News Ticker

Menu

களங்கள் - 12. ஓயாத அலைகள் மூன்று

வோக்கியை ஓடவிட்டு ஒட்டுக் கேட்டதில் வன்னியில் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பலவிடங்கள் மீட்கப்பட்டதாக அறிந்தோம். ஆனால் அதை உண்மையென்று நம்புமளவுக்கு நாம் இருக்கவில்லை. இவ்வளவு விரைவாக இந்த இடங்கள் அடுக்கடுக்காக வீழ்ந்ததை யாராலும் நம்ப முடியவில்லை. ஆனாலும் நாம் கேட்டுக் கொண்டிருந்த குரலுக்குரியவர்கள் களமுனையில் நிற்கும் தளபதிகள் என்பதையும் மறுக்க முடியவில்லை.


அப்போது நாம் இருந்தது கற்சிலைமடு – ஒட்டுசுட்டான் வீதியிலிருந்து சற்று உள்ளே ஒரு மாந்தோப்பில். ஏறக்குறை 25 பேர் வரையில் இருந்தோம். அன்று பகல் அருளனையும் சசியையும் இழந்த தாக்கத்திலிருந்து நாங்கள் முற்றாக மீண்டிருக்கவில்லை. இருந்தபோதும் இந்தக் களமுனைத் தகவல்கள் ஒருவித பரபரப்பை எம்மிடையே விதைத்திருந்தது. என்ன நடக்கிறதென்று அறியும் ஆவலை அடக்க முடியவில்லை.இனியும் பொறுத்திருக்க முடியாதென்று நானும் செல்வனும் வீதிக்கரைக்குச் சென்றோம். அவ்வழியால் செல்லும் தெரிந்தவர்களோடு கதைத்தால் ஓரளவு விடயங்கள் தெரியவருமென்பது எம் எண்ணம். அவ்வப்போது இயக்க வாகனங்கள் போய்வந்தனவேயன்றி யாரும் நின்று கதைப்பதாகத் தெரியவில்லை. அப்போது தோழில் வானொலிப்பெட்டியைக் கொழுவியபடி ஒருவர் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். வானொலியில் புலிகளின்குரல் ஒலிபரப்பு போய்க்கொண்டிருந்தது. வன்னியில் வானொலிப்பெட்டியைத் தோளில் கொழுவியபடி சைக்கிளால் செல்லும் அனேகமானவர்களைக் காணலாம். அதை றேடியோ என்றுகூடச் சொல்வதில்லை, பாட்டுப்பெட்டி என்றுதான் சொல்வதுண்டு.


பாட்டுப் பெட்டியுடன் போய்க்கொண்டிருந்த ஐயாவை மறித்தோம். ஐயாவுக்கு எம்மைவிட ஓரளவு விடயங்கள் அதிகமாகத் தெரிந்திருந்தது. அம்பகாமம், கரிப்பட்டமுறிப்பு, மணவாளன்பட்ட முறிப்பு ஆகியவிடங்களில் நடந்த சண்டைகளில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்களை மேளிவனத்தில் (ஒட்டுசுட்டான் – மாங்குள வீதியிலிருக்கும் ஒரு கிராமம்) கொண்டு வந்து சேர்ப்பதாக ஐயா சொன்னார். அதைவிட கரிப்பட்ட முறிப்பு முகாம் கைப்பற்றப்பட்டுவிட்டதெனவும் ஐயா சொன்னார்.


கரிப்பட்ட முறிப்பு விழுந்தது எப்பிடி உங்களுக்குத் தெரியும்?


‘புலிகளின் குரலில சொன்னது தம்பி. அதுமட்டுமில்லை கென்ற்பாம், டொலர்பாம், சிலோன்தியேட்டருகளும் விழுந்திட்டுதாம்.’


சிலோன்தியேட்டர் எங்க கிடக்கு, கரிப்பட்ட முறிப்பு எங்க கிடக்கு? நீங்கள் ஏதோ மாறிச் சொல்லிறியள் போல கிடக்கு…’


‘தம்பி எனக்குத் தெரியும் உந்த இடம் வலமெல்லாம். ஒதியமலைதான் என்ர சொந்த இடம். அங்காலப்பக்கமும் சண்டை நடக்குது, இஞ்சாலப் பக்கமும் சண்டை நடக்குது. அனேகமா நாளைக்கு விடியவே கனகராயன்குளமெல்லாம் விழுந்திடும்.


நாங்கள் வோக்கியில் கேட்டதைப்போல்தான் ஐயாவின் கதையிருந்தது. கென்ற்பாம், டொலர்பாம், சிலோன் தியேட்டர் பகுதிகள் விழுந்ததாக ஐயா சொல்வது எமக்கு இன்னும் ஐயத்தை ஏற்படுத்தியது. அப்பகுதிகள் கிட்டத்தட்ட சிங்களமக்களின் நிலப்பகுதி என்று எமது மனதில் பதியும்வண்ணம் நீண்டகாலத்தின் முன்பே பறிக்கப்பட்டுவிட்ட பகுதிகள். முன்னேறி நின்ற இராணுவத்தினரைத் தாக்குவதாக நாம் கருதிக்கொண்டிருந்த வேளையில், மிக நீண்டகாலத்தின்முன்பே, எமது இயக்கம் ஒரு கரந்தடிக் குழுவாக இருந்த காலத்திலேயே பறிக்கப்பட்ட நிலப்பகுதிகள் சில எம்மால் மீட்கப்பட்டதாக ஐயா சொல்வதை உடனடியாக நம்ப முடியவில்லை.


ஐயாவை சைக்கிளை விட்டு கீழே இறக்கினோம். நான் வானொலியை வாங்கிக் கொண்டேன். புலிகளின் குரலின் சிறப்பு ஒலிபரப்பு போய்க்கொண்டிருந்தது. எப்படியும் அடிக்கடி சிறப்புச் செய்திகள் சொல்லிக் கொண்டிருப்பார்கள். செய்தியைக் கேட்டுவிட்டு ஐயாவை அனுப்புவோம் என்று முடிவெடுத்தோம். ஐயாவும் சம்மதித்தார். தான் சொன்ன செய்தியை நாங்கள் நம்பவில்லை என்பதை ஐயா அறிந்திருந்தார்.


பத்து நிமிடத்திலேயே புலிகளின் குரலின் சிறப்புச் செய்தி வந்தது. ஆம்! நாம் கேள்விப்பட்டதெல்லாம் செய்தியாகச் சொல்லப்பட்டது. சுருக்கமாக இரண்டு நிமிடங்கள் மட்டுமே போகும் அந்தச் செய்தியில் இதுவரை கைப்பற்றப்பட்ட இடங்கள் சொல்லப்பட்டன. தொடர்ந்தும் சண்டை நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. இறுதியில் இதுவரை இச்சமரில் நூறு வரையான மாவீரர்கள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று சொல்லி அச்செய்தி முடிவடைந்தது.


‘தம்பி, உவ்வளவு இடங்களும் பிடிபட்டதை நம்பிறம். ஆனால் வீரச்சாவு எண்ணிக்கைதான் நம்பேலாமல் கிடக்கு. உதுகளை ஏன்தம்பி மறைக்க வேணும். இயக்கம் ஒருக்காலும் இப்பிடிச் செய்யிறேல.’


சொல்லிவிட்டு ஐயா புறப்பட்டார். நாம் மீண்டும் ஆவலாக மாந்தோப்புக்கு ஓடிவந்தோம் செய்தியை மற்றவர்களிடம் சொல்ல. புலிகளின் குரலில் இவ்வளவு இடங்களும் சொன்னார்கள் என்று நாம் சொன்னபோதுதான் மற்றவர்களும் முழுமையாக நம்பினார்கள்.


ஐயா குறைபட்டதுபோல் வீரச்சாவு எண்ணிக்கையென்பது நம்ப முடியாததாகவே இருந்தது. இராணுவம் ஆயிரத்தையும் தாண்டிய எண்ணிக்கையில் மாண்டிருக்க, பல்லாயிரம் படையினரைக் கொண்டு பாதுகாக்கப்பட்ட பெரும் படைத்தளங்கள் கைப்பற்றப்பட்டிருக்க, எமது தரப்பில் நூறுபேர் தான் வீரச்சாவென்று அறிவிப்பது நம்பமுடியாமலேயே இருக்கும். ஆனால் உண்மை அதுதான். நம்பவே முடியாத அளவில் எமது தரப்பில் இழப்புக்கள் மிகமிக அரிதாகவே நிகழ்ந்தன. அதற்குப் பல காரணங்கள் உண்டு.


என்றுமில்லாத வகையில் இயக்கம் கனரக ஆயுதங்களையும் எறிகணைகளையும் பயன்படுத்தியது. சண்டையணிகள் சிறுரக ஆயுதங்களால் நேரடியாகச் சண்டைசெய்த சந்தர்ப்பங்களும் நேரங்களும் குறைவாகவே இருந்தன. எதிர்ப்பு கடுமையாக வருகிறதென்றால் உடனேயே அணிகளைப் பாதுகாப்பாக நிலையெடுக்கவிட்டுவிட்டு எதிரிமீது சரமாரியான எறிகணைத் தாக்குதலைச் செய்வது, விழும் எறிகணைகளுக்கான திருத்தங்களை களமுனையிலிருக்கும் அணித்தலைவர்களைக் கொண்டு பெற்றுக் கொண்டு துல்லியமான தாக்குதலைச் செய்வது. பின்னர் அணிகள் முன்னேறித் தாக்கி இடங்களைக் கைப்பற்றும். அந்தச் சமரில் சண்டையணிகள் முன்னணி அவதானிப்பாளரின் பணிகளையே அதிகம் செய்தன என்றால் மிகையில்லை. அதேநேரம் மிகக்கடுமையான சமர்கள் ஒட்டுசுட்டான், கரிப்பட்டமுறிப்புத் தளங்களைக் கைப்பற்ற நடந்தன என்பதும் உண்மை.


ஓயாத அலைகள் மூன்று சமரில் இயக்கம் புதியதொரு தந்திரத்தையும் கையாண்டது. சிறப்புப் பயிற்சி பெற்ற பதுங்கிச் சுடும் அணிகளை முன்னணிச் சண்டையணிகளோடு களமிறக்கியது. லெப்.மயூரன் பதுங்கிச் சுடும் அணி என்று ஒரு சிறப்பு அணி உருவாக்கப்பட்டிருந்தது. இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமான இந்த அணியின் முதலாவது தொகுதி தமக்கான சிறப்புப் பயிற்சியை நிறைவு செய்த சிலநாட்களுள் ஓயாத அலைகள் மூன்று சமர் தொடங்கிவிட்டது. அவ்வணி அப்படியே இரு தொகுதிகளாக களத்தில் இறக்கப்பட்டது. ஓயாத அலைகள் மூன்று சமரென்பது பரவலாக இறங்கித் தாக்குதல் நடத்தாமல் ஓரிடத்தில் எதிரியின் காப்பரண் வரிசையை உடைத்து, பின்னர் ஒவ்வொரு காப்பரணாகக் கைப்பற்றியபடி செல்வதாகவே இருந்தது. அவ்வாறு ஒவ்வொரு காப்பரணாகக் கைப்பற்றிச் செல்லும் நகர்வில் பதுங்கிச் சுடும் அணியின் பங்கு அளப்பரியதாக இருந்தது என்பதோடு சண்டையை இழப்புக்களின்றி நடத்தவும் உதவியது.


இவற்றைவிட, பின்தளங்களில், குறிப்பாக வினியோகத் தளங்களிலும் ஆட்லறித் தளங்களிலும் கரும்புலிகள் ஊடுருவி எமது ஆட்லறிப்படையணியின் துணையோடு நடத்திய தாக்குதல்கள் பெருவெற்றியை ஈட்டித்தந்தன. கிட்டத்தட்ட எதிரியின் முக்கிய ஆட்லறி நிலைகள் அனைத்துமே செயற்படமுடியாத நிலைக்குள் கரும்புலிகளாலும் எமது ஆட்லறிப்படையணியாலும் முடக்கப்பட்டிருந்தன. எமது தரப்பு இழப்புக்கள் குறைவாக இருந்தமைக்கு இதுவும் ஒரு காரணம்.


05/11/1999


இருட்டிவிட்டது. இதுவரை எமது அடுத்தகட்டம் என்ன என்பது சொல்லப்படவில்லை. இரவு சாப்பாடு வந்ததும் பகிர்ந்து உண்டுவிட்டு காவற்கடமைக்கு ஆட்களை ஒழுங்கமைத்துவிட்டு எல்லோரையும் படுத்து ஓய்வெடுக்கச் சொன்னோம். பைரவன் ஒருபக்கத்தில் இன்னமும் வோக்கியை ஓடவிட்டுக் கேட்டுக் கொண்டேயிருந்தார். எம்மால் ஒட்டுக்கேட்க முடியாத தூரத்துக்குக் களமுனை நகர்ந்துவிட்டதை ஊகிக்க முடிந்தது. பின்தள, வினியோகக் கட்டளைபீடங்களின் உரையாடல்களே எமக்குக் கேட்டன.


06/11/1999


விடிந்துவிட்டது. எட்டுமணிக்குள் எல்லோரையும் புறப்படத் தயாராகும்படி அறிவித்தல் வந்தது. பக்கத்திலிருந்த இரண்டு வீடுகளைப் பயன்படுத்திக் கொண்டோம். ஏழுமணிக்கே காலையுணவுக்குரிய பொதிகள் வந்துவிட்டன. எல்லாம் முடித்துவிட்டு எட்டுமணிக்குள் எல்லோரும் தயாராகியிருந்தோம். நாமிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஒரு வீட்டுக்கு எல்லோரையும் வரும்படி அழைப்பு வந்தது. எல்லோரும் அங்குச் சென்றபோது தளபதிகள், கடாபி அண்ணையும் சொர்ணம் அண்ணையும் எமக்காகக் காத்திருந்தனர்.


-தொடரும்


- இளந்தீரன் -

Share This:

No Comment to " களங்கள் - 12. ஓயாத அலைகள் மூன்று "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM