News Ticker

Menu

சுவடுகள் - 8. கப்டன் அருணன்

அன்று மாலையே நாங்கள் தங்கியிருந்த வீடு களைகட்டத் தொடங்கியது. வழமையான – அலுப்புத்தட்டும் இரவுகள் போலன்றி இன்றைய இரவு சுவாரசியமாகக் கழியப் போகின்றது என்ற உற்சாகம் எம்மைத் தொற்றிக் கொண்டது. விறகு, சீனி, தேயிலை என்று தேனீர் போடத் தேவையான பொருட்களைச் சரிபார்த்து வைத்துக் கொண்டான் மறவன். இந்தப் பரபரப்பெல்லாம் அருணனுக்கானத்தான். வரப்போகும் விருந்தாளியை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

நான் அருணனை முதன்முதல் கண்டது கற்சிலைமடுவில். எமது கற்கை நெறி கற்சிலைமடுவில் நடந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த நிர்வாக அலுவலகத்துக்கு வந்திருந்தான். பல படையணிகள், துறைகளிலிருந்து வந்த போராளிகள் அக்கற்கை நெறியில் இருந்தனர். அருணன் முன்பு விடுதலைப் புலிகளின் ஆங்கிலக் கல்லூரியில் இருந்திருக்க வேண்டும். எம்மோடு நின்ற ஆங்கிலக் கல்லூரிப் போராளிகளான கப்டன் கர்ணன், மேஜர் பூபதி (இவர்கள் இருவரும் பின்னர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கடலில் வீரச்சாவு) ஆகியோரைச் சந்திக்க வந்துபோய்க்கொண்டிருந்த அருணன் ஓரிரு நாட்களிலேயே எம்மோடு நெருக்கமாகிவிட்டான். அவனது சுபாவமே அப்படித்தான். யாரோடும் இலகுவில் நெருக்கமாகிவிடுவான்.

அருணன் எமது வீட்டுக்கு வரும் நாட்கள் மிகமிக இனிமையாகக் கழியும். எந்தநேரமும் ஏதாவது பகிடிவிட்டுக் கொண்டேயிருப்பான். சிலநாட்களின் பின்னர்தான் அருணனின் கூத்துப்பாடல்கள் பாடும் திறமை எமக்குத் தெரியவந்தது. பிறகென்ன? அவன் வரும் நாட்களில் தவறாது சில பாடல்கள் பாடிக்காட்டித்தான் செல்லமுடியும்.

அப்போது ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை நடந்துகொண்டிருந்தது. எதிரி கரிப்பட்டமுறிப்பைக் கைப்பற்றியிருந்தான். அங்கிருந்து அவனை மேலும் முன்னேறவிடாமல் புலிகளின் அணிகள் தடுத்து நின்றிருந்தன. அப்போது அம்பகாமம் பகுதியில் சிறுத்தைப் படையணியின் ஒரு கொம்பனி நிலைகொண்டிருந்தது. அந்த அணியிலே அருணனும் இணைத்துக் கொள்ளப்பட்டான்.

அப்போது அந்த முனையிலே அதிகம் சண்டை நடப்பதில்லை. எதிரி ஒலுமடு நோக்கிய முன்னேற்ற முயற்சியைத்தான் முக்கியமாக்கியிருந்தான். ஒட்டுசுட்டான் பக்கமாக முன்னேற்ற முயற்சிகள் செய்யவில்லை. எதிரியின் சிறு ரோந்து அணிகள் எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவதும், அவற்றை எதிர்த்துத் தாக்குதல் நடத்துவதுமாகவே அக்களமுனை அப்போது இருந்தது.

இடையிடையே களமுனையிலிருந்து ஒருநாள், இருநாள் என விடுப்பெடுத்து எம்மைப் பார்க்க வருவான் அருணன். சிலவேளைகளில் நிர்வாக அலுவலாகவும் நாமிருக்கும் இடத்துக்கு வந்து போவான். சிறுத்தைப் படையணியின் நிர்வாகமும் அப்போது கற்சிலைமடுவை அண்டியே இயங்கிக் கொண்டிருந்தது.



அருணன் எம்மிடம் வரும் நாட்களின் இரவுகள் மிக இனிமையாகக் கழியும். அவனிடம் நாங்கள் எதிர்பார்ப்பது ஏராளமான பகிடிகள், கூத்துப்பாடல்கள். அவன் எங்களிடம் எதிர்பார்ப்பது வெறுந் தேனீர்.

அருணனுக்கு உலகில் மிகப்பிடித்தமானது வெறுந்தேனீராகத்தான் இருக்கும். அந்த விடயத்தில் அவனோர் அதிசயப்பிறவிதான். ஒன்றிரண்டு குவளை என்ற கணக்கில் அவன் தேனீர் குடிப்பதில்லை. லீற்றர் கணக்கில்தான் குடிப்பான். நல்ல சாயம் போட்ட வெறுந்தேனீர் என்றால் அவனுக்குப் போதும், அதற்காக எதுவும் செய்வான்.

வன்னியின் போர்க்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு, சீனித் தட்டுப்பாடு என்று மாறிமாறி வருவதுண்டு. ஜெயசிக்குறு காலம் முழுவதுமே களமுனையில் உணவுப்பிரச்சனை குறிப்பிட்டளவில் இருந்துகொண்டுதானிருந்தது. சரியான உணவில்லாமல், அதேநேரம் மிகமிகக் கடினமான வேலைகளைச் செய்துதான் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நடந்துகொண்டிருந்தது. அது தனிவரலாறு.

இடையிடையே சீனித் தட்டுப்பாடு வருவதுண்டு. அப்போதெல்லாம் பொதுமக்களும் போராளிகளும் ‘நக்குத்தண்ணி’ குடிக்கத் தொடங்குவார்கள். நக்குத்தண்ணி எனப்படுவது, ஓர் உள்ளங்கையில் சிறதளவு சீனியை வைத்துக்கொண்டு அதை நக்கி நக்கி சீனி போடாத தேனீரைக் குடிப்பது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்திலும் இந்த முறை சிலநாட்கள் இருந்தது. ஆனால் வன்னியில் இது வழக்கமாகவே போய்விட்ட ஒரு நடைமுறை.

16_01_09_ltte_03அப்படியான சீனித் தட்டுப்பாட்டுக்குரிய காலங்கள் மிகச் சிரமமானவை. அதுவும் களமுனையில் அது இன்னும் கொடிதாயிருக்கும். கடின வேலைகளுக்கிடையில் நல்ல தேனீர்கூட குடிக்க முடியாது. பின்வந்த காலங்களில் வீரைப்பழத்தில் ‘ஜாம்’ காய்ச்சி அதைத் தொட்டு நக்கியே தேனீர் குடிக்கும் வித்தையைக் கண்டுபிடித்தனர் போராளிகள். ஒரு மாதத்துக்கென பங்கிட்டு வழங்கப்படும் சீனியை புட்டோடு சாப்பிடப் பயன்படுத்திக் கொண்டு வீரைப்பழ ஜாமோடு தேனீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்ட களமுனைகளுமுண்டு.

அருணன் எம்மிடம் வருவதென்றால் முதல்நாளே களமுனையிலிருந்து அறவித்து விடுவான். நாங்களும் அதற்கேற்றாற்போல் அடுக்குப் பண்ணுவோம். அங்கிங்கே என்று வாங்கி மரவள்ளிக் கிழங்கோ பச்சைக் கச்சானோ அவித்துக் கொடுப்போம். இப்படியாகப் பின்தளத்துக்கு வரும் வேளைகளில்தான் அவர்கள் ஒழுங்கான சாப்பாட்டைக் காண்பார்கள் என்பதும் வயிறார உண்பார்கள் என்பதும் எமக்குத் தெரியும். ஒருமுறை வந்தால் ஓரிரவு தங்கித்தான் செல்வான் அருணன். அவன் தங்கும் இரவு எமக்குக் குதூகலமாகக் கழியும்.

பெரும்பாலும் காத்தவராயன் கூத்துத்தான் பாடுவான். நல்ல குரல் வளம் அவனுக்கு. பெருங்குரலெடுத்துத்தான் பாடுவான். அங்கம் பக்கத்து வீடுகள் பலவற்றுக்கு அன்றிரவு நித்திரை முழிப்பாகத்தான் இருந்திருக்கும். பலர் இரசித்திருப்பார்கள், சிலர் திட்டியிருப்பார்கள். தேனீர் இடைவிடாமல் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். பாடல்கள் தானாகக் கொட்டிக் கொண்டிருக்கும். இடையிடையே களமுனையில் நடந்த பம்பல்களைச் சொல்லிக் கொண்டிருப்பான். நாங்கள் படுக்க எப்படியும் பன்னிரண்டு மணி தாண்டும். வழமையான அலுப்பூட்டும் இரவுகளிலிருந்து விடுதலைபெற அருணன் வரும் நாட்களை நாங்கள் ஆவலோடு பார்த்திருப்போம்.

அருணன் நீண்டநாட்களாக வரவில்லை. இடையிடையே வோக்கியில் கதைத்துக் கொள்வான். திடீரென ஒருநாள் செய்தி சொல்லப்பட்டது, அடுத்தநாள் அருணன் வருவதாக. அப்போது சீனித் தட்டுப்பாடு மாதம். எமக்கான வழங்கல்கள் அரைவாசியாகக் குறைந்திருந்தன. ஆனாலும் அடுத்தநாள் வரப்போகும் அருணனுக்கான எம்மிடமிருந்த சீனி அனைத்தையும் ஒதுக்கினோம். ‘ரெண்டு ஜார் பிளேன் ரீ போட இவ்வளவும் காணும். இந்தமுறை அருணனைச் சமாளிக்கலாம்’ என்று வழமையாக அருணனுக்கான தேனீர் தயாரிக்கும் மறவன் சொல்லிக் கொண்டான். இந்தமுறை வெள்ளை அண்ணையிடமிருந்து பச்சைக்கச்சான் வாங்கி வைத்துக் கொண்டோம்.

மறுநாள் பின்னேர வகுப்புக்களுக்கு வராமல் மறவன் வீட்டிலேயே நின்றுகொண்டான். ‘அருணன் வீட்ட வரேக்க ஒராள் நிக்கவேணும், அதோட கச்சான் அவிக்கிற வேலை கிடக்கு’ என்று சொல்லிக் கொண்டான். அன்று மாலை வகுப்புக்கள் முடிந்து எமது வீட்டுக்கு வந்தபோது அருணன் வந்திருக்கவில்லை. ‘சரி ஏதாவது வேலையிருக்கும், முடிச்சிட்டு வருவான்’ என்று இருந்தோம். நேரம் ஏழுமணியாகியது. அருணன் வரவில்லை. ஆனால் ஒரு செய்தி வந்தது.

களமுனையிலிருந்து கற்சிலைமடு நோக்கி வந்துகொண்டிருந்த அருணனும் இன்னொரு போராளியும் எதிரியின் பதுங்கித் தாக்குதலுக்கு இலக்காகி வீரச்சாவடைந்தனர் என்ற செய்தியே அது.

அதன்பிறகு வந்த பல இரவுகள் வழமைபோலவே கழிந்தன. வழமையான சலிப்பூட்டும் இரவுகளை மாற்ற அருணன் வருவான் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாவது முன்பு இருந்தது. இப்போது அதுவுமில்லை.

Share This:

No Comment to " சுவடுகள் - 8. கப்டன் அருணன் "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM