தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஏன் ஆதரவளிக்க வேண்டும்?
இப்போதுள்ள
களநிலைவரப்படி விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த்தேசியத்தை வைத்து அரசியல் செய்யும்
சக்திகளாக தேர்தல் களத்தில் ஈரணிகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்தப்
பிளவு திட்டமிட்டு நடத்தப்பட்டதோ நடைமுறைப்படுத்தப்படுவதோ அன்று.
மாறாக இது தானாய்
நிகழ்ந்த ஒன்று என்றுதான் பார்க்க வேண்டும். இந்த இருநிலைக் களம் என்பது காலத்தின்
தேவையேதான். அதாவது 2010 இல் கஜேந்திரகுமார் தலைமையில் ஓரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு
மாற்றான தளத்தை உருவாக்காமல் விட்டிருந்தாற்கூட காலப்போக்கில் வேறு யாராவது அதை உருவாக்கியேதான்
இருப்பார்கள். ஏனென்றால் ஈழத்தமிழ்ச்சமூகத்தின் இயங்குநிலையில் இந்த மாற்றணி கட்டாயத்
தேவையும் காலத்தின் தேவையுமாகும்.
அவ்வகையில்
இந்த இருநிலைத் தளங்கள் என்பது இன்றியமையாதது மட்டுமன்றி அது எமது அரசியற் பயணத்துக்கு
ஆரோக்கியமானதுங்கூட. இக்கூற்றை ஏதோ ‘விழுந்த பாட்டுக்குக் குறி சுடுவதைப் போல்’
நிகழ்ந்துவிட்ட பிளவை எவ்வாறு பயன்படுத்துவது என்று ஆராயும்வகையில் சொல்லப்படவில்லை.
மக்களின் நம்பிக்கையைத் தீர்க்கமாகப் பெறமுடியாத நிலையில் கட்சிகளும் தலைவர்களும் இருக்கையில்
குறைந்தபட்சம் இரண்டு தெரிவாவது இருக்கின்ற நிலைமைதான் கட்சிகளையும் தலைவர்களையும்
சரியாக வழிநடத்தக் கூடியவை. மக்களின் ஏகோபித்த ஆதரவையும் நம்பிக்கையையும் பெறக்கூடியதாகவிருந்த
தலைமையும் கட்டமைப்பும் ஒன்றே ஒன்றுதான்.
2009
இல் ஏற்பட்ட மாற்றங்களின் பின்னர் மக்களுக்காக எத்தியாகத்தையும் செய்யும், உயிரே போனாலும்
சமரசம் செய்யாத விடுதலைப் புலிகள் அமைப்புப் போன்ற தலைமை இல்லாத நிலையில் மாற்றுத்
தளம் ஒன்று இருப்பது மட்டுமே ஒரு கட்சியைச் சரியாக வழிநடத்த வல்லது என்ற உலகப் பொது
சனநாயகத்தன்மையைத் தமிழினம் சுவீகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்ந்தும்
ஈரணிகள் தமிழ்த்தேசியம் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்க வேண்டியது தர்க்க ரீதியில் சரியானதாகும்.
இன்று
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கமும் செயற்பாடுமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை
ஓரளவாவது தமிழ்த்தேசிய வட்டத்துக்குள் வைத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. இன்னும்
தெளிவாக இதை விளங்கப்படுத்த வேண்டுமானால், கஜேந்திரகுமாரின் மாற்றணி 2010 இல் தோற்றுவிக்காது
விடப்பட்டிருந்தால் அல்லது, 2010 நடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அவ்வணி செயற்படாமல்
விட்டிருந்தால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசியமும் எந்நிலையை அடைந்திருக்கும்
என்பதை வாசகர்களின் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
ஆகவே மாற்றணி ஒன்று இயங்கிக் கொண்டிருந்த
காரணத்தால்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் மக்கள்நலன் சார்ந்து இயங்கிக் கொண்டிருந்தது.
ஏன் தாமதித்தென்றாலும் ஜெனிவா களத்துக்கு த.தே.கூ. போய்ச்சேர வேண்டி வந்ததும் அந்த
மாற்றணியின் செயற்பாட்டால்தான். காணி அபகரிப்புப் போராட்டங்கள், காணாமற்போனோர் தொடர்பான
போராட்டங்கள், சிறையில் தமிழர் படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் என பலவற்றில் பதாகை
பிடிக்கவாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து சேர்ந்ததும் இந்த மாற்றணி மீதான
பயத்தால்தான்.
இதுவே
த.தே.ம.முன்னணிக்கும் பொருந்தும். த.தே.கூட்டமைப்பின் இடத்தைத் தாம் பிடிக்க வேண்டுமென்ற
அவாவும், மக்களின் அரசியல் பிரிதிநிதித்துவத்தைத் தாம் பெறவேண்டுமென்ற துடிப்பும்கூட
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இடைவிடாத தொடர் செயற்பாட்டுக்கான உந்துசக்தியாகவும்
இருக்கின்றது. இயல்பாகவே வீட்டுக்குப் புள்ளடிபோட்டுப் பழக்கப்பட்ட மக்களிடமிருந்து
தமக்கான வாக்குகளை அள்ள அளவுக்கதிகமாக உழைக்க வேண்டுமென்ற யதார்த்தம் அவர்களுக்கு உறைத்துக்கொண்டே
இருக்கும். படிப்படியாகக் கூட்டிவரும் மக்கள் ஆதரவை இழக்காமலிருக்க த.தே.ம.முன்னணிக்கான
உந்துசக்தியாக இருக்கப் போவதும் த.தே.கூட்டமைப்பு என்ற மாற்றுத்தளமொன்று இருப்பதுதான்.
ஆகவே
மாற்றுத்தளம் ஒன்று செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதுதான் தாம் சரியாகவும் நேர்மையாகவும்
மக்கள் நலன்சார்ந்தும் செயற்பட அந்தந்த அரசியற்கட்சிகளைத் தூண்டுகின்றன. ஆகவே எதிர்க்கட்சி
என்ற ஒரு சனநாயகப் பண்பு தற்காலத்திலும் எதிர்காலத்திலும் தமிழ்த்தேசத்துக்கு இன்றியமையாதது.
இங்கே
ஓரிரு நாடாளுமன்ற ஆசனங்களை அதிகரிப்பதற்காக ஒற்றுமை என்ற பதாகையின்கீழ் ஒருகட்சியாகச்
செயற்படுவதை இன்று பலர் முன்மொழிகின்றனர். அதுவும் வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில்
இப்படி இருகட்சிகளாக நிற்பது குறித்து பலரும் ஆதங்கப்படுகிறார்கள். அடிப்படையில் இந்த
வெண்ணெய் திரண்டு வருவதுகுறித்த கதையாடல்கள் மேம்போக்கானவை, யதார்த்தத்தை உணராத கற்பனைகள்
என்பதே உண்மை. அப்படியே திரண்டுவந்தாலும் ஒருகட்சியாக நின்றால்தான் வெண்ணெய் எடுக்கலாமென்பதும்
தவறான கணிப்பு.
மாற்றணி
இல்லாத ஒருகட்சி அரசியல் ஏற்படுத்தும் பாதக விளைவுகளோடு ஒப்பிட்டால் இரண்டு ஆசனங்களைப்
பணயம் வைத்து நாம் மேற்கொள்ளும் இருகட்சி அரசியல்பாதை மிகமிக ஆரோக்கியமாகவும் தமிழ்த்தேசத்தின்
விடியல்நோக்கிய நம்பிக்கைதரும் பயணமாகவும் அமையும். இந்த ஒருகட்சி அரசியல் தமிழரின்
விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப் போகச்செய்கிறது என்ற விமர்சனத்தின் வெளிப்பாடே
இந்த மாற்றணியின் உருவாக்கம். அவ்வாறு மாற்றணி அமைந்தபின்பும் தமிழரின் உரிமைப்போராட்டத்தை
சரிவர நகர்த்தவில்லை என்ற விசனமே இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மீதான எதிர்ப்புணர்வு
வளர்ச்சியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு வளர்ச்சியும்.
தமிழ்த்
தேசிய விடுதலைக்காகத் தீவிரமாக இயங்கிய, இயங்கிக்கொண்டிருக்கும் புலம்பெயர் அமைப்புக்கள்
“அனைத்தும்” (இந்த ‘அனைத்தும்’ என்பதற்குள் அடங்கா அமைப்புக்கள் தீவிரமாகவோ அல்லது
தமிழ்த்தேசிய விடுதலைக்காகவோ இயங்குவனவல்ல – குறிப்பாக உலகத்தமிழர் பேரவை - என்பது
கட்டுரையாளரின் கணிப்பு) இன்றைய நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான நிலையை
எடுத்திருக்கின்றன. இந்த யதார்த்தம் உணர்த்தும் உண்மையானது தாயகத்திலும் எதிரொலிக்கும்
பட்சத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சரியான வழிக்குக் கொண்டுவரக் கூடும்.
இவ்வாறு
மாற்றுத் தெரிவுக்கான அணிகளாகச் செயற்பட வேண்டிய இரு அணிகளும் துரதிஸ்டவசமாக ஒருவரையொருவர்
வசைபாடும் இழிநிலை அரசியலுக்குள் சென்றுகொண்டிருப்பது வருந்தத்தக்கது. இந்த நிலையொன்றுதான்
நாம் இந்த இருகட்சி அரசியல்பாதையில் வருந்தக்கூடிய ஒன்றாக இருக்குமேயன்றி பொதுவாகவே
இப்பாதை ஆரோக்கியம் மிக்கதொன்றாகவே அமையும்.
இந்தத்
தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு குறைவடைவதும் தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணிக்கான ஆதரவு அதிகரிப்பதும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராடத்தைச் சரியான வழியில்
கொண்டு செல்ல உதவும்.
அவ்வகையில்
இன்னும் மக்கள் ஆணையைப் பெறாமல் ஆனால் மாற்றுத் தளத்தை ஓரளவுக்கு அர்ப்பணிப்போடு கட்டியெழுப்பிக்கொண்டிருக்கும்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு தமிழர் தாயகமெங்கும் பரவலாக அளிக்கப்படும் வாக்குகளும்
ஓரிரு நாடாளுமன்றத் தெரிவும் ஈழத் தமிழினத்தின் அரசியல் எதிர்காலத்தை ஆரோக்கியமாகக்
கொண்டுசெல்ல உதவும்.
இதைவிடவும்,
தாயகத்தில் நிகழும் இந்த வாக்கு மாற்றம், சர்வதேசத் தளத்தில் எதிர்வளமாக தாக்கத்தை
ஏற்படுத்தும். அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வரும் வீழ்ச்சியும் மாற்றுத்தரப்பான
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு வரும் கணிசமான வளர்ச்சியும் சர்வதேச மட்டத்தில் தமிழ்த்தேசியக்
கூட்டமைப்புக்கான பலத்தை அதிகரிக்கும். இதுகுறித்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
No Comment to " தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஏன் ஆதரவளிக்க வேண்டும்? "