ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012 21:38
ஈழநேசன்

திரும்பவும் திரும்பவும்
விழிகளை காயப்படுத்திக்கொண்டு
நினைவுகளுக்குள் வந்து விழுகின்றன.
மனிதர்களின் முகங்கள்.
காலம் காட்சிப்படுத்தும்
அம் மனிதர்கள் பற்றிய
விசித்திர துயரோவியங்களை
நீங்கள் அவதானித்திருக்கிறீர்களா?
ஒரு பல் வைத்தியரின்
அழகற்றுத் துருத்திக்கொண்டிருக்கும்
முன் வெண் பற்களை...
இயற்கை நிரந்தர சவரம் செய்துவைத்திருக்கும்
ஒரு சிகையலங்கரிப்பாளனின்
ஒளி மிளிரும் தலையை...
கொப்பிகள் வாங்கும் சில்லறைகளுக்காக
புத்தகத் தாள்களில்
கச்சான் பை ஒட்டிவிற்கும் சிறுவனை...
இரண்டு இயற்கைகால் கொண்ட மனிதன்
ஒரு செயற்கைகால் கொண்டவனிடம்
பிச்சை கேட்கிற காட்சியை...
"நாய்கள் கவனம்" என்று
வெளியே எழுதி வைத்திருக்கிற
வீட்டிற்குள்ளே கேட்கும்
மனிதர்களின் கோபம் தெறிக்கும்
பெருங் குரைப்பை...
தானியங்கிப் பணப்பரிமாற்ற எந்திரத்துக்கு
காவலிருக்கும் இரவுக் காவலாளி
கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிற
மளிகைக் கடன் கொப்பியை...
மாணவர்களின் குறிப்பேட்டில்
தமிழாசிரியர் போட்டிருக்கிற
ஆங்கில கையொப்பத்தை...
"செருப்பு தைக்கணுமா"
என்று கத்திக் கொண்டு வருகிற
முதியவரின் வெடிப்பு விழுந்த
வெற்றுக் கால் பாதங்களை...
வைரம் பதித்த நெக்லஸை
தன் கழுத்தில் பிடித்து
வாடிக்கையாளருக்கு அழகு காட்டும்
நகைக்கடை விற்பனைப் பெண்ணின்
கழுத்தில் தொங்குகிற
வெள்ளை முத்துமாலையை...
புற்றுநோய் வந்து
படுத்த படுக்கையாயிருக்கிற
ஒரு வைத்திய நிபுணரை...
குழந்தைக்கு ”றொக்ஸி” என்றும்
நாய்க்குட்டிக்கு ”றெக்ஸி” என்றும்
பெயர் வைக்கிற தமிழ் சனங்களை...
நீங்களும்
காலக் கண்காட்சியில் இலவசமாய் வாங்கி
மனப் பையில் போட்டு வைத்திருக்கிறீர்களா?
எப்போதேனும் சில கணங்களில்.
-----xxx----
தீபிகா.
25-12-2011
9.54 P.m
|