News Ticker

Menu

விக்கிலீக்ஸ் – ஐநா சபை - தேசியகீதம் (வெள்ளிவலம்)

அண்மையில் பரபரப்பாக பேசப்பட்டுவரும் விக்கிலீக்சால் கட்டுடைக்கப்பட்டுவரும் தகவற்பரிமாற்றம் என்பது முக்கியமானதாகிவிட்டது. அமெரிக்க தூதுவரகங்களால் ஒவ்வொரு நாட்டுநடப்புகளை பற்றியும், தமது நாட்டு அரசுக்கு அனுப்பட்ட தகவல்களே, விக்கிலீக்சால் கசியவிடப்படுகின்றன.



இவ்வாறு வெளியிடப்பட்ட தகவல்களில், வழமைபோல விடுதலைப்புலிகள் மீதான குற்றசாட்டுக்கள் இடம்பெற்றிருப்பினும், அமெரிக்க நிர்வாகிகளால் வெளியில் சொல்லப்படாத செய்திகள் எவ்வளவு இருக்கின்றன என்பதுவும், அவர்களால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை எப்படி வெளியிடாமல் தவிர்த்துவந்திருக்கின்றார்கள் என்பதையும் புரிந்துகொள்வது முக்கியமானது.

சிறிலங்கா அரசின் முழுமையான ஆதரவில் துணைப்படைகளாக டக்ளசின் ஈபிடிபியும் கருணாவின் அடியாட்களும் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதையும், எவ்வாறு பெண்களை தவறான வழிக்கு கொண்டுசென்றார்கள் என்பதையும், எவ்வாறு கப்பம் சேகரிப்பு நடைபெற்றது என்பதையும், அதற்கு கோத்தபாயவினால் எவ்வாறு நேரடியான ஆதரவு வழங்கப்பட்டது என்பதையும் ஆதாரப்படுத்திய அமெரிக்க நிர்வாகம் அதனை வெளிப்படுத்தாமலே அவற்றை மௌனப்படுத்தியது.

ஆனால் சிறிலங்காவிலிருந்த அமெரிக்க அதிகாரிகளினால் அமெரிக்க அரசுக்கு அனுப்பப்பட்ட தகவல்களை, விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் ஊடாக வெளிப்படுத்தப்பட்டமை தமிழர் தரப்பை பொறுத்தவரை முக்கியமான ஆவணமாகும்.

இதன் மூலம் சிறிலங்கா என்ற நாட்டுக்காக, அமெரிக்கா என்ற வல்லமை பொருந்திய அரசு எவ்வாறு ”அடக்கிவாசித்துள்ளது” என்ற புரிதல் தமிழர் தரப்புக்கு முக்கியமானது. அதன் ஊடாகவே சர்வதேச அரசுகளின் அதிகாரங்கள் எவ்வாறு இன்னொரு நாட்டின் எல்லைக்குள் செல்லமுடியும் அதன் எல்லைகள் என்ன என்பதையும் புரிந்துகொள்ளமுடியும்.

இதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையால் ”அடக்கிவாசிக்கப்பட்ட” ஐக்கியநாடுகள் சபையின் விசாரணைக்குழுவானது சிறிலங்கா செல்வதா விடுவதா என்று யோசித்துக்கொண்டிருக்கின்றது.

சிறிலங்கா சென்றால் போரின்போது பாதிக்கப்பட்ட மக்களின் குரலை கேட்கவேண்டும். அல்லது தங்களுடைய நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிவிடும் என்பது அவ்விசாரணைக்குழுவுக்கு தெரியுமோ இல்லையோ பான்கீமூனுக்கு நன்றாக தெரியும்.

அடுத்ததடவையும் ஐநா செயலர் பதவியில் ஒட்டியிருப்பதற்கு ஏற்றவாறு தனது நகர்வுகளை மேற்கொள்ளும் பான்கீமூன், நிச்சயமாக திடமான முடிவுகளை எடுக்கமாட்டார் போலவே தெரிகின்றது.

அத்தோடு அவ்வாறு செல்லும் குழுவானது சரத் பொன்சேகாவை சந்திக்கவேண்டும். ஏனெனில் போரின்போது அந்நிகழ்வுகளுக்கு பொறுப்பாகவிருந்த இராணுவதளபதி அவர்.

எனவே எந்தநாட்டுக்கும் ”நோகாமல்” தனது நாற்காலியை தக்கவைக்கவேண்டும் என்றால் ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவுக்கு விசா வழங்கவேண்டாம் என பான்கீமூன் தந்தியடிக்கவும் கூடும்.

இதேவேளை தமிழர்களது அடையாளத்தை அழித்தொழிக்கும் நாசகார திட்டத்தை படிப்படியாக மகிந்த அரசு முன்னெடுத்துவருகின்றது. அந்த வகையில் தமிழர் தாயகத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடவேண்டும் எனும் புதிய திட்டத்தை சிறிலங்கா முன்னெடுக்கவுள்ளமை உறுதியாகியுள்ளது.

இத்திட்டம் அமைச்சரவை மட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது, பின்னர் ஏற்பட்ட விமர்சனங்களால் கைவிடப்பட்டதாக போக்குகாட்டி மீண்டும் யாழ்ப்பாணத்தில் அதே சிங்கள மொழியிலான தேசிய கீதம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வில் இசைக்கப்படவுள்ளது.

தமிழர்களை பொறுத்தவரை சிறிலங்காவின் தேசியகீதம் என்பது அன்னியநாட்டின் தேசிய கீதமாகும். அது தமிழர்கள் மீது திணிக்கப்படுகின்ற தேசிய கீதம் ஆகும். தமிழர்களின் தேசம் என்பது தனியான தேசம் என்பதும், அதற்கான இறைமை தனியானதுதான் என்பதுமே தமிழர்களின் நிலைப்பாடாகும்.

தற்போதைய நிலையில் இதற்கான கோரிக்கை அடக்கிவாசிக்கப்படுவது அடக்குமுறையினாலேயன்றி அடங்கிப்போனதால் அல்ல என்பதை சிங்கள தேசம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால் அதற்கு மாறாக தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் நோக்குடனும், சிங்கள மேலாதிக்கத்தை திணிக்கும் நோக்குடனும், சிங்கள மொழியில் மட்டுமே தேசியகீதம் பாடப்படவேண்டும் என்ற நிலைவரலாம்.

அவ்வாறான நிலைவருவது தமிழர்களை பொறுத்தவரை நல்லதொரு சந்தர்ப்பமாக கொண்டு, சிறிலங்கா தேசிய கீதம் சிங்களமொழியிலேயே பாடப்படவேண்டும் என்பதையும் தமிழர்களின் தேசமான தமிழீழத்தில் தமிழரின் தேசியகீதமே இசைக்கப்படவேண்டும் என்ற கருத்தை நாம் அனைவரும் முன்னிலைப்படுத்தவேண்டும்.

- சங்கிலியன் -



Share This:

No Comment to " விக்கிலீக்ஸ் – ஐநா சபை - தேசியகீதம் (வெள்ளிவலம்) "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM