மடல் - 01
அன்புள்ள அண்ணா,
எப்பிடி இருக்கிறிங்க
எண்டு எழுதமுன்னம்
கண்ணீரு வழியுதண்ணா
கண்கள் ரெண்டுலயும்
பாசம் பத்திகிட்டுப்
பெருகும் மனசோட
கொட்டுறனே வார்த்தைகள
கேக்குதாண்ணா உங்களுக்கு?
எப்பிடியெல்லாம் இருந்தோமிண்ணு
ஏங்கித் தவிக்கிறனே
எப்பதான் பாப்பமோண்ணு
கனவுலயும் பொலம்புறனே
ஓமந்தத் தடமுகாம
தாண்டமுன்னங் கண்டேனே - உங்
கண்ணுறாவிக் கோலத்தக்
கண்டுதான் கதறினனே
என்னண்ணா கோலமிண்ணு
விம்மி நான் வெடிச்சேனே
கண்ணீரா ஊத்திகிட்டு
உள்ளுகுள்ள துடிச்சேனே
அம்மாக்கு காயமிண்ணோ
அக்கா குடும்பஞ் செத்ததுண்ணோ
சொல்லாம அழுதேனே
புரிஞ்சுதாண்ணா உங்களுக்கு
பாசமெல்லாம் கிழிஞ்சுபோக
பாவிமகன் அடிச்ச அடி
மீதியான சொந்தங்கள
கொளகொளயா விழுத்திடுச்சி
தனிமரமா வந்துநிண்ணு
தவிக்கிறாளே தங்கச்சின்னு
ஆறுதல் சொன்னியேண்ணா
ஆறுனியா உனக்குள்ளாற
ஆறுதல் சொல்லியழ
இப்பநீ அருகா இல்லையேண்ணு
அழுகுதண்ணா எம்மனசு
அயராம அழுதண்ணா
நம்மளப் பிரிச்சுவைச்ச
ஓமந்த சிரிக்குதண்ணா
இனி சேரவே மாட்டமோன்னு
மனசு தவிக்குதண்ணா
அழுக்கு ஆடையோட
தெருவோரம் கெடக்குமொரு
பிச்சைக்காரனாட்டம்
நிக்கிறியே கண்ணுக்குள்ள
பெத்துப்போட்ட அம்மா பாத்தா
ரத்தமா கண்பொழிவா – உங்
கோலத்த நெனைச்சிகிட்டே
கொழந்தையா நானழுறன்
கண்ணு ரெண்டுஞ் சிவந்துனது
கன்னங்களும் கறுப்பேறி
இறுகிப் போயிருந்து
என்னயநீ பாத்தாயண்ணா
பொங்கிவந்த அழுகைய எங்
கையால வாய்பொத்தி
குலுங்கி அழுதேனுண்ணா
நிலத்துக்குத் தலகுனிஞ்ச
தங்கையோட கவுரவத்த
காப்பாத்த முடியலேன்னா
அண்ணா நீ தலகுனிஞ்சு
உள்ளுக்குள்ள நொந்துகிட்ட
கவலயத் தொடராதண்ணா
தமிழனோட வீரமெல்லாம்
மலையேறிப் போயிடிச்சு
மனசெல்லாம் இடிஞ்சிடுச்சு
புதுசா மனசக்கட்டி
புதுவழிய தேடிகிட்டு
பயணிச்சுப் பாப்பமேண்ணா
சாவுவரும் நாள்வரைக்கும்
இப்படிக்கு தங்கை
மடல் 2
அன்புள்ள அண்ணா,
கம்பி வேலிக்குள்ள
கனவுகள சிதைச்சிகிட்டு
கலங்கிக் கெடப்பமின்னு
கனவுலயும் நெனைக்கலயே
அண்ணாவுந் தங்கையுமே
தொடர்பறுந்து வாழுறமே
நினைக்கவே மனசுவெந்து
வேதன படருதண்ணா
சின்ன வயசில நாம்
பூவாச் சிரிச்சதெல்லாம்
நினைவா வந்து வந்து
வாடி உதிருதண்ணா
யாருபக்கம் வைப்பதெண்ட
குப்பி விளக்குக்காய்
அழுதழுது சண்டபோட்ட
ஞாபகம் வருகுதண்ணா
கொப்பிக்கு உறபோடும்
பூப்போட்ட பேப்பருக்கு
அடிபட்டுக் கிழிச்சதெல்லாம்
நினைவா இருக்குதாண்ணா?
சைக்கிளில என்னைவைச்சு
ஓட்டிகிட்டுப் போவியேண்ணா
ஒத்தையடிப் பாதையில
இப்பவாட்டம் இருக்குதண்ணா
அப்பாட்ட கோள்மூட்டி
அடிவாங்கித் தந்துபோட்டு
அப்புறமா வந்துநிண்டு
ஆறுதல் சொல்லுவியே
பள்ளிக்குப் போறவழி
புளியம்பழம் பொறுக்கித்தந்து
கோவத்த மறக்கடிச்சு
சிரிக்க என்னை வைப்பியேண்ணா
பாசமா வளர்ரோமின்னு
பலபேரின் வாய்பேச
திருஷ்டிசுத்தும் அம்மாகிட்ட
திருடுவமே அன்பை எல்லாம்
எங்கண்ணா அம்மா இப்ப?
அப்பாதான் என்ன ஆனார்?
எழுதண்ணா அறிஞ்சிகிட்டு
ஒருவரி கடிதந்தன்னும்
எத்தனை நாள் காத்திருக்கேன்
ஒருவரையுங் காணலையே
என்னண்ணா செய்யிற நீ
என்னையே மறந்திட்டியா?
மெனிக்பாம் முகாமா
நெளுக்குள முகாம்தானா
எங்கண்ணா இருக்கிற நீ
எனக்கொரு கடிதம்போடு
ஆருமில்ல அநாதையாட்டம்
அழுவுறனே ராப்பூரா
நீயுமாண்ணா அழுறா என்
வாழ்க்கைய நெனைச்சுகிட்டு
நெனைச்சதெல்லாம் என்னவோதான்
பயப்பிடத் தேவையில்ல
பறவாயில்ல எங்க பாடு
உங்கபாடு என்னண்ணா?
கம்பி வேலிகள்
கனரக வாகனங்கள்
அடிக்கடி மாறிவரும்
அதிகாரக் கும்பல்கள்
அவியாத சோறுகறி
அனலடிக்கும் அடுப்படி
பற்றாக்குறைத் தண்ணீர்
படுக்கின்ற இடம்
எல்லாமே பிரச்சினைதான்
இருந்தாலும் எங்களது
கற்புக்குப் பங்கமில்லை
பயப்படநீ வேண்டாமண்ணா
இப்படிக்கு தங்கை
மடல் 3
அன்புள்ள அண்ணா,
நீ மட்டும் ஏனண்ணா
ஒருநாளும் வாறாயில்ல
அம்மாவ காணாமேன்னு
அழுதுகிட்டே கெடக்கிறியா?
பாக்கப்போனா தங்கச்சிக்கு
பணமெல்லாம் குடுக்கணுமே
வெறுங்கைய வீசிகிட்டு எப்பிடிப்
போறதுன்னா வராமயிருக்கிற நீ
முள்ளுக் கம்பிக்கதான்
முழுநாளும் கெடக்கிற நீ
எண்ட உண்மையெல்லாம்
எனக்குந் தெரியுமண்ணா
மனசுப் பாசத்த
பணத்தால காட்டச்சொல்லி
கேக்கிற தங்கையில்ல
புரிஞ்சுக்கோ என்னப்பத்தி
ஒருக்கா நீ வந்தின்னா
ஓ…ன்னு நானழுது
மனப்பாரம் கொறைச்சிக்கலாம்
வாங்கண்ணா முயற்சிபண்ணி
கண்டபடி செய்தியெல்லாம்
காத்துல வருகுதண்ணா
எத நம்ப எதவிட
எதுவுமே புரியலையே
கம்பி ரெண்டு பிரிச்சாலும்
கண்கள் கைகளாகி
தலைதடவிச் சொல்லுமேண்ணா
ஆறுதல் வார்த்தைகள
நீயும்வந்து பாக்காட்டி
எனக்கு வேற யாரிருக்கா?
தோழிகூட இல்லண்ணா
தோழணைச்சு கண்துடைக்க
பணந்தான் பாசமின்னு
இங்க பாக்கத் தெரியிதுதான்
வாழ்க்க கசக்கிதுதான்
நம்மபாசம் வேறதானே
பணமிருந்தா தோழிவந்து
பாயில இடங்கேப்பா
இல்லாத எனக்கெல்லாம்
தோழிகளும் இல்லத்தானே
உழைப்பே இல்லாம
மனசொடிஞ்சு கெடப்பயிப்ப
இப்பிடி எழுதிட்டேன்னு
ஏங்கிநீ அழுவாதண்ணா
வெளிநாட்டுக் காசுமில்ல
உள்நாட்டு ஒழைப்புமில்ல
கம்பிவேலிக்குள்ள
கனவுன்னும் ஒண்ணுமில்ல
மூணுவேள தர்றதையே
தின்னிட்டு தூங்கிட்டு
நடைப்பிணமா வாழுறதே
நமக்கான தலையெழுத்து
என்னண்ணா செய்யிறது
ஏங்கி நீ பொலம்பாம
இருக்கிறத வைச்சுகிட்டு
வாழ்க்கையில முன்னேறு
சோம்பி நீ கெடக்காத
மனசுக்குள்ள வெடிக்காத
மனுசனா இருந்துக்கோ
அதுபோதும் இப்போதைக்கு
அவரவரு வாழ்க்கைய
அவருதான் வாழணுன்னா
நமக்கான பாத்திரத்த
நாமதானே ஏத்துக்கணும்
இப்படிக்கு தங்கை
மடல் 4
அன்புள்ள அண்ணா,
பாக்க நீங்க வந்திங்கன்னு
அறிவிப்பு வரும்போது
அடுப்படி வேலையால
அழுக்கோட நின்னேன் நான்
அறுநூறு பேருக்கு
மூணுசட்டிச் சோறாக்க
வேகாத வெய்யிலுக்குள்ள
வெந்துகிட்டே நின்னேன் நான்
ஆறாய் ஓடுற
வியர்வையோட
அருவியாக் கொட்டுற
கண்ணீரோட
கம்பியப் புடிச்சிகிட்டு நாங்
கலங்கி நின்னதையே
கண்ணுக்குள்ள வைச்சுகிட்டு
கலங்காதண்ணா என்னப்பத்தி
அஞ்சே நிமிசத்துக்க
அழுகிறதா கதைக்கிறதா
வேணாம் பிரிவின்னு
விம்மி நாம் வெடிக்கிறதா
பேசவே முடியலையே
பரிமாற முடியாம
பாசத்த வைச்சுகிட்டு
விம்மிகிட்டு நின்னோமே
காயப்பட்ட அம்மா அங்க
கண்டியில கெடக்கிறதா
ரெண்டு சொல்லுச் சொன்னதுமே
ரெண்டா ஒடைஞ்சிட்டனே
பெத்த புள்ள நாம எல்லாம்
பேசாம கெடக்கிறமே
தலதூக்கிச் சோறூட்ட
அம்மாக்கு ஆறிருக்கா?
பெத்த மனம் படும்பாடு
பிள்ளைக்குத் தெரியுதண்ணா
உலகத்துக்குத் தெரியலையே
உம்பாடும் எம்பாடும்
மலங்கழிக்க இருந்தப்போ
குழி இடிஞ்சு விழுந்ததால
சின்னப் பொண்ணொன்னு
மலக்குழில செத்ததாமே
அதப்போல ஒரு கொமரு
மலக்குழில விழுந்ததால
அருவருப்புத் தாங்காம
தூக்குல தொங்கிட்டாமே
சாவயசு வரமுன்னஞ்
சட்டுணு சிலபேரு
நோய்வந்து சாகிறாங்க
எண்டெல்லாம் அறியிறமே
பத்தக்கரையோரம்
போனபுள்ள வந்தழுது
பைத்தியமா நிண்ணுதாமே
உண்மைதானா இதுஎல்லாம்?
