என்னதான் மண்டையைப்போட்டு உடைத்தாலும் சுமதிக்கு அமுதாவைத்தவிர வேறுவழி எதுவுமே தெரியவில்லை. அவள் என்னை சகித்துக்கொள்வதைப்போல நானும் அவளை சகித்துக்கொள்ள வேண்டியதுதான். அமுதா இயல்பாகவே பொறுமைசாலி என்பதால் பொறுத்துப்போவாள்.
முன்பெல்லாம் அவள் என்னுடைய வேலைகளையும்கூட பங்குபோட்டுக்கொண்டு செய்தவள் ஆயிற்றே. இப்போதுகூட அன்பாகத்தானே என்னை வரவேற்கிறாள்.
அந்தப் போராளிப்பிள்ளையுடன் தான் இருந்து கதைக்காததுதானே அவளுக்கு கோபம். பின்னே என்னவாம், என் சிநேகிதி என்று என்னை அவள் அறிமுகப்படுத்த தான் முகத்தில் அறைந்தமாதிரி எழுந்து வந்ததும் தவறுதானே. பிடிக்காவிட்டாலும் சும்மா கொஞ்சநேரம் இருந்திருக்கலாம்தானே. இது அவள்வீடு. அவளுக்குப் பிடித்தவர்கள், அவளுடைய அம்மாவுக்குப் பிடித்தவர்கள் இந்தவீட்டுக்கு வருவதில் நான் தலையிட முடியாதுதான் என்றெல்லாம் எண்ணி தன் மனதை சமாதானப் படுத்திக்கொண்டாள்.
ஏனோ அவளது வீட்டு நினைவுகள் பாழடைந்ததுபோல மங்கலாகி விட்டதாய்த் தோன்றும். அந்த வீட்டையும் வீட்டு மனிதர்களையும் மறந்துவிடவே விரும்பினாள். இதோ இப்படி இவள் துன்பப்படுகிறாளே இதற்கு வீட்டு வளர்ப்பும் காரணமல்லவா? பிறரை அண்டாமல் வளர்த்துவிட்டது பெற்றோரின் குற்றம்தானே. அமுதா எவ்வளவு கலகலப்பாகப் பேசுகிறாள். நோயாளிகளுடன்கூட நின்று நிதானமாக பேசிக்கொண்டிருப்பாள். அவர்கள் சொல்வதை அவ்வளவு பொறுமையாகக் கேட்பாள். எல்லோரையும் சமாளிப்பாள். ஆனால் நான்?
‘மிஸ் மிஸ் அந்த மிஸ் வேண்டாம் மிஸ். நீங்களே ஊசியையும் போட்டுவிட்டிட்டுப் போங்க மிஸ்’ என்று நோயாளிகள் தன்னை மறுத்து அமுதாவிடம் கெஞ்சியதெல்லாம் நினைவு வந்தது. நான் எதற்காக அப்படி இருந்தேன் என்று நினைத்தபோது அது தவறு என்றும் புரிந்தது. தான் அந்த வேலையை தெரிவுசெய்ததே மகா தவறு. நானாக விரும்பியா அந்த வேலையை ஏற்றுக்கொண்டேன்? இல்லவே இல்லை. வேலை வேண்டும் என்ற சமயத்தில் அந்தவேலைதான் கிடைத்தது. வேறுவேலை கிடைத்திருந்தால் நேஸ் வேலையிலெல்லாம் இணைந்திருக்கவே மாட்டேன் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் சுமதி.
மாலை அமுதா வந்தபோதும் சுமதி அறைக்குள்ளேயேதான் அடைந்து கிடந்தாள்.
‘ஏன் சுமதி மூலைக்கயே கிடக்கிறாய்? வெளிய வாவன். முற்றத்தில நிண்டு பூக்கண்டுகளப்பாரன். நல்ல காற்றையும் உணரமுடியும்’ என்று அவளின் கையைப்பிடித்து இழுத்துச்சென்றாள் அமுதா. நாற்காலிகளை முற்றத்தில் போட்டுக்கொண்டு அமர்ந்திருப்பதும் நன்றாகத்தான் இருந்தது. மனப்பாரம் குறைந்ததுபோன்ற உணர்வு எழத்தான் செய்தது.
‘வாமனைப்பற்றி விசாரிச்சன் சுமதி. எப்பிடியும் ஆளுக்கு தகவல் கிடைக்கும் எண்டுதான் நம்புறன். ரெண்டு மூண்டு பேரிட்ட சொல்லி விட்டனான்.’
‘என்னவெண்டு?’
‘உங்களத்தேடி சுமதி வந்திருக்கிறாள். உடனே அமுதா வீட்டுக்கு வரவும் என்றுதான்.’
‘கடவுளே’ என்று ஏங்கினாள் சுமதி.
‘அப்ப நீ அவரைத்தேடி வரேல்லயா?’ என்று கண்சிமிட்டினாள் தோழி.
‘இல்ல….. நான்… வந்து…’
‘என்னப்பா இல்லை என்கிறாய்? காலமதானே வாமனத்தேடி வந்தன் இனி நான் என்ர வீட்டுக்கே போகமாட்டன் எண்டுசொன்னாய்?’
‘ஓ சொன்னனான்தான்.’
;அதாலதான் வாமனுக்கு நானும் தகவல் சொல்லிவிட்டன்.’
‘எங்க இருக்கிறாராம்?’
‘தெரியாது’ என்று தோளை குலுக்கினாள் அமுதா.
அன்றிரவு தோழியர் இருவரும் பழைய கதைகளையும் புதுக்கதைகளையும் பகிர்ந்து கொண்டார்கள். அம்மாவும்கூட அவர்களது கதையுடன் சேர்ந்து தனது கருத்துக்களையும் சொன்னாள்.
‘அதுசரி அம்மா, மத்தியானம் வந்தது உங்கன்ர மகனா?’
‘ம்’
‘யாரம்மா வந்தது?’ என்று ஆவலோடு கேட்டாள் அமுதா.
‘கீர்த்திகன்’
‘ஆ. கீர்த்தி வந்தானா? அவனின்ர சின்னக்கா இண்டைக்கும் வந்து கேட்டிட்டுத்தான் போறா. இன்னொருக்கா வந்தானெண்டா அவனையொருக்கா வீட்ட போகச்சொல்லுங்கம்மா. அம்மா கொஞ்சம் ஏலாம இருக்கிறாபோல. இவனக்கண்டால் மனுசிக்கு மருந்தும் தேவையில்லை.’
சுமதிக்கு ஒன்றும் புரியவில்லை. அவனுக்கென்ன ரெண்டு அம்மாவா? அவனுடைய அம்மா நான் என்கிறார் இந்த அம்மா. அவனைப்போய் அம்மாவை பார்க்கச்சொல்லு என்று இந்த அம்மாவிடமே சொல்கிறாள் அமுதா. இதென்ன புதிர்?
‘ஏனமுதா அவனுக்கு எத்தனை அம்மாக்கள் இருக்கினம்?’ என்று கேட்டேவிட்டாள் சுமதி.
அமுதாவும் அம்மாவும் சத்தமாகச் சிரித்தார்கள்.
‘அவனுக்கா? எனக்குத்தெரிய அஞ்சாறு. தெரியாமல் பத்துப் பதினைஞ்சோ அம்பதோ நூறோ இருக்கலாம்’ என்றாள் அமுதா.
‘என்னெண்டடி?’ என்று வாயைப்பிளந்த அவளை குறும்போடு பார்த்தபடி தன் தாயாருக்கு பதில் சொன்னாள் அமுதா,
‘இது ஒரு யாழ்ப்பாணத்துப் பட்டிக்காடு அம்மா. ஊருலகம் தெரியாத பாப்பா. போராளிகளின் கடமை, நேர்மை, விடுதலைக்காக அவர்கள் பட்டபாடும் படும்பாடுகளும் இவளுக்குத் தெரியாது அம்மா.’ என்றாள் அமுதா சோகமாக.
கீர்த்திகன் வந்தபோது சுமதி ஏன் அறிமுகத்துக்குக்கூடச் சிரிக்கமாட்டாமல் இருந்தாள் என்பதை அம்மா இப்போது புரிந்துகொண்டாள்.
‘ஏன் சுமதி சும்மா இருந்து என்ன செய்யப்போறாய்? ஆஸ்பத்திரியில வேலை செய்வியா? வேணுமெண்டா ஒழுங்கு படுத்தித்தாறன்.’ என்று கேட்ட அமுதாவை நன்றியோடு பார்த்து ஓம் ஓம் ஓம் என்று தலையாட்டினாள் சுமதி.
‘இதப்பத்தி டொக்டரோட கதைக்கிறன். ஆனால் சுமதி இது யாழ்ப்பாணம் மாதிரி இருக்காது’ என்றாள் நகைப்புடன் அமுதா.
‘சும்மா இருக்கேலாது அமுது’ என்று சுமதி அலுப்புக்காட்டி உடல்வளைத்து நிமிர்ந்தாள்.
‘அதான் வேலை செய்யப்போறியே சுமதி. இனித்தான் நீ வேலையே செய்யப்போறாய் பார்’ என்ற அமுதாவின் நையாண்டிகூட சுமதிக்கு இப்போது ஆறுதலாகத்தான் இருந்தது.
எண்ணி நான்கே நாட்களில் சுமதிக்கான வேலைக்கு அமுதாவே அழைத்துச்சென்றாள். அமுதாவின் மருத்துவமனையிலேயே தானும் வேலை செய்யலாம் என்பது அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. நேரடியாக வைத்திய அதிகாரியிடமே அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினாள்.
‘நல்லது சுமதி. உங்கட வேலை அநுபம்பற்றி அமுதா தேவையானளவு சொல்லியிருக்கிறா. கொஞ்சநாளைக்கு வோட் பாருங்கோ. என்ன சிக்கல் எண்டாலும் என்னோடவந்து நீங்களே கதைக்கலாம். அல்லது அமுதாட்டயும் சொல்லலாம். அமுதா நேஸாக இருந்தாலும்கூட இங்க அவ ஒரு டொக்டருக்கு நிகரான ஆள்தான். அந்தளவுக்கு அவவுக்கு அநுபவமிருக்குது’ என்றுவிட்டு இருவரையும் பார்த்துப் புன்னகைத்தார் வைத்திய அதிகாரி.
அமுதா லேசாகப்புன்னகைத்து அவரது பாராட்டை ஏற்றுக்கொண்டதை சுமதியும் அவதானித்தாள்.
யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்குமான மருத்துவமனையில்கூட மாற்றங்கள் தெரிந்தன. பார்க்குமிடமெல்லாம் விடுதலைப்போராளிகள் தெரிந்தார்கள், யாழ்ப்பாணத்தில் படையினர் திரிவதைப்போலத்தான். அதுமட்டுமல்ல மருத்துவமனை நிர்வாகம் கொண்டுவரும் சட்டதிட்டங்களுக்கு போராளிகள் மதிப்பளிக்கிறார்கள்.
இராணுவ உபகரணங்களுடனோ சீருடைகளுடனோ உள்ளே வரக்கூடாது என்றால் வரமாட்டார்கள். பொது நிர்வாகங்களை போராளிகள் மதித்து நடக்கிறார்கள் என்ற முதல் அபிப்பிராயம் சுமதிக்கு அங்குதான் மனதில் விழுந்தது. சாதாரண பணியாளர்களைப்போல கடமைசெய்பவர்களில் பலரும் போராளிகள்தான் என்று அறிந்தபோது ஆச்சரியப்பட்டாள் சுமதி. இப்படித்தானே வாமனும் இருந்திருக்கிறான். இந்த மருத்துவமனையிலும்கூட எவரையும் போராளியா பொதுமகனா என்று தெரிவதில்லைத்தான். ஆனாலும் அவர்கள் போராளிகள் என்று அறிந்தபின் புரிகிறது, அவர்களுக்கென்று ஒரு நடையுடை பாவனை இருக்கிறதுதான் என்று.
அந்த மருத்துவமனையில் பல்வைத்தியர் இல்லை என்பதற்காக மருத்துவ நிர்வாகம் நோயாளிகளின் நலன்கருதி போராளி மருத்துவர் ஒருவரை அழைத்தபோது பல்மருத்துவராக ஒரு பெண்போராளிதான் வந்திருந்தார். பார்த்தால் அவரை போராளி என்று எவரும் சொல்லிவிட முடியாது.
சேலைகட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கடமைக்கு வந்துசெல்லும் அவர் ஏனைய மருத்துவர்களைப்போலவே இருந்தார். பார்த்தால் சாதுவாகவும் மெலிந்த உடல்வாகும்கொண்ட அவரால் எப்படி பற்களை இழுத்துப் பிடுங்கமுடிகிறதோ என்றுகூட ஆச்சரியப்பட்டிருக்கிறாள் சுமதி. அவளை முன்பின் அறிந்திராதவர்கள் என்றாலும்கூட அக்கா அக்கா என்று வார்த்தைக்கு வார்த்தை அன்பாக அவளை அழைக்கும் பாங்கு, வணக்கமக்கா என்று அன்பொழுகக் கைகூப்பும் முறை, சின்னச்சிக்கல் என்றாலும்கூட ஏதாவது உதவி தேவையா அக்கா என்று அருகில்வந்து உதவுகின்ற அக்கறை என்று எல்லாமே அவர்களை இன்னார் என்று இனங்காட்டிவிடும்.
போராளி என்பவனுக்குள்ளும் ஏதோவொன்று வித்தியாசமாக இருக்கிறது. அவள் மேற்பார்வை செய்யும் விடுதியில்கூட சில போராளிகள் வந்து சிகிச்சைக்காக தங்கிப்போகிறார்கள். இயக்கம்பற்றிய ஏராளமான விடயங்களை அவள் கொஞ்சம் கொஞ்சமாக அறியத்தொடங்கியது அந்த மருத்துவமனையில்தான்.
திடீரென்று ஒருநாள் வாமன் தன்முன்னால் வந்து நிற்பான் என்று சுமதி கனவிலும் நினைக்கவில்லை. ஏன் வாமனும்கூடத்தான் நினைக்கவில்லை அமுதாவீட்டில் சுமதி நிற்பாள் என்று. இரவு ஏழு மணியிருக்கும். மருத்துவமனையால் வந்து குளித்துவிட்டு உணவுண்பதற்காக அமுதாவுடன் அமர்ந்தாள். வெளியேகேட்ட மோட்டார் சைக்கிளின் ஒலி இங்குதான் யாரோ வருகிறார்கள் என்று அறிவித்தது.
வீட்டுக்குள்ளிருந்து அம்மாவோ அமுதாவோ வெளியே போகமுன் அவன் உள்ளே வந்துவிட்டிருந்தான். வாசலின் நிலை தலையில் முட்டுமளவுக்குநின்ற வாமன்தான் ‘அம்மா’ என்று கூவிவிட்டு ‘ஹாய் அமுதா’ என்றபின் அருகில் இருந்தவளை பார்த்தான். அந்தக்கணமே அருண்டுவிட்டான். கையும் களவுமாகப்பிடிபட்டுவிட்ட கள்வனைப்போல செய்வதறியாது திகைத்தான்.
அவன் அணிந்திருந்த வரிச்சீருடையைப்பார்த்து அவனே ஒருகணம் திண்டாடினான். அவனை எரித்துவிடுவதைப்போல பார்த்த சுமதியைப்பிடித்து உலுக்கிய அமுதா, ‘இருங்க வாமன். என்ன அப்பிடி அதிர்ச்சி ஆகிட்டிங்க? சுமதி இங்கவந்ததப்பற்றி உங்களிட்ட ஒருதருமே சொல்லயில்லையா?’
‘இல்லையே’ எனும் பாவனையில் உதட்டைப்பிதுக்கி தலையை ஆட்டினான். அவனுடைய திண்டாட்டத்தைப் புரிந்துகொண்டு அமுதாதான் சமாளிக்கவேண்டி இருந்தது.
‘சரி சரி நீங்க யார் என்றதெல்லாம் சுமதிக்குத்தெரியும். அதால சரியான பாசமாத்தான் இருக்கிறா. முதல்ல இருங்கோ. ஆள் வந்து ஒருமாதம் ஆகிட்டுது. இப்ப என்னோடதான் கொஸ்பிட்ரல்ல வேலைசெய்யிறா. நீங்க இருங்கோ.’ என்று கதிரையைக்காட்டினாள் அமுதா. வாமனும் அமர்ந்துவிட்டான்.
இன்னும் வளரும்








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















