News Ticker

Menu

உதயசூரியன் சின்னம்: வைக்கப்பட்ட பொறி!

வெளிச்சவீடு என்றும் உதயசூரியன் என்றும் வீடு என்றும் தமிழர்களின் அர்ப்பணிப்பான விடுதலை இயக்கத்தால் உயிர்பிக்கப்பட்ட விடுதலை வேட்கையானது ஆசன பங்கீடுகளுக்காக கட்சிதாவலில் இறங்குகின்ற நிலைமையானது தமிழர்கள் தமது அரசியல் எதிர்காலம் பற்றி விழித்துக்கொள்ளவேண்டிய நிலைக்கு கொண்டுவந்துள்ளது.
தமிழ்மக்களின் அடிப்படையான அரசியல் அதிகாரம் என்பது, தமிழர் தாயகம் - தமிழர் தேசியம் - தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்ற அடித்தளத்தில் உருவாக்கப்படவேண்டும் என்றும், அதனை அடைவதற்கான இசைவுகள் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களினதும் போராளிகளினதும் தியாகம், இனப்படுகொலைக்கான நீதி, சர்வதேச நீதிவிசாரணை என்ற அடிப்படைகளை ஆயுதமாககொண்டு முன்னகர்த்தப்படவேண்டும் என்பதும் தமிழர் தரப்பின் நிலைப்பாடாக இருந்தது.



ஆனால் அத்தகைய பொறிமுறையை முன்னகர்த்துவதாக குறிப்பிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது, அந்த அடிப்படைகளை ஒவ்வொன்றாக நீர்த்துப்போகச் செய்து, சர்வதேசங்கள் தமிழர் நலனில் காட்டிவந்த அக்கறையையும் குறைப்பதற்கான, மறைமுக நிகழ்ச்சிநிரலில் செயற்படுவதான தோற்றப்பாடு உருவானது.



இத்தகைய பின்னனியில்தான், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான பலமான மாற்றுஅணியை பலப்படுத்தவேண்டிய தேவை பலராலும் முன்வைக்கப்பட்டது.



தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியானது, அதன் தொடக்ககாலம் தொட்டே தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது தமிழரது போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் படிமுறையான பொறிமுறையொன்றை கையாள்வதாக குற்றஞ்சாட்டிவருகின்றது. அது ஏற்கனவே 2009 இல் இந்தியாவால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், 13வது திருத்தத்தை திருத்தியதான ஒரு தீர்வுத்திட்டத்திற்கு தமிழர் தரப்பு இணங்கவேண்டும் என்ற கருத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் தொடர்ச்சியாகவே கூறிவந்தது.



எனினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீதான ஓரளவு நம்பிக்கையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் மாற்றுத்தலைமைக்கான பலவீனமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றான தெளிவான சக்தியை வளர்ப்பதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனாலும் தமிழ்த்தேசியத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை கொண்ட தரப்புகளின் தெளிவான ஆதரவைப் பெற்ற தரப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியால் ஓரளவு நிலைபெறமுடிந்தது.



இதன் பின்னனியில் உருவான தமிழ்மக்கள் பேரவையும், அதற்கு இணைத்தலைமை கொடுக்க முன்வந்த வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரனின் வருகையும் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.



ஆனாலும் அரசியல் சக்தியாக தமிழ் மக்கள் பேரவையை உருவாக்குவதில் தயக்கம் காட்டிய விக்கினேஸ்வரன் கொள்கை ரீதியாக மாற்றுசக்தி உருவாவதை வரவேற்றார்.

அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், புதிய சின்னத்தில் புதிய கூட்டணியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியும் ஈபிஆர்எல்எப் உம் இணைந்து, பொதுத் தேசிய செயற்பாட்டாளர்களையும் இணைத்து எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ள முடிவானது. அத்தகைய கூட்டானது தேர்தல் கூட்டாக அன்றி, நீண்டகால அரசியல் செயற்றிட்டத்தை மையமாக கொண்டதாக இருக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.



ஆனாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றான சக்தியாக தமிழ்த்தேசியத்தை வலுவாக முன்னகர்த்தும் சக்திகள் பலம் பெறுவதை விரும்பாத உள்ளக வெளியக சக்திகள், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியை உள்ளே கொண்டுவந்து குழப்பின.



தமிழர் விடுதலைக் கூட்டணி என்பதும் தமிழரசுக்கட்சி என்பதும் அதன் நிலையில் வேறுவேறானவை அல்ல. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அடிப்படை உறுப்பினர்களில் 80 விழுக்காட்டினர் தமிழரசுக்கட்சியின் “பாரம்பரிய அரசியல் வியாதிகளை” கொண்ட ஒரே மையத்தை சுற்றிய இரண்டு வட்டங்கள் என்பது பழைய அரசியல்வாதிகளுக்கே வெளிச்சமான விடயம்.



புதிய பலமான அணி உருவானால், அதற்கு தனது உதயசூரியன் சின்னத்தை விட்டுக்கொடுப்பதாக சொல்லும் ஆனந்தசங்கரிக்கு போட்டியாக, அடுத்த பொதுக்கூட்டத்தையே கூட்டி அதே சின்னத்தை முடக்கக்கூடிய “அரசியல் பாரம்பரியம்” அதன் உறுப்பினர்களுக்கு அதிகப்படியாகவே இருக்கின்றது என்ற வாதம் சின்னத்தனமானதல்ல.



அதேவேளையில், தமிழ்மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட இறுதியுத்த காலத்தில் அரசுடன் இணைந்துநின்று இனவழிப்புக்கு துணைநின்றவர்களை, எந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளமுடியும் என்ற வாதமும், தனது சொந்தங்களை பறிகொடுத்த ஒவ்வொருவனின் குமுறல் மட்டுமல்ல, சாதாரண மக்களிடத்திலும் எழும் கேள்விகள்தான்.



ஆனந்தசங்கரியோ அதன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வளர்ச்சி என்பதோ தமிழரசுக்கட்சியிலும் விட தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்பதும் அதன் தொடர்ச்சிதான்.



அதுவும் தமிழ்மக்கள் தங்கள் பேரம் பேசும்பேசும் வலுவை உச்சநிலையில் வைத்திருந்தவேளையில், விடுதலைப்புலிகளுக்கே சவால்விட்டு உதயசூரியன் சின்னம் பயன்படுத்தமுடியாதவாறு முடக்கிய ஆனந்தசங்கரியை முதன்மையாக கொண்ட ஒரு கட்சியுடன் இணைந்துகொள்வது, அடிப்படை முரண் இல்லையா என்ற கேள்வியும் அதன் நீட்சிதான்.



அத்தோடு தமிழரசுக்கட்சிக்கு மாற்றான அணிகள் என்பவை, கொள்கை சார்ந்து இணையவேண்டும் என்பதும் அது தலைமைத்துவம் மீதான காழ்ப்புணர்வாலோ அல்லது தனிப்பட்டட ஆசன பங்கீடுகளுக்காகவோ அமையக் கூடாது என்பதும் விதண்டாவாதமாக எடுத்துக்கொள்ளமுடியாது.



அந்தவகையில்தான் புதிய சின்னம் என்றும் புதிய கூட்டணி என்றும் ஓடிஓடி பதிவுவேலைகளை செய்த சுரேஸ் பிரேமசந்திரன், ஒண்டியாக சென்று உதயசூரியன் என்ற சின்னத்திற்காக ஆனந்தசங்கரியுடன் இணைந்துகொண்டது ஏமாற்றத்தை விதைக்கிறது.



தமிழ்த் தேசியத்திற்கான மாற்று அணி என்ற அணியில் உள்நுழைந்த விக்கினேஸ்வரனும் சுரேஸ் பிரேமசந்திரனும் காணாமல்போக, தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை முன்னிறுத்தி செயற்படக்கூடிய அணிகளை ஓரணியில் இணைக்கவேண்டிய நிலை கஜேந்திரகுமாருக்கு ஏற்பட்டது.



அதன் அடிப்படையில்தான், தமிழ்த் தேசிய பேரவை என்ற புதிய அரசியல் கூட்டணியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியத்திற்கான கிராமிய மட்ட செயற்பாட்டாளர்களை உள்ளடக்கியதான அந்த அணி எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்கின்றது.



வெற்றிகள் தோல்விகள் என்பவற்றுக்கு அப்பால் தமிழர்களின் எதிர்கால அரசியல்போக்கு எப்படியானதாக இருக்கப்போகின்றது என்பதையும், தமிழர் அரசியலில் பன்முகப்பட்ட கட்சிகளின் ஆளுமைகள் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றன என்பதையும், வெளிக்காட்டுவதுடன் அனைவருக்கும் சவாலானதாகவும் இத்தேர்தல் அமையப் போகின்றது.



இத்தேர்தல் மயக்கத்தில் தமிழர்களின் மீது திணிக்கப்படப்போகும் ஒற்றையாட்சி அரசியற்கட்டமைப்புக்கான தீர்வும் மறுதலிக்கப்படப்போகும் நீதியும் வெளித்தெரியப்போவதில்லை.



– அரிச்சந்திரன்

Share This:

No Comment to " உதயசூரியன் சின்னம்: வைக்கப்பட்ட பொறி! "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM