News Ticker

Menu

‘விக்னேஸ்வரம்’: தமிழ்த் தேசியத்திற்கான மற்றொரு சவால்!

ஈழத்து மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லவேண்டிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது, தனது கட்டமைப்பிலும் அதன் வழியிலும் தடுமாற்றங்களை சந்திக்கின்ற நெருக்கடியான காலகட்டத்திற்குள் நகர்ந்துவிட்டது.

ஆயுதவழியிலான விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில், முதன்மைச்சக்தியாக செயற்படவேண்டிய கூட்டமைப்பானது, தமிழரசுக்கட்சி மேலாதிக்கம் என்ற மாயையை நம்பவைத்து, அதன் வழிசென்று, இன்று மும்மனிதர்களின் பிடிக்குள் சென்றுள்ளது.விடுதலைப்போராட்டத்தை ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்ட கூட்டமைப்பிலிருந்து, ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளோடு நெருக்கமானவர்களாக காணப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்களை வெளியேற்றுவதில் தமிழரசுக்கட்சி வெற்றிகண்டது.

பின்னர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்களை உள்ளிளுப்பதும், அவர்களுக்கு தமிழரசுக்கட்சி முலாம் பூசுவது என ஒரு திட்டத்தை முன்னெடுத்தனர். சிறிதரன் முதல் இன்றைய குருகுலராஜா மற்றும் அனந்தி வரை இந்தவகையான உள்ளெடுத்தலே தொடர்கின்றது.

அண்மையில் நடந்துமுடிந்த வடமாகாணசபைத் தேர்தலின்போது, வல்வெட்டித்துறையில் பேசிய விக்கினேஸ்வரன் தலைவர் பிரபாகரனை மாவீரன் என்றார். சம்பந்தரால் சுமந்திரனால் முன்னுக்கு கொண்டுவரப்பட்ட விக்கினேஸ்வரன் இப்பிடி பேசியது வல்வெட்டித்துறை மக்களுக்கு அதிர்ச்சியுடன் மகிழ்ச்சியாக இருந்தது. இதனை இந்திய ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களுக்கும் நம்பமுடியாமல் இருந்தன. ஆனால் தான் சொன்னது சரியே என அந்த ஊடகங்கள் திரும்பவும் உறுதிப்படுத்தமுயன்றபோது, தான் சொன்னதில் விக்கினேஸ்வரன் உறுதியாகஇருந்தார்.

இதன் மூலம் தானும் தீவிர தமிழ்த்தேசிய ஆதரவாளன் எனக்காட்டிக்கொண்டார். உடனடியாகவே யாழ்ப்பாணத்திலிருந்து தமிழரசுக்கட்சியின் வீடு பத்திரிகை “பிரபாகரன் மாவீரன்” என தலைப்பு செய்தியிட்டது. ஆனால் அந்தவிடயத்தை தவிர, அனைத்திலும் விக்கினேஸ்வரன் நேர் எதிர்திசையில் நடக்கதொடங்கினார். இதன் மூலம் தலைவர் பிரபாகரனின் நாமம் விக்கினேஸ்வரனால் அரசியலுக்காக பயன்படுத்தப்பட்டதோ என்ற ஐயத்தை உருவாக்குகின்றது.

ஈழத்துப்பிரச்சனை கணவன் மனைவிக்கு இடையிலான பிரச்சனை என்றும், அதில் பக்கத்துவீடான தமிழ்நாடு தம்மை விவாகரத்து கோரச்சொல்லக்கூடாது என்று சொன்னார்.

அதற்கு மேலே சென்று நாங்கள் எங்களுக்குள்ளேயே கதைத்து பிரச்சனைகளை தீர்க்கமுயலும்போது, நீங்கள் தனிநாடு என்றோ சர்வசன வாக்கெடுப்பு என்றோ தீர்வுத்திட்டங்களாக முன்வைத்து, தனது “கணவரை” சங்கடத்துக்குள்ளாக்கவேண்டாம் என்றார்.

கொமன்வெல்த் மாநாட்டில் பங்குபற்றவேண்டாம் எனவும், அதன் மூலம் போர்க்குற்றவாளியின் கையில் கொமன்வெல்த்தின் தலைமையை கொடுக்கவேண்டாம் என கனடா பிரதமர் சொல்லுகின்றார். அதற்காக புலத்து தமிழர்களும் தமிழகத்தமிழர்களும் பல்வேறு போராட்டங்களை வெளிப்படையாக நீண்டகாலமாக நடத்திவருகின்றார்கள். ஆனால் அந்த மாநாட்டில் அனைவரும் பங்குபற்றவேண்டும் என விக்கினேஸ்வரன் அறிவிக்கின்றார்.

ஆயிரக்கணக்கான தமிழரின் சாவுக்கும் அழிவுக்கும் காரணமான, போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டியவர் என்று ஐக்கிய நாடுகள் சபையால் கூறப்படுகின்ற மகிந்த ராஜபக்சவிடம் சென்று பதவிப்பிரமாணம் செய்வேன் என உறுதியாக நின்று செய்துமுடித்தார்.

இத்தகைய பதவிப்பிரமாணத்தை மகிந்த முன்செய்யக்கூடாது என, கூட்டமைப்பின் ஏனைய கட்சித்தலைவர்கள் அனைவரும் கூறியபோதும், தெரிவுசெய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் கூறியபோதும், தனித்த மனிதனாக சம்பந்தர் சுமந்திரன் சகிதம் சென்று அதனைச் செய்துமுடித்தார். இதற்கு தமிழரசுக்கட்சியின் மாவை சேனாதிராசா கூட எதிர்ப்புத்தெரிவித்திருந்தார்.

பின்னர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி அறிக்கை ஒன்றில் “இனியாவது கட்சி பேதங்களை மறந்து, வன்முறைகளைக் களைந்து, ஜனநாயக அடிப்படையில் பாதிப்புற்றிருக்கும் எம் மக்களின் இடர்களையப் பாடுபடுவோமாக!.” எனக்குறிப்பிடுகின்றார்.

அதற்கு மேலாக வடமாகாணசபையின் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் பேசும்போது, “தமிழ்மக்களை கைப்பொம்மைகளாக நினைத்த காலம் மலையேறிவிட்டது” என்கிறார். அடக்குமுறை அரசுக்கு எதிராக இந்த கருத்தை சொல்லவில்லை. முன்னைநாள் விடுதலைபோராட்ட இயக்கங்களுக்கே, அப்படியான அறிவுரை சொல்கிறார்.

காலம் காலமாக எமை அழித்த சிங்கள மேலாதிக்கவாத அரசுகளுடன் இணக்க அரசியல் செய்யப்புறப்பட்டுள்ள விக்கினேஸ்வரன், எமது விடுதலைப்போராட்டத்தை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொச்சைப்படுத்துவதிலேயே கவனமாக இருந்துவருகின்றார். சாவும் அழிவுகளால் துவண்டுபோயுள்ளவர்களை “மாடேறி மிதிப்பது போலவே” இவரது கருத்துக்கள் அமைந்துவருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் நிர்வாகத்திற்கு இடையூறு செய்யாமல் செயற்படுங்கள் என ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் “அறிவுரை” கூறுகின்றார்.  இதே கருத்தை நாளை மகிந்த ராஜபக்ச சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Share This:

No Comment to " ‘விக்னேஸ்வரம்’: தமிழ்த் தேசியத்திற்கான மற்றொரு சவால்! "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM