தமிழ்நாட்டைச் சேர்ந்த அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன் அவர்கள் கடந்த 13- 07 - 2011 தொடக்கம் 30 - 07 - 2011 வரை ஈழத்திற்கு சென்றிருந்தார். அருட்தந்தை அவர்கள் ஏற்கனவே பல்வேறு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அத்துடன் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழ் அகதிகளின் நல்வாழ்வுக்காக பல ஆண்டுகள் களப்பணி செய்துள்ளார்.
அவரது பயண அனுபவத்தை இங்கே பதிவுசெய்கின்றார். குரலடங்கிப்போன தேசத்தின் உணர்வுகளை கொட்டிவிடும் வரிகள் இனி........
----------------------------------------------------------------------------------------------------------------------
நான் இலங்கைக்கு போனேன். சுதந்திரம் தேடும் சிறகுகள் அனைத்தும் தீவிரவாதத்தின் கனவுகள் என்று உலகிற்கு அறிவித்து கொண்டிருக்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு நாட்டிற்கு போனேன்.
கடற்பரப்பு தாண்டி நிலப்பரப்பிற்குள் விமானம் பறந்து கொண்டிருந்தபோதே எங்கும் சூழ்ந்திருக்கும் பசுமையின் வனப்பு விழிக்குள் விதையானது. வளமையின் தேசத்தில் எம் தமிழினம் அழிக்கப்படுவதை நினைத்து நெஞ்சம் விம்மியது. கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் விமானம் தரை இறங்கியது முதல் விமான நிலையத்திலிருந்து வெளியேறும்வரை பரந்த நிலப்பரப்பிற்குள் படர்ந்த எம் பார்வையில் எம் வீர மறவர்களின் மறப்போர் ஆச்சரியத்துடனும் ஆனந்தத்துடனும் வியப்புடனும் முட்டி மோதியது. அடிமனதில் ஏக்கம் அலைந்துகொண்டே இருந்தது.
அது உள்ளூராட்சி தேர்தல் காலமாதலால் எம்.ஓ.டி எனப்படும் அனுமதிக்கடிதம் வழங்கும் முறையை அரசு திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது. அதனால் சற்று நிம்மதி கிடைத்தது. இந்த அனுமதிக்கடிதம் இல்லாமல் யாரும் தமிழர் பூமிக்கு, யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்க முடியாது. தேர்தல் முடிந்தபிறகும் இந்த விலகல் நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இது தொடருமா என்ற ஐயப்பாடு அனைத்து தமிழர் மனங்களிலும் ஆழ இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு இரவு பேரூந்தில் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால், பகல் பொழுது நண்பர் வீட்டில் கழிந்தது. மாலையில் கொழும்புநகரை சுற்றி வந்தபோது, என் திகைப்பு அதிகரித்தது. சாலையில் சாலையோர கடைகள் இல்லை, பிச்சைக்காரர்கள் தொல்லையில்லை, ஓடிக்கொண்டோ ஓய்ந்து போயோ இருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இல்லை. முகம் மலரச்செய்யும் நல் தூய்மை, வாகன ஓட்டிகளின் ஒழுங்கு, பாதசாரிகளின் பக்குவம், அனைத்தும் பிரமிக்க வைத்தது.
சாலையில் வரையப்பட்ட மஞ்சள் கோடுகளை பொதுமக்கள் எந்த நேரத்திலும் கடக்கலாம், எந்த பாதிப்பும் நேராது, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் வேகத்தை குறைத்து நின்றுவிடுகின்றார்கள். இரவு வேளைகளில் நமது ஊர் நண்பர்களைப்போல அதிக பட்ச ஒளியை கண்களுக்குள் பாச்சும் அனுமதி அங்கில்லை, அதனால் எரிச்சலும் தடுமாற்றமும் எதிர்வரும் பயணிக்கு இல்லை.
தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்ட முடியாது. பின் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும். இது அரசின் பரிந்துரை அல்ல. மாறாக சட்டம் இயற்றி கடைப்பிடிக்கிறார்கள். முச்சக்கர ஊர்திகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நபர்களை ஏற்ற வேண்டும். மீறினால் தண்டனைதான், சட்டங்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதால் விபத்து பற்றிய செய்திகள் மிகக்குறைவாகவே இருக்கின்றன.

இந்த ஒழுங்குகளை உள்வாங்கிய உணர்வுடன் எனது தேசத்திற்குள் செல்வதற்காக பேரூந்தினுள் அமர்ந்தேன். குளிர்சாதன வசதியுடைய பேரூந்து அது. உடல் குளிர ஆரம்பித்தது. ஆனால் மனம் வெப்பமாக இருந்தது. உறக்கம் பிடிக்கவில்லை. கடந்தகால யுத்தம், என் சகோதர சகோதரிகளின் இரத்தம், அழிக்கப்பட்ட சொத்துக்கள், அவமானப்படுத்தப்பட்ட உடல்கள், கற்பழிக்கப்பட்ட கொடூரங்கள். நச்சு குண்டுகளில் மூச்சுவிட முடியாது இறந்தவர்கள். கொத்து குண்டுகளினால் கொலையுண்டவர்கள், ஓடிக்கொண்டே போன எம் எதிர் காலங்கள்….அனைத்தும் எமது மனதுக்குள் புகுந்து ஏதேதோ செய்தது.
“இதுவரைக் காலமும் எங்களுடைய இனத்தின் வீரர்கள் என்றால் யார்? ஏன்று கேட்கும் நிலை இருந்தது. ஆனால் இன்று நாம் எமது இனத்தின் வீரர்களை நினைவு கூரும் நாள் ஒன்றை உருவாக்கியுள்ளோம். எனவே இனி எமது இனம் நிச்சயம் அழியாது” என்று முதல் மாவீர தின உரையில் தமிழினத் தலைவர் பிரபாகரன் பேசியதை மீண்டும் ஒருமுறை அசைபோட்டபடி எம் வீரர்கள் களமாடிய, ”போர் மற்றும் அரசியல் பக்கங்களுடன் நின்றுவிடாமல், சமூகம், பொருளாதாரம் நிர்வாக கட்டமைப்புகள், மனிதாபிமான பணிகள் என்று பல்துறை சார்ந்து வியாபித்து நின்ற” தமிழ் மண்ணின் வாசம் என் சுவாசத்திற்குள் சங்கமிக்கப் போகின்றது என்ற படபடப்பும் பரிதவிப்பும் என்னை சூழ்ந்து கொண்டது.
************************ 1 *******************************
நள்ளிரவு எல்லோரும் அசந்து தூங்கி கொண்டிருந்தார்கள். எனது வலது பக்க இருக்கையில் அமர்ந்திருந்தவர் மூச்சுப்பிரச்சனை உள்ளவர்போல, தொடர்ந்தும் இருமிக்கொண்டும் கையோடு கொண்டுவந்திருந்த பிளாஸ்ரிக் பையில் வாந்தி எடுத்துகொண்டும் அவதியோடு தன்னால் இயன்றளவு கிருமிகளை பரப்பிக்கொண்டு வந்தார்.
திடீரென பேரூந்து நின்றது. இல்லை.…இல்லை நிறுத்தப்பட்டது. இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் இலங்கை இராணுவ உடையுடன் பேரூந்தில் ஏறினான். கையில் சிறிய டார்ச் இருந்தது. ஓவ்வொருவர் முகத்திலும் ஒளிபாச்சி கொண்டே வந்த அவன் எல்லோரின் அடையாள அட்டைகளையும் எடுக்க சொன்னான். அர்த்த ராத்திரியில் தட்டு தடமாறி தங்கள் அடையாள அட்டைகளை காட்டி தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள்தான் என்பதை நிரூபித்து கொண்டார்கள், என்னைப்போன்ற வெளிநாட்டவர்கள் தங்கள் கடவுச்சீட்டினைக் காட்டினோம்.
அயல் நாட்டு குடிமக்களையும், தாங்கள் விளையாட்டு பொம்மைகளாக நினைக்கும் ஈழத்தமிழர்கள் சிலரையும் இறங்கி வரச்சொன்னான் அந்த இராணுவ வீரன். அந்த இரவிலும் இறங்கி கொஞ்சதூரம் நடந்தோம். ஆங்கே ஏற்கனவே ஒரு கூட்டம் நின்று கொண்டிருந்தது. முந்தைய பேரூந்தில் பயணம் செய்தவர்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. வரிசையில் நின்றோம். என்முறை வந்தபோது எனது கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டு பதிவு செய்து கொண்டான் ஒருவன். மற்றவன் கொஞ்சம் தள்ளி இருந்த அறைக்குள் சென்று எல்லோருக்கும் செய்தது போலவே எனது கடவுச்சீட்டை நகல் எடுத்து கொண்டு வந்தான். தமிழும் தெரியவில்லை ஆங்கிலமும் அவனுக்கு அவ்வளவாக தெரியவில்லை. தமிழர் திண்டாட்டம் அங்கிருந்து ஆரம்பமாகின்றது.
பேரூந்து புறப்பட்டது. அந்த இடத்திற்கு பெயர் ஓமந்தை என்றார்கள். ”பார்த்தீர்களா எனது வீட்டிற்கு போவதற்கும் பயந்து கொண்டு போகவேண்டி இருக்கின்றது.” என்று எனது அருகில் இருந்தவர் தனது ஆதங்கத்தை சொல்லும்போதே உலகை ஏமாற்றும் இராஜபக்சேவின் புழுகு மூட்டை அவிழ ஆரம்பித்தது.
ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலும் யாராலும் தூங்க முடியவில்லை. அமர்ந்திருக்க முடிந்தால்தானே தூங்குவதற்கு. பள்ளங்களும் புழுதிகளுமே சாலைகளாக இருந்தது. ஆனால் அதுதான் கொழும்பையும் யாழ்ப்பாணத்iயும் இணைக்கும் பிரதான சாலை. ஒரே தேசம் எனச்சொல்லப்படும் நாட்டின் வடபகுதியானது, போரின்போதும் போரிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் முடிவுற்ற பிறகும் வளமையற்றே கிடக்கிறது. காய்ந்த பூமியும், கருகிய புதர்களும், நொறுக்கப்பட்ட கட்டிடங்களுமாக கைம்பெண்ணின் முகம்போல வடிவிழந்து இருக்கும் எம் தமிழ் சகோதரரின் நாட்டுக்குள் இப்படித்தான் பயணப்பட்டோம்.
யாழ்ப்பாணம் வந்திறங்கியபோது பொழுது நன்றாக விடிந்திருந்தது. எம் வீரர்களும் தரம் வாய்ந்த கலைஞர்களும் வாழ்ந்த பூமியில் எனது 15 வாழ்க்கை இருக்கப்போகின்றது என்ற உள்ளப் பூரிப்பில் இறங்கினேன். வரலாறு சுமந்திருந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்ட பூமியில், வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்த உலகத்தமிழர் மாநாட்டில் தமிழ் அறிஞர்கள் கொலைசெய்யப்பட்ட நிலத்தில் நிற்கின்றேன் என்ற பதைபதைப்பில் இறங்கினேன். மிகப்பெரும் அதிர்ச்சி நகரம் என்பதற்கான எந்தவித ஆரவாரமோ, ஆடம்பரமோ, தூய்மையோ வாகன ஒழுங்குமுறையோ ஏதுமின்றி காட்சி அளித்தது யாழ்ப்பாணம். யாருடைய முகத்திலும் இயல்பான மகிழ்ச்சி இல்லை.
உரத்து பேசும் ஆற்றல் இல்லை. கூடிக்குலாவும் சாலையோர சந்திப்புக்கள் இல்லை. இன்னும் பல இல்லை… இல்லை.
காரணம் விரைவிலேயே புரிந்தது. சாலையில் எப்பக்கம் பயணித்தாலும் இராணுவ வீரர்களே அரணாக நின்று கொண்டிருந்தார்கள். கையில் துப்பாக்கியும் தோளில் ஒரு பையும் சுமந்துகொண்டு பச்சைநிற உடையுடன் சிங்கள இளைஞர்கள் நின்று கொண்டிருக்கும் காட்சியே நமக்கு சூழலின் மொத்தப் பரிமாணத்தையும் உணர்த்திவிடுகிறது. எந்த வீதிக்குள்ளும் அவர்களின் பார்வையில் படாமல் செல்லவேமுடியாது.
எப்போழுது வேண்டுமானாலும் நாம் நிறுத்தப்படலாம். தமிழர் தம் சட்டைப்பபையில் அடையாள அட்டை இல்லை என்றாலோ, அடையாள அட்டையில் திருப்தி இல்லை என்றாலோ சிக்கல்தான். இப்படி இடைமறித்து வினவுவது அவர்களின் பொழுதுபோக்கு. வாகன ஒழுங்கைகூட இராணுவ வீரர்கள்தான் செய்து வருகின்றார்கள். ஓவ்வொரு இராணுவ வீரனையும் துப்பாக்கியின் துர்கனவுகளையும் கடந்து செல்வது என்பது தமிழர்களுக்கு தினம்தோறும் அறுவைச்சிகிச்சை.
தொடரும்....
- அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன்








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.




















It was good and great.