News Ticker

Menu

சுவடுகள் – 4. கடற்புலி மேஜர் வைகுந்தன்

1998 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் ஒருநாள்.

வட்டுவாகல் பாலத்தையொட்டிய பகுதியில் நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். வட்டுவாகல் பாலம் என்பது வன்னியின் புதுக்குடியிருப்பு -  முல்லைத்தீவுச் சாலையில் வரும், நந்திக்கடல் நீரேரியின் மேலாகச் செல்லும் பாலம். அப்பாலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் பக்கமாக, புதுக்குடியிருப்புச் சாலைக்கும் கடலுக்குமிடைப்பட்ட பற்றைக்குள்தான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். அது பொதுமக்களுக்கு மட்டுமன்றி போராளிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட பகுதி. கடற்புலிகளின் குறிப்பிட்ட அணியினருக்கு மட்டுமே அங்கே அனுமதியிருந்தது.

விமானத்திலிருந்து வீசப்படும் சில குண்டுகள் வெடிக்காமல் விடுவதுண்டு. பெரும்பாலும் 250 கிலோகிராம் நிறைகொண்ட குண்டுகளே அப்போது சிறிலங்கா வான்படையின் பயன்பாட்டிலிருந்தன. வெடிக்காத குண்டுகளைச் செயலிழக்கச் செய்து இயக்கம் பயன்படுத்துவதுண்டு. ஒரு குண்டை வெட்டியெடுத்தால், சும்மா இல்லை சுளையாக 90 கிலோ கிராம் உயர்சக்தி வெடிமருந்து கிடைக்கும். பின்னாட்களில், குண்டை செயலிழக்கச் செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொண்டு வெடிமருந்தை அகற்றாமல் அந்த விமானக்குண்டு அப்படியே கடற்புலிகளால் ஒருதேவைக்குப் பயன்படுத்தப்பட்டது. குண்டைச் செயலிழக்கச் செய்வதில் அந்நேரத்தில் எமக்குப் படிப்பித்துக் கொண்டிருந்த வானம்பாடி மாஸ்டரும் அவ்வப்போது ஈடுபட்டிருந்தார்.



அப்படியான அழைப்பொன்று தனக்குக் கிடைத்தபோது, கற்கைநெறியில் இருந்த எம்மையும் அழைத்துச்சென்று சொல்லிக்கொடுப்பதென்று வானம்பாடி மாஸ்டர் தீர்மானித்திருந்தார். அப்படிக் கிடைத்த சந்தர்ப்பமொன்றில்தான் நாங்கள் முப்பது பேர்வரை வந்து வட்டுவாகல் கரையில் தேடிக்கொண்டிருக்கிறோம். இங்கு வீசப்பட்ட இரண்டு குண்டுகளை நாங்கள் தேடியெடுத்துச் செயலிழக்கச் செய்ய வேண்டும். நாங்கள் தேடத்தொடங்கி இரண்டு நிமிடங்களிலேயே ஒரு குண்டைக் கண்டுபிடித்துவிட்டோம். மற்றதைத் தேடத் தொடங்கினோம்.

இரண்டாவது குண்டை எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரைமணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை.
‘சரி, இப்ப கிடைச்ச குண்டைச் செயலிழக்கச் செய்திட்டு பிறகு மற்றதைத் தேடுவம்’ என்று வானம்பாடி மாஸ்டர் தீர்மானித்தார். அதன்படி அனைவரையும் கூட்டிவைத்து குண்டைப்பற்றிய அடிப்படைப் பொறியமைப்பையும், அதைச் செயலிழக்கச் செய்யும் முறையையும் விளங்கப்படுத்தினார். பின் தன்னோடு இன்னும் இருவரை மட்டும் வைத்துக்கொண்டு அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட்டு அக்குண்டைச் செயலிழக்கச் செய்தார். பத்து நிமிடத்துக்குள் வேலை முடிந்துவிட்டது. மீண்டும் இரண்டாவது குண்டைத் தேடத் தொடங்கினோம்.

பற்றைகளை முடித்து, எமது தேடுதற்பரப்பு இன்னும் அதிகரித்த்து. நந்திக்கடலின் கரைப்பகுதிகளையும் தேடினோம். குண்டு இருப்பதற்கான தடயங்களே இல்லை. மதிய வெயில் நன்றாகக் கொதித்துக் கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் குண்டைத் தேடுவோமென்று நினைக்கவில்லை. வரும்போதே குண்டுகளைக் காட்டுவார்கள், அரைமணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் குண்டுகளை இனங்காண அவ்விடத்திற் பணியாற்றும் போராளிகள் யாரும் உதவியாக வரவில்லை. ‘குண்டைக் காட்டாமல் இவங்கள் எங்க போய்த் துலைஞ்சாங்கள்’ என்று திட்டிக்கொண்டே தேடிக்கொண்டிருந்தோம். அவர்களின் முகாம் பக்கம் யாரும் போய்க் கூப்பிடத் துணியவில்லை. எங்களோடு நின்ற கடற்புலிப் போராளிகளைக் கேட்டோம்,
‘டேய் நீங்கள் ஒராளெண்டாலும் போய் இடம் தெரிஞ்ச ஆரையேன் கூட்டிக்கொண்டு வாங்கோவேன்ரா’
‘சேச்சே… நாங்கள் அங்க போகேலாது’ என்றுவிட்டு அவர்களும் எம்மோடு தேடினார்கள்.



கொஞ்ச நேரத்தில் ஐந்துபேர் கடற்கரைப் பக்கமிருந்து வந்தார்கள். எங்களை விசாரித்து அறிந்துகொண்டார்கள். அதற்குள் ஒருவன், தனக்கு அந்தக் குண்டிருக்கும் இடம் தெரியுமென்று சொல்லி முன்வந்தான். நந்திக்கடலின் கரையோரச் சதுப்புநிலத்தில்தான் இடங்காட்டினான். அது ஒருவருடத்தின் முன்பு வீசப்பட்ட குண்டு. துல்லியமாக அவனாலும் இடத்தைச் சொல்லமுடியவில்லை. அதில் நின்ற ஒரு தில்லைமரம், பாதையிலிருந்து குண்டு விழுந்த தூரம் என்பவற்றைக் கணக்கிட்டு குண்டுவிழுந்த இடத்தைப் பருமட்டாகச் சுட்டினான். அது இப்போது நீரால் மேவப்பட்டிருந்தது.

அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள். குடிக்க ஏதாவது அனுப்பிவிடுறம் என்று சொல்லிச் சென்றவர்களிடம், ‘வேண்டாம். இந்தக் குண்டை இப்ப எடுக்க ஏலாது. தண்ணி வத்தினபிறகுதான் வரவேணும். நாங்கள் இப்பவே வெளிக்கிடுறம்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட ஆயத்தமானோம்.

அப்போதுதான் நரேஸ் ஓடிவந்தான்.
“_ _ _ _ அண்ணை, வைகுந்தன் அண்ணா வந்திட்டுப் போறார். கதைச்சனியளோ? உங்களை மட்டுக்கட்டினவரோ? நீங்கள் அவரை மட்டுக்கட்டினியளோ?”

திகைத்துப் போனேன். உடனேயே என் மனக்கண்ணில் அந்த ஐவருள் வைகுந்தன் இனங்காணப்பட்டான். அது அவனேதான். அந்தச்சிரிப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக உதட்டை ஒருமாதிரிச் சுளித்துத் கதைப்பது, அது வைகுந்தனேதான்.
“எட கோதாரி… இவ்வளவு நேரமும் குண்டிருக்கிற இடம்பற்றி என்னோட கதைச்சுக் கொண்டிருந்திட்டுப் போனவன் என்ர வைகுந்தனோ?”

----------------------------------------------------------------

அவனின் இயற்பெயர் விமல். எனது ஊர்க்காரன்தான். ஐந்தாம் ஆண்டுவரை ஒன்றாகப் படித்தோம். என்னைவிட அவன் இரண்டுவயது மூத்தவன். ஆனால் என்னோடுதான் படித்துக்கொண்டிருந்தான். ஒருநாட்கூட பாடசாலையைத் தவறவிடமாட்டான். அவன் வருவதே விளையாடத்தான். அவனோடு இருக்கும் பொழுதுகள் மிகமிகச் சுவாரசியமாக இருக்கும். சிறுவயதிலேயே அவனுக்குத் தந்தையில்லை. மஞ்சு என்ற பெயரில் தமக்கையொருத்தி இருந்தாள். தாய், தமக்கை, இவன் என அவனது குடும்பம் சிறியது.

அவன் தனித்துவமானவனாக இருந்தான். இரண்டு விடயங்கள் அவனுக்குத் தெரியாது; அழுவது, கோபப்படுவது. இதுபற்றி இன்றும் நான் வியப்பாகச் சிந்திப்பதுண்டு. அவனை அழவைக்க அல்லது கோபப்படுத்த அப்போது நாங்கள் நிறைய முயற்சித்தோம். எதுவும் பலிக்கவில்லை. ஒருமுறை இரத்தம் வருமளவுக்கு அவனது பின்பக்கத்தில் பேனையால் ஒருவன் குத்தினான். வாயை உறிஞ்சி நோவை வெளிக்காட்டியதோடு சரி, குத்தியவனைச் செல்லமாக நுள்ளிவிட்டுச் சிரித்துக்கொண்டே போனான். வகுப்பறையில் அவன் அடிவாங்காத நாளே இருக்கமுடியாது. மொளியில் அடிமட்டத்தால் அடிவாங்கிவிட்டு யாராலும் அழாமல் இருக்க முடியாது. ஆனால் அவன் என்றுமே அழுததில்லை. ஒருகட்டத்தில் நாமே சலித்துப்போய் அவனை அழவைக்கும் / கோபப்பட வைக்கும் விளையாட்டுக்களை விட்டுவிட்டோம்.

Sea_Tigersஅந்தப்பாடசாலை வளவில் விளாத்திமரங்கள், மாமரங்கள், மகிழமரம் என்பன இருந்தன. வருடத்தில் முழுநாளுமே மாங்காயோ விளாங்காயோ காய்த்திருக்கும். விமல் பாடசாலை வரும்போது கொப்பி, புத்தகங்கள் கொண்டுவருவானோ இல்லையோ சம்பல் போட ஏதுவாக எல்லாச் சரக்கும் கொண்டுவருவான். அனேகமான நாட்களில் நாங்கள் மாங்காய்ச் சம்பலோ விளாங்காய்ச் சம்பலோ சாப்பிட்டிருப்போம். திருவுபலகை அலகொன்றைக்கூட பாடசாலையில் நிரந்தரமாக ஒளித்துவைத்திருந்தான் விமல். மரமேறத் தெரியாத எங்களுக்கு அவன்தான் எல்லாமே.

அந்தப் பள்ளியில் ஐந்தாம் ஆண்டு வரைதான் வகுப்புகள் இருந்தன. அதன்பிறகு பாடசாலை மாறவேண்டும். நான் இரண்டு கிராமங்கள் தள்ளியிருந்த ஒரு கல்லூரியில் இணைந்தேன். விமல் என் கிராமத்துப் பாடசாலையொன்றிலேயே கல்வியைத் தொடர்ந்தான். சில மாதங்களிலேயே எமது சொந்த ஊர் இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளானது. எல்லோரும் இடம்பெயர வேண்டியேற்பட்டது. அத்தோடு விமலுக்கும் எனக்குமான தொடர்பு இல்லாமற் போய்விட்டது.

பின்னொரு நாள் கேள்விப்பட்டேன், விமல் இயக்கத்துக்குப் போய்விட்டான் என. அதன்பின் அவனது தமக்கையிடமிருந்து அவ்வப்போது அவனைப்பற்றிக் கேட்டறிவேன். முதலில் படைத்துறைப்பள்ளியில் இணைக்கப்பட்டிருந்தான், பிறகு கடற்புலிகள் பிரிவில் இருப்பதாக அறிந்திருந்தேன். அவனது பெயர் வைகுந்தன் என்பதையும் அறிந்திருந்தேன். எனது போராட்ட வாழ்க்கையும் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு தைமாதம், குடாரப்புப் பகுதியில் ஒரு கடமையாக நின்றிருந்தவேளை, எனது ஊர்க்காரப் போராளியொருவரைச் சந்திக்க நேர்ந்தது. 1995 இன் நடுப்பகுதியில் கடத்தப்பட்டிருந்த ஐரிஷ்மோனா கப்பல் அப்போது குடாரப்புக் கடற்கரையில்தான் அலையடித்துச் சேதமாகப்பட்ட நிலையில் கிடந்தது. அதைப் பார்க்கப் போனபோதுதான் இச்சந்திப்பு. வைகுந்தன் பக்கத்தில்தான் எங்கோ நிற்பதாக அவர் சொன்னார். அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்தது. அப்போது முயன்றும் என்னால் முடியவில்லை.

அவனது வித்துடலைக்கூட நான் பார்க்கவில்லை. எனக்குத் தகவலனுப்ப கடற்புலிப் போராளிகள் சிலர் எடுத்த முயற்சியும் நான் நின்ற இடம் தெரியாததால் கைகூடவில்லை. தெரிந்திருந்தாலும் வரக்கூடிய நிலைமையில் நானிருக்கவில்லை. ஊரிலிருந்து இடம்பெயர்ந்தபின் இன்னாரென்று தெரியாமலேயே ஒருமுறை மட்டும் அவனோடு பேசியிருக்கிறேன். அது, கிபிர் குண்டைத் தேடிய அந்த நாளில்தான்.

யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கு வந்தபின்னும் அவனைச் சந்திக்கவில்லை. குறிப்பிட்ட கற்கைநெறியில் இருந்தபோது அங்கே படிப்பதற்கென வந்திருந்த கடற்புலிப் போராளிகளுள் ஒருவன்தான் நரேஸ். இடையிடையே தனது முகாமுக்குச் சென்றுவருவான். அப்படிச் சென்றுவந்த ஒருநாளில்தான் வைகுந்தன் என்னை விசாரித்ததாகச் சொன்னான். வியந்துபோனேன். எமது படையணியிலிருந்து கடற்புலிக்குச் சென்றவர்களிடம் என்னைக்குறித்து விசாரித்து, இப்போது நான் நரேசோடு படித்துக்கொண்டிருப்பதை அறிந்து கொண்டிருந்தான் வைகுந்தன்.

அவனைச் சந்திக்க வேண்டுமென்ற எனது அவாவையும் நரேசிடம் சொன்னேன். அப்போது வைகுந்தன் கடற்புலியின் ‘சாள்ஸ்’ அணியில் இருந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். சந்திப்பது இலகுவான காரியமன்று. ஆனாலும் நரேஸ் எங்களிடையே தூதுவனாக இருந்தான். ‘விசாரித்ததாகச் சொல்லவும்’ என்பதை என்னிடமிருந்து வைகுந்தனுக்கும் வைகுந்தனிடமிருந்து எனக்கும் காவிக்கொண்டு திரிந்தான் நரேஸ்.

-----------------------------------------------------------------------

அதே வைகுந்தன்தான் கொஞ்சநேரத்துக்கு முன்பு என்னோடு உரையாடிவிட்டுச் சென்றவன். நானும் அவனும் யார்யாரெனத் தெரியாமலே குண்டிருக்கும் இடம்பற்றி ஆராய்ந்திருக்கிறோம். இப்போதே எப்படியாவது அவனைச் சந்தித்து விடுவதென்று நான் தீர்மானித்தேன். கால்மணி நேரம் பொறுக்கும்படி வானம்பாடி மாஸ்டரிடம் சொல்லியாயிற்று. தான் அவர்களின் தளப்பக்கம் போய் நுழைவாயிற் காவலரணில் நிற்பவரிடம் சொல்லி வைகுந்தனைக் கூட்டி வருகிறேன் என்று நரேஸ் சென்றான். என்னால் இருக்க முடியவில்லை. அங்கெல்லாம் போவது எவ்வளவு பெரிய சிக்கலில் கொண்டுபோய் விடுமென்பது எனக்கு நன்கு தெரியும். ஆனாலும் அவன் தடுக்கத் தடுக்க நானும் நரேசுடன் போனேன்.

காவலரணுக்கு முன்னமே இரண்டுபேர் வந்து வழிமறித்தார்கள். நல்லவேளை, அதிலொருவன் எங்களோடிருந்து கடற்புலிக்குப் போனவன். ‘வைகுந்தன் ஆக்களின்ர வண்டி இப்பதான் வெளிக்கிட்டது. இண்டைக்கு ஆளைப் பார்க்க எலாது’ என்று சொன்னான்.

தோல்வியோடு திரும்பினேன்.

veeravanakkamஅதன்பின், அன்பரசனின் வெடிவிபத்து, வானம்பாடி மாஸ்டரின் வெடிவிபத்து எல்லாம் நடந்து எமது படிப்பும் முடிந்தது. அதன்பிறகு குறிப்பிட்ட காலம் நீட்டி நிமிர்ந்து இருக்க முடியாதபடி வேலைகள். அன்பரசன் வீரச்சாவடைந்த வெடிவிபத்தின்போது காயமடைந்த நரேஸ் அதன்பின் படிக்க வரவில்லை. ஆனாலும் அவனோடு எனது தொடர்பு நீடித்தது. சில மாதங்களின் பின்னர் அங்கிங்கு என்று திரிந்து கடமையாற்ற வேண்டி வந்ததாலும் ஓரளவு ஓய்வு நேரம் கிடைத்ததாலும் வைகுந்தனைச் சந்திக்கும் ஆசையை நிறைவேற்ற எண்ணினேன். இருந்த கடற்புலித் தொடர்புகளுக்குள்ளால் முயற்சித்தபோது வைகுந்தன் சந்திக்க முடியாத நிலையிலிருந்தான். வைகுந்தனால் முடிந்தபோது அவன் என்னைச் சந்திக்க முயற்சித்துத் தோல்வியடைந்தான், ஏனென்றால் நான் அப்போது சந்திக்க முடியாத நிலையிலிருந்தேன். இப்படி மாறிமாறி நடந்தாலும் நரேஸ் எங்களில் ஒருவரைச் சந்திக்கும்போது அதே ‘விசாரித்ததாகச் சொல்லவும்’ என்ற விசாரிப்பைப் பரிமாறிக்கொண்டிருந்தான்

ஒருநாள், வழமையான வழிமுறைகளின்றி நேரடியாக நானிருந்த தளத்துக்குத் தொடர்பெடுத்து வைகுந்தன் காயம் என்ற தகவலை எனக்குத் தெரிவிக்கும்படி சொன்னான் நரேஸ். இப்படிச் சொன்னபடியால் ஏதாவது கடுமையான காயமாகத்தான் இருக்குமென்று நான் முடிவெடுத்தேன். அப்போது நான் வெளிச்சந்திப்புக்களைச் செய்ய முடியாத நிலையிலிருந்தேன். கொஞ்ச நாட்களில் நரேசிடமிருந்து தகவல் வந்தது, வைகுந்தனுக்கு இடுப்புக்குக் கீழே உணர்ச்சியில்லை என்று.

சிலநாட்களின் பின்னர் முல்லைத்தீவுப் பக்கம் போனபோது கடற்புலிப் போராளிகளைச் சந்தித்து வைகுந்தன் இருக்கும் மருத்துவமனையைத் தெரிந்துகொண்டேன். எனக்கான நேரமும் வசதியும் கிடைத்தபோதும்கூட நான் ஏனோ அவசரப்படவில்லை. ஒரு முழுநாளை அவனோடு ஒதுக்க வேண்டுமென்று யோசித்திருந்தேன். இடுப்புக் கீழே உணர்ச்சியில்லை என்பதை உயிராபத்தான ஒரு விடயமாக நான் கருதியிருக்கவில்லை. ‘வாறகிழமை ஒருநாள் ஒதுக்கிப் போகவேண்டும்’ என்று ஒவ்வொரு கிழமையும் தள்ளிக்கொண்டே போனது.

ஆனால் வைகுந்தனின் உயிர் எனக்காகக் காத்திருக்கவில்லை. ஒரு கடமை காரணமாக பத்துநாட்கள் ஓரிடம் போய் நின்றுவந்த பின்னால் புதுக்குடியிருப்பில் வைத்து ஊர்க்காரர் ஒருவர்தான் சொன்னார் வைகுந்தன் வீரச்சாவென்பதை. வழமையாக புலிகளின் குரல் செய்திகளையும் அறிவித்தல்களையும் கேட்டுவிடும் நான் அந்தப்பத்து நாட்களும் வானொலிகூடக் கேட்கவில்லை.

அவனது வித்துடலைக்கூட நான் பார்க்கவில்லை. எனக்குத் தகவலனுப்ப கடற்புலிப் போராளிகள் சிலர் எடுத்த முயற்சியும் நான் நின்ற இடம் தெரியாததால் கைகூடவில்லை. தெரிந்திருந்தாலும் வரக்கூடிய நிலைமையில் நானிருக்கவில்லை. ஊரிலிருந்து இடம்பெயர்ந்தபின் இன்னாரென்று தெரியாமலேயே ஒருமுறை மட்டும் அவனோடு பேசியிருக்கிறேன். அது, கிபிர் குண்டைத் தேடிய அந்த நாளில்தான்.

நான் அவனைச் சந்திக்கத் தேடித்திரிந்த காலங்களில் ஒரு திட்டத்தை யோசித்து வைத்திருந்தேன். பளார் என்று கன்னத்தில் அறைந்து, அவன் விமலாக இருந்ததுபோல்தான் இப்போதும் கோபமோ அழுகையோ வராத வைகுந்தனாக இருக்கிறானா என்று சோதிப்பதே அது.

*  கடலில் நடந்த சண்டையொன்றில் கப்டன் நரேசும் வீரச்சாவடைந்து விட்டான்.

Share This:

No Comment to " சுவடுகள் – 4. கடற்புலி மேஜர் வைகுந்தன் "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM