{அண்மையில் த.தே.கூ மீதான விமர்சனங்களை முன்வைத்து தமிழ் சமூக அமைப்புகள் மனு ஒன்றை கையளித்திருந்தன. ஒரு ஆக்கபூர்வமான அரசியல் கலந்தாடல்வெளியை இம்மனு தமிழர் மத்தியில் திறந்து விட்டிருக்கிறது. இம்மனுவின் கருத்துகள் மீதான கட்டுரைகள் விவாதங்கள் வரவேற்கப்படவேண்டியதே.ஆனால், மனுவின் உள்ளடக்கம் பற்றி பெரிதும் பேசாது, அதனை மலினப்படுத்தும் நோக்குடன்வெளிவந்த இரு விமர்சனக்கட்டுரைகளிற்கான எதிர்வினையாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.}
அண்மையில் தமிழ் சிவில் அமைப்புகளால் தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கு ஒரு மனு கையளிக்கப்பட்டிருந்தது. முள்ளிவாய்க்காலின் பின்பு அடுத்தடுத்து தமிழர்கள் மேல் திணிக்கப்பட்ட 4 தேர்தல்களில் தமது நிலைப்பட்டை,தமது ஜனநாயகப்பிரதிநிதிகளான த.தே.கூட்டமைப்பை{ அவர்களின் விஞ்ஞாபனத்தை} மீண்டும் மீண்டும் தேர்வு செய்து, தெளிவான ஒரு செய்தியை உலகிற்கு எடுத்துக்கூறிய தமிழ் மக்கள், அதே அரசியல் விருப்பை மீளவும், தாங்கள் யாரை தெரிவு செய்தார்களோ அவர்களுக்கே ஞாபகப்படுத்தவேண்டிய நிலைக்கு இரண்டரை வருடங்களில் வந்துள்ளமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது..
அந்த மனுவின் சாரம், கருத்துகள் விரிவாக ஆராயப்படவேண்டியவை. அவை தூரத்தில் எங்கேயோ இருந்து கொண்டு {வீராப்பு/ராஜதந்திரம்}கதைக்கும் நபர்களால் எழுதப்பட்டதல்ல. தமிழர் தாயகத்தின் அனைத்துப்பகுதிகளிலும், போரிலும் வாழ்விலும் அனைத்து வர்க்க மக்களோடும் நின்று, அவர்களிக்காக சேவை செய்து வரும், தன்னலம் கருதாத{ அல்லது சுயலாப அரசியல் நிகழ்ச்சித்திட்டம் இல்லாத} நபர்களாலே எழுத்தப்பட்டது என்ற ரீதியில் பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் பெரும்பான்மையானோர் கற்றறிந்த தகைமைசால் உத்தியோகத்தர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம். அத்தோடு இம்மனுவில் புதிதாக இன்னொரு விடயத்தையும் காணலாம்.
வழமையாக பல்வேறு அறிக்கைகள் பல்வேறுகாலப்பகுதிகளில் வந்திருக்கின்றன. ஆனால், அவை கல்விச்சமூகம், பல்கலைகழக சமூகம், மதபீடங்கள் அல்லது தனித்தனி தொழிற்சங்கங்கள் என்ற ரீதியில் ஒவ்வொரு பிரதேசங்களில் இருந்தும் வந்திருக்கிறது. ஆனால், இம்மனு மேற்சொன்ன பல்வேறு தரப்பினரையும், தமிழர் தாயகத்தின் சமூகத்தின் சகல பரிமாணத்தில் உள்ளவர்களையும் ஒன்றுதிரட்டி ,ஓரணியாக்கி ஒருபுதிய ஆரோக்கியமான பாதையை திறந்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ் மக்களிடையே உணர்வுநிலையில் மட்டும் இருந்த அரசியல் விருப்பை மீண்டும் பேசுபொருளாக்கியிருப்பதன் மூலம் அம்மனு இன்றைய சூழ்நிலையில் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.அத்தோடு, கற்றறிந்த தமிழ்சமூகம் தமிழ் அரசியல் வெளியில் பாதிப்பு செலுத்துவதில்லை/ஈடுபடுவதில்லை என்ற அங்கலாய்ப்புக்கும், எந்த ஒரு பின்புலமுமின்றி வந்த அந்த மனு பதில்சொல்லியிருக்கிறது.அதில் கூறப்பட்ட விடயங்களின் சரி பிழைகளுக்கு அப்பால், எப்போதும் “அவர்கள் செய்வார்கள்” என்ற மனநிலையில் இருக்கும் எமது மக்களின் மத்தியில் இம்மனு ஒரு ஆரோக்கியமான அரசியல் விவாதவெளியை உருவாக்கியிருப்பது எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும் நமக்கு ஊட்டுகிறது.
அதேவேளை, அப்படியான அரசியல் விழிப்புணர்வு அல்லது பகிரங்க, மக்கள்மயப்படுத்தப்பட்ட அரசியல் தமிழர்களிடத்தில் தோன்றக்கூடாதென நினைக்கும் தரப்பினருக்கு இது வயிற்றில் புளியைக்கரைத்து இருக்கிறது என்பதும் வெளிப்படையாகத்தெரிகிறது. இதன் தொடர்ச்சியாகவே, பல்கலைக்கழகத்தில் எச்சரிக்கைகளும் தனிப்பட்ட அச்சுறுத்தல்களும் நடைபெறுகின்றன. இது விளங்கிக்கொள்ளக்கூடியதே.இந்த பயமுறுத்தல்கள் கூட, அந்த மனுவின் தார்ப்பரியத்தை, நியாயப்பாட்டை, அது மக்களிடத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
ஆனால் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், தமிழ் மக்களிடையேயான அரசியல் விழிப்புணர்வு, சில தமிழர்களிடமும் மனக்கிலேசத்தைத் தூண்டியிருக்கிறது என்பதுதான்.
இந்த மனுகுறித்து இலத்திரனியல் ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகியிருக்கின்ற கட்டுரைகள் இதை வெளிப்படுத்துகிறது. {த.தே.கூ வினது கனடா பிரதிநிதி நக்கீரன் மற்றும் சுமந்திரனின் லண்டன் உரைக்கு வக்காலத்து வாங்கிய அநபாயன் ஆகியோருடைய கட்டுரைகள்}
தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள், மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு / பகிரங்க அரசியல் விவாதங்கள் தோன்றுவதை ஒருபோதும் வரவேற்பதில்லை. மக்களை அரசியல் அறியாமைக்குள் வைத்திருப்பதன் மூலமும் தமது கவர்ச்சியான பேச்சுகள் மூலமும், கட்சியின் பேரில் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நிலையையே பேணிக்கொள்ள விரும்புவார்கள். ஆனால், எமது மக்களைப்பொறுத்தவரையில், எமக்கான அரசியல் விருப்பில், உணர்வில், அவர்கள் அரசியல்வாதிகளைவிட உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் நேரடி அரசியலில் அல்லது அரசியல் விவாதங்களில் ஈடுபடுவது மிகவும் குறைவு. துரதிர்ஷ்டவசமாக அப்படியான ஒரு துர்ப்பாக்கியமான நிலைமைக்குள்ளேயே எமது மக்களை தொடர்ந்தும் வைத்துக்கொள்ள இந்த கட்டுரையாளர்களும் விரும்புகிறார்களோ தெரியவில்லை.
அம்மனுவின் அர்த்தங்கள் , கருத்துகள் பற்றிய விவாதங்கள் உருவாவது நிச்சயமாக வரவேற்கத்தகதே. அந்த மனுவை வெளியிட்டவர்களும் அவ்வாறான விவாத வெளி உருவாவதை வரவேற்பார்கள் என நம்புகிறேன். அந்த மனு கூட த.தே.கூவினை கொள்கையின் பால்பட்ட மக்கள் அரசியல் இயக்கமாக, புனிதமான அமைப்பாக இருக்கவேண்டுமென்றே எதிர்பார்க்கிறது. ஆனால் இதுவரை வெளியான விமர்சனங்கள், மனுவின் உள்ளடக்கங்கள் பற்றி ஆய்வதை விடுத்து, மனுவின் கையொப்பதாரிகளை கட்சி முலாம் பூசி ஒரங்கட்டுவதில் முனைத்து நிற்கினறன.
எமது மண்ணில் தமிழகத்தைப் போல ஒருபோதும் கட்சி அரசியல் பலமாக இருந்ததில்லை. தனித்தலைவர்களுக்கான வாக்குவங்கியும் இருந்ததில்லை. விஞ்ஞாபனமும் தலைவர்களின் நிலைப்பாடுமே அவர்களது இருப்பை ஒவ்வொரு தேர்தல்களிலும் தக்க வைத்துக்கொள்ளும்.{உதாரணமாக அமரர் அமிர்தலிங்கமாகட்டும், த.தே.கூ தலைவர் சம்பந்தர் ஆகட்டும் ஒருபோதும் தொடர்ச்சியாக தேர்தல்களில் வென்று வந்ததில்லை. அவர்களின் நிலைப்பாடு கொள்கைகளின் பாலானது என்று மக்கள் நினைக்கின்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே மக்கள் அவர்களை தேர்வு செய்து வந்துள்ளார்கள்}.
ஆனால் வெளியாகிய கட்டுரைகள் இரண்டும் மனுவின் கோட்பாடுகள் பற்றிய விவாதத்தை மட்டுப்படுத்தி, கையொப்பமிட்டவர்களிற்கு முலாமிட்டு, எமது மண்ணிலும் கட்சி அரசியலைத்தூக்கிப்பிடித்து, அணிபிரித்து பார்க்கும் கலாச்சாரத்தையே தூண்டிநிற்கின்றன. ஆனால் , நானறிந்த வரையில் , கையொப்பதாரிகளில் இருவரைத்தவிர ஏனையவர்கள் தமிழ்தேசியம் சார்ந்த கட்சி எதனையும் சாராதவர்கள். அதிலும் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், அந்த இருவர்கூட த.தே.கூவின் பாராளுமன்ற தேர்தலின் நியமன வேட்பாளர்கள்.அதிலும் ஒருவர் புலிகள் காலத்திலும், பல்கலைக்கழக பொங்குதமிழ் காலத்திலும் தமிழர்களின் அடிப்படைக்கோட்பாடுகளை வரைபுபடுத்துவதில் முன்னின்றவர். தனது வரலாற்றுப்புலமை மூலம், இன்றும் பல்வேறு அரங்குகளில் இலங்கைத்தீவின் தம்ழர்களுக்கான உரிமை பற்றி நிறுவி வருபவர்.
ஒரு விவாத்திற்காக, கையொப்பமிட்டவர்கள் தமிழ்தேசிய முன்னணியின் அங்கத்தவர்கள் அல்லது அனுதாபிகள் என்றுவைத்துகொண்டால் கூட, அவர்களின் கருத்துக்களிற்குப்பதில் சொல்வதே கற்றறிந்தவர்களின் பண்பாகும்.அனால் இந்த இரு கட்டுரைகளிலும் அது மிக்குறைவாகவே காணப்படுகிறது.
அதிலும் சில தொழிற்சங்கவாதிகளை ஈ.பி.டி.பி சங்கங்கள் என தள நிலவரம் அறியாது கனடாவிலிருந்து குற்றம் சுமத்தும் தன்மையும் காணப்படுகிறது. அநேகமான தொழிற்சங்கங்கள், {அரச/ தனியார்} நிறுவனங்களுல் சாம, தான தண்ட பேதங்களினூடு ஈபிடிபி தனது செல்வாக்கை உட்புகுத்தமுனைந்து சிலரை விலைக்கு வாங்கியிருப்பது இன்றைய யாழ்ப்பாணத்து யதார்த்தமாகும்.ஆனால், அங்கு கூட பெரும்பான்மையான அங்கத்தவர்கள் அத்தனை நெருக்கடியிலும் கொள்கைகளில் பற்றோடே இருகிறார்கள்.
தேசியத்தின் மேலான தமது விருப்பை பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியிலும் பகிரங்கமாகக்கையொப்பமிட்டு வெளிக்காட்டிய அந்த தொழிற்சங்கவாதிகளின் துணிவை/ அர்ப்பணிப்பை எங்கோ பனிவிழும் நாட்டில் இருந்துகொண்டு கட்டுரை அரசியல் செய்யும் நக்கீரன் மலினப்படுத்தி உள்ளார். எல்லாவற்றிலும் மேலாக, அதிவணக்கத்திற்குரிய மன்னார் ஆண்டகையையும் துரோகி ஆக்கியுள்ளார் இந்த நக்கீரன். அதற்கு ஆண்டகை ஜனாதிபதியுடன் தேநீர் அருந்தியாதாகவும் சிறுபிள்ளைத்தனமாக குறிப்பிட்டு உள்ளார். அப்படியாயின், த. தே,கூ ஒவ்வொரு முறை பேச்சில் முறிவு என்று சூடுகிளப்பும் போதெல்ல்லாம், அதிமேதகு ஜனாதிபதியின் அன்பான அழைபை ஏற்று தனியாக ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடி, தனது சக உறுப்பினருக்கே விபரம் கூறாது மீண்டும் பேச்சுக்கு சம்மதம் சொல்லும் சம்பந்தர் ஐயா அல்லது மக்கள் அவலத்தில் இருக்க அவலத்தை தந்தவர்களுடன் கிறிக்கெற் விளையாடிய பிரபல சட்டத்தரணியும், பிரபல கிறிக்கெற் வீர்ரும் பகுதி நேர தமிழ் அரசியல்வாதியுமான த.தே.கூவின் சட்ட மூளையென கொள்ளப்படும் திரு சுமந்திரன் ஆகியோர் நக்கீரனின் பார்வையில் எந்த வகையறாவுக்குள் வருகிறார்கள்? {அல்லது அவர்கள் தமது சந்திப்புகளின் போது தேநீர் அருந்தாது தமிழ்விசுவாசத்தைப் பேணிக்கொள்கிறார்களோ தெரியவில்லை!!!!}.
{தத்தமது தனிப்பட்ட தேவைகளுக்காக அரச உயர்மட்டத்தை தனியாகச்சந்திக்கும் பாராளுமன்ற உறுபினர்கள் பற்றி இங்கு எழுதுவதற்கு நான் முற்படவில்லை}
சிறிது காலத்தின் முன்பு, அமெரிக்க வெளியுறவுச்செயலர் ஹிலறிகிளிங்னிற்கு, தமிழ் சமூக அமைப்பு ஒன்று, எமது பிரச்சினைக்கு தீர்வாகவோ ஆரம்பப்புள்ளியாகவோ 13ம் திருத்தசட்டத்தை வலியுறுத்த வேண்டாம் என எழுதிய கடிதம் இணையங்களில்வெளியாகியபோதும் இதே நக்கீரன் தனது நெற்றிக்கண்ணை திறந்திருந்தார். {13ம் திருத்ததை வலியுறுத்தவேண்டாம் என மக்கள் கூறுவதில் த.தே.கூவின் கனடா பிரதிநிதியான இவருக்கென்ன கோபம் என்பது புரியவில்லை}. அதன்போது அவ்விணையங்கள் அக்கடித்த்தில் கையொப்பமிட்டவர்களின் பெயர்களை வெளியிட்டிருக்கவில்லை. அதற்கு, 13ம் திருத்த்த்தை எதிர்த்து இக்கடித்தை எழுதியவர்களை முகமற்ற பிரகிருதிகள் என்று பாதுகாப்பாக கனடாவில் இருக்கும் நக்கீரன் விமர்சித்திருந்தார். இப்போது முகம் காட்டி மனுவிட, மனுவிட்டவர்கள் மீது தனிப்பட்ட சேறுவீசல் புரிகிறார் நக்கீரன்.
இன்னொரு இடத்தில் இந்த அறிக்கை திரு.கஜேந்திரகுமாரின் மறுவாசிப்பு எனக் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் தேசியம் சுயநிர்ணயம் பற்றி பெரிதும் வலியுறுத்தும் இம்மனு 2001, 2004,2010 ஆண்டுகளிற்கான த.தே.கூவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கத்தையே மீண்டும் ஞாபகப்படுத்தி, வலியுறுத்தி நிற்கிறது ஆகையால் இம்மனுவை நான் {ஆரம்பகால} த. தேகூவின் மறுவாசிப்பாகவுமே பார்க்கிறேன். அதைவிடுத்து தேசியம் சுயநிர்ணயம் சம்பந்தமான வலியுறுத்தல்கள் எல்லாம் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் கருத்துகளே என கூறுவதன் மூலம் நக்கீரன் மல்லாந்து படுத்துக்கொண்டு மேல்நோக்கி துப்புகிறார் என நினைக்கிறேன்.
சுதர்சன நாச்சியப்பனின் டெல்கிக்கருத்தரங்கில் சித்தார்த்தன், சங்கரி, பரந்தன் ராஜன் ஆகியோருடன் ”ஒத்த கருத்துக்கு” வந்து தமிழர் “ஒற்றுமையை” வெளிப்படுத்துவதாகக்கூறி எமது அடிப்படைஉரிமைகளை விட்டுக்கொடுத்தமை, அதற்கான விளக்கத்தை கொடுக்காமை, புலத்தில் மக்களிடத்தில் பேசிய திரு.மாவை அவர்கள் டெல்கியில் நேரம் போதாமையும் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் பற்றிய தீர்க்கமான முடிவு எடுக்கமைக்கு ஒரு காரணம் நகைப்புக்கிடமாக சொன்னமை போன்றவற்றால் தமிழர்களிடத்தே உருவாகியிருந்த விசனமும் நியாமான கோபமும் இம் மனுவில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. நடைமுறையில் அடிப்படைகொள்கைகளில் தடம் மாறுவதாக சந்தேகம் கொள்ளும் வேளையில் அதனை விமர்சனத்திற்கு உள்ளாக்கி வழிப்படுத்துவதே ஆரோக்கியமான வழியாகும்.அதனையே இந்த மனு செய்திருந்தது.
ஆனால், தேசியம் சுயநிர்ணயம், தாயகம் என்பவற்றின் அடிப்படையில் வழிதவறுவதாக த.தே,கூவை, தமிழ்தேசியமக்கள் முன்னணி விமர்சித்துவருவதால், {அந்த விமர்சனங்கள் நிதர்சனமான நிலையில், }அதே விமர்சனத்தை பிறிதொரு தரப்பினர் முன்வைத்தால் அத்தரப்பினர் தமிழ்தேசியமக்கள் முன்னணிக்கு ஆதரவானவர்கள் என்கிற வாதம் விகல்பமானது. தமிழர்களின் விருப்பான தேசியம், தாயகம், சுயநிர்ணயம் பற்றி புலிகள் கதைத்தார்கள், போராடினார்கள் என்பதற்காக அவை பற்றி மீண்டும் கதைப்பது புலிகளுக்கு ஆதரவானது என்று சிறிலங்கா அரசு நிறுவுவதற்கும் இதற்கும் என்னால் பெரிய வித்தியாசத்தைக் காண முடியவில்லை.
மேலும்13ம் திருத்தம் பற்றியும் மாகாணசபைபற்றியும் இம்மனுவில் கூறப்பட்டவற்றில் அநேகமானவை த.தே.கூவினதும், தமிழர் விடுதலைக்கூட்டணியினதும் நிலைப்பட்டை ஒட்டியதே. பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தேர்தலில் பங்குபற்றி, எமது தாயக்கத்தின் பிரிப்பை, தமிழர்களின் ஜனநாயகப்பிரதிகளான த.தே.கூ அங்கீகரிப்பதில்லை என்பதே த.தே.கூவின் கொள்கைசார்ந்த நிலைப்பாட்டாகும். அதுவே இந்தமனுவில் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறத மீள ஞாபகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனையும் விட 1989 களில் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணியினர் 13ம்திருத்தச்சட்ட்த்தையும், மாகாணசபைச்சட்டத்தையும் ஏன் நிராகரிக்கவேண்டும் என ஒரு கடித்த்தை ஆவண வடிவில் பல்வேறு தரப்புகளிற்கு வெளிப்படுத்தி இருந்தார்கள். அதன் மறுவாசிப்பே இந்த சிவில் சமூகத்தின் மனு. மொதத்தில், இம்மனு த.தே.கூ மற்றும் கூட்டணி சொன்னவற்றின் {செய்தவை//செய்பவை எவையாக இருப்பினும்} மறுவாசிப்பே தவிர வெறொன்றும் இல்லை.
இம்மனு பற்றி விமர்சிக்கும் இன்னொரு கட்டுரையாளர் திரு அநபாயன் அவர்கள், இம்மனுவில் யாழ்மையவாதம் மேலோங்கியிருப்பதாக் கூறி கீழ்த்தரமாக, பிரதேசவாதத்தைக் கையிலெடுத்து, மனுவின் தார்ப்பரியத்தைப் பலவீனப்படுத்துகிறார். குறிப்பாக கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து கையொப்பங்கள் இல்லாமையையும் அவர் குறிப்பிட்டு, இம்மனு யாழ் பல்கலைக்கழகத்தின் பழமைவாதிகளின் கொள்கையின் பாற்பட்டது என கூறமுற்படுகிறார். இதன் மூலம் தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்பவை யாழ்மைய , மேட்டுக்குடி,பழைமைவாதிகளின் கொள்கைகளே என யதார்த்தம் பற்றிய புரிதல் சிறிதுமின்றி நிறுவ முற்படுகிறார். எந்தவொரு தேர்தல்களிலும் கிழக்கு மாகாண மக்கள் தேசியத்தை விடுத்து வாக்களித்ததில்லை என்பதையும், எத்தனையோ இன்னல்கள் வந்த போதெல்லாம் அவர்கள் அடிப்படைக்கொள்கைகளில் ஒருபோதும் பிறழ்வதில்லை என்பதையும் அவர் உண்மையில் அறியாது இருக்கிறாரா என்பது தெரியவில்லை. குறிப்பாக பாராளுமன்ற தேர்தல்களில் தேசியத்திற்கு எதிரான எந்த ஒருதமிழ்கட்சியும் கிழக்குமாகாணத்தில் இதுவரை வெல்லவில்லை என்பதையும் இவர் செளகரியமாக மறந்துவிடுகிறார்.{ஆனால் யாழ்ப்பாணத்திலேயே இவ்வாறானவர்கள் இதுவரை வென்றுவந்துள்ளார்கள்.}
மேலும், வன்னியிலிருந்து கையொப்ப்பங்கள் குறைவாகவே இருப்பதாகவும் இதற்குக்காரணம், “தேசியம் , தாயகம், சுயநிர்ணயம்” போன்ற கொள்கைநிலைப்பாடுகளைத்தொடர்ந்தும் பேணிக்கொள்வதன் விலையை அவர்கள் உணர்ந்தமையேயாகும் எனக் கூறி வன்னிமக்களின் கொள்கை மீதான பற்றுதியையும் மலினப்படுத்துகிறார். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், சுதந்திரமாக செயற்படமுடியாத, மிகுந்த அச்சுறுத்தல்களுக்குள் நடந்த இரண்டு தேர்தல்களிலும் வன்னி மக்கள் வெளிப்படுத்திய அந்த உறுதிப்பாட்டை இவர் புரிந்துகொள்ளாது கேவலப்படுத்துவது மிகவும் கவலைக்குரியது. அங்கு நிலவும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அவர்கள் பகிரங்க மனுவில் கையொப்பமிடுவதன் சிக்கல்கள் சாதாரணமாகவே அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடியது.இந்தப்புரிதலை தயான் ஜயதிலகவின் கட்டுரையை எடுகோள்காட்டி கட்டுரை எழுதும் அநபாயனிடம் நாங்கள் எதிர்பார்ப்பது எமது தவறே ஆகும். அத்தோடு இவரும் இம்மனுவின் வரைபை தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்புபடுத்தி , மனுவின் நடுநிலைத்தன்மையை மலினப்படுத்தும் செயலிலேயே ஈடுபட்டிருக்கிறார்.
அத்தோடு, இவர் கூட எமது அடிப்படைக்கோட்பாடுகளான தாயகம் சுயநிர்ணயம், தேசியம் ஆகியன தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஆவிகளாலும்{ அவர் வழியைப்பின்பற்றுபவர்கள்} யாழ்பல்கலைக்கழக புத்திஜீவிகளாலுமே கொண்டுசெல்லபடுவதாகவும் இதுவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தோற்றுவாய் என்றும் கூறியிருக்கிறார். இதன் மூலம், எதற்கு கல்லெறிய முற்பட்டாரோ, இறுதியில் {மேற்கூறப்பட்ட வசனங்கள் மூலம்} தன்னையறியாமலே அதற்கே பூ வீசிவிட்டுப்போகிறார்.
அத்தோடு, வடமாகாண சபைத்தேர்தல் சம்பந்தமான த.தே.கூ வின் ஆரம்பகால கொள்கைரீதியான நிலைப்பாட்டை ஞாபகப்படுத்திய கோரிக்கையும், இல்லாத சபையின் முதலமைச்சர்/அமைச்சர் கனவுகளோடு இருந்தவர்களுக்கும் மற்றும் நக்கீரன் போன்றவர்களுக்கும் பீதியக்கிளப்பிவிட்டிருப்பதையும் காணமுடிகிறது. நக்கீரன் கூறுவதுபோல் தேசியத்துக்கு மாறானவர்களிடம் அதிகாரம் போய்விடக்கூடாது என்பதில் இம்மனுவும் மிகவும் சிரத்தை எடுத்துள்ளது. அதுசம்பந்தமான மாற்றுவழி குறித்த உரையாடல் களத்தையும் அது திறந்தே வைத்துள்ளது. அனைத்து தமிழ்தேசியத்தரப்புகளும் கொள்கைக்காகஒன்றிணைந்து மாற்றுவழியொன்றை முன்வைக்கும் பட்சத்தில் அது எந்தக்கட்சியையும் தோற்கடிக்கவல்ல மக்கள் எழுச்சியை உருவாக்கும் என்பது தாயகத்தில் இருக்கும் அனைவருக்கும் புரியும்.{இவரது கருத்து த.தே.கூ இதுவரை வென்றதெல்லாம் அதன் சின்னத்தின் மீதும் தலைவர்கள் மீதுமான தனிப்பட்ட வாக்குவங்கியினாலும் என்ற மிகவும் தவறான புரிதலில் இருந்து உருவாகியிருக்கின்றது. உண்மையில், தேசியத்திற்கான கட்சி / புலிகள் விட்டுச்சென்ற கட்சி என்ற அடிப்படையிலே, அதன் விஞ்ஞாபனங்களின் அடிப்படையிலேயே த.தே.கூ வென்று வந்திருப்பதே யதார்த்தமாகும்.
அத்தோடு, பிரிக்கப்பட்ட /அதிகாரங்கள் எதுவுமற்ற மாகாணசபையைப் பற்றிப்பிடித்தபடி தொடர்ச்சியான பேச்சுவார்த்தை மூலம் அல்லது கிறிக்கெற் விளையாடி நல்லிணக்கத்தை வளர்ப்பதன் மூலம் சிங்கள தேசத்திடமிருந்து நாம் விரும்பும் தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என்பது வெறும் கனவேயாகும். இதுவரைகால தமிழரின் அரசியல் வரலாற்றையும் சிங்கள மேலாதிக்க மனோநிலையையும் படித்திராது கூறும் கருத்தாகவே இதைக்கருதமுடியும். இந்த இடத்தில் நக்கீரன் மற்றவர்களுக்கு கூறுவதுபோல அவரும் வரலாற்றை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். இதை {உங்களுக்கு பிடிக்காவிட்டாலும்}எமக்குப் பிடித்தவரின் வசனத்தில் சொல்வதனால் “ வரலாறு தான் எமது ஆசான்” என்பதனை ஞாபகப்படுத்தவிரும்புகிறேன்.
மேலும் 1989இலேயே அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினால் நிராகரிக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட மாகாணசபையை ஏற்று அதன் அதிகாரங்களுக்காக போராடுவதன் மூலம், சவதேசத்தின் மத்தியில் ”இனப்பிர்சசினை” என்கிற பரிமாணத்தில் இருக்கிற எமது பிரச்சினை சம்பந்தமான புரிதலை வெறும் மத்திய மாநிலங்களுக்கிடையிலான அதிகாரப்பிரச்சினை என்ற பரிமாணத்திற்கு தாழ்த்தி விடும் என்கிற யதார்த்த்தையும் இவர் புரியமறுக்கிறார்.
இவர்கூறுவதைப்போலவே “எமக்கு சிலுசிலுப்பல்ல, பணியாரம் தான் வேண்டும்” என்பதில் அந்த மனுவும் உறுதியாக இருக்கிறது என நம்புகிறேன். ஆனால் , அம்மனு, பணியாரம் என்ற பெயரில் அரைகுறையாகவெந்ததை ஏற்று எமது சமூகம் சமிபாட்டுக்கோளாறடையக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது.
”எமக்கு சிலுசிலுப்பல்ல, உண்மையான நல்ல பணியாரம் தான் வேண்டும் நக்கீரன் அவர்களே!! சிலுசிலுப்புகளை விடுத்து பணியாரம் சம்பந்தமான ஆக்கபூர்வமான கருத்தாடல்களை ஆரம்பியுங்கள்.
இது எமது ஊடகங்களுக்கும் சமர்ப்பணம்.
தி.இளங்குமரன்








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















