'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே!', 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' போன்ற உப்பின் அருமையை விளக்குகின்ற பழமொழிகளை குழந்தைகள் கூட அறிவார்கள். ஒரு காலத்தில், பொன்னினும் அதிக விலை மதிப்புடையதாக இருந்ததாம் உப்பு. ரோமானிய நாட்டில், உழைப்புக்குக் கூலியாக உப்புதான் அளந்து கொடுக்கப்பட்டதாம். சம்பளத்திற்கு ஆங்கிலச்சொல்லான 'Salary' என்பதன் வேர்ச்சொல், உப்பினைக்குறிக்கும் 'salarium' என்ற ரோமானிய மொழிச்சொல்லில் இருந்து உருவானதுதான். ஆனாலும், இந்த உப்பு, இன்று அளவிற்கதிகமாக மனிதனால் உட்கொள்ளப்பட்டு, அவன் எதிரியாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. 'அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்கையில் உப்பு மட்டும் அதற்கு விதிவிலக்காக முடியுமா என்ன?மனிதன் காட்டில் வாழ்ந்தான். கைக்குக் கிடைத்த காய்கனிகளையும், கிழங்குகளையும், வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியையும் உண்டான். உப்பின் பயனை அவன் உணரவில்லை. நமது உடலுக்கு, காய்கறிகள், பழங்களில் காணப்படும் உப்பு போதுமானது. ஆனால், நாகரிகம் பெருகப் பெருக, நாம் உணவைப் பசிக்காக என்பதைவிட ருசிக்காக என்று நினைக்கப் பழகியதன் காரணமாகத்தான், இன்று தலைவிரித்தாடும் பலவகையான உடற்கோளாறுகள். உணவினைச் சுவையூட்ட, அமுதமாக்கப் பயன்படும் அதே உப்பு, இன்று நாம் அளவிற்கதிகமாக அதைப் பயன்படுத்தத் தொடங்கியதால், பல தொல்லைகளுக்கும் காரணியாக மாறிவிட்டிருக்கிறது.
உப்பினைச் சேர்ப்பதன் மூலம், உணவுப்பொருட்களைப் பதப்படுத்தலாம். நீண்ட நாட்கள் உணவுகள் கெடாமல் காக்கலாம் என்று கண்டறிந்தது ஒரு விதத்தில் மனிதர்களுக்கான பல நோய்களுக்கு மூலகாரணமாக மாறிவிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. உப்பும் காரமும் அதிகமாகப் போடப்படும் ஊறுகாய், நம் நாக்கின் சுரப்பிகளுக்கு விருந்தாகலாம்... ஆனால் நமது உள்ளுறுப்புக்களுக்கு அல்ல. 'காய்ந்த மீன்' 'வற்றல் வகைகள்' 'அப்பளம் வடகம்' போன்றவைகளும் இத்தன்மையினை உடையனவே!
குறிப்பாக மேலை நாடுகளில், வீட்டில் அன்றாடம் சமைக்கும் பழக்கம் அவ்வளவாக இல்லை. 'Tin foods' என்று கூறப்படும் பதப்படுத்தப் பட்ட உணவுகளே அங்கு அதிக அளவில் உட்கொள்ளப் படுகின்றன. 'Cookies' 'biscuits' 'bread' போன்ற உணவுவகைகளில் பலமடங்கு அதிக உப்பு சேர்க்கப் படுகிறது. (ஆம். இனிப்பான ரொட்டிகளிலும் அதிகம் சேர்க்கப் படுகிறது). இன்று நாகரிக இறக்குமதி காரணமாகக் கீழை நாடுகளிலும், இந்தப் பதப்படுத்திய உணவுகளையும், வறுவல் வகைகளையும் தின்னும் மோகம் பரவி வருகிறது.
அதிக உப்பினை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் விளைவுகளைத் தெரிந்துகொள்வோமா?
உப்பு அதிகமானால் ஏற்படும் உடற்கோளாறு என்ன என்று கேட்டால், 'உயர் இரத்த அழுத்தம்' என்ற பதிலைத்தான் பெரும்பாலும் நாம் சொல்லுவோம். இதில் சரிபாதிதான் உண்மை. உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டபின், உப்பினைச் சேர்த்துக்கொள்வது அதன் தீவிரத்தை அதிகரிக்கும். எனவே, உங்கள் மருத்துவர் உங்களை உப்பைக்குறைக்கும்படி ஆலோசனை கூறினால், கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள்.
ஆனால், சரியான அளவு இரத்த அழுத்தமுடையவர்கள், உப்பினைச் சேர்த்துக்கொள்வதன் காரணமாக அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டுவிடும் என மருத்துவ உலகம் கருதவில்லை. இதைப்படித்ததும் மகிழ்ச்சியடைந்துவிட வேண்டாம்.ஏனெனில், உடலில் உப்பு அதிகம் சேர்வதற்கும் மற்றும் பல உடற்கோளாறுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவை, Stroke எனப்படும் வாதநோய், உடல் பருமன், உடல்/உள்ளுறுப்புக்கள் வீக்கம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழத்தல் மற்றும் எலும்புகள் வலுவிழத்தல் (ஆஸ்டியோபோரோசிஸ் ) ஆகியவற்றிற்குப் பெருமளவில் காரணமான வில்லன், உணவிற்குச் சுவைகூட்டும் கதாநாயகனான உப்புதான்.
உலக அளவில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில், வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் உப்பினை அதிகம் சேர்த்துக்கொள்பவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் புகழ் பெற்ற ஆராய்ச்சியான 'INTERSALT Study' யானது உயர் இரத்த அழுத்தத்திற்கும் உப்பிற்கும் உள்ள தொடர்பை நிறுவ இயலவில்லையானாலும், உப்பிற்கும் வாதநோய்க்கும் உள்ள நெருங்கிய தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளது.
சிறுநீரகச் செயலிழப்பிலும், அதிக உப்பை உணவில் சேர்த்துக்கொள்வது முக்கியப்பங்கு வகிக்கிறது. உடலுக்கு மிக முக்கியத் தேவையான தாதுப்பொருளாகிய கால்சியம் உடலில் உப்பு அதிகம் சேருகையில், சிறுநீருடன் பெருமளவு கலந்து வெளியேற்றப்படுகிறது. இது சிறுநீரகச் செயலிழப்புக்குக் காரணமாவதோடு எலும்புகள் வலுவற்றுப் போகவும், எளிதில் எலும்பு முறிவு ஏற்படவும் வழிவகுத்துவிடுகிறது. (கால்சியம்தான், எலும்புகளையும் பற்களையும் வலுவாக வைத்திருக்க முக்கியக் காரணி என்பது நாம் அறிந்ததே!)
உடலில் உப்பு அதிகம் இருப்பது, கால்கள் வீங்குதல், உடலின் உள்பாகங்கள் வீக்கமடைதல், கண்களைச் சுற்றி உப்புதல் இவற்றிற்கும் காரணமாகிறது. இத்தகைய வீக்கம், நமது சீரணத்தை சரிவர நடத்துகின்ற சுரப்பிகளான ஈரல், கணையம் முதலியவற்றிலும், சிறுநீரகத்திலும்கூட ஏற்படக் கூடும்.
உடல் பருமன் என்பது இன்று உலகளாவிய சிக்கலாகக் கருதப்படுகிறது. இதிலும் முக்கியப்பங்காற்றுபவர் திருவாளர் உப்புதான் என்றால் வியப்பாக இருக்கிறதா?
ஆம். உப்பினை அதிகம் சேர்த்துக்கொண்டால், உடலில் நீரின் தேவை அதிகரிக்கிறது. 'உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்கணும்..' என்ற சொலவடை நினைவுக்கு வருகிறதா? உண்மைதான். உடலில் உப்பின் அளவு அதிகரிக்கையில், உடல் சேமித்துவைக்கும் நீரின் அளவும் அதிகரிக்கிறது. உப்பைக்குறைத்தால் உடல் எடையும் தன்னால் குறைந்துவிடும். இயற்கை உணவுகள் உண்டால் (சமைக்காத பழங்கள், காய்கறிகள்) எடை இறங்குவது இதனால்தான். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முதலில் செய்ய வேண்டுவது உப்பைக் குறைப்பதுதான்.
நினைவிருக்கட்டும். இயற்கை எதையுமே சமச்சீராக வைத்திருக்கத்தான் விரும்புகிறது. உடலில் உப்பு, சர்க்கரை இரண்டும் அதிகமாவது ஆபத்தென்றால், மிகவும் குறைவதும் ஆபத்துத்தான். அடிசன் நோய், வயிற்றுப்போக்கு, விபத்தினால் ஏற்படும் இரத்த இழப்பு, சில குடல் தொற்றுநோய்கள் இவற்றிற்கு உப்பினை உணவில் சேர்ப்பது மிகவும் தேவை. இக்கோளாறுகள் உள்ளவர்கள் உப்பினைத் தவிர்த்தால் நிலைமை விபரீதமாகிவிடும்.
உணவில் இலேசாக உப்பைச் சேர்த்துச் சமைப்பதில் தவறில்லைதான். ஆனால், முதலில் குறிப்பிட்டவாறு, பதப்படுத்தப் பட்ட உணவுகள் (உப்பு அதிகமாகச்சேர்க்காவிட்டால் உணவைப் பதப்படுத்த இயலாது), உப்பு தூவிய வறுவல் வகைகள், அதிக மசாலாப்பொருட்கள் சேர்த்த, காரமான உணவுப்பொருட்கள், Bakery Items என்று சொல்லப்படும் Bread, Bun, Biscuits முதலியவை (குறிப்பாக உப்பு தூவியவை) இவற்றைத் தவிர்ப்பதுடன், தயிர்/மோர் சாதத்தில் உப்பு சேர்க்காமல் உண்பது, காய்கறிகளுக்கு மிகுந்த சுவையூட்டக் கருதி அதிக உப்புக்காரமிட்டு எண்ணெயில் வதக்குவது இவற்றைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
உப்பைக்கட்டுப்படுத்தி உடல்நலம் பேணுவோம்.








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















