News Ticker

Menu

Browsing "Older Posts"

Browsing Category "சங்கிலியன்"

ஜோர்ஸ் ஆர் வில்லி – சிறிதர் – டிசம்பர் 15 (வெள்ளிவலம்)

Saturday, October 23, 2010 / No Comments
அமெரிக்காவை வதிவிடமாக கொண்ட சட்டத்தரணி ஜோர்ஜ் ஆர் வில்லி – அண்மையில் சிறிலங்காவின் அரசதலைவர் கலந்துகொண்ட நிகழ்வில் – வரவேற்புரையை பதிவுசெய்திருந்தார். அவ்வுரை புலத்து ஊடகங்களில் மட்டுமன்றி, சிறிலங்கா அரச ஊடகத்திலும் வெளியிடப்பட்டிருந்தது.



அவ்வுரையில் எல்லாள மன்னனை துட்டகைமுனு அல்லது துட்டகாமினி எனப்படும் சிங்கள அரசன் தோற்கடித்து, இலங்கைத்தீவை ஒன்றிணைத்தது போல, மீண்டும் நவீன துட்டகைமுனுவாக மகிந்த ராஜபக்ச தோற்கடித்துள்ளதாகவும் – துட்டகைமுனு செய்தது போல தோற்கடிக்கப்பட்டவர்களை மதிக்கவேண்டும் எனவும் அதற்கான உரிய மதிப்புக்கள் செய்யாவிட்டால் – மீண்டும் பல பிரபாகரன்கள் தோன்றுவார்கள் எனவும் அவரது உரை அமைந்திருந்தது.

44 ஆண்டுகாலம் அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த எல்லாள அரசனை – அன்றைய போர்மரபுகளை மீறி – கொலைசெய்தான் துட்டகைமுனு.

விக்கிபீடியா தகவற்களஞ்சியத்தில் குறிப்பிட்டுள்ளபடி -

கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர். இதில் 44 வருடங்கள் எல்லாளனுக்கும் 22 வருடங்கள் அவனது தந்தை ஈழசேனனுக்குமுரியவை.

ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம்  தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் சிங்கள இனத்தின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்று.

இவ்வாறு வரலாறான தமிழ் அரசை எவ்வாறு துட்டகாமினி – போர்மரபுகளை மீறி – அழித்தானோ, அதுபோல நவீன துட்டகாமினியான மகிந்த ராஜபக்சவும் அனைத்து போர்மரபுகளை மீறி இன்றைய தமிழ் அரசையும் அழித்தான் என்பதுதான் இன்றைய வரலாறு.

தொடர்ச்சியாக தமிழ் அரசர்களால் 70 ஆண்டுகளாக ஆட்சி கொள்ளப்பட்ட பண்டைத்தமிழ் அரசின் கீழிருந்த தமிழ் மக்களின் மீது தந்திரமாக தனது மேலாதிக்கத்தை திணிப்பதற்கே அன்றைய துட்டகைமுனுவாலும் எல்லாள மன்னனின் தூபி திறந்துவைக்கப்பட்டிருக்கவேண்டும். ஏனென்றால் கொடியகுணம்கொண்டவர்கள் ஒரே நாளில் திருந்தியதாக வரலாறு எங்கேனும் இருக்கிறதா?

ஆனால், கொடூரமான ஒரு எதிரியே, இனி எமக்கு அடைக்கலம் என்பது போலவும், என்ன நடந்திருந்தாலும் மறந்துவிடுவோம். இனிமேலாவது எமக்கு சொர்க்கத்தை காட்டுங்கள் என இறைஞ்சுவது என்னவகையான அணுகுமுறை என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை.

இதேவகையான புதிய அணுகுமுறை ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதர் அவர்களும் அண்மைய நாடாளுமன்ற உரையின்போது மேற்கொண்டிருந்தார்.

அப்பேச்சில் குறிப்பிட்டிருப்பதாவது, இன்று சிறைவைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலானோரின் மனைவியர் தமது கணவன்மார் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பது தெரியாமல் இருக்கிறார்கள்.

அவர்கள் தாலி அணிந்திருக்க வேண்டுமா? அல்லது அணிந்திருக்ககூடாதா? என்பதில் குழப்பமான நிலை இருக்கின்றது. எமது சமூக கட்டமைப்பின்படி ஒருவர் இறந்துவிட்டால் தாலி அணியக்கூடாது. எனவே உண்மையில் சிறையில் இருப்பவர்களின் விபரங்களை வெளியிடுங்கள் அப்போது யார் யார் தாலி அணிந்திருக்கலாம் என முடிவுசெய்துகொள்வோம் என்பதாக அவரது பேச்சு இருந்தது.

உண்மையில் சிறைவைக்கப்பட்டிருப்பவர்களின் உறவுகளை நன்கு அறிந்தவர் என்ற வகையில், அவர்களை பற்றிய பிரச்சனையை வெளிக்கொண்டுவருவதற்கான புதிய அணுகுமுறை இது என்கிறார் அவர்.

ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நிறுவப்பட்ட ”விசாரணைக்குழு”வானது போரில் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை அனுப்பிவைக்குமாறு கோரியுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம்திகதிக்கு முன்னர் அவற்றை தமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும், குறித்த சாட்சி தேவையேற்படின் மேலதிக விபரங்களை வழங்கவேண்டும் எனவும் அதன் அறிக்கை தெரிவிக்கின்றது.

”அடக்கமாக” வெளியிடப்பட்ட இவ்வறிக்கை, சிறிலங்கா அரசின் விசாரணைக்குழுக்கள் தமது விசாரணைகளை பூர்த்தி செய்யும் நிலையில் வெளிவந்துள்ளமையானது சிறிலங்காவை பொறுத்தவரை இன்னும் அதற்கான பொறிகள் விரிக்கப்பட்டுவருவதை காட்டுகின்றது.

எனவே தமிழர் தரப்பானது இயன்றவரை தாயகத்திலும் புலத்திலும் வாழும் பாதிக்கப்பட்ட உறவுகளின் சாட்சியங்களை பதிவுசெய்து உரியவகையில் ஐநா விசாரணைக்குழுவுக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்துகொள்ளவேண்டும்.

பொருத்தமான இச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துதல், தமிழர் தரப்புக்கு முக்கியமானதாகும். அத்துடன் கடல்கடந்துவரும் உறவுகள், அரசியல் தஞ்சம் கோருவதற்கான சாதகமான சூழ்நிலையை – முள்ளிவாய்க்கால் பேரழிவின் கொடூரத்தை வெளிக்கொண்டுவருவதன் மூலம் -இவ்விசாரணைத் தகவல்கள் வழங்கும் என்ற செய்தியை அனைவருக்கும் எடுத்துச்செல்லவேண்டும்.



- சங்கிலியன் -

மேலதிக வாசிப்புகள்

'Your Excellency return us to paradise, return us to paradise'

பாராளுமன்றில் மீண்டும் ஓங்கி ஒலித்த சிறிதரன் குரல்

எல்லாளன்


தயான் – மகிந்த – பராக் ஒபாமா - ஈழத்தாய் (வெள்ளிவலம்)

Saturday, September 25, 2010 / 1 Comment
இலங்கைத்தீவை ஐந்து பிராந்தியங்களாக பிரிக்கவேண்டும் எனவும், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தை, சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் வடமேற்கு அல்லது வடமத்திய மாகாணத்துடன் இணைக்கவேண்டும் எனவும், தயான் ஜயதிலக கூறுகிறார்.


இந்தியாவின் வெளியுறவுச் செயலர் நிருபமாவை சந்தித்த டக்ளஸ் - ஆனந்தசங்கரி கூட்டணிகூட, ”முதற்கட்டமாக” தமிழர்களுக்கு 13 வது திருத்தத்தின் கீழான அதிகாரத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவற்கு - இந்தியா - சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என கேட்டிருந்தது.

அப்படியானால் தமிழர்களின் ”அடுத்தகட்டம்” எது என வினாஎழுப்பும் இவர், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் இருக்கும்வரை தனியாக பிரிந்துசெல்லவே தமிழர்கள் விரும்புவார்கள் எனவும் அதனை தந்திரமாக முறியடிக்கவேண்டும் எனவும் கூறுகிறார்.

தற்போது  வடக்கு மாகாணசபை தேர்தலை நடத்தி அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றினால் – தொடர்ந்தும் தமிழர்களின் தன்னாட்சி கோரிக்கை வலுப்பெறும் எனவும் அதனால் அதற்கு முன்னர் தமிழர் பிரதேசங்களை உடைத்து சிங்களதேசத்துடன் பொருத்தவேண்டும் என்பதும் அவரின் சிந்தனையாக இருக்கிறது.

மகிந்த சிந்தனையை அடியொற்றிய இவரின் சிந்தனையை புரிந்துகொள்வதனை விட - இவர் ஐக்கிய நாடுகள் சபையில் ”சரியாக” செயற்படவில்லையென குற்றஞ்சாட்டப்பட்டு அப்பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சவால் பதவி இறக்கப்பட்டவர் என்பதனை விளங்கிக் கொள்வது இன்னும் பல தெளிதல்களை தரக்கூடும்.

அதாவது சிங்கள பேரினவாத சிந்தனை என்பது – அவர்களுக்கு இடையில் பல வேறுபாடுகள் இருந்தபோதும் - ஆழவேரோடி தமிழர்களின் அரசியல் உரிமைகளை அழிப்பதில் சிங்கள தேசத்தை ஒருமைப்படுத்தியுள்ளதை காணலாம்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கூட்டத்தொடருக்கு பெரும் எடுப்பில் சென்றுள்ள மகிந்த பரிவாரங்கள் பயணம் பல செய்திகளை சொல்லியுள்ளது.

வழமைபோல மகிந்தவின் ”வேட்டியை பிடித்துக்கொண்டு திரியும்” டக்ளஸ் தேவானந்தாவை இம்முறை காணவில்லை. அவருக்கு பதிலாக ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலைக்கு வாங்கப்பட்ட சிறிரங்கா ஊடகங்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார்.

மூன்று பேருக்கு மட்டுமே உள்ளக அனுமதி வழங்கப்பட்ட கூட்டத்தொடருக்கு 130 பேரை - பெரும் ஆரவாரத்துடன் - வான் வழியே கூட்டிச்சென்றார் மகிந்த.

கூட்டத்தொடரில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச ”சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மாற்றவேண்டும்” எனவும் தனது சிந்தனையை உதிர்த்தார். தனக்கும் தனது நாட்டுக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போர்க்குற்றங்கள் தொடர்பான கவனத்தை மகிந்த புரிந்துகொண்டுள்ளமையின் வெளிப்பாடாக அவரின் இக்கருத்து அமைந்திருந்தது.

இதே கூட்டத்தொடரில் உரையாற்றிய அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா ”மனித உரிமைகள் பற்றிய விடயங்களில் கவனம் எடுக்காமல் தங்களது பதவிக்காலத்தை நீட்டித்துக்கொள்வதில் சிலர் அக்கறை காட்டுவதாக” மகிந்தவை மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.

சிறிலங்காவின் அரச தலைவராக ”முடிவற்று நிலைக்ககூடிய” சட்டத்திருத்தை மகிந்த நிறைவேற்றியுள்ள நிலையில்  வெளிவந்துள்ள, பராக் ஒபாமாவின் கருத்துக்கள், சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுநிலையை தெளிவுபடுத்துகின்றன.

மகிந்த எதிர்பார்ப்பதுபோல இம்முறையும் முக்கிய நாட்டு தலைவர்களை சந்திக்கமுடியாது. இவருக்காக ஈரான் வியட்நாம் ஜோர்தான் தலைவர்கள் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தக்கூடும். முக்கிய தலைவர்கள் இவரை கண்டுகொள்ளமாட்டார்கள்.

இதே காலப்பகுதியில் சிறிலங்காவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றிய கருத்துருவாக்கம் சர்வதேச கரிசனையை பெற்றுக்கொள்வதை தடுக்கும் நோக்குடன் மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, வன்னி பிரதேசங்களில் அண்மையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

பிபிசி போன்ற ஊடகங்களுக்கு அவ்விசாரணைகள் பற்றிய செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதேவேளை விசாரணை அமர்வின்போது – அனாமதேயமாக வருகை தந்த சிலர் ஒளிப்பட பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன் மூலம் மறைமுகமாக, தமிழர்களுக்கு அச்சத்தை தோற்றுவித்து தமிழர்களின் உண்மையான உணர்வுகளை சொல்லமுடியாத அடக்குமுறைக்கு மத்தியில் விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

இராணுவத்தின் பிடிக்குள் வாழ்வுக்கு போராடிக்கொண்டிருக்கும் மக்கள் – தமது உள்ளக்கிடக்கைகளை சொல்லி – சிறிலங்கா புலனாய்வாளர்களின் கவனத்திற்குள் சிக்கிவிட விரும்புவார்களா?

ஆனாலும் எல்லாமே வெறுமையாகிய உணர்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் போராளியான எழிலனின் மனைவி – தமிழ் மக்களின் பிரச்சனைகளை – வெளிப்படையாகவே சொல்லியுள்ளார். இதன் மூலம் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்தவர்கள் பற்றிய சாட்சியாக அவரின் பதிவு அமைந்திருக்கிறது.

எவ்வளவு அடக்குமுறைகள் இருந்தாலும் அவ்வப்போது இவ்வாறான உள்ளக்குமுறல்கள் வெளிப்படவே செய்யும். ஆனால் அவ்வாறான சின்னச்சின்ன பொறிகள் மூலமே ஈழத்தின் உண்மை நிலை உலகத்தை சென்றடையும். அதனை உலகம் புரிந்துகொள்ளுமா?

- சங்கிலியன்

பால்நிலை சமத்துவம் – பாதுகாப்புச்செலவு – பௌத்தஞானம் - படைத்தளபதி (வெள்ளிவலம்)

Friday, September 17, 2010 / No Comments
அண்மையில் வெளியான புள்ளிவிபரம் ஒன்று உலகிலேயே பால்நிலை சமத்துவம் நிலவும் நாடுகளில் முக்கியமான இடத்தை சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளது. இதன்படி உலகிலேயே ஆண்களுக்கு நிகராக பெண்கள் மதிக்கப்படும் நாடாக சிறிலங்காவை தெரிவுசெய்துள்ளது அந்த அறிக்கை.

எவ்வாறான குறிகாட்டிகளை வைத்து இவ்வாறான புள்ளிவிபரங்களை அவர்கள் பெற்றிருப்பார்கள் என்ற ஆதங்கம் இலங்கைத்தீவிலுள்ள கல்விமான்களுக்கே புரியவில்லை.



இதன் ஒரு கட்டமாக வெளிவந்துள்ள இன்னுமொரு புள்ளிவிபரம், இன்னும் அதிர்ச்சிகரமான செய்திகளை சொல்லியுள்ளன.

அப்புள்ளிவிபரத்தின்படி, இலங்கைத்தீவிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக களனிப் பல்கலைக்கழகத்தில் 70 விழுக்காடு பெண்கள் கல்விகற்பது அறியவந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல பாடசாலை மட்டத்திலும் பெண்களின் விழுக்காடு அதிகரித்துள்ளமையை தமிழர் பிரதேசங்களில் காணலாம்.

இங்கு கல்விகற்கும் பெண்களின் விழுக்காட்டை மையமாக வைத்து பால்நிலை சமத்துவத்தை கண்டறியும் புள்ளிவிபரக்குழுக்கள், ஏன் இவ்வாறான அபரிமிதமான வித்தியாசம் இருக்கின்றது என்பதை ஆழமாக கண்டறியமுனையவில்லை.

மாறாக பால்நிலை சமத்துவம் மதிப்பிடப்பட்ட 136 நாடுகளில் 16வது இடத்தை சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளது. கல்வி வேலைவாய்ப்பு அதிகாரம் போன்ற பலதுறைகளில் இம்மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், ஆழமாக இவ்விடயத்தை கவனிக்கவில்லை என்றே கருததோன்றுகின்றது.

இனஅடக்குமுறையும், நாட்டில் நிலவிய அமைதியற்ற சூழலுமே பெரும்பாலான ஆண்களுக்கான கல்விக்கான புறநிலைகளை இல்லாதொழித்தது என்ற யதார்த்தை கண்டுகொள்ளாமல், அதனை பால்நிலை சமத்துவமாக கருதி, சிறிலங்காவுக்கு கௌரவம் அளிப்பதில் இந்நிறுவனங்கள் அக்கறை எடுத்துக்கொண்டமை எவ்வளவு முரண்பாடானது?

இதேவேளை சிறிலங்காவின் அடுத்தாண்டுக்கான பாதுகாப்புத்துறைக்கான செலவை 21 400 கோடி ரூபா என அந்நாட்டு அரசின் அறிவித்தல் வெளியாகவிருக்கின்றது.

இவ்வருட ஆரம்பத்தில் தேர்தலில் வெற்றியீ்ட்டிய மகிந்த ராஜபக்ச, அடுத்தமாதத்திலேயே தனது பதவிக்காலத்தை ஆரம்பிக்கவுள்ளார். சட்டத்தை எப்படியெல்லாம் ”உள்ளே புகுந்து விளையாடமுடியுமோ” அவ்வளவு தூரம் இறங்கி விளையாட மகிந்த குடும்பம் தயாராகிவிட்டது.

அந்தவகையில்தான் இப்போதும் இவ்வாண்டை விட 1, 300 கோடி ரூபா கூடுதலாக அடுத்தாண்டுக்கான பாதுகாப்பு செலவாக செலவழிக்கப்படவுள்ளது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் நிரந்தர படைக்குடியிருப்புக்களை அமைப்பதற்கான ஒதுக்கீடாகவே – போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டநிலையில் – இதனை நோக்கவேண்டும்.

இவ்வாரத்தின் இன்னொரு பதிவாக, புத்தபிரான் ஞானம் பெற்றதன் 2600 ஆண்டை நினைவுகூரும் முகமாக 2600 இளஞ்சிறார்களுக்கு ”ஞான உபதேசம்” வழங்கப்படவுள்ளதான செய்தி வெளிவந்துள்ளது. அதாவது புதிதாக 2600 பௌத்தபிக்குகளை உருவாக்கும் நிகழ்ச்சியே இதுவாகும்.

இதனை சிறிலங்காவின் பிரதமரான ஜயரத்ன பெரும் ஆடம்பரங்ளுடன் நடத்தமுற்பட்டுள்ள நிலையில் அதனை ஒரு சில உள்நாட்டு செயற்பாட்டாளர்கள் கண்டித்துள்ளனர்.

தாய் தந்தையருடன் தமது இளம்பராயத்தை கழிக்கவேண்டிய சிறுவர்களுகட்கு, இவ்வாறான ”ஞான உபதேசம்” வழங்கவேண்டாம் என அவை கேட்டுள்ளன.

தமிழர்களை பொறுத்தவரை, பௌத்தபிக்குகளாலே இந்நாடு மோசமாக அழிந்துபோவதை கண்டுவந்திருக்கிறார்கள். உண்மையான பௌத்த அறநெறிகள் பௌத்தரோடு சேர்த்து புதைக்கப்பட்ட நிலையில், மற்றைய இனங்கள் மீதான மேலாதிக்கசிந்தனையாகவே பௌத்த நெறிமுறை சிறிலங்காவில் உருவாக்கப்பட்டுவருகின்றது.

இதேவேளை வெலிகடை சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகா தனது பாவங்களுக்கு பிராயசித்தம் தேடுவதாக செய்திகள் வருகின்றன.

படைத்தளபதிக்கும் பாதுகாப்புச்செயலாளருக்கும் ஏற்பட்ட முறுகல் நிலை இன்று வெலிக்கடை சிறைச்சாலை வரை அவரை சரத் பொன்சேகாவை கொண்டுவந்து விட்டுள்ளது. அவர் காற்சட்டையுடன் சிறையில் வேலை செய்யும் காட்சி, ஊடகங்களில் வெளிவந்திருந்தது.

சிங்கள இனவாத சிந்தனையில் பெரும்பாலான சிங்கள தேசத்து மக்கள் மூழ்கி இருப்பதன் காரணமாகவே, சரத் பொன்சேகாவின் சிறைவைத்தல் தொடர்பாக பெரியளவான மக்கள் எழுச்சியை சரத் பொன்சேகாவால் உருவாக்கமுடியவில்லை.

தோட்டத்தில் வேலையும் வழங்கப்பட்டு கடும் சிறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலைமையானது தமிழ் மக்களுக்கு சொல்கின்ற செய்தியைத்தான் தமிழர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்?

தற்போதைய நிலையில் தமிழர் தேசத்தை உடைத்து சிங்கள மேலாதிக்கத்தை நிறுவுவதே பெரும்பாலான சிங்கள தேசத்தில் உள்ளோரின் சிந்தனையாகும். அதற்காக நாளை யாரையும் சிறைவைப்பார்கள்?


-  சங்கிலியன் -








நிருபமா ராவ் - நமல் ராஜபக்ச - நியுசிலாந்து - அவுஸ்திரேலியா (வெள்ளிவலம்)

Saturday, September 4, 2010 / No Comments
ஒரு நாட்டின் இறைமை என்பதும் அதன் தனித்துவம் என்பதும் அந்நாடு எவ்வாறு நடந்துகொள்கின்றது என்பதிலும் மற்றைய நாடுகள் அதனை எவ்வாறு அணுகின்றன என்பதிலும் தான் தங்கியுள்ளது. இதுவே யதார்த்தமானது.

ஆனால் சிறிலங்காவின் விடயத்தில் சிறிலங்கா ஆட்சியாளர்கள் என்னதான் பெரும்பான்மையை பெற்றாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை தமது பக்கம் ஈர்த்துக்கொண்டாலும் தமிழர் தேசத்தின் பிரச்சனை என்பது தனியானது தனித்துவமானது அதனை தனியே அணுகவேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடுகள் இருக்கின்றன.



அதன் தொடர்ச்சியாக இதனை பார்க்கமுடியாது என்றாலும் அண்மைய நிருபமாராவின் பயணம் முக்கியமானது. இதற்கு முன்னரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா சென்றபோது – அதற்கு முன்னரே சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்த – முக்கிய அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்திக்கமுடிந்திருந்தது.

எதிர்வரும் நாட்களில் இந்தியாவின் வெளிநாட்டமைச்சர் எஸ்எம் கிருஸ்ணா இலங்கைக்கு நேரடியாக சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோடியாகவே நிருபமாராவின் பயணம் அமைந்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு என ”கதைவிட்டு” காலத்தை ஓட்டாமல் பொருத்தமான அரசியல் அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்படவேண்டும் என நிருபமா ராவ் சொல்லியிருக்கின்றார்.

பழையவற்றை மறந்து புதியபாதையில் இணைந்து பயணிப்போம் என வன்னிப்பேரழிவில் இந்தியாவின் பங்கை சுட்டிக்காட்டிய யாழ்ப்பாண கல்விச்சமூகத்திற்கு சொல்லியிருக்கின்றார்.

இதனால் இந்தியாவுக்கு திடிரென தமிழர்கள் மீது பாசம் வந்துவிட்டது என எண்ணமுடியாது. பிராந்திய மற்றும் வர்த்தக நலனில் அக்கறையுள்ள இந்தியா, ”கட்டுமீறி செல்லும்” சிறிலங்கா அரசை தனது கைக்குள் கொண்டுவருவதற்கு மீண்டும் தமிழர் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. ஆனால் அதற்குள் சுழியோடி தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் பெற்றுக்கொள்வதற்கு தமிழர்கள் தரப்புக்கள் தமது வியூகங்களை வகுக்கவேண்டும்.

..............................................................

இதேவேளை தற்போது வன்னியில் நடைபெறும் மீள்க்குடியமர்வுக்கான செயல்திட்டங்களில் ஏகபோக அரசியல் செய்யும் மகிந்தவின் கம்பனியின் இளையவாரிசு நமல் ராஜபக்ச பலத்த செல்வாக்கு செலுத்திவருகின்றார்.

வன்னியிலுள்ள பாடசாலைகளிலிருந்து அனைத்து மாணவர்களையும் கூட்டிய அவர் தனது ஆசிர்வாதத்தை வழங்கினாராம். இவருடைய ஆசிர்வாதத்துக்காக பரீட்சை நாட்கள் என்றும் இல்லாமல் பாடசாலை மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவது ஒரு புறமிருக்க இதன் பின்னனியிலுள்ள மகிந்த சிந்தனையை பற்றிய அச்சமே இன்னும் அதிகமாக இருக்கின்றது.

...............................................................

தமிழர்களின் உரிமைப்போரின் போது அதன் தேவைகளுக்காக ஆயுதங்களை கப்பலில் கொண்டு சென்றார் என குற்றஞ்சாட்டப்பட்டு அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தமிழர் ஒருவருக்கு அவரது கோரிக்கையை விடுதலைப்போராட்டத்துக்காக ஆயுதங்களை கொண்டுசேர்த்தார் என்பதற்காக நிராகரிக்கமுடியாது என அந்நாட்டு உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறித்த தமிழரோடு தொடர்புபட்ட மேலும் இரு தமிழர்கள் அந்நாட்டிலிருந்து ஏற்கனவே அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், தனியொருவராக அதனை எதிர்த்து வழக்காடி தமிழர்களது போராட்டத்தின் நியாயத்தையும் வெளிப்படுத்திய நிகழ்வாக அது அமைந்துள்ளது.

இதேவேளை ஜேர்மனியில் மூன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாத குற்றஞ்சாட்டப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதனை உரிய முறையில் எதிர்வுகொண்டு தமிழர்களின் விடுதலைப் போருக்கான நியாயத்தன்மைகளை சர்வதேச சமூகத்திற்கு கொண்டுவரவேண்டும்.

தற்போது சிறிலங்கா அரசின் மனித உரிமைகளுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்பிவரும் நிலையில் தமிழர்கள் தமது கருத்துக்களை வெளியுலகிற்கு கொண்டுவரவேண்டும். முன்னெப்போதையும் விட தற்போதைய சூழலில் தமிழர்களது விடுதலைப் போராட்டத்தினை நியாயப்படுத்தகூடிய சூழ்நிலை உள்ளது.

...................................................................

இன்று சர்வதேச மனிதஉரிமை சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் அவுஸ்திரேலியாவில் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட மூன்று பேர் சிறிலங்காவில் சித்திரவதை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

சிறிலங்கா அரசையும் அவுஸ்திரேலிய அரசையும் குற்றஞ்சாட்டியுள்ள இவ்வமைப்பு அவர்களின் பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்தும்படி கோரியுள்ளது.

இந்த மூன்று பேரும் தமிழர்கள் அல்ல. சிங்களவர்களான இம்மூவருக்குத்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது. சிங்களவர்களுக்கே இந்தநிலை என்றால் தமிழர்களின் நிலையை சொல்லவா வேண்டும்.




- சங்கிலியன்

விக்கிலீக்ஸ் – ஐநா சபை - தேசியகீதம் (வெள்ளிவலம்)

Thursday, August 26, 2010 / No Comments
அண்மையில் பரபரப்பாக பேசப்பட்டுவரும் விக்கிலீக்சால் கட்டுடைக்கப்பட்டுவரும் தகவற்பரிமாற்றம் என்பது முக்கியமானதாகிவிட்டது. அமெரிக்க தூதுவரகங்களால் ஒவ்வொரு நாட்டுநடப்புகளை பற்றியும், தமது நாட்டு அரசுக்கு அனுப்பட்ட தகவல்களே, விக்கிலீக்சால் கசியவிடப்படுகின்றன.



இவ்வாறு வெளியிடப்பட்ட தகவல்களில், வழமைபோல விடுதலைப்புலிகள் மீதான குற்றசாட்டுக்கள் இடம்பெற்றிருப்பினும், அமெரிக்க நிர்வாகிகளால் வெளியில் சொல்லப்படாத செய்திகள் எவ்வளவு இருக்கின்றன என்பதுவும், அவர்களால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை எப்படி வெளியிடாமல் தவிர்த்துவந்திருக்கின்றார்கள் என்பதையும் புரிந்துகொள்வது முக்கியமானது.

சிறிலங்கா அரசின் முழுமையான ஆதரவில் துணைப்படைகளாக டக்ளசின் ஈபிடிபியும் கருணாவின் அடியாட்களும் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதையும், எவ்வாறு பெண்களை தவறான வழிக்கு கொண்டுசென்றார்கள் என்பதையும், எவ்வாறு கப்பம் சேகரிப்பு நடைபெற்றது என்பதையும், அதற்கு கோத்தபாயவினால் எவ்வாறு நேரடியான ஆதரவு வழங்கப்பட்டது என்பதையும் ஆதாரப்படுத்திய அமெரிக்க நிர்வாகம் அதனை வெளிப்படுத்தாமலே அவற்றை மௌனப்படுத்தியது.

ஆனால் சிறிலங்காவிலிருந்த அமெரிக்க அதிகாரிகளினால் அமெரிக்க அரசுக்கு அனுப்பப்பட்ட தகவல்களை, விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் ஊடாக வெளிப்படுத்தப்பட்டமை தமிழர் தரப்பை பொறுத்தவரை முக்கியமான ஆவணமாகும்.

இதன் மூலம் சிறிலங்கா என்ற நாட்டுக்காக, அமெரிக்கா என்ற வல்லமை பொருந்திய அரசு எவ்வாறு ”அடக்கிவாசித்துள்ளது” என்ற புரிதல் தமிழர் தரப்புக்கு முக்கியமானது. அதன் ஊடாகவே சர்வதேச அரசுகளின் அதிகாரங்கள் எவ்வாறு இன்னொரு நாட்டின் எல்லைக்குள் செல்லமுடியும் அதன் எல்லைகள் என்ன என்பதையும் புரிந்துகொள்ளமுடியும்.

இதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையால் ”அடக்கிவாசிக்கப்பட்ட” ஐக்கியநாடுகள் சபையின் விசாரணைக்குழுவானது சிறிலங்கா செல்வதா விடுவதா என்று யோசித்துக்கொண்டிருக்கின்றது.

சிறிலங்கா சென்றால் போரின்போது பாதிக்கப்பட்ட மக்களின் குரலை கேட்கவேண்டும். அல்லது தங்களுடைய நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிவிடும் என்பது அவ்விசாரணைக்குழுவுக்கு தெரியுமோ இல்லையோ பான்கீமூனுக்கு நன்றாக தெரியும்.

அடுத்ததடவையும் ஐநா செயலர் பதவியில் ஒட்டியிருப்பதற்கு ஏற்றவாறு தனது நகர்வுகளை மேற்கொள்ளும் பான்கீமூன், நிச்சயமாக திடமான முடிவுகளை எடுக்கமாட்டார் போலவே தெரிகின்றது.

அத்தோடு அவ்வாறு செல்லும் குழுவானது சரத் பொன்சேகாவை சந்திக்கவேண்டும். ஏனெனில் போரின்போது அந்நிகழ்வுகளுக்கு பொறுப்பாகவிருந்த இராணுவதளபதி அவர்.

எனவே எந்தநாட்டுக்கும் ”நோகாமல்” தனது நாற்காலியை தக்கவைக்கவேண்டும் என்றால் ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவுக்கு விசா வழங்கவேண்டாம் என பான்கீமூன் தந்தியடிக்கவும் கூடும்.

இதேவேளை தமிழர்களது அடையாளத்தை அழித்தொழிக்கும் நாசகார திட்டத்தை படிப்படியாக மகிந்த அரசு முன்னெடுத்துவருகின்றது. அந்த வகையில் தமிழர் தாயகத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடவேண்டும் எனும் புதிய திட்டத்தை சிறிலங்கா முன்னெடுக்கவுள்ளமை உறுதியாகியுள்ளது.

இத்திட்டம் அமைச்சரவை மட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது, பின்னர் ஏற்பட்ட விமர்சனங்களால் கைவிடப்பட்டதாக போக்குகாட்டி மீண்டும் யாழ்ப்பாணத்தில் அதே சிங்கள மொழியிலான தேசிய கீதம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வில் இசைக்கப்படவுள்ளது.

தமிழர்களை பொறுத்தவரை சிறிலங்காவின் தேசியகீதம் என்பது அன்னியநாட்டின் தேசிய கீதமாகும். அது தமிழர்கள் மீது திணிக்கப்படுகின்ற தேசிய கீதம் ஆகும். தமிழர்களின் தேசம் என்பது தனியான தேசம் என்பதும், அதற்கான இறைமை தனியானதுதான் என்பதுமே தமிழர்களின் நிலைப்பாடாகும்.

தற்போதைய நிலையில் இதற்கான கோரிக்கை அடக்கிவாசிக்கப்படுவது அடக்குமுறையினாலேயன்றி அடங்கிப்போனதால் அல்ல என்பதை சிங்கள தேசம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால் அதற்கு மாறாக தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் நோக்குடனும், சிங்கள மேலாதிக்கத்தை திணிக்கும் நோக்குடனும், சிங்கள மொழியில் மட்டுமே தேசியகீதம் பாடப்படவேண்டும் என்ற நிலைவரலாம்.

அவ்வாறான நிலைவருவது தமிழர்களை பொறுத்தவரை நல்லதொரு சந்தர்ப்பமாக கொண்டு, சிறிலங்கா தேசிய கீதம் சிங்களமொழியிலேயே பாடப்படவேண்டும் என்பதையும் தமிழர்களின் தேசமான தமிழீழத்தில் தமிழரின் தேசியகீதமே இசைக்கப்படவேண்டும் என்ற கருத்தை நாம் அனைவரும் முன்னிலைப்படுத்தவேண்டும்.

- சங்கிலியன் -



குந்த ஒரு குடிநிலம் (வெள்ளிவலம்)

Saturday, August 21, 2010 / No Comments
sun-sea-shipஅண்மையில் சிறிலங்காவின் வணிகசஞ்சிகை ஒன்றின் ஊடாக விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாளராக செயற்பட்ட குமரன் பத்மநாதன் அவர்களின் நேர்காணல் இடம்பெற்றிருந்தது. சிறிலங்கா அரசின் அனுசரணையில் வாழ்ந்துவரும் ஒருவரின் கருத்துக்களுக்கு நாம் அதிகம் கரிசனை கொள்ளதேவையில்லை.



இதனையே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால நிறைவேற்றுநர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களும் தெரிவித்திருந்தார்.

எந்த இடத்தில் வாழ்ந்தாலும் எந்த சிறையில் இருந்தாலும் குமரன் பத்மநாதன் என்பவரின் கருத்துக்களை உள்வாங்கும்போது அவர் எந்த நிலையில் குறித்த நேர்காணலை வழங்குகிறார். அது அவரால் உண்மையில் வழங்கப்படுகின்றதா? அதனை எவ்வாறு ”உருவேற்றி” வெளியிடுவார்கள் என்பது பற்றியும் சிந்திக்கவேண்டும்.

ஆனாலும் தற்போதும் மக்களை சந்திக்ககூடிய நிலையில் இருக்கின்ற குமரன் பத்மநாதன் அவர்கள் தெரிவித்ததாக சொல்லப்படும் கருத்துக்கள் யாவும், தமிழ் மக்களை ஒரு குடையில் அணி திரட்டுவதற்கு பதிலாக பல்வேறு பிரிவுகளாக பிளவுகளாக உடைப்பதற்கான முயற்சியாகவே இருப்பதை கண்டுகொள்ளலாம்.

இவ்வாறான நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடன் நீண்ட காலம் நெருங்கி செயற்பட்ட குமரன் பத்மநாதன், தனது தலைவரை காப்பாற்ற ஹெலி வாங்கமுயன்றதாக ஒரு கருத்தை கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைக்கான பயணத்தில், கொள்கைக்காகவே இறுதிவரை போரிட்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவர், தனது மக்களையும் போராளிகளையும் மிகப்பெரும் அவலத்திற்குள் விட்டு அங்கிருந்து வெளியேறுவார் என குமரன் பத்மநாதன் எண்ணியிருப்பதே ஆச்சரியமானதாக இருக்கின்றது.

அத்தோடு நின்றுவிடாது தமிழீழ விடுதலைக்காகவே இறுதிவரை வாழ்ந்து, கொண்ட கொள்கைக்காகவே மரணித்த வீரர்களையும் தளபதிகளையும் விமர்சிப்பதும், தமிழ் மக்களுக்காக ஏதாவது செய்வார் என எதிர்பார்த்த நாட்களையும் மறக்கடித்துவிடுமோ என்ற அச்சத்தை உருவாக்குகின்றது.

88888888888888888888888888888888888888888888888888

அவுஸ்திரேலிய நாட்டின் அடுத்த பிரதமரை நாளை சனிக்கிழமை தெரிவு செய்வதற்கான தேர்தல், நாளை நடைபெறுகின்றது. தற்போது ஆட்சியிலுள்ள லேபர் கட்சியானது கடும் போட்டியை அதன் எதிர்க்கட்சியான லிபரல் கட்சியிடம் எதிர்நோக்குகின்றது.

கடந்த மாதம் லேபர் கட்சியானது தனது அப்போதைய பிரதமர் கெவின் ரட்டிற்கான ஆதரவை விலக்கிகொண்டதை அடுத்து தற்போதைய பிரதமர் ஜூலியா கிலாட் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

சரிந்துகொண்டிருந்த லேபர் கட்சியின் ஆதரவை தக்கவைப்பதற்காக, உள்கட்சி கிளர்ச்சி ஒன்றை நடத்திய அக்கட்சி, தற்போது அதன் சாதகமான நிலையை தக்கவைத்துள்ளதாகவே கருதப்படுகின்றது.

தமிழர்களை பொறுத்தவரை லிபரல் கட்சியானது, அகதிகள் வருகை தொடர்பில் கடும்போக்கை தாம் எடுக்கவுள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளமை தெளிவான முடிவுகளை தேர்தலின்போது வெளிப்படுத்த உதவும்.

தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் குறைவாக வாழ்ந்தாலும், உள்ளக மட்டங்களின் நெருக்கமான போட்டி வருகின்ற இடங்களில் தமது பலத்தை சரியாக பயன்படுத்தமுடியும்.

அந்தவகையில் தமிழர்களின் போராட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவை காட்டிவரும் மூன்றாவது பலம்வாய்ந்த கட்சியான கிறீன் கட்சிக்கு, தமிழர்கள் ஆதரவை வழங்கும் தீர்மானத்தை Tamils for Greens என்ற அமைப்பின் ஊடாக முன்னெடுக்கின்றனர்.

இரண்டு பிரதான கட்சிகளுக்கும் போட்டி வருகின்ற நிலையில், கிறீன் கட்சி தனது செல்வாக்கை செலுத்தமுடியும் எனவும், தற்போதைய நிலையில் எதிர்பாராத வகையில் கிறீன் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

88888888888888888888888888888888888888888888888

கனடாவை சென்றடைந்த கப்பலில் 492 தமிழர்கள் பாதுகாப்பாக சென்றடைந்திருக்கிறார்கள். ஒருவர் பயணத்தின்போது உயிரிழந்துள்ளார். இவர்கள் பயணம் செய்த கப்பலானது ஆண்கள் தங்குவதற்கு எனவும், பெண்கள் தங்குவதற்கு எனவும் தனியான பகுதிகளை கொண்டிருந்ததாகவும், அக்கப்பல் இவ்வாறான பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும் கனேடிய காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறுகின்றது.

இவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்ட நடைமுறையை பின்பற்றியமையும், மூன்று மாத கால பயணத்தின் பின்னரும், அனைவரும் எதிர்பார்த்ததைவிட நோய்கள் எதுவுமின்றி இருந்தமையும், இது புலிகளின் வேலையே என கனேடிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

எமது தமிழ் ஊடகம் ஒன்றும் அது புலிகளின் வேலையே என்ற வகையில் செய்தியை வெளியிட்டு அதன் இறுதியில் ”என கனேடிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது” என முடித்திருந்தது.

பெருந்தொகையாக, ஒரே தடவையில் இவ்வளவு தமிழர்கள் கனடாவை வந்துசேர்ந்திருப்பது அவ்வளவு பெரிய தொகை அல்ல என்றும், சாதாரணமாகவே வருடம் ஒன்றுக்கு 30 000 மக்களுக்கு கனடா அகதி அந்தஸ்து வழங்குவதாகவும் அந்நாட்டு குடிவரவு சட்டத்தரணி பீற்றர் கோல்டன் தெரிவிக்கின்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது வந்துள்ளவர்களின் எண்ணிக்கை என்பது சாதாரணமாக இரண்டு மூன்று கிழமைகளில் வான்கூவர் மற்றும் ரொறன்ரோ விமான நிலையங்கள் ஊடாக வந்திறங்கும் அகதிகளின் எண்ணிக்கையே எனவும் கூறுகின்றார்.

ஆனால் வந்திறங்கிய தமிழ் மக்களை உடனடியாகவே அதே கப்பலில் திருப்பி அனுப்பவேண்டும் 80 விழுக்காடு கனேடிய மக்கள் விரும்புவதாக அங்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பு கூறுகின்றது.

பாரதி சொன்னான் காணி நிலம் வேண்டும். ஆனால் தமிழனுக்கு ”குந்த ஒரு குடிநிலம் வேண்டும்”.




- சங்கிலியன் -

மகிந்த - பியசேன - மாதகல் - நல்லூர் (வெள்ளிவலம்)

Wednesday, August 11, 2010 / No Comments
செப்ரம்பர் மாதம் எட்டாம்திகதி சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 18 வது திருத்தசட்டம் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்தும் அவசரஅவசரமாக ”உருவியெடுக்கப்பட்ட” எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இதனை மகிந்த அரசாங்கம் சாத்தியமாக்கியுள்ளது.



இதன்மூலம் சிறிலங்காவின் அரச தலைவருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சனநாயகமாக தெரிகின்ற சர்வாதிகார ஆட்சிமுறைக்கு சிறிலங்கா தேசம் உள்வாங்கப்பட்டுள்ளது.

சனநாயக தன்மையை பேணுவதற்காக சர்வதேச ரீதியாக ஒரு நாட்டின் ஆட்சியானது மூன்று முக்கிய அதிகார அலகுகளிடம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Separation of Power என சொல்லப்படுகின்றது. சட்டவாக்கம், சட்ட அமுலாக்கம், நீதிபரிபாலனம் என மூன்று அதிகார மையங்கள் - தனித்தனியே சுதந்திரமாக செயற்பட்டு - ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கொண்டுசெல்லும்.

ஆனால் இவ்வாறான மூன்று அதிகார அலகுகளையும் தனது பொறுப்பில் கொண்டுவருவதற்கான – அவ்வதிகார அலகுகளுக்கு பொறுப்பானவர்களை  நியமிப்பதற்கான - அதிகாரத்தை குறித்த 18வது சட்டமூலத்தின் மூலம் மகிந்த ராஜபக்ச பெற்றுள்ளார்.

அத்தோடு இரண்டு தடவைகளுக்கு மேலும் (தன்னால்) சிறிலங்கா அரசதலைவராக இருக்கமுடியும் என்ற சட்டத்திருத்தத்தையும் மகிந்த நிறைவேற்றியுள்ளார்.

இரண்டாவது தடவையாக ஆட்சிபீடம் ஏறுவதற்கான அதிகாரத்தை ஆறு மாதங்களுக்கு முன்னரே பெற்றுக்கொண்ட மகிந்தவுக்கு, இன்னும் இரண்டு மாதங்களுக்கு பின்னரே பதவியை புதுப்பித்துக்கொள்ளவுள்ள நிலையில், எப்போது தேர்தல் வைக்கவேண்டும் என்பதும், எப்படி தனக்கு வாக்குகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதும், அதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதும், இன்னொருவரா சொல்லிக்கொடுக்கவேண்டும்?

இவ்வாறு சிங்களதேசத்தில் புதிய அரசபரம்பரை ஆட்சிபீடம் ஏறுவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்க, அதனை முஸ்லிம் காங்கிரஸ் முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்து, ஐக்கிய தேசிய கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான பியசேன என்பவரும், ஐக்கிய தேசிய கட்சி ஆதரவில் போட்டியிட்ட சிறிரங்காவும் மகிந்தவின் கப்பலில் ஏறிக்கொண்டது, தமிழர் தரப்பு எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதை கோடிகாட்டி சென்றுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழர் தரப்பின் தற்போதைய பலம் என்பதில் கேள்விக்கு இடமில்லை என்றாலும்,  தமிழ் தேசியத்தை அதிகமாக கதைத்துவிட்டார்கள் அல்லது கதைத்துவிடுவார்கள் என்றும், உள்வீட்டுக்குள் நின்றவர்களையே விலக்கி, புதியவர்களை கொண்டுவந்தது இதற்குத்தானா என்ற நிலை உருவாகிவிடக்கூடாது என்பதில் கவனம் எடுக்கவேண்டிய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.



அதேவேளை ,சிறிலங்கா தேசத்தின் நவீன ஹிட்லராக மாறிவரும் மகிந்த ராஜபக்ச, இன்னொரு முனையில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் இரகசிய திட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்.

இலங்கைத்தீவுக்கு அரச மரக்கிளையுடன் வந்த அசோக சக்கரவர்த்தியின் மகளான சங்கமித்தை வந்திறங்கியதாக சிங்களவர்களால் ”நம்பப்படும்” இடமான மாதகலில் 2009 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் நவீன சங்கமித்தையான சிராந்தி ராஜபக்சவும் அவரது மகனான நமல் ராஜபக்சவும் அரச மரக்கிளை ஒன்றை தென்னிலங்கையிலிருந்து கொண்டுவந்து நட்டுவைத்திருந்தனர். ஒரு வருடம் முடிவதற்குள்ளாகவே அந்த அரச மரக்கிளை எவ்வளவுக்கு ”வளந்துவிட்டது” என்பதை முகப்பு படத்தில் பார்க்கிறீர்கள்.

தற்போது மாதகலில் பெரும்பாலான இடங்களில் தமிழ் மக்கள் மீளக்குடியேறுவது தடைசெய்யப்பட்ட நிலையில், தென்னிலங்கை சிங்கள மக்கள் தாராளமாக அங்கு வந்திறங்கி ”சங்கமித்தையின்  பாதத்தை” தரிசித்து செல்கின்றனர்.

சிங்கள தேசமோ என சிந்திக்கும் அளவுக்கு வானெழுந்து நிற்கும் இப்புத்தவிகாரைக்கு பின்னாலுள்ள அரசியலை தமிழ் மக்களுக்கு யாரும் கற்றுத்தரவேண்டியதில்லை.

இதேபோன்ற ”அரச மரக்கிளை விளையாட்டுக்கள்” யாழ்ப்பாணம் தொடங்கி வன்னியூடாக மட்டக்களப்பு வரை பரவிச்செல்கின்றது. தொல்பொருள் ஆய்வு என பெயரிடப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டம் சிகல உறுமய என்ற புத்தபிக்குகளின் கட்சியூடாக திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதன் மூலம் இலங்கையின் வரலாற்றை மீளஒருமுறை மாற்றி எழுதுவதற்கான முயற்சிகளாக உள்ளதாக தமிழ்நெற் தனது ஆய்வுகட்டுரையில் தெரிவிக்கின்றது.

ther_05

செப்ரம்பர் மாதம் ஏழாம்திகதி நல்லூர் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றதாக தாயகதகவல்கள் தெரிவிக்கின்றது. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடிய இந்நிகழ்வாக இது அமைந்திருந்தது.

தமிழர்களின் பண்டைய அரசர்களால் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவில், இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை ஒரே நாளில் கூட்டியபோதும் இன்னும் அமைதியாகவே அதே வர்ணப்பூச்சுகளுடனே பார்த்திருக்க மள மளவென வளரும் "அரச மரக்கிளைகள்" அதனை மறைத்துவிடுமா?



- சங்கிலியன் -

காரைநகர் - நாவற்குழி - கல்வி - ஒக்ஸ்போட் (வெள்ளிவலம்)

/ No Comments

கடந்த வாரம் காரைநகரை தனிக்கல்விக் கோட்டமாக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதும் ஈபிடிபியினதும் மகிந்த அரசின் ஆளுநராலும் அந்நடடிவடிக்கை இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக அறியவருகின்றது.

ஊர்காவற்றுரை கல்விக்கோட்டத்துடன் இணைந்திருக்கும் காரைநகரைத் தனியாகப் பிரித்து அதனை தனியான கல்விக்கோட்டமாக்குவதற்கு திட்டமிடப்பட்டது.



இது தொடர்பான ஆரம்பநிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாகவிருந்தது. காரைநகர் கோட்டக் கல்வி அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் காரைநகர் கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் செயற்படஇருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தீவக கல்விப்பணிப்பாளர் வி. இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெறுவதாகவிருந்த இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சிறப்புவிருந்தினராக கலந்துகொள்ளவிருந்தார்.

ஆனால் அரசில் அங்கம் வகிக்கும் தமது கட்சியை சேர்ந்தவர் எவரையும் அழைக்கவில்லை எனக்கூறி அந்நிகழ்வை தடுத்துநிறுத்தும்படி ஈபிடிபினரால் ஆளுநருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து கல்வி அலுவலகத்துடன் தொடர்புகொண்ட ஆளுநர் அலுவலகம், குறித்த நிகழ்வை நிறுத்தும்படியும் அதனை மற்றொரு திகதியில் நடத்துமாறும் அந்நிகழ்வில் ஆளுநரும் கலந்துகொள்வார் எனவும் அறிவித்துள்ளது.

சாதாரண கல்விச்செயற்பாடுகளில் எவ்வாறு அரச நிர்வாகம் தலையீடுகளை மேற்கொண்டு தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துகின்றது என்பதற்கு மற்றொரு சான்றாக இந்நிகழ்வு தொடர்பான விடயங்கள் நடைபெற்றுமுடிந்திருக்கின்றன.

இதேவேளை நாவற்குழியில் அடாத்தாக குடியேறியுள்ள 188 சிங்கள குடும்பங்களும் தமது பிள்ளைகள் கற்பதற்காக யாழ் சிங்கள மகாவித்தியாலத்தை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் உருவங்களை தாங்கிய பதாகைகளை தொங்கவிட்டுள்ள இம்மக்கள் மூன்றாவது தவணை முடிந்ததும் கொழும்பில் உள்ள தமது பிள்ளைகளை மீண்டும் அழைத்துவரவேண்டியுள்ளதாகவும் அதனால் அவர்களுக்கான கல்வி வசதியை ஏற்படுத்தி தருமாறும் கேட்டுள்ளனர்.

அண்மையில் பெய்த கடும்மழைகாரணமாக அங்கு குடியேறிய தமிழ்மக்கள் வெளியேறிய நிலையில் அவர்களது குடிசைகளையும் இவர்கள் சூறையாடுவதாகவும் தமிழ்மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாடசாலைகளுக்கு அனுப்பட்ட தமிழ்ப்பாட நூல்களில் தமிழர்களது வரலாறுகள் திரிவுபடுத்தப்பட்டு  இருட்டடிப்பு செய்யப்படுவதாக சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரவு செலவுதிட்டவிவாதத்தின்போது உரையாற்றியபோதே தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளதுடன் இதனால் எதிர்கால மாணவர்கள் தமது கடந்தகால பாரம்பரிய வரலாறுகளையும் தமிழ் மன்னர்களின் பெயர்களையும் கூட தெரிந்துகொள்ளமுடியாமல் இருட்டடிப்பு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

போர் முடிவடைந்து 18 மாதங்கள் கடந்தபோதும் இன்னமும் பாடசாலைகளில் இராணுவத்தினர் தங்கியிருந்து தமிழ் மாணவர்களின் கல்விக்கு இடையூறாக இருப்பதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக ஓமந்தை தமிழ் மகாவித்தியாலத்தில் இராணுவத்தினர் தங்கியுள்ளதுடன் மாணவர்கள் மரங்களுக்கு கீழேயிருந்து கல்வியை தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எதிர்கால சந்ததியின் வாழ்வையும் அவர்தம் கல்வி வளத்தையும் சிதைக்கும் முயற்சிகள் போருக்கு பிந்திய காலகட்டத்தில் இன்னொரு வடிவில் முன்னெடுக்கப்படுவதாகவே அறியவருகின்றது.

இதன் மற்றைய பக்கத்தில் ஒக்ஸ்போட் உரையாற்ற சென்ற மகிந்த ராஜபக்ச தனது முயற்சி வெற்றியளிக்காமல் நாட்டுக்கு திரும்பிய நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

ஒக்ஸ்போட் உரையில் தமிழர்களுக்கான தீர்வுதிட்டத்தை முன்வைக்கவிருந்ததாகவும் அதனை தமிழர்கள் குழப்பிவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரித்தானிய அரசும் அதன் ஊடகங்களும் கவனம் செலுத்தியநிலையில் புலத்து தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட அர்ப்பணிப்புடன் கூடிய போராட்டத்தின் மூலமே மகிந்தவின் போர்மமதையுடன் கூடிய பயணம் நிறைவடையாமலே முடிவடைந்திருந்தது.

இந்நிலையில் அங்குதான் தீர்வுதிட்டத்தை வெளியிடவிருந்ததாக வெளிவருகின்ற அவரது கருத்துகளுக்கு பின்னால் இருக்கின்ற கொடூர முகத்தை தமிழ்மக்களால் தெளிவாக இனங்கண்டுகொள்ளமுடியும்.

தமிழர்களது ஒற்றுமையையும் உறுதியையும் குலைக்கவேண்டும் என்பதில் எதிரி எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கின்றான்?

- சங்கிலியன் -

நாடுகடந்த தமிழீழ அரசு – பங்களாதேசு – கன்னியாய் – தங்கப்பதக்கம் (வெள்ளிவலம்)

Tuesday, August 10, 2010 / No Comments
ஈழத்தமிழர்களின் சுதந்திரத்திற்கான வேட்கை என்பது தனியே முப்பது வருட ஆயுத விடுதலைக்கான போராட்டத்துடன் உருவானதல்ல. மாறாக தமிழர்களுக்கான அரசு இலங்கைத்தீவில் நிலைபெற்று இருந்தது என்பது என்பதாலும், தமிழர்கள் மீதான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது என்பதாலும், இழந்துபோன சுதந்திரத்தை அடைவதற்கான வேட்கை ஈழத்தமிழன் ஒவ்வொருவனிடத்திலும் ஏதோவிதத்தில் உள்ளக்கிடக்கையாகவே இருந்துவந்திருந்தது.

அதனாலேதான் ஆயுதவிடுதலைப் போராட்டமானது மௌனிக்கப்பட்டபோதும் சுதந்திர தமிழீழத்திற்கான குரல் இன்னும் அடங்கவில்லை.

இந்தவேளையில் தான், ஈழத்தமிழினத்தின் மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வாழும் நாடுகளில் அமைக்கப்பட்டுவரும் மக்கள் கட்டமைப்புக்கள் முக்கியமானதாகின்றன.

குறிப்பாக நாடுகடந்த தமிழீழ அரசின் உருவாக்கம் என்பது தமிழ் மக்களின் அரசியல் வலுவுடமையை உறுதியாக்கக்கூடிய மிகப்பெரிய அரணாக அமையகூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் தெரிவில் குறிப்பிடத்தக்களவான பிரதிநிதிகள் திருப்தியடையவில்லை எனினும், சனநாயக ரீதியான அடித்தளத்தளத்தில் எழுப்பப்படும் இக்கட்டமைப்பின் சனநாயக ரீதியான பண்பியல்பாகவே இதனை பார்க்கவேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசினை வலுப்படுத்துவதற்கான, திருத்தங்களை மேற்கொள்வதற்கான அறிவுரைகளாகவே அவை இருக்கும்.

இதற்கு அப்பால், நாடு கடந்த தமிழீழ அரசின் முதன்மைப்பிரதிநிதிகள் தெரிவுகள் நிறைவுபெற்றபோதும், நாடு கடந்த தமிழீழ அரசின் வலுவுடமை என்பது தமிழ் மக்களால் தீர்மானிக்கப்படுவதற்கு அப்பால் சர்வதேச நாடுகளின் அணுகுமுறை எப்படி அமையப்போகின்றன என்பதிலேயே பிரதானமாக தங்கியுள்ளது.

இதேவேளை சர்வதேச ரீதியாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சிறிலங்கா அரசுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி வரிச்சலுகை நீக்கம் குறிப்பிடத்தக்க நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்ததன் அண்மைய குறிகாட்டியாக பங்களாதேசு ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை பார்க்கலாம்.

தற்போது சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதிக்கான வாய்ப்புக்கள் பங்களாதேசுக்கு வந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

குறைந்த வேதனத்துடன் கூடிய வேலையாட்களை பெற்றுக்கொள்வதில் சீனாவில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக – சிறிலங்காவின் முன்னைய ஏற்றுமதியாளர்கள் – பங்களாதேசை நோக்கிய திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழர்களுக்கு நியாயமான உரிமைகளை கொடுப்பதைவிட தனது பொருளாதாரம் பாழானாலும் பரவாயில்லை என்றவகையிலான சிறிலங்கா அரசின் செயற்பாடுகளை சர்வதேசம் நிச்சயம் புரிந்துகொள்வதற்கான குறிகாட்டியாக நிச்சயம் இவ்விடயம் இருக்கும் என நம்பலாம்.

அண்மையில் திருமலை மாவட்ட அரசாங்க அதிபர், தமிழ் மக்களின் தொன்மைமிக்கதாக பேணப்படும் கன்னியாய் வெந்நீரூற்று பகுதியை சிறிலங்காவின் தொல்லியல் திணைக்களத்திடம் கையளிக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.

இதுவரைகாலமும் தமிழ் மக்களால் பராமரிக்கப்பட்டுவந்த அப்பகுதியை தற்போது சிகல உறுமய எனப்படும் சிங்கள பிக்குளின் கட்சியால் நிர்வகிகப்படும் தொல்லியல் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கூறப்பட்டுள்ள மர்மம் என்ன என்பதை தமிழ் மக்களுக்கு யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இவை இவ்வாறிருக்க, இந்தியாவின் புதுடில்லியில் அமைந்துள்ள இந்திராகாந்தி விளையாட்டுத்திடலில் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.

இப்போட்டிகளில் முன்னனியில் உள்ள அவுஸ்திரேலிய வீரர்களுடன், ஈழத்தைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் என்பவர், இரண்டு தங்கப்பதக்கங்களை பெற்று அவுஸ்திரேலிய நாட்டுக்கும் தனது தாய்நாடாம் தமிழீழத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஆனால் இதுவரை எந்தவித தங்கப்பதக்கத்தையும் பெறமுடியாமல் தவிக்கும் சிறிலங்காவுக்கு செல்லத்துரை பிரசாந்தின் சாதனை நிச்சயம் சில செய்திகளை சொல்லவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை இனப்படுகொலைக்கான காலப்பகுதியில் இலங்கைத்தீவை விட்டு வெளியேறி, அவுஸ்திரேலியாவை அடைந்த குடும்பங்களில் ஒன்றாகவே செல்லத்துரை பிரசாந்தின் குடும்பமும் ஒன்று.

அவுஸ்திரேலியாவை அடைந்த அந்தக்குடும்பத்தின் இளையவரான பிரசாந்த, சாதாரண எடைக்குறைப்பு பயிற்சிக்காகவே குறித்த விளையாட்டில் ஈடுப்பட்டதாகவும், நாளடைவில் அதுவே தனது விருப்பத்துக்குரிய கலையாக வளர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எத்தனையோ திறமைசாலிகள் இலங்கையை விட்டுவெளியேறியுள்ளார்கள். அதேவேளை தாயகத்தில் வாழும் எத்தனையோ வீரர்கள் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இப்போதும் வாழ்ந்துவருகின்றார்கள்.

தமிழர்களுக்கு சம உரிமைகளை வழங்கி கௌரவத்துடன் வாழ அனுமதித்திருந்தால், இவரைப் போன்ற எத்தனை வீரர்கள் அந்நாட்டுக்கு பெருமை சேர்த்திருப்பார்கள். அதனை சிங்கள தேசம் புரிந்திருந்தால் ஏன் இந்த அழிவுகள்? ஏன் இவ்வளவு இடப்பெயர்வுகள்?

-    சங்கிலியன்

நான்கு நிகழ்வுகளும் அவை சொல்லும் செய்திகளும்

Wednesday, January 13, 2010 / No Comments
கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு முக்கியமான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன. தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தி. மகேஸ்வரன் நினைவான மணிமண்டபம் திறப்பு விழா, தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு, மகிந்தவின் யாழ்ப்பாண வருகை என்பனவே அந்த நிகழ்வுகள் ஆகும். அந்நிகழ்வுகள் சொல்லும் செய்திகள் முக்கியமானவை. இந்த நிகழ்வுகள் சொல்லும் செய்தி என்ன? தமிழர்களது போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான நகர்வில் இவற்றின் பங்கு என்ன? என்பன தொடர்பில் ஆராய்கிறது இப்பத்தி.

தமிழீழ தேசிய தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை
பாரிசவாத நோயினால் படுக்கையில் இருக்கும் பார்வதி அம்மாவும், 86 வயதை கடந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஐயாவும் சிறிலங்காவின் பனாகொட இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். வயோதிப வாழ்வின் அமைதியை தொலைத்த இவர்களுக்கு பெரும் மனஅழுத்தங்களையே மேலும் கொடுத்தது சிங்கள அரசு. சுதந்திரமான வாழ்வை மறுத்து, தனது சொந்த பிள்ளைகளோடு வாழும் பந்தத்தை அறுத்து, இறுதியில் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களை கொன்றுவிட்டது.


திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் சாவும், அவரது இறுதி வணக்க நிகழ்வின்போது பங்குகொண்ட ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளும் தமிழ் மக்களுக்கு பல செய்திகளை சொல்லுகின்றன.

எண்பது அகவையை கடந்த இந்த தம்பதிகளை தடுத்து சிறைவைத்து, சிறிலங்கா அரசு சாதிக்க நினைத்தது என்ன? வெளிநாடுகளிலிருந்த அவர்களது பிள்ளைகளோடு இணைவதற்கு அவர்கள் விரும்பியபோதும் அதனை ஏன் சிறிலங்கா அரசு மறுத்தது? இவர்களை பற்றிய விசாரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு "அவர்கள் விரும்பினால் இந்தியாவுக்கு அனுப்புவது பற்றி பரிசீலிக்கலாம் ஆனால் வேறு எந்த நாடுகளுக்கும் செல்ல அனுமதிக்கமுடியாது" என சொல்லியிருக்கிறது சிறிலங்கா தரப்பு.

எண்பது அகவையை கடந்த இவர்களை தமிழீழ தேசிய தலைவரின் பெற்றோர் என்ற ஒரே காரணத்துக்காக சிறைவைத்து தனது கோரமுகத்தை காட்டிவிட்டது மகிந்தவின் பரிவாரங்கள். இவர்களது கையில் 10000 இற்கும் மேற்பட்ட சரணடைந்த போராளிகள் இன்னும் இருக்கிறார்கள் என்ற தகவல் முக்கியமானது.

தாங்கள் செய்த தவறை மறைக்கும் விதத்தில், திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகளை வல்வெட்டித்துறையில் மேற்கொள்ள சிறிலங்கா அரசு சம்மதித்தது. இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் மக்கள், உரிமை போருக்கு ஒப்பற்ற தலைவனை பெற்றெடுத்த பெருமகன் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு பெருமளவில் திரண்டு தமது இறுதி வணக்கத்தை தெரிவித்துக்கொண்டனர்.

"தமிழீழ தாய்நாட்டை அடைந்தே தீருவோம்" என ஒரு வயோதிப தாய் கத்தி அழுதது அனைவர் மனத்தின் எண்ணங்களையும் பிரதிபலிப்பதாய் அமைந்திருந்தது. சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வு முகவர்கள் தம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிந்தும் தமிழர்கள் வீதியில் இறங்கியது முக்கியமானதாகும்.


மகேஸ்வரன் மணிமண்டப திறப்பு

அடுத்த முக்கியமான நிகழ்வு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தி.மகேஸ்வரன் நினைவான மணிமண்டப திறப்புவிழா ஆகும். மணிமண்டப திறப்புவிழாவுக்காக ஐக்கிய தேசிய கட்சியின் முதல்வர் கரு ஜெயசூரிய வருகை தந்திருந்தார். மகேஸ்வரன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களதும் மற்றைய பத்திரிகையாளர்களின் கொலைக்கு காரணமானவர்களை தன்னால் இனங்காட்டமுடியும் பகிரங்கமாக இப்போது சரத் பொன்சேகா சொல்லிவருகின்றார்.

மகேஸ்வரன் கொல்லப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையிலும், அவர் கொல்லப்பட்ட நிகழ்வில் வைத்தே கொலையாளி கைது செய்யப்பட்ட நிலையிலும் இன்று வரை கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க சிறிலங்கா அரசு முன்வரவில்லை. இந்த நிலையில் இம்மணிமண்டப திறப்புவிழாவுக்கு சிறிலங்கா ஆளும் கட்சியின் சார்பில் எவரும் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழரசு கட்சியின் 60வது ஆண்டு மாநாடு

முக்கியமான அடுத்த நிகழ்வாக, தமிழரசு கட்சியின் 60வது தேசிய மாநாட்டு நிகழ்வை கருதலாம். அமைதிவழியில் தொடங்கிய விடுதலை் போராட்டம் ஆயுத வழியில் வீச்சுடன் பயணித்தபோதும், தற்கால சூழமவைவில் அரசியல் வழியிலான போராட்டமாக கூர்மைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்கான கோடிகாட்டும் நிகழ்வாக தமிழரசு கட்சியின் இம்மாநாட்டுக்கான தீர்மானங்களை கவனிக்கலாம்.



தமிழர்களது தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொண்ட ஒரு தீர்வு திட்டமே தமிழர்களின் தீர்வாக இருக்குமென அத்தீர்மானம் தெரிவிக்கிறது.

தமிழர்களுடைய விடுதலை் போராட்டத்தில் ஏற்பட்ட இடைவெளியை நிரப்புவதில் தாயகத்திலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் தமது கடமையை சரிவர செய்வார்கள் என்ற நம்பிக்கையை இத்தீர்மானமும், இம்மாநாட்டில் உரையாற்றிய  தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களின் பேச்சும் உறுதிப்படுத்துவதாகவே அமைகிறது.


மகிந்தவின் யாழ்வருகை

நான்காவதாக மகிந்தவின் யாழ்ப்பாணம் நோக்கிய பயணமும் அதனை தமிழர்கள் எதிர்கொண்ட விதமும் முக்கியமானதாகும். என்ன செய்தாலும் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று யாழ் குடாநாட்டில் நிலவிவந்த நிலைமாறி, அப்பகுதி மக்களும் தமது உரிமைகளை வெளிப்படுத்த இனிமேல் தயங்க போவதில்லை என்பதை கோடிகாட்டும் நிகழ்வுகளாக சில சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளன.



தமது தேர்தல் வேலைகளில் பங்குபற்றி வேலை செய்யுமாறும், தாம் மீள ஆட்சிக்கு வந்ததும், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு பெற்றுதரப்படும், என வேலையற்ற பட்டதாரி மாணவர்களுக்கு மகிந்தவின் பரிவாரங்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த மாணவர்கள் மகிந்தவுடனான சந்திப்பையும் புறக்கணித்தமை எதிர்காலத்தில் நடைபெறப்போகும் இன்னும் பல ஆச்சரியமான நடவடிக்கைகளுக்கும் ஒரு முன்னோட்டமே என்பதில் தவறில்லை.