முள்ளியவளை நோக்கிய முல்லைத்தீவு வீதியில் மிகநீண்ட வரிசையாக கண்ணுக்கெட்டிய தூரம்வரை சிவப்புச்சிவப்பாய் பேருந்துகள் வந்து வரிசைகட்டி நின்றன. அவற்றை கண்டவுடன் மக்கள் அரக்கப்பரக்க புறப்பட்டுவிட்டார்கள்.
நானும்கூட அரைக் குவளை தண்ணீரில் முகத்தை துடைத்துக்கொண்டேன். பொலபொலவென விடிந்துவிட்டது. அப்போதுதான் தெரிந்தது வீதியையும் எங்களையும் பிரித்துவைத்திருக்கும் இன்னொரு கம்பிவேலியும் இருக்கிறது என்று. கம்பிவேலிகளை கடந்து கடந்தே காலங்கள் பல நீளப்போவதை அவை சொல்லாமல் சொல்வனபோன்று இருந்தன. அந்தக்கம்பிவேலியோரமாக ஆயுதம்தாங்கிய படையினர் தாராளமாக நின்றனர்.
சுமார் ஏழுமணியளவில் கடல்போலக்கிடந்த மக்களுக்காக சிறிய பாதையொன்று கம்பிவேலியை பிரித்து திறந்துவிடப்பட்டது. அதற்கூடாக செல்பவர்களை எண்ணி எண்ணி பேருந்துகளில் ஏற்றிவிட நினைத்த படையினரின் திட்டம் ஐந்தே நிமிடத்திற்குள் காணாமல்போய்விட்டது.
தாமே தமக்கான பாதைகளை கம்பிகளினூடாக ஏற்படுத்திக்கொண்டு கம்பிகளை பிய்த்துக்கொண்டு புறப்பட்டார்கள் மக்கள். வேலிக்குள்ளால் பாய்ந்தோடும் மக்களில் பலர் படையினரால் தாக்கப்பட்டார்கள். சில படையினர் ஓடி ஓடி அடித்தார்கள்.

ஒரு படையினன் தான் கையில் வைத்திருந்த காய்ந்த வாழைத்தண்டை உயர்த்திக்கொண்டும் சிரித்துக்கொண்டும் அடிப்பதுபோல நடித்தான். படையினரின் கைகளிலிருந்த சிறியதடிகள் உடைந்தும் முறிந்தும்போய்விட அவர்கள் நீட்டிக்காட்டிய துப்பாக்கிகளுக்கு மக்கள் எவரும் பதில்சொல்லவில்லை.
‘சுட்டால் சுடு. உயிர் போனால் போகுது போகாட்டில் கிடக்கிது’ என்பதைப்போலத்தான் சனங்கள் நடந்துகொண்டார்கள்.
‘நாங்களென்ன வாழணுமெண்டு ஆசைப்பட்டா வாறம்? சாகேல்ல. அதாலதான் வாறம்’ என்றுகூட சிலர் முணுமுணுத்துக்கொண்டு போனார்கள். எறிகணை மழைக்குள்ளேயே புகுந்துவந்திருக்கும் எங்களால் இந்த கம்பிவேலியை தாண்டிவருவது எம்மாத்திரம் என்ற நினைப்புத்தான் அவர்களை அப்படி வேலிபாய வைத்ததோ என்னவோ?
குடும்பம் குடும்பமாக வேலியை மீறிச்செல்லும் மக்களை கட்டுப்படுத்த படையினரால் முடியவேயில்லை. படையினருக்கு வேலையே வேண்டாம் என்றபடி அடுத்த அரைமணித்தியாலத்திற்குள் தாமே அனைத்து பேருந்துகளையும் நிறைத்துக்கொண்டனர்.
இந்த இந்த இடம்தான் உங்களுக்கான தங்குமிடம் என்று காலாற ஒரு இடம் கிடைக்கும்வரை இப்படித்தான் ஓடுவார்கள், வேலிதாண்டுவார்கள். அடங்காத வேகத்தோடு பாய்ந்த சனங்களை பார்த்து படையினன் ஒருவன் சத்தமிட்டான், ‘உங்களையெல்லாம் என்னெண்டுதான் பிரபாகரன் இவளநாளும் கட்டிமேய்ச்சாரோ தெரியேல்ல’ அந்த வசனத்தை காதில்கேட்ட பலரும் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு சென்றார்கள். சொன்னவன் தனது இடுப்பில் கைகளை ஊன்றியபடி ஆற்றாமையோடு முறைத்துக்கொண்டு நின்றான்.
தாங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வசதிக்குறைவான இடத்துக்கு அனுப்பப்பட காரணமாகிவிடுவோமோ என்ற நினைவு அவர்களை விரட்ட, மக்கள் தமது பயணத்தை துரிதப்படுத்தவே விரும்பினார்கள். எங்கேயாவது போய் குந்தினால்தான் குளிக்கமுடியும் ஒழுங்காக படுக்க முடியும். மக்களாலும் எத்தனை நாட்களுக்குத்தான் தெருவிலேயே கிடக்கமுடியும்?

முள்ளுக்கம்பிகளின் இடைவெளியால் புகுந்தோடிய மாமியின் குடும்பத்தின் பின்னால் நானும் புகுந்தோடினேன். அந்த வாழைத்தண்டுக்கார படையினன்தான் என் அந்தரத்தை புரிந்துகொண்டு போகும்படி தலையசைத்தான். ஓடோடிப்போய் நாங்கள் ஏறிய பேருந்தில் இருக்கைகள் நிறைந்துவிட்டன. முண்டியடித்துக்கொண்டு ஏறிய மாமியின் மருமகள் தானும் இருந்துகொண்டு மேலதிகமாக ஒரு இருக்கையை பிடித்துக்கொண்டதால் அதை மாமிக்கு இருக்கக் கொடுத்தாள்.
நின்றபடியேதான் என்றாலும் போய்விடுவோம் என்றுதான் எல்லோரது நினைவும் இருந்ததால் ஏறியவர்களில் எவரும் கீழே இறங்கவில்லை. இன்னொரு பேருந்தில் இடம்பிடிப்போம் என்று நிற்பவர்கள் இறங்கினால் ஒவ்வொரு குடும்பத்திலும் பாதிப்பேர் பிரிந்துவிடக்கூடும். சும்மாவே பாதிக்குடும்பமும் மீதிக்குடும்பமுமாய்த்தான் வந்திருக்கிறார்கள். அதற்குள்ளும் பிரிந்துவிட எவருக்கும் விருப்பமில்லை.
அத்தனை பேருந்துகளும் நிரம்பிவழியத்தொடங்க அந்த பேருந்துகள் மாபெரும் ஊர்வலம்போல நகரத்தொடங்கின.
இப்போது எல்லா பேருந்துகளின் வாசல்களிலும் ஆயுதம்தரித்த படையினர் நின்றனர். பேருந்தின் முன்பாகத்தில் நின்றுகொண்டிருந்த இருவர் எந்நேரமும் பேருந்தினுள் இருப்பவர்களை பார்வைகளால் அளந்துகொண்டிருந்தனர் அல்லது கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
சுத்தமான உடைகளை அணிந்திருந்த அவர்கள் புலனாய்வாளர்களாம் என்றும் சகலபேருந்துகளிலும் அப்படி இவ்விரண்டுபேர் நிற்கிறார்களாம் என்றும் பேருந்திற்குள் மக்கள் பேசிக்கொண்டார்கள்.
கருஞ்சிவப்பு நிறத்திலான அரச பேருந்துகள் நிரம்பிவழியும் மக்களோடு வேகமெடுத்துச்சென்றன.
பழைய நினைவுகளை அள்ளியெறியும் தெரிந்த பழகிய இடங்களை கடந்துசெல்லச்செல்ல மனசுக்குள் ஆயிரம் பெருமூச்சுகள் கிளம்பின. அப்பெருமூச்சுகள் ஒவ்வொன்றும் நெருக்கிக்கொண்டு நின்ற மற்றவர்களை சுட்டன. முள்ளியவளையை கடந்துசென்றபோது பலரது கண்களும் அருவியென கொட்டத்தொடங்கின.
முள்ளியவளையின் புனிதத்தளமாக இருந்த மாவீரர் துயிலுமில்லம் தரைமட்டாகிக் கிடந்தது. இவ்வளவு விரைவாக எங்கள் கோவிலை அழித்துவிட்டார்களா என்று நினைத்தபோது மனது வெறுமையாகி வரண்டுபோனது. எவ்வளவுநேரம் அழுதுகொண்டே நின்றேன் என்று தெரியவில்லை.

மனதில் புரண்டெழுந்த விம்மல் அலைகளால் அடித்துடைக்கப்பட்ட கரைகளென மனசு சிதிலங்களாய் உடைந்துவிட்டதான உணர்வு. பேசா மடந்தைகளாக நின்றவர்களில் பலரும் தமது விழிகளில்வழிந்த வேதனையை புறங்கைகளால் துடைத்துக்கொண்டு நின்றார்கள்.
பேருந்துகள் தம்பாட்டில் போய்க்கொண்டிருந்தன. கண்களிலிருந்து கண்ணீரும் தம்பாட்டில் ஊற்றிக்கொண்டிருந்தது. மாலைமாலையாக விழுகின்ற கண்ணீரை துடைக்கக்கூடத் தோன்றாமல் சிலைபோல இருந்தவர்களையும் கண்டேன். அனைவரின் மனதிலும் கொதிப்பும் குழப்பங்களும் இருப்பது முகங்களில் தெரிந்தது.
எங்கே போகிறோம் எதற்காககப் போகிறோம் என்றே தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறோம். வாழ்க்கையின் இருண்ட நாட்களுக்கு விடிவே இல்லை என்பதைப்போல மனதுக்குள் தளம்பல். அமைதியாக இருக்க முடியவில்லை. ஒவ்வொருவரும் தனிமையை உணர்ந்தபோது அது பயங்கரமான வெறுமையாய் இருந்தது. அவரவர் அவரவரது உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் பொறுப்பாக வேண்டியவர்களானார்கள்.
தாயிடமிருந்து மகனையோ மகளையோ பிரித்துவிடப்போகும் அடுத்தகட்டத்தை நினைத்து தாய்மாரும் கணவனை தன்னிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் மனைவியும் ‘அம்மா எங்கள விட்டிட்டு போயிடாதிங்க அம்மா’ என்ற ஏக்கத்தில் குழந்தைகளும் ஆளையாள் தொட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் பயணித்தார்கள்.
பேருந்துகள் ஓமந்தையை நெருங்கியபோது பகல்பொழுதை தாண்டிவிட்டிருந்தது. வீதியோரமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டன. எவ்வளவு நேரத்திற்குத்தான் பேருந்திலேயே அடைபட்டுக்கொண்டு நிற்கமுடியும். கீழே இறங்கி சற்று காலாற நின்றாலாவது நன்றாக இருக்கும். மச்சாளையும் கூட்டிக்கொண்டு கீழே இறங்கினேன். அப்போது என்னை கூர்ந்து அவதானித்த முன்னால்நின்ற இருவரும்,
‘ நங்கி நீ எல்.ரி.ரி? ’ என்று மெதுவாகக் கேட்டார்கள். அவர்கள் கேட்பது என்னையல்ல என்ற தோரணையில் வேகமென இறங்கிய நான் பேருந்தின் பின்புறமாகச்சென்று நின்றுவிட்டேன்.
‘ஏய் லூசு, உன் அலட்சியத்தை, கோபத்தை எல்லாம் விட்டுவிடு. இனி அவர்கள் உன் எதிரிகளல்ல, எஜமானர்கள். அவர்களை நீ உதாசீனப்படுத்தினால் அவர்களுக்கு எரிச்சல்வரும். அந்த எரிச்சல் மற்றவர்கள்மீதும் பாயும். உன் கோபமும் அலட்சியமும் தேவைதானா? ’ என்று என் உள்மனமே எனக்கு அறிவுறுத்தியது. என்னருகில்நின்ற மச்சாளிடம் கூட எதுவுமே பேசாமல் அமைதியாக நின்றேன்.

மழை தூறுவதும் விடுவதுமாக இருந்தது. நிலமெல்லாம் ஈரமாகி எங்களுக்கு மென்மேலும் வசதியீனங்களையே ஏற்படுத்தியது. பேருந்துக்குள்ளேயே அடைந்துகிடக்க முடியாத மக்களில் பலபேர் இறங்கி வீதியில் நின்றார்கள். பலர் வெளிக்குப்போய்விட்டும் வந்தார்கள். வீதியை அண்மித்திருந்த கிணறுகளில் தண்ணீர் எடுத்துவருவதற்கு மக்களுக்கு அனுமதி இருந்தது. அதனால் அந்தக்கிணறுகள் சனக்கூட்டத்தால் நிரம்பியது. நானும் மச்சாளும் அந்த கிணற்றடியைநோக்கி நடந்தோம்.
பாழடைந்த நிலையில் பாவிப்பாரற்றுக்கிடந்த அந்தக்கிணற்றுக்குள் ஏராளமான நூல்களும் தடிகளும் சோடா போத்தில்களை நுனியில் கட்டிக்கொண்டு உள்ளிறங்கியும் வெளியேறியும் கொண்டிருந்தன. கிணற்றுக்குள் நிறையப் போத்தில்கள் தண்ணீரில் மிதந்தன. சில போத்தில்களே கொஞ்சமாவது தண்ணீரை நிரப்பிக்கொண்டு மேலே வந்தன.
பையனொருவன் கிணற்றுக்குள் இறங்கி உள்ளேகிடந்த போத்தில்கள் சிலவற்றை வெளியே எடுத்துக்கொடுத்தான். தண்ணீரை நிரப்பமுடியாமல் தன்னருகில் தத்தளித்த போத்தில்களை தண்ணீருக்குள் அமுக்கி நிரப்பியும் விட்டான். மெல்லிய நூலால் தூக்கப்பட்ட போத்தில்களில் பல அறுந்து மீண்டும் கிணற்றுக்குள்ளேயே விழுந்தன. நானும் மச்சாளும், கிடந்த தடியொன்றில் போத்திலை கட்டி உள்ளிறக்கி அரைப்போத்தில் தண்ணீரை வெளியே எடுத்துவிட்டோம். அந்தத் தண்ணீரில் முகத்தை கழுவிக்கொண்டு திரும்பினோம்.
மழை பொழியத் தொடங்கிவிட்டது. ஓட்டமும் நடையுமாக வந்த எங்களுக்கு கண்ணுக்கெட்டிய தூரம்வரை நின்ற பேருந்துகளில் எது நாங்கள் ஏறிவந்தது என்று இனங்காண தெரியவில்லை. ஒவ்வொரு பேருந்தாக தெரிந்தவர்களை தேடிக்கொண்டு ஓடி ஒருவாறு மாமியை கண்டுபிடித்து பேருந்தில் ஏறிவிட்டோம். பேருந்து பயணிக்காத நேரத்தில் உள்ளே ஆளையாள் நெருக்கியடித்துக்கொண்டு நிற்பது முடியாமலிருந்தது. உடலில் பட்ட மற்றவர்களது உடலின் வெப்பம் உடலில் எரிச்சலை அதிகரித்தது. வெளியே மழைபெய்தாலும் உடலும் மனதும் கடுமையான வெக்கையாய் இருந்தது.
பொலபொலத்த மழை எங்கள் கண்ணீரைப்போலவே சிறிதுநேரத்தில் காய்ந்து வற்றிப்போனது. மீண்டும் இறங்கி வெளியே நின்றோம். வெளியே நடந்துவிட்டு வந்ததும் வெளியே நிற்பதும் உடலுக்கும் மனதுக்கும் கொஞ்சம் ஆறுதலாகத்தான் இருந்தது. சனவெக்கை இல்லாத காற்றை சுவாசிப்பது எவ்வளவு ஆரோக்கியத்தை தரவல்லது என்பதை மனதால் உணர்ந்தேன்.
பேருந்துகள் புறப்பட நேரமாகும் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். எங்களது பேருந்திலேயே வந்த படையினன் எங்களை கடந்துசென்றபோது என்னை பார்த்து புன்முறுவல் செய்துவிட்டுப்போனான். நானும் பதிலுக்கு புன்னகைத்தேன். ஏனெனில் அவனது புன்னகையில் சிநேகமிருந்தது. பயணத்தின்போதும் அவனை நான் கவனித்துத்தான் வைத்திருந்தேன். அனைவரையும் அடிக்கடி அவதானித்த அவன் இப்போதுதான் என்னை போராளி என்று இனங்கண்டிருந்தான்.
அவனுடைய எளிய வதனத்தில் குரோதமோ வெறுப்போ இருக்கவில்லை. அவனுடைய இளைய வதனம் இராணுவச்சீருடைக்கு கொஞ்சமும் பொருத்தமற்றதாய் தெரிந்தது. எனினும் அவன் மிகநேர்த்தியாக வரையப்பட்ட ஒரு ஓவியம்போல இருந்தான். கைதேர்ந்த ஓவியரால் வரையப்பட்டவைபோன்ற நீளக்கண்கள். நேர்த்தியான நாசி, அழகான உதடுகள். மெல்லிய உடல்வாகு. அவன் ஒரு வீரனாகத் தெரியாவிட்டாலும் மனிதனாகத் தெரிந்தான். போனவன் திரும்பிவந்தபோது இரண்டு ஆண்களைக்கொண்டு அட்டை பெட்டிகளை தூக்கிவந்திருந்தான். மதிய உணவுக்கான உணவுப்பொதிகள்தான் அவை. உணவுப்பொதிகள் எல்லோருக்கும் வழங்கப்பட்டன.
‘காணும்? காணும்? ’ என்று அந்தப்படையினன் கேட்டான். போதுமா? என்பதைத்தான் அப்படி கேட்கிறான் என்பது அவன்கேட்ட தோரணையில் புரிந்தது. போதாது என்றால் இன்னும் எடுத்துத்தர முடியும் என்று விளக்கினான். உணவு எல்லோருக்கும் கிடைத்துவிட்டதா என்று விசாரித்துக்கொண்டிருந்தான். ஆனால் எங்களின் நடைப்பிணமான வாழ்வுபற்றி அவனுக்கும் கவலை இருந்ததைப்பற்றி அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை.
தொடரும்………………








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















