களங்கள் - 5. ஓயாத அலைகள் மூன்று
29/10/1999 இரவு.
நடந்து முடிந்த ஆட்லறிச் சூட்டுத் திருத்தப் பயிற்சி தொடர்பாகவும் அதன் பெறுபேறு தொடர்பாகவும் கேட்டு அறிந்துகொண்ட தலைவர், தனது திருப்தியைத் தெரிவித்தார். அதேபோல் தாக்குதலிலும் துல்லியமான திருத்தங்களைச் சொல்லி பெரிய விளைவை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இலக்குக்கு ஆகக் கிட்டவாக நிலையெடுக்க வேண்டாமென்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். திருத்தங்கள் சொல்லும் ஓ.பி காரர்கள் தமது முகாமுக்குள் நிற்கிறார்கள் என்பதை ஒருகட்டத்தில் உணரும் எதிரி உங்களைத் தேடியழிக்க முனைவான், அதிலிருந்து தப்பும், நழுவும் வழிகளை முற்கூட்டியே ஆயத்தப்படுத்தி வைத்துக்கொண்டுதான் தாக்குதலைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இயன்றவரை மோதலைத் தவிர்க்கச் சொன்னார். இறுதியில், “எதிரியின் ஆட்லறி நிலைகள்தான் இப்போது எமது இலக்கு; ஒவ்வோர் அணிக்கும் தரப்படும் இலக்குகளை எமது ஆட்லறிகளைக் கொண்டு தாக்கியழிக்கும் நடவடிக்கையில் திருத்தங்கள் சொல்பவர்களாக உங்களை அனுப்புகிறேன்” என்று கூறி சந்திப்பை முடித்துக் கொண்டார் தலைவர்.
ஒவ்வோர் அணியும் தலைவருடன் நின்று படமெடுத்துக் கொண்டார்கள். சுவையான இரவுணவோடு அன்றைய சந்திப்பு முடிந்து கரும்புலிகளும் ஏனைய போராளிகளும் தளம் திரும்பினார்கள்.
இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும்.
மறுபுறத்தில் வேலைகள் மும்முரமாக நகர்ந்துகொண்டிருந்தன. வரைபடங்கள் ஒழுங்குபடுத்துவது, உலர் உணவுப்பொதிகள் ஆயத்தப்படுத்துவது, தொலைத் தொடர்புக் கருவிகள், மின்கலங்கள், கரும்புலிகளுக்கான வெடிபொருட்கள், ஏனைய துணைப்பொருட்கள் என்பனவற்றைத் தயார்படுத்துவது என்று அன்றைய மாலையும் இரவும் வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. தளத்தில் நின்ற நிர்வாகப் போராளிகளும் பயிற்சியாசிரியர்களும் பொறுப்பாளர்களும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள்.
இரவு பத்து மணியிருக்கும். பெரும்பாலான வேலைகள் முழுமை பெற்றிருந்தன. தலைவருடனான சந்திப்பு முடிந்து வந்திருந்த கரும்புலிகளை நல்ல ஓய்வெடுக்கும்படியும் நாளைக்கு மதியமே நகரவேண்டி வருமென்றும் சொல்லியிருந்ததால் அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். நானும் என்னோடு வேலை செய்துகொண்டிருந்த மற்றவர்களும் தேனீர் குடித்துக் கொண்டிருந்தோம். அன்றிரவு அருளனும் எங்களோடு நின்று வேலை செய்துகொண்டிருந்தார். பராக்கிரமபுர முகாம் மீதான தாக்குதலுக்காகப் பயிற்சியிலீடுபட்டிருந்த கரும்புலிகளில் அருளனைத் தவிர மற்ற எவருமே இந்த வேலைத்திட்டத்திலோ மற்றத் தொகுதி கரும்புலிகளுடனோ தொடர்புகொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
இன்னமும் எனக்குத் தாக்குதல் திட்டம் பற்றி முழுமையான விபரங்கள் தெரியாது. அவை பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை; சொல்லப்படவும் மாட்டாது. நடைபெற்ற பயிற்சிகள், நகர்வுகளைக் கொண்டு, எதிரியின் ஆட்லறித் தளங்கள் மீதும் முக்கிய தளங்கள் மீதும் எமது இயக்கம் ஆட்லறித் தாக்குதல் நடத்தப்போகின்றது; அதுவும் பல இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப் போகின்றது என்று ஊகித்திருந்தேன். சில ஆட்லறிகளின் வரவால் எமது இயக்கத்தின் ஆட்லறிப்பலம் அதிகரித்திருக்கிறது என்பதையும் அதற்கு முன் நடந்த சில நிகழ்வுகளைக் கொண்டு அனுமானித்திருந்தேன். இப்போது ஒழுங்குபடுத்திய வரைபடங்களைக் கொண்டு பார்க்கும்போது ஜெயசிக்குறு மூலம் எதிரி கைப்பற்றிய வன்னிப் பகுதிகளிலுள்ள தளங்களே தாக்குதலுக்கு இலக்காகப் போகின்றன என்பதை அறிய முடிந்திருந்தது.
காவற்கடமைக்கான ஒழுங்குகளைக் கவனித்துவிட்டுப் படுக்க ஆயத்தமாகும்போது கடாபி அண்ணனின் வாகனம் வந்து சேர்ந்தது. அவரோடு எழிலும் வந்து சேர்ந்தான். நாளைக்கு கரும்புலிகளின் நகர்வுக்கான ஆயத்த வேலைகளுக்காகத்தான் வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அதன்பின்னர் நடந்தவை வேறுமாதிரியாக இருந்தன.
நிர்வாகப் போராளிகள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டனர். கரும்புலி அணியின் நிர்வாகத்தின் கீழிருந்த வேறு முகாம்களில் கடமையிலிருந்த நிர்வாகப் போராளிகளும் அவசர அவசரமாக அழைக்கப்பட்டனர். இரவிரவாக பெற்றோமக்ஸ் வெளிச்சத்தில் வேலைகள் மும்முரமாக நடந்தன.
இது நடப்பதற்குச் சில நாட்களின் முன்னர்தான் இயக்கத்தில் படையணிக் கட்டமைப்பில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. இயக்கத்தில் தொடக்கத்திலே மாவட்டப் படையணிகளே இருந்தன. பின்னர் ஒவ்வொரு பெயர்களில் படையணிகள் ஒருவாக்கப்பட்ட போதும் சில மாவட்டப்படையணிகளும் தொடர்ந்தும் இயங்கிவந்தன. அவற்றுள் ஒன்று மணலாறு மாவட்டப் படையணி. ‘ஈ’ என்ற எழுத்தில் தகட்டிலக்கத்தைத் தொடங்கி இப்படையணி இயங்கி வந்தது.
நீர்சிந்து – 1 நடவடிக்கை நடந்து சிலநாட்களின் பின்னர் என்று நினைக்கிறேன், சில தேவைகள் கருதி இந்த மணலாறு மாவட்டப்படையணி கலைக்கப்பட்டு அக்கட்டமைப்பிலிருந்த போராளிகள் ஒவ்வொரு வேலைத்திட்டத்திற்கும் பிரித்து விடப்பட்டனர். அப்போது நவம் அண்ணை தலைமையில் லெப்.கேணல் சித்திராங்கள் உட்பட குறிப்பிட்ட போராளிகள் சிலர் கரும்புலி அணிக்குரிய வேவுப் போராளிகளாக உள்வாங்கப்பட்டனர். ஏற்கனவே மணலாற்றுப் படையணியிலிருந்து கரும்புலிகளுக்கான வேவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த லெப்.கேணல் இளம்புலி அண்ணையும் இந்த மாற்றத்தின் மூலம் கரும்புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
இப்போது இரவிரவாக அவசரமாகத் தொடங்கப்பட்ட பணிகள் நாளைக்கு நகரப் போகும் கரும்புலி அணிகளுக்குரியவையாகத் தென்படவில்லை. ஒருபுறத்திலே சசிக்குமார் மாஸ்டரின் மேற்பார்வையில் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. நவம் அண்ணை தலைமையில் ஓரணியை உருவாக்கும் பணியும் அவர்களுக்கான ஆயுதங்கள் வெடிபொருட்களுட்பட இன்னபிற அவசியமானவற்றை ஒழுங்கு செய்யும் பணி அது. அந்தப்பக்கம் போகமுடியாதவாறு எனக்கொரு பணி தரப்பட்டது. அப்போதுதான் வந்திருந்த கன்ரர் வாகனத்திலிருந்து பொருட்களைச் சரிபார்த்து இறக்குவதும் அறிவுறுத்தப்பட்டபடி அவற்றைப் பிரித்துப் பொதிசெய்வதும் எனது பணி. வந்திருந்தவை அரிசி, பருப்பு, சோயாமீற், வெங்காயம், கருவாடு, மீன்ரின்கள் போன்ற முதன்மை உணவுப் பொருட்களும் சீனி, தேயிலை, பால்மாப் பக்கெட் போன்றவையும்.
சொன்னபடி அரசி, பருப்பு உட்பட உணவுப் பொருட்களை சொல்லப்பட்ட அளவுகளில் பிரித்து பொலித்தீன் பைகளில் பொதிசெய்து வேலை முடித்தபோது சமையற் பாத்திரங்கள் இன்னொரு வாகனத்தில் வந்து சேர்ந்தன. அவற்றையும் பொறுப்பெடுத்து இறக்கி வைத்தாயிற்று. வந்திருந்த சமையற் பாத்திரங்கள் என்பன சாதாரணமாக நாம் நடுத்தர முகாம்களில் பயன்படுத்தும் பெரிய கிடாரம், தாச்சி, அகப்பைகள் போன்றன. அதாவது ஏறத்தாள முப்பது நாப்பது பேருக்கு ஒன்றாகச் சமைக்கக் கூடியளவான பாத்திரங்கள். ஏன், எதற்கு என்ற குழப்பங்களோடு தரப்பட்ட வேலைகளை முடித்து சற்றுத்தள்ளி அணிகளை ஒழுங்கமைக்கும் இடத்துக்குச் சென்றேன். அங்கே கடாபி அண்ணை போராளிகளோடு பேசிக்கொண்டிருந்தார்.
“நீங்கள் நீண்டதூரம் நடக்க வேண்டிவரும், நிறையப் பாரம் சுமக்க வேண்டிவரும், மழைக்காலமாகையால் அருவிகள் பெரிய தொல்லையாக இருக்கும். இவற்றைத் தாண்டி விரைவாகவும் சரியாகவும் நீங்கள் செய்யும் பணிதான் எமது மற்ற அணிகளின் வெற்றிக்குப் பக்கபலமாக அமையும்” என்பதாக அவரது பேச்சு இருந்தது.
இதற்கிடையில் பராக்கிரமபுர மீதான தாக்குதலுக்கு ஆயத்தப்படுத்தியிருந்த கரும்புலியணியையும் எழுப்பித்தான் வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. கிடாரங்களையும் ஏனைய பொருட்களையும் காவுவதற்கு நல்ல வலிமையான காவுதடிகள் வெட்டப்பட்டன. எல்லாப் பொருட்களையும் சிறுசிறு பொதியாக்கி ஒவ்வொருவரும் தனித்தனியாக் காவுவதைவிட பெரிய பொதியாகவே காவுவதுதான் சிறந்தது என்ற கருத்து நவம் அண்ணையால் முன்வைக்கப்பட்டு அதுவே பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி அரிசி, பருப்பு, சீனி, சோயாமீற் என்பவற்றை 25 லீற்றர் லொக்ரியூப்களில் காவுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அதைவிட கிடாரங்கள், தாச்சிகள் உட்பட சமையற் பாத்திரங்களும் இரண்டு கூடாரங்கள், ஒரு லீனியர் குறோஸ் (நீண்டதூரத் தொலைத் தொடர்புக்காகப் பயன்படுத்தப்படுவது. அனேகமாக கட்டளைத் தளங்களில் பயன்படுத்தப்படும்) என்று பெருவாரியான பொருட்கள் ஆயத்தமாகியிருந்தன. கிட்டத்தட்ட ஒரு முகாம் அமைக்கும் பாங்கில் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
நேரம் அதிகாலையாகிக் கொண்டிருந்தது. வேலைகள் ஓரளவு முடியும் தறுவாயில் எனக்கு இப்படித்தான் விளங்கியிருந்தது. அதாவது நவம் அண்ணை தலைமையில் நிர்வாகப் போராளிகளையும் வேவுப்பணிக்காக வந்திருந்த போராளிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட அணியானது இந்தப் பொருட்களைக் கொண்டு ஒரு தற்காலிக கட்டளை மையமொன்றை அமைக்கப்போகிறது. அங்கிருந்தபடி கரும்புலிகளின் நடவடிக்கைகள் வழிநடத்தப்படப் போகின்றன.
உண்மையில் உள்நடவடிக்கைகளை வழிநடத்துவதென்றால் களமுனையில் கட்டளைமையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியொரு கட்டளை மையத்தை எமது முன்னணிக் காப்பரண் வரிசையை அண்டி அமைக்கும் நடவடிக்கையில்தான் இவ்வணி ஈடுபடுகின்றது என்பதை ஊகித்துக் கொண்டேன். வழங்கல் சாப்பாட்டை விட்டுவிட்டு சொந்தமாகவே சமைத்துச் சாப்பிடும் திட்டத்தோடு இருக்கிறார்கள் என்பதாகவும் கருதிக்கொண்டேன். ஆனாலும் இவற்றை நீண்டதூரம் காவவேண்டி வருமென்ற கதைதான் விளங்கவில்லை. அப்போதிருந்த நிலையில் முன்னணிக் காப்பரண் வரிசைக்கு அண்மைவரை வாகனங்களில் போகும் நிலைமை இருந்தது.
ஏற்கனவே நன்றாகக் களைப்படைந்திருந்ததாலும், வேலைகள் அதிகமிருந்ததாலும் அதிகம் யோசிக்கும் நிலையிருக்கவில்லை. அப்போது நவம் அண்ணையின் அணியிலிருந்த வழிகாட்டிப் போராளிக்குரிய சாதனங்கள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. நவம் அண்ணையின் அணி முகாமிட வேண்டிய இடத்தின் ஆள்கூறு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்செயலாக அந்த ஆள்கூற்று எண்களை வரைபடத்தில் பொருத்திப் பார்த்தபோது திகைத்துப் போனேன். எழிலை அழைத்து நவம் அண்ணைக்கு வழங்கப்பட்ட ஆள்கூறு சரியானதுதானா அல்லது ஏதாவது இலக்கங்கள் மாறுபட்டுள்ளதா எனக் கேட்டேன். எழிலுக்கு எனது நிலை புரிந்தது.
“அது சரிதான். அங்கதான் நவம் அண்ணையின்ர ரீம் காம்ப் அடிச்சுத் தங்கியிருக்க வேணும்.”
எனது ஆச்சரியத்துக்குக் காரணமிருந்தது. கிடாரங்கள், தாச்சிகள் என்று பாத்திரங்களையும் அரிசி, சீனி உட்பட உணவு மூட்டைகளையும், இரண்டு கூடாரங்களையும், உயரிய மரத்தின் உச்சியில் கட்டி நீண்டதூரத் தொலைத் தொடர்பைப் பேணும் தொலைத்தொடர்புக் கருவியையும், குறைந்தது பத்துநாட்கள் தாக்குப்பிடிக்கக்கூடியளவுக்கு மின்கலங்களையும் சுமந்துசென்று முகாம் அமைத்து, சமைத்துச் சாப்பிட்டுத் தங்கப்போகும் அந்த இடம் எமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கவில்லை; எதிரியின் காப்பரண் வரிசையையும் தாண்டி பலமைல்கள் உள்ளேயிருக்கும் எதிரியின் இதயப்பகுதிக்குள் ஓரிடம்.
தொடரும்...
- இளந்தீரன் -
No Comment to " களங்கள் - 5. ஓயாத அலைகள் மூன்று "