களங்கள் - 10. ஓயாத அலைகள் மூன்று
03 ஆம் நாள் நள்ளிரவு தாண்டி 04 ஆம் நாள் அதிகாலையில் இயக்கத்தின் கவனம் கனகராயன் குளம் தளம் மீது திரும்பியது. ஜெயசிக்குறு மூலம் முன்னேறி நிலைகொண்டிருந்த இராணுவத் தளங்களுக்குரிய முதன்மைக் கட்டளையகமாகவும் வினியோகத் தளமாகவும் இத்தளமே விளங்கியது.
பாரிய மருத்துவமனை, வெடிபொருட் களஞ்சியம், உணவுக் களஞ்சியம், பல நீண்டதூர வீச்சுக்கொண்ட ஆட்லறிகளைக் கொண்ட ஆட்லறித்தளம் என்பன இக்கூட்டுப்படைத்தளத்துள் அடக்கம். மூன்றுமுறிப்பு, மாங்குளம், ஒலுமடு, கரிப்பட்டமுறிப்பு, மேளிவனம், ஒட்டுசுட்டான் போன்ற தளங்களின் பின்னணிக் கட்டளை மையமாகவும் வினியோக மையமாகவும் இது விளங்கியது. இந்தத் தளத்திலிருந்து கிடைக்கும் உதவிகளே தற்போது சண்டை நடந்துகொண்டிருக்கும் கரிப்பட்ட முறிப்பிலிருக்கும் படையினருக்குரிய பலமாக இருந்தது.
04/11/1999 அதிகாலையில் கனகராயன்குளப் படைத்தளம் எமது ஆட்லறிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. ஏற்கனவே தளத்தினுள் ஊடுருவியிருந்த கரும்புலி மறைச்செல்வனின் தொடர்போடு இத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இரவு நேரத்தில் எதிரியின் ஆட்லறி நிலைகளை இலகுவாக இனங்காண வேண்டுமானால் அந்த ஆட்லறிகளைக் கொண்டு எதிரி தாக்குதல் நடத்த வேண்டும். இப்போது கரிப்பட்ட முறிப்பு, மணவாளன்பட்டமுறிப்பு, அம்பகாமம் போன்ற முகாம்கள் மீதும் முன்னணிக் காவலரண்கள் மீதும் நடக்கும் தாக்குதலை முறியடிக்க கனகராயன்குளத்திலிருந்த அனைத்து ஆட்லறிகளும் தாக்குதலை நடத்தத் தொடங்கியிருந்தன. இதைப்பயன்படுத்தி மறைச்செல்வன் நிலைகளின் ஆள்கூறுகளைக் கொடுக்க, அதன்படி ஏவப்பட்ட எறிகணைகளுக்கான திருத்தங்களையும் மறைச்செல்வன் கொடுக்க, வெற்றிகரமாக எமது ஆட்லறிகள் எதிரியின் ஆட்லறி நிலைகளைப் பதம் பார்த்தன. பத்து நிமிடங்களுக்குள் எதிரியின் ஆட்லறிகள் அனைத்தும் தமது செயற்பாட்டை நிறுத்திக் கொண்டன.
இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும்.
அடுத்தகட்டமாக ஆட்லறிகளின் அருகிலிருந்த இலக்குகளுக்கான தாக்குதலை மறைச்செல்வன் வழிநடத்தினான். வெடிபொருட்களஞ்சியம் மீதான தாக்குதல் மிக முக்கியமானது. எறிகணைகளுக்கான மிகத் துல்லியமான திருத்தங்களைச் சொல்லி வெடிபொருட்களஞ்சியக் கட்டடத்தினுள் எமது ஆட்லறி எறிகணைகளை வீழ்த்தி அவற்றைத் தகர்த்தழிக்கும் பணியை வெற்றிகரமாகச் செய்தான் மறைச்செல்வன். பல்லாயிரக்கணக்கான ஆட்லறி எறிகணைகள் (தனியே கனகராயன் குளத்திலுள்ள ஆட்லறிகளுக்கான வெடிபொருட்கள் மட்டுமன்றி ஏனைய படைத்தளங்களுக்குமுரிய வினியோகமும் இங்கிருந்துதான் என்றபடியால் மிக ஏராளமான வெடிபொருட்களைக் குவித்து வைத்திருந்தது இக்களஞ்சியம்.), மோட்டார் எறிகணைகள் கொண்ட இத்தளம் வெடித்துச் சிதறியது. அன்று அதிகாலை எரியத் தொடங்கிய அக்களஞ்சியம் பல மணித்தியாலங்கள் வெடித்து வெடித்து எரிந்துகொண்டிருந்தது. களஞ்சியம் வெடித்து எரியும் சத்தத்தை தொலைத்தொடர்பு கருவி வழியாக மற்றவர்கள் கேட்கும் வண்ணம் மறைச்செல்வன் நெருங்கிச் சென்று ஒலிபரப்பினான். எமது கட்டளை மையத்தில் மிகவும் உற்சாகம் பரவியது. ஏனென்றால் வெடிபொருட்களஞ்சியம் வெடித்துச் சிதறி எரியத் தொடங்கிவிட்டால் இனி அத்தளத்தை இராணுவம் முற்றாகக் கைவிட்டுவிடவே எத்தனிக்கும். அத்தளத்திலிருந்துகொண்டு தற்போதைக்கு எந்தச் செயற்பாடும் நடைபெற வாய்ப்பில்லை. இது ஏனைய இராணுவத்தளங்களையும் பாதிக்கும். குறிப்பாக தற்போது சண்டை நடந்துகொண்டிருக்கும் படைத்தளங்களை நேரடியான பாதிப்புக்குள்ளாகும். ஆகவே சண்டை இலகுவாகவே முடியும் என்பதோடு ஏனைய பகுதிகளைக் கைப்பற்றுவதும் அதிக சிரமமாக இருக்கப் போவதில்லை.
உண்மையில் கனகராயன்குளத்திலிருந்த ஏனைய கட்டடங்களும் கடுமையான சேதங்களுக்கு உட்பட்டன. இராணுவத்தினரின் பின்னணி மருத்துவமனையாக இயங்கிவந்த கட்டடங்கள் முற்றாக எரிந்துபோயின. மருத்துவக் களஞ்சியம், உணவுக்களஞ்சியம் என்பனவும் எரிந்துபோயின. வெளிச்சம் வந்தபின்னரும் மறைச்செல்வனின் அணி அங்கேயிருந்து நிலைமைகளை அறிவித்துக் கொண்டிருந்தது. முகாமினுள்ளோ முகாமைச் சூழவோ தேடுதல் நடத்தும் நிலைமையில் அங்கு இராணுவத்தினர் இருக்கவில்லை. ஏராளமானோர் கொல்லப்பட்டிருந்தனர். காயப்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு சில வாகனங்கள் வவுனியாவுக்குப் போயின. அதிகாலையில் வரவழைக்கப்பட்ட ஓர் உலங்குவானூர்தியில் முதன்மைக் கட்டளையதிகாரி ஓடித்தப்பினார். உலங்குவானூர்தி முகாமினுள் தரையிறங்கியபோது மறைச்செல்வன் நிலைமையைச் சொல்லி மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த முயற்சித்தான். இரு எறிகணைகள் ஏவப்பட்டு, அவைக்கான திருத்தங்கள் எடுக்கப்பட்டு அடுத்த எறிகணை ஏவப்பட முன்னமே அவ்வதிகாரி உலங்குவானூர்தியில் ஏறிப்பறந்து போனார்.
ஓயாத அலைகள் மூன்றை நடத்தவென உள்நுழைந்த கரும்புலியணிகள் சாதாரணமான ஆயுதங்களோடேதான் சென்றிருந்தனர். ‘லோ’ போன்ற ஆயுதங்களோ குறைந்தபட்சம் 40 mm எறிகணை செலுத்திகளோகூட கொண்டு செல்லப்படவில்லை. இலக்குகளின் ஆள்கூறுகளையும் ஏவப்படும் எறிகணைகளுக்கான திருத்தங்களையும் சொல்வதுதான் நோக்கமாக இருந்தது. அத்தோடு நீண்டநாட்கள் நின்று செயற்பட வேண்டியதால் உலருணவுப் பொருட்கள், நீர்க்கொள்கலன்களின் நிறை என்பனவும் கவனிப்பட்டன. ஆகவே கனகராயன்குளத்தில் தரையிறங்கி ஏறிய உலங்கு வானூர்தியை வெறும் நூறு மீற்றர் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டு நிற்கவேண்டிய நிலைதான் மறைச்செல்வனின் அணிக்கு இருந்தது.
பின்னர் மறைச்செல்வனின் அணியைப் பின்னகர்த்தி வேறோர் இடத்துக்கு நகரும்படி கட்டளையிடப்பட்டது. நாலாம் திகதி காலையிலும் ஆயுதக் களஞ்சியம் வெடித்து வெடித்து எரிந்துகொண்டிருந்தது. கனகராயன்குளத்தில் தங்கியிருந்த கட்டளையதிகாரி தப்பிப் போனதோடு அந்தத் தளம் செயற்பாடிழந்தது. எஞ்சியிருந்த இராணுவ வீரர்கள் என்ன செய்வதென்று தெரியாது அங்குமிங்கும் அலைந்து திரிந்துகொண்டிருந்தனர்.
04/11/1999 இரவு
திட்டமிட்டதைப்போல கரிப்பட்டமுறிப்பு முகாம் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டது. ஏற்கனவே பலமாக இருந்த இந்தத் தளம், புலிகள் ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையைத் தொடங்கியபின் இன்னும் பலப்படுத்தப்பட்டிருந்தது. இதற்குப் பக்கதுணையாக இருந்த மணவாளன்பட்ட முறிப்பு, அம்பகாமல் என்பன இயக்கத்தால் கைப்பற்றப்பட்டுவிட்டாலும் ஒலுமடு உட்பட பல மினிமுகாம்கள் இன்னமும் பக்கபலமாக இருந்தன. இப்பாரிய படைத்தளத்தின் ஒரு தொகுதியாக இருந்த ஆட்லறித் தளங்கள் மீது எமது ஆட்லறிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி அவற்றை அழிப்பது அல்லது செயற்பட விடாமல் தடுப்பது என்பது இயக்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாகவிருந்தது. அதற்காக அங்கு அனுப்பப்பட்ட கரும்புலியணி மேஜர் செழியனின் தலைமையில் செயற்பட்டது. கரிப்பட்டமுறிப்பைச் சூழ நிகழ்ந்த கடுமையான சண்டையில் எதிரிக்குரிய பின்தளச் சூட்டாதரவுகள் பெருமளவு கிடைக்காவண்ணம் எமது கரும்புலிகளும் ஆட்லறிப் படையணியும் பார்த்துக் கொண்டதோடு பின்தளப் பகுதிகளில் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியிருந்தனர். ஏற்கனவே கனகராயன்குளத்திலிருந்த தளம் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டதோடு கரிப்பட்ட முறிப்புத் தளத்தின் பலம் குறைந்திருந்தது. ஓயாத அலைகள்-3 இன் முதற்கட்டத்தில் இறுதியாக நிகழ்ந்த கடும் சண்டை கரிப்பட்ட முறிப்புச் சண்டையே ஆகும். அத்தளம் வீழ்ந்ததோடு எதிரி ஓட்டமெடுக்கத் தொடங்கியவன்தான். ஓமந்தைவரை கடுமையான சண்டைகளின்றி எம்மால் கைப்பற்ற முடிந்தது.
05/11/1999
அன்று பகற்பொழுதில் நிகழ்ந்த கடுமையான சண்டையைத் தொடர்ந்து கரிப்பட்ட முறிப்பும், பின்பு ஒலுமடுவும் எம்மால் கைப்பற்றப்பட்டது. இவற்றிலிருந்து தப்பியோடிய படையினர் கனகராயன்குளத்துக்கே சென்று சேர்ந்தனர். ஏற்கனவே சிதைந்திருந்த அத்தளத்தில் அவர்கள் ஒருங்கிணைந்து நின்று சண்டை செய்யச் சந்தர்ப்பமிருக்கவில்லை. ஆனாலும் அணிகள் கூடிக்கூடி நிலையெடுத்துக் கொண்டனர்.
கரிப்பட்டமுறிப்பு வீழ்ந்ததும் புலிகளின் ஓரணி அங்கிருந்து நேராக கனகரான்குளம் நோக்கி நகர்ந்தது. அதேநேரம் மாங்குளம் மீதும் புதிய களமுனை திறக்கப்பட்டது. ஆனால் எந்தக் களமுனையும் கடுமையாக சண்டையை எதிர்கொள்ளவில்லை. மிக விரைவாக தளங்கள் வீழத் தொடங்கின. மாங்குளமும் அன்றே எமது கைகளில் வீழ்ந்தது. அன்று மாலைநேரத்தில் கனகராயன்குளம் மீது எமது அணிகள் தாக்குதலைத் தொடங்கின.
அன்றுமாலையில் புளியங்குளத்துக்கும் கனகராயன்குளத்துக்குமிடையில் A-9 பாதையைக் கடக்க முனைந்த செழியனின் தலைமையிலான கரும்புலியணியால் அது முடியவில்லை. ஏனென்றால் வவுனியாப் பக்கமாக இராணுவத்தினர் சாரைசாரையாக ஓடிக்கொண்டிருந்தனர். சிலர் A-9 வீதியாலும், பலர் தாம் தப்பியோடுவது தெரியக்கூடாதென்பதற்காக பாதையை விட்டு விலத்தி காட்டுக்கரையாலும் ஓடிக்கொண்டிருந்தனர். பாதையால் போய்க்கொண்டிருப்பவர்கள் வரும் வாகனங்களில் தொத்தியும் போய்க்கொண்டிருந்தனர். இராணுவத்தினர் பலர் ஆயுதங்களைத் தூக்கியெறிந்துவிட்டு வெறுங்கையுடன் ஓடிக்கொண்டிருந்தனர்.
‘செழியம்மான், ஒரு வாகனத்துக்குக் கிளைமர் வைச்சாலே நாப்பது அம்பது பேர் முடியும். இப்பிடியான நேரம் பாத்து ஒரு கோதாரியும் கொண்டரேல.’
சோபிதன் சலித்துக் கொண்டான்.
மயூரன் இன்னொரு திட்டத்தை முன்வைத்தான். LMG, RPG க்களோடு வரும் இரண்டொருவரைக் கொன்று ஆயுதங்களை எடுத்து பின்னர் கொத்துக் கொத்தாக அள்ளிப்போட்டுக் கொண்டு வரும் ஒரு வாகனம் மீது ஒரு மின்னல் வேகப் பதுங்கித்தாக்குதலைச் செய்வதுதான் அது. உண்மையில் ஒரு சண்டைக்கான மனநிலையிலோ தகுந்த விழிப்புணர்வோடோ பாதுகாப்பு ஏற்பாட்டோடோ இராணுவத்தினர் அவ்வழியால் செல்லவில்லை. எனவே மயூரனின் இந்தத்திட்டம் மிக இலகுவாக நடைமுறைப்படுத்தப்படக் கூடியது மட்டுமன்றி மிகப் பெருமளவான இராணுவத்தினரைக் கொல்லவும் வழிசெய்யும்.
எதற்கும் ஒருமுறை அனுமதியைப் பெற்றுவிடுவோம் என்று செழியன் கட்டளைப்பீடத்தைத் தொடர்புகொண்டபோது அப்படியொரு தாக்குதலுக்கான அனுமதி மறுக்கப்பட்டது. “ஓடிப்போகும் இராணுவத்தை ஒன்றும் செய்ய வேண்டாம்; பேசாமல் விட்டுவிடுங்கள், நீங்களும் அவர்களோடு முட்டுப்பட வேண்டாம்” என்று கட்டளை வழங்கப்பட்டது.
ஓயாத அலைகள் மூன்றின் முதற்கட்டத்தில் கரும்புலியணிகள் தமக்குத் தரப்பட்ட பணிகளை மிகத்திறமையாக செய்து முடித்திருந்தன. செழியனின் அணி திருத்தங்கள் சொல்லிக் கொண்டிருந்தபோது இலக்குக்குக் கிட்டவாக இருந்த காரணத்தால் எமது ஆட்லறி எறிகணையொன்றின் சிதறுதுண்டொன்று சோபிதனின் கையைப் பதம் பார்த்துச் சிறு காயத்தை ஏற்படுத்தியதைத் தவிர்த்துப் பார்த்தால் எந்தவிதச் சேதமும் எமது கரும்புலியணிகளுக்கு ஏற்படவில்லை.
கிட்டத்தட்ட ஒருமாதகாலத்துக்குரிய தள, உணவு வசதிகளோடு எதிரியின் பகுதிக்குள்ளிருந்தே கட்டளை மையமாகவும் ஒன்றுகூடுமிடமாகவும் செயற்படும் திட்டத்தோடு பொருட்களைக் காவிச் சென்று தளம் அமைத்த நவம் அண்ணனின் தலைமையிலான அணியும் பெரிதாகச் செய்ய எதுவுமிருக்கவில்லை. அவர்கள் தளமிட்டிருந்த நைனாமடுக்காடு ஓயாத அலைகளின் வீச்சில் மூன்றாம்நாளே புலியணிகளால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. ஐந்து நாட்களிலேயே புளியங்குளம் வரைக்கும் புலிகள் கைப்பற்றியும் விட்டனர். எனவே நவம் அண்ணனின் அணியும் ஏனைய ஐந்து கரும்புலி அணிகளும் புதிதாக முன்னகர்த்தப்பட்டிருந்த எமது கட்டளை மையத்துக்கு வரும்படி – அதாவது எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும்படி பணிக்கப்பட்டன.
===========================
இவ்வளவும் வெளிவந்த கரும்புலி வீரர்களிடமும் கட்டளை மையத்தில் நின்ற எழிலிடமும் கேட்டு அறியப்பட்டவை. ஓயாத அலைகள் மூன்று தொடங்கியபோது முல்லைத்தீவில் கரைச்சிக் குடியிருப்பில் நின்ற நாமும் ஏனைய கரும்புலி வீரர்களும் என்ன செய்தோம்? எங்கு நகர்ந்தோம்? என்பன தொடர்பில் அடுத்த அங்கத்தில் பார்ப்போம்.
ஓயாத அலைகள்-3 நடவடிக்கையில் கரும்புலி மேஜர் செழியன், கரும்புலி மேஜர் மறைச்செல்வன் ஆகியோரின் பணிகள் பற்றி அப்போது கரும்புலிகளுக்கான சிறப்புப் பயிற்சி ஆசிரியராக இருந்த சசிக்குமார் மாஸ்டர் (வன்னியில் 2009 ஆம் ஆண்டு நிகழ்ந்த இறுதிநேர யுத்தத்தில் லெப்.கேணல் சசிக்குமார் மாஸ்டர் வீரச்சாவடைந்தார்) அவர்கள் தெரிவித்த கருத்து கீழ்வரும் காணொலில் இடம்பெறுகிறது.
No Comment to " களங்கள் - 10. ஓயாத அலைகள் மூன்று "