இயற்கையின் படைப்பில் கிடைக்கும் எண்ணற்ற பழவகைகளை உட்கொள்வதால் கிடைக்கும் பயன்களைக்குறித்து இப்பகுதியில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இங்கு பேரீச்சை மற்றும் சப்போட்டாப் பழங்களின் சிறப்புக்களை நாம் காணப்போகிறோம்.
பேரீச்சையின் பெரும் பயன்கள்:
'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பார்களே! அது பேரீச்சைக்கு மிகவும் பொருத்தமான பழமொழி. வேறெந்தப்பழங்களையும் விட மிக மிக இனிப்பானது இது. பாலைவனத்திற்குக் கிடைத்த பேறு இப்பழம். இயற்கையின் அன்பும் அக்கறையும்தான் என்ன? வறண்ட பாலையிலும் இனிமை ததும்பும் பழம், 'ஏழ்மையிலும் காணக்கிடைக்கும் கொடைத்தன்மை போல்'.
பனையின் இனத்தைச் சேர்ந்தது பேரீச்சை. யூப்ரடிஸ் நதிக்கரைகளை ஆதியாகக் கொண்டது இதன் வரலாறு. வறண்ட தட்பவெப்பமுடைய எல்லாப் பிரதேசங்களிலும் காணக்கிடைக்கிறது இக்கனி.
உண்பதற்கு மிகவும் இனிமையானது என்பதுடன் எண்ணிலடங்காத மருத்துவக்குணங்களையும் பெற்றுள்ளது இது. ஏராளமான அளவில் விட்டமின்களும் தாது உப்புக்களும் அடங்கியுள்ள இக்கனி, பொதுவான உடல்நல மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக விளங்கக்கூடியது இது.
பதப்படுத்தப்படாத, புதிய பேரீச்சம்பழம் உண்பதற்கு மென்மையான சதைப்பகுதியை உடையது. உடனடியாக உடலில் கலக்கக்கூடிய எளிமையான சர்க்கரை வகைகளாகிய ஃப்ரக்டோஸ் மற்றும் டெஃஸ்ட்ரோஸ் ஆகியவை, இக்கனியை உண்டவுடனேயே உடலுக்குப் புத்துணர்ச்சியை ஊட்டுகின்றன. எனவே விரதம் இருப்பவர்கள் உடல் சோர்வு அடையாமல் இருக்க இதை எடுத்துக்கொள்வதுண்டு. இசுலாமிய நாடுகளாகிய துபாய், ஈராக் போன்ற இடங்களில் பெரும்பாலும் அதிகம் விளையும் இக்கனி, இரமலான் மாதங்களில் விரதமிருப்பவர்களால் உண்ணப்படுவதுண்டு என்று கூறப்படுகிறது.
இக்கனியில் அதிக அளவில் நார்ச்சத்து காணப்படுவதால், இது மலச்சிக்கலுக்குச் சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. மேலும், மலக்குடலில் தோன்றும் நோய்த்தொற்றுக்களைத் தடுப்பதிலும், மலக்குடல் சவ்வுகளில் ஏற்படும் புற்றுநோயை வரவிடாமல் காப்பதிலும் இதன் பங்கு மகத்தானது. மேலும் இக்கனியில் காணப்படும் டானின் என்னும் வேதிப்பொருளானது, உடலின் உள்ளுறுப்புகளை நோய்த்தொற்றுக்களில் இருந்தும் வீக்கம், எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்தும் விடுவிக்கக் கூடிய திறன் படைத்தது. அத்துடன் உடலுக்குள் இரத்தக்குழாய்கள் வெடித்தல், இரத்தம் உறைதல் போன்றவற்றையும் இது கட்டுப்படுத்துகிறது.
இப்பழத்தில் மிகுந்த அளவில் காணப்படும் விட்டமின் ஏ, கண்பார்வை மேம்பட உதவுவதுடன், வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்த் தடுப்பிலும், தோலில் ஏற்படும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்தவும், சரும அழகினை கட்டிக்காப்பதற்கும்கூட உதவி புரிகிறது. இக்கனியில் காணப்படும் பீட்டா கரோடின், ல்யூடின், ஃஸியாக்ஸாந்தின் போன்ற எதிர்-ஆக்சிஜனேற்றக் காரணிகள், மார்பகம், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற பல பாகங்களில் உண்டாகக்கூடிய புற்றுநோய்வகைகளைத் தடுக்கும் ஆற்றலுடையவை.மேலும் இவ்வேதிப்பொருட்கள், வயதாவதனால் ஏற்படக்கூடிய கண்பார்வை மங்குதல் போன்ற துன்பங்களில் இருந்து காக்கவல்லவை.
பேரீச்சையில் அதிக அளவில் இரும்புச்சத்து அடங்கியிருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். இதனால், இரத்தத்தில் சிவப்பணுக்கள் (ஹீமோகுளோபின்) அதிக அளவில் உற்பத்தியாவதால், உடலில் பல பகுதிகளுக்கும் உயிர்க்காற்றாகிய ஆக்சிஜன் போக்குவரத்து மேம்படுகிறது. இதனால் உடல் உறுப்புகள் பலமும் வளமும் பெறுகின்றன.
இக்கனியில் அதிகம் காணப்படும் மற்றொரு தாதுப்பொருள் 'பொட்டாசியம்' ஆகும். உடலின் திசுக்களிலும், உடலில் சுரக்கும் பலதிரவங்களிலும் காணப்படும் இது, இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பைச் சீராக வைப்பதில் பெரும்பங்காற்றுகிறது. எனவே வலிப்பு மற்றும் இதயநோய்கள் வராமல் தடுக்கிறது.
இவை தவிர, எலும்பு வளர்ச்சியில் மகத்தான பங்கினை ஆற்றும் மக்னீசியம், எலும்புகள், பற்கள் இவற்றின் வளர்ச்சி மற்றும் உறுதிக்குக் காரணமாவதோடு உடலில் இரத்தம் உறைதல் போன்றவற்றிலும் பங்காற்றும் கால்சியம், இரத்தச்சிவப்பணு உற்பத்திக்கு உதவும் தாமிரம், பொதுவான் உடல்நலத்திற்கும், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கும் தேவையான மாங்கனீசு போன்ற தனிம வேதிப்பொருட்களும் இப்பழத்தில் அதிக அளவில் காணக்கிடைக்கின்றன.
இவை மட்டுமின்றி பலவகையான பி விட்டமின்களாகிய நியாசின், ரிபோஃப்ளேவின், பைரிடாக்ஸின், பாந்தோதினின் அமிலம் போன்றவற்றையும் தன்னில் கொண்டுள்ளது பேரீச்சை. இவை உடலில் மாவுச்சத்தான கார்போஹைட்ரேடுகள், புரதச்சத்துக்கள் மற்றும் கொழுப்புச் சத்துக்களை, உடல் அவற்றை ஏற்றுக்கொள்ளும்விதமாக மாற்றித்தருவதற்கும், சீரணிப்பதற்கும் தேவைப்படுபவை. 'விட்டமின் கே' யானது இரத்தம் உறைவதற்கு மிக மிக இன்றியமையாதது. மேலும் எலும்பு வளர்ச்சிக்கும் மிகத் தேவைப்படுவது. அதுவும் இதில் அடங்கியிருக்கிறது.
பேரீச்சையானது, மதுப்பழக்கத்தினால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை நீக்குவதிலும் உதவிபுரிகிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் தொடர்ந்து பேரீச்சையை உட்கொள்வதால், இரத்த சோகை கட்டுப்படுவது தவிர, பிரசவத்தின் பொழுது ஏற்படும் அளவிற்கதிகமான உதிரப்போக்கினால் உயிரிழப்பு உண்டாவதும் தவிர்க்கப்படுகிறது. அத்துடன், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால் தாய், சேய் இருவரின் நலமும் பாதுகாக்கப் படுகிறது.
பதப்படுத்தப்பட்ட மற்றும் உலர்ந்த பேரீச்சை உலகின் எந்த மூலையிலும் எந்தக் காலத்திலும் கிடைக்கிறது. லல கடைகளில் இதன் சாறும் (Syrup)
விற்கப்படுகிறது. இதயக் கோளாறு உள்ளவர்கள், இரவு நீரில் பேரீச்சையை ஊறவைத்து அதைக் காலையில் அந்த நீருடன் சேர்த்து சாறு போல அருந்துவதால், இதயம் பலமடைகிறது. பாலில் இதனைச் சேர்த்து அருந்துவதால், சிறுவர்/சிறுமியர் நல்ல வளர்ச்சியை அடைகிறார்கள்.
சிறு குழந்தைகள் முதல் குடுகுடு கிழவர்கள்வரை எல்லோருக்கும் நன்மை தரும் இதை உண்டு பயன் பெறுவோம்.
சப்புக்கொட்ட வைக்கின்ற சப்போட்டாப்பழம்:
மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது இப்பழம். நல்ல இனிப்பான சுவையுடைய இது, நன்கு முற்றாமல் இருப்பின் இலேசான பிசுபிசுப்பை உடையது. மென்மையான சதைப்பற்றும், பெரிய விதையும் உள்ள இப்பழத்தில் அடங்கியுள்ள டானின் என்ற வேதிப்பொருள் வயிற்றுப் போக்கினைக் கட்டுப்படுத்தக்கூடியது. இதில் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ அதிக அளவில் அடங்கியுள்ளதால், இதனை உட்கொள்வது தோல் பாதுகாப்பிலும், கண் பார்வைப்பாதுகாப்பிலும் பெரும்பங்கு வகிக்கிறது. சளிப்பிடிப்பது, ஒவ்வாமை இவற்றிற்கு எதிராகவும் இக்கனியில் உள்ள வேதிமங்கள் செயல்படுகின்றன. இதில் உடலுக்குத் தேவையான பொட்டாசியம், தாமிரம் மற்றும் இரும்பு போன்ற தனிமங்களும் நிறைந்த அளவில் உள்ளதாலும், உடலில் உடனடியாகக் கலந்து சக்தியளிக்கக்கூடிய பழச்சர்க்கரைகளாகிய சுக்ரோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் ஆகியவை இருப்பதாலும் சாப்பிட்டதும் உடலுக்குப் புத்துணர்வூட்டக் கூடியது இப்பழம்.
அதிகம் முற்றாத பழத்தைப் பறித்துக் கொதிநீரில் வேகவைத்து வடித்த நீர், சீதபேதியைக் கட்டுப்படுத்தும். இதன் காய் மற்றும் பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு திரவமானது நுரையீரல் சார்ந்த நோய்களை குணப்படுத்தக் கூடியது. இதன் பழுத்த இலைகளைக் கொதிக்க வைத்து அருந்தினால், இருமல் மற்றும் சளித்தொந்தரவு நீங்கும்.
சப்போட்டாப்பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டைகளைத் தூக்கி எறிந்துவிடாதீர்கள். அவ்விதைகளைப் பொடி செய்து சாப்பிட்டால், சிறுநீரகக் கற்களைத் துரத்தி அடித்துவிடுமாம். பூச்சி அல்லது விஷக்கடிகளின்பொழுது கடிபட்ட இடத்தில் சப்போட்டா விதைகளை அரைத்துப் பூசினால், வலி மற்றும் விஷம் இறங்கிவிடுமாம். இதற்கு மேல் வேறென்ன வேண்டும்?
இன்னும் சில பழங்களுடைய குணங்களுடன் மீண்டும் இதே பகுதியில் சந்திக்கலாம்.








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















