News Ticker

Menu

தென்சூடானின் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு! வழிகாட்டும் ஒளிவிளக்கு!!

சனவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவந்த வாக்கெடுப்பு சனவரி 15 ஆம் திகதி நிறைவுபெறுகின்றது. இவ்வாக்கெடுப்பில் தமக்கு தனியான நாடு வேண்டுமா அல்லது வடசூடானுடன் இணைந்திருக்கவேண்டுமா என்ற விருப்பை தெரியப்படுத்தும் வாக்கெடுப்பில் பெருவிருப்புடன் பங்குகொள்கின்றார்கள்.வடசூடான் தென் சூடான் என இரண்டு தேசங்களாக பிரிந்துள்ள அந்நாட்டில், 1950 களில் ஆரம்பித்த விடுதலைக்கான போராட்டம் பல்வேறு கட்டங்களாக பயணித்து, பல்வேறு ராசதந்திர நகர்வுகள் ஊடாக நகர்ந்து, பல்வேறு சதிவலைகளில் சிக்கியபோதும் எழுந்துநிமிர்ந்துநின்ற தென் சூடானிய தேசத்துமக்களின் விடுதலைக்கான போர், தற்போது அதன் உச்சத்தை தொட்டுள்ளது.

17 வருடங்கள் தொடர்ந்த முதலாம் கட்டபோரும், அதனை தொடர்ந்த சமாதான உடன்படிக்கையையும், அதன்பின்னர் 1983 இல் ஆரம்பித்த இறுதிப்போரும், அதன் தொடர்ச்சியாக வந்த ஒப்பந்தத்தின் பலனாக தற்போது சர்வசன வாக்கெடுப்பு ஒன்று நடத்துகின்ற நிலைக்கு இரண்டு தேசங்களும் இணங்கியுள்ளன.

இருபத்தியிரண்டு வருடங்களாக தொடர்ந்த போரில் குறைந்தது இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டும் பல மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர். பல ஆண்டுகால பகைமைக்கு பின்னர் வட சூடானை மையமாக கொண்ட மேலாதிக்கவாத அரசு தென் சூடானிய மக்களின் பிரிந்துசெல்வதற்கான உரிமையை ஏற்றுக்கொண்டமை ஆறுதலான விடயமே.

ஆனால் மேற்குலக அரசுகளின் முயற்சியால் தற்போதைய சூடானிய அரச அதிபர் ஓமர் அல்பாசீர் போர்க்குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் பிடியாணை வழங்கப்பட்டுள்ள நிலைமையானது முக்கியமானது.

south-sudan-popular-photoபிரித்தானியர்களினதும் எகிப்தியர்களினதும் காலனியாதிக்க நாடாகவிருந்த சூடானின், தென் பகுதியில் கிறிஸ்தவர்களும் வட பகுதியில் முஸ்லிம்களும் வாழ்ந்துவருகின்றார்கள். இந்த இரண்டு தேசங்களும் இனரீதியாகவும் சமயரீதியாகவும் தனித்துவமானவை.

காலனியாதிக்க நாடுகளின் வெளியேற்றலை தொடர்ந்து அதிகாரத்தை பெற்றுக்கொண்ட வட சூடான், தென் சூடானிய மக்களின் உரிமைகளை பறித்தது. அதற்கெதிராக கிளர்ந்த விடுதலைப்போராட்டத்தின் தொடர்ச்சியாக, தென் சூடான் மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொள்வதாக 1989 ஆம் ஆண்டு அப்போதைய சூடான் அரச அதிபர் அறிவித்திருந்தார்.

ஆனால் அதேகாலத்தில் ஏற்பட்ட இராணுவ சதிப்புரட்சியில் ஆட்சி பீடமேறிய இப்போதைய அரசு அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது எனக்கூறி தொடர்ந்தும் போரில் ஈடுபட்டது. தொடர்ந்த போரும் அழிவுகளும் 2005 ஆம் ஆண்டு அமுலுக்கு கொண்டுவரப்பட்ட சமாதான உடன்படிக்கை மூலம் ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.

தற்போது நடைபெறுகின்ற தேர்தலானது எழு நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும். புலம்பெயர்ந்து வாழும் தென் சூடான் மக்களும் இவ்வாக்களிப்பில் பங்குகொள்ளமுடியும். அவுஸ்திரேலியா கனடா எகிப்து எதியோப்பியா கென்யா உகண்டா பிரித்தானியா அமெரிக்கா போன்ற எட்டுநாடுகளிலிருந்து இத்தேர்தலில் அம்மக்கள் பங்குகொள்கின்றார்கள்.

ஏறத்தாழ எட்டுமில்லியன் மக்கள் தொகை கொண்ட தென் சூடான் தேசத்தில், நான்கு மில்லியன் மக்கள் வாக்களிப்பு தகைமையை கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் இரண்டு மில்லியன் வரையானோர் ஏற்கனவே வாக்களிப்பு பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

தென்சூடான் பிரிந்துவிடும் என நிச்சயமாக எதிர்பார்க்கப்படுவதால், பிரிவினைக்கு பின்னரான இரண்டு தேசத்தின் உறவுகள் தொடர்பில் வடசூடான் கரிசனை செலுத்துவதாகவும் கூறப்படுகின்றது.

சூடான் நாட்டின் ஐந்தில் நான்கு பகுதி எண்ணெய் வளம் தென்சூடானிலேயே இருப்பதாகவும் ஆனால் அந்த எண்ணெய் வளத்தை ஏற்றுமதிசெய்வதற்கு வடசூடான் துறைமுகத்தின் ஊடாகவே கொண்டுசெல்லவேண்டிய நிலையே தற்போது உள்ளதாகவும், அதனை எவ்வாறு இருதரப்பினரும் கையாள்வது என்பது தொடர்பில் இணக்கம் காணும் முயற்சிகள் இப்போதே தொடங்கிவிட்டன.

இரண்டு தேசங்களுக்கு இடையிலுள்ள அபேய் பிராந்தியம் வடக்குடன் இணைவதா தெற்குடன் இணைவதாக என்பதற்கும் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கதாகும். தென் சூடான் தனியாக பிரிந்துசெல்லும்பட்சத்தில் அபேய் பிராந்தியம் தனது தலைவிதியை தீர்மானிப்பதற்கு தனியான ஓர் தேர்தல் அப்பிராந்தியத்தில் நடாத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தென் சூடானின் பிரிந்துசெல்வதற்கான தேர்தலின் வலுவுடமையானது அத்தேர்தலுக்கு பதிவுசெய்துள்ள வாக்காளர்களில் 60 விழுக்காட்டினர் தமது வாக்குகளை செலுத்தியிருக்கவேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறான வாக்களிப்பு நடைபெறும் பட்சத்தில் சாதாரண பெரும்பான்மை மூலமே தென் சூடான் தேசம் தனியாக பிரிந்துசெல்வதற்கான தகுதியை பெற்றுவிடும்.

ஆனால் வடசூடானில் வாழும் தென் சூடான் மக்களை மிரட்டி 60 விழுக்காடு வாக்களிப்பை தடுத்துவிடலாம் என சூடானின் தற்போதைய அரசு கருதி செயற்படுவதாகவும் குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. தென் சூடான் பிரிந்துசென்றால் வட சூடானில் வாழும் உங்களுக்கான குடியுரிமையை பறித்துவிடுவோம் அதிகார வர்ககம் மிரட்டுவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன.

விடுதலைக்காக போராடிய ஒரு இனத்தின் வேட்கையை அவ்வளவு சாதாரணமாக அணைத்துவிடமுடியாது என்பதை நிதர்சனத்தில் கண்டவர்கள் நாங்கள். எத்தனையோ அழிவுகளையும் சதிகளையும் சந்தித்து, விடுதலைவேண்டிப்போராடிய ஒரு தேசம் தனக்கான விடுதலையை புதிய ஆண்டில் உறுதிப்படுத்தவுள்ளமை, அதற்கு மேலான தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் மேற்கொண்ட ஒரு தேசிய இனம் என்ற ரீதியில் தமிழீழ மக்களும் தமக்கான விடுதலையை பெற்றுக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையை நிச்சயம் ஏற்படுத்தியுள்ளது.

Share This:

No Comment to " தென்சூடானின் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு! வழிகாட்டும் ஒளிவிளக்கு!! "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM