தேவாநந்தியை இப்போதெல்லாம் மனதின் வெறுமை மட்டுமே கோலோச்சுகிறது. ஏன்தான் தான் இன்னமும் வாழ்கிறேனோ என்று தன்னில்தானே பச்சாதாபப் பட்டுக்கொள்கிறாள். பதினெட்டு வயதுமுதல் முப்பத்தாறு வயதுவரை போராளியாக வாழ்ந்த காலங்களில் இருந்த நம்பிக்கையும் வாழ்க்கை மீதான பிடிப்பும் பிறர் மீதான பாசமும் நேசமும் துடிதுடிப்பும் இப்போதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன.
அவளுக்கென கொடுக்கப்படும் கடமைகளை தேவாநந்தி உற்சாகத்தோடு செய்துமுடிப்பாள். அதனால் அவளுக்கு கடமைகளும் அதிகம் இருந்தன. அதனால் அவளின் மேலாளர்களிடம் அவளுக்கு நல்லபெயர் இருந்தது.
அவளின் இருபத்தியெட்டாவது வயதிலேயே அவளின் பெற்றவர்கள் அவளை வற்புறுத்திக் கேட்டார்கள்தான்,
“தேவாம்மா, நாங்களே உன்ர பொறுப்பாளரிட்ட வந்து கதைக்கிறம். முதல்ல நீ கலியாணத்துக்கு ஓமெண்டு சொல்லு”
“என்ன? கலியாணமா, எனக்கா?” என்று வாய் பிளந்தவள் திறந்த வாயை புறங்கையால் பொத்திக்கொண்டு அரக்கப்பரக்க விழித்தாள்.
“என்னம்மா உனக்கென்ன இன்னும் பதினெட்டு வயசுதான் எண்ட நினைப்பா? நீ இருபத்தெட்டு ஆச்சிது.” என்று அக்கறையோடு சொன்னார் தந்தை.
“ஐயோ அப்பா, இந்த வயசிலயே கலியாணமா? என்னப்பற்றி என்னப்பா நினைப்பினம்?”
“என்னம்மா நினைக்கிறது? நீ தாராளமாய் வேலை செய்திருக்கிறாய். கலியாணம் செய்த பிறகும் தொடர்ந்து நீ வேலை செய்ய அனுமதிக்கிற பெடியனாய் பாத்து கட்டினால் சரிதானேம்மா”
“ஐயோப்பா இப்ப என்னால ஏலாது. எத்தின சீனியஸ் அக்காமார் இருக்கிறாங்க. நீங்க எனக்குப்போய்... வேண்டாமப்பா.”
“வேண்டாமெண்டெல்லாம் சொல்லக்கூடாதம்மா. அதது காலா காலத்துக்கு நடக்கணும்.”
“சரி நான் வேணவே வேணாம் எண்டு சொல்லேல்ல. இப்ப வேணாம்.”
“அப்ப?”
“கொஞ்சநாள் போகட்டுமப்பா. இன்னும் நான் செய்யவேண்டிய சேவை எவ்வளவு இருக்கு.”
என்று அவள் அப்போது மறுத்தது இப்போது எவ்வளவு தப்பாகிப் போய்விட்டது.
அன்றிருந்த நிலை அப்படித்தான் அவளை பேச வைத்தது. அப்போது போராட்டத்தில் அவளைவிட மூத்தவர்களாய் இருந்தவர்களுக்கே அரிதாகத்தான் திருமணங்கள் நடந்தன. முப்பது வயதுக்குள் திருமணம் செய்பவர்கள் பொதுவாக விமர்சனத்துக்கு ஆளாகுவதுண்டு. பெற்றோரே முன்னின்று பேசி செய்து வைத்தாலும்கூட அது அவர்களது பேர்களையும் மாசுபடுத்திவிடலாம். சிறிய சொல்லும் தேவாநந்தியை இலகுவாகக் காயப்படுத்திவிடும். அதன் காரணங்களாகத்தான் அவள் மறுத்தாள். அதுமட்டுமல்ல அவளுக்கே கல்யாண வாழ்க்கை பற்றிய எந்த எண்ணமும் அப்போது இருக்கவுமில்லை. இந்த வயதில்தானே ஓடியாடி வேலைகளையும் தாராளமாகச் செய்யமுடியும்.
தேவாநந்தி பல இல்லங்களுக்கான வேலைகளைச் செய்யவேண்டி இருந்தது. ஆதரவற்றவர்களுக்கான சேவையில் தன்னை ஈடுபடுத்தியதால் அவர்களுக்காகவே வாழப்பிறந்தவளாக தன்னை எண்ணிக்கொண்டாள். ஆண்டுக்கணக்காய் போராளியாக இருந்ததனால் போராட்டத்திலும் சமூக நலனிலும் ஏற்பட்ட ஈடுபாடு ஓய்வொழிச்சலின்றி அவளை கடமையாற்ற வைத்தது. உண்மையான உள்ளன்போடு வாழ்ந்த அவளுக்கு சக போராளிகளின் ஈடிணையற்ற தியாகங்களின் பொருட்டு விடுதலை கிடைக்கும் என்று அபரிமிதமான நம்பிக்கை இருந்தது. அதனால்தானே தன்னை மறந்து தன் எதிர்காலத்தை மறந்து கடமையாற்றினாள்.
அவளது துடினத்தால் ஈர்க்கப்பட்ட, அவளது பண்புகளால் கவரப்பட்ட சிலர் அவளை மணம்முடிக்க விரும்பிய போதும் தேவாநந்தி மறுத்துவிட்டாள்.
இப்போது போய்விட்ட பேருந்துகளுக்கெல்லாம் கைகாட்டியவளாக தனியே நிற்கிறாள்.
முடிந்துவிட்டதாய் சொல்லப்படுகிற போர், தேவாநந்தியின் அப்பாவையும் சகோதரர்கள் சிலரையும் கூட்டிக்கொண்டு போய்விட்டது. அவளும் தங்கையும் அம்மாவும் மட்டுமே நட்டாற்றில் விடப்பட்ட தோணியாய் தத்தளித்துக்கொண்டு கிடக்கிறார்கள். அவளும் தங்கையும்தான் உழைக்கவேண்டும்.
அம்மா முன்னரைப்போல இல்லை. நிறையவே மாறிவிட்டார் அல்லது இழப்புகள் அவரை மாற்றிவிட்டன. முன்பெல்லாம் தேவாநந்தி வீட்டுக்கு வரும்போது தலை தடவி உணவளித்த பாங்கு, அப்பாவின் மறைவோடு காணாமல் போய்விட்டது. இப்போதெல்லாம் அம்மாவின் தொண தொணப்பும் முணுமுணுப்பும் எரிச்சலைத்தான் ஏற்படுத்துகின்றன.
அவள் எங்கு புறப்பட்டாலும் புலனாய்வு அதிகாரியைப்போல விசாரிக்கும் அம்மாவை அவளுக்கும் பிடிக்குதில்லை. வெளியே போய் வந்த களைப்புக்கு தேநீர் தரமுன்னர் அவள் விளக்கவுரை நிகழ்த்த வேண்டி இருக்கிறது. வாய்ச் சொல்லை அளந்து பேசி செயலால் வளர்ந்த அவளுக்கு இந்த விசாரணைகளும் விளக்கவுரைகளும் எரிச்சலை மூட்டாமல் என்ன செய்யும்?
தங்கைக்கும் அவளுக்கும்கூட அடிக்கடி கருத்து மோதல் ஏற்படும். தேவாநந்தியின் சமூகப் பார்வைக்கும் அவளது தங்கையின் பார்வைக்கும் இடையிலான ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் கருத்து மோதல்கள் இருவர் மனதையும் உடைத்துப் போட்டுவிடும். என்னதான் இருந்தாலும் அத்தனை காலங்களும் அம்மாவுக்கு அருகிலேயே இருந்து அவரை பார்த்துக்கொண்டவள் தங்கைதானே என்ற பற்று தங்கையை மதிக்கவும் நேசிக்கவும் வைக்கிறது. தேவாநந்தி ஒருவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்துக்காக என்னைத் தருகிறேன் என்று குடும்பத்தைவிட்டு ஓடிப்போனவள்தானே.
இப்போது ஊராரின் விசாரிப்புகளும் உறவுகளின் பாராமுகமும் அவளை கொல்லாமல் கொல்கின்றன. நாளைக்கே அவளுக்கென்று ஒரு வரன் அமைந்தால் உடனே கழுத்தை நீட்டிவிடுவாள்தான். ஆனால் எதுவுமே அமைந்து வருவதாய் இல்லையே. கைக்கெட்டுவதுகூட வாய்க்கெட்டாமல் போய்விடுகிறது. கேட்டுவரும் அத்தனை வரன்களும் சீதனப் பிரச்சினையால் தட்டிவிடும். பவுண் பவுணாய் அள்ளிக்கொடுப்பதற்கு அவர்களிடம் எதுவுமே இல்லையே. அதற்கு மேலாக அவள் போராளியாக இருந்தாள் என்ற காரணத்தால் தட்டிக்கழிக்கப்படும். லட்சக்கணக்கில் வீட்டில் கொட்டிக் கிடந்தாலாவது போராளியாய் இருந்தாள் என்ற காரணம் மறக்கப்பட்டுவிட வாய்ப்புண்டு.
சில வேளைகளில் அவளே நினைப்பாள், தான் இந்த வயதுக்குப்பிறகு ஒரு திருமணம் செய்து என்ன வாழ்ந்துவிடப் போகிறேன் என்று. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தாயாகும் தகுதியையும் தான் இழந்துவிடப் போகிறவள் தானே. அவளுடைய ஆழ்மன எண்ணங்கள் அப்படியெல்லாம் இருந்தாலும் இப்படியா, இந்தத் தனிமையிலா? என்று நினைக்கும்போது எதிர்காலம் சூனியமாகி பயமுறுத்தும்.
அவள் கல்யாணம் கட்டத்தான் வேண்டும். இல்லாவிட்டால் இந்த வாழ்க்கை இனிமேல் வெறும் நரகம்தான்.
அவளின் பெரியப்பா வந்து அம்மாவிடம் ஏதோ குசுகுசுத்தது புரிந்து, தேவாநந்தி வெளியே வந்து நின்றுவிட்டாள். அம்மா என்ன பதில் சொல்லியிருந்தாரோ தெரியாது. பெரியப்பா வெளித் திண்ணையில் குந்திக் கொண்டிருந்த அவளிடம் வந்து செருமினார்.
அவர் தேவாநந்தியின் திருமணம் பற்றித்தான் உள்ளே தாயாரிடம் பேசினார் என்பதை யாரும் சொல்லாமலேயே அவள் புரிந்துகொண்டாள்.
“தேவா, உனக்கொரு கலியாணம் கேட்டிருக்கு. நீ ஓமெண்டால்....” என்று தயங்கி நிறுத்தினார்.
“கிளிநொச்சி மாமாட மகன். மூத்தவன் சின்ராசுதான்.” என்று பட்டென்று சொன்னார் பெரியப்பா.
“என்ன?” என்று அருண்டுபோன தேவாநந்தியின் நா உலர்ந்துவிட்டது.
அந்த குடிகார மொட்டையனையா? மூன்று பிள்ளைகளோடு நிற்கும் அவனை இவள் கட்டணுமா? என்று அவளுக்குள் பொங்கிய கோபம் பெரியப்பாவை மனம் நோக ஏதும் ஏசிவிடவில்லை.
“எனக்கு கலியாணமெல்லாம் வேணாம் பெரியப்பா.” என்று மெதுவாக முணுமுணுத்த தேவாநந்தி தன் கண்களில் தெரியும் ஆற்றாமையை பெரியப்பாவுக்குத் தெரியாமல் மறைத்துக் கொள்ள எழுந்து வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.
- ஆனதி








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.




















நகர்த்திச் செல்லும் பாங்கு அற்புதம்.நான் வாசித்த இவரின் முதல் கதையே பிரமாதம்.வழ்த்துகள்.
முல்லைஅமுதன்.
(காற்றுவெளிக்காக)