News Ticker

Menu

களங்கள் - 4. ஓயாத அலைகள் மூன்று

 28/10/99


அன்று (28/10/99) அதிகாலை மூன்று மணியளவில் கரும்புலிகளின் ஐந்து அணிகள் பயிற்சி நகர்வைத் தொடங்கின. அவர்களுக்கான ஆள்கூறுகள் கொடுக்கப்பட்டிருந்தன. இலக்கு நோக்கிய நகர்வை மக்களின் கண்களில் தட்டுப்படாமல் முடிக்க வேண்டுமென்பதும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.


காலை ஆறு மணியளவில் எனக்கொரு பணி தரப்பட்டு குமுழமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கே ராஜு அண்ணையோடு ஈழவனும் இன்னும் சிலரும் வந்துசேர்ந்தார்கள். பின் அங்கிருந்து ஆண்டாங்குளம் செல்லும் பாதையில் சிறிது தூரம் சென்று வாகனங்களை விட்டுவிட்டுக் காட்டுக்குள் இறங்கினோம். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் அலைந்து திரிந்து இறுதியில் ஒரு வெட்டைப் பகுதியைத் தேர்ந்தெடுத்தோம். அது வயற்பகுதியோடு சேர்ந்த ஒரு வெட்டை. சற்று இடைவெளிகள் விட்டு ஐந்து நிலையங்கள் எனக்குக் குறித்துத் தரப்பட்டன.


இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும்.


குறித்த அந்த ஐந்து இடங்களிலும் அடையாளத்துக்கு வெவ்வேறு நிறத் துணிகள் கட்டப்பட வேண்டுமென்பதுதான் எனக்குத் தரப்பட்ட பணி. தூரத்திலிருந்து பார்க்கக் கூடியதாக அவை உயர்த்திக் கட்டப்பட வேண்டும். இடங்களைக் குறித்துத் தந்த பின்னர் ராஜு அண்ணன் மற்றவர்களோடு புறப்பட்டுவிட்டார். எனக்கு உதவியாக மூன்று பேர் தரப்பட்டிருந்தார்கள்.  மாலை மூன்று மணிக்குள் ஐந்து இலக்குகளின் வேலையும் முடிய வேண்டும். அத்தோடு பக்கத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மக்களையும் அப்புறப்படுத்தி அப்பகுதியில் யாரும் இல்லையென்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


நேரம் மட்டுமட்டாக இருந்தது. இருந்தது ஒரு கத்தி மட்டும்தான். தனியாக நின்ற ஒரு பனையில் அரைவாசியில் ஒரு நிறத்துணியைக் கட்டியும், இன்னோரிடத்தில் பட்டுப்போய் நின்ற முதிரையில் ஏறி ஒரு நிறத்துணியைக் கட்டியும் இரண்டு இலக்குகளை நிறுவினோம். ஏனைய மூன்றும் எப்படியோ வெட்டையில்தான் வருகின்றன. உயரத் தடிகள் ஏதாவது நட்டுத்தான் துணி கட்ட வேண்டும்.


சற்றுத் தள்ளி நீர் தேங்கியிருந்த பகுதியில் மெல்லிய நெடிய மரங்கள் சில நின்றன. தேவையான அளவு உயரமாகவும் மெல்லியதாகவும் இருந்ததால் அவற்றை வெட்டிப் பயன்படுத்தலாமென முடிவெடுத்தோம். தடியை நடுவதற்குரிய கிடங்கைக் கிண்ட எம்மிடம் அலவாங்கு இருக்கவில்லை. பக்கத்திலே மக்கள் குடியிருப்புக்களும் இல்லை. சற்றுத்தள்ளி வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் விசாரித்து அலவாங்கு வாங்கிவரும்படி மற்றவர்களை அனுப்பிவிட்டு நான் கத்தியோடு மரங்களை நோக்கிப் போனேன். அவை என்னவகை மரங்களென்று அன்றுவரை நான் அறிந்திருக்கவில்லை. மூன்று முழுமையான வருடங்களை காட்டில்தான் கழித்திருந்தாலும் இந்தவகை மரத்தை நான் பார்த்ததில்லை. ஒரு மரத்தை வெட்டி இழுத்து வந்தேன். இலகுவாக வெட்டுப்பட்டது எமக்குச் சுலபமாகப் போய்விட்டது.


அலவாங்கு கிடைக்காமல் மற்றவர்கள் திரும்பியிருந்தார்கள். மூன்று மரங்களை முக்காலியாகக் கட்டியென்றாலும் உயர்த்த முடிவெடுத்தோம். நான் மரங்களை வெட்ட மற்றவர்கள் இழுத்துவந்து கட்டி நிமித்த வேண்டும். மளமளவென்று மரங்களை வெட்டினேன். அப்போது ஒரு வித்தியாசத்தை என்னால் உணர முடிந்தது. மூக்கு எரிந்தது. பிறகு கண்களும் எரியத் தொடங்கின. மதிய நேரத்து வெயில் நன்றாகக் கொளுத்திக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் சுவாசிக்கக் கடினமாயிருந்தது. வெட்டப்படும் மரத்திலிருந்து வந்த பால் பட்டதால் தோல் கடிப்பது போலிருந்தது. தேவையானளவு மரங்களை வெட்டியாயிற்று.


மரங்களை உயர்த்திக் கட்ட முற்பட்டபோது என்னால் எதுவும் முடியவில்லை. கண் இமைகளைத் திறக்க முடியாதளவுக்கு எரிவு அதிகரித்திருந்தது. ஏதோ பெரிய பிரச்சினை என்பது மட்டும் தெளிவாகியது. சற்றுத்தள்ளி எல்லைப்படையினர் காவலுக்கிருந்த கொட்டிலுக்கு செளமியன் என்னை அழைத்துச் சென்றான். எனது கண்கள் குருடாகிவிட்டன என்று நான் நினைக்குமளவுக்குத்தான் நிலைமை இருந்தது. அங்கே போனதும்தான் எனக்கு விபரீதம் விளங்கியது.


தம்பி, விசயம் தெரியாமல் தில்லை மரத்தைப் போய் வெட்டியிருக்கிறியள்’.


அப்போதுதான் தில்லை மரத்தைப் பற்றியும் அதன் தாக்கத்தைப் பற்றியும் விளங்கிக் கொண்டேன்.


முந்தி இந்தியன் ஆமியும் உதுக்குள்ள வந்து விசயம் தெரியாமல் தில்லை மரங்களை வெட்டி ஏழெட்டுப்பேர் மயக்கம் போட்டே விழுந்திட்டாங்கள். பொல்லாத சாமான் தம்பி உது’.


ஆனால் கண்கள் குருடாகும் வாய்ப்பு அறவேயில்லை என்பதை அவர் அடித்துச் சொன்னதால் கொஞ்சம் நிம்மதியாகவிருந்தது. அன்று இரவுவரை என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. பக்கத்தில் ஓடிய அருவிக்கரையிலேயே இருந்துகொண்டு அடிக்கடி கண்களைக் கழுவிக்கொண்டிருந்தேன்.


செளமியன் மற்ற மூன்று நிலையங்களிலும் தில்லைத்தடிகள் கொண்ட நிறத் துணிகளைக் கட்டியிருந்தான். எனது வேலை முடிந்துவிட்டதை எழிலுக்கு தொலைத்தொடர்புக் கருவி மூலம் தெரியப்படுத்தினேன். எனக்கு நடந்ததைக் கேள்விப்பட்டு, ராஜு அண்ணையோடு நின்ற எழில் என்னைப் பார்க்க வந்தான். அப்போதுதான் நடக்கப்போகும் திட்டத்தை அறிந்தேன்.


அதுசரி என்ன செய்யப் போறியள்? ஓ.பி பயிற்சிதானே?’


ஓமோம். ஆனா இந்தமுறை உண்மையாவே செல்லடிச்சு’.


எழிலின் ஓ.பி பயிற்சியில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். 50 கிராம் வெடிமருந்துக் கட்டிகளை வெடிக்க வைத்துத்தான் பயிற்சிகள் வழங்கப்படும். ஓ.பி பயிற்சியென்பது எறிகணை வீச்சில் திருத்தங்களைச் சொல்லி இலக்கைத் தாக்குவதற்காக வழங்கப்படுவது. தாக்கப்படும் இலக்கை நேரடியாகப் பார்க்கக் கூடியதாக இந்த ஓ.பி அணி அல்லது தனியொருவர் நிலையெடுத்திருப்பார். பின்தளத்திலிருந்து அந்த இலக்கை நோக்கி எறிகணைகள் ஏவப்படும். அப்படி ஏவப்படும் எறிகணைகள் சரியாக இலக்கில் விழும் என்று சொல்ல முடியாது. அவை விலத்தி விழும்போது அவற்றின் விலத்தல்களை – இவ்வளவு தூரம் இந்தக் கோணத்தில் விலத்தி அடிக்க வேண்டும் -  என்ற வகையில் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அறிவிக்கும் பணியைத்தான் இந்த ஓ.பி அணிகள் செய்யும். அவர்கள் சொல்லும் திருத்தத்துக்கு ஏற்ப ஏவப்படும் அடுத்த எறிகணையிலிருக்கும் திருத்தத்தை மீளவும் சொல்வார்கள்.


‘என்னது? செல்லடிச்சுச் செய்யப் போறியளோ? 60 mm  மோட்டரோ அடிக்கப் போறியள்?’


‘இல்லை, ஆட்லறியேதான் அடிக்கப் போறம்.’


எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு மட்டுமில்லை, இதைக் கேட்கும் யாருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். பின்னாட்களில் இது சாதாரணமாக இருந்திருக்கும். ஆனால் அந்த நேரத்தில் ஆட்லறி எறிகணைகளை ஏவியே ஓ.பி. பயிற்சி கொடுப்பதென்பது நினைத்துப் பார்க்க முடியாததாகவே இருந்தது.


‘அஞ்சு ரீமுக்கும் செல்லடிச்சுத்தான் குடுக்கப் போறியளோ?’


‘ஓம். ஒவ்வொரு ரீமுக்கும் ஐவஞ்சு செல் ஒதுக்கியிருக்கு. அஞ்சாவதை இலக்கில விழுத்தினாக் காணும்’.


ஏற்கனவே அப்பகுதிக்குக் கிட்டவாக வந்து நிலையெடுத்திருந்த ஐந்து அணிகளுக்கும் தனித்தனி இலக்குகளின் ஆள்கூறுகளும் அவர்களின் இலக்குக்குரிய நிறமும் தெரிவிக்கப்பட்டு மிகுதி நகர்வுகளுக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மாலை மூன்று மணியளவில் தாக்குதல் தொடங்குவது என்று திட்டமிடப்பட்டிருந்தாலும் ஐந்து மணியளவில்தான் முதலாவது அணி இலக்கைக் கண்டடைந்தது. மளமளவென்று வேலைகள் நடந்தன.


அன்றே ஐந்து அணிகளுக்குமான பயிற்சி முடிக்கப்பட வேண்டும். நான்கு அணிகளின் பெறுபேறுகள் திருப்திகரமாக இருந்தன. அந்த நான்கு அணிகளும் தமக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து எறிகணைகளுக்குள் முழுமையான திருத்தத்தைச் செய்து முடித்திருந்தார்கள். செழியனின் அணிக்குரிய பெறுபேறு மட்டும் திருப்தியாக இல்லை. நேரம் போய்விட்டதால் நாளை அதிகாலை செழியனின் அணிக்கான எறிகணைகளை மீளவும் அடித்துப் பயிற்சியை முடிப்போமென ராஜு அண்ணன் சொன்னார்.


அங்கிருந்து குமுழமுனைப் பாடசாலைக்குத் திரும்பி அங்கே இரவு தங்கினோம். அன்று இரவோடு எனது கண் பிரச்சினை சரியாகிவிட்டதும் குறிப்பிடத் தக்கது. இந்த ‘தில்லை’ப் பிரச்சினையைக் கேள்விப்பட்ட கடாபி அண்ணன், ‘இது எமக்கு ஒரு பாடம்தான். இனிமேல் எமது பயிற்சித் திட்டத்தில் இந்த தில்லை மரம் தொடர்பிலும் நாம் கற்பிக்க வேண்டும்’ என்றார்.


குமுழமுனைப் பாடசாலையில் இரவு தங்கியிருந்த போதுதான் அந்தச் செய்தி வந்து சேர்ந்தது. ஏற்கனவே ‘பராக்கிரம புர’ இராணுவ முகாமிலுள்ள ஆட்லறிகளைத் தகர்ப்பதற்கான ஆயத்தப்பணிகளில் கரும்புலிகளின் ஒரு தொகுதி ஈடுபட்டிருந்த நிலையில், அம்முகாம் மீதான இறுதி வேவுக்கெனச் சென்றிருந்த அணி தளம் திரும்பிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட எதிர்பாராத மோதலில் கரும்புலி மேஜர் செங்கதிர் வாணன் வீரச்சாவு: மேலும் ஒருவர் காயம் என்ற தகவலே அது. இன்னமும் அந்த அணி பாதுகாப்பாக வந்து சேரவில்லை. இன்றிரவுதான் அவர்கள் எல்லை கடப்பார்கள். காயப்பட்ட கிரியையும் தூக்கிக் கொண்டு அவர்கள் வந்து சேர்வார்களா மாட்டார்களா எனத் தெரியாத நிலை. அன்றைய இரவு உணர்ச்சிமயமாகவே கழிந்தது. அத்தோடு அன்று காலை அம்பகாமம் பகுதியில் ‘நீர்சிந்து – 2’ நடவடிக்கை நடந்து அதில் நிறையப் பெண் போராளிகள் வீரச்சாவடைந்த சம்பவமும் நிகழ்ந்திருந்தது.


29/10/99


மறுநாட்காலை செழியனின் அணிக்கான பயிற்சிகள் வெற்றிகரமாக முடிந்தன. அனைவரும் தளம் திரும்பினோம். கரும்புலிகளுக்கு அன்று முழுவதும் ஓய்வு என அறிவிக்கப்பட்டது. முதல்நாளின் நகர்வில் நிறையப் பேருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர்களுக்கான சிகிச்சையும் ஓய்வும் வழங்கப்பட்டது. நானும் எழிலும் சசிக்குமார் மாஸ்டரோடு சேர்ந்து சில வேலைகளைச் செய்து கொண்டிருந்தோம்.


அன்றுகாலையே இளம்புலி அண்ணனும் மற்றவர்களும் தளத்துக்கு வந்துவிட்டனர். பராக்கிரம புர முகாமுக்கான வேவுக்கு அவர்தான் பொறுப்பாகப் போய் வந்தார். முதல்நாள் நடந்த மோதலில் செங்கதிர் வாணன் அண்ணன் வீரச்சாவென்பதை அவர் உறுதிப்படுத்தினார். காயப்பட்ட நிலையில் 'நான் குண்டை வெடிக்க வைக்கிறன்' என்று கத்திச் சொல்லிக் கொண்டு தனது M-4 குண்டை வெடிக்க வைத்து தன்னை மாய்த்துக் கொண்டதைச் சொன்னார். காயப்பட்ட கிரியை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். ‘இவ்வளவு நாளும் போய்வரேக்க ஒரு பிரச்சினையுமில்லை. இப்ப என்னெண்டு இது நடந்தது? அவனுக்குத் தெரிஞ்சு போச்சோ? இனி நடவடிக்கை சரிவராதோ?’ என்று எல்லோரிடமும் கேள்விகளிருந்தன.


ஆனால் “இது தற்செயலாதுதான், பயிற்சி நடவடிக்கைக்காக காட்டுக்குள் இறக்கப்பட்டிருந்த இராணுவத்தோடுதான் மோதல் நடந்தது; எமது திட்டம் தொடர்பாக எதுவும் எதிரி அறிந்திருக்க வாய்ப்பி்லை” என்ற விளக்கத்தை இளம்புலி அண்ணன்  சொன்னார்.


அன்று மாலை மூன்றுமணியளவில் திடீரென கடாபி அண்ணன் வந்தார். நடவடிக்கைக்கென பிரிக்கப்பட்டிருந்த ஐந்து அணியைச் சேர்ந்தவர்களை சந்திப்புக்காகப் புறப்படும்படி அறிவுறுத்தப்பட்டது. அது தலைவருடனான சந்திப்பு என்பது அனைவரும் விளங்கிவிட்டது. அந்த ஐந்து அணியைச் சேர்ந்த இருபது கரும்புலிகளும் அன்று இரவு தலைவருடனான தமது சந்திப்புக்காகச் சென்றனர்.

 

தொடரும்...


- இளந்தீரன் -

Share This:

No Comment to " களங்கள் - 4. ஓயாத அலைகள் மூன்று "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM