News Ticker

Menu

ஜோர்ஸ் ஆர் வில்லி – சிறிதர் – டிசம்பர் 15 (வெள்ளிவலம்)

அமெரிக்காவை வதிவிடமாக கொண்ட சட்டத்தரணி ஜோர்ஜ் ஆர் வில்லி – அண்மையில் சிறிலங்காவின் அரசதலைவர் கலந்துகொண்ட நிகழ்வில் – வரவேற்புரையை பதிவுசெய்திருந்தார். அவ்வுரை புலத்து ஊடகங்களில் மட்டுமன்றி, சிறிலங்கா அரச ஊடகத்திலும் வெளியிடப்பட்டிருந்தது.



அவ்வுரையில் எல்லாள மன்னனை துட்டகைமுனு அல்லது துட்டகாமினி எனப்படும் சிங்கள அரசன் தோற்கடித்து, இலங்கைத்தீவை ஒன்றிணைத்தது போல, மீண்டும் நவீன துட்டகைமுனுவாக மகிந்த ராஜபக்ச தோற்கடித்துள்ளதாகவும் – துட்டகைமுனு செய்தது போல தோற்கடிக்கப்பட்டவர்களை மதிக்கவேண்டும் எனவும் அதற்கான உரிய மதிப்புக்கள் செய்யாவிட்டால் – மீண்டும் பல பிரபாகரன்கள் தோன்றுவார்கள் எனவும் அவரது உரை அமைந்திருந்தது.

44 ஆண்டுகாலம் அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த எல்லாள அரசனை – அன்றைய போர்மரபுகளை மீறி – கொலைசெய்தான் துட்டகைமுனு.

விக்கிபீடியா தகவற்களஞ்சியத்தில் குறிப்பிட்டுள்ளபடி -

கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர். இதில் 44 வருடங்கள் எல்லாளனுக்கும் 22 வருடங்கள் அவனது தந்தை ஈழசேனனுக்குமுரியவை.

ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம்  தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் சிங்கள இனத்தின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்று.

இவ்வாறு வரலாறான தமிழ் அரசை எவ்வாறு துட்டகாமினி – போர்மரபுகளை மீறி – அழித்தானோ, அதுபோல நவீன துட்டகாமினியான மகிந்த ராஜபக்சவும் அனைத்து போர்மரபுகளை மீறி இன்றைய தமிழ் அரசையும் அழித்தான் என்பதுதான் இன்றைய வரலாறு.

தொடர்ச்சியாக தமிழ் அரசர்களால் 70 ஆண்டுகளாக ஆட்சி கொள்ளப்பட்ட பண்டைத்தமிழ் அரசின் கீழிருந்த தமிழ் மக்களின் மீது தந்திரமாக தனது மேலாதிக்கத்தை திணிப்பதற்கே அன்றைய துட்டகைமுனுவாலும் எல்லாள மன்னனின் தூபி திறந்துவைக்கப்பட்டிருக்கவேண்டும். ஏனென்றால் கொடியகுணம்கொண்டவர்கள் ஒரே நாளில் திருந்தியதாக வரலாறு எங்கேனும் இருக்கிறதா?

ஆனால், கொடூரமான ஒரு எதிரியே, இனி எமக்கு அடைக்கலம் என்பது போலவும், என்ன நடந்திருந்தாலும் மறந்துவிடுவோம். இனிமேலாவது எமக்கு சொர்க்கத்தை காட்டுங்கள் என இறைஞ்சுவது என்னவகையான அணுகுமுறை என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை.

இதேவகையான புதிய அணுகுமுறை ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதர் அவர்களும் அண்மைய நாடாளுமன்ற உரையின்போது மேற்கொண்டிருந்தார்.

அப்பேச்சில் குறிப்பிட்டிருப்பதாவது, இன்று சிறைவைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலானோரின் மனைவியர் தமது கணவன்மார் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பது தெரியாமல் இருக்கிறார்கள்.

அவர்கள் தாலி அணிந்திருக்க வேண்டுமா? அல்லது அணிந்திருக்ககூடாதா? என்பதில் குழப்பமான நிலை இருக்கின்றது. எமது சமூக கட்டமைப்பின்படி ஒருவர் இறந்துவிட்டால் தாலி அணியக்கூடாது. எனவே உண்மையில் சிறையில் இருப்பவர்களின் விபரங்களை வெளியிடுங்கள் அப்போது யார் யார் தாலி அணிந்திருக்கலாம் என முடிவுசெய்துகொள்வோம் என்பதாக அவரது பேச்சு இருந்தது.

உண்மையில் சிறைவைக்கப்பட்டிருப்பவர்களின் உறவுகளை நன்கு அறிந்தவர் என்ற வகையில், அவர்களை பற்றிய பிரச்சனையை வெளிக்கொண்டுவருவதற்கான புதிய அணுகுமுறை இது என்கிறார் அவர்.

ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நிறுவப்பட்ட ”விசாரணைக்குழு”வானது போரில் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை அனுப்பிவைக்குமாறு கோரியுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம்திகதிக்கு முன்னர் அவற்றை தமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும், குறித்த சாட்சி தேவையேற்படின் மேலதிக விபரங்களை வழங்கவேண்டும் எனவும் அதன் அறிக்கை தெரிவிக்கின்றது.

”அடக்கமாக” வெளியிடப்பட்ட இவ்வறிக்கை, சிறிலங்கா அரசின் விசாரணைக்குழுக்கள் தமது விசாரணைகளை பூர்த்தி செய்யும் நிலையில் வெளிவந்துள்ளமையானது சிறிலங்காவை பொறுத்தவரை இன்னும் அதற்கான பொறிகள் விரிக்கப்பட்டுவருவதை காட்டுகின்றது.

எனவே தமிழர் தரப்பானது இயன்றவரை தாயகத்திலும் புலத்திலும் வாழும் பாதிக்கப்பட்ட உறவுகளின் சாட்சியங்களை பதிவுசெய்து உரியவகையில் ஐநா விசாரணைக்குழுவுக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்துகொள்ளவேண்டும்.

பொருத்தமான இச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துதல், தமிழர் தரப்புக்கு முக்கியமானதாகும். அத்துடன் கடல்கடந்துவரும் உறவுகள், அரசியல் தஞ்சம் கோருவதற்கான சாதகமான சூழ்நிலையை – முள்ளிவாய்க்கால் பேரழிவின் கொடூரத்தை வெளிக்கொண்டுவருவதன் மூலம் -இவ்விசாரணைத் தகவல்கள் வழங்கும் என்ற செய்தியை அனைவருக்கும் எடுத்துச்செல்லவேண்டும்.



- சங்கிலியன் -

மேலதிக வாசிப்புகள்

'Your Excellency return us to paradise, return us to paradise'

பாராளுமன்றில் மீண்டும் ஓங்கி ஒலித்த சிறிதரன் குரல்

எல்லாளன்


Share This:

No Comment to " ஜோர்ஸ் ஆர் வில்லி – சிறிதர் – டிசம்பர் 15 (வெள்ளிவலம்) "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM