News Ticker

Menu

Browsing "Older Posts"

Browsing Category "வேங்கைச்செல்வன்"

ஆனந்தபுரம் விடிவெள்ளிகள்

Saturday, April 3, 2010 / No Comments
முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக - பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் - தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது.



அத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

வரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் - ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து - முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.

அந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.

தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.

விடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது.

விடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.

அதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.

தமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.

இத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்.




◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌




விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.

வவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் - 1997 ஆம் ஆண்டில் - தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன்.

புளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.

அதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.

சிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது.

அப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர்.

ஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது.



◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌




பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி.

தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார்.

தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது.

நவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார்.

வன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டார்.


                     ◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌
மட்டக்களப்பு புல்லுமலையை பிறப்பிடமாகக் கொண்ட கேணல் நாகேஸ் 1985-86 காலப் பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். ஆரம்பகாலத்தில் லெப்.கேணல் றீகன் அவர்களின் அணியில் தனது சமர்க்களப் பணியை ஆரம்பித்தார்.
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தன் உடலெங்கும் விழுப் புண் தாங்கி தமிழீழத்தின் களங்கள் யாவும் ஏன் அதற்கு அப்பாலும் தொடர்ந்து களமாடியவர் கேணல் நாகேஸ். உன்னத வீரனாக உயர்ந்த தளபதியாக வாழ்ந்த கேணல் நாகேஷ் அவர்களும் ஆனந்தபுரம் மண்ணில் வீரச்சாவடைந்தார்.

◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌



விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.

"ஐஞ்சிஞ்சி" என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது.

முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது.

இரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும்.

மரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும்.

ஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.




◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌




தமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின்  சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள்.

ஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள். இதன் வழித்தடத்தில் நடந்த கேணல் தமிழ்ச்செல்வி மற்றும் கேணல் அமுதா ஆகியோரின் தியாகங்களும் வியக்கவைப்பவை.

ஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.




◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌



ஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

ஆனாலும் தர்மத்தின் அடிப்படையில் பயணித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சியோடு புதிய பரிணாமத்தில் புதுவீச்சோடு பயணிக்க தோள்கொடுப்போம் என உறுதியெடுப்போம்.




சுவடுகள் 10 - பிரிகேடியர் கடாபி/ ஆதவன்

Tuesday, March 23, 2010 / No Comments
கடாபி அண்ணை. விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவர். விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு தளபதியுமே ஒவ்வொரு விடயத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவராகவே இருந்திருக்கிறார்கள். கடாபி அண்ணையைப் பொறுத்தவரையும் அப்படித்தான். குறிபார்த்துச்சுடுவதில் தனித்திறமை கொண்டிருந்த இந்தத் தளபதி பல படையணிகளை ஒருங்கிணைத்து தமிழீழ விடுதலைப் போரில் வழிநடத்தியதில் தனக்கான இடத்தைக் கொண்டிருந்தார் என்றே சொல்லவேண்டும்.



சாதாரண போராளியாக இயக்கத்தில் தனது பணிகளைத் தொடங்கிய இத்தளபதி, தனக்கான தகைமைகளை வளர்த்துக்கொண்டு ஓர் உயரிய இராணுவத் தளபதியாக எப்படி உருவானார்? அல்லது எப்படி உருவாக்கப்பட்டார்? தலைவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே அவரது போராட்டப் பணிகள் ஆரம்பகாலம் தொடக்கம் இருந்ததுவே அதற்கான காரணமாகவிருக்கக் கூடும்.

வாகனக் கண்ணாடியில் பார்த்தே வானில் பறக்கும் பறவைகளைக் குறிபார்த்துச்சுட்டுவிடும் திறமை அவருக்கு இருந்ததாக நான் நண்பர்கள் மூலம் அறிந்திருந்தேன். உண்மையோ பொய்யோ, ஆனால் நிச்சயம் அவர் அதற்கு முயற்சி செய்திருப்பார்.

'முன்னேறிப் பாய்தல்' என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கெதிராக புலிகள் நடத்திய 'புலிப்பாய்ச்சல்' நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமானத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் கூட்டுப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக கடாபி அண்ணை நியமிக்கப்பட்டார். 1995 ஆம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 2002 தொடக்கம் வரை - அதாவது விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடைகளுக்குமிடையில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டது வரை -  கடாபி என அழைக்கப்படும் ஆதவன் அண்ணை தான் இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார். உண்மையில் இம்ரான்-பாண்டியன் படையணியென்பது பல சிறப்பு அணிகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. கடாபி அண்ணா பல சிறப்பு அணிகளை அப்படையணியின் கீழ் உருவாக்கி விடுதலைப் பயணத்தில் பல்வேறு சாதனைகளை ஏற்படுத்தியிருந்தார்.

கரும்புலிகள் அணி, லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, மயூரன் பதுங்கிச்சுடும் அணி, செம்பியன் வேவு அணி, கேணல் சங்கர் ஆழ ஊடுருவித் தாக்கும் அணி, லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி, விடுதலைப் புலிகளின் கவசப் படையணி போன்ற சிறப்புப் படையணிகளையும் படையப்பயிற்சிக் கல்லூரிகள் போன்ற படைக்கட்டுமானங்களையும் தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்ப உருவாக்கி, வளர்த்து வழிநடத்தியதில் கடாபி அண்ணையின் தலைமைத்துவப் பண்பின் சிறப்புக்களைக் காணக்கூடியதாகவிருந்தது.

இப்பணிகளுக்கு மேலதிகமாக தலைவரின் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் நேரடியாகக் கண்காணித்துவந்த கடாபி அண்ணை இருபத்தி நான்கு மணிநேரமும் விடுதலைப் பணிக்காகவே ஓயாது இயங்கிக் கொண்டிருந்தார்.



ஒரு பயிற்சிப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு வேவுப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு தாக்குதல் பணியாகவிருந்தாலும் சரி, நேரம் எடுத்து திட்டமிடலுக்கே, கூடிய நேரத்தை ஒதுக்கி, ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றும் பாங்கு கடாபி அண்ணையின் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.

Gadaffi-00பயிற்சித்திட்டமிடல் பற்றிக் குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயிற்சிக்கு மூன்று மாதங்கள் என திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் எதிரியின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது இப்பயிற்சிக்காலத்தைக் குறுக்கவேண்டிவரும். அப்போதுகூட குறுகிய காலப் பயிற்சிதிட்டமிடல் ஒன்றை தயார் செய்துவிட்டே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாகவிருப்பார்.

அதேபோல தாக்குதல் நடவடிக்கை ஒன்றை பூர்த்தி செய்தாலும், அத்தாக்குதலின் வெற்றி தோல்வி என்பதைவிட அத்தாக்குதல் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துமாறே தாக்குதலணி பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். அத்தாக்குதல் வெற்றியடைந்ததற்கான காரணங்கள் அல்லது தோல்வியடைந்ததற்கான காரணங்கள், எதிர்காலத்தில் என்ன விடயங்கள் மேம்படுத்தப்படலாம் என்பன போன்ற விபரங்களை உள்ளடக்கியதாக அவ்ஆவணங்கள் தயாரிக்கப்படும்.

இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் பயிற்சி ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கேற்ற திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் பயிற்சிகளில் செய்யப்படும். இவ்வாறு இறுக்கமான காலகட்டங்களின்போதும் மரபு வழி இராணுவங்களுக்கு ஒப்பான திட்டமிடல்களையும் செயற்பாடுகளையும் பேணிவருவதில் கவனம் எடுத்துவந்தவர்தான் கடாபி அண்ணை.

பலாலி விமானத்தளம் மீதான தாக்குதல் நடவடிக்கை ஒன்றைப் பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டியிருந்தது. அந்தத் தாக்குதலில் பங்குகொண்டவர்களின் அறிக்கைகள், ஒலிப்பதிவு செய்யப்பட்ட தொலைத்தொடர்பு உரையாடல்கள் என்பவற்றை கொண்டு விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அறிக்கையின் ஒரு பகுதி இவ்வாறு இருந்தது. ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது”. அதனைத் திருத்தம் செய்த கடாபி அண்ணை சொன்னார். ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அது கவசவாகனத்தில் பட்டு அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது” என்று தெளிவாக எழுதப்படவேண்டும் என்று சொன்னார். இப்படியான துல்லியமான தரவுகள் இணைக்கப்படுவதே விசாரணைகள் முழுமைபெற உதவுமென்பது அவரின் இறுக்கமான நிலைப்பாடாகவிருந்தது.

மேற்குறிப்பிட்ட சம்பவம் ஒரு சிறிய விடயம்தான். ஆனால் அந்த சிறிய விடயத்திற்குள் புதைந்திருக்கும் ஆழமான இராணுவசார் முக்கியத்துவம் என்பது சாதாரண பொதுமகனுக்குப் புரியக்கூடியதன்று. ஆனால் அவற்றின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளமுடியும். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிறைவுசெய்வதில் கவனமாகவிருப்பார்.




பிரிகேடியர் கடாபி அவர்கள் சார்ல்ஸ் அன்ரனி படையணி பற்றி   
கடாபி அண்ணையைப் பொறுத்தவரையில் தாக்குதல்களோடு சம்பந்தப்பட்ட தாக்குதலணிகளை மட்டுமன்றி பயிற்சிகள், விசாரணைகள், புலனாய்வு போன்ற நிர்வாக ரீதியிலான அணிகளையும் நிர்வகிக்கவேண்டிய பொறுப்பிலேதான் இருந்தார். ஒரு சாதாரண மரபுவழி இராணுவத்தில் உள்ள போர்வீரர்களுக்கு சண்டைக்கான மனநிலையைப் பேணுவதற்கான அறிவூட்டல்கள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் போராளிகளைப் பொறுத்தவரையில் அதற்கான அவசியம் இல்லை. அதேவேளையில் நிர்வாக ரீதியிலான அணிகளிலுள்ள போராளிகள் குறிப்பிட்ட சில காலங்களுக்குப் பின்னர் தாங்களும் சண்டைக்குச் செல்லவேண்டும் எனக் கேட்டு கடிதம் அனுப்புவார்கள் அல்லது நேரில் சந்தித்துக் கேட்பார்கள்.


நிர்வாக வேலைத்திட்டங்களிலுள்ள போராளிகளை, குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் கருதி, அவர்களை உடனடியான இன்னொருவரைக் கொண்டு மாற்றீடு செய்வது என்பது கடினமாகவிருக்கும். அவர்களுக்கு பல்வேறு உதாரணங்களை எடுத்துகாட்டி, சண்டையைப் போலவே மற்றைய பணிகளும் முக்கியமானதென பொறுமையாக அறிவுறுத்தி, தொடர்ந்தும் அவர்களை அப்பணியின் முக்கியத்துவம் கருதி வேலையில் மீண்டும் அமர்த்திவிடுவார். இவ்வாறு வெவ்வேறு பணிகளிலுள்ள போராளிகளை, ஒரே படையணியின் கீழ் நிர்வகித்து தனது திறமையின் மூலம் வழிநடத்திவந்தார் என்றே சொல்லவேண்டும்.

இவரது தாக்குதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை சிறப்பு இராணுவ நடவடிக்கைகளிலேதான் இவர் நேரடியாக பங்குபற்றியிருப்பார் என்றே எண்ணுகின்றேன். குறிப்பாக 1995 ஆம் ஆண்டில் பலாலி விமானதளத்திற்கு அருகே இரண்டு அவ்ரோ விமானங்களை சுட்டுவீழ்த்தியிருந்தார். கடாபி அண்ணையின் குறிபார்த்துசுடும் திறமையை தலைவர் அவர்கள் ஏற்கனவே இனங்கண்டிருந்ததால், அதற்கான பணி, தலைவர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் அவ்விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய இராணுவ காலப்பகுதியில் தலைவரின் பாதுகாப்பு அணி வீரனாக இருந்த கடாபி அண்ணை, படிப்படியாக பல்வேறு கடமைகளை தலைவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செய்துவந்தார். தமிழீழ தாயகத்திலிருந்த இராணுவதளங்கள் மீதான பெரும்பாலான கரும்புலி நடவடிக்கைகள் அனைத்தும் இவரது வழிநடத்தலின் கீழேயே நடாத்தப்பட்டது. அத்துடன் ஆழ ஊடுருவி சென்று நடத்தும் பல தாக்குதல் நடவடிக்கைகளும், இவரது வழிகாட்டலில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல்வேறு விடுதலைப்பணிகளை முன்னெடுத்துவந்த பிரிகேடியர் கடாபி அவர்கள் ஈழப்போரின் நான்காம் கட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் மார்ச் மாதத்தின் இறுதிபகுதியில் பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை எடுக்கவேண்டிய ஆயத்தப்பணிகளில் மற்றைய தளபதிகளுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதத்தில் எதிரிகளின் இராணுவ வலு பல மறைமுக சக்திகளின் ஒத்துழைப்போடு அதிகரித்த நிலையில், பெருமளவிலான இறுதிக்கட்ட முறியடிப்புத் தாக்குதல் ஒன்றைச் செய்வதற்கு அணிகள் தயாராகவிருந்தன. ஆனால் இவ்வாறான படைநடவடிக்கைக்கான ஆயத்தப்படுத்தலை அறிந்துகொண்ட  எதிரிகள், விடுதலைப்புலிகள் தங்கியிருந்த ஆனந்தபுரம் பகுதி மீது, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இறுதிவரை உறுதியோடு போரிட்ட கடாபி அண்ணை ஆனந்தபுரக் களத்தில் படுகாயமடைந்தார். அவரைக் காப்பாற்றி வெளியே கொண்டுவருவதற்காக முயற்சிகள் நடந்தபோதும், களத்தின் இறுக்கமான நிலையை உணர்ந்து, அக்களத்திலேயே சயனைற் உட்கொண்டு, தன்னோடு இணைந்து நின்ற பிரிகேடியர் தீபன் அண்ணை பிரிகேடியர் விதுசா அக்கா பிரிகேடியர் துர்க்கா அக்கா, பிரிகேடியர் மணிவண்ணன் ஆகியோருடன், இன்னும் பல வீரர்களுடன் ஆனந்தபுரம் மண்ணில் வித்தாகிபோனார்.



சுவடுகள் -6. கேணல் சங்கர் அண்ணா

Wednesday, September 23, 2009 / No Comments
தமிழர்களின் வான்படை வரலாறு ஆனது கேணல் சங்கர் அவர்களின் பெயருடன் ஒட்டி இணைந்தது. விடுதலைப்புலிகள் விமானப் படையணி ஒன்றைத் தொடங்கியபோது அதன் தளபதியாக கேணல் சங்கர் நியமிக்கப்பட்டிருந்தார். கனடாவின் விமானப் பொறியியல் கல்லூரியில் தனது வான்படைக்கான கற்கைநெறியை நிறைவுசெய்த கேணல் சங்கர் அவர்கள் பின்னாளில் உலகமே வியந்த வான்படையணியை உருவாக்குவதில் அத்திவாரமாக இருந்தார்.


ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவு ஆரம்பிக்கப்படமுன்னர் கடல்புறா என்ற பெயரில் விடுதலைப்புலிகளின் கடல்சார் நடவடிக்கைகள் இடம்பெற்றகாலத்தில் கடல்புறாவின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் அவர் ஈடுபட்டிருந்தார். பின்னர் இந்திய இராணுவத்துடன் போர் ஏற்பட்டபோது தலைவரோடு இருந்து காட்டுப்போர்முறையின் நுணுக்கங்களை தானும் கற்று போராளிககளுக்கும் கற்பித்து தலைவர் பிரபாகரன் அவர்களுடனே வாழ்ந்துவந்தவர்.

அமைதியான மென்மையாக சிரிக்கும் சங்கர் அண்ணாவையே எல்லோருக்கும் தெரியும். ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமையினால் வழங்கப்படும் எந்தப்பணியையும் மிகவும் கவனம் எடுத்து சிறப்பாக செய்து முடிக்கும் அவரது ஆளுமையையும் அனைத்துப் போராளிகளுடனும் உடனேயே நல்ல உறவை வளர்த்துக்கொள்ளக்கூடிய தோழமையையும் கண்டுகொள்ளக்கூடிய சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைத்திருக்காது.

கேணல் சங்கர் அண்ணாவுடன் 2001 ஆம் ஆண்டின் தொடக்கப் பகுதியில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த இராணுவ தாக்குதல்களாக இருந்தாலும் சரி முன்னேறிவரும் இராணுவத்தினரை மறித்துத் தாக்கும் பாதுகாப்பு படைநடவடிக்கைகளாக இருந்தாலும் சரி அவற்றின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் அப்படை நடவடிக்கையில் ஏற்பட்ட வெற்றி தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டறிய இராணுவப் பகுப்பாய்வு நடைபெறுவது வழக்கம். ஓயாத அலைகள் – 03 நடவடிக்கை மூலம் தமிழீழத் தாயகத்தின் பெரும்பகுதிகள் விடுவிக்கப்பட்டபோது பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லவேண்டும் என தலைவர் திட்டமிட்டிருந்தார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு நவீன போர்ப்பயிற்சிகள் அத்தியாவசியம் எனக்கருதி சிறப்பு இராணுவப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளவென வெளிநாட்டிலிருந்து பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

பயிற்சியாளர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை தமிழில் மொழிமாற்றி விளங்கப்படுத்துவார் சங்கர் அண்ணா. இயக்கச் செயற்பாடுகளின் இரகசியம் கருதியும் நடைபெற்றுக்கொண்டிருந்த பயிற்சிமுகாமின் முக்கியத்துவம் கருதியுமே தலைவர் அவர்களால் சங்கர் அண்ணாவுக்கு மேலதிகமாக அப்பணி வழங்கப்பட்டிருந்தது.

வான்படையின் தளபதியாக வெளியே உலாவந்த சங்கர் அண்ணா பயிற்சிமுகாமில் எங்களுடனே இருந்தார். "இயக்கத்தால் சொல்லப்படும் எந்த வேலையென்றாலும் சிறப்பாகச் செய்துமுடிக்கவேண்டும்" என்பதேஅவர் எப்போதும் சொல்லும் வார்த்தைகள். எதையுமே தத்துவங்களூடாக விளங்கப்படுத்துவதைக் காட்டிலும் நேரிலே அறிந்துகொள்ளும்போது உள்ளத்தில் ஆழமாக பதிந்துகொள்ளும். அதனையே சங்கர் அண்ணாவும் செய்து காட்டினார்.

காடு சார்ந்த பயிற்சிகள் நடாத்துவதற்கான இடங்களைப் பார்ப்பதற்காக 03 கிலோமீற்றர் அளவு தூரம் நடந்து ஒரு குளத்தைச் சென்றடையவேண்டும். நாங்கள் மூன்று பேர் பயிற்சியாளர்களுடன்  ஜி.பி.எஸ்.ஸின் துணையுடன் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் செல்வதற்கு முன்பாகவே சங்கர் அண்ணா திசைகாட்டி(compass) யின் உதவியுடன் அங்கே சென்றடைந்துவிட்டார். நாங்கள் சென்றபோது சிரித்துக்கொண்டே வரவேற்றது பயிற்சியாளர்களுக்கே ஆச்சரியத்தைக் கொடுத்தது.

முன்னர் இந்திய இராணுவத்தினுடனான போரின்போது தாங்கள் எவ்வாறு மணலாற்று காடுகளுக்குள் செயற்பட்டோம் என்று கூறுவார். அந்தக்காலத்தில் திசைகாட்டியின் உதவியுடன் மட்டுமே காடுகளுக்குள் இடங்களைச் சென்றடையவேண்டும். கொஞ்சம் இடம்மாறி போய்விட்டாலும் இந்திய இராணுவத்தினருடன் முட்டுப்பட வேண்டிவரும். அவ்வாறு இந்திய இராணுவத்தினரோடு ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பெண்போராளியை தாங்கள் எவ்வாறு மீட்டுவந்தோம் எனவும் சொல்லுவார். அக்குறிப்பிட்ட மீட்பு நடவடிக்கைக்கு சங்கர் அண்ணாவின் தனித்திறமைகளே கைகொடுத்திருந்தது என்றே சொல்லவேண்டும். சங்கர் அண்ணாவின் இவ்விசேட திறமைகளைப்பற்றி தலைவர் அவர்கள் வெளிப்படையாக பாராட்டியதுடன் மட்டுமன்றி அதனை ஆவணப்படுத்தியும் இருக்கிறார்.

விடுதலைப்போராட்ட பயணத்தில் போராட்ட அனுபவங்கள் என்பவை முக்கியமானவை. ஒவ்வொரு களத்திலும் ஏற்படும் தோல்வியும் வெற்றியும் அடுத்த களத்திற்கான செயற்பாடுகளைச் செம்மைப்படுத்தும். போராட்டகளத்தில் ஏற்படும் அனுபவங்கள் புதிய போர்வீரர்களுக்குச் சொல்லப்படவேண்டும். தனது போரியல் அனுபவங்கள் மற்றவர்களுக்குப் பாடமாக அமையவேண்டும் என்பதில் சங்கர் அண்ணா எப்போதும் கவனமாக இருப்பார்.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது தலைவருடன் இணைந்து பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியிருந்தார். தியாகி திலீபனின் நினைவுதினத்தில் தலைவர் உண்ணாநோன்பு இருப்பது வழமை. அன்றைய தினம் தலைவரைச் சந்திப்பதற்காகச் சென்றுகொண்டிருந்த சங்கர் அண்ணாவின் வாகனம் சிறிலங்காப் படைகளின் ஆழஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளானது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது இன்னொரு முனையில் எமது தளபதிகளையும் தலைவரையும் கொல்வதற்கான சதித்திட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் இறங்கியிருந்தன.

தியாகி திலீபன் அவர்களின் நினைவுதினமான அன்று சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் மூத்ததளபதி கேணல் சங்கர் அண்ணா அவர்களை சிறிலங்கா அரசபடைகள் தனது நாசகாரத் திட்டத்தின் மூலம் கொன்றுவிட்டது. சங்கர் அண்ணா – 1971 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் ஐந்தாம் திகதி - அவரது நண்பர்களில் ஒருவரான கலாநிதி சிறிதரன் என்பவரின் நாட்குறிப்பேட்டில் குறித்த குறிப்பை இங்கு மீளவும் பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும். அது இதுதான். "The most important thing in the Olympic games is not to win - but to take part…the essential thing in life is not to regret, But to have lived and fought well."

தியாகதீபம் திலீபன்

Tuesday, September 15, 2009 / No Comments
தியாகி தீலீபன் அவர்களின் நீரின்றிய உண்ணாவிரதப் போராட்டம் தமிழீழ விடுதலைப் போரின் ஆன்ம உறுதியை நிலைநாட்டிய நிகழ்வு. ஆயுதம் தரித்துப் போராடிய வீரன் அகிம்சை வழியிலும் தன்னால் தாயக விடுதலைக்காக உறுதியுடன் போராட முடியும் என உலகிற்கு எடுத்துக்காட்டி செப்ரம்பர் மாதம் 15 ஆம் நாள் 1987 ஆம் ஆண்டு தனது நீரின்றிய உண்ணாநோன்பைத் தொடங்கி வைத்தான். பன்னிரண்டு நாட்கள் வெறும் வயிற்றுடன் நீதிகேட்டுப் போராடிய தியாகதீபம் திலீபன் இந்திய தேசத்தைத் தலைகுனியவைத்து தன்னுடலை உருக்கி தன்னுயிரை அழித்துக்கொண்டான்.



1987 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் மக்களின் சார்பாக அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அப்போதைய சிறிலங்கா அரச தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்தியப் படைகள் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டனர். ஈழத்தமிழர்களின் தேசத்தில் அமைதியை ஏற்படுத்தவந்த படைகள் சிறிலங்காவில் நடந்துகொண்டிருந்த நில ஆக்கிரமிப்பைக் கண்மூடிப் பார்த்துக் கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் அவசர ஒன்றுகூடலைச் செய்தது.

இந்திய தேசத்திடம் நீதி கேட்டு அமைதிவழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பது எனத் தீர்மானிக்கிறார்கள். அப்போது யாழ்மாவட்டத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் அவர்கள் தானே அந்தப்பயணத்தைத் தொடக்கிவைப்பதாகக் கூறுகிறார்.

யாழ்மாவட்டத்தில் உள்ள ஊரெழு என்ற கிராமத்தில் 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பிறந்த திலீபன் தனது 23 ஆவது வயதில் காந்திய வழியில் தியாக பயணத்தைத் தொடங்குகிறார். ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கிய திலீபன் செப்ரம்பர் மாதம் 26 ஆம் நாள் காலை 10.48 மணிக்கு உயிர் துறக்கிறார்.


தியாகி திலீபன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளும் மிகவும் அடிப்படையானவை. அவையாவன:

1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5).தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.



அப்போதைய இந்திய அரசு நினைத்திருந்தால் 24 மணித்தியாலத்திற்குள் குறிப்பிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டிருக்கமுடியும். அவர்கள் தாங்கள் சொல்வதையே ஈழத்தமிழர்கள் கேட்கவேண்டும் என்ற மனோபாவத்துடன் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து தியாகி திலீபனின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தனர். உண்ணாவிரதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது யாழ்நகருக்கு வருகைதந்த ஜேஎன் டிக்சிற் குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்தார்.

முன்னரும் இதுபோன்ற வாக்குறுதிகளைக் கொடுத்தே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை ராஜீவ் காந்தி சந்திக்கவிரும்புவதாகச் சொல்லி இந்தியாவுக்குக் கூட்டிச்சென்றிருந்தனர். ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில்தான் அந்தச்சந்திப்பு நடைபெறும் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் அங்கே சென்ற பிரபாகரன் அவர்களை அசோகா ஹோட்டலின் அறையொன்றில் தங்கவைத்து தங்களால் வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் மீண்டும் தமிழீழம் செல்ல முடியாது என்று மிரட்டியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான கசப்பான அனுபவங்களால் குறிப்பிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதாக உண்ணாவிரத மேடைக்கு வந்து அங்குள்ள மக்களின் சாட்சியாக வாக்குறுதியளிக்குமாறு பிரபாகரன் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜேஎன் டிக்சிற் உடன்படமறுத்தார்; ஏனென்றால் ஜேஎன் டிக்சிற் அப்படிப்பட்ட மனிதர். இந்திய வல்லாதிக்கத்தின் துாதுவராகவே அவர் இருக்கவிரும்பினார். ஈழத்தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளையோ அல்லது ஒரு சிறுபான்மை இனத்திற்கு எதிராக நிகழ்ந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகளையோ தீர்த்துவைக்க விரும்பவில்லை.

தியாகி திலீபன் அவர்களின் தியாக மரணத்தைத் தொடர்ந்தும் இந்திய அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. பிரபாகரன் அவர்களைக் கலந்துரையாட இந்தியப் படைமுகாமுக்கு வருமாறு கூறி அங்கேயே சுட்டுக்கொல்லும்படி இந்திய துாதர் ஜேஎன் டிக்சிற் ஊடாக இந்தியத் தளபதிக்குக் கட்டளை வழங்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொள்வதற்கு அப்போதைய இந்தியத் தளபதி மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு உறுப்பினர்களின் சாவிற்கும் இந்தியா மறைமுகக் காரணமானது.

இந்தத் தொடர்நிகழ்ச்சிகளின் காரணமாக ஏற்பட்ட இந்திய-புலிகள் யுத்தமும் அந்த யுத்தத்தில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளும் அதன் நீட்சியாக ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதும் அதற்குப் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் வரலாற்றின் கசப்பான பக்கங்கள். இந்திய வல்லரசு மனப்பான்மை ஒரு சிறுபான்மைத் தேசிய இனத்தின் அபிலாசைகளை எரித்து அழித்துவிட்டமையை இந்த நிகழ்வுகளின் ஊடாக தெளிவாக அறிந்துகொள்ளமுடியும்.

இந்திய தேசத்தின் ஒரு பகுதியில் ஈழத்தமிழ் சொந்தங்களின் உடன்பிறப்புகளான தமிழகத்துத் தமிழர்கள் வாழும்வரை இந்திய வல்லரசு என்பது ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாகவே இருந்திருக்கவேண்டும். அவ்வாறானதொரு உறவுநிலையே இந்தியாவின் கேந்திர நலன்களுக்கும் பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். ஆனால் தமிழர்களுக்குள் காலங்காலமாகவே உருவாகிக் கொண்டிருக்கும் எட்டப்பர்கள் போலவே இந்திய தேசத்தில் உள்ள அதன் வெளியுறவு இராசதந்திர ஆலோசகர்களும் தமது தனிப்பட்ட மற்றும் சமூக பிரதேசவாத நிலைப்பாடுகளால் தமிழர்களுக்குக் கௌரவமான தீர்வு வருவதையோ அல்லது தனிநாடு உருவாவதையோ தடுத்துவருகிறார்கள்.

காந்திய வழியில் போராடிய திலீபன் அவர்களின் போராட்டம் ஈழத்தமிழ் மக்களில் மூட்டிய விடுதலை நெருப்பு இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. தாயக விடுதலை நோக்கிய திலீபனின் பயணம் இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் உலக சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறும். தாயகவிடுதலைக்கான ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் தியாகி திலீபன் போன்ற தியாக மறவர்களின் அர்ப்பணிப்புகள் உருவாக்கிய விடுதலை வேட்கை என்றுமே வீணாகிவிடாது. தியாகி திலீபன் விரும்பிய மக்கள் எழுச்சியே விடுதலைக்கான பாதைகளைத் திறக்கும். அப்போது நிச்சயம் இந்தியாவின் மனச்சாட்சியும் கண்ணைத் திறக்கும்.