உலகை உருக்குலைத்த இரண்டாம் உலகப்போரில் தன்னை ஹிட்லரின் கூட்டாளி ஆக்கிக்கொண்ட ஜப்பான், ஆசியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கம் இருந்ததால் அதனை சிதைத்து அச்சிதையில் தன்னை நிலைநாட்ட துடித்தது. பிரிட்டிஷாரை இந்திய மண்ணிலிருந்து வேரோடு பிடிங்கி எறிய நினைத்த சுபாஸ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் மறைமுக ஆதரவும், பர்மா களத்தில் கரம் கொடுத்த மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்த எண்ணற்ற மக்களின் துணையுடன், தான் நினைத்ததை யப்பானுக்கு பெற்றுத் தந்தது. யப்பான் நினைத்ததுபோலவே பர்மா, சயாம், மலேசியா, சிங்கப்பபூர் என ஒவ்வொரு நாடுகளாக அது கைப்பற்றியது.
இந்தியாவையும் பிடிக்க அது கணக்கு போட்டது. யப்பானிலிருந்து கடல்வழியாக ஆயுதம் கொண்டு வருவதற்கும், வீரர்களை உப்புக்காற்றில் சேதாரமின்றி கரை சேர்ப்பதற்கும், அதிக நாட்கள் ஆகும் என்பதால் வேறு வழி என்ன இருக்கின்றது என்று, வேட்கையோடு தேடியது. சயாம்-பர்மா இடையே இருக்கிற 415 கிலோமீட்டர் தூரத்திற்கு தொடர் வண்டிப்பாதையை அமைக்க வழி கண்டுபிடித்தனர்.
ஐந்து ஆண்டுகளில் கட்டி முடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இத்தொடர்வண்டிப்பாதை ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டுமானப்பணியில் இரண்டரை இலட்சம் பேர் இறந்திருப்பார்கள் என்று கூறுகின்றார்கள். இங்கு இரவு பகலாக வேலைசெய்த தொழிலாளர்கள் சொல்லெண்ணா வேதனையை அனுபவித்திருக்கிறார்கள். மலேரியா, கொலரா, வாந்திபேதி போன்ற நோய்களுக்கும், மரம் விழுந்து காயப்பட்ட தொழிலாளர்களுக்கும் போதிய மருத்துவ வசதிகளெல்லாம் செய்து கொடுக்காது வேலை வேலை என்று யப்பானியர் ஒரே குறியாக இருந்தனர்.
அதிக நோயுற்றவர்களாக இருந்தால், அவர்களை ஒரு கொட்டகைக்குள் போட்டுவிடுவார்கள். இதனை சீக்காளி கொட்டாய் என்று அழைத்தார்கள். பொட்டல் காட்டில் பெய்யும் மழைபோல எப்பவாவது மருத்துவம் அவர்களுக்கு கிடைக்கும். அங்கு இறப்பவர்களை அவர்களின் மத சடங்குகளின் வழக்கப்படியெல்லாம் அடக்கம் செய்யமுடியாது. யப்பானியர்கள் அதற்கு அனுமதிக்கவும் மாட்டார்கள். கொஞ்சத்தூரம் தள்ளி ஒரு குழிவெட்டி அதிலே இறந்த தொழிலாளர்களை போட்டுவிடுவார்கள். இனி வேலை செய்ய ஒருவரது உடலில் வலுவில்லை என்றாலோ, அவர்களது உடலில் அதிகப்படியான காயங்கள் இருந்து அவர் குற்றுயிராய் கிடந்தாலோ அவர்களையும் தூக்கி போட்டுவிடுவார்கள்.
அந்தக் குழி நிரம்பியவுடன் அப்படியே அதன் மேல் மண்ணை அள்ளிப்போட்டு மூடிவிட்டு. அதன் அருகிலேயே புதிய குழி ஒன்றை தோண்டுவார்கள். சயாம்-பர்மா மரண தொடர்வண்டிப்பாதை உருவாக்கத்தில் தமிழர்களை அள்ளிப் புதைத்தது போலவே, ஈழத்தமிழர்களையும் போர்க்களத்தில் உயிரோடு புதைத்ததை கேட்டபோது நெஞ்சம் வெடித்தது.
கல்விவாசம் இல்லாமல் தொடர் வண்டிப்பாதை உருவாக்கத்தில் உழைத்து மடிந்த தமிழர்களின் வரலாறு ஆவணப்படுத்தப்பட்ட சான்றாக இல்லையே என்ற சமூக நோக்குள்ள நம் வரலாற்று ஆசிரியர்கள் தற்போது கவலைப்படுகின்றார்கள். நாளை ஈழத்தமிழினத்திற்கும் அந்நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. இவைகளை நேரடியாக பார்த்தவர்கள் கேட்டவர்கள் கண்டிப்பாக இவைகளை பதிவு செய்ய வேண்டும்.என்ற உந்தலும் கிடைத்தது.
ஒரு தாய் தன் பிள்ளையை அணைத்தபடி இறந்து கிடந்ததை நாங்கள் பார்த்தோம். எல்லோரும் நகர்ந்துகொண்டே இருக்கும்போது அந்தக் குழந்தை என்னவாயிற்று என்று பார்க்க ஒருவர் பங்கருக்குள் இறங்கினார். அந்த குழந்தைக்கு உயிர் இருந்தது. ஆனால் காம்பில் பாலாக வரவேண்டிய இரத்தம் ஷெல்பட்டு உடலில் வெளிக்கிழம்பி வருவதை அறியமுடியாது குழந்தை காம்பையே சப்பிக்கொண்டிருந்தது. அந்த குழந்தைக்கு எப்படி விளக்க முடியும் கொலைவெறிபிடித்த சிங்களவன் உன் தாயை உன்னிடமிருந்து மொத்தமாக பிரித்துவிட்டான் என்று.

மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில்தான் போர் உக்கிரமாக நடைபெற்றது. அந்த இடங்களில் அவ்வளவு மக்களும் ஓடிமறையக்கூட ஓர் இடம் இல்லாமல் அவ்வளவு துயரப்பட்டோம். குண்டு விழுந்துகிட்டே இருந்தது தப்பினா போதுமடா சாமி என்று ஓடிக்கொண்டே இருந்தோம். நம்ம உடம்பை தூக்கி ஓடவே சக்தி இல்லாத நிலையில் யார் மண்வெட்டியெல்லாம் தூக்கிகிட்டு ஓடுறது. அதனால் பங்கர் வெட்டி தப்பிக்கவெல்லாம் முடியாத சூழல்.
ஒருமுறை சேலையை நான்குபுறமும் கட்டி மழை வெய்யிலில் ஷெல்லிலிருந்து தப்புவதற்காக இருந்தோம் என்று அவர் கூறும்போதே மழைபோல அவ்வளவு குண்டுகள் கொட்டப்படுகின்ற இடத்தில் சேலை மறைப்பு எம்மாத்திரம். திடீரென்று கிபிர் வந்து விழலாம்தானே என்று கேட்டேன். என்ன செய்யிற பாதர்? அந்த நேரத்தில அதெல்லாம் தோன்றாது…. ஏதோ ஒரு மறைப்பு என்றுதான் தோன்றும்……ஓடிவந்தவன் சாகிறான்….முகாமில இருக்கிறவன் சாகிறான். இப்படி எங்களமாதிரி இருந்து செத்தவங்கள் கனபேர்.
தாய் எங்கேயென்று தெரியல்ல. தந்தை செத்து கிடக்கிறார்,அருகிலேயே அவரது இரண்டு, மூன்று குழந்தைகளும் செத்து கிடக்கிறாங்க, யாருமே பக்கத்தில் இல்லை. குடும்பத்தை இழந்து அந்த தாய் மனநலம் பேதலித்து அலைகிறாரா அல்லது அடிபட்ட காயத்துடன் டிராக்ரரில் ஏத்தப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்டாரா என்று தெரியவில்லை.
அழக்கூட நாதியற்ற இனமாக நாமிருந்தோம். அழுது என்ன பிரியோசனம். யாரோட அழுகையை யார் கேட்க முடியும். எவருடைய கண்ணீரை எவர் துடைப்பது? பிள்ளைகள் கிடந்தாலும் பெத்ததாய் விட்டுதான் ஓடணும்… பிள்ளையை கொண்டு ஓடமுடியாது… சரிந்து கிடக்கும் மகனையோ, எப்ப வேண்டுமானாலும் அழுகி விழக்கூடிய நிலையில் இருக்கின்ற மகளையோ, இன்னும் சொல்லமுடியாத காயங்களை எல்லாம் உடலில் தாங்கியிருந்த பிள்ளைகளையோ பராமரிக்க முடியாது… நாங்ககூட அப்படித்தான் செய்திருப்போம்….என் மகனுக்கு காயம் பிள்ளைக்கு காயம் என்று நிற்கமுடியாது… நிற்கக்கூடிய நிலைஇல்லை…என்று தாய்ப் பாசமும் தந்தையின் அரவணைப்பும் சூழல்களுக்குள் எப்படி சுக்குநூறாக நொருங்கிப்போனதை நொருங்கிப்போன இதயத்துடன் பகிர்ந்தார்.
நாள்முழுக்க ஓடி ஆடி வேலை செய்தாலும் முடியாம வீட்டில் முடங்கி கிடந்தாலும் ஒவ்வொருவரும் தூங்கி எழத்தானே விரும்புவோம். எங்களுக்கு அதுகூட வாய்க்கவில்லை. செத்தவங்களாவது நிரந்தர நித்திரையில் சங்கமமாகிவிட்டார்கள். விரைந்து ஓடும் கால்களுக்குள் உயிரை வைத்துக்கொண்டு திரிந்த எங்களுக்கு நித்திரையே இல்லையே பாதர். நித்திரை இல்லாமல் அலைகின்ற நாங்கள் எழுந்து நிற்கக்கூட வலுவில்லாமல் எப்படி ஓடியிருப்போமென்று நினைச்சுப்பார்க்கவே பயமா இருக்குது பாதர்… துக்கத்தில் இருந்தாலும் தூக்கமில்லாமல் எப்படி இருக்க முடியும். என் மக்களோட துயர்களுக்கு எதுவுமே ஈடாகாது. களத்தில் உறக்கமும் கனவுகளும் இன்றி காட்சிப்பிழைகளில் கரைந்து போனவர்களின் துயர்களை வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும்.
அவ்வளவு மக்களும் குடிக்க நீருக்கு எங்க போகமுடியும். உதடு நனைக்கவாவது தண்ணி கிடைக்காதா என்று காலி போத்தல்களுடன் அலைந்த அந்த தந்தையரின் ஏக்கமும் ஏமாற்றமும், தாகத்தால் அழ சக்தியற்று நாக்கை மேல் உதட்டிலும் கீழ் உதட்டிலுமாக தடவித்தடவி தவித்திருந்த எம் குழந்தைகளின் குரூரமும் அகிம்சாவாதியையும் ஆயுதம் ஏந்தச்சொல்லும்.
மலசலகூடப் பிரச்சனை இல்லை.. கடல்தானே எல்லாத்தையும் தாங்கியது… என்று சாதாரணமாகச் சொன்னாலும் அதில் விரக்த்தி முழுமையாக குடிகொண்டிருந்தது. ஆண்,பெண் வித்தியாசமெல்லாம் அங்க இல்லை…. இந்தப்பக்கம் இவளும் இருப்பா… அந்தப்பக்கம் நீங்களும் இருப்பீர்கள்… பக்கத்தில நானும் இருப்பேன்… எப்பவும் ஆள் இருந்துகிட்டே இருக்கும் இலட்சம் மக்கள்…அங்க ஒரு மறைவும் இல்லை என்னென்று மறைக்கிறது…

பொம்பிளை ஆம்பிளை வேற கருத்தோட அங்க மக்கள் இல்லை…. காரணம் ஏன்னென்றால் சாகப்போகின்றோம். யார் வெக்கப்பட்டு யார் என்ன செய்யிறது…உட்காந்து மலசலகூடம் போக இடம் கிடைச்சதே பெரிசு என்றுதான் எல்லா மக்களும் நினைச்சோம். வேற அத இதப்பாக்கிற எண்ணங்கள்.. பாவச் சிந்தனைகள் ஒன்றும் கிடையாது…. இருந்த இடத்திலேயே கழிவோடு கழிவாக கிடக்கின்ற இடத்தில அப்படிப்பட்ட எண்ணம் எப்படி வரும். அப்படித்தான் எங்களோட கடைசி கட்டம் இருந்தது.
நினைச்சுபார்க்கவே முடியல்ல அந்தளவுக்கு சிங்களவன் அடிச்சான். பின்பகுதி மக்கள் நொஞ்சம் பிழைச்சதேஒழிய முன்பகுதி மக்கள் இல்ல… விரைந்து தப்பி முன்பகுதிக்கு ஓடிவந்தவர்கள் தான் மொத்தமாக அழித்தொழிக்கப்பட்டார்கள்.
கருணாவின் ஆட்கள் நிறையப்பேர் விலைபோய் சிங்களவனுக்கு உளவாளியாகி விட்டார்கள் என்று மீண்டும் கூறினார். ஒருதன் கருப்பு ஆடாபோனா சரி அவன மட்டும் சொல்லுறோம். மற்றவங்களுக்கு புத்தி எங்க போச்சு. ஏன் அவன் பின்னால மற்ற சில வீரர்களும் போனாங்க பின்பற்றினாங்க. அவங்கள் என்ன உணர்வோட இத்தன வருசம் குடும்பத்த விட்டு களத்தில நிண்டாங்க? என்று கேட்டேன்?
யுத்தம் ஆரம்பமானதில் இருந்தே யார் யாரை நம்பிறது என்று வீரர்கள் குழம்பி போயிட்டாங்க. ஏனென்றால் கருணா அந்த அளவு தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தவர். மீசை அரும்பிய காலம் தொட்டு களத்தில் நின்றவன். ஆயுதம் தூக்கியவன். அண்ணன் கடவுள்மாதிரி.. தெய்வம் மாதிரி என்று எல்லோரிடமும் பேசி விசுவாசத்தின் முன்மாதிரியாக விளங்கியவன். அவன் விலைபோனதும் இயக்கத்திலே குழப்பத்தையும் ஏற்படுத்தினான்…அதனால யாரை நம்புவது யாரை சந்தேகிக்கிறது என்று தெரியாம வீரர்கள் திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டுட்டாங்க. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதுபோல இருந்தது.
தகவல் தொடர்பு அறுந்ததும் தளபதிகள் பலர் ஓடிப்போயிட்டாங்க. வீரர்கள் பலர் தளபதிகளாகவும் மாறிட்டாங்க. யாரையுமே குற்றம் சுமத்த முடியாது பாதர். சிங்களவன் அப்படியான நிலைமையை உருவாக்கிட்டான்.
இனி எங்க போவது. வயலில் ஓடி வந்தோம் வனத்தில் ஓடி பகுதி பகுதியாக கடந்து வந்தோம். கடலிலும் நீரிலும் கால் வைத்தாயிற்று. இனி எப்படி வாழப்போறம். யோசித்து கொண்டிருக்கும்போது. யாரோ ஒருத்தர் தன்னோட போட்டோட நின்றார். அவரிடம் போய் கேட்டோம் எப்படியாவது கடல் மார்க்கமாவது தப்பிக்கலாமே என்று. அவர் போட்டை நோக்கி கையை நீட்டினார். பார்த்தேன் அதில் எஞ்ஜின் இல்லை. என்ஜின் ஏற்பாடு செய்து கொடுத்தா எங்கள் வீட்டில இருக்கிற ஆறுபேரை ஏற்றிக்கொள்வதற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்றேன். அவர் ஐந்து லட்சம் என்றார். உடனே அங்க இங்க திரிந்து வேறொருவரிடம் இருந்து கொஞ்ச பணத்திற்கு ஒரு எஞ்ஜினை வாங்கினோம். மீதிப்பணத்தை அவரிடம் கட்டினேன். மே 20 ஆம் திகதி இரவு வெளிக்கிட தயாரானோம். போட் வைத்திருந்தவரின் குடும்பத்தினரும் நாங்களும் போட்டை தள்ளி தண்ணீருக்குள் கால் நனைக்க வைத்தோம். நாங்கள் போட் தள்ளிய சத்தம் கேட்டு நிறையப்பேர் ஓடி வந்திட்டாங்க. சிராப்புக்களும், ஷெல்பட்ட காயங்களுடனும் உடைய தங்கள் பிள்ளைகளை கையில் ஏந்தி வந்தவங்க, ஐயா என் பிள்ளையை பாருங்க எப்படியாவது எங்கள கூட்டிட்டு போங்க என்று கதறி அழுதார்கள். எங்களகூட வேண்டாமய்யா பிள்ளையையாவது ஏத்திட்டுபோங்க என்று கை எடுத்து கும்பிட்டு அழுதாங்க…
பதினைந்து பேரை மட்டும் தான் ஏற்றமுடியும் என்ற நாங்கள் திரும்பதிரும்ப சொன்னோம். அவர்களுக்கும் நாங்கள் சொல்வது விளங்குது, ஆனால் என்ன செய்வது ஈழ சுதந்திரத்திற்கு போராடிய தங்கள் பிள்ளைகளையாவது உயிரோடு இருக்கட்டுமே என்ற ஏக்கம் அவர்களுக்கு. மனசக் கல்லாகிட்டு முடிந்த மட்டும் ஏந்திக்கிட்டோம். நான் தான் முன்னுக்கு நின்று தூக்கிவிட்டேன். கழுதைக்கு மூக்கு வேர்த்தார் போல அதுக்குள்ள அந்தப்பக்கமா ஆமிக்காரன் வந்திட்டான். உடனே என்ஜின மட்டும் கழட்டிட்டு போட்ட அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டோம்.
விடிகாலை 5 மணிக்கும். ஆமிக்காரர்களோட நடமாட்டம் ஒன்றையும் காணோம். மெல்ல எழுந்து போய் கடற்கரையின் ஒவ்வொரு திசையிலும் பார்த்தோம். ஒன்றும் தெரியல்ல. உடனே ஓடிப்போய் போட் எடுத்தோம். சத்தம் கேட்டு சிலர் ஓடிவந்தாங்க …அவங்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம்.
ஈரப்பசையில்லாமல் காய்ந்து கிடந்த கரங்கள் சில்லென்று வீசின உப்புக் காற்றில் பிசுபிசுத்தன. மீண்டும் மீண்டும் கரங்களை ஒன்றாகத் தேய்த்து அதன் இனிமையை அனுபவித்தோம். நாங்கள் விரட்டி ஒடுக்கப்பட்ட இடத்தை திரும்பி பார்த்தோம். மயானத்தை பார்ப்பது போல இருந்தது. சூரியன் முறுவலிக்க ஆரம்பித்திருக்கும் கழுகுகளின் ஆனந்த பேரிரச்சல் கேட்க ஆரம்பித்தது. ஒவ்வொரு கழுகும் நினைத்திருக்கும் எமது வாழ்நாள் காலம் பொற்காலம். இது போன்றதோர் உணர்வு நிலையம் நமது அடுத்த தலைமுறைக்குக் கூட கிடையாது.
யாரோ தூர வருவது போல தெரிந்தது. யாரென்று கூர்ந்து பார்த்து புரிந்து கொள்வதற்கு முன்னரே விரைந்து வந்த நேவி எங்களை சுற்றி வளைத்துக்கொண்டது. எங்க போறீங்களென்று திரும்ப திரும்ப கேட்டான். அமைதிப் பேச்சுவார்த்தையிலும், அயல்நாடுகளின் தலையீடுகளிலும் அவனது செவிக்கு எட்டாத எனது தமிழ் இந்த கடல் நீரில் மட்டுமா கேட்கப்போகிறது. இருந்தாலும் யாழ்ப்பாணம் போகின்றோம் என்றோம் எங்களோடு வாருங்கள் என்றார்கள். எங்கட போட் முழுக்க ஆள் இருந்ததால நாங்க லோட் லோட் என்று நாங்கள் கத்தினேன். என்ன சொல்லுறேன் என்று அவனுக்கு விளங்கவே இல்ல. அவனிடம் எப்படிசொல்லுறது என்று தெரியல்ல, பிறகு அவனே வந்து எங்கள் எல்லோரையும், எங்களிடமிருந்த அனைத்தையும் பார்த்தான். பிறகு, எங்களை பின்தொடர்ந்து வாருங்கள் என்று கூட்டிக்கொண்டு போனான். எலிவாயில தப்பி பொறி வாயில மாட்டிவிட்டோமே என்ற அச்சத்துடன் அவனை பின்தொடர்ந்தோம்.
(சந்திப்போமா….)
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
முன்னைய பதிவுகள்








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















