News Ticker

Menu

முஸ்லிம்களிடமிருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டியவை!!!

அண்மையில் போர்க்காலத்தில் இடம்பெயர்ந்தவர்களின் காணி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்நோக்கில் ஒரு விசேட சட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

அதன்படி எதிர்வரும் ஒருவருட காலத்தினுள் “பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆயுதக்குழுவின் நடவடிக்கைகளால் காணி சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு இச்சட்டம் வழிவகை செய்கின்றது” என அச்சட்டமூலம் கூறுகின்றது.

இந்த சட்டமானது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி கொண்டுவரப்பட்ட சட்டமூலமாகும். வழமைபோலவே தாங்களும் இணைந்துதான் தமிழ்மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே அச்சட்டம் கொண்டுவந்ததாக கூட்டமைப்பு சொல்லும் என்பது எதிர்பார்க்ககூடியதே.



அதனையே ஒரு ஊடகத்திற்கு பகிரங்கமாக கருத்து தெரிவித்தபோது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். அப்போது இது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு ஆயுதக்குழுவால் பாதிக்கப்பட்ட வர்களுக்குத்தான் இழப்பீடு தருகின்றதே தவிர இராணுவத்தினரால் கையப்படுத்தப் பட்ட காணிகளுக்கு பதில் வருமா எனக்கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சுமந்திரன் “பயங்கரவாத ஆயுதக்குழுவின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட சூழ்நிலைகள் என்று வரும்போது அந்தச் சூழ்நிலைக்குள் படையினரையும் சிக்கவைக்கமுடியும்” என்று தனது சாணக்கியத்தனத்தை தெரிவித்திருந்தார்.

காணி ரீதியான மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். ஆனால் அவர்கள் சார்பான பிரதிநிதிகள் எவரும் இதுபற்றிய பிரயோசனமளிக்கக்கூடிய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை.

மாறாக விடுதலைப் போராட்டத்தின் அடித்தளத்தையே கேள்விக்குட்படுத்தும் விதத்தில் சட்டமூலங்கள் வருவதை மறைமுகமாக ஆதரித்து வருகின்றார்கள். அதற்கு இந்த காணிச்சட்டமூலம் கொண்டுவந்த முறைமை நல்ல எடுத்துக்காட்டு. ஆழக்கடலில் மீன்பிடிப்பதில் தமிழக மீனவர்களுக்கும் ஈழத்து மீனவர்களுக்கும் ஏற்படுகின்ற பிரச்சனையை தலையிட்டு அதற்கு தனது விசேட சட்டமூலத்தை கொண்டுவந்தவர் இந்த சுமந்திரன்.

ஆனால் தமிழர்களின் உரிமைகளை மீளப்பெற்றுக்கொள்வதில் உருப்படியான எந்த சட்டமூலத்தை சிங்கள தேசத்தின் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்கள் என்றால் எதுவும் இல்லை.

தமிழர்களின் அரசியலுரிமை என்பது தற்போதைய சிறிலங்காவின் சட்டவாக்கத்திற்கு அப்பாற்பட்டது. அதே சட்ட எல்லைக்குக்குள் நின்று ஒரு தீர்வு காண்பது என்பது சாத்தியமற்றது.

அதற்கு அப்பால் சென்று தமிழர்களுக்கு தீர்வு வழங்கவேண்டும் என்ற சிந்தனை மாற்றம் சிங்கள தேசத்திற்கு இன்னும் வரவில்லை. அதனை உருவாக்கி கொள்ளும் அல்லது மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளும் எந்த உபாயங்களும் தமிழர்நலனில் அக்கறை உள்ள சக்திகள் என்று சொல்லப்படுவனவற்றிலும் இல்லை.

ஆனால் அந்த சட்டவாக்க எல்லைகளுக்குள் நின்று தீர்வு காணப்படக்கூடிய பல பிரச்சனைகள் உண்டு.

உதாரணமாக 32 வருடங்களுக்கு முன்னர் தமது சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்ட கொக்குளாய், கொத்குத்தொடுவாய், தென்னமரவாடி மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறமுடியாமல் இருக்கின்றார்கள்.

திருமலை கன்னியா நீரூற்றுகள் என்பவை தமிழர்களின் வாழ்வோடு இணைந்தவை இன்று அந்தப்பிரதேசம் பௌத்த மதங்களுக்கு சொந்தமானது என தமது அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டறிந்து அதனை கையகப்படுத்தியுள்ளனர்.

இன்று கன்னியா நீரூற்று பிரதேசம் அந்தப்பிரதேச மக்களின் பிரதேச சபையிடமிருந்து பறிக்கப்பட்டு சிங்கள உடைமை ஆக்கப்பட்டுள்ளது.

அங்கு பௌத்த விகாரையும் பள்ளிவாசலும் கட்டப்பட்டு வழிபாடுகள் நடக்கின்றன. இந்து ஆலயம் இடிக்கப்பட்டு மக்கள் மீண்டும் செல்லமுடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் அந்தப்பிரதேசத்து மக்களின் அனுமதி இன்றி பிரதேசசபை பிரிக்கப்பட்டு சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பல இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளனன. பிள்ளையார் கோவிலை இடித்து பள்ளிவாசல் கட்டியது நானே என அலிசாகிர் மௌலான வெளிப்படையாகவே சொன்ன காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு இருந்தது.

தமிழ்மக்களின் அன்றாட வாழ்வோடு சம்பந்தப்பட்ட இத்தகைய பிரச்சனைகளை கையாளவோ அல்லது தீர்வு காணவோ தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு வருமட்டும் காத்திருக்கவேண்டும் என்ற அவசியம் இருக்கின்றதா?

முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை சரிபிழைகளுக்கு அப்பால் தம் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை முன்னிலைப்படுத்துவதிலும் அதற்கு தீர்வு காண்பதிலும் அத்தகைய தீர்வு காணலிற்கு இணைந்து நிற்பதிலும் முன்மாதிரியாக இருக்கின்றார்கள்.

குறிப்பாக முஸ்லிம் பிரதேச சபைகளை ஏற்படுத்தும் விடயங்களை தமது தேர்தல் கால உடன்பாடுகள் ஊடாக சாத்தியப்படுத்தியிருக்கின்றார்கள். ஒரு பலவீனமான நிலையிலும் கிழக்கு மாகாணசபையின் தலைமைத்துவத்தை தக்கவைப்பதற்கான தமது அரசியல் நகர்வில் வெற்றி கண்டிருக்கின்றார்கள்.

ஆனால் தமிழ் தலைமைத்துவம் சாதித்தது என்ன?

அரிச்சந்திரன்

Share This:

No Comment to " முஸ்லிம்களிடமிருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டியவை!!! "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM