News Ticker

Menu

களங்கள் -2. ஓயாத அலைகள் மூன்று

 இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும். 


இது 1999 ஆம் ஆண்டின் புரட்டாசி மாதம். கரும்புலிகள் அணியின் மூன்றாம் தொகுதியும் அதற்குரிய நிர்வாகமும் வேறோர் இடத்திலிருந்து கடற்பயிற்சிக்காக முல்லைத்தீவின் கள்ளப்பாடு என்ற கடற்கரைக் கிராமத்துக்கு நகர்ந்திருந்தது. இங்கே கரும்புலிகள் அணி எனப்படுவது தரைக் கரும்புலிகள் அணியைக் குறிக்கும். பொதுவாக கடற்கரும்புலிகளை ‘கடற்கரும்புலிகள்’ என்றும், தாயகப்பகுதிக்கு வெளியேயோ உள்ளேயோ இயக்கத்தால் உரிமை கோரப்படாத தற்கொடைத் தாக்குதல் நடத்தும் அணியை ‘மறைமுகக் கரும்புலிகள்’ என்றும், மற்றவர்களை ‘கரும்புலிகள்’ என்றும் அழைப்பதுண்டு. இந்தத் தரைக்கரும்புலிகள் அணி இம்ரான்-பாண்டியன் படையணியின் நிர்வாகத்தின் கீழ் ஓரணியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது.


கரும்புலி அணியில் இணைய விரும்பும் போராளிகள் தேசியத் தலைவருக்குத் தமது விருப்பைத் தெரிவித்துக் கடிதம் எழுதுவார்கள். பலர் விடாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள். அக்கடிதத்துக்கான பதில் தலைவரிடமிருந்து அனுப்பப்படும். அதில் பெரும்பாலும் ‘உரிய நேரம் வரும்போது நீங்கள் கரும்புலி அணியில் இணைத்துக்கொள்ளப்படுவீர்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். சிலருக்கு அவர் கரும்புலியாக இணைத்துக் கொள்ளப்பட மாட்டார் என்ற பதிலும் அதற்குரிய விளக்கத்தோடு அனுப்பி வைக்கப்படுவதுண்டு. ஏற்கனவே சகோதரர் யாராவது கரும்புலியாக இருந்தால், கரும்புலியாகச் செயற்படுவதற்குரிய உடற்றகமை இல்லாதிருந்தால் போன்ற காரணங்களுக்கான அந்த வாய்ப்பு மறுக்கப்படும். கரும்புலியாக விருப்புக் கடிதமெழுதி அச்சந்தர்ப்பம் கிடைக்காமலேயே நூற்றுக்கணக்கான போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.


கரும்புலி அணியொன்று உருவாக்கப்படும்போது எற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தவர்களுள் குறிப்பிட்டளவானோர் மட்டும் தெரிவு செய்யப்படுவார்கள். வரிசையில் காத்திருக்கும் நூற்றுக்கணக்கானோரில் நாற்பது அல்லது ஐம்பது பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்கள் இப்போதும் கரும்புலி அணியில் இணையும் அவாவோடு உள்ளனரா என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். வெவ்வேறு படையணிகள், துறைகள், பிரிவுகளிலிருந்து கரும்புலிகளாகத் தெரிவு செய்யப்படுபவர்கள் முதலில் தேர்வுப்பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சிறப்புப் பயிற்சியெடுப்பதற்கான அடிப்படைத் தகமைகளுக்கான தேர்வில் தேறுபவர்கள் அதன்பின்னர் கரும்புலிகளுக்கான சிறப்புப் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்வுப் பயிற்சியில் தேறாதவர்கள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள். கரும்புலிகளுக்கான சிறப்புப் பயிற்சிநெறியை நிறைவுசெய்த பின்னரே நடவடிக்கைக்கு அனுப்பப்படுவார்கள். கரும்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் களத்தில் வீழும்வரை பயிற்சியோடுதான் நாட்கள் கழியும். நடவடிக்கை... பயிற்சி.... மீண்டும் நடவடிக்கை... மீண்டும் பயிற்சி என்று இந்தச் சுழற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்.


மீண்டும் கள்ளப்பாட்டுக் கடற்கரைக்கு வருவோம். இப்போது கரும்புலிகள் அணியின் மூன்றாவது தொகுதி சிறப்புப் பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. சிறப்புப்பயிற்சியின் இறுதிக்கட்டமாக கடற்பயிற்சிக்காக கள்ளப்பாட்டுக்கு வந்திருந்தது அவ்வணி. கரும்புலிகள் அணிக்குரிய கடற்பயிற்சிக்கான பொறுப்பை பின்னாளில் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கோகுலன் (கடற்சிறுத்தைகள் அணியில் இருந்தவர்) ஏற்று வழங்கிக் கொண்டிருந்தார். அவரோடு சின்னக்கண்ணன், புவனா என்று கடற்புலிப் போராளிகள் இருவரும் இணைந்து கடற்பயிற்சி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.


ஆண், பெண் இருபாலாரும் சேர்ந்து 30 வரையானவர்கள் இக்கடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதிக்கும் மூன்றாவது தொகுதிக்கும் பயிற்சி ஆசிரியராகக் கடமையாற்றிய அருளன் இந்தத் தொகுதிக்கான கடற்பயிற்சி முடிந்ததும் அவரின் நீண்டகால விருப்புக்கிணங்க கரும்புலியாக இணைத்துக் கொள்ளப்படுவாரென்றும் அவர் இரண்டாம் தொகுதியோடு இணைந்து செயற்படலாமென்றும் தலைவரால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. இந்தக் கடற்பயிற்சியை விரைவாகவும் சரியாகவும் முடித்துவிட வேண்டுமென்ற அவாவோடு அருளன் செயற்பட்டுக்கொண்டிருந்தார்.


அருளனைப் பற்றி சிறிதாவது சொல்லியாக வேண்டும். இம்ரான்-பாண்டியன் படையணியின் கெனடி-1 தொடக்கப்பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படைப் பயிற்சியை முடித்தபின் தொடர்ந்தும் இம்ரான்-பாண்டியன் படையணியில் செயற்பட்டவர். மேஜர் மாதவன் (2000 ஆம் ஆண்டு ஓயாத அலைகள் -3 இன் யாழ்ப்பாணம் மீதான புலிகளின் படையெடுப்புக் காலத்தில் தனங்கிளப்பில் வீரச்சாவடைந்தவர். சிறந்த பாடகன், கவிஞன், எழுத்தாளன் என்று பன்முகத் திறமைவாய்ந்த போராளி) கரும்புலிகள் அணிக்கான பொறுப்பாளனாயும் பயிற்சியாளனாயும் இருந்த காலத்தில் அருளனும் கரும்புலிகள் அணிக்கான பயிற்சியாளருள் ஒருவராய் இணைந்து  கொண்டார்.


இந்தக் காலப்பகுதியில் கரும்புலிகளின் பயிற்சிப் பாசறை சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுக்கு இலக்காகியது. அதில் அருளன் மிகக்கடுமையான காயத்துக்குள்ளானார். வயிற்றுப்பகுதியில் மிகநீளமான காயம். மிகக்கடுமையான நிலையிலிருந்து ஒருவாறு காயம் மாறி மீண்டும் பயிற்சியாசிரியனாக தனது பணியைத் தொடர்ந்தார். ஆனாலும் அந்தக் காயத்தின் தாக்கத்திலிருந்து இறுதிவரை அவரால் மீளமுடியவில்லை. தனது வேதனை, இயலாமை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு – குறிப்பாக பொறுப்பாளர்களுக்கும் பயிற்சியெடுக்கும் போராளிகளுக்கும் - அவை தெரியாமல் மறைத்தபடி தனது கடமையைத் தொடர்ந்தார். அவரது எண்ணம் முழுவதும் இந்த மூன்றாம் தொகுதிக்கான பயிற்சியை சிறப்பாக முடித்துவிட்டு கரும்புலியாக இணைந்து செயற்பட வேண்டுமென்பதிலேயே இருந்தது.


இந்தக் கடற்பயிற்சியிலும் அருளனால் முழுமையாக ஈடுபட முடியவில்லை. அதுவும் நீச்சல் என்பது வயிற்றுத் தசைகளுக்கு அதிக வேலை கொடுக்கும் ஒரு பயிற்சி. ஐந்து, ஆறு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மிதக்கவோ நீந்தவோ வேண்டிய பயிற்சியும் இதில் உள்ளடக்கியிருந்தது. அருளனால் எவ்விதத்திலும் அதற்கு ஈடுகொடுக்க முடியாது. ஆனாலும் தனது எல்லையையும் தாண்டி அருளன் அப்பயிற்சியில் ஈடுபட்டார். ஒருவித வெறியோடுதான் அந்தக் கடற்பயிற்சியில் அருளன் ஈடுபட்டிருந்தார். அனால் அருளனை அதிகம் சோதிக்க வேண்டிய தேவையில்லாமல் உடனடியாகவே அருளனுக்கான பணி வந்து சேர்ந்தது. ‘பராக்கிரமபுர’ ஆட்லறித்தளம் மீதான தாக்குதல் முழுவதற்கும் தலைமைதாங்கிச் செல்லும் பொறுப்பு அருளனுக்கு வழங்கப்பட்டு அவர் கடற்பயிற்சியிலிருந்து நிறுத்தப்பட்டு கரைச்சிக்குடியிருப்பில் தங்கியிருந்த மற்றக் கரும்புலி அணியோடு இணைக்கப்பட்டார்.


நீச்சற் பயிற்சிக்கு வருவோம். கரும்புலிகள் அணியின் மூன்றாம் தொகுதியில் இருந்தவர்களுள் சிலர் ஏற்கனவே மிக நன்றாக நீந்தக் கூடியவர்கள்; சிலருக்கு அறவே நீச்சல் தெரியாது. மகளிர் அணியில் சசி, சுதாஜினி போன்றவர்கள் (கரும்புலி மேஜர் சசி நெடுங்கேணியிலும், கரும்புலி மேஜர் சுதாஜனி பளை ஆட்லறித் தகர்ப்பிலும் வீரச்சாவடைந்தனர்) மிக நன்றாக நீந்துவார்கள். அவர்கள் இருவரும் மாலதி படையணியின் சிறப்பு அதிரடிப்படை அணியொன்று உருவாக்கப்பட்டபோது அதில் பயிற்சியெடுத்திருந்தவர்கள். சசி நீந்துவதைப் பார்க்க வியப்பாக இருக்கும். தாங்கள் ஊரிலேயே பெரிய நீச்சற்காரர்கள் என்று கதைவிட்டுக் கொண்டிருந்தவர்கள் பலர் வாய்பொத்தியிருக்க வேண்டிய நிலை வந்தது சசியால்தான். குறுந்தூர வேக நீச்சலென்றாலும் சரிதான், ஐந்து கடல்மைல் தூரநீச்சல் என்றாலும் சரிதான், ஆண்களின் முன்னணிக் குழுவோடு நீந்தக் கூடியராக சசி இருந்தார்.


காலை, மாலை என்று ஒருநாளில் இருதடவைகள் கடற்பயிற்சி நடைபெறும். நீச்சலில் அடிப்படையே தெரியாதவர்களை கோகுலன் மாஸ்டர் பொறுப்பெடுத்துப் பழக்கினார். மிக அழகாக நீச்சற்கலையைச் சொல்லித் தருவார். இயக்கத்தில் நீச்சற் பயிற்சிக்குரிய ஆசிரியர்கள் என்றுவந்தால் போராளிகளுக்கு முதலில் நினைவுக்கு வருவது இவராகத்தான் இருக்கும். 2002 இல் யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தகையோடு பிரிகேடியர் பால்றாஜ் தலைமையில் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியொன்று நாயாற்றில் தொடங்கப்பட்டது. நூற்றுக்குமதிகமான போராளிகள் பங்குகொண்ட அந்தப் பயிற்சிப் பாசறையில் கடற்பயிற்சியும் இணைக்கப்பட்டிருந்தது. அங்கும் அப்பயிற்சியைப் பொறுப்பெடுத்துத் திறம்பட முடித்தவர் இதே கோகுலன் மாஸ்டர்தான்.


கரும்புலிகள் அணிக்கான கடற்பயிற்சி அதிகாலை மூன்றுமணிக்கெல்லாம் தொடங்கிவிடும். கரைக்கு வர ஐந்து, ஆறு மணித்தியாலங்கள் கூட ஆகலாம். பிறகு மீளவும் மாலையில் பயிற்சி தொடங்கும். இடைப்பட்ட நேரம் பெரும்பாலும் நித்திரையோடுதான் போகும். கடற்பயிற்சிக் களைப்பும், கடற்காத்தும் சேர்ந்து சொர்க்கத்துக்குக் கொண்டு போகும்.


கடற்பயிற்சிக் காலத்தில் அங்கு நடந்த சுவாரசியங்களுள் ஒன்று உணவு வழங்கல். சிலாவத்தையிலிருக்கும் ஒரு தோட்டத்தில்தான் நிர்வாகம் இயங்கிவந்தது. அங்கிருந்துதான் கரைச்சிக் குடியிருப்பிலிருக்கும் அணிக்கும், கள்ளப்பாட்டிலிருக்கும் அணிக்கும் உணவு வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஓர் ஒற்றை மாட்டுவண்டிலில் உணவு வந்து போகும். கடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அணிக்கான உணவு வழங்கலில்தான் சிக்கல் வந்து சேர்ந்தது.


மகளிர் பக்கத்தில் சிக்கல் இருக்கவில்லை. ஆனால் ஆண் போராளிகள் பக்கத்தில் அவித்துக் கொட்டக் கொட்ட அது காணாமற் போய்க்கொண்டேயிருந்தது. கடற்பயிற்சி முடித்துக் கரைதொடும்போது புகையத் தொடங்கும் வயிறு எளிதில் அடங்கிவிடாது. போராளிகளுக்குத் தீனிபோட்டு நிர்வாகத்தால் கட்டுப்படியாகவில்லை. அப்போது ஒரு போராளிக்கான ஒருநேர உணவுக்காக வழங்கற் பகுதியால் ஒதுக்கப்பட்டிருந்த மாவின் நிறை 250 கிராம். ஆனால் இப்போது 500 கிராம் மா கூடப் போதுமானதாக இருக்கவில்லை. அவ்வளவுக்குப் போராளிகள் விழுங்கித் தள்ளினார்கள். தமக்கான மேலதிக உணவுத் தேவைபற்றி வழங்கற்பிரிவிடம் பேசியபோது, அவர்கள் நம்பாமல் தாம் நேரில் வந்து சோதிக்க வேண்டுமென்று சொல்லி ஒருநாட்காலை நேரிலே வந்து போராளிகள் உண்பதைப் பார்த்துப் போனார்கள்.


‘குமரன், அதுசரி, இன்னும் எவ்வளவு காலம் உந்தக் கடற்பயிற்சி இருக்கு?’


‘எல்லாரும் அஞ்சு கடல்மைல் முடிக்க வேணும். பிறகு வெயிற்றோட நீந்தப் பழக்க வேணும். பலன்சில நிண்டு சுடப்பழக்க வேணும், சுழியோடப் பழக்கோணும்.... எப்படியும் ஒரு மாசமாகுமெண்டு நினைக்கிறன்’


‘என்ன பகிடியே விடுறியள்? உவங்களுக்கு ஒருமாசம் சாப்பாடு போட நாங்கள் ஏதேன் கப்பலெல்லோ கடத்த வேணும்?’ – பகிடியாகவே சொல்லிவிட்டுப் போனார் வழங்கற்பகுதியிலிருந்து வந்த பொறுப்பாளர்.


கள்ளப்பாடு மிகமிகச் சிறிய கிராமம். மிகமிக அன்பான மக்கள். நாங்கள் இருந்த இடத்தில் பொதுமக்களின் வாடி ஒன்றிருந்தது. மாலையில் கரைசேரும் படகிலிருந்து எமக்கு ஒரு திருக்கை மீன் அன்றாடம் தந்துகொண்டிருந்தார்கள் அம்மக்கள். றீகஜீவன் (கரும்புலி மேஜர் றீகஜீவன் ஓயாத அலைகள் – 3 இல் யாழ்ப்பாணத்தில் ஒரு நடவடிக்கையின் போது வீரச்சாவு) செய்யும் திருக்கைப் புட்டுக்காக நாங்கள் காத்திருப்போம். பசி அடங்காவிட்டால் தென்னம்பாளையோடு கடற்கரைக்குக் கிளம்பிவிடுவான் றீகஜீவன், அவனோடு நாங்களும். கரையிலோடும் நண்டுகளை அடித்து சுட்டுச் சாப்பிடுவோம். என்னதான் இரகசியமாக, நடுச்சாமத்தில் இதைச் செய்தாலும் மறுநாட்காலை மகளிர் அணி தொடக்கம் கிராமம் முழுவதும் கேட்கும் ‘என்ன.. ராத்திரி பீ-நண்டு சுட்டுச் சாப்பிட்டனியள் போலகிடக்கு?...’ ஒருகட்டத்தில், நடுச்சாமத்தில் நண்டுசுடும் மணத்திலிருந்து தப்ப நினைத்தோ என்னவோ இரண்டு திருக்கைகளைத் தரத் தொடங்கினார்கள் அம்மக்கள்.


இடையில் ஒருநாள் கடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை வேலைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக் கட்டடத்தை அண்டிய பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். வடலியோலைகள், உடைந்த ஓடுகள், தகரங்கள், பனங்குற்றிகளைக் கொண்டு ஓர் இராணுவ முகாமின் மாதிரி அமைக்கும் வேலை அது. அந்நடவடிக்கைக்கான அணியினரில் சிலர் வேவு நடவடிக்கையிலும் ஏனையோர் பயிற்சிக்கான அயத்தப்பணியிலும் நின்ற காரணத்தால் மற்ற அணியைக் கொண்டே மாதிரி அமைக்கப்பட்டது. கரைச்சிக் குடியிருப்பும் கள்ளப்பாடும் ஒரு கிலோமீற்றர் இடைவெளியில் இருந்தும்கூட இரு அணிகளுக்குமிடையில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ஒருவரையொருவர் சந்திக்கவோ கதைக்கவோ சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. மாதிரி இராணுவத் தளத்தை வைத்துக்கொண்டு ஏதோவோர் ஆட்லறித் தளம் மீதான தாக்குதலுக்கான பயிற்சி நடக்கப் போகிறதென்ற அளவில் கடற்பயிற்சி அணி ஊகித்திருந்தது.


தொடரும்...

 - இளந்தீரன் -

Share This:

No Comment to " களங்கள் -2. ஓயாத அலைகள் மூன்று "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM