செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012 22:21
புதியபாரதி
பெயர்ச்சியாய்க் கிரகம் மாறப்
புறப்படு மனிதா இன்றே!
அயற்சியும் பயமும் கொண்ட
அடுகிடைத் தூக்கம் நீக்கி
முயற்சியாய்ப் பாதம் வைத்தால்
முழுமதி தரையில் தோன்றும்!
உயர்ச்சியென் றிமயம் காட்டும்
உன்றனின் காலம் வெல்லப்
பெயர்ச்சியாக் கிரகம் மாறும்!
புறப்படு மனிதா இன்றே!
அப்துல்க லாமென் றார்ந்த
அறிஞராம் யாழ்ப்பா ணத்தில்
ஒப்பிடை வைத்தார், உந்தன்
ஊக்கமே வெற்றி என்றார்!
இப்புவி உனக்கே சொந்தம்!
ஏழ்மையும் வறுமை என்ற
செப்படி வித்தை விட்டுச்
செகத்தில்வா மனிதா இன்றே!
முள்ளிவாய்க் காலின் உள்ளே
முடிந்தன சொந்தம் என்று
உள்ளமே வெடித்துத் தூளாய்
இருந்திடில் நோய்தான் மிஞ்சும்!
கொள்ளிவாய்ப் பிசாசென் றெண்ணிக்
குவியிருட் கலக்கம் பெற்றால்
பிள்ளைகள் வாழ்வு என்ற
பெருங்கதை முடிந்தே போகும்!
சிறுமிகள் பிள்ளை பெற்ற
சிறுமைதான் தொடரும், இன்று
உறுபிணி என்ன வென்று
இமெல்டாவார் அதிபர் சொன்ன
மறுமொழி தன்னிற் போதை
மயக்குதே மண்ணை என்றார்!
சிறுமொழி கொள்ளத் தானோ?
சீரழி(க்) கின்றாய் நண்பா!
போரிலே முடிந்த தென்ற
பொன்னெனும் கல்விக் கோளம்
நீரிலே எழுத்து என்றே
நிசத்திலே சொன்னார்! ஆயின்
காரிலே மழையே கொட்டும்
கணக்கென வெற்றி யார்த்துப்
பாரிலே சரிதம் செய்த
படிப்பகம் யாழ்மண் தானே!
ஏய்ப்புகள் என்றே நின்றால்
இருப்பதும் போகும்! அந்த
நோய்ப்புலம் விட்டு வாடா
நெடுவானம் தொடுவாய் ஆகும்!
வாய்ப்புகள் தொடரும் ஆங்கே
வருமானம் சிகரம் வைக்கும்!
சாய்ப்புலம் முயற்சி என்ற
சாதனை உன்னைத் தேடும்!
-புதியபாரதி
|