தனத்தை பெற்றவள் பெற்றெடுத்த ஒன்பதாம் நாளே ஜன்னி வந்து செத்துப்போனதால் ரத்த உரித்தென்றுசொல்ல தனத்திற்கு இருந்தவர் தந்தை மட்டுமே. தனம் ஆளாகி மணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்டபின்னும் இப்போது தனித்துவிடப்பட்டவளாகி, காலூன்ற ஒரு இடமின்றித்தான் திண்டாடுகிறாள்.
தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கணவனையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகப்பனையும் மாறிமாறி பார்க்கவேண்டியிருக்கும் தனத்தின் வீட்டில் எந்த காசுகாய்க்கும் மரமும் இல்லை. யாழ்ப்பாணத்தின் அழகிய கிராமமொன்றில் அழகிழந்துபோனதான வாழ்வை வாழ சபிக்கப்பட்டவளாய் தனமும் வாழ்கிறாள்.
அதிகாலை நான்குமணிக்கு அப்பா இறந்துவிட்டதாய் தொலைபேசிச்செய்தி வந்தபோது முதலில் அழுகைதான் வந்தது. அவள் அழுதுகொண்டிருந்தால் நடக்கவேண்டிய காரியங்களை யார் பார்ப்பது? அடுத்த ஐந்தாவது நிமிடமே குழந்தைகளை பக்கத்துவீட்டில் விபரம் சொல்லி விட்டுவிட்டு கிராம அலுவலரிடம் ஓடினாள்.
இதுதான் சமயம். தடுப்புமுகாமில் இருக்கும் தன் கணவனை வீட்டுக்கு ஒருதடவை அழைத்துவர இதுதான் சமயம். வன்னியில் வைத்து திருமணம் செய்ததால் அவளின் கணவனை ஊருக்கு தெரியாது. அதன் காரணமாக பெருகும் ஏகப்பட்ட கட்டுக்கதைகளுக்கும் அவனின் இந்த வருகையோடு ஓரளவு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். எல்லாவற்றுக்கும் மேலாக சொந்த வீட்டில் வைத்து குழந்தைகள் தகப்பனோடு கொஞ்ச நேரமேனும் சுதந்திரமாக கொஞ்சி விளையாடலாம்.
உரிமையோடு அவனின் தோளில் தடவி, "கவலப்படாதிங்க. கொஞ்சநாளில உங்களயும் விட்டுருவாங்க"
என்று அவனுக்கு ஆறுதல் சொல்லலாம். எல்லாவற்றையும்விட முக்கியமாக,
"அவர் எப்ப வாறது நீங்க எப்ப சந்தோசமாய் வாழ்றது?" என்று நான் உனக்காக கவலைப்படுகிறேன் என்பதைப்போல அவளுக்கு முன் ஏக்கப்பெருமூச்சு விட்டுக்காட்டும் எதிர்த்த வீட்டுக்கார அங்கிளுக்கு முன்னால்,
"நீங்க எப்ப வந்தாலும் சரிதானப்பா. கவலையே படவேணாம். உங்களுக்காக மட்டுமே காலம் முழுவதுக்கும்கூட என்னால காத்திருக்க முடியும். என்னை நினைச்சு கவலையே படாதிங்க" என்று கணவனிடம் சொல்வது போலச்சொல்லி அவருக்கு முகத்தில் அடிக்கவேண்டும்.
இவற்றுக்கெல்லாம் கணவன் வரும் இந்த ஒருநாள் போதும் என்று தனத்தின் மனம் கணக்குப் போட்டுக்கொண்டிருக்க அவளது கால்கள் கிராம அலுவலரின் அலுவலகத்தை அடைந்தன.
வரிசையில் காத்திருந்து அவளது சந்திப்புநேரம் வந்தபோது அவரே கேட்டார்,
"என்னம்மா சொல்லுங்க"
தனம் தன் வேண்டுகோளை உருக்கத்துடன் முன்வைத்தாள்.
"என்னண்டால் ஜி.எஸ், என்ர அப்பா செத்திட்டார். நான்தான் எல்லா அலுவலையும் பாக்கவேணும். என்ர கணவர் தடுப்புமுகாமில எண்டது உங்களுக்கு தெரியும்தானே. குடும்ப உறுப்பினர் யாரும் செத்தால் ஜி.எஸ்ஸோடை தடுப்புமுகாமுக்கு போய் கூட்டிக்கொண்டு வரலாம். அதால"
"அதுக்கு நான் என்ன செய்யணும்?"
"நீங்கள் வவுனியாவுக்கு போய் கேட்டால் உங்களோட அவரை விடுவாங்க ஜி.எஸ்".
"ஐயோம்மா என்னால அங்க அவளதூரமெல்லாம் போகேலாது. இங்க எனக்கு எவளவு வேலைகள் கிடக்கு"
"ஜி.எஸ் நீங்கள்போனால்தான் கூட்டிக்கொண்டுவர அனுமதிப்பாங்க. வேற யாரோட கதைச்சாலும் விடமாட்டாங்களாம் ஜி.எஸ்." என்று பணிவோடு மன்றாட்டமாய் கேட்டுக்கொண்டாள்.
"அதானம்மா சொல்றனே எனக்கு அவளதூரம் போயெல்லாம் உங்களுக்காக உதவ முடியாது. வேணுமெண்டால் கடிதம் தாறன். நீங்கள் வேறயாரையும்தான் அனுப்பனும்". என்று முடிவாகச் சொல்லிவிட்டார்.
அந்த அலுவலரின் காலில் விழுந்தாலும் இனிமேல் காரியம் ஆகப்போவதில்லை என்பது தனத்திற்கு உறுதியாகத் தெரிந்தது.
அப்பாவைப்போய் உடனே பார்த்து ஒருமுறை ஓவென்று கதறியழ வேண்டும்போல மனசு கொதித்தாலும் அயலூரின் கிராம அலுவலரான தனது உறவினரை நோக்கி ஓடினாள்.
"நான் போகலாம் தனம். ஆனால் ஆமிக்காரர் என்னோடவிட அனுமதிப்பாங்களா தெரியலயே. அந்தந்த ஜி.எஸ்தான் வரணும் எண்டு சொல்லுவாங்க".
"எப்பிடியாவது கதைச்சிப்பாருங்க. ஜி.எஸ் வேணுமெண்டால் எங்கட ஜி.எஸ்ஸிட்ட கடிதமொண்டு வாங்கித்தாறன். அவர் வரமுடியாத காரணத்தால உங்களோட அனுப்ப அனுமதிக்கச்சொல்லி"
"அவர் அப்பிடியெல்லாம் கடிதம் தரமாட்டார். அப்பா இறந்ததை மட்டும்தான் உறுதிப்படுத்தித் தருவார்".
"ஒருக்கா முயற்சிச்சி பாருங்களன். ரெண்டு வருசமா உள்ளுக்கயே கிடக்கிற அவர் ஒருநாளைக்கெண்டாலும் வெளிய வந்திட்டுப் போகட்டும். தயவுசெய்து ஒருக்கா எண்டாலும்…."
தனத்தின் மன்றாட்டத்தை தவிர்க்கமுடியாத அந்த உறவின அலுவலர் அவளையும் அழைத்துக்கொண்டு கிறிஸ்தவ பங்குத்தந்தையிடம் போனார். நிலைமையை விளக்கியபோது உறுதிப்படுத்தி அழைத்துவர தான் உதவுவதாக பங்குத்தந்தையும் முன்வந்தார். அவர்கள் இருவரும் வவனியாவுக்கு புறப்பட்டார்கள்.
"வேண்டுமானால் அவரை பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள். அவருடைய ஜி.எஸ்ஸை மட்டுமே அவரை அழைத்துச்செல்ல கையெழுத்திட அனுமதிப்போம்" என்று படையினர் உறுதியாகச் சொல்லிவிட்டனர்.
சென்றிருப்பவர்கள் சமுகத்தின் தகுதிவாய்ந்தவர்கள் என்பதால் எப்படியும் தன் கணவரை அழைத்து வருவார்கள் என்ற நப்பாசையுடன் தனம் அப்பாவின் சடலத்தை பொறுப்பெடுத்துவர ஓடினாள்.
வழியில் எதிர்ப்பட்ட அடுத்தவீட்டு அம்மாள்.
"ஆறுமணிக்குப் பிறகும் வீட்டுல விளக்குக் கொளுத்தாம எங்கபோனா பிள்ள?" என்று தருணம் பார்த்து
சந்தேகமாய் விசாரிக்கும் அடுத்தவீட்டு அம்மாளுக்கு,
"ஆஸ்பத்திரிக்கு அப்பாவை பாக்கப்போனன்" என்று பதில் சொல்லவேண்டிய தேவை இனி இல்லை.
ஒரே பதிலாய் இப்போதே சொல்லிவிடலாம் என்று நடையை கொஞ்சம் தளர்த்தியவள்,
"பவளமக்கா, என்ர அப்பாவெல்லே இரவு செத்திட்டார். சடலத்த எடுத்துக்கொண்டு வரத்தான் போறன். நான்தானே அக்கா எல்லாத்துக்கும் ஓடவேண்டியிருக்கு. நான் கையெழுத்து வைச்சுத்தான் பொறுப்பெடுக்க வேணும். என்னக்கா செய்யிறது அண்ணந்தம்பியோட பிறக்காட்டி இப்பிடித்தான்" என்று சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு அந்த அம்மாளின் விசாரிப்புகளுக்காய் தாமதிக்காமல் ஓட்டமும் நடையுமாய் நகர்ந்தாள்.
அந்த அவசரத்திற்குள்ளும் கைத்தார் கோவிலை 'கடக்கும்போது ஆண்டவரே நீர்தான் துணை. அவர் வீட்டுக்கு வரவேணும்' என்று மனசுக்குள் மன்றாடியபடி கை பிதாசுதன் போட்டுக்கொண்டது.
----------------------------------
நிலவுமகள் 21.03.2011








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.




















நிலவுமகளின் சிறுகதை படித்து அழுதே விட்டேன்..இந்த கதையில் வரும் தனம் போன்று எத்தனை பெண்கள் வளி மேல் விழி வைத்த வண்ணம் காத்திருக்கிறார்கள் தடுப்பு முகாமில் இருக்கும் தங்கள் கணவர்,சகோதர,சகோதரிகள் எப்போ வருவார்கள் என்ற ஏக்கத் தோடு..யதார்த்தத்தை எழுதி இருக்கிறீங்கள் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...மிக்க நன்றி உங்கள் சிறுகதைக்கு.
பூரணி