News Ticker

Menu

இணங்கிப் போனதில் இழந்துபோனவை

இலங்கைத்தீவானது எப்படி ஒன்று சேர்க்கப்பட்டது என்பது பற்றியும் அதில் இடம்பெற்ற சில முக்கியமான சம்பவங்களையும் பற்றியும் இப்பத்தியில் ஆராய விரும்புகிறோம்.

1833 ஆம் ஆண்டளவில் அனைத்து சிங்கள அரசுகளும் தமிழ் அரசுகளும் ஏதோவிதத்தில் பிரித்தானிய படையினரால் வெற்றி கொள்ளப்பட்டு அப்போதிருந்த இலங்கைத்தீவின் அனைத்து நிர்வாக அலகுகளும் ஒன்றாக்கப்பட்டு ஒரு ஆளுகைக்குள் முதல் தடவையாக கொண்டுவரப்பட்டது.






தனித்தனியான நிர்வாக அரசுகளை ஒன்றாக்கிய பிரத்தானிய அரசு, சிங்கள தமிழ் மற்றும் பறங்கியர் இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தவென ஒவ்வொரு பிரதிநிதிகளை உள்வாங்கி தனது காலனியாதிக்கத்திற்குட்பட்ட அரசை நிறுவியது. இவ்வாறு சம அளவான பிரதிநிதித்துவத்தை வழங்கியதன் மூலம் இலங்கைத்தீவானது வெவ்வேறான தேசங்களாக ஏற்கனவே இருந்தது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது போலவே கருதவேண்டும்.

தனித்தனியான அரசுகளை வென்று ஒரு நிர்வாக அலகுக்குள் கொண்டுவந்த பிரித்தானியா 1931 ஆம் ஆண்டளவில் – ஏறத்தாள 100 ஆண்டுகளுக்கு பின்னர் – பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் பிரதிநிதிகளை நியமிக்க தீர்மானிக்கிறது. இதன் மூலம் இலங்கைத்தீவில் பெரும்பான்மை இனம் கூடியளவான பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்கிறது.

ஆரம்பத்தில் ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்ட இலங்கைத்தீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பாரம்பரியமாக வாழ்ந்துவந்துள்ளனர். இதுபற்றி 1796 இல் அப்போது பிரித்தானிய அரசாங்க ஊழியராக இருந்த எச். கிளைகோன் என்பவர் குறிப்பிட்டதை ”இலங்கையில் தமிழர்” என்ற நூலில் பக்கம் 452 இலிருந்து மீளபதிவுசெய்கிறோம்.

”இரு வேறுபட்ட தேசங்கள் மிகப்புராதன காலத்திலிருந்தே நாட்டின் உடைமைகளைத் தமக்குள் பிரித்துக்கொண்டிருந்தன. இவற்றில் முதலாவது நாட்டின் உட்பகுதியிலும் வளவை ஆற்றிலிருந்து சிலாபம் வரையிலான தெற்கு, மேற்கு பகுதிகளில் சிங்களவர்கள் வசித்தனர். இரண்டாவதாக வடக்கையும் கிழக்கையும் தமது உடைமையாகக் கொண்டிருந்த மலபார்கள் (தமிழர்கள்). இவ்விரு தேசங்களும் அவற்றினது சமயம் மொழி பழக்கவழக்கங்கள் என்பவற்றில் முற்றிலும் வேறுபட்டவர்கள்.”


தனித்தனியான தேசங்களை ஒருங்கிணைத்த பிரித்தானிய அரசு காலப்போக்கில் – தனது நிர்வாக நலனுக்காகவும் பெரும்பான்மை இனத்தின் குரலுக்கு செவிசாய்த்தும் – ஓரலாக கருதி பிரதேசவிகிதாசார அடிப்படையில் பிரதிநிதிகளை நியமித்தபோது தமிழர்களது பிரதிநிதித்துவம் சிறுபான்மை இனமாக கணிக்கப்பட காரணமானது.

இரண்டு தேசிய இனங்களின் வாழ்விடமாக கருதப்பட்டு நிர்வகிக்கப்பட்ட இலங்கைத்தீவு – காலனியாதிக்க சக்திகளின் நலனுக்காக – முரண்பாடுகளை பிரசவிக்கும் களமாக மாறத்தொடங்கியது.

தந்திரமான முறையில் ஒரு அரச நிர்வாக அலகாக - தமிழர்களுக்கும் சமஉரிமை கொடுப்பது போல காட்டி – இணைந்துவாழ்வோம் என்ற கோட்பாட்டில் விருப்புடையவர்கள் போல காட்டிக்கொண்டு சுமார் 100 வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அதன்பின்னரே அப்போதைய தமிழ் தலைவர்களுக்கு கழுத்துக்கு நேரே கத்தியிருப்பது புரிந்தது. ஆனாலும் எல்லாமே காலம் கடந்தவையாகவே போயிருந்தது.

இலங்கை என்ற தீவை பொறுத்தவரையில் தமிழர்களின் சனத்தொகையானது 25% இலும் குறைவாகவே இருந்துவந்திருக்கிறது. அவ்வளவு குறைந்த சனத்தொகை கொண்ட மக்கள் இனம் சம அளவான உரிமைகளை எதிர்பார்ப்பது கேலிக்கூத்தானது என வாதிடலாம். பிரித்தானிய காலனியாதிக்கம் வரும்வரை இரண்டு தேசிய இனங்கள் இருந்தன என்பதும் அவற்றுக்கான தனித்தனி அரசுகள் இருந்தன என்பதும் அவைதான் பின்னர் காலனியாதிக்க சக்திகளால் ஒட்டவைக்கப்பட்டன என்பதையும் மறந்துவிட்டு சிந்தித்தால் நிச்சயமாக அவ்வாறுதான் தோன்றக்கூடும்.

ceylon-laterபிரித்தானிய காலனியாதிக்கம் நிலைபெற்று சுமார் 100 வருடங்களின் பின்னர் - 1931 ஆம் ஆண்டில் - அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் அரசியற் திட்டம் தமிழர்களின் சமஉரிமைக்கு சாவுமணி அடித்த நிகழ்வாக மாறியது. தமிழர்கள் தமது உரிமைகள் சனநாயகத்தின் பேரில் பறிக்கப்படுவதை கண்டித்து அப்போது நடாத்தப்பட்ட தேர்தலை புறக்கணித்தனர். வெளிநாட்டு பொருட்களை புறக்கணிப்பு செய்து தமது எதிர்ப்பை காட்டினர். அவை எவையும் சாதகமான பெறுபேறுகளை பெற்றுத்தரவில்லை.


தனித்தனியான தேசங்கள் இணையும்போது என்ன உடன்பாடுகள் செய்யவேண்டுமோ அதனை செய்யாமல் – ஆரம்பத்தில் கிடைத்த சலுகைளையே உரிமைகளாக எண்ணி - ஒன்றுபட்ட நிர்வாக அலகிற்குள் சென்றதன் மூலம் தமிழர்கள் இரண்டாம் தர மக்களாகவே பார்க்கப்படுகின்ற நிலை உருவாகிவிட்டது. இலங்கைத்தீவின் வரலாற்றை 1833 ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை கவனித்துவந்தால் படிப்படியாகவே தமிழர்களது பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வேலைகளே நடந்துவந்ததை தெளிவாக காணலாம்.

தொடர்ந்துவந்த அடக்குமுறைகள் காரணமாக எழுச்சிபெற்ற மக்கள் போராட்டமானது ஆயுத போராட்டமாக மாறி தமிழர்கள் மீண்டும் தாங்கள் தனியான ஒரு தேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். போராட்டங்கள் ஒடுக்கப்பட்டாலும் போராட்டத்திற்கான தேவைகள் நிவர்த்தி செய்யப்படும்வரை மீண்டும் புதிய போராட்டங்கள் பிறப்பெடுக்கவே செய்யும். அதுவே வரலாற்று நியதி.

தற்போதாவது ஈழத்தமிழர்கள் தமக்கான உரிமைகளை சரியான முறையில் உணர்ந்துகொண்டு கௌரவமான முறையிலான தீர்வை பெற்றுக்கொள்வதற்காக ஒன்றுபட்டு நிற்காவிட்டால் இலங்கைத்தீவில் தமிழர்களது எதிர்காலம் கேள்விக்குரியதாகவே மாறிவிடும்.

- கொக்கூரான்

Share This:

No Comment to " இணங்கிப் போனதில் இழந்துபோனவை "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM