News Ticker

Menu

நான்கு நிகழ்வுகளும் அவை சொல்லும் செய்திகளும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு முக்கியமான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன. தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தி. மகேஸ்வரன் நினைவான மணிமண்டபம் திறப்பு விழா, தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு, மகிந்தவின் யாழ்ப்பாண வருகை என்பனவே அந்த நிகழ்வுகள் ஆகும். அந்நிகழ்வுகள் சொல்லும் செய்திகள் முக்கியமானவை. இந்த நிகழ்வுகள் சொல்லும் செய்தி என்ன? தமிழர்களது போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான நகர்வில் இவற்றின் பங்கு என்ன? என்பன தொடர்பில் ஆராய்கிறது இப்பத்தி.

தமிழீழ தேசிய தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை
பாரிசவாத நோயினால் படுக்கையில் இருக்கும் பார்வதி அம்மாவும், 86 வயதை கடந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஐயாவும் சிறிலங்காவின் பனாகொட இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். வயோதிப வாழ்வின் அமைதியை தொலைத்த இவர்களுக்கு பெரும் மனஅழுத்தங்களையே மேலும் கொடுத்தது சிங்கள அரசு. சுதந்திரமான வாழ்வை மறுத்து, தனது சொந்த பிள்ளைகளோடு வாழும் பந்தத்தை அறுத்து, இறுதியில் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களை கொன்றுவிட்டது.


திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் சாவும், அவரது இறுதி வணக்க நிகழ்வின்போது பங்குகொண்ட ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளும் தமிழ் மக்களுக்கு பல செய்திகளை சொல்லுகின்றன.

எண்பது அகவையை கடந்த இந்த தம்பதிகளை தடுத்து சிறைவைத்து, சிறிலங்கா அரசு சாதிக்க நினைத்தது என்ன? வெளிநாடுகளிலிருந்த அவர்களது பிள்ளைகளோடு இணைவதற்கு அவர்கள் விரும்பியபோதும் அதனை ஏன் சிறிலங்கா அரசு மறுத்தது? இவர்களை பற்றிய விசாரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு "அவர்கள் விரும்பினால் இந்தியாவுக்கு அனுப்புவது பற்றி பரிசீலிக்கலாம் ஆனால் வேறு எந்த நாடுகளுக்கும் செல்ல அனுமதிக்கமுடியாது" என சொல்லியிருக்கிறது சிறிலங்கா தரப்பு.

எண்பது அகவையை கடந்த இவர்களை தமிழீழ தேசிய தலைவரின் பெற்றோர் என்ற ஒரே காரணத்துக்காக சிறைவைத்து தனது கோரமுகத்தை காட்டிவிட்டது மகிந்தவின் பரிவாரங்கள். இவர்களது கையில் 10000 இற்கும் மேற்பட்ட சரணடைந்த போராளிகள் இன்னும் இருக்கிறார்கள் என்ற தகவல் முக்கியமானது.

தாங்கள் செய்த தவறை மறைக்கும் விதத்தில், திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகளை வல்வெட்டித்துறையில் மேற்கொள்ள சிறிலங்கா அரசு சம்மதித்தது. இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் மக்கள், உரிமை போருக்கு ஒப்பற்ற தலைவனை பெற்றெடுத்த பெருமகன் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு பெருமளவில் திரண்டு தமது இறுதி வணக்கத்தை தெரிவித்துக்கொண்டனர்.

"தமிழீழ தாய்நாட்டை அடைந்தே தீருவோம்" என ஒரு வயோதிப தாய் கத்தி அழுதது அனைவர் மனத்தின் எண்ணங்களையும் பிரதிபலிப்பதாய் அமைந்திருந்தது. சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வு முகவர்கள் தம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிந்தும் தமிழர்கள் வீதியில் இறங்கியது முக்கியமானதாகும்.


மகேஸ்வரன் மணிமண்டப திறப்பு

அடுத்த முக்கியமான நிகழ்வு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தி.மகேஸ்வரன் நினைவான மணிமண்டப திறப்புவிழா ஆகும். மணிமண்டப திறப்புவிழாவுக்காக ஐக்கிய தேசிய கட்சியின் முதல்வர் கரு ஜெயசூரிய வருகை தந்திருந்தார். மகேஸ்வரன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களதும் மற்றைய பத்திரிகையாளர்களின் கொலைக்கு காரணமானவர்களை தன்னால் இனங்காட்டமுடியும் பகிரங்கமாக இப்போது சரத் பொன்சேகா சொல்லிவருகின்றார்.

மகேஸ்வரன் கொல்லப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையிலும், அவர் கொல்லப்பட்ட நிகழ்வில் வைத்தே கொலையாளி கைது செய்யப்பட்ட நிலையிலும் இன்று வரை கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க சிறிலங்கா அரசு முன்வரவில்லை. இந்த நிலையில் இம்மணிமண்டப திறப்புவிழாவுக்கு சிறிலங்கா ஆளும் கட்சியின் சார்பில் எவரும் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழரசு கட்சியின் 60வது ஆண்டு மாநாடு

முக்கியமான அடுத்த நிகழ்வாக, தமிழரசு கட்சியின் 60வது தேசிய மாநாட்டு நிகழ்வை கருதலாம். அமைதிவழியில் தொடங்கிய விடுதலை் போராட்டம் ஆயுத வழியில் வீச்சுடன் பயணித்தபோதும், தற்கால சூழமவைவில் அரசியல் வழியிலான போராட்டமாக கூர்மைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்கான கோடிகாட்டும் நிகழ்வாக தமிழரசு கட்சியின் இம்மாநாட்டுக்கான தீர்மானங்களை கவனிக்கலாம்.



தமிழர்களது தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொண்ட ஒரு தீர்வு திட்டமே தமிழர்களின் தீர்வாக இருக்குமென அத்தீர்மானம் தெரிவிக்கிறது.

தமிழர்களுடைய விடுதலை் போராட்டத்தில் ஏற்பட்ட இடைவெளியை நிரப்புவதில் தாயகத்திலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் தமது கடமையை சரிவர செய்வார்கள் என்ற நம்பிக்கையை இத்தீர்மானமும், இம்மாநாட்டில் உரையாற்றிய  தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களின் பேச்சும் உறுதிப்படுத்துவதாகவே அமைகிறது.


மகிந்தவின் யாழ்வருகை

நான்காவதாக மகிந்தவின் யாழ்ப்பாணம் நோக்கிய பயணமும் அதனை தமிழர்கள் எதிர்கொண்ட விதமும் முக்கியமானதாகும். என்ன செய்தாலும் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று யாழ் குடாநாட்டில் நிலவிவந்த நிலைமாறி, அப்பகுதி மக்களும் தமது உரிமைகளை வெளிப்படுத்த இனிமேல் தயங்க போவதில்லை என்பதை கோடிகாட்டும் நிகழ்வுகளாக சில சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளன.



தமது தேர்தல் வேலைகளில் பங்குபற்றி வேலை செய்யுமாறும், தாம் மீள ஆட்சிக்கு வந்ததும், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு பெற்றுதரப்படும், என வேலையற்ற பட்டதாரி மாணவர்களுக்கு மகிந்தவின் பரிவாரங்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த மாணவர்கள் மகிந்தவுடனான சந்திப்பையும் புறக்கணித்தமை எதிர்காலத்தில் நடைபெறப்போகும் இன்னும் பல ஆச்சரியமான நடவடிக்கைகளுக்கும் ஒரு முன்னோட்டமே என்பதில் தவறில்லை.

Share This:

No Comment to " நான்கு நிகழ்வுகளும் அவை சொல்லும் செய்திகளும் "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM