News Ticker

Menu

வெறும் தேசியம் விலையாகுமா?

ஈழத்தமிழர்கள் வாழ்வில் கொடிய அவலங்களை சுமந்த கனத்த நாட்களின் எண்ணங்களை அனைவரும் மீளநினைவு கொள்ளும் நாள் மே 18. இவ்வாண்டு தாயகத்திலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் நினைவு நாட்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன.

தாயகத்தில் வழமையை விட நெருக்குவாரங்கள் குறைந்தபோதும் கனதியான நிகழ்வுகளாக அந்நாள் நினைவுகூரப்படவில்லை. முள்ளிவாய்க்காலில் கூட இம்முறை பெருமளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அங்கும் வடமாகாணசபை என்று தனித்தும் தமிழத்தேசிய மக்கள் முன்னனி என்றும் தனித்தும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.



வழமையாக பெருமளவில் திரண்டுகொள்ளும் தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளும் இம்முறை அந்த கனதியை இழந்துவிட்டன. ஈழத்தமிழர் அரசிpயலுக்காக குரல்கொடுத்தவர்களே பிரிபட்டு “உண்மையானவர்கள்” யார் என்ற போட்டியில் ஒருவருமே “இல்லாதவர்களானார்கள்”.

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும் முன்னரை விட மக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

பிரித்தானிய பெருந்தேசத்தில் இரண்டு இடத்தில் இரண்டு பிரிவுகளாக முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. ஒரு இடத்திற்கு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் மற்றைய இடத்திற்கு செல்லுமாறு பழ. நெடுமாறனும் குரல்கொடுத்திருந்தனர்.

இரண்டு இடங்களில் அல்ல இருபது இடங்களிலும் நினைவுநிகழ்வுகளை உரிய முறையில் செய்வது வரவேற்கதக்கது.

நடைபெற்றது இனப்படுகொலை அல்ல சில கவலையான சம்பவங்களே எனச்சொல்லியும் தலைவர் பிரபாகரன் வந்து சொல்லும்போது தமிழரின் தேசியக்கொடியை ஏற்றுவோம் அதுவரை அதனை மடித்து வையுங்கள் பிரித்தானிய தமிழர் பேரவை சொல்லுகின்றது.

தேசிய அடையாளங்களை ஒளித்துவைத்து அரசியல் செய்யவேண்டாம் என்றும் அதனை முன்னே வைத்து தமிழர் போராட்டத்தின் நியாயங்களை வெளிச்சொல்லுங்கள். நாங்கள் உங்கள் பின்னால் இருந்து உங்களுக்காய் வேலை செய்கின்றோம் என்று சொல்கின்றார்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர்.

முள்ளிவாய்க்கால் நினைவுநாளென்பது தனியே ஒரு துக்கநாளல்ல. ஒருதேசத்தின் அழிவில் நனைந்து வீழ்ந்து அழுதுபோவதற்கான நாள் மட்டுமல்ல. இழந்தவர்களுக்கான நீதிபெறப்பட வேண்டிய தேவையை நினைவூட்டும் நாளாகவும் இருப்பவர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான நாளாகவும் அதனை நினைவுகொள்ளவேண்டும் என்பதே பொதுவான கருத்தாகும்.

இதனையே முள்ளிவாய்க்கால் நிகழ்வை தலைமையேற்று நடத்திய வடமாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் பதிவுசெய்துள்ளார். தமிழர்களுக்கு நல்ல தீர்வை பெற்றுத்தருகின்றோம் நடந்தவைகளை மறந்துவிடுங்கள். போர்க்குற்றங்களை பற்றி கதைக்கவேண்டாம் என்றும் நடைபெற்றது இனவழிப்பு என சொல்லவேண்டாம் எனவும் மறைமுகமான அழுத்தங்கள் உள்ளேயும் வெளியிலிருந்தும் கிடைப்பதாகவும அதனை ஏற்கமுடியாது எனவும் விக்கினேஸ்வரன் சொல்லுகின்றார்.

ஆனால் இங்கு முக்கியமான கேள்வி என்னவெனில் தமிழர்களின் முக்கியமான ஒரு நினைவுநாளில் கூட அனைவரும் ஒருமித்து பயணிக்கமுடியாமல் போவது ஏன் என்பதே.

பல்வேறு பிளவுகளும் பிரிவுகளும் தமிழகத்திலும் தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் இருக்கின்றபோதும் முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வு தொடர்பாக தாயகநிலைமைகளை விரிவாக ஆராயவிரும்புகின்றது இப்பத்தி.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் கூட அதுவும் முள்ளிவாய்க்கால் என்ற முக்கியத்துமான இடத்தில் நடைபெற்ற நினைவுநிகழ்வை கூட ஒருங்கிணைந்து செய்யமுடியாமல் போனமை வரலாற்றின் தமிழர் வரலாற்றின் சாபக்கேடா?

முள்ளிவாய்க்கால் நிகழ்வை வடமாகாண சபை பொறுப்பெடுத்து செய்தது தவறு என்றும் தாம் ஏற்றுக்கொள்ளாத 13வது சட்டத்திற்கு கீழ் அமைக்கப்பட்ட – தங்களால் நிராகரிக்கப்பட்ட கட்டமைப்பான – வடமாகாணசபையால் நடாத்தப்படும் நினைவுநிகழ்வில் பங்குகொள்வது தமது அரசியல்பாதைக்கு தவறானது என்று தமிழத் தேசிய மக்கள் முன்னனி சொல்கின்றது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவுநிகழ்வு என்பது தனியே வடமாகாணசபையால் நடாத்தப்பட்டநிகழ்வு என சொல்லமுடியாது. அது வடமாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அவர் இப்போது வடமாகாண சபையின் முதல்வர். அத்தோடு தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர். அங்கு பேரவையின் உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.

தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் விக்கினேஸ்வரன் மீது கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்படுவது வெளித்தெரியா விடயமல்ல. அவரை எப்படியாவது வீட்டுக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்பது சிங்கள பேரினவாதத்தின் நோக்கம் மட்டுமல்ல. கூட்டமைப்பில் உள்ள அரசியல் வியாபாரிகளின் நோக்கமும் அதுவாகத்தான் இருக்கின்றது.

எனவே இந்த நினைவுகூரல் விடயத்திலாவது ஒன்றுபட்டு நின்று தமிழத்தேசிய மக்கள் முன்னனியானது விக்கினேஸ்வரனை மறைமுகமாக பலப்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் வெறுமனே தேசியம் பேசுகின்றோம் பேர்வழியாக இவர்களும் போய்விடுவார்களோ என்ற ஐயத்தை விதைப்பதுபோல அவர்களின் செயற்பாடு அமைந்துவிட்டமை தவறான உதாரணமாக வரலாற்றில் பதியப்படும்.

வடமாகாணசபை என்பது தனியே அதிகாரங்கள் அற்ற ஒரு கட்டமைப்பு என்று ஓரேயடியாக புறக்கணித்துவிடமுடியாது. தமிழர்களை பொறுத்தவரை இருக்கின்ற கட்டமைக்கப்பட்ட – அதிகாரத்தில் உள்ள - ஒரே அரசியல் நிறுவனமாக வடமாகாணசபையே உள்ளது.

கொழும்புக்கு செல்லும் முக்கியமான தூதுவர்கள் வடக்கிற்கும் வருவதனை அங்கும் ஒரு விசேட அதிகார நிறுவனம் உண்டு என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்வதால் தான்.

13 இற்கு கீழ் அமைக்கப்பட்ட மாகாணசபை மூலம் தான் சமஸ்டி ரீதியான அரசில் தீர்வே தேவை என்கின்ற யோசனை முன்வைக்கப்பட்டது. அதிகாரங்கள் அற்ற நிராகரிக்கப்பட்ட வடமாகாணசபையால் தான் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலைதான் என தீர்மானம் நிறைவேற்றமுடிந்தது.

எனவே வெறுமனே தேசியம் பேசிக்கொண்டு முன்னே செல்வதால் மட்டும் அதனை சரியான அரசியல் நகர்வாக கொள்ளமுடியாது. அப்படியான செல்முறை தோல்வி காணும்போது அதற்கான பழி அப்பாவிகள் மீதே சுமத்தப்படுகின்றது.

இன்று வடமாகாணசபை உறுப்பினர்களில் சிலர் மோசமான காட்டுமிராண்டித்தனமான காடையர் கூட்டத்தை தமது தொண்டர்களாக வைத்துள்ளார்கள். அது இப்போது சாதாரண நாட்டாண்மை அரசியல் தரத்திற்கு சென்றுவிட்டது. சிலவேளைகளில் அப்படியானவர்களால் கொலைகளும் நடக்கின்றன. கடத்தல்களும் நடக்கின்றன. கற்பழிப்புகளும் நடக்கின்ற நிலைக்கு சென்றுவிட்டன.

இப்படி எம்மவர்களால் எம்மவர்கள்தான் என்று எண்ணி வாக்களிக்கப்பட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் செயற்படுவதற்கு காரணம் என்ன? நல்லவர்கள் பலர் வெறுமனே தேசியம் பேசிக்கொண்ட சிலரால் பாதை மாற்றப்பட்டமைதான் என்றும் எடுத்துக்கொள்ளலாம் தானே?

ஆகக்குறைந்தது இப்படியான தனித்தனியான செயற்பாடுகளால் விரக்தியடைந்து பலர் அரசியல் வேலைத்திட்டங்களிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம் தானே?

எந்த இடத்தில் பிரிந்து நிற்கவேண்டும் எந்த இடத்தில் சேர்ந்து நிற்கவேண்டும் என்ற அடிப்படை அரசியல் அறம் வேண்டாமா?

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை மீது விமர்சனங்கள் இருக்கின்றன என்பதற்காக அதில் உள்ள அனைவரையும் அதன் ஆதரவாளர்கள் அனைவரையும் விமர்சிக்கமுடியுமா?

விடுதலைப்புலிகளின் விட்டுச்சென்ற வெற்றிடத்தில் நல்லவர்களை தேர்ந்தெடுப்பதிலும் வல்லவர்களை முன்கொண்டுவருவதிலும் நாம் தோற்றுவிட்டோமா? அல்லது இன்னும் காத்திருக்கப்போகின்றோமா?



-     அரிச்சந்திரன் -

Share This:

No Comment to " வெறும் தேசியம் விலையாகுமா? "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM