News Ticker

Menu

தாயகத்தில் ஒரு கட்டமைப்புக்கான தேவை


சர்வதேச நிறுவனங்களாலும் நாடுகளாலும் வழங்கப்படும் உதவிகளும் ஏதோவிதத்தில் இவ்வாறான அரச ஆதரவுக் கட்சிகளுடன் தொடர்புபட்டே பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடைகின்றன. அதன்காரணமாக பிழையான கட்சிகளே தமிழர்களை வழிநடத்தக்கூடிய ஏதுநிலை உருவாகின்றது. அதேவேளை தேவையான உதவிகள் இன்றி அழிந்துபோன தமது வாழ்விடங்களை மீளக் கட்டமைத்துக்கொள்ள வசதியற்ற நிலையிலும் தொழில்வாய்ப்பற்ற நிலையிலும் எத்தனையோ தமிழ் மக்கள் தற்போதும் உள்ளனர். போரின்போது காயமடைந்தும் ஊனமடைந்துமுள்ள மக்களையும் பராமரிக்கவேண்டிய பாரிய பொறுப்பும் இப்போது உண்டு.

போரின்போது பெற்றோரை இழந்துள்ள பிள்ளைகளின் வாழ்வும் உரிய வழிவகைகள் செய்யப்படாவிட்டால் கேள்விக்குறியாகிவிடும். வன்னிப்பிரதேசத்தில் பராமரிக்கப்பட்டுவந்த பல அனாதை இல்லங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் வாழ்வுக்கான வசதிகளும் கல்வி வசதிகளும் செய்துகொடுக்கப்படவேண்டும். புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகமானது தாயகத்தில் உள்ள மக்களின் வாழ்வின் தரமுயர்த்தகூடிய நடவடிக்கைகளில் தமது முழுமையான பங்களிப்பைச் செய்யக்கூடிய நிலையில் இருக்கிறது. அதற்கான அனைத்து வளங்களையும் புலத்துத் தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள். அழிந்துபோன நிலையிலும் ஆறுதல் தரக்கூடிய சக்தியாக புலத்துத் தமிழர்கள் ஒன்றுபட்டுள்ளார்கள். ஆனால் அதனைச் சரியான முறையில் நெறிப்படுத்தக்கூடிய அமைப்புகள் தாயகத்திலும் புலத்திலும் இருப்பது அவசியமாகும்.

புலத்தில் தற்போது சனநாயகக் கட்டமைப்புகளுடன் உருவாகிவரும் அமைப்புக்கள் அதனை புலத்தில் நெறிப்படுத்தக்கூடிய சூழல் உருவாகிவருகின்றது. அதேவேளை அதனை தாயகத்தில் ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடைவதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டிய தேவை இப்போதும் உண்டு.


தற்போது தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கும் தாயக அரசியல் கட்சிகள் தமது மக்களுக்கான எந்தவிதமான உதவிகள் செய்யக்கூடிய வளமற்ற நிலையில் இருக்கிறார்கள். இவ்வாறான நிலைமை எமது அடையாளங்களை இழப்பதற்கு நாங்களே துணை செய்வதாக அமைந்துவிடும். எனவே தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு தாயக நிலப்பரப்புக்களை ஒருங்கிணைத்துச் செயற்படுத்தக்கூடிய நிறுவனக் கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டும். அதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்பார்வை செய்யலாம். இதன் மூலம் தமிழருக்கான தனிக்கட்டமைப்பை உருவாக்கலாம்.


அதன் ஊடாக தொழிற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தலாம். தமிழருக்கான பொருளாதாரக் கட்டுமானங்களை உருவாக்கலாம். பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கான மறுவாழ்வுக்கான உதவிகளைச் செய்யலாம். அதற்கான நிதி வளங்களை புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். தற்போது தாயகத்திலுள்ள சில மனிதநேய அமைப்புகளுக்கான உதவிகள் பல்வேறு நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புகளால் வழங்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் ஒரே அமைப்புக்கே பல்வேறு நாடுகளிலிருந்தும் உதவிகள் சென்றடைகின்றன. அதே நேரத்தில் தாயகத்தில் உள்ள பல அமைப்புகள் உதவிகள் இன்றி அதனைச் செயற்படுத்த கூடிய வலுவற்று இருக்கின்றன.

இவ்வாறான மனிதாபிமான அமைப்புக்களை ஒருங்கிணைத்து அவற்றுக்கான உதவிகளை வழங்கக்கூடிய நிறுவனமே அதற்கான மேற்பார்வையையும் செய்யமுடியும். அத்தகைய நிறுவனமானது தமிழர்களின் அமைப்பு என்ற பலம் வாய்ந்த அமைப்பாக உருவாக்கமுடியும். பலமான கட்டமைப்பொன்றை தாயகத்தில் ஏற்படுத்துவதன் மூலம் தமிழருக்கான பலத்தை பொருளாதார ரீதியாக உயர்த்துவதோடு தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுக்கான பலமான அடித்தளம் ஒன்றையும் ஏற்படுத்தலாம். அதனை முழுமனதோடு கட்டமைக்க தாயகத்தில் உள்ள தமிழ்த்தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் தயாராக வேண்டும்.

- கொக்கூரான்

Share This:

No Comment to " தாயகத்தில் ஒரு கட்டமைப்புக்கான தேவை "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM