் பிரதான பங்காற்றலை செய்யவேண்டிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது பிழையான வழிநடாத்தலால் தமிழர்களுக்கு பாரிய தவறை செய்துகொண்டிருகின்றது.

எனினும் எழுகதமிழ் செயற்பாட்டாளர்கள் அந்த இடைவெளியை நிரப்பி தமிழர்களது உரிமைக்கான குரலை வெளிக்கொண்டுவரவேண்டும். அதுவே பரந்தளவான மக்கள் செயற்பாட்டு இயக்கத்தை உருவாக்க வழிவகுக்கும். அதுவே தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றெடுப்பதில் பெரும் பங்காற்றும்.

- அரிச்சந்திரன் -

விடுதலையை விலை பேசும் "சுமந்திரம்" - அரிச்சந்திரன்

Tuesday, January 31, 2017 / No Comments
தமிழர்களுடைய விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது மௌனிக்கப்பட்ட பின்னரும் உயரிய கட்டுக்கோப்பை பேணும் வகையிலேயே கடந்த ஏழு ஆண்டுகள் கடந்துள்ளன.

விடுதலைப் போராட்டம் பாரிய சவாலை எதிர்கொண்டு பேரவலத்தை சந்தித்தபோதும் அதில் தப்பிபிழைத்த போராளிகளும் அதனோடு பயணித்த பொதுமக்களும் எப்போதுமே ஒரு உயரிய கட்டுக்கோப்பை பேணியே வாழ்ந்துவருகின்றார்கள்.

போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளை வசை பாடிய சிறிலங்கா இராணுவத்தின் குறிப்பிடத்தக்க அதிகாரிகள் கூட விடுதலைப்புலிகளின் திறனை தவிர்க்கமுடியாமல் வியந்திருக்கிறார்கள்.ஆனால் எமது தமிழர்களின் பிரதிநிதிகளோ தமிழர்களுடைய முப்பது வருட விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு தம்மாலான முயற்சிகளை அவ்வப்பபோது செய்துவருகின்றார்கள்.

குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுமந்திரன் அதனை வெளிப்படையாக விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதில் அதீத கவனம் செலுத்திவருகின்றார்.

அதிலும் காயமடைந்து போராட்டத்திற்காக தமது வாழ்வை தொலைத்து வாழ்வாதாரத்திற்கு ஏங்கி நிற்கும் முன்னாள் போராளிகளின் எதிர்காலத்தையும் நெருக்கடிக்குள்ளாக்குவதில் மிகக்கவனம் எடுத்துவருகின்றார்.

சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பல்வேறு நரித்திட்டங்களுக்கு நடுவில் சிக்கிதவிக்கும் இப்போராளிகளின் வாழ்வை சீரழித்து அழிப்பதிலும் அப்படியான அழிவை தமிழர் சார்பாக நியாயப்படுத்துவதிலும் சுமந்திரன் தனது இராசதந்திர நுட்பத்தை தெளிவாக பயன்படுத்திவருகின்றார்.

கடந்த ஆண்டு சாவகச்சேரி பகுதியில் ஒரு தற்கொலை அங்கி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதனை சுமந்திரனுக்கு இலக்கு வைத்தே கொண்டுவரப்பட்டதாகவும் சுமந்திரனின் கையாளான கேசவன் சயந்தன் என்ற மாகாணசபை உறுப்பினர் ஊடாக பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது.


பழைய சிங்களப் பத்திரிகை ஒன்றில் மடித்து மறைக்கப்பட்டிருந்த அந்த அங்கியைய சாட்டாக வைத்து வடக்கே பருத்தித்துறை தொடக்கம் கிழக்கே மட்டக்களப்பு வரை 65 இற்கும் மேற்பட்டோர் இரகசியமாக கைதுசெய்யப்பட்டனர்.

மக்களுக்கு பயப்பீதியை உருவாக்கும் நோக்குடன் சிறிலங்கா புலனாய்வுத்துறையால் நடத்தப்பட்ட இந்நடவடிக்கையில் சுமந்திரன் தரப்பு வேண்டுமென்றே உள்நுழைந்து கைதுசெய்யப்பட்டவர்கள் மேல் அபாண்டமான ஒரு குற்றசாட்டை முன்வைத்திருந்தது.

கைதுசெய்யப்பட்டவர்களோ தற்கொலை அங்கி என்ற பெயரில் கைதுசெய்யப்பட்டபோதும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளோ அவர்கள் அனைவர் மீதும் பயத்தை உருவாக்கும் நோக்குடனே நடத்தப்பட்;டிருந்தது.

அப்படி கைதுசெய்யப்பட்டவர்களில் ஒரு தொகுதியினர் ஏற்கனவே இராணுவ புலனாய்வுத்துறைக்காக வேலை செய்துகொண்டிருந்தவர்கள் என்பதைவிட வேலை செய்யவைக்கப்பட்டவர்கள் என்பது பொருத்தமானது.

இப்போது கனடாவிலிருந்து கட்டுக்கதைகளை உருவாக்கி எழுதுவதில் வல்லவரும்  தனது உறவினருமான டிபிஎஸ் ஜெயராஜ் ஊடாக தன்மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட இருந்ததாகவும் அதில் தான் எப்படியோ தப்பிவிட்டதாகவும் இன்னொரு செய்தியை கசிய விட்டிருக்கின்றார் சுமந்திரன்.

சுமந்திரன் எப்படியான செய்தியை உருவாக்கி பரப்புகின்றார் என்பதனையும் அதன் பின்புலம் எவ்வளவு ஆபத்தானது என்பதையும் புரிந்துகொள்வதன் மூலமே தமிழர்கள் தமக்கு முன்னேயுள்ள ஆபத்துக்களை புரிந்துகொள்ளமுடியும்.

அவர் பரப்பிய அந்த செய்தி என்ன?

கிளிநொச்சியில் ஒருவரிடம் 5000 இலங்கை ருபாக்களை கொடுத்து தமிழீழக் கொடியை கடந்த மாவீரர் நாளில் ஏற்றுமாறு புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த புலிகளால் சொல்லப்பட்டிருந்ததாம்.  அந்த காசை பெற்றுக்கொண்ட அந்நபர் அப்படியே அந்தக்கொடியை நவம்பர் 26 இரவு ஏற்றினாராம்.

அதன் பின்னர் ஒற்றைக் கையில்லாத ஒருவருடன் சேர்ந்து வந்த நபர் மிகமுக்கியமான தமிழ் அரசியல்வாதி ஒருவரை கிளைமோர் வைத்து கொல்லவேண்டும் என சொன்னார்களாம்.

அதற்கு அவர் அந்த கொல்லப்படவேண்டிய நபர் யாரென்று சொன்னால்தான் தான் அதனை செய்வேன் எனச் சொன்னாராம்.

அப்போது அவர்கள் அது சுமந்திரன் தான் எனச்சொன்னபோது அந்ந நல்ல மனுசனை கொல்லமுடியாது என்று பின்வாங்கி விட்டாராம். அதனை அவர் அப்படியே இராணுவ புலனாய்வுத்துறையிடம் சொல்லிவிட்டாராம்.

இதுதான் அந்தச்செய்தி.

இதன் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் கிளைமோர் வைக்கப்பட்டபோதும் சாதுரியமாக சுமந்திரன் தப்பிவிட்டார் என்றும் அப்படி கிளைமோர் வைத்தவர்களை படையினர் கைதுசெய்து விட்டார்கள் என்றும் அவர்கள் கைது செய்யப்பட்டபோது கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாகவும் அந்தச்செய்தி நீள்கின்றது.

இப்போது சுமந்திரன் என்ன சொல்கிறார் என்பதை பாருங்கள்.

“What seems to be clear now is that some misguided former LTTE cadres living in the Island are being exploited by certain overseas elements through cash incentives to engage in acts of violence on Sri Lankan soil. We can’t be sure at this time whether this is an individual act targeting me or whether it is part of a more comprehensive design to revive the LTTE again. I am confident that the security agencies will probe this further and arrive at definite conclusions very soon”

“வெளிநாட்டு சக்திகள் ஊடாக முன்னாள் விடுதலைப் போராளிகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. பணத்தை வழங்கி சிறிலங்கா மண்ணில் வன்முறையை தூண்ட வைக்கப்படுகின்றார்கள். இது ஒரு தனிப்பட்ட சம்பவமா அல்லது விடுதலைப்புலிகளை மீள உருவாக்குவதற்கான பிரமாண்டமான முழுமையான திட்டத்தின் ஒரு பகுதியா என்பதை எங்களால் சொல்லமுடியவில்லை. ஆனால் எமது பாதுகாப்பு படையினர் இதனை சரியாக விசாரணை செய்து முடிவை விரைவில் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு”.</strong>

இதன் மூலம் சுமந்திரன் சொல்லவருவது என்ன?

தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் எமது போராளிகளின் எதிர்கால வாழ்வை சிதைப்பதிலும் சிறிலங்கா படைத்துறையோடு இணைந்துநிற்கும் சுமந்திரனின் இத்திட்டத்தின் நோக்கம் என்ன?


இப்போது சுமந்திரனுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு அவரது போக்குவரத்துக்கு சிறிலங்கா படைத்துறை உலங்குவானூர்தி வழங்கப்படவுள்ளது.

இதன்மூலம் புலிகள் இன்னமும் உள்ளார்கள் அவர்கள் வந்துவிடுவார்கள் எனவே எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் நிறைவேற்றப்படவேண்டிய பல விடயங்களை நிறைவேற்றமுடியவில்லை.
ஏனென்றால் தமிழர்களின் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கே எங்களுக்கு அதிகநேரம் தேவைப்டுகின்றது என சிறிலங்கா அரசு சொல்லப் போகின்றது.

இதுதானே அந்த செய்தி.

- அரிச்சந்திரன் -

முதலமைச்சர் எதிர் ஆளுநர் (இப்போது கிழக்கு) - அரிச்சந்திரன்

Monday, August 29, 2016 / No Comments
அண்மையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் ஒரு பாடசாலை நிகழ்வு நடந்திருந்தது. அதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அகமட் நசிட் ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோர் வந்திருந்தனர்.

பாடசாலைக்கான விஞ்ஞான ஆய்வுகூடம் ஒன்றை நிறுவ அமெரிக்க நிதியுதவி வழங்கப்பட்டிருந்தது. அந்த ஆய்வுகூடத்தை நிறுவியதற்கான கட்டுமானப்பணிகளை செய்தது கடற்படை. அந்த கட்டுமான பணிக்கான குத்தகை எப்படி நடந்தது. அது விரைவில் வெளிவரும் என நம்பலாம்.அந்த ஆய்வுகூடத்தை திறந்துவைக்கும் நிகழ்வே அன்று நடைபெற்றது. திறந்துவைக்கும் நிகழ்வு கடற்படையினர் தலைமையில் நடைபெற்றது. இப்பாடசாலை மாகாணசபைக்கு உரிய பாடசாலை. எனினும் நிகழ்வின்போது மேடைக்கு செல்ல முற்பட்ட முதல்வர் கடற்படை அதிகாரி ஒருவரால் தடுக்கப்பட்டார். அவ்வாறு அவர் தடுக்கப்படும்போது ஆளுநரும் அமெரிக்க தூதுவரும் மிக நெருக்கமாக முதலமைச்சருடனே நின்றார்கள்.

அப்படியிருந்தும் அக்கடற்படை அதிகாரி அவரை முதலமைச்சர் என்று தெரியாமல் தடுத்ததாக இப்போது சொல்லப்படுகின்றது. இப்படித்தான் அப்போதைய பாரதப்பிரதமர் கொழும்புவந்தபோது இராணுவ சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்டார். அப்போது கடும்வெய்யிலால் மயங்கி (Sun stroke) ராஜீவ்காந்தி மேல் விழுந்துவிட்டதாக அன்றைய சிறிலங்கா சனாதிபதி ஜெயவர்த்தனே சொன்னார்.

அப்படி அந்த முதலமைச்சர் தடுக்கப்பட்டபோது அவர் கடும்கோபத்தில் கடற்படை அதிகாரியை அவமதித்து பேசியதாக சொல்லப்படுகின்றது. உனக்கு அரச நடைமுறைகள் தெரியவில்லை என்னை மறிக்கிறாயே எனச் சினந்தார்.

முஸ்லிம் முதலமைச்சர் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவதில்லை என்ற குற்றசாட்டு உண்டு. தனிப்பட்ட ரீதியில் அந்த முதலமைச்சரின் செயற்பாடுகளை ஆராய்வதல்ல இப்பத்தியின் நோக்கம். அதனை வேறு தளத்தில் ஆராய்வோம்.

இங்கு கவனத்திற்குரிய விடயம் என்னவெனில் ஒரு மாகாண முதலமைச்சருக்கு நடந்த சம்பவத்திற்கான எதிர்விளைவுகள் என்னவென்பதே.

1. மறித்த கடற்படை வீரர் பதவி உயர்த்தப்பட்டு கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. அவமதித்த முதலமைச்சர் இனி எந்த இராணுவ முகாம்களுக்கும் செல்ல கூடாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இப்போது அங்கு உண்மையில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.


பாடசாலை ஆய்வுகூட திறப்பு விழாவுக்கு கிழக்கு முதலமைச்சர் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோர் வருகை தந்திருந்தபோதும் அவர்கள் மேடைக்கு அழைக்கப்படவில்லை.

ஆளுநரும் அமெரிக்க துாதுவரும் மட்டுமே பரிசில்கள் கொடுத்து கௌரவிக்க ஒலிபெருக்கியில் மேடைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது இவர்கள் மேடைக்கு கீழே காத்திருந்தார்கள்.

இவர்களை ஆளுநர் கண் சைகையால் மேடைக்கு வருமாறு அழைத்தார். இவர்களிருவரும் மேடையில் ஏறிச்சென்றபோது முதலமைச்சரை அந்த கடற்படை அதிகாரி இழுத்து மறித்துள்ளார்.

அப்போதுதான் மாகாணத்திற்கான ஒரு முதலமைச்சர் ஆக நானிருக்கின்றேன். இப்பாடசாலை உட்பட மாகாணத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் கல்வி அமைசசராகவும் இதே தொகுதியை சேர்ந்த தண்டாயுதபாணி இங்கே இருக்கிறார். அவர்களை முறையாக அழைக்கவேண்டும் என்ற அரச நடைமுறைகள் தெரியாமல் இருக்கிறீர்களே என வெளிப்படையாக கடிந்தார் நசீர் அகமட்.

இதில் எங்கே தவறு நிகழ்ந்தது? மாகாண சபைக்கு உரித்தான அதிகாரங்களின்படி என்றாலும் இவர்களிருவருக்குமான கௌரவம் வழங்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் நடக்கவில்லை. மாறாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கடுமையான குற்றசாட்டுக்கள் சிங்கள தரப்பால் முன்வைக்கப்படுகின்றன.

இதில் ஒருவர் சிங்கள முதலமைச்சராக இருந்திருந்தால் நிலை என்ன?

இதில் ஒருவர் தமிழ் முதலமைச்சராக இருந்திருந்தால் நிலை என்ன?

கிளிநொச்சி இராணுவ முகாம் பகுதிச் சென்ற எதிர்கட்சி தலைவர் சம்பந்தர் என்ன பாடுபடவேண்டியிருந்தது. அழாத குறையாக அதுவொரு இராணுவமுகாம் என்றே தெரியாமல்தான் நான் உள்ளே சென்றேன். யாரேனும் மறித்திருந்தால் போயிருக்கமாட்டேன் என சம்பந்தன் எவ்வளவு இறங்கவேண்டியிருந்தது?

சுமந்திரன் இதற்காகவே சிறப்பு ஊடக சந்திப்பு வைத்து சம்பந்தன் ஐயா அறியாமல் செய்த விடயத்தை தமிழ் ஊடகங்களுக்கு விளங்கப்படுத்தினார்.

தமிழர் தரப்பை பொறுத்தவரை அவர்கள் இப்போது ஒரு தரப்பாக இல்லை. தருவதை பெற்றுக்கொள்ளும் அல்லது கிடைப்பது எதுவோ அதனை தமிழ் மக்களுக்கு நியாயப்படுத்தும் தரப்பாக மாறியுள்ள நிலையில் சம்பூர் சம்பவம் பல செய்திகளை சொல்லியுள்ளது.

மகிந்த இராசபக்ச காலத்தில் ஒரு சிறிலங்கா புலனாய்வுத்துறை மேஜர் தர அதிகாரி இன்னொரு அரசியல்வாதியின் மகனுடன் கைகலப்பில் ஈடுபட்டார் என்பதற்காக மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டு புலனாய்வு பிரிவிலிருந்தே மாற்றப்பட்டிருந்தார். அப்போது அந்த "போர்வீரன்" செய்த பிழை என்ன?

குறிப்பாக புரிந்துகொள்ளக்கூடியது என்னவெனில் எண்ணிக்கையில் சிறிய தொகையினரான தமிழர்களையும் முஸ்லிம்களையும் உரிய கௌரவத்துடன் கண்டுகொள்ள சிங்கள பெருந்தேசியவாதம் தயாராவில்லை என்பதைதானே?

இப்படியான தவறுகளுக்கு ஆளுநரே காரணம் என்றும் முதலமைச்சரின் அதிகாரிகரங்களில் தொடர்ந்தும் ஆளுநர் தலையீடு செய்வதாகவும் கடற்படை அதிகாரியின் தவறுக்கும் ஆளுநரையே முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலளித்த ஆளுநர் முதலமைச்சரை கடற்படையினருக்கு அறிமுகம் செய்துவைக்கவேண்டியது தனது கடமையல்ல என தெரிவித்துள்ளார்.ஒப்பீட்டு ரீதியில் மென்போக்கான ஆளுநர்களே வடக்கிற்கும் கிழக்கிற்கும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு பார்வை உண்டு. ஆனால் அங்கே தான் கடுஞ்சிக்கல்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது போன்ற இச்சம்பவம் இருக்கின்றது.

ஒரு மாகாணத்தின் முதலமைச்சர் யார் என்பதும் அவருக்கு உரித்தான அதிகாரங்கள் முக்கியத்துவம் பற்றிய விளக்கஅறிவு அல்லது நெறிமுறை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கடற்படைக்கு சொல்லப்பட்டிருக்கவேண்டும்.

எனவே அங்கே அறியாமல் ஒரு தவறு நடந்தால் மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரே பதில் சொல்லவேண்டும். ஆனால் இங்கு அவர் அதனை மறைக்கமுயலுகின்றார்.

இதன் மூலம் புரிந்துகொள்வது யாதெனில் மாகாணசபைக்கு என்ன அதிகாரங்கள் உள்ளன என்பதை புரிந்துகொள்ளவும் மென்போக்காக கருதப்பட்ட வடக்கு கிழக்கு முதலமைச்சர்கள் ஏன் அதன் குறைபாடுகளை வெளிப்படையாக சொல்லுகின்றார்கள் என்பதற்கும் மென்போக்காக கருதப்படுகின்ற ஆளுநர்களால் அந்த மென்போக்கான முதல்வர்களுடன் ஒத்துப்போகமுடியவில்லை என்பதற்கும் விடையை கண்டுகொள்ளவேண்டும்.

அதற்கான விடையை கண்டுகொள்ளும்போது சிங்கள பெருந்தேசியவாத மனநிலையை புரிந்துகொள்ளலாம்.

அரிச்சந்திரன்

தமிழர்களின் எதிர்கால செயற்பாடு இப்படியிருக்குமா? அரிச்சந்திரன்

Saturday, June 18, 2016 / No Comments
அண்மையில் அவுஸ்திரேலியாவிற்கு யாழ் சிவில் சமூக செயற்பாட்டாளர் குருபரன் வருகை தந்தபோது அவருடைய கலந்துரையாடலில் பங்குகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.

குருபரன் ஏற்கனவே சமூகவலை தளங்கள் ஊடாக பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமானவராக இருந்தபோதும், நேரடியாக அவரது கருத்துக்களை அறிந்துகொள்வது மிகவும் பயனுள்ளது.

இப்பத்தி அவரது கருத்துக்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளபோதும் இன்னும் சில முன்னேற்றகரமான சிந்தனைகளை கொண்ட சாதாரண குடியானவர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.கீழ்வரும் மூன்று விடயங்கள் ஊடாக, முக்கிய கருத்துக்களை வாசகர்களுக்கு கொண்டுவருதல் பொருத்தமானது.

சமகால நிலவரங்களை பற்றியது

நல்லாட்சி அரசு வந்தபின்னர், சர்வதேச நாடுகளை பொறுத்தவரை புதிய மென்போக்கான அரசுடன் இணைந்து சென்று, கிடைப்பதை பெற்றுக்கொள்ளுங்கள் என தமிழர்களுக்கு அறிவுரை வழங்குகின்றார்கள்.

நல்லாட்சி அரசை பொறுத்தவரை காணி விடுவிப்பு என்ற விடயத்தை எடுத்துக்கொண்டால் குறித்தளவான காணிகளை விடுவிக்கப்படும், அதே நேரம் விடுவிக்கப்படுகின்ற பிரதேசத்திற்குள்ளேயே இருக்கப்போகும் இராணுவமுகாமை பற்றி யாரும் கதைக்க முன்வருவதில்லை.

அதேபோல கோவில் உண்டியல் இருக்கும் இடம் விடுவிக்கப்பட்டபோதும் கோவில் இன்னமும் இராணுவ முகாமிற்குள்ளே இருக்கின்ற சந்தர்ப்பத்தையும், ஒரு வீட்டுக்கான மலசலகூடம் விடுவிக்கப்பட்டும் வீடு இராணுவ முகாமிற்குள்ளே இருக்கின்ற நிலையும் மீள்குடியேற்றமாக காட்டப்படுகின்றது.

இதேவேளை தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டால் போதும் அரசகாணிகள் இராணுவத்திற்கே சொந்தம் என்ற மனநிலையும், இராணுவ பிரசன்னம் என்பது நடைமுறை வாழ்வியலில் ஒரு சாதாரண நிலைமை என்பதையும் தோற்றுவித்துவிட்டார்கள்.

தனிப்பட்ட பிணக்குகள் ஏற்படுகின்றபோது பொதுமக்கள் பொலிஸ் நிலையம் செல்வதற்கு பதிலாக, இராணுவமுகாம் சென்று தீர்வு தேடுவது நல்லது என்ற நிலைமை வந்துவிட்டமை அதன் ஒரு நீட்சியாக குறிப்பிடலாம்.

சரி இப்படியான சூழ்நிலையில் சிங்கள் அரசுகள் தரப்போகின்ற தீர்வை பெற்றுக்கொண்டு அமைதியாக வாழ்வதே நல்லது என்ற மனப்பாங்கும் எம்மக்களிடமும் உண்டு.குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவமிடம் அத்தகைய மனநிலை உண்டு.

அப்படியே தருவதை தான் பெற்றுக்கொள்ளப்போகின்றோம் என்றால், அதனை மக்களுக்கு தெளிவாக சொல்லி அதற்கான அரசியலை தமிழ்மக்களிடம் செய்யாமல், சமஸ்டி தீர்வு எடுப்போம் என்று பொய்யுரைத்து மக்களிடம் வாக்குகளை பெற்று அரசியலை செய்யக்கூடாது.

அப்படியான ஒரு அரசியலே – அப்படியான உணர்வை தட்டியெழுப்பி இளைஞர்களை உசுப்பேத்திவிட்டு – அன்று ஓடிப்போன தமிழ் அரசியல் தலைமைத்துவங்களை போல, அதேபிழையை இவர்களும் செய்தால் நாளை இன்னொரு அதிதீவிரமான நிலைப்பாட்டை நோக்கி இளைஞர்கள் செல்வதற்கும் இவர்களே காரணமானவர்கள் ஆவார்கள்.

சிங்கள தேசியவாத மனோநிலை பற்றியது

தமிழர்களுக்கு கௌரவமான தீர்வு ஒன்று கிடைப்பதை சிங்கள தலைவர்கள் மட்டுமல்ல சிங்கள சித்தாந்தத்தில் ஊறிப்போன சிங்கள மக்களும் விரும்பவில்லை என்ற யதார்த்தை விளங்கிக்கொள்ளவேண்டும்.

அத்தகைய சிங்கள சித்தாந்தத்தில் ஊறிப்போயிருப்பதால்தான் சம்பந்தன் தெரியாமலே கிளிநொச்சி இராணுவமுகாம் பகுதிக்க சென்றுவிட்டார் என்று தெரிந்தபின்னரும் அவரை கைது செய்யவேண்டும் கூச்சலிடுகின்றார்கள். கிழக்க மாகாண முதல்வர் மேடைக்கு செல்லும்போது இழுத்து நிறுத்தமுடிகின்றது. பின்னர் அவரையே மன்னிப்பு கேட்டு கடிதம் எழுத வைக்கமுடிகின்றது.

எனவே சிங்கள மக்கள் மனம்மாறி எங்களுக்கு தீர்வைதந்துவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது, அப்படி எதிர்பார்த்து எமது கருத்துக்களை எமது தீர்வுக்கான தேடலை ஒத்திப்போடுவது ஒன்றுக்கும் உதவபோவதில்லை.

தமிழரின் எதிர்கால செயற்பாடு தொடர்பானது

1.தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் தெரிவான 16 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபையில் தெரிவான 40 வரையான தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் இவர்களுக்கு கீழே வேலை பார்க்ககூடிய 150 பணியாளர்கள் என ஒரு பெரிய பலம் இருக்கின்றது.

இவர்களுக்கு பிரத்தியேக பணிகள் ஒதுக்கப்படாமல் நடைமுறை ரீதியாக என்ன செய்யப்படவேண்டுமோ அதனை செய்யக்கூடிய செய்விக்ககூடிய பலமாக இவர்கள் இருக்கின்றார்கள்.

ஆனால் அத்தகைய வளம் பயன்படுத்தப்பட்டதா முழுமையான முறையில் பயன்படுத்தப்பட்டதா என்று ஆராய்ந்தால் விளைவு சுழியமாகவே இருக்கும்.

16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் – மீன்பிடித்துறை விவசாயதுறை சமூகவளத்துறை கல்வித்துறை மீள்குடியேற்றம் என – ஒவ்வொரு துறையை பொறுப்பெடுத்து குறித்த பிரச்சனைகள் தொடர்பான தீர்வுகளை பெற்றுக்கொள்ள அவர்களது இயலுமைக்குட்பட்ட வகையில் எடுத்த நடவடிக்கை என்ன?

இதற்கான ஆலோசனைகள் தமிழ் சிவில் சமூகத்தால் வழங்கப்பட்டபோதும் இன்னமும் செய்யப்படமுடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

2.சர்வதேச விசாரணை நடக்கவிடமாட்டோம் என சிறிலங்கா அரசு சொல்கிறது. அப்படியான விசாரணை இப்போதைக்கு நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

ஆனால் அதுபற்றிய சாட்சிகளை திரட்டி காணாமற்போனோர்கள் பற்றிய பதிவுகளை தொகுத்து காத்திரமான ஒரு ஆவணக்கோப்பை ஏன் எங்களால் செய்யமுடியாமல் இருக்கின்றது?

முழுமையான ஒரு ஆவணக்கோப்பு தயார்செய்யப்பட்டு வைத்திருக்கப்பட்டிருக்குமானால் என்றோ ஒரு நாளைக்கு அதற்கு பதில் சொல்லவேண்டிய நிலையை நாங்கள் வைத்திருக்க முடியாதா?

3.தமிழர்கள் வாழும் ஒவ்வொரு கிராமத்திலும் என்னென்ன தேவைகள் என்னென்ன செய்யப்படமுடியும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எத்தனை தாய்தந்தை இல்லாத பிள்ளைகள் எத்தனை வறுமையில் வாடும் குடும்பங்கள் எத்தனை என்ற ஒரு தரவுகளை பெற்று தேவைகள் என்ன பட்டியலை தயார்செய்து வைத்திருக்கின்றோமா?

ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு அரசஅலுவலர் குறைந்த பட்சம் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஆனால் அவர் மத்திய அரசின் பிரதிநிதியாக வேலை செய்யவேண்டிய நிலை.

எனவே மாகாணஅரசுக்குட்பட்ட ஒரு அலுவலரை நியமிப்பதற்கு வழிவகைகளை காணமுடியாதா? அதன்மூலம் அடிமட்டம் தொடக்கம் உயர்மட்டம் வரை நேரடியான தொடர்புகளை மாகாணஅரசுகளால் பேணக்கூடிய சூழல் இருக்குமல்லவா?

4.வடக்கு கிழக்கு இணைக்கப்படமாட்டாது என சிங்கள அரசு சொல்கின்றது. ஆனால் அந்த இணைப்பை எங்கள் மட்டத்தில் தமிழர்கள் மட்டத்தில் தமிழ் பிரதிநிதிகள் மட்டத்தில் ஏன் செய்யமுடியாது?

வடக்கு கிழக்கு இணைந்தவகையில் எங்களிடம் ஒரு செயற்பாட்டு மையம் அல்லது தொண்டுநிறுவனம் இருக்கின்றதா? வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் தாங்கள் இணைந்தவர்கள் என்ற மனப்பாங்கை உருவாக்குவதற்கு நாம் என்ன செய்திருக்கின்றோம்?