காத்தோடு வர்ரசெய்தி
கனலூட்டும் மனசுக்குள்ள
பொய்யா மெய்தானா
புரிஞ்சிக்க முடியலையே
கட்டிவைச்சுக் கொழுத்தினாலும்
கதறடிச்சுக் கொன்னாலும்
நாதியத்த தமிழனுக்கு
யாரிருக்கா நீதிசொல்ல?
நோய்நொடி வந்திடாம
நொந்து நீ விழுந்திடாமா
அப்பாவையும் கண்டுபிடி
அண்ணா நீ கடிதம்போடு
இப்படிக்கு தங்கை
மடல் 5
அன்புள்ள அண்ணா,
எங்க நான் இருக்கேன்னு
எப்பிடியோ அறிஞ்சு அம்மா
கடிதமொன்னு போட்டிருக்கு
கவலபொங்க அழுதிருக்கு
செத்துகிட்டே இருக்கிறதா
கதறிகிட்டே எழுதிருக்கு
காயமின்னும் மாறலையாம்
பொழைப்பனுன்னுந் தெரியலையாம்
ஆறுதல் சொல்லிச்சொல்லி
கடிதமொன்னு போட்டிருக்கேன்
அவசரமா நீங்கதன்னும்
அம்மாட்டப் போங்கண்ணா
முன்னம்போல நானிருந்தா
முன்னால நின்னிருப்பன்
முள்ளுக் கம்பியல்லோ
முழுதாப் பிரிக்குதிப்ப
அம்மான்ர கடிதம் பாத்தா
அழுதிருவ அண்ணா நீ
விம்மி வெடிச்சுகிட்டு
வேதனைல குமுறுவ நீ
மழை குளிர் எப்பிடிடா
நுளம்புத் தொல்லையாடா
இளையான் பெருகுமேம்மா
என்ன குஞ்சு செய்யிற நீ?
யேசுகூடப் பறவாயில்ல
அதவிடவும் கொடுமையாக
அறைபடுறோம் சிலுவையில
எப்பிடிம்மா தாங்கிற நீ
ஆண்டவன் இல்லேன்னு
அறிவிச்சுப் போட்டான் குஞ்சு
அழுதும் என்னபயன்
காதிருக்கா கேக்கிறக்கு
அண்ணாவ கண்டனியா
உயிரோட வந்தானா
எங்கதான் இருக்கிறான்னு
ஆரிட்டதான் நாங்கேக்க
அநாதைப் பிணமாயே
இழுபட்டுக் கெடக்கிறன் நான்
பிள்ளகுட்டி படும்பாட்ட
அறிஞ்சிகிட்டு சாவணுமே
அறிஞ்சிகிட்டு செத்தாலும்
ஆத்துமா அலையாது
நாடில்லாத் தமிழனுக்கு
அமைதியில்ல செத்தாலும்
சோறுதண்ணி குடிக்கிறியா
விம்மிநெஞ்சு வெடிக்கிறியா
பழசுகள மறந்துபோட்டு
இருக்கவுந்தான் முடிகிறதா
கடசிக் கடிதமிது
அம்மாவின் முத்தமிது
எண்டெல்லாம் அழுதழுது
அம்மா எழுதியிருக்கு
அண்ணா நீ ஓடிப்போ
அம்மாவ காப்பாத்து
அம்மாவே இல்லேன்னா
நாமிருந்தும் என்ன பயன்
போங்கண்ணா அம்மாட்ட
போறவுயிர் திரும்பவரும்
காலனங்க போகமுன்னம்
கடுகதில போங்கண்ணா
இப்படிக்கு தங்கை
- ஆனதி








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.




















கவிதைத் துளிகள் நெஞ்சை பிழிகின்றன.
ஆண்டவன் இல்லேன்னு
அறிவிச்சுப் போட்டான்.
இந்த வரிகளைத் தாண்டி எதை சொல்ல இப்போதைக்கு?
சகித்து வாழ்ந்து முடிக்க சபிக்கப்பட்டிருக்கிறோம். எனினும்...நல்லவை நடக்கவேண்டுமென நினைப்போம்.