News Ticker

Menu

மகிந்த கொம்பனியும் சரத் பொன்சேகாவும்

சிறிலங்காவின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான அரச தலைவர் பதவிக்கான தேர்தல் என்பது தமிழர்களின் தாயகத்திலுள்ள நெருக்கடிகளை மிதமாக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப்போகின்ற ஒரு தேர்தலாக அனைவராலும் நோக்கப்படுகின்றது. இத்தேர்தலில் தமிழின உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவெடுப்பதா அல்லது அரசியல் சாணக்கியத்துடன் முடிவெடுத்து தமிழ்மக்களுக்கு ஓரளாவாவது நிம்மதியைப் பெற்றுக்கொடுப்பதா என்பதில் இன்னும் குழப்பமான நிலைமையே இப்போதும் தமிழர் தரப்பிடம் உண்டு.

சரத் பொன்சேகா என்பவர் தமிழரின் வாழ்விடங்களை நோக்கி ஆக்கிரமித்து முன்னேறிய படையை வழிநடாத்திய தளபதி. இறுதிக்கட்ட போரின்போது கொல்லப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் இழப்புக்கு நேரடியான காரணகர்த்தா இவர். அடுத்த பக்கத்தில் முப்படைகளின் கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்ட மகிந்த ராஜபக்ச. தமிழ்மக்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட அனைத்துப் படுகொலைக்கும் முழுமுதற்காரணமாய் இருந்தவர் இவர். இக்கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இவர்களில் ஒருவருக்கு ஆதரவளிப்பதென்பது சராசரித் தமிழ்மகனுக்குப் பல கேள்விகளை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதுடன் அது தமிழர்களின் நீண்ட விடுதலைப் போராட்டத்திற்கும் அவர்களின் நியாயமான தனித்துவமான நிலைப்பாடுகளுக்கும் எதிரானதாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.இங்கு மகிந்தவையோ அல்லது சரத் பொன்சேகாவையோ ஒப்பிடுவதற்குப் பதிலாக பின்வரும் விடயங்களை ஆராய்வது பொருத்தமாகவிருக்கும் எனக் கருதுகின்றோம்.

1. மகிந்தவின் கட்சி எது? சரத் பொன்சேகாவின் கட்சி எது?
2. மகிந்தவுடன் நிற்பவர்கள் யார்? சரத் பொன்சேகாவுடன் நிற்பவர்கள் யார்?
3. இந்த அரச தலைவர் தேர்தல் மூலம் தமிழ்மக்களுக்கு ஓரளவாவது நிம்மதி கிடைக்க வழியுண்டா?
4. தமிழ்ப்பொதுவேட்பாளரை நிறுத்தி தமிழ்மக்களின் தேசிய உணர்வை வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலை உண்டா?


சரத் பொன்சேகாவுக்கு என்று தனியான கட்சி இல்லை. இதனால் அவர் சார்ந்திருக்கின்ற கட்சிகளில் தங்கியிருக்கவேண்டிய நிலையேயுள்ளது. இதனால் சரத் போன்சேகா மீது தமிழ்க்கட்சிகளின் செல்வாக்கை பிரயோகிக்ககூடிய நிலைமை உள்ளது.


இங்கு சரத் பொன்சேகா என்பவரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பெரும்பாலானவை தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை கொள்கைரீதியாக ஏற்றுக்கொண்டவை. சமஸ்டி ரீதியில் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நோர்வேயின் ஒஸ்லோவில் கொள்கைரீதியாக ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக்கொண்டிருந்தது. அதனை முன்னுதாரணமாக வைத்து அங்கிருந்து தமிழர்களின் பிரச்சனைகளை ஆராயலாம் என கேட்பதற்கான வாய்ப்பிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியைவிட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மனோகணேசனின் மேலக மக்கள் முன்னனி என்பன சரத் பொன்சேகாவை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கின்றன.

மகிந்தவை முன்னிலைப்படுத்தும் கட்சிகள் கடுமையான பேரினவாதக் கட்சிகளான சிங்கள உறுமய போன்ற கட்சிகளின் ஆதரவுடன் இயங்குவதுடன் மகிந்தவின் அரசு என்பது பேரினவாதச் சித்தாந்தத்தில் ஊறிய அரசாங்கமாகவே இதுவரையும் செயற்பட்டுவந்திருக்கின்றது என்பதையும் இங்குக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அடுத்தவிடயமாக மகிந்தவின் ஆட்சி தொடருமானால் அவருடன் இப்போது இருக்கின்றவர்கள் யார் என்பதும் அவர்களின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் என்னவாக இருக்கும் என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டும். கோத்தபாய தொடக்கம் இன்று யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கு வீடு வலம்வரும் டக்ளஸ் தேவானந்தா வரை இவர்களின் பட்டியல் நீள்கின்றது. அதனைவிட தமிழ்த்தேசியத்தை விற்ற கருணாவும் இப்போது அதிகம் சுற்றுலாக்களை யாழ்ப்பாணத்தை நோக்கியும் மட்டக்களப்பு நோக்கியும் செய்துவருகின்றார்.

கோத்தபாயவும் டக்ளஸ் தேவானந்தாவும் இருக்கும்வரை தமிழ்மக்கள் வாய்மூடி மௌனிகளாகவே இருக்கவேண்டிவரும். இப்போதும் சிங்கள முற்போக்குவாதிகளுக்குக் கூட அச்சுறுத்தலாக இருப்பவர்தான் கோத்தபாய ராஜபக்ச. டக்ளஸ் தேவானந்தவையே அன்னதானத்திற்கும் கூட அழைக்கவேண்டிய நிலைமை தற்போது யாழ்ப்பாண மக்களுக்கு வந்துள்ளது. இப்படியே இன்னும் ஆறு வருடங்களுக்குப் போனால் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இளம் சந்ததிக்கும் டக்ளஸை பற்றித்தான் தெரிந்திருக்கும் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

தமிழ்ப்பொதுவேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழ்மக்களின் தேசிய அபிலாசைகளை வெளிப்படுத்தலாம் என ஒரு கருத்தும் தமிழர் தரப்பிடம் உண்டு. ஆனால் தமிழ்மக்கள் சந்தித்த பேரழிவின் வடுக்கள் ஆறமுன்னர், தமிழ்மக்கள் தமது பேச்சுரிமை நிலைநிறுத்த முடியாத சூழ்நிலையில் இவ்வாறான தேர்தல் மூலம் சாத்தியமான பெறுபேற்றைக் காட்டமுடியுமா என்பதையும் ஆராயவேண்டும். அதுமட்டுமன்றி அவ்வாறு தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதன் மூலம் மகிந்தவுக்குத்தான் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது என்பதும் வெளிப்படையானது. அப்படியானால் தமிழ்த் தேசிய உணர்வை வெளிக்காட்டுவதுடன் மகிந்தவையும் வெற்றியடையச் செய்வோம் என தமிழர்கள் கருதினால் தமிழ்ப் பொதுவேட்பாளர் சரி்யான தெரிவாக இருக்ககூடும்.


மகிந்தவையும் சரத் பொன்சேகாவையும் தனியே நோக்காமல் அவர்களுடன் இருப்பவர்களையும் தாயகத்தின் அகப் புறச் சூழ்நிலைகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆட்சி பீடத்தில் இருக்கும் மகிந்தவையும் கோத்தபாயவையும் டக்கிளசையும் கருணாவையும் ஒரு புறமும் மற்றைய பக்கத்தில் சரத் பொன்சேகாவையும் வைத்து ஒப்புநோக்குவது குழப்பத்திலிருக்கும் தமிழர் தரப்புக்கு சரியான முடிவெடுப்பதற்கான திசையை காட்டக்கூடும்.
- கொக்கூரான்

Share This:

No Comment to " மகிந்த கொம்பனியும் சரத் பொன்சேகாவும் "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM