News Ticker

Menu

இந்திய சுயாட்சி ஈழத்திற்குப் பொருந்துமா?

தனிநாட்டுக்கான ஈழவிடுதலைப் போராட்டம் அரசியல் வழியில் கூர்மைப்படுத்த வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட தற்போது அவசியமாகவும் அவசரமாகவும் உள்ளது. ஆயுத ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் வல்லாதிக்கச் சக்திகளின் நேரடித் தலையீட்டுடன் பெரும் சரிவைச் சந்தித்த நிலையில் தனிநாட்டுக் கொள்கையைக் கைவிட்டுவிட வேண்டுமென ஒரு கருத்து எழுந்துவருகின்றது.

இந்திய சுயாட்சி முறைகளைப் போல ஓர் அதிகாரப் பரவலாக்கத்தை முன்வைத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டுமென்பது அவர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது. இந்தவேளையில் தற்போது தமிழ் ஈழத்திற்கான மாற்றுவழிகள் தேவையா என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.
இலங்கைத்தீவின் கடைசிப் பண்டைத் தமிழ் இராச்சியமாகத் திகழ்ந்த வன்னி இராச்சியம் 1833 ஆம் ஆண்டில் பிரித்தானியப் படைகளால் வெற்றி கொள்ளபட்டபோது முடிவிற்கு வந்தது. அன்று முதல் இலங்கைத்தீவை தனி நிர்வாக அலகாக்கிய பிரித்தானிய ஆட்சியாளர் தனித்தனி அரசுகளாகவே தமிழ் சிங்கள இராச்சியங்கள் இருந்தனவென்ற யதார்த்தத்தைப் புரிந்துகொண்டே தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சமமான பிரதிநிதித்துவத்தை அன்றைய ஆட்சியில் வழங்கியிருந்தனர். நூறு ஆண்டுகளாக சம பிரதிநிதித்துவத்தை ஏற்றுக்கொண்ட பிரித்தானியர் அதன்பின்னர் சிங்களப் பிரதிநிதிகளின் கருத்தை ஏற்றுக்கொண்டு தமிழர்களது பிரதிநிதித்துவத்தைக் குறைத்துக் கொண்டனர். அதன்பின்னர் இரண்டு வெவ்வேறான இறைமையுள்ள அரசுகள் இருந்தன என்ற வரலாற்று உண்மையை மறைத்து ஒரே நாடாக இலங்கைத்தீவை சிங்கள பேரினவாத ஆட்சியாளரிடம் அதனை ஒப்படைத்துச் சென்றனர்.
இலங்கை சுதந்திரமடைந்ததாக சொல்லப்படும் நாளிலிருந்து அமைதிவழியில் உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் ஆயுத வழியில் அடக்கப்பட்டது மட்டுமன்றி பெரும் உயிரழிவுகளும் பொருள் அழிவுகளும் ஏற்பட்டது. இதனால் ஆயுத ரீதியில் போராட்ட அமைப்புகள் தோன்றி தனிநாடு அமைப்பதற்காக போராடி இறுதியில் விடுதலைப் புலிகள் மட்டுமே அதே கொள்கையில் உறுதியுடன் பயணித்தனர்.
மாறிய உலக ஒழுங்குகள் சிறிலங்கா அரசுக்கு சாதகமாக போனபோது ஆயுத வழியில் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இப்போது தனிநாடு தவிர்ந்த வேறு தெரிவுகளைப் பரிந்துரைக்கவேண்டுமென சர்வதேச அரசுகளும் தமிழ்மக்களில் ஒரு பகுதியினரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு உதாரணமாக இந்தியாவில் உள்ளது போன்ற சுயாட்சி அமைப்பு ஒன்றைப் பற்றி யோசிக்கவும் சொல்கின்றார்கள்.
இந்தியாவென்பது இரண்டு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு அன்று. அங்கு பெரும்பான்மை இனம் என்று சொல்லிக்கொண்டு எந்த இனத்தைச் சேர்ந்தவர்களும் இன்னோர் இனத்தின் மேல் தமது அதிகாரங்களைப் பிரயோகித்து அடக்கமுடியாது. இன்றைய நிலையில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுடன் ஒத்துப்போகின்ற, ஒத்துவாழுகின்ற நிலைமையைக் காணமுடியாதுதான். பேரினவாதப் பண்புகளைக் கொண்ட அரசு ஒன்றை மத்தியில் நிறுவமுடியாதபோது மாநிலங்கள் மீதான அடக்குமுறையை யாரால் ஏற்படுத்தமுடியும். அப்படியான ஒரு நிலைமை வந்தாலும் மாநிலங்களுக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்த எடுக்ககூடிய எந்தமுயற்சிகளையும் ஏனைய மாநிலத்தில் உள்ளவர்களும் சேர்ந்து எதிர்க்கவே செய்வார்கள்.
இந்தியாவில் உள்ளதுபோன்ற சுயாட்சிமுறை ஒன்றோ அல்லது தற்போது சிறிலங்காவில் பேசப்பட்டுவரும் 13 ஆவது திருத்தச் சட்டங்களோ இலங்கைத்தீவைப் போன்ற இரண்டு மொழி பேசும் மக்களைக் கொண்ட நாட்டுக்குப் பொருத்தமான அதிகார பரவலாக்கம் அன்று. மாறாக உலகின் கவனத்தை ஏதோவிதத்தில் ஈர்த்துள்ள விடுதலைப் போராட்டத்தின் வீச்சை பிழையான வழியில் இட்டுச்செல்லவே உதவும். இதன் காரணமாக ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தை காலவோட்டத்தில் எதிர்ப்பக்கமாக இழுத்துச்சென்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கே கொண்டுவந்துவிடும்.
இன்றைய சூழ்நிலையில் தாயகத்திலுள்ள மக்களின் நாளாந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கே சிறிலங்கா ஆட்சியாளரைக் கேட்டுச் செய்யவேண்டிய தேவை இருக்கின்றது. எனவே அதற்கான ஒழுங்குமுறைகளை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்களை ஏதோவொரு மட்டத்தில் செய்துதான் ஆகவேண்டும்.
ஆனால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக்கான பேச்சுக்களைச் செய்வதற்கான பணியில் ஈடுபடும்போது இதுவரைகாலமும் தாயக விடுதலைக்காகவே போராடி மடிந்த வீரர்களை மனதிற்கொண்டும் இழந்துபோன எம் தமிழ் உறவுகளையும் மனதிற்கொண்டும் உறுதியான முடிவுகளையே தமிழர் தரப்புக்கள் மேற்கொள்ளவேண்டும். பசிக்கின்ற வேளையில் கஞ்சி தந்தாலே போதும் என்றும் ஏதோ கஞ்சிக்காகத்தான் போராட்டம் நடத்தினோம் என்ற வகையில் புதிய வியாக்கியானம் கொடுக்க முனைபவர்களை இனங்கண்டு கொள்ளாதுவிட்டால் மீண்டும் ஒரு வரலாற்றுத்தவறை ஏற்படுத்தியவர்களாகவே நாம் இருப்போம்.

Share This:

No Comment to " இந்திய சுயாட்சி ஈழத்திற்குப் பொருந்துமா? "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM