காணாமல்போன கணவனை தேடித்தேடி களைத்துப்போனாள் லூர்த்துமேரி. போர்முடிந்து வருடங்கள் இரண்டை எட்டும்போதும் லூர்த்துமேரியின் வாழ்க்கைப்போர் மட்டும் முடிந்தபாடாய் தெரியவில்லை.
குடும்பத்தினரின் சம்மதமில்லாமையால் அவர்களோடு சண்டைபோட்டுக்கொண்டு காதலனின் கரம்பற்றியபோது குடும்பம் அவளை கைவிட்டது. அவள் தனக்கென மூன்று குழந்தைகளோடு குடும்பமாகிவிட்டபின்னும் கைவிடப்பட்டவளாகவே இப்போதும் தவிக்கிறாள். அவன் இப்போதும் இருக்கிறான் காணாமல்போனவர் பட்டியலிலும் அவளின் குங்குமத்திலும்.
குழந்தைகளின் மழலைச்சிரிப்பிலும் குறும்பிலும் அவள் தன்னை மறந்து சிரிப்பாள்தான். காலம் தன் காயங்களை ஆற்றும் என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டாலும் புருவமத்தியில் குங்குமப்பொட்டிடும் ஒவ்வொரு காலையிலும் அவளது ஆத்மா அழுகிறது. இந்தப் பொட்டை வைப்பது சரியா வைக்காமல் விடுவதுதான் சரியா என்று அவளுக்குள் எழும் கேள்விக்கு அவளிடம் விடை இல்லையே. யாரிடம் கேட்பது? எந்த மனித உரிமை ஆணையகத்தால் இதற்கான பதிலை சொல்லிவிட முடியும்?
'அம்மா, அப்பா எப்பம்மா வருவார்?' என்று சிணுங்கிக்கொஞ்சும் குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்லமுடிந்த அவளால் தன் மனத்தின் கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல தெரிவதில்லை.
தந்தையில்லாமல் வளரும் பிள்ளைகள் என்பதால் ஊருலகம் தெரியாமல் வளர்ந்துவிடக்கூடாதே என்று பிள்ளைகளை பல இடங்களுக்கும் அழைத்துச்செல்வாள்.
'பிள்ளைகள நிறைய இடங்களுக்கு கூட்டிக்கொண்டுபோகணும். கோயிலுக்கோ விளையாட்டுப்போட்டிக்கோ ஏதும் நிகழ்ச்சிகள் பாக்கவோ பூங்காவுக்கோ மாதாமாதம் இல்லாட்டிலும் வாய்ப்பு கிடைக்கிற நேரங்கள்ல கூட்டிக்கொண்டு போகணும்.' என்று பிள்ளைகளின் உளநலனில் அக்கறையோடு அவள் கதைக்கும்போது,
"ம் இவதான் புதினமாய் புள்ள வளக்கிறா. இங்க எல்லாரும் பூங்காவுக்கும் பூசைக்கும் போய்த்தானே வளந்தாங்கள்" என்று புறுபுறுக்கும் தம்பியின் வார்த்தைகள் அவளின் மனதை வருத்தாமல் இருப்பதில்லை. என்றாலும் சொல்வது தம்பிதானே என்று பொறுத்துப் போகிறாள்.
அவளுடைய கணவன் போருக்குள் வாழ்ந்த காலங்களில் அவளுக்கு சொல்லியிருக்கிறான்,
நீ எனக்காக வாழ்றதா நினைச்சுக்கொண்டு என்ர பாதுகாப்புபற்றி கவலப்படுறது, உன்னை வருத்தி விரதமிருந்து உன்ர உடம்பை வருத்திறதெல்லாம் வேண்டாம். நான் செத்துத்தான் போனாலும் நீ நீயா வாழணும். நானில்லாத வாழ்க்கைய நினைச்சு அழுதுகொண்டிருந்தால் உன்ர ஆரோக்கியம்தான் கெடும். அதால பிள்ளைகளிட எதிர்காலமும் பாதிக்கும். அதாலதான் சொல்றன். நீ இதில தெளிவாய் இருக்கணும். என்னையவே நினைச்சுக்கொண்டு உன்ரை வாழ்க்கைய வீணாக்கக்கூடாது.'
அவன் உண்மையான அக்கறையோடு அவளுக்குச் சொன்னதெல்லாம் அப்படியே கடைப்பிடிக்கவும்வேண்டி வரும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. என்னதான் கணவன் தேறுதல் வார்த்தைகள் சொல்லியிருந்தாலும் சமுதாயத்தின் சின்னச்சின்ன வார்த்தைகளும் மலையான அவளது திடத்தை மடுவாக்கிவிடுகின்றனதான்.
அவளது கல்வித்தகைமை அவளுக்கென ஒரு வேலையை தேடித்தந்ததுதான். அதனால் மட்டும் வாழ்க்கை இனித்துவிடுமா என்ன? சக ஊழியர்களின் வார்த்தைகள் அல்லவா அவளின் மனதை வாள்கொண்டு அறுக்கின்றன. நாளாந்தம் அவள் நெற்றிக் குங்குமத்தோடுதான் வேலைக்கு போகிறாள் என்றாலும் குறிப்பாக அவளின் நெற்றியை பார்த்துவிட்டுப்போக சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். பார்ப்பதிலொன்றும் பிரச்சினையில்லைத்தான். பார்த்தபின் வீசும் கேள்விக் கணைகளல்லவா பெரிதும் தாக்குகின்றன.
"என்ன லூர்த்து, மனுசனப்பற்றி ஏதும் தகவல் கிடைச்சதா?"
"ஐ.சி.ஆர்.சி இப்பவும் காணாமல் போனவங்கட பதிவெடுக்கிது. போய் பதிஞ்சனிங்களா?"
"இப்பிடி இருந்தால் சரிவராது. மனித உரிமை ஆணைக்குழு அங்க இங்க எண்டு அலைஞ்சால்தான் ஏதாவது தெரியவரும். விடாமல் கடிதங்களை அனுப்புங்க" என்று அக்கறை என்ற பெயரில் அவளை அலைக்கழிக்க விரும்புபவர்களும் இருக்கிறார்கள். அவள் ஏறாத படியா இறங்காத வழியா? இனி அலைந்து பயனில்லை, அவனாக வந்தால்தான் உண்டு என்ற உண்மை புரிந்தபின் அமைதியாக இருந்துவிட்டாள்.
"யார் லூர்த்துமேரியா. அவவுக்கென்னப்பா, குளுகுளுவெண்டு பிள்ளைகள் இருக்கிதுகள். நாளுக்கொரு சீலையென்ன சிங்காரமென்ன? பாத்தால் மனுசனில்லாமல் வாழுறவவப்போலவா தெரியிது?" என்று சிலர் அவள் காதுபடவே பேசுகிறார்கள்.
எவ்வளவு கலகலப்பானவளாகவும் கண்ணுக்கு இதமானவளாகவும் இருந்தாள் லூர்த்துமேரி. கன்னங்கரேலென நீண்டுகிடந்த கூந்தலும் மெலிந்த உடல்வாகும்கொண்ட அவளின் துடிதுடிப்பும் உற்சாகமும் இப்போது பாதியாய் குறைந்துவிட்டன. தளதளவென அடர்ந்து நீண்டு கிடந்த அவளது கூந்தல் எலிவாலாகிவிட்டதற்காக அவள் கவலைப் படாவிட்டாலும் அவளது தங்கைதான் பிடித்துவைத்து அரைவாசியாக கத்தரித்துவிட்டாள்.
"நீ உன்னில கொஞ்சமாவது கவனமெடக்கா" என்று அக்கறையோடு சொல்வதும் அவள் தனக்கென சேலை வாங்கும்போதெல்லாம் தன் அக்காவுக்குமென்று வாங்கிவந்து லூர்த்துமேரிக்குக் கொடுப்பதும் அவர்களது அன்பினாலான விடயம். அதை எப்படியெல்லாம் விமர்ச்சிக்கமுடியும் என்பதெல்லாம் பிறரது பொறாமையால் விளையும் விடயம். அதையெல்லாம் புரிந்துகொண்டவளாய்தான் லூர்த்துமேரி பலரையும் சகித்துப்போகிறாள். என்றாலும் மனசுக்குள் அடிக்கடி காயங்களை ஏற்படுத்தும் சக ஊழியர்களை மன்னிக்க முடிவதில்லை. இவளென்ன அவர்களிடமா உதவிகேட்டுப் போகிறாள்? இல்லையே.
இப்போதெல்லாம் அவளால் பிறர்முன்நிலையில் சிரித்துப்பேச முடிவதில்லை. கொஞ்சம் நன்றாக சேலைகட்டிப் புறப்பட்டால் கணவனின் நினைவு வருவதற்குமுன்பு சக ஊழியர்கள் தன்னைப் பார்த்து ஏதும் சொல்லித் தொலைத்துவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.
யாரோ சொன்ன கடிஜோக்கை கேட்டு கூட்டத்தில் அவளும் பட்டென்று சிரித்துவிட்டாள். உடனே பக்கத்தில்நின்ற சக ஊழியர்,
"என்னெண்டு மேரி இப்பிடி உங்களால சிரிக்க முடியுது?" என்று அதிசயமாகக் கேட்டாள். கேட்டது மட்டுமல்ல,
"ஆண்டவரே, என்ர அவருக்கு இப்பிடியொண்டு நடந்திருந்தா இந்நேரம் நான் செத்திருப்பன். என்னெண்டோ நீங்க எல்லாத்தையும் சமாளிக்கிறிங்க" என்றாள்.
கணவன் காணாமல்போனால் மனைவியின் சிரிப்புக்கூட காணாமல்போய்விடத்தான் வேண்டுமா என்ன?
- எழுதியவர் ஆனதி (ஆனந்தி அல்ல)








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.




















நல்ல கதையை எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துகள்.
நடைமுறை வாழ்வியலை அதி அற்புதமாக எழுதில் தந்துள்ளது பாராட்டுக்குரியது.இலக்கிய உலகில் புதிய பெயராகவும் உள்ளதால் வருகைக்கு வாழ்த்துகள்.
புதிய சிந்தனைகளுடன் எழுதுங்கள்.
கூடவே,
முள்ளிவாய்க்கால் அவலங்கள் வெளிக்கொணரப்படவேண்டும்.அது கதையாகவும் இருக்கலாம்.
நன்றியுடன்,
முல்லைஅமுதன்.
(காற்றுவெளிக்காக)