News Ticker

Menu

முதலமைச்சர் எதிர் ஆளுநர் (இப்போது கிழக்கு) - அரிச்சந்திரன்

அண்மையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் ஒரு பாடசாலை நிகழ்வு நடந்திருந்தது. அதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அகமட் நசிட் ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோர் வந்திருந்தனர்.

பாடசாலைக்கான விஞ்ஞான ஆய்வுகூடம் ஒன்றை நிறுவ அமெரிக்க நிதியுதவி வழங்கப்பட்டிருந்தது. அந்த ஆய்வுகூடத்தை நிறுவியதற்கான கட்டுமானப்பணிகளை செய்தது கடற்படை. அந்த கட்டுமான பணிக்கான குத்தகை எப்படி நடந்தது. அது விரைவில் வெளிவரும் என நம்பலாம்.



அந்த ஆய்வுகூடத்தை திறந்துவைக்கும் நிகழ்வே அன்று நடைபெற்றது. திறந்துவைக்கும் நிகழ்வு கடற்படையினர் தலைமையில் நடைபெற்றது. இப்பாடசாலை மாகாணசபைக்கு உரிய பாடசாலை. எனினும் நிகழ்வின்போது மேடைக்கு செல்ல முற்பட்ட முதல்வர் கடற்படை அதிகாரி ஒருவரால் தடுக்கப்பட்டார். அவ்வாறு அவர் தடுக்கப்படும்போது ஆளுநரும் அமெரிக்க தூதுவரும் மிக நெருக்கமாக முதலமைச்சருடனே நின்றார்கள்.

அப்படியிருந்தும் அக்கடற்படை அதிகாரி அவரை முதலமைச்சர் என்று தெரியாமல் தடுத்ததாக இப்போது சொல்லப்படுகின்றது. இப்படித்தான் அப்போதைய பாரதப்பிரதமர் கொழும்புவந்தபோது இராணுவ சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்டார். அப்போது கடும்வெய்யிலால் மயங்கி (Sun stroke) ராஜீவ்காந்தி மேல் விழுந்துவிட்டதாக அன்றைய சிறிலங்கா சனாதிபதி ஜெயவர்த்தனே சொன்னார்.

அப்படி அந்த முதலமைச்சர் தடுக்கப்பட்டபோது அவர் கடும்கோபத்தில் கடற்படை அதிகாரியை அவமதித்து பேசியதாக சொல்லப்படுகின்றது. உனக்கு அரச நடைமுறைகள் தெரியவில்லை என்னை மறிக்கிறாயே எனச் சினந்தார்.

முஸ்லிம் முதலமைச்சர் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவதில்லை என்ற குற்றசாட்டு உண்டு. தனிப்பட்ட ரீதியில் அந்த முதலமைச்சரின் செயற்பாடுகளை ஆராய்வதல்ல இப்பத்தியின் நோக்கம். அதனை வேறு தளத்தில் ஆராய்வோம்.

இங்கு கவனத்திற்குரிய விடயம் என்னவெனில் ஒரு மாகாண முதலமைச்சருக்கு நடந்த சம்பவத்திற்கான எதிர்விளைவுகள் என்னவென்பதே.

1. மறித்த கடற்படை வீரர் பதவி உயர்த்தப்பட்டு கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. அவமதித்த முதலமைச்சர் இனி எந்த இராணுவ முகாம்களுக்கும் செல்ல கூடாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இப்போது அங்கு உண்மையில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.


பாடசாலை ஆய்வுகூட திறப்பு விழாவுக்கு கிழக்கு முதலமைச்சர் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோர் வருகை தந்திருந்தபோதும் அவர்கள் மேடைக்கு அழைக்கப்படவில்லை.

ஆளுநரும் அமெரிக்க துாதுவரும் மட்டுமே பரிசில்கள் கொடுத்து கௌரவிக்க ஒலிபெருக்கியில் மேடைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது இவர்கள் மேடைக்கு கீழே காத்திருந்தார்கள்.

இவர்களை ஆளுநர் கண் சைகையால் மேடைக்கு வருமாறு அழைத்தார். இவர்களிருவரும் மேடையில் ஏறிச்சென்றபோது முதலமைச்சரை அந்த கடற்படை அதிகாரி இழுத்து மறித்துள்ளார்.

அப்போதுதான் மாகாணத்திற்கான ஒரு முதலமைச்சர் ஆக நானிருக்கின்றேன். இப்பாடசாலை உட்பட மாகாணத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் கல்வி அமைசசராகவும் இதே தொகுதியை சேர்ந்த தண்டாயுதபாணி இங்கே இருக்கிறார். அவர்களை முறையாக அழைக்கவேண்டும் என்ற அரச நடைமுறைகள் தெரியாமல் இருக்கிறீர்களே என வெளிப்படையாக கடிந்தார் நசீர் அகமட்.

இதில் எங்கே தவறு நிகழ்ந்தது? மாகாண சபைக்கு உரித்தான அதிகாரங்களின்படி என்றாலும் இவர்களிருவருக்குமான கௌரவம் வழங்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் நடக்கவில்லை. மாறாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கடுமையான குற்றசாட்டுக்கள் சிங்கள தரப்பால் முன்வைக்கப்படுகின்றன.

இதில் ஒருவர் சிங்கள முதலமைச்சராக இருந்திருந்தால் நிலை என்ன?

இதில் ஒருவர் தமிழ் முதலமைச்சராக இருந்திருந்தால் நிலை என்ன?

கிளிநொச்சி இராணுவ முகாம் பகுதிச் சென்ற எதிர்கட்சி தலைவர் சம்பந்தர் என்ன பாடுபடவேண்டியிருந்தது. அழாத குறையாக அதுவொரு இராணுவமுகாம் என்றே தெரியாமல்தான் நான் உள்ளே சென்றேன். யாரேனும் மறித்திருந்தால் போயிருக்கமாட்டேன் என சம்பந்தன் எவ்வளவு இறங்கவேண்டியிருந்தது?

சுமந்திரன் இதற்காகவே சிறப்பு ஊடக சந்திப்பு வைத்து சம்பந்தன் ஐயா அறியாமல் செய்த விடயத்தை தமிழ் ஊடகங்களுக்கு விளங்கப்படுத்தினார்.

தமிழர் தரப்பை பொறுத்தவரை அவர்கள் இப்போது ஒரு தரப்பாக இல்லை. தருவதை பெற்றுக்கொள்ளும் அல்லது கிடைப்பது எதுவோ அதனை தமிழ் மக்களுக்கு நியாயப்படுத்தும் தரப்பாக மாறியுள்ள நிலையில் சம்பூர் சம்பவம் பல செய்திகளை சொல்லியுள்ளது.

மகிந்த இராசபக்ச காலத்தில் ஒரு சிறிலங்கா புலனாய்வுத்துறை மேஜர் தர அதிகாரி இன்னொரு அரசியல்வாதியின் மகனுடன் கைகலப்பில் ஈடுபட்டார் என்பதற்காக மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டு புலனாய்வு பிரிவிலிருந்தே மாற்றப்பட்டிருந்தார். அப்போது அந்த "போர்வீரன்" செய்த பிழை என்ன?

குறிப்பாக புரிந்துகொள்ளக்கூடியது என்னவெனில் எண்ணிக்கையில் சிறிய தொகையினரான தமிழர்களையும் முஸ்லிம்களையும் உரிய கௌரவத்துடன் கண்டுகொள்ள சிங்கள பெருந்தேசியவாதம் தயாராவில்லை என்பதைதானே?

இப்படியான தவறுகளுக்கு ஆளுநரே காரணம் என்றும் முதலமைச்சரின் அதிகாரிகரங்களில் தொடர்ந்தும் ஆளுநர் தலையீடு செய்வதாகவும் கடற்படை அதிகாரியின் தவறுக்கும் ஆளுநரையே முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலளித்த ஆளுநர் முதலமைச்சரை கடற்படையினருக்கு அறிமுகம் செய்துவைக்கவேண்டியது தனது கடமையல்ல என தெரிவித்துள்ளார்.



ஒப்பீட்டு ரீதியில் மென்போக்கான ஆளுநர்களே வடக்கிற்கும் கிழக்கிற்கும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு பார்வை உண்டு. ஆனால் அங்கே தான் கடுஞ்சிக்கல்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது போன்ற இச்சம்பவம் இருக்கின்றது.

ஒரு மாகாணத்தின் முதலமைச்சர் யார் என்பதும் அவருக்கு உரித்தான அதிகாரங்கள் முக்கியத்துவம் பற்றிய விளக்கஅறிவு அல்லது நெறிமுறை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கடற்படைக்கு சொல்லப்பட்டிருக்கவேண்டும்.

எனவே அங்கே அறியாமல் ஒரு தவறு நடந்தால் மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரே பதில் சொல்லவேண்டும். ஆனால் இங்கு அவர் அதனை மறைக்கமுயலுகின்றார்.

இதன் மூலம் புரிந்துகொள்வது யாதெனில் மாகாணசபைக்கு என்ன அதிகாரங்கள் உள்ளன என்பதை புரிந்துகொள்ளவும் மென்போக்காக கருதப்பட்ட வடக்கு கிழக்கு முதலமைச்சர்கள் ஏன் அதன் குறைபாடுகளை வெளிப்படையாக சொல்லுகின்றார்கள் என்பதற்கும் மென்போக்காக கருதப்படுகின்ற ஆளுநர்களால் அந்த மென்போக்கான முதல்வர்களுடன் ஒத்துப்போகமுடியவில்லை என்பதற்கும் விடையை கண்டுகொள்ளவேண்டும்.

அதற்கான விடையை கண்டுகொள்ளும்போது சிங்கள பெருந்தேசியவாத மனநிலையை புரிந்துகொள்ளலாம்.

அரிச்சந்திரன்

Share This:

No Comment to " முதலமைச்சர் எதிர் ஆளுநர் (இப்போது கிழக்கு) - அரிச்சந்திரன் "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM