News Ticker

Menu

Browsing "Older Posts"

Browsing Category "மறவன்"

தாயகத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது ஏன்? - 3

Sunday, August 16, 2015 / No Comments
தாயகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வரும் வீழ்ச்சியும்
மாற்றுத்தரப்பான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு வரும் கணிசமான
வளர்ச்சியும் சர்வதேச மட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கான
பலத்தை அதிகரிக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து கடந்த கட்டுரை
நிறைவு செய்யப்பட்டிருந்தது. அக்கருத்தைச் சற்று விரிவாகப் பார்ப்பதே
இக்கட்டுரையின் நோக்கம்.




முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக எவ்வாறான
அணுகுமுறையைக் கடந்த காலத்தில் உலகம் கையாண்டது, இப்போது
கையாண்டுகொண்டு வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும். சில
ஆண்டுகளின் முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளைச்
சந்திக்கவென அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. முள்ளிவாய்க்கால்
பேரழிவின்பின்னர், அதாவது புலிகள் களத்தில் இல்லாமற்செய்யப்பட்ட
பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அதிகாரபூர்வமாக ஒரு மேற்குலக
வல்லரசு சந்திப்பதற்கான அழைப்பாக அது இருந்தது.

அவ்வாறு அழைப்பு விடப்பட்ட செய்தி கசிந்தவுடனேயே தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பு இந்தச் சந்தர்ப்பத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்,
என்னென்ன பேச வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது, என்று
கூட்டமைப்புக்கு அறிவுரையும் ஆசியும் கூறி தமிழ் அமைப்புக்கள்
அறிக்கைகள் விட்டன. அதுவரை ஒருவிதத் துயரக் கடலில் மூழ்கிப்போய்
சலிப்போடிருந்த தமிழ் அரசியல் உலகம் அச்சந்திப்புப் பற்றிய
அறிவித்தலால் திடீரென சலசலப்புக்குள்ளானது.

அந்நேரத்தில் அச்சந்திப்புக்குப் போகவென ஐரோப்பாவில் தங்கியிருந்த
திரு. மாவை சேனாதிராஜாவை தனிப்பட்ட நட்புக் காரணமாக மூத்த
போராளியொருவர் சந்தித்து வாழ்த்துச் சொல்லப் போனார். ஆனால்
மாவையின் வரவேற்பு எதிர்பாராதவிதமாக இருந்தது.

“தம்பி, இதுவொரு விசயமெண்டு நீரும் வெளிக்கிட்டு வாழ்த்துச் சொல்ல
வந்திருக்கிறீர். இதுவரைக்கும் இன்னும் அப்பொய்ண்ட்மென்டே
கிடைக்கேல. முக்கியமான ஒருத்தரும் நேர கதைக்கவுமில்லை.

இதுவரைக்கும் றிசப்ஷனில நிக்கிற ஒருத்தரோட தான் போனில
கதைச்சிருக்கு. எப்ப சந்திப்பு, ஆரோட சந்திப்பு, ஆரார் அங்க போறது, எங்க
தங்கிறது, ஆர் பிளைட்டுக்கு ரிக்கெட் போடுறது எண்டுகூட ஒரு
தகவலுமில்லை. இந்தச் சந்திப்பு உண்மையில நடக்குமா இல்லயா
எண்டதே எங்களுக்குத் தெரியாது. நாலுநாளா இதுபற்றி ஒரு
கதையுமில்லை. இருக்கிற விசரில ஆளாளுக்கு இதுபற்றி அறிக்கையும்
வாழ்த்தும் சொல்லிக்கொண்டிருக்கினம். நடக்குமா எண்டே தெரியாத ஒரு
மீற்றிங்குக்கு, நடந்தாலும் ஆரேன் ஒரு பியோனோடதான் நடக்குதோ
தெரியாது – அதுக்கு அளாளுக்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறியள்.”
என்ற தொனியில் மாவையாரின் விசனம் வெளிப்பட்டது.

அந்நேரத்தில் உலகஅரங்கில் கூட்டமைப்பின் நிலையும் அதுதான். அப்போது
மேற்குலகுக்கு ராஜபக்ஷவுடனான தேனிலவு முழுமையான கசப்பு
நிலையை எட்டியிருக்கவில்லை. கூட்டமைப்புடான சந்திப்பு என்ற
செய்திகூட ராஜபக்ஷவை சற்றே வெருட்டி வைக்கவென பயன்படுத்திய
ஓர் ஆயுதம்தான் என்பது பின்னர் புலப்பட்டது. இழுத்தடித்து நிகழ்த்தப்பட்ட
அந்த முதற்சந்திப்புகூட எந்தவித உருப்படியான சங்கதிகளுமின்றி ஒப்புக்கு
நிகழ்த்தப்பட்டதாகவே அரங்கேறியிருந்தது.

பின்னர் ராஜபக்ஷவுடனான முரண்பாடுகள் அதிகரித்துச் செல்லச் செல்ல
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான முக்கியத்துவத்தை உலகம் உயர்த்தத்
தொடங்கியது. அதாவது சிங்களதேசத்துடன் தமக்கான ஒரு பேரம்பேசும்
சக்தியாக கூட்டமைப்புக்கான தமது முக்கியத்துவத்தை உலகம்
பயன்படுத்தியது. இதுதான் கடந்தகால நிகழ்வு.

இன்றிருக்கும் நிலை என்ன என்பதைப் பார்ப்போமானால் கூட்டமைப்பின்
பலமென்பது உலகஅரங்கில் மட்டுப்படுத்தப்பட்டதுதான். இதற்கு
கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ‘எள் என முன்னர் எண்ணெயாக’ நிற்கும்
நெகிழ்ச்சித் தன்மையுடன் நிற்பது முக்கிய காரணம் என்றபோதும்
உலகுக்கு கூட்டமைப்பு தொடர்பான அதிக பயம் கொள்ளத்
தேவையில்லாத நிலையும் மிக முக்கிய காரணம்.

அதாவது என்னதான் கிள்ளுக்கீரையாக நினைத்து விளையாடினாலும் கூட்டமைப்பானது தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்ற நிலையைவிட்டு மாறப்போவதில்லை, கூட்டமைப்பும் எதிர்த்துநின்று வாதாடப்போவதில்லை என்பதே வெளிப்படை உண்மை. சொல்வதற்கெல்லாம் தலையாட்டிவிட்டு
வரவேண்டிய ஒரு நிலையில்தான் கூட்டமைப்பு சர்வதேசநிலையில்
காணப்படுகிறது.

இன்னும் சுருக்கிச் சொன்னால், தாம் என்னதான் செய்தாலும் தமிழ்மக்கள்
தமக்குத்தான் வாக்களித்துத் தீரவேண்டும் என்ற நிலையிருக்கும்வரை

த.தே.கூட்டமைப்பு தான்தோன்றித்தனமாக நடப்பதைப் போலவே,
சர்வதேசமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் நடந்துவருகின்றது.
கூட்டமைப்பான மேற்குலக மற்றும் பிராந்திய அழுத்தங்களுக்குப் பணிந்து
கொள்கையில் தமது நிலையைக் கீழிறக்கியும் வருகின்றது.

இந்நிலையில் த.தே.கூட்டமைப்பின் தொடர்ச்சியான இருப்புக்கு
தாயகத்தில் விடப்படும் சவால் சர்வதேசத் தளத்தில் அதன் பேரம்பேசும்
பலத்தைச் சற்று அதிகரிக்கும். தமிழ்மக்களிடத்தில் த.தே.கூட்டமைப்பைச்
செல்வாக்கோடு வைத்திருக்க வேண்டுமென்றால் உலகம்
த.தே.கூட்டமைப்புக்குச் சார்பாக சில நிலைமைகளைக்
கொண்டுவரவேண்டும். அவ்வகையில் தமிழ்மக்களின் நலன்சார்ந்து
கூட்டமைப்பு விடுக்கும் சில வேண்டுகைகளை சர்வதேசம்
நடைமுறைப்படுத்த எத்தனிக்கும்.

ஏனென்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் போன்ற ஓர் அமைப்புத்தான்
தமிழரின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டுமென்பது மேற்குலகின்
விருப்பமாக இருக்கும். ஒப்பீட்டளவில் தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியானது கொள்கையில் பிடிவாதத்துடனும், உயர்ந்தபட்சக்
கோரிக்கையுடனும், மேற்குலகைப் பொறுத்தவரை
கடும்போக்குவாதிகளாகவும் இருக்கின்ற நிலையில், தமிழ்மக்களுக்கான
தலைமைப்பதவி கூட்டமைப்பைவிட்டு நீங்குவதை உலகம்
தெரிவுசெய்யாது. ஆகவே கூட்டமைப்பைத் தொடர்ந்தும் தமிழ்மக்களின்
தலைமையாக வைத்திருக்க ஏதாவது செய்யவேண்டிய நிலைக்கு
சர்வதேசம் தள்ளப்படும்.

இந்நிலை எப்போது உருவாகுமென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு
உண்மையிலேயே சவால் எழும்போதுதான். அதாவது அதற்கான மாற்றணி
ஒன்று மக்கள் செல்வாக்குடன் வளரத் தொடங்குவதும், அந்த வளர்ச்சி
காலப்போக்கில் தலைமைத்தன்மையைக் கூட்டமைப்பிடமிருந்து
பறித்துவிடுக்கூடும் என்ற பயமும் உண்மையில் எழ வேண்டும்.

இந்நிலையில்தான் கூட்டமைப்பானது, ‘நாம் இதைவிடவும் கீழிறங்கிப்
போக முடியாது, அப்படிப் போனால் மக்களின் ஆதரவு மறுபக்கம்
மாறிவிடும். எனவே இந்தநிலைதான் எமது குறைந்தபட்ச நிலையாக
இருக்க முடியும்’ என்று தமது கொள்கைநிலையைத் தக்கவைக்க முடியும்.
அத்தோடு மக்கள் நலன்சார்ந்து பல வேலைத்திட்டங்களை உலகைக்
கொண்டு நடைமுறைப்படுத்தவும் முடியும்.

ஆகவேதான், கூட்டமைப்புக்கான சவால் ஒன்று தாயகத்தில் வலுவாக
எழும்நிலையில் கீழ்வரும் இரு நன்மைகளைக் கூட்டமைப்பும்
அதன்வழியாக தமிழ்ச்சமூகமும் பெறமுடியும்.

1. கூட்டமைப்பானது வழிதவறிப் போகாமல் சரியான வழியில் தம்மை
நெறிப்படுத்திச் செல்லும்
2. சர்வதேச மட்டத்தில் கூட்டமைப்பின் பேரம்பேசும் வல்லமையை
உயர்த்துவதோடு தமது கொள்கை நிலையில் கீழிறங்காது
தமிழ்மக்களுக்கான சில சலுகைகளையும் உலகிடம் பெற்றுக்கொள்ள
முடியும்.

இதில் இரண்டாவது காரணத்தையே இக்கட்டுரை ஆராய்ந்திருக்கிறது.
அதாவது தாயகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கான வாக்கு வங்கி
குறைந்து அதற்குரிய மாற்றுத்தளமான தமிழ்த்தேசிய மக்கள்
முன்னணியின் பலம் அதிகரிக்கும்பட்சத்தில் அது தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பினை சர்வதேச மட்டத்தில் பலமுள்ளதாக்கும். அதாவது
தாயகத்தில் பலவீனப்படுவது சர்வதேசத்தில் கூட்டமைப்பைப்
பலப்படுத்தும் என்ற வாதத்தை வைத்து இக்கட்டுரை
நிறைவடைகின்றது.

அந்த மாற்றுத்தளத்துக்கான பலத்தை் அதிகரிக்க இந்த நாடாளுமன்றத்
தேர்தலில் தாயகம் முழுவதும் கணிசமான வாக்குகள்
த.தே.ம.முன்னணிக்கு விழுவதுடன் ஓரிரு நாடாளுமன்ற
ஆசனங்களையும் அக்கட்சி பெற்றுக்கொள்ள வேண்டும். அதைநோக்கி
தமிழர்கள் செயற்படுவது தற்காலத்தில் வரலாற்றுக்கடமையும்கூட.

தாயகத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது ஏன்? - 2

Monday, August 10, 2015 / No Comments
தாயகத்தில் நடைபெறும் தேர்தலுக்கு புலம்பெயர் சமூகம் ஏன் இவ்வளவு
முண்டியடிக்கிறது? ஏன் தாயக மக்களுக்குப் போதிக்க முற்படுகின்றது?
அளவுக்கு மீறிய பதற்றத்தோடு புலம்பெயர் தமிழ்ச்சமூகம் ஏன்
பரிதவிக்கின்றது? போன்ற கேள்விகள் பலரால் கேட்கப்படுகின்றன.
உண்மையில் இதில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால்
புலம்பெயர்த் தமிழ்ச்சமூகம் தனக்குரிய வகிபாகத்தையும் மீறி இதில்
அதிக முனைப்புக்காட்டுவதற்கும் நியாயமான காரணம் இருக்கத்தான்
செய்கின்றது. இக்கட்டுரையானது புலம்பெயர்ச் சமூகம் இதை ஏன்
இவ்வளவு தீவிரமாகக் கையாள்கிறது என்பதையும்
புலம்பெயர்ச்சமூகத்தின் நோக்கிலிருந்து இத்தேர்தலில் யார்
வெல்லவைக்கப்பட வேண்டுமெனவும் தர்க்கிக்கின்றது.



தற்போதைய சூழலில் எமது தாயக மக்களின் பாதுகாப்பு, தேசத்தின்
பாதுகாப்பு, எமது இனத்தின் விடுதலைக்கான பயணம் என்பவற்றில்
புலம்பெயர் மக்கள் சக்தியின் வகிபாகம் முன்பைவிட அதிகம். அதாவது
2009 மே மாதத்தின் பின்னர் இந்த வகிபாகமும் பொறுப்பும்
அதிகரித்துள்ளது என்பதே உண்மை. இது தாயகமக்களின் மீதான
ஆளுமையும், அதிகாரமும் அவர்களின் விருப்பு வெறுப்பைத் தீர்மானிக்கும்
சக்தியும் தமக்குண்டு என்ற இறுமாப்பைக் குறிப்பிடவில்லை. மாறாக
சர்வதேசத் தளத்துக்குக் கொண்டுவரப்பட்டுவிட்ட தமிழர் பிரச்சனையைக்
கையாள்வதில் அதிக அழுத்தத்தையும் செல்வாக்கையும் செலுத்தக்கூடிய
ஒரு சக்தியாக புலம்பெயர் மக்கள்கூட்டம் உள்ளதும், அவ்வகையில் அதிக
பொறுப்பும் பங்களிப்பும் தற்காலத்தில் புலம்பெயர் தமிழர்க்குள்ளது
என்பதுமே இங்கு வைக்கப்படும் விவாதம்.

அவ்வகையில் தாயகத்தில் யார் மக்கள் பிரதிநிதிகளாக வருவது எமது
விடுதலைப் பயணத்துக்கு உகந்தது என்பதில் புலம்பெயர் தமிழ்ச்சமூகம்
ஒரு நிலைப்பாட்டை எடுப்பதில் எத்தவறுமில்லை. அவ்வாறாயின்
யாருக்கான ஆதரவை புலம்பெயர்த் தமிழர்கள் முன்மொழியலாம்.
இதற்கு முன்னதாக எமது விடுதலைப் பயணத்தின் இலக்கும் ஒழுக்கும்
எத்தகையது என்பதை வரையறை செய்துகொண்டால்தான்
இக்கட்டுரையின் தர்க்கத்தை நாம் தொடரலாம்.

எமது இறுதி இலக்கென்பது எமது மக்களுக்குரிய நிரந்தரமான நியாயமான
ஒரு தீர்வு. அவ்வகையில் அது தம்மைத்தாமே நிர்வகிக்கக்கூடிய,
எக்காலத்திலும் ஏனையவர்களால் திரும்பப்பறிக்க முடியாத

அதிகாரங்களுடன் கூடிய ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தல் எனலாம். அது
தனித் தேசமாகவோ தனி நாடாகவோ அமையப்பெறலாம்.
இந்த இறுதி இலக்கை அடைய நாம் போக வேண்டிய ஓர் ஒழுக்காக,
முதன்மை மூலோபாயமாகக் கையாள நினைப்பது,

1. தமிழர்க்கு நடந்ததும் நடந்துகொண்டிருப்பதும் ஓர் இனவழிப்பு என்பதை
நிறுவுதலும்
2. அது நிறுவப்படும் பட்சத்தில் பன்னாட்டுச் சமூகத்தின் மேற்பார்வையில்
பொதுவாக்கெடுப்பு நடத்துதலும்

என்று நாம் வரையறுக்கலாம். இந்த ஒழுக்கில் நாம் பயன்படுத்தும்
தந்திரங்களாக போர்க்குற்ற விசாரணை உட்பட பல விடயங்கள்
அமையப்பெறும்.

ஆக, இனப்படுகொலை என்று நிறுவுவதும் பொதுசன வாக்கெடுப்பை
நடாத்துவதும் என்ற பயணத்தில் எம்மோடு இணைந்து பயணிக்கக்கூடிய
தாயகக் கட்சி எது என்பதை நாம் பார்க்க வேண்டும்.
இனப்படுகொலை, பொதுசன வாக்கெடுப்பு ஆகிய இரண்டு
விடயங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கவில்லை
என்பதை நாம் உணரலாம். தனிநபர்கள் சிலர் ஆங்காங்கே வாக்கு
அரசியலுக்காக இதைப் பேசக்கூடுமென்றாலும் ஒரு கட்சியாக
இவ்விரண்டு விடயங்களையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தே
நடந்து வந்துள்ளது. வடமாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து
கூட்டமைப்புத் தலைமை தம்மைத் தாமாகவே விலத்திக் கொண்டமையும்
இதுவரை அத்தீர்மானத்தை வரவேற்றோ முன்மொழிந்தோ எங்கும்
பேசியதில்லை என்பதும் கவனிக்கத் தக்கது.

அதைவிட இந்நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எவ்விடத்திலும் இவ்வினப் படுகொலைத்
தீர்மானத்தைப்பற்றி ஒரு வார்த்தையேனும் பேசியதில்லை. என்றோ
ஒருநாள் சிறிலங்கா நாடாளுமன்றில் தான் இனப்படுகொலை பற்றிப்
பேசியதை வைத்துக்கொண்டு இன்றுவரையும் திரு. சுமந்திரன் இந்த
விடயத்தில் பிடிகொடுக்காமல் கதைத்துக் கொண்டிருப்பதையும் நாம்
பார்க்க வேண்டும். பேச வேண்டிய எவ்விடத்திலும் இனப்படுகொலை
பற்றிப் பேசாமல் சிறிலங்கா நாடாளுமன்றில் ஒருநாள் பேசியதை வைத்து
தன்னைக் காத்துக்கொள்ளும் அந்த வாதத்திறன் அயோக்கியத்தனமானது.
இதுபோலவே பொதுவாக்கெடுப்பு குறித்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இசைவான கருத்தை என்றுமே சொல்லியதில்லை. இனியும் சொல்லப்
போவதுமில்லை.

ஆனால் இவ்விரு விடயங்களிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தெளிவாக தனது நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றது. உண்மையில்
இனப்படுகொலை தொடர்பான விவாவதத்தைத் தமிழர் அரசியல் அரங்கில்
தொடக்கி வைத்ததும், அது தொடர்பான உருப்படியான முனைப்பைச்
செய்தவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆவர்.
இனப்படுகொலையை நிறுவுதல் என்ற மாபெரும் செயற்றிட்டத்தை திரு.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் ஒரு நிபுணர்குழுவைக்
கொண்டு தொடங்கியவர்கள் இந்த த.தே.ம.முன்னணியினர் தான். ஆனால்
அரச பயங்கரவாதத்தால் அம்முயற்சி தடுக்கப்பட்டது. ஒப்பீட்டளவில் அதிக
செல்வாக்கும் பாதுகாப்பும் கொண்டிருந்த த.தே.கூட்டமைப்பினர்
அம்முயற்சியை எடுத்திருந்தால் ஓரளவாவது அந்நிபுணர்குழு தனது
ஆய்வை நடாத்தி முடித்திருப்பர்.

அதாவது இனப்படுகொலையை நிறுவுவதும் பொதுசன வாக்கெடுப்பை
நடாத்துவதும் என்ற இலக்கு நோக்கிய பயணத்தில் புலத்துத்
தமிழர்களோடு கைகோர்த்து வரக்கூடிய தாயகக் கட்சியாக தமிழ்த்தேசிய
மக்கள் முன்னணிதான் உள்ளது என்ற அடிப்படையில் புலம்பெயர் தமிழ்ச்
சமூகம் எடுக்கக்கூடிய நிலைப்பாடு என்பது த.தே.ம.முன்னணிக்கான
ஆதரவே.

இவ்விடத்தில் தற்காலத்தோடு ஒட்டி இன்னுமொரு முக்கிய
விடயத்தையும் கோடிட்டு இக்கட்டுரையை முடிக்கலாம். எதிர்வரும்
தேர்தலின் பின்னர் அரசாங்கத்தில் இணையுமா என்ற கேள்விக்கு த.தே.கூ.
இதுவரை தெளிவான பதிலை முன்வைக்கவில்லை. திரு. சுமந்திரனிடம்
இக்கேள்வி கேட்கப்பட்டபோது அரசில் இணைவது தனக்கு உடன்பாடில்லை,

ஆனால் கட்சி என்ன முடிவெடுக்கிறதோ தெரியாது' என்கிற ரீதியில்
பதிலளித்திருந்தார். கூட்டமைப்பின் ஏனைய குட்டித்தலைவர்களைத்
தனித்தனியாகக் கேட்டபோதும் இதுதான் பதில்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசாங்கத்தில் இணைந்தால்
புலம்பெயர் தேசத்தில் கூட தமிழரின் விடியல் நோக்கிய பயணத்தைத்
தொடர முடியாத நிலை ஏற்படும். உலகநாடுகளிடம் சிறிலங்கா
அரசாங்கத்துக்கு எதிரான கோரிக்கைகளை வைத்து எவ்விதப்
போராட்டங்களையும் நடத்த முடியாத நிலைக்குப் போய்விடும். அதாவது
தமிழரின் ஏக பிரதிநிதிகள் இணைந்திருக்கும் ஓர் அரசாங்கத்துக்கு எதிராக
என்ன போராட்டத்தை ஈழத்தமிழர் செய்துவிட முடியும்? இவ்வாறாக
போராட்டங்களைச் செய்ய வேண்டாமென த.தே.கூட்டமைப்பே எமக்கான
அறிவுரைகளை வழங்கக் கூடும். புதிய ஜனாதிபதி மைத்திரியை எதிர்த்து
லண்டனில் தமிழர்கள் கூடியபோது திரு. சுமந்திரன் அவர்கள் ‘நாம் தெரிவு

செய்த ஜனாதிபதியை நீங்கள் எப்படி எதிர்க்கலாம்?’ என்கிற ரீதியில்
கருத்தைத் தெரிவித்திருந்தார் என்பதை நாம் நினைவிற்கொள்ள
வேண்டும்.

இந்நிலையில்தான் எமக்கொரு மாற்றுத் தளம் தேவைப்படுகின்றது.
கூட்டமைப்பு அரசில் இணைந்தாலும்கூட அரசுக்கு வெளியே இருக்கக்கூடிய
தமிழ்த்தேசியக் கட்சியொன்றின் இருப்பு மிகமிக அவசியம். அது ஒரு
நாடாளுமன்ற உறுப்பினருடன் இருந்தாற்கூட போதும், புலத்தில் நாம் எமது
எதிர்ப்பரசியலை முன்வைத்துச் செயற்பட. தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியானது எதிர்வரும் அரசாங்கத்தில் இணைந்து ஆட்சியமைக்கப்
போவதில்லை என்ற உறுதிமொழியை அளித்துள்ளது.

இந்தத் தர்க்கத்தின்படியும் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தனக்கான தெரிவாக
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையே கொண்டிருக்க முடியும்.
இந்நிலைப்பாடுகளின் வெளிப்பாடுதான் தீவிர தமிழ்த் தேசிய
நிலைப்பாட்டைக் கொண்ட புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் தமிழ்த்
தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவை வெளிப்படுத்திச்
செயலாற்றுகின்றன என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஏன் ஆதரவளிக்க வேண்டும்?

Saturday, August 8, 2015 / 1 Comment

இப்போதுள்ள களநிலைவரப்படி விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த்தேசியத்தை வைத்து அரசியல் செய்யும் சக்திகளாக தேர்தல் களத்தில் ஈரணிகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்தப் பிளவு திட்டமிட்டு நடத்தப்பட்டதோ நடைமுறைப்படுத்தப்படுவதோ அன்று. 

மாறாக இது தானாய் நிகழ்ந்த ஒன்று என்றுதான் பார்க்க வேண்டும். இந்த இருநிலைக் களம் என்பது காலத்தின் தேவையேதான். அதாவது 2010 இல் கஜேந்திரகுமார் தலைமையில் ஓரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான தளத்தை உருவாக்காமல் விட்டிருந்தாற்கூட காலப்போக்கில் வேறு யாராவது அதை உருவாக்கியேதான் இருப்பார்கள். ஏனென்றால் ஈழத்தமிழ்ச்சமூகத்தின் இயங்குநிலையில் இந்த மாற்றணி கட்டாயத் தேவையும் காலத்தின் தேவையுமாகும்.




அவ்வகையில் இந்த இருநிலைத் தளங்கள் என்பது இன்றியமையாதது மட்டுமன்றி அது எமது அரசியற் பயணத்துக்கு ஆரோக்கியமானதுங்கூட. இக்கூற்றை ஏதோ ‘விழுந்த பாட்டுக்குக் குறி சுடுவதைப் போல்’ நிகழ்ந்துவிட்ட பிளவை எவ்வாறு பயன்படுத்துவது என்று ஆராயும்வகையில் சொல்லப்படவில்லை. மக்களின் நம்பிக்கையைத் தீர்க்கமாகப் பெறமுடியாத நிலையில் கட்சிகளும் தலைவர்களும் இருக்கையில் குறைந்தபட்சம் இரண்டு தெரிவாவது இருக்கின்ற நிலைமைதான் கட்சிகளையும் தலைவர்களையும் சரியாக வழிநடத்தக் கூடியவை. மக்களின் ஏகோபித்த ஆதரவையும் நம்பிக்கையையும் பெறக்கூடியதாகவிருந்த தலைமையும் கட்டமைப்பும் ஒன்றே ஒன்றுதான்.

2009 இல் ஏற்பட்ட மாற்றங்களின் பின்னர் மக்களுக்காக எத்தியாகத்தையும் செய்யும், உயிரே போனாலும் சமரசம் செய்யாத விடுதலைப் புலிகள் அமைப்புப் போன்ற தலைமை இல்லாத நிலையில் மாற்றுத் தளம் ஒன்று இருப்பது மட்டுமே ஒரு கட்சியைச் சரியாக வழிநடத்த வல்லது என்ற உலகப் பொது சனநாயகத்தன்மையைத் தமிழினம் சுவீகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்ந்தும் ஈரணிகள் தமிழ்த்தேசியம் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்க வேண்டியது தர்க்க ரீதியில் சரியானதாகும்.

இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கமும் செயற்பாடுமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஓரளவாவது தமிழ்த்தேசிய வட்டத்துக்குள் வைத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. இன்னும் தெளிவாக இதை விளங்கப்படுத்த வேண்டுமானால், கஜேந்திரகுமாரின் மாற்றணி 2010 இல் தோற்றுவிக்காது விடப்பட்டிருந்தால் அல்லது, 2010 நடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அவ்வணி செயற்படாமல் விட்டிருந்தால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசியமும் எந்நிலையை அடைந்திருக்கும் என்பதை வாசகர்களின் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன். 

ஆகவே மாற்றணி ஒன்று இயங்கிக் கொண்டிருந்த காரணத்தால்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் மக்கள்நலன் சார்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. ஏன் தாமதித்தென்றாலும் ஜெனிவா களத்துக்கு த.தே.கூ. போய்ச்சேர வேண்டி வந்ததும் அந்த மாற்றணியின் செயற்பாட்டால்தான். காணி அபகரிப்புப் போராட்டங்கள், காணாமற்போனோர் தொடர்பான போராட்டங்கள், சிறையில் தமிழர் படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் என பலவற்றில் பதாகை பிடிக்கவாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து சேர்ந்ததும் இந்த மாற்றணி மீதான பயத்தால்தான்.

இதுவே த.தே.ம.முன்னணிக்கும் பொருந்தும். த.தே.கூட்டமைப்பின் இடத்தைத் தாம் பிடிக்க வேண்டுமென்ற அவாவும், மக்களின் அரசியல் பிரிதிநிதித்துவத்தைத் தாம் பெறவேண்டுமென்ற துடிப்பும்கூட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இடைவிடாத தொடர் செயற்பாட்டுக்கான உந்துசக்தியாகவும் இருக்கின்றது. இயல்பாகவே வீட்டுக்குப் புள்ளடிபோட்டுப் பழக்கப்பட்ட மக்களிடமிருந்து தமக்கான வாக்குகளை அள்ள அளவுக்கதிகமாக உழைக்க வேண்டுமென்ற யதார்த்தம் அவர்களுக்கு உறைத்துக்கொண்டே இருக்கும். படிப்படியாகக் கூட்டிவரும் மக்கள் ஆதரவை இழக்காமலிருக்க த.தே.ம.முன்னணிக்கான உந்துசக்தியாக இருக்கப் போவதும் த.தே.கூட்டமைப்பு என்ற மாற்றுத்தளமொன்று இருப்பதுதான்.

ஆகவே மாற்றுத்தளம் ஒன்று செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதுதான் தாம் சரியாகவும் நேர்மையாகவும் மக்கள் நலன்சார்ந்தும் செயற்பட அந்தந்த அரசியற்கட்சிகளைத் தூண்டுகின்றன. ஆகவே எதிர்க்கட்சி என்ற ஒரு சனநாயகப் பண்பு தற்காலத்திலும் எதிர்காலத்திலும் தமிழ்த்தேசத்துக்கு இன்றியமையாதது.

இங்கே ஓரிரு நாடாளுமன்ற ஆசனங்களை அதிகரிப்பதற்காக ஒற்றுமை என்ற பதாகையின்கீழ் ஒருகட்சியாகச் செயற்படுவதை இன்று பலர் முன்மொழிகின்றனர். அதுவும் வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் இப்படி இருகட்சிகளாக நிற்பது குறித்து பலரும் ஆதங்கப்படுகிறார்கள். அடிப்படையில் இந்த வெண்ணெய் திரண்டு வருவதுகுறித்த கதையாடல்கள் மேம்போக்கானவை, யதார்த்தத்தை உணராத கற்பனைகள் என்பதே உண்மை. அப்படியே திரண்டுவந்தாலும் ஒருகட்சியாக நின்றால்தான் வெண்ணெய் எடுக்கலாமென்பதும் தவறான கணிப்பு.

மாற்றணி இல்லாத ஒருகட்சி அரசியல் ஏற்படுத்தும் பாதக விளைவுகளோடு ஒப்பிட்டால் இரண்டு ஆசனங்களைப் பணயம் வைத்து நாம் மேற்கொள்ளும் இருகட்சி அரசியல்பாதை மிகமிக ஆரோக்கியமாகவும் தமிழ்த்தேசத்தின் விடியல்நோக்கிய நம்பிக்கைதரும் பயணமாகவும் அமையும். இந்த ஒருகட்சி அரசியல் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப் போகச்செய்கிறது என்ற விமர்சனத்தின் வெளிப்பாடே இந்த மாற்றணியின் உருவாக்கம். அவ்வாறு மாற்றணி அமைந்தபின்பும் தமிழரின் உரிமைப்போராட்டத்தை சரிவர நகர்த்தவில்லை என்ற விசனமே இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மீதான எதிர்ப்புணர்வு வளர்ச்சியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு வளர்ச்சியும்.

தமிழ்த் தேசிய விடுதலைக்காகத் தீவிரமாக இயங்கிய, இயங்கிக்கொண்டிருக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் “அனைத்தும்” (இந்த ‘அனைத்தும்’ என்பதற்குள் அடங்கா அமைப்புக்கள் தீவிரமாகவோ அல்லது தமிழ்த்தேசிய விடுதலைக்காகவோ இயங்குவனவல்ல – குறிப்பாக உலகத்தமிழர் பேரவை - என்பது கட்டுரையாளரின் கணிப்பு) இன்றைய நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான நிலையை எடுத்திருக்கின்றன. இந்த யதார்த்தம் உணர்த்தும் உண்மையானது தாயகத்திலும் எதிரொலிக்கும் பட்சத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சரியான வழிக்குக் கொண்டுவரக் கூடும்.

இவ்வாறு மாற்றுத் தெரிவுக்கான அணிகளாகச் செயற்பட வேண்டிய இரு அணிகளும் துரதிஸ்டவசமாக ஒருவரையொருவர் வசைபாடும் இழிநிலை அரசியலுக்குள் சென்றுகொண்டிருப்பது வருந்தத்தக்கது. இந்த நிலையொன்றுதான் நாம் இந்த இருகட்சி அரசியல்பாதையில் வருந்தக்கூடிய ஒன்றாக இருக்குமேயன்றி பொதுவாகவே இப்பாதை ஆரோக்கியம் மிக்கதொன்றாகவே அமையும்.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு குறைவடைவதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு அதிகரிப்பதும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராடத்தைச் சரியான வழியில் கொண்டு செல்ல உதவும்.

அவ்வகையில் இன்னும் மக்கள் ஆணையைப் பெறாமல் ஆனால் மாற்றுத் தளத்தை ஓரளவுக்கு அர்ப்பணிப்போடு கட்டியெழுப்பிக்கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு தமிழர் தாயகமெங்கும் பரவலாக அளிக்கப்படும் வாக்குகளும் ஓரிரு நாடாளுமன்றத் தெரிவும் ஈழத் தமிழினத்தின் அரசியல் எதிர்காலத்தை ஆரோக்கியமாகக் கொண்டுசெல்ல உதவும்.

இதைவிடவும், தாயகத்தில் நிகழும் இந்த வாக்கு மாற்றம், சர்வதேசத் தளத்தில் எதிர்வளமாக தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வரும் வீழ்ச்சியும் மாற்றுத்தரப்பான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு வரும் கணிசமான வளர்ச்சியும் சர்வதேச மட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கான பலத்தை அதிகரிக்கும். இதுகுறித்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.