News Ticker

Menu

சிறிலங்கா சனாதிபதி தேர்தல்: தமிழர் நிலைப்பாடு என்ன?

எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி சிறிலங்கா அரசஅதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தேர்தலில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய கேள்விகள் தொடர்பாக எமது பார்வையை இங்கு பதிவுசெய்கின்றோம். 

இவை தமிழ்த்தேசிய சிந்தனை வெளியில் தமிழ்மக்களுக்கு இருக்கக்கூடிய கடந்த கால நிகழ்கால எதிர்கால செல்வழிகளை மையப்படுத்திய பார்வையாகவே முன்வைக்கப்படுகின்றன.

1. தற்போது நடைபெறவுள்ள சிறிலங்கா அரச அதிபருக்கான தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டுமா?

ஆம். இலங்கைத்தீவில் தமிழர் தேசம் சிங்களவர் தேசம் என இருவேறு தாயகப்பகுதிகள் கொண்ட இரு நிர்வாக அலகுகள் கொண்ட அரசியல் தீர்வே இலங்கைவாழ் அனைவருக்கும் பொருத்தமானதாகும். அதற்கான கோரிக்கைகள் இன்னும் வலுப்பெறவேண்டும்.



அதனால் ஒற்றையாட்சி அமைப்பைக் கொண்ட தேர்தலில் பங்குபற்றக்கூடாது என்ற வாதம் ஏற்புடையதல்ல. தற்போதுள்ள ஆட்சியாளர் தொடர்ந்தும் ஆட்சியிலிருப்பதும் இல்லாமல் போவதற்கும் தமிழர் தரப்பால் ஏதும் செய்யமுடிந்தால் அவற்றை செய்வதே பொருத்தமானதாகும்.

அந்தவகையில் தமிழர் தரப்பால் எதிரணி வேட்பாளருக்கு அளிக்கப்படும் வாக்குகள் மகிந்தவை வீட்டுக்கு அனுப்பும் வாக்குகளாக இருப்பதால் அதனைச் செய்யவேண்டும்.

இந்த வேளையில் இந்திய தந்தி தொலைகாட்சிக்கு நேர்காணல் அளித்த மகிந்த ராஜபக்ச தாம் இம்முறை எப்படியேனும் 35 விழுக்காடு வாக்குகளை தமிழர் பகுதிகளில் பெறுவேன் என கூறுகின்றார். எனவே மகிந்த 50 விழுக்காடு வாக்குகளை கூட தமிழர் பகுதிகளிலிருந்து எதிர்பாரக்கவில்லை என்பதும் அவர் நினைக்கின்ற 35 விழுக்காடு வாக்குகளளை கூட அவருக்கு செல்லக்கூடாது என்பது முக்கியமல்லவா?

2. சிங்கள தேசத்தின் இன்னொரு பேரினவாதியான மைத்திரி - ரணில் - சந்திரிகா  என்ற கூட்டை எப்படி நம்பமுடியும்?

கடந்த கால நிகழ்வுகளையும் நிகழ்கால நடப்புகளையும் ஒப்பிட்டு ரீதியால் கவனித்தால் மகிந்த என்ற கொடுங்கோலனையும் அதன் பரிவாரங்களையும் நீக்குவது முக்கியமானது.

இவற்றோடு ஒப்பிடும்போது எதிரணியின் கூட்டு ஆனது கடும்போக்கு நிலைப்பாடுகளை எடுத்தாலும் அதனை சர்வதேச ரீதியாக ஒரு பதில் அளிக்கவேண்டிய அணியாகவே அமையக்கூடிய சாத்தியங்கள் உண்டு.

3. விடுதலைப்புலிகளின் காலத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்பது அவர்களின் விடுதலைப்போராட்டத்தின் அச்சாணியை மையப்படுத்தியதாக இருந்தது. தற்போது உத்தியை மாற்றிக்கொள்வது பொருத்தமா?

விடுதலைப்புலிகளின் காலத்தோடு சமகாலத்தை ஒப்பிடுவது பொருத்தமற்றது. விடுதலைப்புலிகள் இப்போதும் முன்னைய நிலையில் இருந்திருந்தால் அதே புறக்கணிப்பு நிலை எடுப்பதே சரியான உத்தியாக இருந்திருக்கும்.

எனவே மாறிய களநிலையில் உத்திகள் மாற்றமடைவது தவிர்க்கமுடியாததே.

4. எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் சார்பாக எந்தவித நம்பிக்கையளிப்புகளும் முன்வைக்கப்படவில்லையே?

தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன சொல்லப்படுகின்றன என்பது இலங்கை தேர்தல் வரலாற்றில் முக்கியமாது அல்ல. தேர்தல் விஞ்ஞாபனங்கள் காலங்காலமாக ஒரு பிரச்சாரஉத்தியாகத்தான் பயன்படுத்தப்படுகின்றதே தவிர உண்மையில் ஆட்சிபீடம் ஏறுபவர்கள் தமது அரசியலுக்கு ஏற்றவகையில் தமது ஆட்சியை முன்னகர்த்துகின்றார்கள் என்பதுதான் உண்மை.



அதனை விட தற்போதைய நிலையில் தமிழருக்கு தேவையானது சுதந்திரமாக தமது அடிப்படையான சுதந்திரத்தை உறுதிசெய்வதே. பயம் சூழ்ந்த வாழ்வை அகற்றினாலே தமிழர்கள் தமது உண்மையான சுதந்திரமான வாழ்வு பற்றி சிந்திக்கமுற்படுவார்கள். அந்தக் சூழ்நிலையை உருவாக்குதல் முக்கியமானது. அந்த விடயம் எதிரணியின் விஞ்ஞாபனத்தில் உள்ளது.

தமிழர்கள் பயமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குதல் மிகமுக்கியமானது.

5. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நேரடியாக எதிரணிக்கு ஆதரவளித்தன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த மீதான ஆதரவை மறைமுகமாக அதிகரித்துவிட்டார்களே?

மக்களின் மனச்சாட்சிப்படி வாக்களிக்க விட்டிருக்கலாம் என்பதுதான் இக்கட்டுரையாளரின் கருத்தாகவும் இருந்தது. ஆனால் நேரடியாக ஆதரவளித்தன் மூலம் என்ன நல்ல விடயங்கள் அமையலாம் என்பதை  நாம் பார்க்கவேண்டும்.

1. நேரடியாக ஒரு நிலைப்பாடு எடுப்பதன் மூலம் மக்கள் மத்தியில் தேர்தல் தொடர்பான விளிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டுசென்று வாக்களிக்கும் வீதத்தை அதிகரிக்கமுடியும்.
2. மனிதாபிமானத்திற்கு எதிரான போர் எனக்காட்டிய மகிந்தவை இரண்டாவது தடவையாகவும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அனைவருக்கும் எடுத்துக்காட்டமுடியும்.
3. எதிரணி வெற்றியடையும் போது தமது வாக்குப்பலத்தை முன்வைத்து தமிழர் அரசியல் தொடர்பான விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு செல்லமுடியும். அல்லாதுவிடின் மீண்டும் எங்களுக்குதானே மக்கள் வாக்குப்போட்டார்கள் என எதிரணியும் அவரோடிணைந்துநிற்கும் சில தமிழரும் நாளை இன்னொரு டக்ளஸ் கூட்டத்தை உருவாக்கலாம்.

6. முன்னர் சரத் பொன்சேகாவையும் தற்போது மைத்திரியையும் ஆதரிப்பதன் மூலம் தமிழ்மக்களின் அழிவிற்கு துணைநின்றவர்களுக்கே ஆதரவளிக்கின்றோம் என்ற கருத்துப்பற்றி?

இத்தகைய நிலைப்பாட்டின் மூலம் சிங்கள தேசத்திற்கு தமிழர் தரப்பின் நியாயமான அரசியல் அபிலாசைகள் பற்றி சொல்லமுடியும். தமிழர்கள் கடும்போக்குவாதிகள் என்ற சிங்கள தேசத்தின் நிலைப்பாட்டை இது கேள்விக்குட்படுத்தும்.

விரும்பியோ விரும்பாமலோ சிங்கள தேசத்தின் மனமாற்றமே இலங்கைத்தீவின் நிம்மதியான நீண்ட கௌரவமான சுதந்திரத்தை இரு தேசிய இனங்களுக்கும் பெற்றுக்கொடுக்கும். சரத் பொன்சேகா மற்றும் மைத்திரி ஆகியோர் பேரினவாதத்தின் கருவிகளே தவிர உண்மையான பேரினவாதம் என்பது சிங்களதேசமே என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

மேலும் இத்தேர்தலின்போது மகிந்தவுக்கு எதிரான வாக்குகளாகவே மைத்திரிக்கு வாக்களிக்குமாறு கேட்கின்றோம். இதன்மூலம் மறைமுகமான அழுத்தம்கொடுக்கும் வாக்குகளாகவே இவை கொள்ளப்படலாமே அன்றி நேரடியாக மைத்திரியை எமது அரசதலைவராக ஏற்று வாக்களிப்பதல்ல.

7. சிங்கள தேசத்தின் பிரதிநிதிகளுக்கு வாக்களிப்பதற்கு மாற்றாக தமிழர் தரப்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தி அவருக்கு முதலாவது வாக்கை அளிக்குமாறு கேட்பதன் மூலம் தமிழரின் அரசியல் அபிலாசைகளை சர்வதேச அரங்கில் வலியுறுத்த முடியுமல்லவா?

தமிழர் சார்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவது என்பது ஒரு தெரிவாக இருந்தபோதும் அதற்கான பொருத்தமான காலப்பகுதி இன்னும் உருவாகவில்லை. அத்தகைய பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவர் குறிப்பிடத்தக்களவில் வாக்குகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.

தற்போதைய பயம் கலந்த சூழலில் அத்தகைய வேட்பாளரை நிறுத்தி தமிழர் தரப்பு பரப்புரைகளை செய்யக்கூடிய களநிலைமை இல்லை. எனவேதான் பயம் கலந்த வாழ்வை முதலில் நீக்கவேண்டும். அதன் பின்னர் எதிர்வரும் காலத்தில் வரும் தேர்தலில் அத்தகைய முடிவுகளை எடுப்பதுபற்றி பரிசீலனை செய்யலாம்.

Share This:

No Comment to " சிறிலங்கா சனாதிபதி தேர்தல்: தமிழர் நிலைப்பாடு என்ன? "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM