News Ticker

Menu

ஓகஸ்ட் 25 – தமிழர் படைபலத்தில் முக்கியநாள்

ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள்.
ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.

இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஓகஸ்ட் 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.



கடந்த ஆண்டு எமது சஞ்சிகையில் வெளிவந்த இக்கட்டுரையை அதே நினைவுநாளில் மீள்பதிவு செய்கின்றோம். -ஆ-ர்


முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுநாள் ஓகஸ்ட் 25 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டது.

ஓகஸ்ட் 25 இற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு?



அந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.

வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்தநாள்தான் ஓகஸ்ட் 25.
பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றோம்.

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறிலங்காவின் அரசபடைகள் முல்லைத்தீவில் அமைத்திருந்த பெரும் படைத்தளத்தைத் தாக்கி அங்கிருந்த இரண்டு ஆட்லறிப் பீரங்கிகளைக் கைப்பற்றினர் தமிழீழ விடுதலைப் புலிகள். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதல் ஆட்லறிப்பீரங்கிகள் தமிழர் வசமானது அப்போதுதான். இது நடந்தது 1996 ஜூலை 18.

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்று கைப்பற்றப்பட்ட இரண்டு ஆட்லறிகளுடன் தொடங்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணி படிப்படியாக வளர்ந்து மிகப்பெரும் படையணியாக மாறி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தது. ஆட்லறிப் பீரங்கிகளின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்தது. அதன்பின் வந்த போர்க்களங்களில் ஆட்லறிகள் மிகப்பெரும் வெற்றியை ஈட்டித் தந்தன.

தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட அந்த இரண்டு ஆட்லறிகளோடும் 900 எறிகணைகளோடும் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைத் தொடங்கினார்கள். முதற்கட்ட ஆட்லறித் தாக்குதல், ஜெயசிக்குறு தொடங்குவதற்குச் சிலநாட்களின் முன்பு வவுனியா ஜோசப் முகாம் மீது நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் இரவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலின் இழப்புக்களை படைத்தரப்பு மறைத்தாலும்கூட இரண்டாம் நாள் தாக்குதலில் அனைத்து எறிகணைகளும் முகாமுக்குள் வீழ்ந்தன என்பதும், படைத்தரப்புக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டதென்பதும் மறுக்க முடியாத உண்மை.


அதன்பின் ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட வலிந்த தாக்குதல்களில் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைப் பயன்படுத்தினார்கள். இடையில் புளுகுணாவ இராணுவ முகாமில் ஓர் ஆட்லறிப் பீரங்கியைக் கைப்பற்றினாலும்கூட, கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிய ஓயாத அலைகள்-2 நடவடிக்கை வரை, புலிகள் முல்லைத்தீவில் கைப்பற்றிய அவ்விரண்டு ஆட்லறிகளை மட்டுமே சமர்க்களங்களில் பயன்படுத்தி வந்தார்கள்.

விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்கு மூலகாரணம் மாவீரர் கேணல் ராயு. ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டது தொடக்கம் மிக நுணுக்கமாக அப்படையணியை வளர்த்து வந்தார். அவர் இறக்கும்வரை ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டே இருந்தார்.

விடுதலைப்புலிகளின் போரியல் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் அறிவியல் ரீதியில் முக்கிய பணியாற்றியவர்களுள் கேணல் ராயு முக்கியமானவர்.


புலிகளின் ஆட்லறிப் படையணியானது சுயமாக வளர்ந்தது. அவர்களின் முதலாவது தாக்குதலிலேயே துல்லியத்தன்மையை நிரூபித்திருந்தார்கள். ஈழப்போரின் இறுதிநாள்வரை புலிகளின் ஆட்லறிப்படையணியின் துல்லியத்தன்மை எதிர்த்தரப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் ஆச்சரியமாகவுமே இருந்தது.


யாருடைய உதவியுமின்றி, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆட்லறிகளை வைத்துக்கொண்டு, அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட எறிகணைகளையும் வைத்துக்கொண்டு நுட்பங்களை உணர்ந்து, தாமாகவே கற்றுத் தேர்ந்து வளர்ந்ததுதான் புலிகளின் ஆட்லறிப்படையணி. இதன் பின்னணியில் கேணல் ராயுவின் உழைப்பு அபரிதமானது.

ஆட்லறிப்படையணி என்று மட்டுமன்றி, இயக்கத்தின் பல்வேறு துறைகளிலும் கேணல் ராயுவின் பங்களிப்புகள் அளவிடப்பட முடியாதவை.

தொடக்க காலத்திலிருந்தே புலிகள் சுய ஆயுத உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வந்தவர்கள். புலிகளின் பயன்பாட்டிலிருந்த 90 சதவீதக் கண்ணிவெடிகள் அவர்களின் சொந்தத் தயாரிப்புக்கள்தாம். போராட்டத் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்து சீரான வினியோகம் உறுதிப்படுத்தப்படும்வரை அவர்கள் பயன்படுத்திய மோட்டார் எறிகணைகள்கூட சொந்த உற்பத்தியே.

rajuஅவ்வகையில் படைக்கல உருவாக்கம், வடிவமைப்பு, உற்பத்தி என்பவற்றில் கேணல் ராயுவின் பங்களிப்பு நிறையவே உள்ளது. புலிகளின் பொறியியற்றுறைக்குப் பொறுப்பாக இருந்து பணியாற்றினார். கணிணி நுட்பப்பிரிவு, தமிழாக்கப்பிரிவு, திரைப்பட மொழிபெயர்ப்புப் பிரிவு என்பவை உட்பட அறிவியல் சார்ந்த துறைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். இயக்கத்தின் முக்கியமான வெடிமருந்து நிபுணராக இவரே விளங்கினார். கடற்கரும்புலித் தாக்குதல்கள், தரைக்கரும்புலித் தாக்குதல்கள், மறைமுகமான தாக்குதல்கள் என்பவற்றில் இவரின் வெடிமருந்து நிபுணத்துவம் பங்காற்றியிருந்தன.

விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியாக 'சிறுத்தைகள்' என்ற பெயரில் பெரும்படையொன்று உருவாக்கப்பட்டது. வருடக்கணக்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அப்படையணி உருவானது. கடற்சிறுத்தைகள் என்ற பெயரில் கடற்பிரிவொன்றும் இப்படையணியின் அங்கமாக வடிவம் பெற்றது. ஒட்டுமொத்தச் சிறுத்தைப்படையணி உருவாக்கமும் முழுமையாக கேணல் ராயுவின் தலைமையின் கீழ்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகச்சிறந்த அறிவியலாளன், இயக்கத்தின் நுட்ப வளர்ச்சிக்குரிய ஆணிவேர், கேணல் ராயு புற்றுநோய்க்கு இரையாகிச் சாவடைந்தார். யுத்தம் ஓய்ந்து புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு சில மாதங்களில் அவர் இறந்தார்.



இயக்கத்தின் ஆட்லறிப்படைப்பிரிவின் உருவாக்கம், வளர்ச்சி என்பவற்றில் முன்னின்றுழைத்த கேணல் ராயு, 2002 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் நாள்– ஆம்! பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் ஆங்கிலேயரின் பீரங்கிகளைக் கைப்பற்றி வெற்றிகொண்ட  நினைவுநாளில்தான் - சாவடைந்தார்.

மாவீரர் கேணல் ராயுவுக்கு எமது அஞ்சலி.

Share This:

No Comment to " ஓகஸ்ட் 25 – தமிழர் படைபலத்தில் முக்கியநாள் "

  • To add an Emoticons Show Icons
  • To add code Use [pre]code here[/pre]
  • To add an Image Use [img]IMAGE-URL-HERE[/img]
  • To add Youtube video just paste a video link like http://www.youtube.com/watch?v=0x_gnfpL3RM