வடக்கு கிழக்கு இணைந்த மட்டத்தில் எங்களால் எடுக்கபப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் உ வடக்கு கிழக்கு இணைந்த மட்டத்தில் – ஒரு மேசையில் இருந்து ஒரு மாநாடு நடத்த மைத்திரியா அனுமதி கொடுக்கவேண்டும்?

5.தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் நடைபெறும் இனஅடக்குமுறைகள் சிங்கள குடியேற்றங்கள் அதிகாரதுஸ்பிரயோகங்கள் காணி அபகரிப்புகள் அல்லது முழுமையற்ற காணி விடுவிப்புகள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக மாதாந்தம் ஒரு அறிக்கை ஒன்றை பலமான ஒரு கட்டமைப்பின் ஊடாக கொண்டுவருவதன் ஊடாக அவற்றை நாம் ஆவணப்படுத்தலாம் அல்லவா?

அந்த ஆவணங்களையே நல்லாட்சி அரசின் முன்னேற்றங்களாக சர்வதேச நாடுகளின் தூதுவர்களுக்கு முன்னால் கொண்டுசெல்லலாம் அல்லவா?

இப்படியாக எம்மால் செய்யக்கூடிய பலவிடயங்கள் செய்யப்படாமல் இருக்கின்றன. இவற்றை செய்யத்தவறும் பட்சத்தில் தமிழர் தரப்பு ஒரு தேக்கநிலையிலேயே இருக்கும்.

அப்படியானால் முடிவுதான் என்ன? என்ன செய்யலாம்?

வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களின் பிரச்சனைகளை ஆய்வுசெய்து அதற்கான பணிகளை முன்னெடுக்க ஒரு கட்டமைக்கப்பட்ட இயக்கம் அல்லது ஒரு நிறுவனம் தேவை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செய்யமுடியாத, செய்யத்தயங்குகின்ற அல்லது செய்யஇயலாத விடயத்தை தமிழ்மக்கள் பேரவை செய்யும் என எதிர்பார்க்கலாமா?

தமிழ்மக்கள் பேரவை தற்போது பல உபகுழுக்களை நியமித்துள்ளது. அவர்களால் இந்தவிடயத்தில் முன்னேற்றத்தை காட்டமுடியுமா என்பதை காலம்தான் பதில்சொல்லவேண்டும். எனினும் அதற்காக காத்திருக்கமுடியுமா?

எனவேதான் முழுநேரமாக உழைக்கக்கூடிய மனிதவளங்களை கொண்டு வளநிறுவனம் ஒன்று உருவாக்கப்படவேண்டும். ஒரு பத்துப் பணியாளர்களை உள்வாங்கி வடக்கிலும் கிழக்கிலும் முழுநேரப்பணியில் அந்த நிறுவனம் அதில் ஈடுபடலாம்.

எப்படியான செயற்றிட்டங்கள் செய்யப்படலாம் என்பதையும் எப்படியான தேவைகள் இருக்கின்றன என்பதையும் என்ன பிரச்சனைகள் இருக்கின்றன என்பதையும் அவர்கள் இனங்காணவேண்டும் கண்டறியவேண்டும் அதனை ஆவணமாக்கவேண்டும்.

செய்யப்படவேண்டிய வேலைகளை அரசியல்வாதிகள் ஊடாகவும் வெளிநாட்டு தூதுவர்கள் ஊடாகவும் கிராம கட்டுமானங்கள் ஊடாகவும் செய்யப்படுவதற்கு அவர்கள் வழிகளை கண்டறியவேண்டும்.

ஒரு நோக்கத்தோடு ஒருமித்த சிந்தனையோடு ஒரு இயக்கம் போல அவர்கள் பணியாற்றவேண்டும். இப்படியான ஒரு நிறுவனத்தை தொடக்கி தாயகத்தின் வளர்வதற்கு புலம்பெயர் தேசத்தில் வாழ்பவர்கள் கைகொடுக்கவேண்டும்.

அமெரிக்கா வந்து எங்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் என்றும் பிரித்தானியாவுக்கு ஒரு கடமை இருக்கின்றது அது எங்களுக்கு ஏதாவது செய்யும் என்ற கற்பனைவாதத்தில் வாழாமல்எங்களுக்கான தேசத்தை எங்களுக்கான கட்டமைப்புகளை நாங்களே உருவாக்குவோம்.

– நன்றி துளியம்