வளர்ந்து தளைக்க வேண்டிய வாழையின் பிற்கன்றை வெட்டி எறிந்ததுபோல தன் பிள்ளைகளின் பிள்ளைகளை காடையர்கள் குண்டுகளால் குதறியது கண்டு கதறிய அவர், நாங்கள் கண்டது துன்பம் மட்டும் தான் பாதர். ஆனாலும் இது சொந்த நாட்டுக்கான கஷ்டம் என்றார். எத்தனை உறவுகள் துடித்தது தெரியுமா… கையில்லை… காலில்லை…. எங்க உறவுக்கார பையன் ஒருவனுக்கு தலையில்லை… உயர் பாதுகாப்பு வலையம் என்று சொன்னாங்க. அங்க போனா உங்களுக்கு பாதுகாப்பு நிச்சயம் என்று அறிவிச்சாங்க. அத நம்பி போகையில.. நாங்க நம்பித்தான் போனோம் பாதர். அங்க போனா அந்த இடம் பார்த்து குண்டு போட்டாங்க.
என்னோட சற்று முன் பேசிகிட்டே இருந்த ஒருத்தர், என் கண் முன்னாலேயே கருகி செத்தார். அவரோட குடும்பத்தினரின் பரிதவிப்பை எப்படி பாதர் சொல்ல முடியும். கொலையுண்ட வீழும் சொந்தங்களின் முகத்தை கடைசியாக ஒருமுறை நின்று பார்ப்பதற்குகூட பயந்து ஓடும் இடத்தில் இதெல்லாம் எப்படி சாத்தியமாகும். திருவிழா கூட்டத்தில் பிள்ளைகள் காணாமல் போனா பதறி தேடுவிங்க அப்படித்தானே இங்க எப்படி தெரியுமா…. காணாமல் போன மகனோ மகளோ உயிரோடு இல்லை என்று நினைத்துக்கொண்டுதான் நாங்கள் ஓடவேண்டும். எங்கட நிலைமை அப்படி….

எப்பவாவது கொஞ்சம் வானம் ஓசையின்றி இருக்கும். அதுவரை ஓடிவந்த நாங்கள் அந்த போர் விமானங்கள் போல ஓய்வெடுக்கமுடியாது. கொலைவெறிபிடித்த சிங்கள வீரர்களைப் போல ஓய்ந்திருக்க முடியாது. உடனே ரென்ற் அடிச்சு கொஞ்ச நேரமாவது நின்மதியாக உட்காரலாமே என்றுதானே தோன்றும். ரென்ற்ருக்குள் இருக்கின்ற அந்த சிறிய நேரத்திலாவது சதை தொங்கும் உடலங்களையும் வடியும் இரத்தங்களையும் பார்க்காது மனம் சற்று நேரம் ஆறுதல் தேடும். துங்குவதற்காக ரென்ற் அடிக்கிறதும் பங்கர் வெட்டுவதும்தான் முழுக்க முழுக்க எங்கட வாழ்க்கையாக இருந்ததால நாங்க செத்து செத்து பிழைத்தோம். உயிர் பயம் என்பதனை நாங்கள் தினம்தோறும் அனுபவித்தோம்.
மக்கள் மடை உடைந்த வெள்ளம்போல வந்துகொண்டே இருந்தார்கள். மொத்த மக்களையும் சமாதி ஆக்கிடுவானோ என்று பயம் வந்திட்டுது. எங்க தங்கிறது. பங்கர் வெட்டிக்கொண்டிருக்கும்போதே கிபிர் வந்து தாக்கும். எந்த பக்கமிருந்து வருகின்றது.. என்றெல்லாம் தெரியாது..அப்படியே வெட்டிய பங்கருக்குள்ளேயே செத்துவீழ வேண்டியதுதான். ஓடுகிற வேகத்தில் சில பங்கருக்குள்ள இருந்து முனகல் சத்தம் கேட்கும். யார் போய் பார்க்கிறது. சிலவற்றில் கை மட்டும் தனியாக கிடந்தது..சில பங்கருக்குள்ள உடம்பே இரண்டாக கிடந்தது…அதையெல்லாம் பார்த்தபோது என் மனசு பட்டபாடு இருக்கே விவரிக்கவே முடியாது பாதர் என்று கூறிவிட்டு நடுங்கிய தமது கைவிரல்களை கோர்த்து பிடித்துக்கொண்டார். ஆனாலும் நடுக்கம் நின்றபாடில்லை.
எத்தனையோ எம் மக்கள் தம் இமைகளை மூடாமலே மூர்ச்சையாகி இருந்தார்கள். அவர்களது விழிக்குள் விழித்திருந்த கனவுகளை என்னவென்று சொல்வது. அந்த கண்கள் தங்களை நோக்கிய ஒவ்வொருவரையுமே பார்த்து ஏதோ வினா எழுப்பிய போலவே இருந்தது. நாங்கள் என்ன பதில் சொல்ல முடியும் என்று அது எதிர்பார்த்திருக்கும்? என்று என்னை நோக்கி கேட்டார்.

அன்று பதில்கூறாது அமைதி காத்த எனக்கு இதை எழுதும்போது, ஆந்திராவில் புரட்சிக்கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவரான சிவசாகர் எழுதிய கவிதை ஞாபகத்திற்கு வந்தது. 1981ஆம் ஆண்டு காவலர்களுடன் நடந்த மோதலில் கொலை செய்யப்பட்ட பெட்டி சங்கர் என்பவரை நினைத்து சிவசாகர் எழுதிய கவிதை இது.
நீ துண்டித்த தலையை
மக்கள் எனக்கு திருப்பி தருவார்கள்
நீ தோண்டி எடுத்த கண்கள்
காலத்தின் விழிகளாகும்
நீ வெட்டி எறிந் விரல்கள்
ஒடுக்கப்பட்டோரின் சகாப்தத்தை எழுதும்
மக்களின் உயிர் மூச்சைக் கொண்டு
வரலாறு உனது தற்காலிக வெற்றிகளுக்கு
நிரந்தர சமாதி கட்டும்.
சுதந்திர வேகமும் வீரியமும் புதிய தலைமுறை வழியாக வெளிப்பட வேண்டும். அதற்கு நீங்கள் வழி சமைப்பீர்களா என்று எம் ஈழத்து சகோதர சகோதரிகளின் கண்களும் விரல்களும் தலைகளும் கேட்டிருக்குமோ என்று எனக்குத் தோன்றியது.
ஓரிடத்தில் நாங்கள் தங்குவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. தம்மைப் போன்று அனைத்தையும் இழந்து அனாதரவாக ஓடிவருபவர்களுக்குப் பயன்படுமே என்று எமக்கு முன் செத்தவர்கள் விட்டுச் சென்ற சில சாக்கு பைகள் அங்கு கிடந்தன. எங்களிடம் கொஞ்சம் பைகள் இருந்தன. அவற்றில் மணல் அள்ளினோம். ஏறக்குறைய இருநூறு பைகளில் அள்ளி அவற்றை சுற்றி அடுக்கி சுவர் போல அமைத்தோம். மேலே துணிகளை எடுத்து விரித்து இருந்தோம்.
மனதுக்குள் அச்சம் மட்டுமே ஆட்சி செலுத்திய நேரம் அது. ஷெல் வந்து விழுந்ததென்றால் அவ்வளவுதான் ஷெல் வெடிக்கும்போது விழும் ஷெல் துகள்கள் மழை பொழிவதுபோல இருக்கும். இருந்தாலும் பகல்சோறு தின்பவருக்கு நிலாச்சோறு அலாதி இன்பத்தை கொடுப்பதுபோல ஓரளவு பாதுகாப்பையும் கதகதப்பும் கிடைத்தது. நான் தங்கச்சி, அம்மா மடடுமல்ல அவ்வழியே போன சிலரும் வந்து எங்களோடு தங்கி பாதுகாப்பு தேடினார்கள். அந்த அரண்மனையில் அதிக நாட்கள் இல்லை. ஒரு கிழமைதான் இருந்தோம் என்று பகிடியும் பரிதவிப்பும் ஒன்று சேர கூறினார்.
காரணம் எங்களிடையேயும் பிழை இருந்தது. வீரத்தின் முன் செல்லா காசாக தங்களை நிறுத்தி கொலைகாரனிடம் சிலர் விலை போயிட்டாங்க. திரும்பும் திசை எங்கும் மரங்களும் அதில் அசையும் சுகந்த காற்றுமாக இருந்த வன்னிக் காட்டைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும். குயில்களும், மயில்களும் எழுப்பும் ஓசையை வைத்தே அங்கே வனத்துக்குள் என்ன நடக்கிறது என்றறியும் உன்னதர் எங்கள் அண்ணன். இலைகளின் அசையில் அதன் மொழியை அறிந்து கொள்ளும் அறிஞர் அவர்.

ஆனால் என்ன செய்ய… அண்ண இங்கே இருக்கிறார், அங்கே இருக்கிறார் என்று சொல்லி எதிரியை நடத்திவந்த துரோகிகள் எங்களிடையே இருந்தார்கள் என்று கூறியபோது மாவீரனின் தந்தையான அவர் அழுதார். எனக்கு வெட்கமாக இருந்தது. எப்பேர்பட்ட வீரம் செறிந்த படைப்பிரிவு களமாடிய இடம் அது. அது களங்கப்பட்டு போய்விட்டதே என்று மனம் வெதும்பியது.
கறுப்பர்களை வெறுக்கும் வெள்ளை முதலாளிகள் தங்கள் வேலைகளைச் செய்வதற்காக மட்டும் கறுப்பர்களை வைத்துக் கொள்வதுண்டு. எந்த சுதந்திரமும் கொடுக்காது கறுப்பர்கள் தங்கள் அடிமைகள் என்று அறைகூவுவதும் உண்டு. அவர்களின் பிள்ளைகளும் தங்களுக்கு தொண்டூழியம் செய்ய வேண்டும் என்று நினைபதுண்டு. தொழிலில் நட்டம் ஏற்பட்டு வியாபாரம் நொடிந்து போகும் நிலையில் அதனை தூக்கிநிறுத்த தங்களுக்காக உழைப்பவர்களை அடிமை சந்தையில் விற்றுவிடும் அநியாயம் உண்டு.
அதே வேளையில் இதைப்பற்றி எந்தவித நிந்தனையும் இன்றி கருப்பர்கள் வாழ்ந்தார்கள். தங்களை அடிமைகளாக அடக்குகிறார்கள் என்றோ, வீசும் காற்றுக்கும் பாயும் ஆற்றுக்கும் இலக்கேதும் இல்லை. நாம் மனிதர்கள் என்ற உரிமை உணர்வோ கருப்பர்களுக்கு பெரும்பாலும் தோன்றாது. அதனால் தங்கள் வெள்ளை முதலாளியின் பெயரை தமது பெயருக்கு முன் சேர்த்து எழுதுவார்கள். தமது மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரின் முன்பும் சேர்த்து எழுதுவார்கள். அதிலே கர்வமும் ஆனந்தமும் கொள்வார்கள்.
அப்படிதான் மல்கம் எக்ஸின் தந்தை தனது பெயரை ஏர்ல் லிட்டில் என்று எழுதினார். லிட்டில் என்பது அவரது வெள்ளை முதலாளியின் பெயர். மால்கமிற்கும் மால்கம் லிட்டில் என்றுதான் பெயர் வைத்திருந்தார். அடிமை விலங்கொடிக்க ஆர்த்தெழுந்த மால்கம் பெயரிலேயே புரட்சி செய்ய முடிவெடுத்தார். வெள்ளையரின் பெயர் ஏன் என்பெயருக்கு பின்னால் வால் போன்று துறுத்த வேண்டும். அடிமையின் சூத்திரதாரிகளான அவர்களின் அடையாளம் எனக்கு இனி தேவையில்லை.
எனவே இனி நான் மால்கம் லிட்டில் இல்லை மாறாக மால்கம் எக்ஸ் என்றார். எக்ஸ் என்பது வெள்ளையர் யாருக்கும் நான் கைப்பாவை இல்லை என்பதை குறித்தது. அத்தகைய மாற்று உணர்வும் போர்க்குணமும் மிக்கவர்கள்தான் எம் வீரர்கள். எப்படியோ அந்நியன் விரித்த வலையில் சிக்கி விலையோய் விட்டார்களே என்ற வேதனை என்னை என்னவோ செய்தது.
அவரே என்னை நிகழ்வுலகத்திற்கு இழுத்து வந்தார். உணவுக்காக நாங்கள் திண்டாடினோம். வெறும் உமி கஞ்சி தான் உணவு. ஒரு கிலோ மீன் 2500ரூபாய். மீன் பிடித்து வகைவகையாய் தின்ற எங்களோட நிலைமை பார்ததீர்களா…..நாங்கள் விலையை பாக்கல்ல எங்களிடம் கொஞ்ச பணம் இருந்தது. ஆனால் மற்றவங்களோட நிலை அப்படி இல்லையே.
ஒரே ஒரு வெற்றிலை 350ரூபாய்க்கு கிடைத்தது. வாழைக்கிழங்கு வாழையின் அடிக்கிழங்கு இருக்கே அது 2200ரூபாய் ஒன்றரைக்கிலோ கருவாடு 2200ரூபாய், ஒரு மாங்காய்ப் பிஞ்சு 100ரூபாய் அதை புளிப்புக்காக மூன்று நாளைக்கு மேலகூடி வைத்து பயன்படுத்தினோம். மாவு சீனி எல்லாமே இப்படித்தான் விலை. இந்த விலையில எதை வாங்கி பிள்ளைகளின் பசியைப் போக்கிறது…. என்னையே உலகின் பிரதிநிதியாக நிறுத்தி கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். என்னிடமிருந்து பதில் வராது என்பது தெரிந்தும் தொடர்ந்தும் பேசலானார்.
வெயில் கொடுமை அதைவிட. சில இடங்கள் பொட்டல் வெளியாக இருக்கும். நாங்கள் நின்று நடக்க அல்லது ஓடிமறைய நிழல்தரும் மரங்கள் மருந்துக்குகூட இல்லை. அவ்வளவு மக்களும் எங்கேபோய் நிழல்தேட முடியும். இலைகளும் கிளைகளும்கூட எங்களை நட்டாற்றில் விட்டு காற்று இன்றி வெயிலில் வேகவைத்து விட்டது.
வெயிலை கூட சமாளித்துவிடலாம் போல மழைபடுத்தினபாடு அதைவிட. சோ என்று பெய்கின்ற மழையில எங்க பாதர் போகமுடியும். மழைவேண்டி கிராமங்களில பொங்கல் வைச்சு கடவுளிடம் மன்றாடி மழைபெற்ற அனுபவம் எங்களுக்கு உண்டு. இப்ப என்ன செய்து இந்த மழையை நிறுத்துவதென்று புரியாமல் நாங்கள் பரிதவித்தோம். மழையில நனைந்த சிறுவர்களும் வயது போனவர்களும் உடல்நிலை சரியில்லாமல் போயிடுமோ என்ற அச்சம் தின்று தீர்த்தது. அது உண்மையாகவும்போனபோது அழுவதைத்தவிர வேறுவழி தெரியவில்லை.
நிவாரணப்பொருட்கள் கொடுக்கின்றோம் வாருங்கள் என்பான். எங்க ஷெல்போடுவானோ அங்கதான் வரச்சொல்லுவான். ஏதோ உணவின் வாசமாவது கிடைக்காதா என்று அல்லாடும் மக்கள் கூட்டம் மொத்தம் மொத்தமாக அவன் சொன்ன இடம்தேடி ஓடும். பிள்ளைகள் உள்ள அம்மாக்கள் மாவு வாங்க வாருங்கள் என்பான். பசிக்கு அழுது அழுது வயிறு ஒட்டிப்போன பிள்ளைகளை தோழில் தூக்கிக்கொண்டு தாய்மார்கள் அரக்கப்பரக்க ஓடுவார்கள். நான்முந்தி நீ முந்தி என்று ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு தகப்பன் தாய் என்று அங்க 5000மக்களுக்குமேல் நிற்பார்கள் அவங்கமேல குண்டு போடுவான்.
மாத்தளன் பகுதி பாதுகாப்பு வலையம் என்று அறிவித்தான். வெயிலில் சுருண்ட எறும்பு சின்ன இலையில் மறைத்துக்கொள்வது போல எல்லோரும் ஓடினார்கள். போன மக்கள்மேல குண்டுபோட்டான். மக்கள் அப்படியே செத்துப்போயிட்டாங்கள். அங்க இங்க அல்லாடிக்கிட்டு இலட்சக்கணக்கான மக்கள் இருக்கிறது அவனுக்கு நன்றாக தெரியும்.தெரிஞ்சுதான் அடிப்பான்.
இந்தப்பக்கம் புலி அந்தப்பக்கம் சிங்கள இராணுவம் நடுவில நாங்கள் நின்றோம். இருவருமே பேசுவது எங்களுக்கு கேட்கக்கூடிய தூரம்தான். ஆனால் யாரென்று தெரியவில்லை என்று சொல்லி மக்கள் மேல ஷெல்அடித்தான். புலிகள் நிக்கிறாங்களென்று நினைத்து அடித்தோம். தவறுதலாக மக்கள்மேல விழுந்துட்டுதென்று எல்லோருக்கும் தகவல் சொல்லுவான். ஐயா, புலிகள் எங்க போராங்கள் வாராங்கள் என்று அறிய துல்லியமாக அறியக்கூடிய கருவிகள் கொண்ட அடிக்கத்தெரிந்த அவனுக்கு தான் வரச்சொன்ன மக்கள் நிக்கிறது மட்டும் எப்படி தெரியாமல் போகும். கேள்வரகில நெய் வடியுதென்றா நமக்கு புத்தியில்லாம போயிடும்…என்று தொடர்ந்து ஆவேசமாகப் பேசியவர் அடுத்து ஒரு கேள்வியை என்வழியாக சர்வதேசத்திற்கு எழுப்பினார்.
வன்னியில செத்துதான் சுதந்திரம் அடையவேண்டுமா? சிங்களவன் அப்படித்தான் நினைத்துவிட்டான். எல்லோரையும் கொன்றிட்டு யாருக்கு சுதந்திரம் கொடுக்கப்போகின்றான் இந்த சிங்களக் காடையன்… என்று பொங்கிய வார்த்ததைக்கு என்னால் அணைபோட முடியாமல் தவித்தேன்.
யாரென்று தெரியல்ல டிராக்கரை கொண்டுவந்து காயப்பட்டவங்கள எல்லோரையும் அள்ளினாங்கள் பத்திரமா தூக்கிட்டு போனவங்களென்று சொல்ல முடியாது. யாரை யார் தூக்குவது என்று தெரியாத நிலையில் ஆடு மாடுகளை அள்ளிப்போட்ட மாதிரி போட்டாங்க. ஒருபக்கம் சதை தொங்கும், மறுபக்கம் கை தொங்கும், குடல் வெளியே வந்த உடல்கள்… கால் அறுந்தவர்கள்.. கண்ணில் ஷெல் பட்டதால் கண்ணை திறக்க முடியாமல் வேதனைப்பட்டவர்கள்…ஐயோ…பெரிய கஷ்டம்… என்று மேற்கொண்டு பேச முடியாமல் தவித்தார்.
டீராக்ரர்களிலேயே பலரின் ஜீவன் போயிடும். சிலரது உயிர் பயண வழியில் பசையற்றுபோகும். டீராக்ரர்களில் இரத்தம் வெள்ளமாக ஓடும். பார்க்க சகிக்கல்ல பாதர்… குற்றுயிரும் குலையுயிருமாக போனவர்கள் எல்லோருக்கும் ஒரேயொரு நம்பிக்கை இருந்தது. எப்படியாவது நம்மை இவர்கள் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கை. நடந்ததோ வேறு. டோசரால குழியை வெட்டி அப்படியே கொட்டிவிட்டாங்க… சிலர்தான் டிரக்ரரிலே இறந்தாங்க. பலர் உயிர் இருந்தும் குழியில கொட்டி அவர்களின் ஏக்க குரலுக்கு சற்றும் செவிமடுக்காது அவர்கள் மேல் மண்ணைபோட்டு சமாதியாக்கிவிட்டார்கள்.
அவர்கள் ஒன்றும் செய்ய இயலாது. இப்படி காயம் பட்டவர்களை பராமரிக்கவும் முடியாதுதான்.. என்று பெரியவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவரது மகள் கண்ணீரோடு சொன்னாள் அடிபட்டு தாகத்தால தவிக்கிறவங்க தண்ணி தண்ணியென்று கத்துவாங்க முனகுவாங்க… தண்ணி இருக்குதாவென்று சுற்றிமுற்றி பாக்கிறதிற்கு முன் செத்திடுவாங்க…. எவ்வளவு கொடுமை… எனக்கு மலேசியாவில் நம் தமிழர்கள் அனுபவித்த கொடுமை நினைவில் வந்து இதயத்துடிப்பை சீரற்றதாக்கியது.
(சந்திப்போமா….)
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
முன்னைய பதிவுகள்







கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















