News Ticker

Menu

களங்கள் – 6. ஓயாத அலைகள் மூன்று

 நவம் அண்ணையின் அணி ஊடுருவி நிலையெடுக்க வேண்டிய இடத்தை அறிந்ததும் திகைப்பாக இருந்தது. இவ்வளவு தூரம் ஊடுருவிப் போய் முகாம் அமைத்து, கிடாரங்களில் சமைத்துச் சாப்பிட்டு பலநாட்கள் தங்கியிருந்து என்னதான் செய்யப் போகிறார்கள்? கிட்டத்தட்ட இந்திய இராணுவக் காலப்பகுதி போன்று உணவுப் பொருட்களைப் பொதிசெய்து மரங்களில் ஏறிப் பதுக்கிவைத்து நடவடிக்கையைத் தொடரப் போகிறார்கள்.


மரங்களில் ஏறுவதற்கும் உணவுப் பொருட்களை மரங்களில் மறைப்பதற்குமெனவே அந்நேரத்தில் கரும்புலிகள் அணி நிர்வாகத்தின் பொறுப்பாளராயிருந்தவரின் பராமரிப்பாளன் வர்மன் (பின்னர் ஆனையிறவுப் பகுதி மோதலில் கப்டன் வர்மனாக வீரச்சாவு) அவ்வணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அவன் இருநாட்களின் முன்னர்தான் பராக்கிரமபுர முகாம் மீதான வேவுக்குச் சென்று திரும்பியிருந்தான்.


எனது இயக்க வாழ்க்கையில் பல ஊடுருவல் அணிகளின் செயற்பாடுகளை அறிந்திருக்கிறேன். அவர்கள் சிலநாட்களுக்குத் தேவையான உலர் உணவுகளை எடுத்துச் செல்வார்கள். நடவடிக்கை முடிந்ததும் திரும்பி வருவார்கள். ஆனால் இப்போது நவம் அண்ணரின் அணி போகப்போவது நீண்டநாட்கள் தங்கியிருக்கும் ஒரு திட்டத்தோடு. அதைவிட எதிரியின் பகுதிக்குள் இவ்வாறு கூடாரம் அமைத்து, குறோஸ் உயர்த்திக் கட்டி, கிடாரங்களில் சமைத்துச் சாப்பிட்டு வாழும் வாய்ப்பு இருக்குமா என்பதும் ஆச்சரியமாக இருந்தது.


31/10/1999


பொழுது விடியத் தொடங்கியது. நவம் அண்ணையின் அணி ஒழுங்கமைக்கப்பட்டு அவர்களுக்கான சகல பொருட்களும் ஒருங்கிணைக்கப்பட்டு முடிக்கப்பட்டிருந்தன. அதிகாலையில் நகர்வு அணியினரை நித்திரை கொண்டு நன்கு ஓய்வெடுக்கச் சொல்லப்பட்டது. கடாபி அண்ணையும் எல்லாவற்றையும் சரிபார்த்து விட்டுக் கிளம்பிவிட்டார். கடந்த இருநாட்களில் மேற்கொண்ட கடுமையான வேலையால் உடல் மிகுந்த அசதிக்குள்ளாகியிருந்தது. நானும் சசிக்குமார் மாஸ்டரும் கிடைத்த இடைவெளியில் படுக்கையில் சரிந்தோம்.


யாரோ அழைத்து கண்விழித்தபோது காலை பத்து மணியிருக்கும். அணிகள் தயாராக இருந்தன. கரும்புலிகள் அணியை ஏற்றிச் செல்லவென ஒரு வாகனமும் நவம் அண்ணையையும் அவர்களது பொருட்களையும் ஏற்றிச் செல்ல இன்னொரு வாகனமும் வந்திருந்தன. கரும்புலிகளுக்கான வெடிபொருட்களைச் சரிபண்ணிக் கொடுக்கும் வேலை வந்து சேர்ந்தது. கரும்புலிகள் நடவடிக்கைக்குப் புறப்படும் இறுதி நேரத்திலேயே அவர்களுக்கான தற்கொலை வெடிபொருள் தொகுதி கையளிக்கப்படும். ஒவ்வொருவருக்கான சார்ஜரையும் சரிபார்த்து வழங்கி முடியவே கடாபி அண்ணையும் வந்துவிட்டார். கரும்புலிகள் அணியினரோடு சுருக்கமாகக் கதைத்துவிட்டு அவர்களை வாகனமேற்றி அனுப்பிவைத்தார்.


இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும்.


பிறகு நவம் அண்ணையின் அணியினரோடும் கதைத்தார். உணவுப் பொருட்களை எவ்வாறு மரங்களில் ஏற்றி உருமறைத்து வைக்கவேண்டும், மழைக்காலமாகையால் மிகுந்த கவனம் தேவை, தாம் இந்திய இராணுவக் காலப்பகுதியில் எவ்வாறு நடந்துகொண்டோம் போன்றவற்றை விளக்கினார். முகாம் அமைத்திருக்கும் இடத்தின் பாதுகாப்பில் கவனமெடுக்க வேண்டியவற்றை அறிவுறுத்தினார். பிறகு அவர்களையும் வழியனுப்பி வைத்தார்.


கரும்புலிகளின் இரண்டாவது தொகுதியினரும், நவம் அண்ணையின் தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்ட அணியினரும் நடவடிக்கைக்காகப் புறப்பட்டுவிட்ட நிலையில் எமது முகாம் வெறிச்சோடிப் போனது. ஏற்கனவே பராக்கிரம புர மீதான தாக்குதலுக்குப் பயிற்சியெடுத்திருந்த கரும்புலிகளின் இரண்டாவது தொகுதியும் எம்மைப் போல் சிலரும் எஞ்சியிருந்தோம். யாருக்குமே முழுமையான திட்டம் தெரிந்திருக்கவில்லை. எல்லோர் மனதிலும் ஓர் ஆர்வம். இத்தனை கரும்புலிகளை இயக்கம் இறக்குகிறது. அதுவும் தாக்குதல் நடவடிக்கையில்லை, வெறும் சூட்டுத் திருத்தம் சொல்லும் வேலைதான். இதைக் கரும்புலிகளைக் கொண்டு செய்ய வேண்டிய தேவையென்ன என்று ஒருவருக்கும் புரியவில்லை. அதேநேரம் நவம் அண்ணையோடு போகும் அணியின் செயற்பாடும் விளங்கவில்லை. இயல்பாகவே எல்லோருக்கும் எழும் ஆர்வம் எமக்குள்ளிருந்தது. மாறிமாறி எமக்குள் எமது கற்பனைகளைப் பரிமாறியபடியே இருந்தோம்.


நேற்று (30/10/1999) முழுவதும் இளம்புலி அண்ணை எம்மோடு நிற்கவில்லை. பராக்கிரம புரத்தால் திரும்பி வரும்போது இடையில் ஏற்பட்ட சண்டையில் வீரச்சாவடைந்த கரும்புலி செங்கதிர்வாணன் வீரச்சாவடைந்த சம்பவம் பற்றி ஏற்கனவே இங்குச் சொல்லப்பட்டது. அந்த வேவு அணியைத் தலைமைதாங்கிச் சென்ற இளம்புலி அண்ணை, காயப்பட்ட கிரியையும் தூக்கிக் கொண்டு வெளியே வந்திருந்தார். ஆனால் அவர் எமது தளத்தில் நிற்கவில்லை. அவர் 29, 30 ஆம் திகதிகளில் என்ன செய்தார் என்பதைப் பின்பு அறிந்தபோது ஆச்சரியப்பட்டுப் போனோம். ஒரு மனிதன் எந்த நிலைக்கெல்லாம் சென்று உழைத்தான் என்பதற்கு, பின்னாளில் களத்தில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் இளம்புலி அண்ணன் ஓர் எடுத்துக்காட்டு.


முப்பத்தோராம் நாள் இரவு. மணலாற்றுக் காட்டுக்குள்ளால் ஊடறுத்துச் செல்லும் எமது முன்னணிக் காப்பரன் வரிசையில் ஓரிடத்தின் வழியால் எமது அணிகள் எதிரியின் பகுதியை நோக்கி நகர்கின்றன. கரும்புலிகள் அணியை இளம்புலி அண்ணையும், தனது அணியை நவம் அண்ணனும் வழிநடத்திச் செல்கின்றனர். இளம்புலி அண்ணனுக்கு மணலாற்றுப் பகுதியிலிருக்கும் எதிரியின் காப்பரண் வரிசை தண்ணி பட்டபாடு. ஏற்கனவே ஏராளமான முறை சென்றுவந்த புகுந்தவீடு. எந்தவிதச் சிக்கலுமில்லாமல் அணிகள் எதிரியின் பகுதிக்குள் ஊடுருவி விட்டன். ஒரு கட்டம் வரைக்கும் வழிநடத்திச் சென்ற இளம்புலி அண்ணன் மீளவும் எமது பகுதிக்குத் திரும்புகிறார். ஏற்கனவே பிரிக்கப்பட்டபடி கரும்புலி அணிகள் தமக்குக் குறிக்கப்பட்ட ஆள்கூறுகளை நோக்கி நகரத் தொடங்குகிறார்கள். மொத்தமாக ஐந்து அணிகள்.


01/11/1999


இன்றைய நாள் மிகவும் வெறிச்சோடியிருந்தது. எவருக்கும் எந்த வழிகாட்டலும் வழங்கப்பட்டிருக்கவில்லை. நேற்றைய இரவு மணலாற்றுக்குச் சென்று அணிகளை வழியனுப்பிவிட்டு சசிக்குமார் மாஸ்டர் இன்று அதிகாலைதான் திரும்பியிருந்தார். கூடவே இளம்புலி அண்ணையையும் அழைத்து வந்திருந்தார். வந்தவுடனேயே, நித்திரையிலிருந்த என்னை எழுப்பி, எல்லோரும் எந்தச் சிக்கலுமின்றி போய்விட்டார்கள் என்ற செய்தியைச் சொல்லிவிட்டு மாஸ்டரும் இளம்புலி அண்ணனும் படுக்கப் போய்விட்டார்கள். அதன்பின் எனக்கு நித்திரை வரவில்லை.


முகாமில் நிற்க அலுப்பாக இருந்தது. மாஸ்டரும் இளம்புலி அண்ணையும் நல்ல தூக்கத்திலிருந்தனர். கரும்புலி அணியைச் சேர்ந்த மற்றவர்களும் ஆளாளுக்கு ஏதேதோ வேலை செய்துகொண்டிருந்தனர். காலை பத்துமணியளவில் இன்னொருவரையும் அழைத்துக் கொண்டு முல்லைத்தீவுக் கடற்கரைக்குப் புறப்பட்டேன். அங்கே பயிற்சியெடுத்துக் கொண்டிருந்த யாழ் மாவட்டத்துக்கான தாக்குதல் அணியினரிடம் சென்று அளவளாவிவிட்டுத் திரும்பினேன். அன்று காலை வசந்தன் மாஸ்டர் வருவதாகச் சொல்லியிருந்தார் எனவும், அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் போராளிகள் சொன்னார்கள். மதியம் வரைக்கும் நானும் வசந்தன் மாஸ்டருக்காகக் காத்திருந்தேன். பிறகு யாரோ சமைத்துக் கொண்டு வந்திருந்த ஆணத்தைக் குடித்துவிட்டு கரைச்சிக் குடியிருப்புத் தளத்துக்குத் திரும்பினோம்.


அந்த நேரத்தில் முல்லைத்தீவுச் சந்தியிலிருந்து  கரைச்சிக் குடியிருப்பு வழியாக சிலாவத்தை – முள்ளியவளை வீதியில் வந்து ஏறும் பாதை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தடைசெய்யப்பட்டிருந்தது. கரும்புலிகளின் பயிற்சிகளுட்பட வேறும் பல செயற்பாடுகள் அப்பகுதியில் நடைபெற்றதால் இந்தப் பகுதி மற்றவர்களின் பயன்பாட்டுக்குத் தடைசெய்யப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்ட போராளிகள் மட்டுமே அந்தப் பாதையைப் பயன்படுத்தலாம்.


நாங்கள் தளத்துக்கு வந்தபோது இளம்புலி அண்ணன் முற்றத்தைக் கூட்டிக் கொண்டிருந்தார். அப்போது தான் எனக்கு உறைத்தது. பலநாட்களாக இரவு பகலென்று பாராமல் காடளந்து திரிந்த ஒரு வேவுப்புலி அந்த அசதியோடும் முகாமைச் சுத்தம் செய்ய எவ்வளவு கரிசனையாக இருக்கிறது? ஆனால் நான் விடிந்ததும் ஊர் சுற்றிவிட்டு வருகிறேன். அவரோடு சேர்ந்து வளவெல்லாம் துப்பரவு செய்தோம். இரண்டு நாட்களாக குப்பைகள் குவிந்திருந்தன.


வேலையின்போதே இளம்புலி  அண்ணனிடம் நைசாகக் கதைவிட்டுப் பார்த்தேன். எதுவுமே சொல்லவில்லை. அவருக்கும் யாரும் முழுமையான திட்டத்தை விளங்கப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால் அவரே செய்துமுடித்த பணிகளைத் தொகுத்துப் பார்த்து ஒரு கணிப்பை நிச்சயம் அவரால் செய்திருக்க முடியும். சசிக்குமார் மாஸ்டரிடம் கதைவிட்டளவில் எதுவுமே சிக்கவில்லை. ஆனால் மாஸ்டருக்கு நிச்சயம் எதுவுமே தெரிந்திருக்கவில்லை, எதிரியின் முன்னேற்றத்தைத் தடுக்க அவசரமாக எதிரியின் ஆட்லறி நிலைகள் மீது இயக்கம் எறிகணைத் தாக்குதலைச் செய்யப் போகிறது என்பதைத் தவிர.

 - இளந்தீரன் -

Share This:

No Comment to " களங்கள் – 6. ஓயாத அலைகள் மூன்று "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM