News Ticker

Menu

களங்கள் – 18. நாகர்கோவில் பதுங்கித் தாக்குதல் -2

 28.07.2001


அதிகாலையில் றெஜித்தன் அண்ணா எம்மிடம் வந்துசேர்ந்தார். முதல்நாள் நடந்தவற்றைக் கூறியதோடு இப்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்பதையும் கூறினார்.


முதல்நாள் இரவு திட்டமிட்டபடியே எமது அணி எதிரியின் பகுதிக்குள் ஊடுருவியிருந்தது. கடும்மழை பெய்தபோதும் குறிப்பிட்டநேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அவர்கள் அடைந்திருந்தார்கள். கண்ணிவெடியை நிலைப்படுத்தவேண்டிய இடத்தில் நிலைப்படுத்திவிட்டு வெடிக்கவைப்பதற்கான பொறியமைப்பைத் தயார்செய்யும்போது தான் அவர்கள் அந்த விபரீதநிலையை உணர்ந்தார்கள்.


வெடிப்பைத் தொடக்கிவைக்கும் கெற்புக்கான (Detonator) மின்னிணைப்பை இணைக்கப் போகும்போது எச்சரிக்கை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. மின்னியற் பொறிமுறையில் ஏதாவது தவறு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்தால் இந்த சிவப்பு மின்குமிழ் ஒளிரும். இம்மின்குமிழ் எரியும்போது கெற்புக்கான இணைப்பைக் கொடுத்தால் அக்கணமே அவ்வெடிப்பொருள் வெடிக்கும்.


அன்றிரவு முழுவதும் கடும்மழை பெய்தது மட்டுமன்றி, நீரேரிக்கூடாகவே இராகவன் கண்ணிவெடியோடு எமது அணி நகர்ந்திருந்ததாலும் மின்னியற் பொறிமுறையில் குறுக்கிணைப்பு ஏற்பட்டிருந்தது. நீர்க்காப்புக்காகப் போதிய கவனமெடுத்திருந்தாலும்கூட இது நடந்துவிட்டது. இந்நிலையில் நிச்சயமாக கண்ணிவெடியைப் பயன்படுத்த முடியாது. உள்ளிருந்தபடியே திட்டம் பிசகிவிட்டதையும் தாம் உடனேயே வெளியேறி தளம் மீள்வதையும் சங்கேத மொழியில் தெரிவித்துவிட்டு அணியினர் வெளியேறினர். விடிவதற்குள் அவர்கள் எதிரிநிலைகளைக் கடந்துவிட வேண்டும்.


இப்போது எம்முன்னுள்ள தெரிவு, இருக்கும் வெடிபொருளைத் திருத்திப் பயன்படுத்துவது அல்லது புதியதைப் பெற்றுப் பயன்படுத்துவது. எதுவென்றாலும் இன்றே செய்துவிடவேண்டுமென்பதும் றெஜித்தன் அண்ணாவின் திட்டமாக இருந்தது. இருப்பதைத் திருத்துவதென்றாலும்சரி, புதியதைப் பெறுவதென்றாலும் சரி நாம் சுதந்திரபுரம் சென்றாகவேண்டும். அங்குத்தான் மின்னியற்றுறையினரின் பட்டறை இருந்தது.  குறிப்பிட்ட இராகவன் கண்ணிவெடியும் அதற்குரிய தொலைக்கட்டுப்பாட்டு வெடிப்புக்கருவியும் அதிகளவில் புழக்கத்திலில்லாத, சிறப்பு வெடிபொருட்கள் என்பதால் எப்படியும் மின்னியற்றுறையினரின் பட்டறைக்குச் சென்றாக வேண்டிய தேவையிருந்தது. மின்னியற்றுறையினருக்கு நிகழ்ந்ததனைத்தும் சொல்லப்பட்டாயிற்று. நாம் இப்போது தொலைதூர வெடித்தல் தொகுதியைக் கொண்டு சுதந்திரபுரம் சென்றாக வேண்டும். கண்ணிவெடியைக் காவிச்செல்ல வேண்டிய தேவையிருக்கவில்லை. குறுக்குச் சுற்றோட்டம் நடந்திருந்தது தொலைதூர வெடிப்புக் கருவித் தொகுதிக்குள்தான்.


நாம் இப்போது நிற்பது செம்பியன்பற்றுப் பகுதியில். எம்மிடம் நிற்கும் win-100 பெற்றோல் இல்லாமல் நிற்கிறது. மின்னியற்றுறையிலிருந்து பயிற்சி தரவென வந்திருந்த போராளியும் நானும் சுதந்திரபுரம் செல்வதாக ஏற்பாடு. அங்கிங்கென்று கேட்டு இறுதியில் தாளையடியிலிருந்த கடற்புலிகள் தமது C-90 மோட்டார்சைக்கிளைத் தருவதெனக் கூறினர். அந்த C-90 இல் நாமிருவரும் சுதந்திரபுரம் புறப்பட்டோம்.


சுதந்திரபுரம் போய்ச்சேரவே மதியமாகிவிட்டது. ஏற்கனவே நிலைமை விளங்கப்படுத்தப்பட்டிருந்ததால் எமக்காக அவர்கள் காத்திருந்தார்கள். நாம் கொண்டுபோய்க் கொடுத்த தொகுதியைச் சரிப்படுத்தி, பரிசோதித்துத் தர மாலையாகிவிட்டது. இடையிலே செம்பியன்பற்றிலிருந்து நாலைந்துதரம் அழைத்துவிட்டார்கள். ‘எல்லாம் சரிவரும், இண்டைக்கிரவு வழமையைப் போலச் செய்யத் தயாரா இருங்கோ’ என்று சொல்லியிருந்தோம்.


சுதந்திரபுரத்திலிருந்து புறப்பட மாலை ஆறுமணி ஆகிவிட்டது. இடையில் மோட்டார்சைக்கிள் ஏதும் பிரச்சனை தரவில்லையென்றால் ஏழரைக்குள் அங்கு வந்துவிடுவோமென்று றெஜித்தன் அண்ணனிடம் சொல்லிவிட்டு இருவரும் புறப்பட்டோம். மறுநாள் காலை தாம் தகவலுக்காகக் காத்திருப்பதாகவும் மறக்காமல் உடனடியாகவே தம்மோடு கதைக்க வேண்டுமென்றும் மின்னியற்றுறைப் போராளிகள் எம்மைக் கேட்டுக் கொண்டனர். நாளை அதிகாலையில் தாக்குதல் நடக்குமென்பது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


பயப்பட்டமாதிரி மோட்டார்சைக்கிளுக்கு எதுவும் நடக்காமல் நாம் குறிப்பிட்ட நேரத்திற்குச் செம்பியன்பற்றுக்குப் போயிருந்தோம். ஏற்கனவே அணியினரும் றெஜித்தன் அண்ணையும் நாகர்கோவில் முன்னரங்குக்குச் சென்றிருந்தனர். எம்மை நேரே அங்கே வரும்படி சொல்லியிருந்தார்.


செம்பியன்பற்றிலிருந்து நாகர்கோவில் முன்னரங்குக்குச் சென்றோம். அங்கு வைத்து மீளவும் வெடிபொருட்களைப் பரிசோதித்து எல்லாம் பாதுகாப்பான நிலையிலுள்ளதை உறுதிப்படுத்தினோம். நீர்க்காப்பு வழிமுறைகளைச் சரிவரச் செய்து அணியினரிடம் கொடுத்தோம். இன்று காலநிலை தெளிவாக இருந்தது. நேற்றிரவு முழுவதும் மழைக்குள்ளால் உள்நகர்ந்து மீளவும் வெளிவந்திருந்த அணியினர் தமது களைப்பையும் பொருட்படுத்தாது இன்று மீளவும் தாக்குதல் நடவடிக்கைக்காக உள்நுழைகின்றனர்.


அனைவரும் உற்சாகமாகவே இருந்தனர். எப்படியும் இந்தத் தாக்குதலை வெற்றிகரமாகச் செய்துவிடுவதென்று அவர்கள் கங்கணம் கட்டியிருந்தனர். இராகவன் கண்ணிவெடியைக் கொண்டு நடத்தப்படும் முதலாவது ஊடுருவல் தாக்குதல் இதுவென்பதால் மின்னியற்றுறையினர் உட்பட எல்லோரும் அதிக எதிர்பார்ப்போடு இருந்தனர். மறுநாள் அதிகாலை தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இதற்கென ஒதுக்கப்பட்ட ஆட்லறி அணியினரும் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டனர்.


அணியினரை வாழ்த்தி அனுப்பியபின்னர் நாம் செம்பியன்பற்றுத் தளத்துக்குத் திரும்பினோம். றெஜித்தன் அண்ணா நாகர்கோவிலிலேயே தங்கினார். அன்றிரவு கண்ணிவெடியை நிலைப்படுத்திவிட்டு அணியின் ஒருபகுதி திரும்பிய செய்தி வந்து சேர்ந்தது.


29.07.2001 அதிகாலை


ஐந்து மணிக்கே எழுந்து தொலைத் தொடர்புக்கருவிக்கருவில் காத்திருந்தோம். வேவுத் தகவலின்படி ஆறு மணியளவில்தான் இராணுவத்தினர் தமது ரோந்தைத் தொடங்குவார்கள். நடக்கப் போகும் தாக்குதலில் எதிரிதரப்பில் அதிகளவு உயிரிழப்பை நாம் எதிர்பார்க்க முடியாது என்பது எமக்குத் தெரியும். காரணம் நன்றாக இடைவெளி விட்டு நகரும் இராணுவத்தினரில் மிகச்சிலர் மட்டுமே கண்ணிவெடியின் தாக்குதல் வீச்சுக்குள் அகப்படுவார்கள். ஆறு அல்லது ஏழு பேரளவில்தான் இந்த எல்லைக்குள் வருவார்கள். எனினும் நாகர்கோவில் இராணுவத்தினரின் பின்பக்கத்தில் நடக்கப் போகும் இத்தாக்குதல் முக்கியமானதாக இருந்தது. அதைவிட இராகவன் கண்ணிவெடியைக் கொண்டு தாக்குதல் நடத்துவதும் முக்கியமான ஒரு விடயமாக இருந்தது.


சரியாக ஆறு மணி ஐந்து நிமிடத்தில் ஒரு பேரோசை கேட்டது. ஆம்! அது இராகவன் கண்ணிவெடியின் ஒலியேதான். அவ்வொலி புதுக்குடியிருப்பு வரை கேட்டது. தாக்குதலை எதிர்பார்த்திருந்த மின்னியற்றுறைப் போராளிகள் உடனடியாகவே எமக்குத் தொடர்பெடுத்து சங்கதி கேட்டார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லிவிட்டு நாம் றெஜித்தன் அண்ணாவின் தொடர்புக்குக் காத்திருந்தோம்.


கண்ணிவெடித் தாக்குதலைத் தொடர்ந்து எமது ஆட்லறித் தாக்குதலும் நடத்தப்பட்டது. உள்ளிருந்து தகவல் சொல்லும் போராளிகளின் உதவியோடு சில எறிகணைகள் உடனடியாகவே அவ்விடத்துக்கு ஏவப்பட்ட பின்னர் தாக்குதல் நிறுத்தப்பட்டது. காயக்காரரை அப்புறப்படுத்தவும், அவ்விடத்தில் தேடுதல் நடத்தவுமென வரும் இராணுவத்தினரைக் குறிவைத்து மீளவும் தாக்குதல் நடத்துவதென்பது எமது ஏற்பாடு.


தாக்குதல் நடத்திய போராளிகள் இருவரினதும் தகவற்படி தாக்குதல் வீச்சுக்குள் இருந்த இராணுவத்தினர் அந்தந்த இடத்திலேயே விழுந்தவிழுந்தபடியே கிடக்கின்றனர். யாரும் எழுந்து ஓடவுமில்லை. யாரும் உதவிக்கு வரவுமில்லை. ரோந்து அணியில் பின்னால் வந்துகொண்டிருந்தவர்கள் மீளவும் காப்பரண்களுக்கே ஓடிவிட்டனர். அன்று மதியம் பதினொரு மணிவரையும் விழுந்துகிடந்தவர்களை அப்புறப்படுத்தவோ, அவ்விடத்தில் தேடுதல் மேற்கொள்ளவோ இராணுவத்தினர் வரவேயில்லை.


இந்நிலையில் குறிப்பிட்ட போராளிகள் இருவரையும் பாதுகாப்பாக கண்டல் பகுதிக்கு நகர்ந்து  உருமறைப்பாக இருக்கும்படி பணிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் கண்டல் காட்டுக்குள் நகர்ந்து மறைந்திருந்து அன்றிரவு நீரேரி கடந்து எம்மிடம் வந்து சேர்ந்தார்கள்.


எல்லோருக்கும் புதிராக இருந்தது. இராணுவத்தரப்பின் இழப்பு விபரங்கள் எதுவும் தெரியவில்லை. வழமை போல எதிரியின் தொலைத்தொடர்பாடல்களில் இந்த விபரங்களை அறிந்துகொள்ளும் வழிமுறையும் கைகூடவில்லை. காரணம், இது தொடர்பாக எந்தவொரு உரையாடலும் எதிரிகளுள் நடக்கவில்லை. அன்று மதியம் இரண்டு மணியளவில் நாகர்கோவில் பகுதியில் உலங்குவானூர்த்தியொன்று இறங்கி ஏறிச்சென்றதை மட்டும் உறுதிப்படுத்த முடிந்தது. காயக்காரரை அல்லது இறந்த இராணுவத்தினரின் உடல்களை ஏற்றிச்சென்றிக்கலாமென்று ஊகித்தோம். அன்றிரவு பலாலியிலிருந்து காயக்காரர் சிலரை விமானம் மூலம் தென்னிலங்கை ஏற்றிச் சென்றதை ஒட்டுக்கேட்கும் பிரிவு உறுதிப்படுத்தியது. ஆனால் அது குறிப்பிட்ட நாகர்கோவில் தாக்குதலோடு தொடர்புடையது என்ற குறிப்பு எதிரியால் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.


விடுதலைப் புலிகளின் மரபுக்கிணங்க, எதிரியின் இழப்பை உறுதிப்படுத்த முடியாதபடியால் இத்தாக்குதல் தொடர்பான செய்தி வெளியிடப்படவில்லை. தாக்குதலோடு தொடர்புடையவர்களுடன் இது நின்றுபோனது. அதற்கு அடுத்துவந்த நாட்களில் அத்தாக்குதலின் இழப்பு விபரம் அறியும் முயற்சிகள் கைகூடவில்லை. உள்ளே நின்று தாக்குதலை நடத்திய போராளிகள் இருவரை மாறிமாறி விசாரித்து முடித்தார்கள். பெறுபேறு தெரியாத ஒரு தாக்குதலாக அது முடிந்து போனது.


=======================


இயக்கத்தின் கட்டமைப்புக்கள் பலவழிகளில் தமது முயற்சிகளை விடாப்பிடியாக மேற்கொள்ளும். அதன்படி மேற்குறிப்பிட்ட நாகர்கோவில் தாக்குதலின் இழப்பு விபரத்தை கிட்டத்தட்ட ஓராண்டின் பின்னர் இயக்கம் உறுதிப்படுத்தியது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் 2002 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இத்தாக்குதலை நெறிப்படுத்திய றெஜித்தன் அண்ணாவுக்கு தலைமைப்பீடத்தால் தகவல் வழங்கப்பட்டது. அதன்படி இராணுவத்தினர் ஐவர் கொல்லப்பட்டதோடு ஏழு பேர் காயமடைந்திருந்தனர். அவர்களில் ஒருவர் பின்னர் மருத்துவமனையில் இறந்தார்.


லெப்.கேணல் றெஜித்தன் அண்ணா 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார்.


நாகர் கோவிலுக்குள் ஊடுருவி கண்ணிவெடித் தாக்குதல் நடத்திய அணியில் இடம்பெற்றிருந்த மன்னார் வங்காலையைச் சொந்த இடமாகக் கொண்ட லெப்.கேணல் வசந்தன் வன்னிப்போரின் இறுதிக்காலப்பகுதியில் வீரச்சாவடைந்தார்.

Share This:

No Comment to " களங்கள் – 18. நாகர்கோவில் பதுங்கித் தாக்குதல் -2 "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM