யாரும் எதுவும் சொல்லவில்லை. அறிந்தவர்கள் தெரிந்தவர்களை கண்டபோதும்கூட புன்னகைக்கத் தோன்றவில்லை. ஆளாலுக்கு அமைதியாக இருந்;தார்கள். எல்லோரும் தத்தமது குடும்பங்களையோ அல்லது உறவுகளையோ அல்லது உறவுகளைப் போன்றவர்களையோ எல்லோரையும் இழந்துவிட்டு தனியே கிடக்கிறோமே என்ற தனிமை உணர்வால் எல்லோரது முகங்களும் இருண்டுகிடந்தன.
அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. ஆண்களும் பெண்களுமாய் ஒரே இடத்தில் எத்தனைநேரம்தான் குந்திக்கொண்டிருப்பது. ஆளையாள் முகத்தைப்பார்த்து அருண்டுபோவதைவிட அவ்விடத்தைவிட்டு எழுந்துசென்றுவிட விரும்பினேன். யாரையும் எதுவும் கேட்காமல் எழுந்து வெட்டைவெளியில் தன்னந்தனியே நடந்துசென்றன எனது கால்கள்.
பதிவுநடக்கின்ற இடத்தருகே சென்று ஒரு கேடர் தூணில் சாய்ந்துகொண்டு நின்றேன். எவ்வளவு நேரந்தான் அப்படியே நிற்கமுடியும்? என் இடுப்பளவுக்கு உயர்ந்திருந்த அந்த மேடையில் ஏறுவது எனக்கு கடினமாக இருந்ததால் மிகநீண்டநேரத்திற்கு அவ்விடத்திலேயே நின்றேன்.
![]()
வெளியே வெய்யில் அகோரமாய் எரித்துக்கொண்டிருந்தது. அந்த வெய்யிலை பார்க்க கண்கள் கூசின. அந்த உயரமான மேடையில் வரிசை வரிசையாக பதிவதற்காக இருந்த முன்னைநாள் போராளிகள் அனைவரும் ஊத்தையாய் தெரிந்தார்கள். அத்தனை பேரிலும் அப்பியிருந்த ஊத்தையைப்போலவே வெறுமையும் வேதனையும் விரக்தியும்கூட அப்பித்தான் கிடந்தன.
ஆளையாள் பார்த்தாலும் எதுவும் பேசாமல் மிகநீண்ட அமைதி காத்தார்கள். சிலர்தான் தெரிந்தவர்களைப்பார்த்து மெதுவாய் சிரித்தபடி தலையசைத்தார்கள். அந்தச்சிரிப்பிலும் சோகம்தான் வழிந்தது. அடுத்த நிமிடத்தைப்பற்றி தெரியாத குழப்பத்தில் அனைவரும் மனசுக்குள் கலவரப்பட்டதால் முகங்களில் இறுக்கம் தெரிந்தது.
உயரமாக அமைந்திருந்த அந்தக் கட்டிடத்தின் நிழல்படிந்த வெளியில் நாலைந்துபேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒரு தெருப்பிச்சைக்காரனைப்போல இருந்தவனை என் கண்கள் கண்டவுடன் மனது பொங்கிக்கொண்டு வந்தது. குமுறிக்கொண்டு கிளம்பிய அழுகையை என்னால் அடக்க முடியவில்லை.
நான் போராட்டகாலங்களில் மிகவும் மதித்து நடந்த அண்ணன் ஒருவன் தன் பொய்க்காலை நீட்டிக்கொண்டு ஊத்தை உடையோடு கட்டாந்தரையில் இருந்தான். அவன் அப்படி இருக்கவேண்டியவனல்ல. எத்தனையோ பேரின் உயிர்களை காப்பாற்றிய மருத்துவன். அவனும் என்னை கண்டதும் தலையை நிலத்திற்குக் குனிந்துகொண்டான். வழியும் விழிகளோடும் வெடிக்கும் இதயங்களோடும் அடிக்கடி நாங்கள் பார்த்துக்கொண்டோம்.
இப்போது ஏதாவது கதைக்காவிட்டால் அவனிடம் இனி எப்போதுமே கதைக்கமுடியாமல் போய்விடவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் அவனெதிரில் சென்று அமர்;ந்தேன். கட்டுப்படுத்த இயலாத கண்ணீர் என் கண்களிலிருந்து தாரை தாரையாக வழிந்தது. என் மதிப்பிற்கும் அன்பிற்குமுரித்தான அண்ணனோ எதுவும் சொல்லாமல் அமைதி காத்தான்.
‘எனக்கு ஏதாவது சொல்லுங்கண்ணா. என்னால எதையுமே தாங்கிக்கொள்ள முடியேல்ல. இனி என்ன நடக்குமோ தெரியேல்ல. என்ன நடந்தாலும் சகித்துக்கொள்ளணுமா? அல்லது சாகணுமா? என்னண்ணா செய்யணும்?’ என்றழுதேன்.
நானாகப் புலம்பி, நானாக அழுது, நானாக ஓயும்வரைக்கும் காத்திருந்த அவன் தன்னிடமிருந்த காலையுணவுக்காக வந்த கடலைப் பொதியொன்றை என்னிடம் நீட்டினான்.
‘சாப்பிடுங்க தங்கச்சி’ என்ற அவனது வார்த்தையை நம்பமுடியாதவளாய் அவனை நிமிர்ந்து பார்த்தேன்.
‘தண்ணி வேணுமா? ம் குடியுங்க தங்கச்சி’ என்றபடி தன்னருகிலிருந்த குறைப்போத்தில் தண்ணீரையும் என்னெதிரே வைத்தான். நான் மீண்டும் ஒருமுறை அழுது ஓய்ந்தேன்.
![]()
‘இனி அழுது பிரயோசனமில்லம்மா. பாப்பம். இங்கயும் சிலர் மனுசங்களா தெரியிறாங்கள். அதால சமாளிக்கலாம் போலதான் இருக்கு. என்னய கூட்டிக்கொண்டுபோய் கதைச்சாங்கள். எதுக்காக நீ இயக்கத்துக்கு போனநீ எண்டு கேட்டாங்கள். நான் எதுக்காக போனனோ அதே காரணத்தைத்தான் சொன்னன். என்ர ஒன்பது பத்து வயசில என்ர கண்ணுக்குமுன்னால நடந்த படுகொலைகள சொன்னன். நான் அதில இருந்து தப்புறதுக்காகவும் அப்பிடியான படுகொலைகளை விரும்பாமலும்தான் போனனான். அரசாங்கம்தான் என்னை ஆயுதம் தூக்கவைச்சது அதுவும் பதினொரு வயசில. என்ர கதையை சொன்னன். விளக்கத்தை அவன் ஏற்றுக்கொண்டான். உண்மையில ஏற்றுக்கொண்டானா அல்லது ஏற்றுக்கொண்டமாதிரி நடிச்சானா தெரியேல்ல. ஆனா என்ரபக்கம் இருந்த நியாயத்தை சொன்னன். இப்பவும் சொல்றன் எப்பவும் அதத்தான் சொல்லுவன்.’ என்றவர் என்னை கூர்மையாகப் பார்த்தார்.
‘சாப்பிடாமல் எத்தின நாளைக்கு கிடக்கமுடியும்? சாப்பிடாமல் கிடந்தால் நிதானமா சிந்திக்கவும் முடியாது. அதால சாப்பிடுறது கட்டாயம் என்றதை மறந்திடாதிங்க’ என்று அறிவுறுத்தினான் அண்ணன்.
‘கண்களை துடைத்துக்கொண்டு கிளம்பிய என்னிடம், ‘யாரும் என்ன கதைச்சிங்கள் எண்டு கேட்டால் வீட்டாக்களை காணேல்ல அதான் விசாரிச்சன் எண்டு சொல்லுங்க’ என்று முணுமுணுத்தான். சரி என்று தலையாட்டிவிட்டு அண்ணன் தந்த கடலையை மட்டும் எடுத்துக்கொண்டு மீண்டும் மேடையருகிலேயே வந்து நின்றுகொண்டேன்.
நீண்டநேரம் அழுதகாரணமாக எனக்கு தலைச்சுற்றியது. அப்படியே மேடையில் சாய்ந்துகொண்டு கொஞ்சநேரத்தை சமாளித்துவிட்டு பின்னால்சென்றேன். மேடைக்கு அப்புறமாக அடுத்த பதிவிற்குத் தயாராக இருந்தவர்களில் ஏற்கெனவே தெரிந்தவள் ஒருத்தி ஓடிவந்து என்கையை பிடித்து தன்னுடன் அழைத்துச்சென்றாள்.
அவள் சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன்பு போராட்டதத்தில் இரண்டாண்டுகள் இருந்தவள். எனினும் கடைசி நாட்களில் அவள் வீட்டிலேயே வாழ்ந்தவள் என்பதால் இங்கே பதிவிற்காக வந்திருக்கத் தேவையில்லை என்று எண்ணிக்கொண்டேன். அவள் என்னை தனது பையை வைத்திருந்த நிழலான இடதிற்கு அழைத்துச்சென்று இருக்கச் சொன்னாள்.
நான் எதுவுமே பேசாமல் நிலத்தில் படுத்துவிட்டேன். என்னைப்போல பலர் அங்கே நிலத்தில் சுருண்டு கிடந்தார்கள். அதனால் யாரும் அதற்காக தண்டிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் கண்களை மூடிக்கொண்டேன்.
காலையில் அறிவிப்புச்செய்து உறவுகளிடமிருந்து எங்களை தனியே வடித்தெடுத்த அறிவிப்பாளன் அங்கு அடிக்கடி வந்துபோனான். அவனது வயிறுவளைந்த நடையில் திடம் அதிகமிருந்தது. அதனைவிட முகத்தில் கோபம் கொப்பளிப்பதும் தெரிந்தது. அவன் யார்? யார்? என்று உள்மனது கேட்ட கேளிவிக்கு நான் யாரிடமும் கேட்காமலேயே பதில்கள் கிடைத்தன.
அவன் சில ஆண்டுகள் புலனாய்வுத்துறையில் இருந்தவனாம். படையினரால் உள்ளே அனுப்பப்பட்டு போராட்டத்திற்குள் நுழைந்த உளவாளியாம். போராட்டத்திற்கு எதிரான உவாளியாக உள்ளே வந்தாலும்கூட அந்த போராட்டம் தோற்றுப்போனதை அவனால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லையாம். அதனால் அவன் போராளிகளில் கோபமாய் நடந்துகொள்கிறானாம்.

உச்சிவெய்யில் கிறுகிறுக்கவைக்க நிலத்தில் சுருண்டுவிட்டேன். அன்றைய பொழுது எங்களின் பெயர்களை பதிவுசெய்யாமலேயே விட்டுவிட்டு போய்விட்டது. அதனால் அன்றைய இரவும் அங்கேயே கிடக்கவேண்டியவர்களானோம். பதிந்தவர்களில் கொஞ்சப்பேரை வந்தபேருந்துகள் ஏற்றிச்சென்றுவிட்டன. இதே பேருந்துகள் நாளைக்கும் வரும் என்று பேசிக்கொண்டார்கள்.
இரவான பின்பு தெரிந்தவர்களை பிடித்துக்கொண்டு மலசலகூடத்திற்கும் கிணற்றடிக்கும் சென்றுவந்தேன். நன்றாக முகம் கழுவிக்கொண்டு வந்தாலும் குளித்தே தீரவேண்டும் போன்றிருந்த உணர்வால் நடுச்சாமத்தில் எழுந்து குளிக்கப்போனவர்களுடன் கிணற்றடிக்குச் சென்றேன். அச்சமாய் இருந்தாலும் ஆங்காங்கு நின்ற அனைவருமே எங்களது போராளிகள்தான் என்ற தெம்புடன் சென்றோம். கிணற்றடிக்கு அப்பாலிருந்த வேலிப்பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் படையினன் சத்தமிட்டான்.
‘யாரு? கிணத்தில யாரு?’
‘நாங்கதான் தண்ணி அள்ளுறம்’
‘என்ன தண்ணி? உடன போங்க. போங்க. போங்க.’ என்று கர்ச்சித்தான்.
‘போறம் சேர்’ என்று சத்தமாக பதில் சொல்லிவிட்டு நிழலாக இருந்த இடத்தில் நின்று தண்ணீரை அள்ளி மேலில் ஊற்றிக்கொண்டோம். நாலைந்துபேர் நிற்கின்ற துணிவில் மாறிமாறி தண்ணீரை அள்ளி ஊற்றி உடலை கழுவிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் வந்துசேர்ந்தோம். விடிந்துவிட்டால் குளிக்க முடியாது.
அத்தனை நேரமும் கிணற்றடி அமளிப்படும். ஏனெனில் அத்தனையாயிரம் பேரும் புழங்குவதற்காக ஒரேயொரு கிணற்றைத்தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆண்களுக்கு ஒரு பக்கம் பெண்களுக்கு ஒரு பக்கம் என்று இடம்பிடித்துக்கொண்டார்கள். ஆளாலுக்கு போத்தில்களை கட்டி தண்ணீரை அள்ளி முகங்களை கழுவிக்கொண்டாலும் உடுத்த உடையோடே குளித்தவர்களால் கிணற்றடி அமளிதுமளிப்பட்டுக்கொண்டிருக்கும்.
ஆளையாள் மாறிமாறி திட்டிக்கொண்டும் ஏசிக்கொண்டும் கெஞ்சிக்கொண்டும் இருக்கும் அந்தக்கிணற்றடியில் நீண்டநேரம் நிற்கமுடியாது. அவ்வளவு சத்தமும் சந்தடியுமாக இருக்கும். அதனால் அந்த படையினன் ஓயாமல் சத்தமிட்டுக்கொண்டேயிருந்தாலும் எங்களைப்போன்ற பெண்கள் மறைப்பில் தண்ணீரை அள்ளிவைத்து குளித்துக்கொண்டேதான் இருந்தார்கள்.
ஆளுக்காள் தண்ணீரை அள்ளிக்கொடுப்பதன்மூலம் அவனது பார்வையில் அகப்படாமல் தப்பிக்கொண்டாலும் குளிக்கும் தண்ணீர் சத்தம் கேட்டால் அவன் பயங்கரமாய் சத்திமிடுவான்.
அன்றைய நாட்களில் உதவி நிறுவனங்கள் பலவும் எங்களுக்கான பொருள் உதவிகளை தாராளமாகச் செய்தன. உணவும் குடிதண்ணீரும் தாராளமாகக் கிடைத்தன. ஆனால் எங்களது மனங்களுக்கத் தேவையான ஆறுதல் அங்கே மருந்துக்கும் கிடைக்கவில்லை. அந்தத் தேவையைமட்டும் யாரும் புரிந்துகொண்டவர்களாய் தெரியவில்லை. ஆளாலுக்கு பதிந்துவிட்டு வந்து படுக்கையில் முடங்கிகொண்டார்கள்.
வவுனியாவின் எல்லா பாடசாலைகளும் தடுப்புமுகாம்களாக நிறைந்துவிட்டதால் இனிமேல் அழைத்துப்போக இடமில்லையாம். எங்களுக்கென இடம் ஒதுக்கும்வரைக்கும் ஓமந்தையிலேயே இருக்கட்டுமாம் என்று கட்டளை கிடைத்தது.
அதே கட்டளை மூன்று நாட்கள் எங்களை அதே இடத்தில் கட்டிவைத்திருந்தது.
உணவும் நீரும் வழங்கப்பட்ட கைதிகளான நாங்கள் எங்களுக்கான பேருந்துகள் வரும்வரைக்கும் அடுத்த நகர்தலுக்காக காத்திருக்க வேண்டியவர்களானோம். அந்தக் காத்திருப்பு எதிர்காலம் பற்றிய அச்சத்தையும் நிரந்தரமின்மையையும் நம்பிக்கையீனத்தையும் பாதுகாப்பின்மையையும் விலைமதிப்பற்றவர்களாகிவிட்ட வெறுமையையும் அவமானத்தையும் தாராளமாக ஏற்படுத்தியது.
அந்த வெறுமை சோர்ந்துவிழவைக்க கண்களை மூடிக்கொண்டு தரையில் சரிந்துவிட்டோம். அந்த உறக்கம் மிகநீண்ட உறக்கமாய் இலகுவில் விழித்தெழ முடியாத உறக்கமாய் எங்களை ஆட்கொண்டது.
இடைநிறுத்தி தொடரும்....








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















