கவிமதி என்ற அந்தப்பெண் மோட்டார் சைக்கிளை என்னமாய் ஓட்டுகிறாள்? இருட்டு நேரம் என்பதுகூட அவளது நினைவில் இல்லையா? இந்த வேகத்தில்போய் ஏதாவது நடந்துவிட்டால்? தன்னுடைய சைக்கிளின் வெளிச்சத்தில் மட்டுமே பாதையைப்பார்த்து இந்தவேகத்தில் பறக்கிறாள் என்றால் பகலில் எப்படி ஓட்டுவாள்? இவளுக்கொன்றும் அதிக வயதிருக்காது. எப்படியும் ஒரு இருபதுதான். துணிச்சல்காரப்பெண்ணாக இருப்பாள்போலும். இல்லாவிட்டால் இந்த இரவில் புறப்பட்டிருப்பாளா என்றெல்லாம் சுமதியின் எண்ணம் கவிமதியைச் சுற்றியே வட்டமடித்துக்கொண்டிருந்தது.
இந்த அக்கா என்னவென்று இப்படி தனியேவந்து இங்கே குதித்தார்? அமுதாக்காவிடம் செல்லவேண்டுமென்றால் நேற்றைய பேருந்திலேயே புதுக்குடியிருப்புக்கு போயிருக்கலாமே. பெரியம்மா வீட்டுக்குத்தான் வரச்சொல்லி இருப்பார்களாக்கும். பெரியவர்கள் நடத்துகிறார்கள். நமக்கேனப்பா வீண் கவலை? ஆளைக்கொண்டுபோய் இறக்கிவிட்டால் சரி. அமுதாக்காவை மாதிரி இன்னொருத்தியின் சேவையும் நாட்டுக்கு கிடைக்கப்போகிறதாக்கும்.
அமுதாக்கா எவ்வளவு நல்ல மனுசி. தன்னைப்பற்றியே யோசிக்காமல் பிறருக்காவே வாழ்கிறாள். இன்னமும் திருமணம்கூட செய்துகொள்ளவில்லை. அதில் அக்காவுக்கு விருப்பமில்லை என்றில்லை. ஏதோ காதல் சமாச்சாரம்தான். அது என்னவென்று சரியாக தெரியவில்லை. அமுதாக்காவின் பண்புக்கும் அன்புக்கும் ஈர்க்கப்படாத மனிதர் இருக்க முடியாது. எப்படியும் ஒரு போராளியோ பொறுப்பாளரோ அவளது மனதைக் கொத்திக்கொண்டு போயிருப்பார்கள்தான். அவர்களுக்காகத்தான் அக்கா காத்திருக்கிறா போலும். அல்லது தாலிகட்டியதும் வேலைக்கெல்லாம் போகவேண்டாம் என்று காதலித்தவர்தான் சொல்லித்தொலைத்தாரோ தெரியவில்லை. அப்படியெல்லாம் வேலையை விட்டுவிடக்கூடியவர் அமுதாக்காஇல்லை.
எத்தனையோ திறமைமிக்க பெண்கள் போராளியாக இருந்தாலும்சரி திருமணத்துக்குப் பின், கணவர் சொற்கேட்டு நடக்கவேண்டிய துர்ப்பாக்கியம் பலருக்கு வந்துவிடுகிறது என்று கவிமதியின் எண்ணங்களோ அமுதாவைச் சுற்றித்தான் வட்டமடித்தன. எப்படியோ இருள்சூழ்ந்த அந்தப் பயணத்திற்கும் முடிவு வந்துவிட்டது.
‘அக்கா இறங்குங்கோ’ என்று கவிமதி சொன்னபிறகுதான் எப்படி தான் ஒரு கோழிக்குஞ்சாக அவளின் முதுகோடு ஒண்டிக்கிடக்கிறேன் என்ற தன்னுணர்வு வந்தது சுமதிக்கு. அவசரமாக கீழே பையைப்போட்டுவிட்டு பாய்ந்து இறங்கிக்கொண்டாள். இதற்குள் மோட்டார் சைக்கிள் வந்துநின்ற சத்தம்கேட்டு யாரோ கையில் டோர்ச் வெளிச்சத்துடன் வீட்டுக்குள் இருந்து வந்தார்கள்.
‘அம்மா அமுதாக்கா நிக்கிறாவா?’ என்றாள் கவிமதி.
‘அவ இன்னும் வேலையால வரேலயே குஞ்சு. நீங்க உள்ள வாங்க’ என்றபடி வந்தபெண் உள்ளே சென்றாள். கவிமதி கீழேகிடந்த சுமதியின் பையை தூக்கிக்கொண்டுபோக சுமதியும் பின் தொடர்ந்தாள்.
‘இரவுக்கே வருவாவா? அல்லது காலையிலதானா?’ என்று சிரித்த முகத்துடன் விசாரிக்கும் போராளிக்கு,
‘என்னெண்டு தெரியேல்லையே. பெரும்பாலும் வந்திருவா எண்டுதானடா நினைக்கிறன்.’ என்று யோசனையோடு பதில் சொன்னாள் வீட்டுப் பெண்.
‘சரியம்மா. இந்த அக்கா அமுதாக்காட்டத்தான் வந்தவ. கொண்டுவந்து விட்டுட்டன். நான் அப்ப வெளிக்கிடுறன்.’ என்று தன் பொறுப்பு முடிந்துவிட்டதைப்போலச் சொன்னாள் போராளி.
‘என்ன! இந்த இரவில தனியவோ?’ என்று புரியாமல் விழித்த சுமதி தன்னை மறந்து எழுந்தே நின்றுவிட்டாள்.
‘நீங்க இருங்கோ அக்கா. நான் போட்டுவாறனம்மா. அமுதாக்காவை நானும் சுகம் கேட்டன் எண்டு சொல்லுங்கோ. கண்டு கனநாள் ஆகிட்டுது.’ என்றபடி கவிமதி வெளியேறினாள். பின்னோடேசென்ற வீட்டுப்பெண் அவளை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தார்.
‘இரனம்மா நான் அமுதான்ர அம்மாதான்.’ என்றபின்தான் சுமதி சுயநினைவுக்கு வந்தவளாய் அட இப்பவும் நின்றுகொண்டுதான் நிற்கிறேனா? என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு கதிரையில் அமர்ந்தாள்.
‘அமுதாவுக்கு நைற் டியூட்ரியா?’ என்று சுமதி கேட்டபோது, சுமதிக்கே தன் குரல் கேட்கவில்லை. அவ்வளவு மெதுவாகத்தான் அவளது குரல் வெளிப்பட்டது. கேள்வியோடு பார்த்த அம்மா,
‘தூரத்தில இருந்து வந்திருக்கிறிங்கபோல’ என்றார்.
‘ம் ஜஃவ்னா’ என்று தோளைக் குலுக்கினாள்.
‘அமுதாவோட பழக்கமோ?’
‘ஜஃவ்னா கொஸ்பிர்ரல்ல ஒண்டாய் வேலை செய்திருக்கிறம்.’
‘சரியம்மா. சாப்பிடுங்களன்’ என்று கேட்டவரை மறுத்து,
‘இப்பதான் கிளிநொச்சியில சாப்பிட்டிட்டு வந்தனான்’ என்றாள்.
‘அப்ப தேத்தண்ணியாவது குடியுங்க’ என்ற அம்மா உள்ளே சென்றார்.
சுமதிக்கு எல்லாமே ஒரு கனவுபோலத்தான் புதினமாக இருந்தது. தன் வாழ்நாளில் இப்படியெல்லாம் அவள் பிறரால் உபசரிக்கப்பட்டதில்லை. அவளும் பிறரை உபசரித்ததில்லை. இங்கானால் யாரென்றே அறியாதவர்களைக்கூட எப்படி அனுசரிக்கிறார்கள் என்று வியந்தாள். வீடு அமைதியாக இருந்தது. அமுதாவுக்கு சகோதரிகள் இருக்கவேண்டுமே? இங்கே அம்மா தன்னந்தனியே இருக்கிறார்? இவளேன் இன்னும் வரவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தவளின்முன் அம்மா தேநீரையும் பிஸ்கற்களையும் வைத்தார்.
‘அமுதாவுக்கு இண்டைக்கு நைற் டியூற்றியா?’ என்று இப்போது கொஞ்சம் சத்தமாகக் கேட்டாள் சுமதி.
‘அப்படியெல்லாம் இல்லையம்மா. வேலை கூடவெண்டா இப்பிடித்தான் பிந்தி வருவா. இல்லாட்டில் பின்னேரமே வந்திருவா. சிலவேள சாமம் ஆகும்.’ என்று சாதாரணமாகச்சொன்ன தாயாரை சுமதி பார்த்த பார்வை அவளுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
‘சாப்பிடம்மா’ என்ற தாயாரை மேலும் நோக்காமல் தேநீரை மட்டும் எடுத்துக்கொண்டாள் சுமதி. வாசலில் மோட்டார்சைக்கிள் ஒன்றின் ஒளி வந்து நின்றது. அம்மா டோர்ச் லைட்டுடன் வெளியே எட்டிப்பார்த்தார்.
சுமதி தேநீரைக் குடித்துவிட்டு குவளையை வைக்கும்போது அம்மா உள்ளே வந்தார்.
‘அமுதா காலமைதான் வருவாவாம். இப்பதான் சிவா வந்து சொல்லிட்டுப் போறான். நீங்க காலமைதான் அவவ சந்திக்கலாம். அப்ப படுப்பம் என்னடா’ என்றவாறு தாயார் படுக்கையை தயார் படுத்தினார்.
என்னதான் நடக்கிறது இங்கே? பட்டிக்காட்டுக் கூட்டம். சாமத்தில் வந்து ஒருவன் உன் மகள் இராத்திரி வரமாட்டாள் என்று சொல்லிவிட்டுப்போகிறான். டியூட்டி டைம் என்று இல்லாமல் அவள் வேலை பார்க்கிறாள். அவளை அக்கா அக்கா என்றுவேறு பெடியள் வழிகிறார்கள். அதான் அந்த ஓவியர் வீட்டுக்கு வந்த பையன் சொன்னானே, எங்கட அமுதாக்காவையா சொல்றிங்க. உயரம், வெள்ளை, இதில ரெண்டு தெத்திப்பல். சிரிக்கும்போது வடிவாய் இருப்பா என்று எவளவு பரவசத்துடன் குதித்தான்? சாமப்பேய்கள் மாதிரித் திரிகிறார்கள் இங்கே, என்று உள்ளுக்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தளை அம்மாவின் குரல் திசைமாற்றியது.
‘வாம்மா படுத்துக்கொள். முகம் கழுவப்போறிங்களா? உடுப்பேதும் மாத்திக்கொள்ளணுமா? பேக்கை அமுதான்ர அறையிலயே வைச்சிக்கொள்ளலாம். ம் இதுக்க வையுங்கடா.’ என்று பணிவிடை செய்தாள் தாய்.
உறங்கப்படுத்தபின் வாமன் கண்ணுக்குள் வந்து எரிச்சலையூட்டினான். வாமன் பொல்லாத கயவன். அவனை நம்பி நான் நல்லாய் ஏமாந்துபோனன். இப்படி முன்பின் அறியாத இடத்தில்வந்து எவருமற்ற அநாதையைப்போல கிடக்கிறேனே. அவனை நம்பி நான் வீட்டைவிட்டுப் புறப்பட்டிருக்கக் கூடாது. இனி எந்த முகத்தோடு வீட்டுக்குப்போவது? வீட்டாரை மறந்துவிட்டு நான் வேறு வழியை பார்க்க வேண்டியதுதான். வேறுவழி என்றால் என்னவழி? மனம் பலவாறு குழம்பத்தொடங்கியது. என்றாலும் உடலும் மனமும் களைத்துச்சோர்ந்த அவளை நித்திரை போர்த்த உறங்கிப்போனாள்.
காதுக்குள்கூவிய சேவலலின் ஒலிகேட்டு கண்விழித்தபோது, பொழுது நன்றாக விடிந்திருந்தது. எழுந்து வெளியே வந்தாள். முற்றம் அழகாகப் பெருக்கப்பட்டு பூக்கன்றுகளுக்கு நீரூற்றியும் இருந்தது. காலைச்சூரியனின் இதமான கதிர்கள் அழகிய ஒளியால் ஓவியம் தீட்டியது மனதுக்கு மேலும் இதமாக இருந்தது.
‘முகம் கழுவிட்டோ குளிச்சிட்டோ வாம்மா. தேத்தண்ணி குடிப்பம்.’ என்ற அம்மாவின் குரல்கூட அவளுக்கு ஆறுதலாகத்தான் இருந்தது. குளித்தால் நன்றாக இருக்குமே. தன்னிடமிருந்த உடை, சவர்க்காரங்களோடு கிணற்றடிக்குச்சென்றவள் நன்றாக அள்ளி முழுகினாள்.
சுருள் சுருளான நீண்ட தன் கூந்தலை துடைத்தபடி வாசலுக்கு வரும்போதே அம்மா ஆவிபறக்கும் தேநீரை நீட்டினார். அவளது வீட்டில் இப்படியொரு அம்மாவை அவள் கண்டதில்லை. விரும்பியவர்கள் விரும்பியபோது தேநீர் ஆற்றி குடித்துக்கொள்ள வேண்டியதுதான். அக்கா தேநீர் தயாரிக்கும்போது தேவையானால் எனக்கும் சேத்து ஆத்துங்கோ என்றால் மட்டும் கிடைக்கும். ஒருவர் தேவையை இன்னொருவர் உணர்ந்து உபசரித்ததே இல்லை எனலாம். ஆனால் இந்த உபசரிப்பு எவ்வளவு இதமாக இருக்கிறது. என்றாலும் இவர்களின் பழக்கவழக்கங்கள் சில உதைக்கத்தான் செய்கின்றன. ஆண்பெண்கள் கட்டுப்பாடுகளற்று இருக்கிறார்கள் போலத்தெரிகிறதே. தன் வீட்டிலானால் இன்று மகள் வீட்டுக்கு வரமாட்டாள் என்று யாரோ ஒருவன் வந்து சொன்னால் ஏற்றிருப்பார்களா? வீடே துள்ளி எழுந்து அவளை வேலையில் இருந்து நிற்பாட்டி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தத் தாயாரானால் ஒன்றுமேயில்லை என்பதைப்போல சாதாரணமாக விட்டுவிட்டாரே.
அதுசரி இரவு வந்துசொன்னவன் எவனாகவோவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒன்றும் கட்டாயமில்லையே. அவளது அண்ணனோ தம்பியாகவோகூட இருக்கலாம் இல்லையா என்று அவளதுஉள்மனம் அவளையே கேட்டது. உண்மைதான் அவள் இல்லாத ஒன்றைத்தான் கற்பனை செய்கிறாளோ? பெண்கள் தான்தோன்றித்தனமாக நடக்கக்கூடாதென்று தான் நினைப்பது சரியென்றால் நான் வீட்டைவிட்டுப் புறப்பட்டதும் தவறுதானே.
கவிமதி என்ற அந்தப்பிள்ளைமட்டும் இரவில் தனக்காக வராமல் விட்டிருந்தால் இரவு அவள் என்னபாடு பட்டிருப்பாள்? இந்த அம்மாவுடன் தங்கியதற்கு பதிலாக அந்தப்பெரியம்மாவுடன் தங்கியிருப்பாள் அவ்வளவுதானே என்றெல்லாம் எதையும் ஏற்கவும் முடியாமல் மறுதலிக்கவும் முடியாமல் மனம் பலவிதமாக குழம்பிக்கொண்டே இருந்தது சுமதிக்கு. எல்லாம் இந்த வாமனால் வந்த வினை. என்னபேர் சொன்னார்கள்? வானவர்மனா? லூசன். என்னை ஏமாற்றிய துரோகி. எனக்குப் பிடிக்காது என்று தெரிந்திருந்தும் என்னை எப்படி மடக்கிவிட்டான். அவனைக்கண்டால் நன்றாக ஏசவேண்டும். என் வாழ்க்கையைப் பாழாக்கிய முட்டாள் என்று வாமனை மனதுக்குள் ஏசிக்கொண்டிருந்தவளின் முன்னே அமுதா வந்துநின்றாள்.
‘ஏய் நீ… நீ….’ என்று மகிழ்ச்சியில் தடுமாறிய அமுதாவை சுமதி பாய்ந்துசென்று அணைத்துக்கொண்டாள். மனதின் இறுக்கம் உடைந்துசிதற ஓவென்று அழத்தொடங்கிய சுமதியை சமாதானப் படுத்துவதற்குள் அமுதாவுக்குப் போதும்போதும் என்றாகிவிட்டது. அவளைச்சமாளித்து இருத்திவிட்டு, ஒருசில வார்த்தைகளில் நலம் விசாரித்துவிட்டு, குளிப்பதற்கு ஓடினாள்.
‘என்ன அமுது திரும்பவும் போகப்போறியா?’ என்று ஏக்கத்துடன் கேட்ட சுமதியின் பார்வை அவளது உடையைப்பார்த்தது. ஏனெனில் அமுதா மருத்துவமனைக்கான சீருடையை அணிந்திருந்தாள்.
‘ம். போகத்தான் வேணும். ஆனாலும் உன்னோட கதைக்க எனக்கு நேரமிருக்கு. சரி இப்ப சொல்லு’ என்று சுமதியின் எதிரே அமர்ந்தாள் அமுதா. சுமதிக்குத்தான் என்ன சொல்வது எப்படிச் சொல்வது எங்கே தொடங்குவது எதைச்சொல்லி முடிப்பது என்று ஒன்றுமே புரியவில்லை.
- ஆநதி







கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















