News Ticker

Menu

சுவடுகள் – 9. கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன்

எமது வாகனம் புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. விசுவமடு றெட்பானாவைத் தாண்டும்போதுதான் அவனைப் பார்த்தேன். எதிர்முனையிலிருந்து சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். வாகனம் ஓரளவு மெதுவாகச் சென்றதால் வடிவாக அவனைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. என்றாலும் நம்பமுடியவில்லை. பக்கத்திலிருந்த செல்வனைக் கேட்டேன். செல்வன் அவனைக் கவனிக்கவில்லை. அவன் சைக்கிளோட்டிச் செல்வதைச் சொன்னபோது செல்வனும் நம்பவில்லை. ஏனென்றால் அவன் தனது இரண்டு கால்களையுமே சில மாதங்களின் முன்னர் இழந்திருந்தான்.

இளங்குயிலனின் இயற்பெயர் பற்றிக் எட்மன். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்திருந்தாலும் யாழ்ப்பாணத்தில் தங்கிப் படித்துவந்தான். இடைநிலைப் பள்ளியிலே அவனுடன் ஒன்றாகப் படித்து ஓரிரு நாட்கள் இடைவெளியில் இயக்கத்துக்கு வந்து ஒரே படையணியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எட்மன் சிறந்த குறுந்தூர ஓட்டக்காரன். வலிகாமத்தில் விளையாட்டுக்கெனப் பெயர்பெற்ற அக்கல்லூரியில் குறுந்தூர ஓட்டத்தில் முன்னணியில் திகழ்ந்தவர்களுள் எட்மனும் ஒருவன்.

இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் நாங்களும் கல்லூரியும் இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து திரிந்தபோது எட்மன் சிலகாலம் யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் படித்தான். பிறகு மானிப்பாயில் மீண்டும்வந்து எம்மோடு இணைந்துகொண்டான். அந்தநாட்கள் இனிமையானவை. எட்மன் இப்போது குழப்படிக்காரனாக மாறியிருந்தான். எப்போதும் குறும்புத்தனமாகவே இயங்கிக் கொண்டிருப்பான். முன்புபோல் அவனால் ஓட்டத்தில் முதலாவதாக வரமுடியவில்லையென்றாலும் துடியாட்டமாகவே இருந்தான்.

சிறிலங்கா அரசுக்கும் இயக்கத்துக்குமிடையில் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கிய கையோடு எமது வகுப்பிலிருந்தும் கல்லூரியிலிருந்தும் நாளுக்குநாள் ஒவ்வொருவராக போராட்டத்திலிணைந்துகொண்டிருந்தனர். எட்மனும் ஒருநாள் போனான்; இளங்குயிலனாக ஆனான்.

**************



இளங்குயிலன் பயிற்சியெடுத்ததும் இயங்கியதும் இம்ரான் பாண்டியன் படையணியில். சண்டைக் களமுனையோடு தொடர்புபடாத பணியிலிருந்தவன் பொறுப்பாளருக்குத் தொல்லைகொடுத்துச் சண்டைக்குப் போனான். ‘ஜெயசிக்குறு’ என்ற பெயரில் வன்னியை ஊடறுத்துச் செல்லவென சிறிலங்காப் படைகள் தொடங்கிய நடவடிக்கைக்கு எதிரான தொடர்சமரில் இளங்குயிலனும் தனது அணியோடு பங்குபற்றினான். அப்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

பணியிலீடுபட்டிருந்த இளங்குயிலனின் அணிமீது எதிரி பதுங்கித்தாக்குலொன்றைச் செய்தான். நடந்துகொண்டிருந்த இளங்குயிலனிலிருந்து இரண்டடி தூரத்துக்குள்ளிருந்து கிளைமோர் வெடித்தது. உயிர்தப்பினானாயினும் இரண்டு கால்களையும் முழங்காலோடு இழந்திருந்தான். மருத்துவமனையிலிருந்து மீளவும் முன்பு செய்த பணிக்கே திரும்பியிருந்தான்.

இதே இளங்குயிலன் சிலநாட்களிலேயே தானாகவே சைக்கிளில் செல்வது எனக்கு வியப்பைத் தந்தது. நம்ப முடியாமலுமிருந்தது. நான் கண்டது அவனைத்தானா என்பதை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. வேறிடத்தில் கேட்டு இளங்குயிலன் சைக்கிள் ஓடுகிறான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

அவனது விடாமுயற்சியும் ஓர்மமும் கடின உழைப்பும் அவனை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். காயம் மாறி, இரண்டு மரக்கால்களைப் பொருத்தி சில நாட்களிலேயே தனியாகவே சைக்கிள் ஓடிப் பணியாற்றப் புறப்பட்டதிலிருந்து அவனைப் புரிந்து கொள்ளலாம்.

களமுனைக்கு வெளியிலே இளங்குயிலன் இயக்கத்திலாற்றிய பணிகள் தொடர்பாகப் பேச முடியாது. இம்ரான் பாண்டியன் படையணியின் மிக முக்கிய பிரிவொன்றில் கடமையாற்றினான். கால்களை இழந்தபின்னும் மீளவும் அதே பிரிவில் சில ஆண்டுகள் பணியாற்றிக் கொண்டிருந்தான். இந்நிலையில்தான் அவனது நீண்டநாள் விண்ணப்பம் ஏற்கப்பட்டு கடற்கரும்புலி அணியிலே இணைக்கப்படுவதற்கான அனுமதி வந்திருந்தது.

மிக மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கடற்கரும்புலிகள் அணியிலே இணைந்து தனது பணிகளை முன்னெடுத்தான். கரும்புலிகள் அவரவர்களுக்கான சந்தர்ப்பம் வரும்வரைக்கும் தமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்துகொண்டிருப்பார்கள். அதன்படி இளங்குயிலனும் தனக்கிடப்பட்ட பணிகளைச் செய்துகொண்டிருந்தான்.

அவன் கடற்கரும்புலிகள் அணியில் இணைந்தபின்னர் அவனை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கரைச்சிக் குடியிருப்பில் நானும் சிலாவத்தையில் இளங்குயிலனும் பணியாற்றியதால் இடையிடையே எங்காவது சந்திக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஊர்க்கதைகள், பள்ளிக்கூடக் கதைகள் என்று எமது உரையாடல் விரியும். பழைய நண்பர்களைப் பற்றி விசாரித்துக் கொள்வோம். ஆன்பொலின் ரீச்சரைப் பற்றி ஒவ்வொருமுறையும் கேட்பான். என்னைப் போலவே அவனும் ரீச்சரை அடிக்கடி கண்டிருந்தாலும் ஒருமுறைகூட ஆறுதலாகக் கதைத்ததில்லை.

அவன் வீரச்சாவடைவதற்கு மூன்றுநாட்களின் முன்னர் சந்தித்துக் கதைத்தேன். வழமைபோலவே செந்தழிப்பாக வந்திருந்தான். வழமையை விட அதிகநேரம் கதைத்துக் கொண்டிருந்தான். பழைய கூட்டாளிகள், பொறுப்பாளர்களைப் பற்றி விசாரித்தான். வழமைபோலவே எல்லோரையும் கேட்டதாகச் சொல்லச் சொன்னான். வழமைபோலவே புன்னகையோடு விடைபெற்றுச் சென்றான்.

21.10.2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் எமது இயக்கத்தின் வினியோக நடவடிக்கைக்குப் பாதுகாப்பளிக்கும் பணியிலீடுபட்டிருந்தபோது எதிரியுடன் ஏற்பட்ட மோதலில் கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான்.

விடாமுயற்சி, ஓர்மம், பிடிவாதம், குறும்புத்தனம் என கலந்துகட்டிய ஓர் அருமையான தோழன் இளங்குயிலன் என்ற பற்றிக் எட்மன்.



Share This:

No Comment to " சுவடுகள் – 9. கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM